Labels

Tuesday, April 26, 2011

போட்டி போட்டது போதும் ஈழப் பிரச்சனையில் ஒன்றிணைந்து செயல்படுவோம்: தங்கர்பச்சான் வேண்டுகோள்



ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

இது குறித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


சாதியாகவும், மதமாகவும், பல அரசியல் கட்சிகளாகவும் பிரிந்து கிடந்து ஒற்றுமையை இழந்ததால் ஒவ்வொரு நாளும் தமிழன் இழந்து கொண்டிருப்பதும், இழந்ததும், இழக்க போவதும் ஏராளம். இந்தியாவில் மட்டுமே 7 கோடி தமிழர்கள் இருந்தும் நாம் தேர்ந்தெடுத்த தமிழர்களின் அரசாலும், இந்திய அரசாலும் இலங்கை சிங்கள அரசால் அழித்து ஒழிக்கப்பட்ட நம் தமிழினத்தை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.


உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து, வாழ்ந்த மண்ணை இழந்து, பிய்த்து எரியப்பட்ட தலையணை பஞ்சு மாதிரி உலகமெங்கும் அகதிகளாய் சிதறி போன நம் சொந்தங்களுக்கு உதவ முடியாமல் இருந்து விட்டோம்.


வெற்றிக்களிப்பில் எக்காளமிட்ட கொடுங்கோலன் ராஜபக்சே உலகத்தின் முன்னே குற்றவாளியாக நிறுத்தி வைக்க ஐ.நா. மன்றம் அதன் விசாரணையை தொடங்க இருக்கிறது. எம் மக்களை அழித்து ஒழிக்க தமிழக அரசியல் கட்சிகள் நேரத்திற்கேற்ப வேடமிட்டு நடத்தி முடித்தது எல்லாம் போதும். தங்களின் ஆதாயத்திற்காக ஈழத்தமிழர் அரசியல் பேசி பிழைப்பு நடத்தியது எல்லாம் போதும்.


அரசியல் ஆதாயத்தை மறந்து தமிழர்களுக்காக ஓரணியில் நின்று போராட்டத்தை நடத்தி எதனையும் சாதிக்க விரும்பாதவர்கள் நாம். நீ பெரிய ஆள் இல்லை. நான் தான் பெரிய ஆள் என்பதை காண்பிப்பதற்காகவும், எங்களுக்கும் ஆள் எண்ணிக்கை இருக்கிறது என்பதற்காக தனித்தனியாக குரல் கொடுக்கும் போராட்டத்தையும் நடத்தி கணக்கு காட்டியதெல்லாம் போதும்.


தமிழ் மக்களுக்கு பாதுகாவலனாகிய அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், தமிழ் இன உணர்வாளர்களும் உடனே செய்ய வேண்டியது இவைகள் தான். சொந்த அரசியல் லாபங்களுக்காக அறிக்கை என்ற பெயரில் மக்களை மேலும் திசை திருப்பி இன உணர்வை சிதைக்காதீர்கள். தங்களின் பலத்தை காண்பிப்பதற்காக நாளுக்கொரு கட்சியாக, நாளுக்கொரு இயக்கமாக போராட்டங்களை நடத்தியும், அறிக்கைகளை வெளியிட்டும் காலம் தாழ்த்தாதீர்கள். இப்படிப்பட்ட போராட்டங்களாலும், அறிக்கைகளாலும் எந்த பயனும் இல்லை.


இதன்பிறகு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நாம் குரலை ஐ.நா. மன்றத்திடமும், இலங்கை அரசுக்கும் உயர்த்தி, குற்றத்திற்கான தண்டனைகளையும், ஈழ மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர வேண்டும். தமிழர்கள் இதை தான் எதிர்பார்க்கிறார்கள். இதனை செய்யாமல் போனால் ஈழத்தமிழர்களின் எதிரி ராஜபக்சே அல்ல. சுய லாபத்திற்காக ஈழத்தமிழர் அரசியல் பேசி, அரசியல் நடத்தும் கட்சிகளும், இயக்கங்களும் தான் என்பதையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.


தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி ஐ.நா. மன்றத்தை பாராட்டி, ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்று தர கோருங்கள். அத்துடன் இலங்கை அரசுடன் இந்தியா கொண்டுள்ள பொருளாதார, ராணுவ உறவினை முற்றிலுமாக விலக்கிக்கொள்ள குரல் கொடுங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் நழுவவிட்டால் உங்களை அனுப்பி வைத்த தமிழக மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரும் துரோகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


அதை போல் அடுத்த மாதத்தில் புதியதாக அமைய இருக்கும் புதிய தமிழக அரசு முதல் சட்டமன்ற கூட்டத்திலே இது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இந்திய அரசுக்கு அனுப்புங்கள்.


இவ்வாறு தனது அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment