Saturday, April 2, 2011
60,000 தமிழ்ப் பொதுமக்களை கொன்ற குற்றத்திலிருந்து சிறிலங்கா தப்பமுடியாது -பிரதமர் வி.ருத்திரகுமாரன் சண்டே லீடருக்கு செவ்வி
இனமுரண்பாடு சிறிலங்காவில் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் நிலைநாட்ட நிறையவே செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவிக்கிறது.
அவற்றுள் சர்வதேச தமிழ் சமூகத்துடன் பரஸ்பர இலாபம் தரக்கூடிய உறவினைக் கட்டியெழுப்புவதும் ஒன்று என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. அது அப்படி இருக்க அரசின் இம்முயற்சிகள் பற்றிய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஜனாதிபதி ராஜபக்ச மீதும், ஐ.நா.வுக்கான சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி பாலித கோகண மீதும் வழக்குகள் பதியப்பட்டது உட்பட புலம் பெயர்ந்த மக்களின் செயற்பாடுகள் வேறு திசையிலேயே அமைந்திருக்கின்றன.
கடந்த ஆண்டு மே மாதம் உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு விசுவநாதன் ருத்திரகுமாரன் இது பற்றிய தனது பார்வையையும் புலம்பெயர்ந்த மக்களின் ஏனைய கரிசனைகளையும் சண்டே லீடருக்கான மின்னஞ்சலூடான செவ்வியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
கே: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தற்போதைய வகுபாகம் என்ன?
ப: சிங்கள தலைவர்களின் ஒதுக்கிவைக்கும் கொள்கைகளினதும், நாட்டில் நிலைபெற்றுப் பரவியுள்ள இனத்துவேசத்தினதும் விளைவாக தமிழர் தேசம் இலங்கைத் தீவின் அரசியற்செயற்பாடுகளில் பங்குபற்றுவது நடைமுறையில் தடுக்கப்பட்டுள்ளது. தமிழ்மக்கள் தமக்கான சுதந்திரமான நாடொன்றிலேயே சுதந்திரமாகவும் மானத்துடனும் வாழமுடியும் என்பதை குரூரமான அடக்குமுறையும், தொடர்ந்து ஒடுக்கப்படுதலும் தெளிவாக நிரூபித்துள்ளன. 1977ன் பொதுசன தேர்தலில் தமிழ்மக்கள் தமது விருப்பைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தனர்.
சிறிலங்கா அரசின் ஜனநாயக வழிமுறையிலமைந்த ஒரு செயற்பாட்டின் மூலமே தமிழரின் இந்த உறுதிப்பாடு வெளிப்படுத்தப்பட்டது. ஆயுதப்போராட்டம் தீவிரமாக ஆரம்பிப்பதற்கு நீண்டகாலத்துக்கு முன்னரே தமக்கான தனி நாட்டுக் கோரிக்கையை தமிழ்மக்கள் அமைதியான முறையில் வெளிப்படுத்தியுள்ளது இங்கு குறிப்பாக நோக்கப்பட வேண்டும். தமிழினம் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்குத் தனியானதும் சுதந்திரமானதுமான இறைமையுள்ள நாடு ஒன்று மட்டுமே வழி வகுக்குமென்பதை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்த அரசியற்களம் இல்லாத நிலையிலும், தேசிய முரண்பாடுகளை தீர்ப்பதற்கு, நாட்டிலும், சர்வதேசமட்டத்திலும் வழிமுறைகள் எதுவும் இல்லாத நிலையிலும், தமிழ்மக்களின் சாத்வீக போராட்டமானது காலப்போக்கில் ஆயுதப்போராட்டமாக உருமாற்றம் பெற்றது. இக்காலத்தில் எழுந்த தமிழீழ நடைமுறை அரசாங்கம் தமிழ்மக்களுக்கு இந்த அரசியற்களத்தை வழங்கியிருந்தது. தமிழீழ நடைமுறை அரசாங்கமும் அது வழங்கிய அரசியற்களமும் அழிக்கப்பட்ட பின்னர் நிலமை முன்னர் இருந்த இடத்துக்கு மீளவும் தள்ளப்பட்டிருக்கிறது.
இச் சூழ்நிலையில், தார்மீக அடிப்படையிலும், நடைமுறைத் தேவையாகவும் நாம் ஒரு அரசியற்களத்தை இலங்கைத்தீவுக்கு வெளியில் உருவாக்குவது தேவையானதாக அமைந்தது. இவ்வாறான சூழ்நிலையிலேயே தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற எண்ணக்கரு உருவாக்கம் பெற்றது. இதற்கான அரசியல் வழிமுறை, தமிழரும் தமிழர் அல்லாதவர்களுமான அறிஞர்கள் பலரைக் கொண்ட ஒரு மதியுரைக் குழுவினால் முன்வைக்கப்பட்டது. 12 நாடுகளில் நாடு தழுவிய செயற்பாட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தேர்தல்கள் நடாத்தப்பட்டன. அரசியலமைப்பு உருவாக்கல் குழு அமைக்கப்பட்டு அரசியலமைப்பு வரையப்பட்டு, விவாதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு அதன்படி அரசாங்கமும் அமைக்கப்பட்டது.
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகான காலத்தில் தமிழ்மக்களின் போராட்டத்தினை ஜனநாயக இராஜதந்திர வழியில் முன்னெடுப்பதே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; செயற்பாடாக அமைந்துள்ளது.
கே: தமிழீழ விடுதலைப்புலிகளை ஐரோப்பிய யூனியன் பயங்கரவாத அமைப்பாக மீளவும் பட்டியலிட்டுள்ளது. இதுபற்றி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்து என்ன?
ப: பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பிறகு இவ்வாறாக ஐரோப்பிய யூனியன் தமிழீழ விடுதலைப்புலிகளை மீண்டும் பட்டியலிட்டிருப்பதை தமிழ்மக்கள் தமக்கெதிராக மேற்கொள்ளப்படும் அநியாயமாகவே பார்க்கிறார்கள். மேலும், உண்மையான நிலையையும் முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணங்களையும் சர்வதேச சமூகம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டதா என்ற கேள்வியையும் இது எழுப்புகிறது. இந்த நிலையை நிவர்த்தி செய்யும் முயற்சிகளை மேற்கொள்ளும்படி தமிழ்மக்கள் எம்மை அணுகியுள்ளனர்.
இவ்வாறாக வரைவிலக்கணப்படுத்தியதையும், அதற்கான சட்டவரையறையையும் எதிர்கொண்ட சட்டத்தரணி என்ற அடிப்படையில் நான் இதனுடன் சம்பந்தப்பட்டுள்ளேன். நீதிமன்றுகள் இவற்றை அரசியல் பிரிவுகளே முடிவெடுக்குமாறு விட்டுவிட்டுள்ளன. அரசியற் காரணங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படும்போது அது சட்டத்தின் உறுதிப்பாட்டைப் பாதிப்பதுடன், அந்த நாட்டு மக்களது சட்டவியல் சுதந்திரத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும். இந்த அரசியல் முடிவை மீளாய்வு செய்யுமாறு ஐரோப்பிய யூனியனை நாம் கேட்க வேண்டியது அவசியமாகிறது.
இன்று ஐரோப்பிய யூனியன் நாடுகள் தம்மைத்தாமே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். “எமது கடந்தகால செயற்பாடுகள் 60,000 தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தியதா? எமது செயற்பாடுகள் கடந்தகாலத்தில் தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்க உதவியதா? இல்லாவிட்டால், ஏன் உதவவில்லை? ஏதும் தவறுகள் இடம்பெற்றிருந்தால் அவை எவை? எங்கு எப்படி இத் தவறுகள் இடம்பெற்றன?” கடந்த காலத்தில் நடந்தவைகளை மறந்து முன்னோக்கிச் செல்லவேண்டியதன் சிறப்பை மற்றவர்களுக்குப் போதித்து வந்தவர்களே, இன்று தாம் கடந்தகாலப் பார்வையோடு வீணே வாழ்ந்து வருவது மிகவும் கவலைக்குரியது.
தமிழீழ விடுதலைப்புலிகளை மீளவும் பட்டியலில் இட்டிருப்பது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை எவ்வகையிலும் பாதிக்காது என்பதையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
கே: நீங்கள் பிரபாகரனின் பின்வந்த ’வாரிசு’ என்று பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளிவந்திருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
ப: தமிழர் விடுதலைப்போராட்டத்தில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களின் பங்களிப்பு தனித்துவமானதும் விசாலமானதுமாகும்.
நான் மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற பொறுப்பினை மக்கள் எனக்குத்தந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினராகவும் பின்னர் பிரதமராகவும் என்னைத் தெரிவு செய்துள்ளார்கள். ஆகவே, சுதந்திரமும் இறைமையுமுள்ள தமிழீழத் தனிநாட்டினை அடைவதற்காக எனக்கு அளிக்கப்பட்டுள்ள வழிமுறைகளுக்கூடாக நான் அனைத்தையும் செய்வேன்.
கே: நீங்கள் தன்னைத் தானே நியமித்துக்கொண்ட பிரதமர் என்று நோர்வேயிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசின் ஒரு பகுதியினர் குற்றம் சாட்டிவருவதாக அறிக்கைகள் வெளிவந்திருக்கின்றன. அது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
ப: நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒரு ஜனநாயக அமைப்பு. அங்கத்தவர்கள் சுதந்திரமானதும், வெளிப்படையானதுமான சர்வதேச தராதரத்தின் படி தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்டார்கள். தேர்தல் ஆணையாளர்கள் நடுநிலைக்கும் நியாயத்துக்குமான அவர்களின் தராதரத்தில் உயர்வாக மதிக்கப்படுபவர்கள். உதாரணமாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமெரிக்கத் தேர்தல்களுக்கு ஆணையாளராக அமெரிக்க அரசின் முன்னாள் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க் பணியாற்றினார். தேர்தல்கள் மிகவும் உற்சாகமாக இடம்பெற்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் மணித்தியாலக்கணக்காக வரிசைகளில் நின்று வாக்களித்தார்கள். பல தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல்களைக் கண்காணித்து, அவை நியாயமாகவும் நீதியாகவும் இடம் பெற்றதாக அறிவித்தனர். உலகெங்கும் உள்ள ஊடகங்கள் இத் தேர்தல்களைப் பற்றி செய்திகளை வெளியிட்டிருந்தன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்; அங்கத்தவர்கள் அரசியலமைப்பு ஒன்றினை அங்கீகரித்து பிரதமர் உட்பட பல பதவிகளை வகுத்துள்ளனர். நான் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டேன். இவ்வாறாக ஜனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்டவர்களான எம் மத்தியில் கொள்கை வேறுபாடுகள் எதுவுமில்லை. ஒவ்வொருவரும் உண்மையாவும், செயற்றிறனுடனும் அர்ப்பணிப்புடனும் சுதந்திரமான இறைமையுள்ள தமிழீழத்தை இராஜதந்திர முறைகளில் வென்றெடுக்க வெளிப்படையாகவும் அமைதியான வழியிலும் வன்முறைகளுக்கு இடமில்லாத வகையிலும் முயற்சி செய்கின்றனர். உலகம் முழுவதுமுள்ள தமிழ்மக்களின் விருப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அங்கத்தவர்கள், குறிப்பாக முள்ளிவாய்க்காலில் 60,000 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தமக்குள்ள பாரிய பொறுப்பை அறிந்துள்ளனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் சம்பந்தப்பட்ட இச் சம்பவங்கள் அரசு சம்பந்தப்பட்ட நடைமுறைகள் பற்றியவை என்பதுடன், இவை ஜனநாயக அமைப்புகளில் இயல்பாகவும் சாதாரணமாகவும் இடம்பெறுபவையே. இவை எந்தவகையிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைத் தளரவைக்காது என்பதுடன், சுதந்திர தமிழீழத்துக்கான எமது செயற்பாடுகளுக்குத் தடையாக இருக்கமாட்டாது என்பதும் எமது திடமான நம்பிக்கையாகும்.
கே: அண்மையில் ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் அமர்வுகளில் சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்து செயற்படுகிறது என்றும், இது பல “குற்றச்செயல்களில்” ஈடுபடுகிறது என்றும் கூறியுள்ளார். இது பற்றி உங்கள் கருத்து என்ன?
ப: சிறிலங்கா அரசின் குற்றச்செயல்கள், நல்லிணக்கக் குழு என்ற ஏமாற்றுச் செயற்பாடுகள் மற்றைய மோசமான குறைபாடுகளைக் காரணங்காட்டி சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு போன்ற அமைப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஆதாரங்களோடு; மீண்டும் மீண்டும் தன்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளால்; கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரசு வழமைபோல் உலகின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆயினும், ஆதாரங்கள் மிகவும் பலமாக இருப்பதனால், சிறிலங்கா அரசு இந்தமுறை தனது தந்திரங்களில் வெற்றிபெற மாட்டாது.
ஐ.நா. சபையில் பல செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் குழு தயாரித்த சிறிலங்காவின் போர்க்குற்றம் பற்றிய அறிக்கை இந்த மாதம் கையளிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனவும் அத்தோடு ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும், ஐ.நா. பாதுகாப்புசபைக்கும் அனுப்பப்பட வேண்டும் என்று நாம் கோரவுள்ளோம்.
அண்மையில் லிபியாவுக்கு எதிராக இந்த இரு சபைகளும் எடுத்த நடவடிக்கைகள் சிறிலங்காவுக்கு என்ன நடக்கப்போகிறது எனபதைக் கோடிட்டுக் காட்டியுள்ளது. 60,000 தமிழ்ப் பொதுமக்களை கொன்ற குற்றத்திலிருந்து சிறிலங்கா தப்பமுடியாது.
கே: வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்யவும், சாதாரண நிலையை உருவாக்கவும் புலம்பெயர்ந்த தமிழர்களது ஆதரவினை வரவேற்பதாக சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. இவ்வாறான ஆதரவு தமக்குக் கிடைக்கும் என்று சிறிலங்கா அரசு உறுதியாக நம்புவதாகவும் அரச பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல எமது பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார். ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு அங்கு போதிய சுதந்திரம் இல்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? புலம்பெயர்ந்த தமிழர்களின் தலைவர்கள் சிறிலங்காவுக்கு வருவதற்கும் இவ்வாறான ஆதரவை வழங்கவும் தயாராக உள்ளனரா?
ப: வடக்கு கிழக்கில் இன்று சாதாரணநிலை இல்லை. இராணுவ ஆக்கிரமிப்புக்கு மத்தியில் மக்கள் பீதியுடன் வாழ்கின்றனர். கொலை, சித்திரவதை பாலியல் வல்லுறவு, வன்முறை மூலம் காணாமல் போகச் செய்தல், வன்முறை மூலமான விபச்சாரம் ஆகியவை எங்கும் பரந்துள்ளன. சிறிலங்கா அரசு போரில் வெற்றிபெற்றுவிட்டதாக சொல்லிக்கொள்ளும் அதேவேளை இராணுவ ஆக்கிரமிப்பு நிலைத்திருக்கிறது. மியான்மார் (பர்மா), பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் போல, சிறிலங்காவிலும் இராணுவம் வணிகச் செயற்பாடுகளில் இறங்கியுள்ளது. நிரந்தரமாக வடக்கு கிழக்கை இராணுவ ஆக்கிரமிப்பில் வைத்திருக்கும் நோக்கத்தை சிறிலங்கா கொண்டிருப்பதை இவை போதுமான அளவில் உறுதிப்படுத்துகின்றன. இராணுவ ஆக்கிரமிப்பின் மத்தியில் அபிவிருத்தி இடம்பெற முடியும் என நாம் நம்பவில்லை. மேலும் அபிவிருத்தி என்ற பெயரில் சிறிலங்கா உண்மையில் தமிழர் நிலங்களில் சிங்களக் குடியேற்ற ஆக்கிரமிப்பிலேயே இறங்கியுள்ளது.
சிறிலங்கா அரசு அபிவிருத்தி பற்றி பேசுகின்ற அதேவேளை அதன் நடவடிக்கைகள் வேறுவிதமானவையாக இருக்கின்றன. வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு செல்லும் நிதியுதவிகளையும் எல்லா நிறுவனங்களையும் சிறிலங்கா மிகவும் கடுமையாக கட்டுப்படுத்தி வருகிறது. நிறுவனங்கள் தாம் முதன்மைப்படுத்தும் செயற்திட்டங்களில் பணத்தை செலவிடுவது தடுக்கப்பட்டு, சிறிலங்கா அரசு முதன்மைப்படுத்தும் திட்டங்களுக்கு பணம் திசை திருப்பப்படுவதனால் அது பாதகமாக இருக்கிறது.
சிறிலங்கா அரசில் காணப்படும் மோசமான ஊழலும் இன்னுமொரு பிரச்சினையாக இருக்கிறது. ஊழல்களற்ற நிறுவனங்கள் 10 புள்ளிகள் பெறும் ரான்ஸ்பரன்சி இன்ரநசனலின் அளவுகோலில் சிறிலங்கா 3.2 புள்ளிகளை பெற்று மிகவும் கீழான நிலையில் இருக்கிறது. சிறிலங்காவுக்குக் கிடைக்கும் பெருமளவிலான நிதியுதவி தேவையான மக்களுக்கு போய்ச்சேருவதில்லை. இவற்றிற்கு மேலாக, முடிவுகள் எடுக்கும் உரிமைகள் இல்லாத, அரசியல் சுதந்திரம் அற்ற நிலையில் அபிவிருத்தி இடம்பெற முடியாது என்பதை நாம் குறிப்பிட விரும்புகிறோம்.
நோபல்பரிசு பெற்ற அமர்த்தியா சென் அவர்கள் குறிப்பிட்டது போல விடுதலை என்பது அபிவிருத்திக்கான முக்கியமான பாதையாகவும் அதனது முதன்மையான விளைவாகவும் இருக்கின்றது. ஆகவே எந்தவிதமான அர்த்தமுள்ள அபிவிருத்திக்கும், முதலில் இராணுவம் அகற்றப்பட்டு, பங்குபற்றுபவர்கள் சுயமாக முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும்.
கே: சிறிலங்காவில் உள்ள தமிழ் மக்களுக்கு புலம்பெயர்ந்த தமிழரின் முயற்சிகள் எவ்வாறு பயனளிக்கும்?
ப: நான் முன்னர் தெரிவித்து போல, புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத் தமிழ் தேசத்தின் பிரிக்கமுடியாத அங்கமாக அமைகின்றனர். இலங்கைத் தீவில் வாழும் தமிழரும், வெளியே வாழ்பவர்களும் ஒன்றே. இலங்கைத் தீவில் வாழும் தமிழர்கள் தமது அரசியல் அபிலாசைகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளி அவர்களுக்கு மறுக்கப்படும்வரை, உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தவர்கள் அச்செயற்பாட்டினைப் பொறுப்பெடுக்க வேண்டியிருக்கிறது.
எமது தாயகத்தில் வாழும் மக்களும் அவர்களது அரசியல் தலைவர்களும் தாம் உயிர்வாழ்வதற்கான அடிப்படை உரிமை முதல், தமது சமூக, பொருளாதார நலனுக்காகவும், தமது வதிவிடத்துக்கான இயல்பான உரிமைக்காகவும், தமிழர் பிரதேசத்தைப் பாதுகாக்கவும்; அன்றாடம் போராட வேண்டியிருக்கிறது.
எமது தேசத்தின் இருப்புக்காகவும், அதன் அடிப்படைப் பாதுகாப்புக்காகவும் இப் போராட்டங்கள் அத்தியாவசியமானவையாக இருக்கின்றன. மேலும், கிடைக்கும் ஒவ்வொரு சிறிய இடைவெளியிலும் இவை வெளிப்படுத்தப்பட வேண்டியுள்ளது. சர்வதேச மட்டத்திலான எமது முயற்சிகளின் விளைவாக இலங்கைத் தீவிலும் அரசியற்களம் விரிவடையும் என்பது எமது நம்பிக்கையாகும்.
எமக்கென சுதந்திரமான தனியரசை அமைத்துக்கொள்வதற்கான சிறிலங்கா தீவுக்குள்ளும் வெளியிலுமான எமது போராட்டம் ஒத்தியங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது எமது நம்பிக்கையாகும்.
எழுதியவர் மிரியம் அஸ்வர்
சண்டே லீடர் மார்ச் 20, 2011
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment