Labels

Sunday, December 19, 2010

ஈழ விடுதலைக் களம் - திருமாவளவன்











“நவம்பர் 26”... உலக நாடுகளை தனி ஈழ விடுதலை குறித்து சிந்திக்க வைத்த மாவீரன், என்றும் சில விடை இல்லா கேள்விகளை தனக்காக தன்னகத்தே கொண்டுள்ள ஈழப்போராளி பிரபாகரனின் பிறந்தநாள். தமிழகத்தில் இந்த வீரத் தமிழனின் பிறந்த நாளை வெளிப்படையாய் கொண்டாட முடியாத நிலை. இந்நிலையில் நூல் வெளியீட்டு விழா கொண்டாடும் போக்கில் பிரபாகரன் பிறந்தநாளை நினைவுப்படுத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தொல். திருமாவளவனின் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் 'Thirst', வெளியீட்டு மையம் சார்பாக மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு தொகுத்த ஈழ யுத்தகாலத்தில் தொல். திருமாவளவன் பேசிய உரைகளின் தொகுப்பு நூல் "ஈழ விடுதலைக்களம்', தமிழர் இறையாண்மை மாநாட்டுச் சிறப்புப் பாடல் இசைவட்டு "எழுச்சித் தமிழ்” ஆகியவற்றின் வெளியீட்டு விழா, வெளியீட்டு மையம் சார்பாக, சென்னை, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில், 26.11.2010 அன்று மாலை நடைபெற்றது.

இவ்விழாவில் “ஈழ விடுதலைக் களம்” உரைத் தொகுப்பின் முதல் படியை கவிஞர் இன்குலாப் வெளியிட, கவிஞர் தணிகைச்செல்வன் பெற்றுக்கொண்டார். 'Thirst' ஆங்கில மொழியாக்க கவிதை நூலை கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிட, சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பெற்றுக்கொண்டார். "எழுச்சித் தமிழ்” இசைவட்டை கவிஞர் அறிவுமதி வெளியிட இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவை மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு தொகுத்து வழங்கினார். வெளியீட்டு மையம் மாநிலச் செயலாளர் ஆதிரை நன்றியுரையாற்றினார்.


விழாவின் தொடக்கப் பேச்சாளரக உரையாற்ற வந்த கவிஞர் அறிவுமதி...


பிரபாகரனின் பிறந்த நாளை நினைவுகூர்ந்தார். அத்துடன் “வருவான்” என்னும் ஒற்றை வார்த்தைக் கவிதையினை கூட்டத்தின் ஒருபகுதியினரை ஒவ்வொருவராக வருவான்... வருவான்... என சொல்லவைத்து கடைசியாக திருமாவளவன் ‘வருவான்’ என சொல்லி முடிக்கும் விதம் ஒரே வார்த்தைக் கவிதையாக அமைத்தார்.

‘வருவான்’ என்னும் இந்த ‘ஒரே வார்த்தை ஓஹோ என்ற வாழ்க்கையாக’ பிரபாகரனின் மறு வருகையை பறைசாற்றி அரங்கினை கிளர்ச்சி கொள்ளசெய்தது.

அறிவுமதியை தொடர்ந்து உரையாற்ற வந்த அமீர்,,,

இது நான் பங்கேற்கும் சிறுத்தைகளின் இரண்டாம் விழா. (முன்னதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வன்னிஅரசு, “விடுதலை சிறுத்தைகளின் விழாவில் முதன்முறையாக அமீர் பங்கேற்க வந்துள்ளார்” என்று கூறியதை மறுத்து அமீர் இப்படி சுட்டிக்காட்டினார்.)

எனக்கு சின்ன வயசிலிருந்தே மிகவும் பிடித்த விலங்கு சிறுத்தையும், புலியும் தான். அதனாலதான் என்னமோ? இன்று புலிகளுக்காக சிறை செல்ல வாய்த்தது. சிறுத்தைகளுடன் நட்புறவாட வாய்த்தது. எனக்கு பிடிக்காத விலங்கு சிங்கம். சிங்கம் சோம்பேறித் தனத்தின் அடையாளம். அதுமட்டுமில்லாமல் தூரத்திலிருந்து பார்த்தால் சிங்கம் அசிங்கமாகத் தொரியும். (இப்படிப் பேசி கூட்டத்தினரின் விசில் சத்தத்தை பெற்றார் அமீர்)

திருமா , சில சமயம் கொள்கை மாறிப்போகிறாரோ என்று நினைக்கத் தோன்றும். பிறகு நெழிவு சுழிவுடன் மீண்டும் தன்னிலைக்கே வந்துவிடுவார். சமீபத்தில் மதுரையில் நடந்த திருமணவிழாவில் இந்த நாடு பெரியாரின் பேரப்பிள்ளைக்களுக்குதான் சொந்தம் என்றார். அதே போல், விரைவில் அது நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.

கலைஞரை போல், எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் திருமாவிற்கும் உண்டு. திருமாவிற்காக அரியணையும் காத்திருக்கிறது. இது நடக்க வேண்டும் என்பது எனது ஆசை. இது நடக்கும் என நம்புகின்றேன்.

ஆங்கில மொழியாக்கம் அவசியம் - கவிக்கோ அப்துல் ரகுமான் :

இன்று சில பேர் தமிழில் பெயர் சூட்டி இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் உணர்வில் தமிழ் இல்லை. இப்படிப்பட்ட இன்றைய தமிழன் இவர் இல்லை. இவர் தமிழ் உணர்வுமிக்க பழமைமிகுந்த (தொல்) திருமா என தன் பெயரிலேயே உணர்த்தி இருக்கிறார்.

நேரு ஒரு கூட்டத்திற்கு சென்றார். அவருக்கு பின்னால் பிரபல இந்திக் கவிஞர் தினகர் சென்றார். அப்போது படியில் ஏறிய நேரு, தடுமாறிவிழ நேருகிறது. அவருக்கு பின்னால் வந்த கவிஞர் தினகர் நேருவை தாங்கிப்பிடித்து விடுகிறார்.

அதற்கு நன்றி கூறிய நேருவிடம், “அரசியல் தடுமாறும் போது தாங்கிப்பிடிப்பது இலக்கியத்தின் கடமை” என்று தினகர் கூறினார். திருமா அரசியலில் தடுக்கி விழுந்தாலும் தாங்கிப்பிடிக்க அவருக்குள்ளேயே இலக்கியம் இருக்கிறது.

அமீர் தனக்கு சிங்கம் பிடிக்காது, சிறுத்தையும் புலியும்தான் பிடிக்கும் என்றார். அவர் ஒன்றை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். சிங்கம்தான் சிங்களவர்களின் சின்னம். அதனால் சிங்கத்தை ஈழப் போராளிகள் யாருக்குமே பிடிக்காது.

தனது கவிதைகளை 'thirst' என்றப் பெயரில் மொழிப் பெயர்த்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழின் 2000 ஆண்டுக்களுக்கு முற்பட்ட இலக்கிய செல்வங்கள் எல்லாம்,மொழிப்பெயர்க்கப் பட்டிருந்தால் தமிழ் என்றோ செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும். சமஸ்கிருதம் செம்மொழி அந்தஸ்து பெறக்காரணம் அதன் ஆங்கில மொழியாக்கம் தான்.

காளிதாசனின் சாகுந்தலத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்த ஆங்கிலேயரான வில்லியம்ஸ் எழுதிய கட்டுரைதான் சமஸ்கிருதம் செம்மொழி பெற அடிப்படையாக அமைந்தது. சகுந்தலை, தான் வளர்த்த செடி, கொடிகளின் மீது அன்பும் கருணையும் கொண்டு அவற்றை தனது சகோதரிகளாக பாவித்ததை படித்தவுடன் மேலை நாட்டினருக்கு இந்திய பண்பாட்டைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. ஏனெனில் மேலை நாட்டு இலக்கியங்களில், செடி, கொடிகளுக்கும் உணர்வுகள் இருப்பதாக கருதி, அவற்றின் மீது அன்பும், கருணையும் கொள்ளும்வகையில் ஏதும் குறிப்பிடப்பட்டதில்லை. இது அவர்களுக்கு புதுமையாக இருந்தது.

ஆனால், சாகுந்தலத்திற்கு முன்பே தமிழின் சங்ககாலப் பாடல்களில் தாவரங்களை தமது உடன்பிறப்பாக, தோழியாக பாவிக்கும் பண்பு குறிப்பிடப்பட்டுள்ளது. “விளையாட்டோடு வெண்மணல் அழுத்தி” என்னும் சங்ககாலப் பாடலில்... புன்னை மரத்தை தனது அக்கா என்று அறிமுகப்படுத்தி... தமது அக்காவான புன்னை மரத்தின் முன்பு தனது காதலன் தன்னிடம் காதல் கொள்வது தனக்கு வெட்கத்தை ஏற்படுத்துவதாக தலைவி கூறுகிறாள். மேலும், திருமணமான பின்பு, தான் தனது கணவனுடன் செல்லக்கூடும். ஆனால் புன்னை மரம் எங்களைவிட்டு எங்கும் செல்லாமல் இவ்விடத்திலேயே இருக்கும். அதனால் தன்னை விட இந்தப் புன்னை உயர்த்தது என்று தனது தாய் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் தலைவி தனது காதலனிடம் கூறும் வகையில் விளக்கப்பட்டிருக்கும்.

இந்தச் சங்ககாலப் பாடலை, மார்க்ஸ்முல்லர் படித்துவிட்டு அசந்துபோய்விட்டார். இப்படி ஒரு இலக்கிய செல்வம் நிறைந்திருக்கும் தமிழ் நூல்களைப்பற்றி இதுவரை அறிமால் போய்விட்டேனே. தனக்கு வயதாகிவிட்டதால், இது போன்ற தமிழ் நூல்களை ஆங்கிலாக்கம் செய்ய இயலாதே என மாக்ஸ்முல்லர் வருந்தினார்.

மலையாளம், கன்னடம், தெலுங்கில் எல்லாம், உருவாகும் ஒவ்வொரு நூலையும் ஆங்கிலத்திலேயும், ஹிந்தியிலேயும் மொழியாக்கம் செய்து விடுகின்றனர். அதனால் அந்த நூல்களுக்கு உலக அளவில் ஒரு அறிமுகமும், அங்கீகாரமும் கிடைக்கிறது. ஆனால், தமிழ் நூல்கள் எல்லாம் எந்த மொழியாக்கமும் செய்யப்படுதில்லை. அதுதான் நமது பலவீனம். ஆங்கிலத்தில் தமிழ் நூல்கள் மொழியாக்கம் செய்யப் பட்டிருந்தால், செம்மொழி தகுதி பெற இத்தனை காலம் நாம் போராடவேண்டிய நிலை வந்திருக்காது. என்றோ தமிழ் செம்மொழி என்று உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். நானும் கடந்து 20 வருடத்துக்கும் மேலாக,கல்லூரி பல்கலைக் கழகங்கள் தோறும் தமிழில் உள்ள சிறந்த நூலகளை எல்லாம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய வலியுறுத்தி வருகிறேன் யாரும் கேட்பாரில்லை.

அந்த வகையில் திருமா தனது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிடுவதை பாராட்டுகிறேன்.


இது பெரியார் நாடு - திருமாவளவன் :


மகத்தான பேராளி பிரபாகரனின் பிறந்த நாளை இன்று உலகமெங்கு உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் நம் தமிழ் நாட்டில், பிரபாகரனின் பிறந்த நாளை வெளிப்படையாகக் கொண்டாட முடியாத சூழல் உள்ளது.

கவிஞர் தணிகைச்செல்வன், 1987ல் கல்லூரி மாணவனாக இருந்த போது பிரபாகரன் பற்றி நான் எழுதிய,

பழந்தமிழர் வீரம் இன்னும் பட்டுப் போகவில்லை
தமிழ் பரம்பரைக்கு சரணாகதி பழக்கம் என்றுமில்லை
பாருக்கு அதை உணர்த்துகிறார் தம்பி வேலு பிள்ளை
அவர் பக்கத்தில் நிற்கும் தகுதி யாருக்குமில்லை...

என்னும் கவிதை பற்றிக்குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகுறித்து பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். இனி அந்த மாவீரர் தினத்தில் பிரபாகரனின் குரலாக விடுதலை சிறுத்தைகளுக்காக நான் உரையாற்ற வேண்டும் என்றார். அவர் மட்டுமல்லாமல் அறிவுமதி, அமீர், கவிக்கோ, இன்குலாப் ஆகியோர், தலித் விடுதலை, ஈழ விடுதலைக்கான ஓயாத போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும், தமிழகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆள வேண்டும் என்றும் என்மீது நம்பிக்கை வைத்து கூறியுள்ளனர். இது எனக்குள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய பணியை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்காக விடுதலை சிறுத்தைகள் அயராது போராடவேண்டும்.

நாடாளுமன்றத்தில் நான் முதன்முதலாக கன்னி உரையாற்றியபோது, “இந்திய அரசு தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் துரோகம் செய்கிறது” என்றேன். அது அவைக்குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது. கோவை செம்மொழி மாநாட்டின் முதல் இரண்டு நாட்களில் ஈழம், ஈழத் தமிழர்கள் என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. அதைக் கலைஞருக்கு சுட்டிக்காட்டி முதன் முதலாக ஈழம் பற்றி பேசவைத்தேன். இதே போல் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மக்களுக்காக பயன் படுத்தியிருக்கிறேன்.

மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்ச்சிக்காக இன்குலாப் போன்றோர்களுடன் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அப்போது நாங்கள் எல்லோருமாக பிரபாகரனை சந்தித்துவிட்டு வந்த மறுநாள் அதிகாலை, என்னைத் தனியாக பார்க்கவேண்டும் என்று விரும்பி பிரபாகரன் என்னை அழைத்ததாக கூறி அழைத்துச் சென்றனர்.

உலகமே வியந்து பார்க்கும், ஒப்பற்ற மாவீரன், நான் அங்கு செல்லும் வரை எனக்காக 1 மணி நேரம் காத்திருந்ததை அறிந்து துடித்து போய்விட்டேன். அப்போதைய எங்கள் சந்திப்பு கிட்டத்தட்ட 1 மணி நேரம் நடந்தது. பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.

தமிழ் நாட்டில் நடக்கும் சாதிக்கொடுமைகள், தீண்டாமை குறித்து அவர் மிகுந்த வேதனையுற்றார். அப்போது அவர் தனது திருமணம் குறித்து பேசினார். “நாங்கள் இருவரும், வேறு வேறு சாதியினர். எனது சாதிகுறித்து என் மனைவியின் வீட்டினருக்கு பிடிக்கவில்லை. ஆனால், இன்று எனது மாமனார் மட்டுமல்ல உலகமே என்னை ஏற்றுக்கொண்டுள்ளது. போராளிக்கு சாதி ஒரு தடையில்லை. போராளிகள் சாதியம் பார்க்கவும் கூடாது,” என்றார்.

அவ்வளவு பெரிய மாவீரனையே, தமிழகத்தில் நடக்கும் சாதிவெறிக் கொடுமைகள் பற்றிய தகவல்கள் அதிர்ச்சி அடையவைத்தன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருப்பவர் சாதி பார்க்ககூடாது. சாதியை ஒழிக்க முதலில் இந்துத்துவத்தை ஒழிக்கவேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை கொள்கை... ஆதிக்கம், ஒடுக்கு முறை, சுரண்டல் ஆகிவற்றை அடியோடு ஒழிப்பதுதான். இந்த மூன்றும் எங்கு இடம்பெற்றாலும் அங்கு விடுதலை சிறுத்தைகளின் எதிர்ப்பு இருக்கும். தமிழ் தேசியம் பற்றி பேசும் மற்றக்கட்சிகள் சாதிஒழிப்பு பற்றி பேசுவதில்லை. ஆனால் சாதி ஒழிப்புக்காக போராடுவதே சிறுத்தைகளின் சிறப்பு.

மதுரை திருமணத்தில், பெரியாரின் பேரப்பிள்ளைகளுக்கே தமிழ் நாடு சொந்தம் என்று நான் பேசியதை அமீர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அப்படி நான் பேசியதன் அர்த்தம், டெல்லி தாத்தாக்களின் பேரப்பிள்ளைகள் நாட்டை பங்குபோடுவதை ஒரு காலமும் அனுமதிக்கக்கூடாது என்பதே. தமிழ்நாட்டை ஆளுமை செய்வது பெரியாரின் பேரப்பிள்ளைகளாகத்தான் இருக்கவேண்டும்.

இன்று பெரியார், காமராஜர், அம்பேத்காரின் கொள்கைகள் பற்றி சிறிதும் தெரியாதவர்கள் எல்லாம் ஆட்சிக்கு ஆசைப்படுகிறார்கள். 100 சினிமாவில் நடித்தால் போதும் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். ஏன்? ஒரு படம் நடித்தவுடனேகூட ஆட்சிப் பற்றிய ஆசைவந்துவிடுக்கிறது. சமூகத்தை பற்றி சிறிதும் அறியாமல்... நமீதா பற்றி, அசினை பற்றி மட்டும் அறிந்து கொண்டவர்கள் ஆட்சி அமைக்க துடிக்கிறார்கள். இவர்களைப் பற்றிதான் ஊடகங்களும் பெரிதுபடுத்தி காட்டுகிறார்கள், எழுதுகிறார்கள்.

இது பெரியார் நாடு. எனவே சமூக அக்கறையோடு போராடும் பெரியாரின் பேரப்பிள்ளைகளுக்கு மட்டும்தான் இது சொந்தம்.


தொகுப்பு :~ நா. இதயா , ஏனாதி...

நன்றி : நக்கீரன் நந்தவனம்

No comments:

Post a Comment