
ஒரு நாளை நினைவுகூரும்போது
அந்த நாளின் எல்லா நிமிடங்களையும் நாம்
கற்பனைசெய்து பார்ப்பதில்லை
இப்போது
அந்த நாளை நினவுகூரும்
இந்த கணத்தில்
நாம் எண்ணிப்பார்ப்பது எதை?
அந்த நாளின் பகலையா?
இரவையா?
நள்ளிரவு கடந்து அந்த நாள் உயிர்பெற்ற
ஆரம்ப கணங்களில்
எப்படி இருந்திருப்பார்கள்?
சில்லிட்டுப்போன காற்றில்
நடுங்கும் உடல்களைக் கைகளால்
போர்த்தியிருந்திருப்பார்களா?
அழும் குழந்தையின் சப்தம்
கவனத்தை ஈர்த்துவிடுமென்று பயந்து
அதன் குரல்வளையை நெரித்திருப்பார்களா?
பகலைநோக்கி ஊர்ந்துகொண்டிருக்கும்
இரவைத்
தடுத்து நிறுத்துவது எப்படி என யோசித்திருப்பார்களா?
அந்த இரவு
குண்டுகளின் சப்தங்களால்
சீரழிக்கப்படாத இரவாக இருந்திருக்குமா?
அவர்களின் நாளை
எப்படி நாம் நினைவுகூர முடியும்?
நமக்குத் தெரியாது
எறிகணையொன்று விழுவதற்குமுன் கேட்கும் சப்தம்
அது வெடித்துச் சிதறும்போது
விலகிக் கூடும் இருளின் சிறிய இடைவெளியில்
புலப்படும் முகங்கள்
அவற்றில் அப்பியிருக்கும் பயம்
நமது நாசிகளுக்குத் தெரியாது
கந்தக மணத்தோடு கலந்திருக்கும்
கருகிய உடல்களின் வாசனை
நம் செவிகள் அறியாது
சிதறிய உடல்களின்மீது
தவழும் குழந்தை ஒன்றின் அழுகுரல்
அந்த நாளை
நாம் எப்படி நினைவுகூரமுடியும்?
நமக்குத் தெரியாது
போர் நடக்கும் இடம்
எப்படி இருக்குமென்பது
அங்கு
இரவுகளில் மனிதர்கள் தூங்கியிருப்பார்களா?
அதிகாலையின் மெல்லிய வெளிச்சத்தில்
மரித்துக்கிடக்கும் தம் உறவுகளைப் பார்த்து
அழுவதற்கும் அவர்களுக்கு நேரம் இருந்திருக்குமா?
எதுவுமே நமக்குத் தெரியாது
பதுங்கு குழிகளில் வாழ்வது
அல்லது சாவது
நமக்குத் தெரியவே தெரியாது
அப்படியிருக்கும்போது
அவர்களின் நாளை
எப்படி நாம் நினைவுகூரமுடியும்?
நமக்குத் தெரிந்தது
நம்முடைய நாள்தான்
அவர்கள் ஒட்டுமொத்தமாகப்
புதைக்கப்பட்ட
அந்த நாளில் நாம்
என்ன செய்துகொண்டிருந்தோம்?
திரையரங்குகளில் இருந்தோம்
உணவகங்களில் விருந்துண்டோம்
தொலைக்காட்சிகளில் புதைந்துகிடந்தோம்
பயணித்தோம்
புகைத்தோம்
குடித்தோம்
பாதுகாப்பான நம் வீடுகளில்
புணரவும் செய்தோம்
நம்முடைய நாளைத்தான் நமக்குத் தெரியும்
அதைத்தான் நம்மால் நினைவுகூரமுடியும்
அப்புறம் ஏன்
அறியாத ஒரு நாளைப்பற்றிப் பேசுகிறோம்?
நாம் பார்க்காத உடல்களைப்பற்றி
புதைகுழிகளைப்பற்றி
தொட்டுணராத குருதியைப்பற்றி
வீரத்தைப்பற்றி
தியாகத்தைப்பற்றி
துயரத்தைப்பற்றி
ஏன் பேசுகிறோம்?
நாம் பேசவேண்டும் நமது சுயநலத்தை
நாம் பேசவேண்டும் நமது கையாலாகாத்தனத்தை
நாம் பேசவேண்டும் நமது துரோகத்தை
நாம் பேசவேண்டும் நாம் மனிதர்களே இல்லை
என்ற உணமையை
( முள்ளிவாய்க்கால் கொடுமையின் முதலாண்டு நினைவாக மணற்கேணி பதிப்பகம் வெளியிட்ட ' எங்கள் காலத்தில்தான் ஊழி நிகழ்ந்தது ' என்ற கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற கவிதை. )
- ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர்.
No comments:
Post a Comment