Labels

Wednesday, April 20, 2011

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முன் வர வேண்டும்: பழ.நெடுமாறன்



ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முன் வர வேண்டும். இதனை தமிழர்கள் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

இதுகுறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


அரசு அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த மக்களை படுகொலை செய்தது, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி நோயாளிகளைக் கொன்றது, போர் முடிந்த பிறகு சித்ரவதை, முகாம்களில் அடைத்து படுகொலை, பாலியல் வன்முறை நிகழ்த்தியது, செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது, அரசுக்கு எதிரான பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை படுகொலை செய்தது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை குழு சுமத்தியுள்ளது.


2010 ஜனவரியில் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் ராஜபட்சே அரசாங்கத்தை போர்க் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததோடு சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது. இப்போதும் ஐ.நா.வும் மேற்கு நாடுகளும் ராஜபட்சே அரசை போர்க் குற்றவாளிகள் என சுட்டிக் காட்டியுள்ளன.


ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிலிருந்து ராஜபட்சேவை காப்பற்றியதன் மூலம், அவரது கொடுஞ்செயல்களை மூடி மறைக்க இந்தியா துணை நின்றது.


இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்ததால், ராஜபட்சேவின் அட்டூழியங்களை மூடி மறைக்க இந்திய அரசு முயன்றது. இப்போது உலக அரங்கில் ராஜபட்சே போர்க் குற்றவாளி என்பது அம்பலமாகியுள்ளது.


இனியாவது தனது கடந்த காலத் தவறுகளுக்கு இந்திய அரசு மன்னிப்புக் கேட்பதுடன், ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முன் வர வேண்டும். இதனை தமிழர்கள் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டும்
என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment