Labels

Saturday, April 2, 2011

ராஜபக்சேவை விருந்தினராக அழைப்பதா? வைகோ



ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் இனத்தைக் கருஅறுக்கத் திட்டமிட்டு, லட்சக்கணக்கான தமிழர்களை, ஈவு, இரக்கம் இன்றி படுகொலை செய்த மகிந்த ராஜபக்சே, மும்பை கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியைக் கண்டுகளிக்க மீண்டும் இந்திய அரசின் சிறப்பு விருந்தாளியாக அழைக்கப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் தலைவாயிலில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பூரண கும்ப சிறப்புடன் வரவேற்கப்பட்டு எக்களிப்போடு வலம் வருகிறார்.

தமிழ் இனத்தின் மீது ராணுவத்தை ஏவி தாக்குதல் நடத்திய ராஜபக்சே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப்பட, உலகெங்கும் நீதியின் குரல் ஓங்கி எழுந்து வருகிறது. ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர், ராஜபக்சேயின் போர் குற்றங்களை விசாரிக்க குழுவும் அமைத்து உள்ளார். டப்ளின் தீர்ப்பாயம், ராஜபக்சே அரசு போர்க் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி உள்ளது.

பல்லாயிரக்கணக்கான பிஞ்சுக் குழந்தைகள் கொல்லப்பட்டனர். எண்ணற்ற தமிழ்ப் பெண்கள், கோரமாகக் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மருத்துவமனைகளும், பள்ளிக் கூடங்களும், குண்டுவீச்சுக்கு தப்பவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் வேகமாக நடக்கிறது. இத்தனைக்கும் காரணமான கொடியவன் ராஜபக்சேவை காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு அழைத்துவந்து, அவருக்கு பாராட்டு கிரீடம் சூட்டி, தமிழர்களின் இதயங்களைக் காலில் போட்டு மிதித்து உள்ளது இந்திய அரசு. இந்தியாவில் வேறு எந்த மாநில மக்களின் ரத்த சொந்தங்களை ஒருவன் அழித்து விட்டு, இந்தியாவுக்குள் கால் எடுத்து வைக்க அனுமதிப்பார்களா?

ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய மாணவன் செத்ததற்காக, ஓங்கிக் கண்டனக் குரல் எழுப்பிய இந்திய அரசு 61 குழந்தைகள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்டதை கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு ஒட்டு மொத்தமாக ஈழத் தமிழர் படுகொலையை எதிர்த்து கண்டனமே தெரிவிக்கவில்லை தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் இல்லையா?

இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு உடந்தையாக, பங்காளியாகச் செயல்பட்டதால் தான், இந்திய அரசு இப்போதும் இலங்கை அதிபரை வரவேற்று தோளில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது எனக் குற்றம் சாட்டுவ தோடு இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment