Labels

Wednesday, April 20, 2011

மே 18 துக்க நாள்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு



முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது.


இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள்’ ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது.


முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால்; ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் ரத்த சாட்சியமாக இருக்கிறது.


தமிழ் ஈழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாக தமிழ் ஈழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.


உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.


உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்பக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.


முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழ் ஈழ தேசிய துக்க நாளையொட்டிய வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், கருத்தரங்குகள், ரத்த தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பல்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்து வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment