Labels

Saturday, April 2, 2011

மீண்டும் புலிகள் தாக்குதல்: இலங்கை ராணுவத்தினர் 4 பேர் பலி?



இலங்கை கப்பற்படைக்கு சொந்தமான படகு ஒன்று முல்லைத்தீவின் சாலை கடற்படை முகாமிலிருந்து சுண்டிக்குளம் முகாம் நோக்கி சென்றது. அதில் கடற்படை வீரர்கள் 4 பேரும், ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். ஆயுதங்களுடன் சென்ற அவர்கள் திடீரென மாயமானார்கள்.

இவர்கள் மாயமானது வள்ளம் கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணம் செய்த படகு, கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, வீரர்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இலங்கை கடற்படைக்கு ஏற்பட்டது.


இந்நிலையில் தமிழ் தேசிய எழுச்சி படை என்கிற பெயரில் இயங்கும் புலிப்படை பிரிவு இதற்கு பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இச்செய்தி இலங்கை அரசுக்கு மிகப்பெரிய அபாய எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


இதனால் கலங்கிபோன இலங்கை ராஜபக்சே அரசு, இறந்துபோனவர்களின் உடலை தேடும் பணிக்கு உதவி செய்யுமாறு இந்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளதாகவும், இதற்கு இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.


கடந்த வாரம் ஹபரணைக் காட்டுப்பகுதியில் திடீர் தாக்குதல் நடைபெற்றது. அதில் இலங்கை ராணுவத்தின் 2 கட்டளை அதிகாரி, ஒரு கேப்டன், 2 மேஜர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு தமிழ் தேசிய எழுச்சி படை பொறுப்பேற்றதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வீரர்களைக் கண்டுபிடிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம் - இலங்கை கடற்படை பேச்சாளர் :

முல்லைத்தீவு கடற்பரப்பில் காணாமல் போன 4 கடற்படை வீரர்கள் தொடர்பாக எந்தவிதமான தகவலும் இல்லை என்றும், இவர்களை கண்டுபிடிக்க இந்தியாவின் உதவியை நாடியுள்ளோம் என்றும், இலங்கை கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளதாக இலங்கை தமிழர் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, காணாமல் போன கடற்படை வீரர் படகு எவ்விதமான சேதமும் இன்றி வெற்றிலைக்கேணி கரையோரத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


கடந்த 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு வடக்கு கடற்பரப்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த நான்கு கடற்படை வீரர்களும் மர்மமான முறையில் படகுடன் காணாமல் போயிருந்தனர்.


சம்பவம் நடைபெற்று இரண்டு நாட்களுக்கு பிறகு படகு மட்டும் வெற்றிலைக்கேணி கரையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


இச்சம்பவம் தொடர்பாக முல்லைத்தீவை அண்டிய கரையோரப் பிரதேசங்களில் விசாரணைகளிலும் தேடுதல் நடவடிக்கைகளிலும் படையினர் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு காணாமல் போயுள்ள நான்கு கடற்படை வீரர்களையும் கண்டுபிடிக்க இந்திய கடற்படையினரிடம் உதவி கோரப்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய கூறியுள்ளதாக இலங்கை தமிழர் இணையதளங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment