Labels

Saturday, February 19, 2011

எகிப்து புரட்சி : நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்து



எகிப்து மக்களுக்கு நாடு கடந்த தமிழ் ஈழ அரசு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

’’எகிப்திய மக்களுடன் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாமும் இணைந்து கொள்கிறோம்! இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது பாராட்டுதல்களையும்; வாழ்த்துக்களையும் எகிப்திய மக்களுக்கு தெரிவிக்கின்றது.

எகிப்திய மக்கள் அராஜகத்தை தமது நாட்டிலிருந்து அகற்றி இந்த வரலாற்று நிகழ்வை அடைந்திருப்பதைக் கண்டும், அவர்கள் தங்களுக்கு எதிரான பிரமாண்டமான தடைகளை மேற்கொண்ட விதத்தை பார்த்தும், உலகம் முழுவதும் உள்ள ஈழத்தமிழர்கள் உத்வேகம் அடைந்திருக்கிறார்கள்.

எகிப்திய மக்களின் சாதனை உலகெங்கும் எதிரொலித்த வண்ணம் உள்ளது. இவர்களின் வெற்றி உலகெங்கும் உள்ள ஏனைய ஊழல் மிகுந்த தலைவர்களுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

மக்களின் மீது திணிக்கப்பட்ட துயரத்தையும், இருண்டுபோன வாழ்வையும் குறிப்பிட்டு டுனீசியாவின் கவிஞர் அப்துல் குயாசிம் அல் சகாபி (1909-1934) எழுதிய கவிதையை டுனீசியாவிலும் எகிப்திலும் முன்னணியில் நின்று இயங்கியவர்கள் மேற்கோள் காட்டி வருகிறார்கள்.

இந்த வரலாற்று நிகழ்வை நோக்கி சென்ற நாட்களில், விடுதலையை நேசிக்கும் எகிப்திய மக்களுக்கு விடுதலைக்கான குரல்களும், கவிதைகளும் பேஸ்புக், டுவிட்டர் ஆகியவற்றின் ஊடாக உலகெங்கும் சென்றடைந்தன. அரச மாற்றத்தை ஏற்படுத்துவதில் சமுக தொடர்புசாதனங்களின் சக்தியையும், உயிர்ப்பையும் இந்த புரட்சி வெளிப்படுத்தியுள்ளது.

வன்முறையற்ற, தளராத நடவடிக்கை மூலமாக எகிப்திய மக்கள் சாதித்துக் காட்டியதை உலகம் அவதானித்திருக்கிறது. அண்மைக் காலத்தில் என்றும் இல்லாத அளவில், சுதந்திரமான அரசாங்கங்களின் தோற்றத்துக்கான நம்பிக்கை ஒளி பிரகாசமாக இருக்கிறது.

எகிப்திய மக்களை இந்த நம்பிக்கை ஒளி தொடர்ந்து வழிநடத்தும் அதேவேளை, இலங்கையில் அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கும் அது பிரகாசமாக ஒளிர்கிறது.

இந்த முக்கியமான தருணத்தில், அனைத்து ஈழத்தமிழருக்கும் எமது விடுதலைக்கும், இறையாண்மைக்குமான, அராஜகத்துக்கு எதிரான எமது போராட்டத்தை தீவிரப்படுத்த சமுக தொடர்புசாதனங்கள் உட்பட அனைத்து ஜனநாயக வழிமுறைகளையும் பயன்படுத்துமாறு அறைகூவல் விடுக்கிறோம்.

உண்மையான கருத்து சுதந்திரத்தையும், அர்த்தமுள்ள ஜனநாயகத்தையும் அடையும் பயணத்திலும், சித்திரவதைகளற்ற சுதந்திர நாட்டைப் பெறுவதிலும், எகிப்திய மக்கள் அடைந்துள்ள இந்த முக்கியமான வெற்றிக்காக அவர்களை மீண்டும் ஒரு முறை வாழ்த்தி, அவர்களின் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இணைந்து கொள்வது குறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment