Thursday, April 21, 2011
இலங்கை போர்க்குற்றம்: ஐ.நா. குழு அறிக்கை குறித்து இந்தியா அமைதி காப்பது ஏன்? டி.ராஜா கேள்வி
இலங்கையில் தமிழர்களை கொன்று அந்நாட்டு அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று ஐ.நா. குழு அறிக்கை குறித்து இந்தியா அமைதி காப்பது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
இந்த அறிக்கை அனைத்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி உள்ளது. இவ்வாறு வெளியாகியும் அது பற்றி இந்தியா இன்னும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் கடைப்பிடிக்கிறது. இறுதிக் கட்டப் போரில் இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட்டதே இதற்குக் காரணமாகும்.
இலங்கைக்கு ஆயுத பலம், பண பலத்தை அளித்தது இந்தியா. அதன் மூலம் இலங்கை அரசு அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து போரில் வெற்றி பெற்றது. இதனால், இந்தியா இப்போது சர்வதேச அரங்கில் குற்றவாளி கூண்டில் நிற்கிறது. ஐ.நா. சபைக்குழு அறிக்கை மீது இந்தியா இதுவரை கருத்துத் தெரிவிக்காதது ஏன்?
விடுதலைப்புலிகளுக்கு எதிரானப் போரில் இலங்கைக்கு உதவிய இந்தியா, இப்போது தனது நிலையை வெளிப்படுத்தாதது ஏன்? இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்த இந்த உள்நாட்டுப் போரில் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் ஆதரவில்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புக்கொண்டிருந்தார்.
இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளது என்ற அறிக்கைக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா ஆதரவு அளிக்கிறது என்று வெளியான செய்தியை இந்தியா எந்த சமயத்திலும் மறுத்தது இல்லை. தமிழர்களுக்கு எதிரான இந்த போரில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
இலங்கையில் இவ்வளவு அதிக அளவில் பொதுமக்கள் இறப்பதற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளுமே காரணம் என்றும், அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. இதில் இந்தியாவின் நிலை என்ன என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது படுகொலை சம்பவம் என பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இலங்கையின் இந்தச் செயலை இந்தியா ஒருபோதும் கண்டிக்கவில்லை. காரணம், இந்த கொடுமையில் இந்தியாவும் உடந்தை என்பதுதான்.
அரசியல் சட்ட மசோதா இலங்கையில் தமிழர்களை ஒடுக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது என்று விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கைப் பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் கருத்தை இந்தியா எந்த சமயத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை. மாறாக இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்து வந்துள்ளது.
இலங்கை பிரச்சனையில் தீர்வு காண இந்தியா எந்த சமயத்திலும் பொறுப்புடன் முயற்சி செய்யவில்லை. இலங்கை தமிழர் பிரச்சனை தீர அரசியல் சட்ட மசோதா தாக்கல் செய்ய இலங்கையிடம் தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தவில்லை. இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக இந்தியா அளித்துள்ள உதவியை முறையாக செயல்படுத்த இலங்கையை இந்தியா உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment