Wednesday, April 20, 2011
தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஜனநாயக முறையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம்
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2011″
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
அன்பான தமிழ் மக்களே!
இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்.
எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று பணியாற்றி சாவடைந்த மக்களை நினைவுகூரும் நாள்.எமது அமைப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குக் கவசமாக நின்று தம்மை அர்ப்பணித்த தியாகிகளின் நினைவுநாள்.
�இந்திய அமைதி காக்கும் படை� என்ற போர்வையில் அன்னியப் படைகள் எமது மண்ணில் காலூன்றியிருந்த காலத்தில் அப்படையை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய அன்னை பூபதியின் மறைவு நாளே �தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்� என நினைவுகூரப்படுகின்றது. அடக்குமுறைக்கெதிராக எமது மக்களை அணிதிரட்டிப் போராடிய அன்னை பூபதியின் தியாகம் எமது போராட்டப் பாதையில் முக்கிய மைற்கல்.
தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் இந்திய அரசின் கபட நோக்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்தது. காந்திய வழிகாட்டலைப் போற்றி நிற்பதாகக் கூறிக்கொண்ட பாரதப் படைகள் தமிழீழத்தின் மீது ஏவிவிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக எமது மக்களின் தியாக உணர்வை ஒருங்கே இணைத்துக்காட்டிய பெருமை அன்னை பூபதியையே சாரும்.
இந்தியப்படைகள் தமிழ்மக்களின் நலன்களில் எவ்வித அக்கறையும் கொள்ளாது தங்களது தாயக நிலத்திலேயே தங்களை அடிமைப்படுத்த முனைவதைப் புரிந்து கொண்ட மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புணர்வை காந்திய வழியிலேயே போராடி, மக்களின் நியாயமான கோரிக்கைகளை மக்கள் போராட்டங்கள் ஊடாக அணிதிரட்டி உணர்த்திய அன்னை பூபதி அவர்களை சாகும்வரை வேடிக்கை பார்த்து நின்றது பாரதம்.
அன்னை பூபதியின் சாவு வல்லாதிக்கப் படைகளுக்கெதிராக மக்களால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டங்களுக்கு மகுடமாக மாறியது. ஈழப்போராட்டம் என்பது �ஆயுத வழியில் நாட்டம் கொண்ட இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு கிளர்ச்சியே� என தமது அரசியல் இலாபங்களுக்காகப் பேசித்திரிந்தவர்களுக்குப் பேரிடியாக மாறியது. தமிழரின் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி அவர்களின் சாவு பெரும் மக்கள் புரட்சியை ஏற்படுத்திய உந்துசக்தியாகவே அமைந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்ததிலிருந்து, போர் தொடுத்து, பூமிப்பந்தெங்கும் வேர்விட்டு, விழுதெறிந்து, தமிழனுக்கென்றொரு முகவரி பதித்து நிலையாக நின்று நீறுபூத்த நெருப்பாகி, ஈழக்கனவை தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் உருக்காக உருவாக்கி, கருவாகச் சுமக்கும் காலம் வரை போராட்டத்தோடு வனங்கள் எங்கும் வழிகாட்டியாக, கடலெல்லாம் கடந்து காரிருள் கிழித்த கடலோடிகளாக, புலனாய்வு முகவர்களாக, பொருளாதார வழங்குனர்களாக, விழுப்புண்ணடைந்த போராளிகளின் மருத்துவர்களாக, பசிக்கு உணவளித்து பக்குவமாக உறைவிடம் தந்த பற்றாளராக, போராளிகளுக்கு அறிவூட்டிய அற்புதக் கல்விமான்களாக தங்களைத் தளத்தோடும் களத்தோடும் அர்ப்பணித்துச் சாவடைந்த மக்களை தமிழ் மக்கள் எல்லோரும் தங்களின் நெஞ்சங்களில் நிறுத்திப் போற்றுகின்ற நாள் இந்நாளாகும்.
காலத்துக் காலம் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அடிமைப்பட்ட மக்கள் தம்மைத் தாமே ஆளும் இறையாண்மையைப் பெற்றெடுத்தனர். 21ஆம் நூற்றாண்டில் எம் கண்முன்னே நடந்துகொண்டிருக்கும் மக்கள் புரட்சிபற்றிய செய்திகள் அனைத்தும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவே வருகின்றன. மானுட நீதியை மதிக்காமல் பல தசாப்தங்களாக ஆட்சி செய்தவர்கள் மக்கள் புரட்சியால் நாட்டை விட்டே விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். தர்மத்தின் வழியில் நம்பிக்கை கொண்ட மக்கள் கூட்டம் அணிதிரளும்போது எந்தச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. மொழியால், கலாசாரத்தால், பண்பாட்டால், வீரத்தால் உயர்ந்து நிற்கும் எம்மினத்தின் விடுதலையின் நியாயத்தை எந்தச் சக்தியாலும் விலைகொடுத்து வாங்கிவிடவும் முடியாது.
புரட்சிகர சிந்தனைகளைக் களைய புனையப்படும் வரலாறுகளை எமது மக்கள் நன்கு அறிவார்கள். இன்றும் விடுதலைப் போராட்டத்தின் தாங்குசக்தியாக இருக்கும் மக்கள் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாளில் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஜனநாயக முறையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment