Monday, April 25, 2011
தனி ஈழம் தான் தீர்வு: நாஞ்சில் சம்பத்
இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் தான் தீர்வு என, நாஞ்சில் சம்பத் பேசினார்.
பாளை மார்க்கெட் திடலில் தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சார்பாக இலங்கை தமிழர் படுகொலை குறித்த ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்,
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.நா. அமைப்பு இலங்கை பிரச்சினை குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி ஐ.நா. சபை தலைவர் பான்கிமூனிடம் 196 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த அறிக்கை இப்போது மெல்ல மெல்ல கசிந்து வெளி வருகிறது. அதன்படி இலங்கை தமிழர்கள் தங்கியிருந்த இடம், உணவு கூடங்கள், ஆஸ்பத்திரிகள், செஞ்சிலுவை சங்கத்தினர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசி தாக்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அனுப்பிய மருந்து கப்பல் மீதும் குண்டு வீசியது அம்பலமாகி உள்ளது.
ஐ.நா.சபை இந்த அறிக்கையை உடனடியாக முழுமையாக வெளியிட வேண்டும். இதன் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப் பட வேண்டும்.
இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை ஒரு போதும் செயல்பட்டதில்லை. காங்கிரஸ் தலைவர்களான காந்தி, நேரு, ராஜீவ்காந்தி போன்றோர் இலங்கை சென்ற போது கூட அந்நாட்டு அரசு அவர்களை பேச விடாமல் அவமதித்து அனுப்பி உள்ளது.
ஸ்பெயின், சீனாவில் மக்கள் பாதிக்கப்பட்ட போது இந்தியா மருந்து கப்பலை அனுப்பி உதவிகள் செய்தது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு உதவ இந்தியா முன்வரவில்லை. ராஜீவ்காந்தி படுகொலையை காரணம் காட்டி, ஒரு நாட்டின் சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி, விடுதலைக்கு தடையாக இருந்து விட்டனர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மதத்திற்காகவும், பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் மொழிக் காகவும் பிரிந்தது. அதுபோல இலங்கையில் இனத்திற்காக தனி ஈழம் கேட்டு போராட்டம் நடக்கிறது.
இந்திய விடுதலையும் ஆயுத புரட்சி மூலம் ஏற்பட்டது தான். இதனால் இலங்கை போராட்டத்தை தவறு என்று கூறக்கூடாது. இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் தான் தீர்வு என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment