Labels

Sunday, July 17, 2011

சவுக்கு வெளியீடான ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, அதன் வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரை




மாவீரன் கிட்டு வந்த கப்பல் - காட்டிக் கொடுத்தது யார்?

ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்’ என்ற இந்த நூல், உளவுத் துறையின் குரலை அப்படியே பிரதிபலிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது உளவுத் துறை பரப்பிய ‘அவதூறு’ பழிகளை அப்படியே நியாயப்படுத்துகிறது. அதே நேரத்தில், உளவுத் துறை மீது எந்த ஒரு ‘தூசும்’ விழாமல் நியாயப்படுத்துவதிலிருந்தே, இந்த நூலின் பின்னணியை புரிந்து கொள்ள முடியும்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்கள், படுகொலைகளை உருவாக்கி திட்டமிட்டு, அரங்கேற்றிய சதிக் கும்பலே, உளவு நிறுவனங்கள்தான் என்ற உண்மையை முற்றாக ஒதுக்கிவிட்டு, உளவுத் துறையின் ஒலி குழலாகவே ஒலிக்கிறது இந்த நூல்.

1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சி தந்த காலத்திலிருந்தே ‘ரா’ உளவு நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடங்கி விட்டன. இந்திய உளவு நிறுவனத்தோடு நெருக்கமாக இருந்தவரும், உளவு நிறுவனங்கள் போற்றிப் பாராட்டுகிற நூலை எழுதியவருமான எம்.ஆர். நாராயணசாமி, தனது ‘இலங்கையின் புலிகள்’ (Tigers of Lanka)என்ற நூலில் - அவரே, இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு மட்டும் உளவு நிறுவனத்தின் பிடிக்குள் சிக்குவதற்கு தயாராக இல்லை. நாட்டின் விடுதலையில் மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதுதான் அவர்களின் “குற்றம்”; ஆனால் ஈழத்தில் தொடங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வழியாக இலங்கை அரசுக்கு நெருக்கடி தந்து, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் ஈழப் போராளிகளைக் கொண்டு வருவதுதான் இந்தியாவின் திட்டம். அதை செயல்படுத்துவதே உளவு நிறுவனங்களின் வேலை.

முதலில் ‘டெலோ’ என்ற அமைப்பை உளவு நிறுவனம் தனது ‘கைப்பாவை’யாக்கியது. அந்த அமைப்பு செயலிழந்தவுடன் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அமைப்பை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தார்கள். பிறகு பல்வேறு போராளிகள் குழுக்களில் ஏற்பட்ட பிளவுகளைப் பயன்படுத்தி விலகி வந்தவர்களை எல்லாம் இணைத்து ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ (ஈ.என்.டி.எல்.எப்.) என்ற அமைப்பை உளவு நிறுவனம் உருவாக்கியது. இந்திய உளவுத் துறைக்கு ஆதரவாக ‘இந்து’ பார்ப்பன நாளேட்டில் எழுதி வந்த டி.பி.எஸ். ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்களே, இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். உளவுத் துறை உருவாக்கிய, இந்த குழுக்களை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராகவும், தேவைப்படும்போது இலங்கை ஆட்சிக்கு எதிராகவும் உளவு நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன.

கடைசியாக உளவு நிறுவனம் தனது ஏவல் படையாக பிடித்து வைத்த ‘ஈ.என்.டி.எல்.எப்.’ அமைப்புக்கு தலைவராக சென்னையில் கொலை, கடத்தல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, 1989 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை தனது கைப்பிடிக்குள் உளவுத் துறையினர் கொண்டு வந்தனர். தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலிருந்தவரை விடுதுலை செய்து வெளியே கொண்டு வர முயற்சித்தவர்களே, ‘ரா’ உளவுத் துறையினர் தான். பிறகு உளவுத் துறையினரே, இந்திய ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து, டக்ளஸ் தேவானந்தாவை - அந்த ராணுவ விமானத்தில் ஏற்றி யாழ்ப்பாணம் கொண்டு போய் துரோகம் - குழி பறிப்பு வேலைகளுக்காக இறக்கி விட்டார்கள். இந்த உண்மையை ‘டெகல்கா வார’ ஏடு (ஜூலை 1, 2006) வெளிக்கொண்டு வந்தது.

ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டு, அதை தமிழர்கள் மீது ஆயுத முனையில் திணித்தார். இந்தியாவின் ‘கைப்பாவைக் குழுக்கள்’ கண்களை மூடிக் கொண்டு ஒப்பந்தத்தை ஆதரித்தன. உண்மையான விடுதலைப் போராட்டத்தை நடத்திய விடுதலைப் புலிகள் மட்டும் ஏற்க மறுத்தனர். ஆனாலும் இந்திய அதிகார வர்க்கம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மிரட்டி பணிய வைத்தனர். ‘இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை; தமிழ் மக்களை இந்தியா பாதுகாக்கும் என்று நம்பி, ஆயுதங்களை ஒப்படைக் கிறோம்’ என்று, விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். விடுதலைபுலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் சில போட்டிக் குழுக்களுக்கு உளவுத் துறை ஆயுதங்களை வழங்கி வந்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இதை வீடியோ படங்களுடன் ஆதாரத்தோடு அமைதிப் படை தளபதி ஹர்கிரத் சிங்கிடம் எடுத்துக் கூறினார். ஹர்கிரத் சிங்கும் உண்மையே என்று ஒப்புக் கொண்டார். இப்படி செய்வது தவறு, என்று இந்திய ராணுவத் தளபதியாக இருந்த கே.சுந்தர்ஜியிடம் சிங் புகார் கூறினார். சுந்தர்ஜியோ, ‘இது உயர்மட்டத்தின் முடிவு’ என்ற கூறிவிட்டார். இவையெல்லாம் ஹர்கிரத்சிங்கே வெளிப்படுத்திய உண்மைகள், மறுக்க முடியாது. அப்போதெல்லாம் ஹர்கிரத் சிங்கை பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார்.

ஒரு கட்டத்தில் நேரில் பேசுவதற்கு பிரபாகரன் வரும்போது பிரபாகரனை சுட்டுவிடுமாறு ராஜிவின் ஆலோசனைக் குழு இலங்கைத் தூதுவரக இருந்த ஜெ.என்.தீட்சத் வழியாக உத்தரவிட்டது. ஆனால், நேர்மையான அதிகாரியாக இருந்த ஹர்கிரத்சிங் இந்த படுபாதகத்தை தன்னால் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை, அதன் போராட்டத்தைத் தொடரவிட்டால், அவர்கள் தமிழ் ஈழப் போராட்டத்தை விரைவுபடுத்தி விடுவார்கள் என்பதோடு, இந்தியாவின் ஏவல் படையாக எந்த காலத்திலும் மாறமாட்டார்கள் என்பதை உறுதியாக புரிந்து கொண்ட இராஜீவ் காந்தியும், அவரது ஆலோசனை குழுவும், உளவு நிறுவனமும், விடுதலைப்புலிகளின் தலைமையை தீர்த்துக் கட்டுவதற்கு திட்டங்கள் தீட்டின. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தே ஆட்களைப் பிடித்தார்கள். பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக செயல்பட்ட மாத்தையா அந்த சதிவலையில் வீழ்ந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கொண்டே இந்திய உளவு நிறுவனத்துக்காக ரகசியமாக செயல்பட்டு வந்தார். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், இந்தப் பின்னணியில்தான் ஈழத்தில் நடந்த ஒவ்வொரு செயல்பாடுகளையும் பார்க்க வேண்டும். ராஜீவ் சர்மாவின் இந்த நூல் உளவு நிறுவனங்களின் இந்த சதியை சூழ்ச்சிகளைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் மீது இந்த சதிகார நிறுவனங்கள் தமிழினப் பகைவர்கள் சுமத்திய களங்கத்தையும், வீண் பழிகளையும் அப்படியே நியாயப்படுத்துகிறது.

ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கிட்டு வந்த கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படைவழி மறித்தது. இந்த நிகழ்வை இந்த நூல் உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை தந்து நியாயப்படுத்துகிறது. ராஜீவ் கொலையை நடத்தி முடித்ததற்காகவே அதன் ‘வெகுமதியாக’ விடுதலைப் புலிகள் நவீன ஆயுதங்களையும், நவீன கப்பல்களையும் வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பெறத் தொடங்கினர் என்று இந்த நூல் குற்றம் சாட்டுகிறது. அப்படி ராஜீவ் கொலைக்காக கிடைத்த நவீன ஆயுதங்களை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பெற்று கப்பலில் கொண்டு வரும்போது தான் கிட்டு பிடிபட்டார் என்று அபாண்டமாக பழி சுமத்துகிறது, இந்த நூல். உளவுத் துறையின் அவதூறுகளையும், பழியையும் நியாயப்படுத்துவதற்காக திட்டமிட்டு உண்மைகளையே மறைத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர்.

“1993 ஜனவரி 13 ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து 700 கி.மீட்டர் தொலைவில் இக்கப்பல் இடைமறிக்கப்பட்டது” என்கிறார் நூலாசிரியர். இந்திய எல்லைக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு கப்பலை, இந்திய கப்பல் படை சட்ட விரோதமாக சென்று வழி மறித்ததை இந்த நூல் குறிப்பிடாமல், அப்படியே மூடிமறைக்க விரும்புகிறது. ‘700 மைலுக்கு அப்பால் சென்ற கப்பல்’ என்ற வார்த்தையோடு நிறுத்தி விடுகிறார்கள். சர்வதேச கடற்பரப்பில் கப்பலை மடக்கி, இந்திய கடல் எல்லைக்குள் கொண்டு வரப்பட்ட உண்மையை மறைத்துவிட்டு, சென்னை துறைமுகத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும்போது, அதாவது இந்திய கடற்பரப்பில் இருக்கும்போது அக்கப்பல் கிட்டுவால் வெடிக்கச் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள்.

உண்மையில் என்ன நடந்தது? கிட்டுவின் கப்பல் - சர்வதேச கடல்பரப்பில் 440 கடல் மைலுக்கு அப்பால் வந்து கொண்டிருந்தபோது, உளவுத் துறைக்கு மாத்தையா வழியாக அத்தகவல் கிடைக்கப் பெற்றது. கப்பலை வழி மறிக்க இந்திய கப்பல் படை சென்றது. கப்பலை இந்திய கடல் எல்லைக்குள் கொண்டு வருமாறு கப்பல் படையினர் மிரட்டினர். அதற்கு கிட்டு ஒத்துழைக்காத நிலையில், அதிரடிப் படையினர் ஹெலிகாப்டர் துணையுடன் கப்பலுக்குள் குதித்தனர். அப்போது கிட்டுவும், உடன் வந்த போராளிகளும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வீரச் சாவைத் தழுவினர்.

கிட்டு என்ற மாவீரன் தனது இரு கால்களையும் இழந்த பிறகும் உள்ள உறுதியோடு விடுதலைக்காக களத்தில் நின்ற போராளி. இந்தியாவின் துரோகத்தினால் தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டு, வீரமரணத்தை தழுவினார்.

கப்பலில் உயிருடன் பிடிபட்ட 9 போராளிகள் மீது இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடந்தது. சம்பவம் நடந்த இடம் ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்டது. இந்திய கப்பல் படை சர்வதேச பரப்பில் அத்துமீறி நுழைந்து, மேற்கொண்ட இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது என்று அறிவித்த ஆந்திர உயர்நீதிமன்றம், 9 புலிகளையும் விடுதலை செய்தது மட்டுமல்ல, கப்பல் புறப்பட்ட இடமான மத்திய அமெரிக்காவுக்கு அவர்களை அரசாங்கமே சொந்த செலவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் தீர்ப்பளித்தது. ஈழ விடுதலையில் இந்தியாவின் சதிக்கும், கீழறுப்பு நடவடிக்கைகளுக்கும், இந்திய நீதிமன்றமே தந்த செருப்படிதான் இந்த தீர்ப்பு.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்ட இந்த நூல், இந்த வழக்கு தமிழ்நாடு நீதிமன்றத்தில் நடந்ததாக ஒரு பொய்யான தகவலைத் தருவதோடு, இந்த விசாரணைக்காக அரசு 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும் பலன் கிடைக்காமல் போய் விட்டதே என்று கவலைப்பட்டு வருந்துகிறது.

இந்தக் கப்பல் பிடிபட்டதற்கு, புலிகள் இயக்கத்திற்குள்ளே நடந்த துரோகம் பற்றி இந்த நூல் மவுனம் சாதிக்கிறது. பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக செயல்பட்ட மாத்தையா தான் இந்த கப்பல் வரும் சேதியை ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு தந்தார். ஆதாரங்களோடுதான் கூறுகிறோம்.

ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்?

இந்திய உளவு நிறுவனம் விரித்த வலையில் மாத்தையா வீழ்ந்தார் என்று விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதியான முடிவுக்கு வந்தது. அதற்கு அழுத்தமான காரணங்கள், சூழ்நிலை சந்தர்ப்பங் களின் அடிப்படையிலான சான்றுகள் ஏராளம் இருக்கின்றன. ராஜீவ் சர்மாவின் இந்த நூல் மாத்தையா மீது எந்தக் குற்றமும் இல்லாதது போலவும், பிரபாகரன், அவரை சித்திரவதை செய்து கொன்றார் என்றும் அபாண்டமாக குற்றம் சாட்டுகிறது. நூலாசிரியர் இவ்வாறு எழுதுகிறார்:

“பிரகாகரன் ஆயுதமேந்திய சகப் போராளிகளுடன் கூட இரக்கமற்ற முறையில் நடந்து கொள் வார். 1980-க்கும் 1990-க்கும் இடைபட்ட காலத்தில் சக தமிழ் இயக்கங்களைச் சார்ந்த 300 போராளிகளை மற்றும் எல்.டி.டி..ஈ. இயக்கத்திற்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பல முக்கிய தலைவர்களைக் கொன்றார். இது சம்பந்தமாக நடந்த மிக அதிர்ச்சி கரமான சம்பவம் மாத்தையாவின் கொலையாகும். பிரபாகரன் மாத்தையாவை இரட்டை வேடம் ஆடுகிறார் என நினைத்தார். மாத்தையா கொடுத்த தகவலின் பேரிலேயே எச்.வி. அகத் கப்பல் (கிட்டு வந்த கப்பல்) அழிக்கப்பட்டது என்ற தகவல் பரவியது. ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை ஏற்றி வந்த அக்கப்பல் அழிக்கப்பட்டதால் எல்.டி. டி.ஈ.க்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. மாத்தையா துரோகி என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்; தனிச் சிறையில் அடைக்கப்பட் டார்” (பக்.174) என்றெல்லாம் எழுதுகிறார் நூலாசிரியர்.

மாத்தையா மீது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு வீண் பழியை சுமத்தியது போலவும், கிட்டு வந்த கப்பலை மாத்தையா காட்டிக் கொடுத்தார் என்று, ஆதாரம் ஏதுமின்றி தகவல்களைப் பரப்பினார் என்றும் இந்த நூல் பதிவு செய்கிறது. மாத்தையா ஒரு வருட காலம் விசாரணைக் கைதியாக இருந்த போதும் சரி, பிறகு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டபோதும் சரி, மாத்தையாவை பிரபாகரன் சந்திக்கவே இல்லை என்றும் நூல் குற்றம் சாட்டுகிறது. இதையெல்லாம்விட மாத்தையாவுக்கு மரண தண்டனை வழங்கியதற்கு பிரபாகரனுக்கு ‘உள்நோக்கம்’ உண்டு என்ற முடிவுக்கும் நூலாசிரியர் வருகிறார். இவ்வாறு எழுதுகிறார்:

“மாத்தையாவின் கதை முடிந்து விட்டது. ஆனால், மாத்தையா உண்மையிலேயே இரட்டை வேடம் ஆடினாரா அல்லது அவர் மிகப் பலம் பொருந்திய வராக உருவானதால் பிரபாகரன் அவரை அழித்தாரா என்பது யாருக்கும் தெரியாது” என்று ‘யாருக்கும் தெரியாத’ ஒரு உண்மையை தனக்கும் தெரியாத ஒன்றை, பிரபாகரனை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நஞ்சை கக்குகிறார், இந்நூலாசிரியர். பிரபாகரனை இழிவுபடுத்தி, அவரது மாண்பையும் கவுரவத்தையும் நேர்மையையும் களங்கப்படுத்தும் உளவுத் துறையின் எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கிறார் நூலாசிரியர்.

மாத்தையாவுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டதைத் தொடர்ந்து ‘இந்தியா டுடே’ வெளியிட்ட சிறப்புக் கட்டுரை ஒன்றை சுட்டிக்காட்ட விரும்பு கிறேன். இத்தனைக்கும் ‘இந்தியா டுடே’ புலிகளின் ஆதரவு பத்திரிகை அல்ல; மாத்தையா இந்தியாவின் வலையில் வீழ்ந்தார் என்பதை, இந்த செய்தி உறுதிப்படுத்துகிறது. 1994 ஆம் ஆண்டு ‘இந்தியா டுடே’ இதழில் (மார்ச் 16) அதன் செய்தியாளர்கள் எழுதிய விரிவான கட்டுரையிலிருந்து ஒரு முக்கிய பகுதி இது.

“1993 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி - சர்வதேசக் கடலில் சென்று கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் ‘எம்.வி. அகத்’ கப்பலை - இந்தியாவின் கடலோரப் பாதுகாப்புப் படை சுற்றி வளைத்தபோது, கப்பலில் இருந்த, விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கிட்டு, கப்பலுக்குத் தீ வைத்துக் கொண்டு, தன்னைத் தானே அழித்துக் கொண்டார். கிட்டு கப்பலில் வரும் தகவலை இந்திய உளவு நிறுவனத்துக்கு முன்கூட்டியே தந்தது மாத்தையாவும், யோகி யோக ரத்தினமும் தான் என்று பிரபாகரன் குற்றம் சாட்டினார். 1989 - 90 இலங்கை அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வுக்கு மாத்தையா உடன்பட வேண்டும் என்று கூறியதை, பிரபாகரன் ஏற்கவில்லை. இந்தக் கருத்து வேறுபாடு, மேலும் தீவிரமடைந்தது தொடர்ந்து 1991-ல் நடந்த ஆணையிரவு தாக்குதலில் கிடைக்க வேண்டிய வெற்றி, கடும் பின்னடைவை சந்தித்தது. இதற்குக் காரணம் மாத்தையாவே என்று குற்றம் சாட்டினார் பிரபாகரன். தொடர்ந்து 1992 மே மாதத்தில் மாத்தையாவுக்கு தரப்பட்ட பொறுப்புகளி லிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து நவம்பரில் யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த மறைவிடம், குண்டுவீச்சுக்கு உள்ளானது. புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது உதவி யாளர் 1993 ஜன.7-ல் கொல்லப்பட்டார். அடுத்த பத்து நாட்களில் ஜனவரி 16-ல் கிட்டு வந்த கப்பல் இந்திய கப்பல் படையால் சுற்றி வளைக்கப் பட்டது. மாத்தையாவும், அவரது பழைய நண்பரான என்ஜினியர் என்று அறியப்பட்ட மாணிக்கவாசகம் என்பவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். மாத்தையாவின் ஆதர வாளர்கள் 120 பேர் கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகளின் ராணுவ நீதிமன்றம் - 1993 டிசம்பர் 19 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில் கிட்டுவின் மரணத்துக்குக் காரணமானவர் மாத்தையா தான் என்றும், ‘ரா’ (சுயறு) உளவு நிறுவனத்தோடு சேர்ந்து பிரபாகரனை கொல் வதற்கு மாத்தையா சதித் திட்டம் தீட்டினார் என்றும், ‘ரா’வின் முகவராக மாத்தையா செயல் பட்டார் என்றும் புலிகளின் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது”.

இதிலிருந்து என்ன தெரிகிறது?

1992 ஆம் ஆண்டில் மாத்தையா புலிகள் இயக்கப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுகிறார். 1989 ஆம் ஆண்டிலிருந்தே புலிகள் இயக்கத்தில் மாத்தை யாவின் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் குழு ஒன்று இந்தியாவின் உளவு நிறுவனத்துடன் ரகசிய தொடர்பில் செயல்படத் தொடங்கிவிட்டது.

1991 ஆம் ஆண்டு ஆனையிரவில் நடந்த முதல் தாக்குதலில் புலிகள் கடும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. 123 பெண் புலிகள் உட்பட 573 புலிகள் இந்தப் போரில்தான் உயிர் பலியானார்கள். இயக்கத் துக்குள்ளே மாத்தையா நடத்திய சதிதான் இதற்குக் காரணம் என்ற தகவல் புலிகளின் உளவுப் பிரிவு கண்டறிந்து பிரபாகரனுக்கு தெரிவித்தது. பொறுப்பு களிலிருந்து மாத்தையா விடுவிக்கப்பட்டவுடன், யாழ்ப்பாண மருத்துவமனைக்கு அருகே பிரபாகரன் தங்கியிருந்த ரகசியமான மறைவிடம் குண்டுவீச்சுக்கு உள்ளானதோடு பொட்டு அம்மான் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதில் அவரது உதவியாளர் பலியாகி யுள்ளார். மாத்தையாவிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. 1993 ஜனவரியில் கிட்டுவின் உயிர்த் தியாகத்தை தொடர்ந்து மாத்தையா தலைமையிலான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி என்ற புலிகளின் அரசியல் பிரிவு கலைக்கப்படுவதோடு துணைத் தலைவர் என்ற 2 ஆம் நிலையிலிருந்து மாத்தையா நீக்கப்பட்டவுடன் பிரபாகரனுக்கு எதிராக வெளிப்படையாகவே போர்க்கொடி உயர்த்தினார் மாத்தையா. அப்போது கொக்குவில் என்ற பகுதியில் விடுதலைப் புலி ஆலோசகர் பாலசிங்கம் தங்கியிருந்தார். அவரது வீட்டுக்குப் போன மாத்தையா, அங்கே தாம் பிரபாகரனை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப் போவதாக அறிவித்தார். இதை அடேல் பாலசிங்கம் தனது நூலில் சுட்டிக்காட்டியுள்hர்.

பிரபாகரனின் மெய்க்காப்பாளராக இருந்த ஒரு விடுதலைப்புலி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் வேலூர் சிறையிலிருந்து உளவுத் துறை உதவியுடன் ரகசியமாக விடுவிக்கப்பட்டார். பிரபாகரனை கொல் வதற்கு வேலூர் சிறையிலே திட்டங்கள் தயாரிக்கப் பட்டு, அதனடிப்படையிலேதான் விடுதலை செய்யப் பட்டார் என்ற அதிர்ச்சியான தகவல் மாத்தையா விடம் நடத்திய விசாரணையிலிருந்து தெரிய வந்தது. மாத்தையாவின் கொழும்புப் பயணங்களும் இந்திய உளவுத் துறை அதிகாரிகளுடன் அவருக்கிருந்த தொடர்புகளும் விசாரணையில் வெளி வந்தது.

இங்கே நான் எடுத்துக்காட்டிய ‘இந்தியா டுடே’ கட்டுரையில் கடைசியாக கூறப்பட்ட, இரண்டு வாக்கியங்கள் மிகவும் முக்கியமானதாகும். “பிரபாகரன் இனிமேல் தான் மிகக் கடுமையான சோதனைகளை எதிர்க்கொள்ளப் போகிறார் என்ற கருத்தில் உளவு நிறுவனம் மிகவும் திருப்தியடைந் திருந்தது” (Indian intelligent agencies are convinced, he (Prabhakaran) is facing his toughest test yet); அதாவது மாத்தையாவின் துரோக நடவடிக்கைகள் தொடங்கியதற்குப் பிறகு, அவரது கீழறுப்பு நட வடிக்கைகள் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கை யில் உளவுத் துறை திளைத்திருந்தது என்று எழுதி யிருப்பதிலிருந்தே உளவுத் துறையுடன் மாத்தை யாவுக்கு உள்ள தொடர்பு உறுதிப்படுத்தப்பட் டுள்ளது. கடைசியாக, ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு “மாத்தையா சிறந்த சொத்துதான் என்றால், மாத்தையாவின் மர்மமான நடவடிக்கைகள் மேலும் அதிகமாகலாம்! - (But if Mahathya was indeed a ‘RAW’ asset, there might be more to Mahathya mystery” - India Today) - இந்தியா டுடே கட்டுரையின் இந்த இறுதி வாசகம் மாத்தையா ‘ரா’ உளவு நிறுவனத்தின் வலையில் சிக்கியதை உறுதிப்படுத்துகிறது.

இவை எல்லாவற்றையும்விட மற்றொரு முக்கிய செய்தியை சுட்டிக்காட்ட வேண்டும். 1991 ஆம் ஆண்டு ராஜீவ் கொலை நடக்கிறது. அப்போது பிரபாகரனுக்கு அடுத்த இரண்டாம் நிலை தலைவர் மாத்தையா; 1992 ஆம் ஆண்டு, இந்திய உளவுத் துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்கிறது. அதில் பிரபாகரன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மன் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் இரண்டாம் நிலை தலைவராக இருந்த மாத்தையாவின் பெயர் குற்றப் பத்திரிகையில் இடம் பெறவில்லை. இந்திய உளவுத் துறை அவர் பெயரை மட்டும் விட்டு விடுகிறது; ஏன்? 1989 ஆம் ஆண்டில் மாத்தையா பிரபாகரனை சுட்டுக் கொன்றுவிட்டார் என்ற செய்தியை உளவுத் துறை வெளியிட்டு, அதை ஊடகங்கள் பரப்பியதையும், 1994 ஆம் ஆண்டு வெளிவந்த ‘இந்தியா டுடே’ கட்டுரையையும் ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவின் பெயர் சேர்க்கப்படாததையும் இணைத்துப் பார்த்தால் மாத்தையா இந்திய உளவுத் துறையின் சதியில் வீழ்ந்து விட்டார் என்ற முடிவுக்கே வர முடியும். இவ்வளவு பின்னணிகளையும் மறைத்து ராஜீவ் சர்மாவின் இந்த நூல், மாத்தையா தன்னைவிட செல்வாக்குள்ள தலைவராக வளருகிறார் என்ற காரணத்தால், பிரபாகரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை விதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தைக் கிளப்புவது, என்ன நியாயம்? என்ன நேர்மை? பிரபாகரனை தீர்த்துக் கட்டுவதற்கு இந்திய உளவுத் துறையால் உருவாக்கப்பட்டவரே மாத்தையா என்ற உண்மையை மறைத்து பிரபாகரன் மீதே குற்றம் சாட்டும் இந்த நூலாசிரியர், கண்மூடித்தனமாக ஈழத்தில் நடந்த கொலைகள் எல்லாவற்றையும் விடுதலைப் புலிகள் தான் செய்தனர் என்று எந்த ஆதாரமும் இன்றி குற்றக் கூண்டில் ஏற்றி விடுகிறார்.

இலங்கை அதிபர் பிரேமதாசா, தமிழ் அய்க்கிய விடுதலை கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம், புளோட் இயக்கத் தலைவர் முகுந்தன், இலங்கையின் ராணுவ அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே என்று இவர்கள் அனைவரையும் விடுதலைப் புலிகள் கொலை செய்தார்கள் என்று இந்த நூல் திரும்ப திரும்ப குற்றம்சாட்டுகிறது. விடுதலைப் புலிகள்தான் இந்தக் கொலைகளை செய்தார்கள் என்பதற்கு எந்த ஒரு சான்றையும் முன் வைக்கவில்லை. உளவுத் துறை கட்டவிழ்த்துவிட்ட பொய்யுரைகளை அப்படியே திரும்பவும் ‘கிளிப்பிள்ளை’ போல மீண்டும் மீண்டும் கூறுகிறார், நூலாசிரியர். இந்த வீண்பழிகளை நம்மால் ஆதாரங்களுடன் மறுக்க முடியும்.

முதலில் பிரேமதாசா பிரச்சினைக்கு வருவோம்; பிரேமதாசா பதவிக்கு வந்த காலம் - சூழ்நிலை எத்தகையது? இதை நாம் பார்க்க வேண்டும்.

பிரேமதாசா மீது ஆத்திரம் - இந்திய உளவு நிறுவனத்தின் வஞ்சகம்

1988 ஆம் ஆண்டு டிசம்பர் 29 ஆம் தேதி ஜெயவர்த்தனாவைத் தொடர்ந்து, பிரேமதாசா அதிபர் பதவிக்கு வந்தார். அப்போது, வடக்கு-கிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவம் நிலை கொண்டிருந்தது. ராஜீவ்-ஜெயவர்த்தனே சமரச ஒப்பந்தத்தை துப்பாக்கி முனையில் இந்திய ராணுவம் திணிக்க முயன்ற நடவடிக்கைகளால், தமிழ் மக்கள் கொதித்துப் போயிருந்தனர். யுத்த மேகம் பரவி மக்கள் அச்சத்துக்குள்ளாகியிருந்த சூழலில், வடக்கு-கிழக்கு மாகாண கவுன்சிலுக்கு இந்திய ராணுவத்தின் பார்வையில் ஒரு தேர்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டது. தில்லுமுல்லுகள் முறைகேடுகளுடன் நடத்தப்பட்ட தேர்தலில் - ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ இயக்கத்தைச் சார்ந்த வரதராஜப் பெருமாள், வடக்கு-கிழக்கு மாகாண முதல்வராக திரிகோணமலையில் முடிசூட்டப்பட்டார். ஈ.பி.ஆர்.எல்.எப்., இந்திய ராணுவத்தின் ‘செல்லப் பிள்ளையாக’ மாறி, விடுதலைப் புலிகளை ராணுவத்திடம் காட்டிக் கொடுக்கும் வேலைகளைச் செய்து வந்தது. இதனால், விடுதலைப் புலிகள் பக்கம் நின்ற ஏராளமான தமிழர்கள், வீடுகளிலும், வீதிகளிலும், இந்திய ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.

அதே நேரத்தில் இலங்கையின் தெற்குப் பகுதியில் ‘ஜெவிபி’ சிங்களர் அமைப்பு, வடகிழக்கில், இந்திய ராணுவம் நிலை பெற்றிருப்பதை எதிர்த்து, கலவரங்களில் இறங்கியது சிங்கள காவல் நிலையங்களும், அரசு அலுவலகங்களும் தாக்கப்பட்டன. இதில் 2500 பேர் வரை கொல்லப்பட்டனர். இத்தகைய பதட்டமான சூழலில் பதவிப் பொறுப்புக்கு வந்த பிரேமதாசா, நிலைமையைப் புரிந்து கொண்டு, இந்திய ராணுவத்தை வெளியேற்றிட வேண்டும் என்ற உறுதியான முடிவுக்கு வந்தார்.

பிரேமதாசா சமுதாயத்தின் கீழ் மட்டத்திலிருந்து வந்த தலைவர்; புத்தமதப் பற்று அதிகம்; தனது பதவி ஏற்பையே கண்டியில் உள்ள புத்தர் பல் இருக்கும் மடாலயத்தில் தான் நடத்தினார். இலங்கை ஒரே நாடு; அது பிரிக்க முடியாது என்ற உணர்வு கொண்டவர். பதவி ஏற்றவுடன் விடுதலைப் புலிகளையும், ஜெ.வி.பி. இயக்கத்தையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். ‘இனப்பிரச்சினை எங்களின் உள்நாட்டுப் பிரச்சினை; அதில் அன்னிய சக்திகளைத் தலையிட அனுமதிக்க மாட்டோம்’ என்று சூசகமாக அறிவித்தார். லண்டனிலிருந்த விடுதலைப் புலிகளின் ஆலோசகர் பாலசிங்கத்திடம் தொடர்பு கொண்டு பேசினார் பிரேமதாசா. இந்திய ராணுவம் வெளியேறவேண்டும் என்று பிரேமதாசா வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அந்த நிலையில் விடுதலைப் புலிகளோடு இலங்கை ராணுவத்தின் போர் நிறுத்தத்தை அறிவித்தார். இந்திய ராணுவமும் புலிகளுக்கு எதிராக போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரேமதாசா தானாக அறிவித்த இந்த போர் நிறுத்தத்தை விடுதலைப் புலிகள் ஏற்க தயக்கம் காட்டினார். இந்திய ராணுவம் வெளியேறாதவரை, போர் நிறுத்தம் செய்ய முடியாது; அது தங்களுக்கு ஆபத்து என்று விடுதலைப் புலிகள் அறிவித்தனர். இதைப் புரிந்து கொண்ட பிரேமதாசா, கொழும்பு புறநகரில் கோயில் விழா ஒன்றில் பேசுகையில் - இந்திய அரசு, மூன்று மாதங்களில் ராணுவத்தைத் திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாக அறிவித்தார். அதே நாளில், இலங்கை வெளிநாட்டுத் துறை அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னே விடுதலைப் புலிகளுக்கு, பேச்சுவார்த்தைக்கு வருமாறு அதிகாரப்பூர்வ அழைப்பு விடுத்தார். புலிகள் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர்.

பிரேமதாசாவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களின் குழு - பாலசிங்கம் தலைமையில் விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளோடு பேச்சு வார்த்தையைத் துவக்கியது. மனித உரிமைக்கு எதிரான இந்திய ராணுவத்தின் அடக்குமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டன. 5000 தமிழர்கள் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டதையும், அமைதிப்படை ஆக்கிரமிப்புப் படையாக செயல்படுவது சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்பதையும் விடுதலைப் புலிகள் விளக்கினர். இந்தக் கருத்துகள் கூட்டறிக்கையாக வெளியிடப்பட்டபோது, பிரேமதாசா மீது இந்தியா கோபம் கொண்டது. கொழும்பிலுள்ள இந்தியத் தூதர் பேச்சு வார்த்தையில் இந்திய ராணுவ நடவடிக்கைகளை விமர்சனம் செய்வதற்குக் கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையே தெற்கு ஆசிய நாடுகளின் மாநாட்டை (சார்க்) நவம்பரில், இலங்கையில் நடத்தவிப்பதால், ஜூலை 31 ஆம் தேதிக்குள், இந்திய ராணுவத்தை திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு பிரேமதாசா, பிரதமர் ராஜீவுக்குக் கடிதம் எழுதினார். ஆத்திரமடைந்த ராஜீவ் காந்தி, பெங்களூரில் பேசும்போது, “ஈ.பி.ஆர்.எல்.எப். ஆட்சி நடத்தும் மாகாணக் கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்களைப் பெற்றுத் தந்த பிறகுதான், அமைதிப்படை வெளியேறும்” என்று அறிவித்தார். பிரேமதாசா, ராஜீவ்காந்தியின் இந்தப் பேச்சால் மிகவும் வருத்தமடைந்தார். இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகளில் இலங்கை - இந்திய முரண்பாடுகள் பற்றியே பெரிதும் விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில், வரதராஜப் பெருமாள் முதலமைச்சராக இருந்த தமிழர் பகுதியில் பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி, ‘தமிழ் தேசிய ராணுவம்’ ஒன்றை உருவாக்கினர். சுமார் 4500 சிறுவர்களை ‘ஈ.பி.ஆர். எல்.எப்.’ குழுவினர், பள்ளிகளிலிருந்து கட்டாயப்படுத்தி கடத்திப் போய் பல்வேறு இந்திய ராணுவ முகாமுக்குப் பயிற்சிக்கு அனுப்பினர். விடுதலைப் புலிகள் சிறுவர்களை ராணுவத்தில் சேர்ப்பதாக குற்றம் சாட்டியது இந்தியா. ஆனால் அந்தக் குற்றத்தைச் செய்ததே இந்தியா தான்!

சிறுவர்களின் பெற்றோர்கள், இந்திய ராணுவ முகாம்களின் முன்னால் திரண்டு, தங்கள் பிள்ளைகளை விடுவிக்குமாறு மன்றாடினார்கள். இந்த நிலையில் இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும், ராணுவ மோதலை நிறுத்துவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இந்திய ராணுவத்தைப் போர் நிறுத்தம் செய்ய வைப்பதற்காக, பிரேமதாசாவின் வேண்டுகோளை ஏற்று, முதலில் தயங்கிய விடுதலைப்புலிகள் பிறகு போர் நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையே மோதல் நிறுத்தப்பட்டு, அமைதிக்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுவிட்டதால், இந்திய ராணுவமும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்திவிட வேண்டும் என்று, பிரேமதாசா இந்திய பிரதமர் ராஜீவுக்கு கடிதம் எழுதினார். இதற்கு ராஜீவ் காந்தி அடுத்த நாளே பதில் கடிதம் ஒன்றை எழுதினார் .

பிரேமதாசா கடிதத்தால் ராஜீவ் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ஆசிய நாடுகளின் முடிசூடா மன்னராக வலம் வருவதற்கு ராஜீவ் காந்தி விரும்பினார். அதன் காரணமாகத்தான் ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழர்களின் பிரதிநிதியாக தன்னைத் தானே நியமித்துக் கொண்டு ஈழத் தமிழர் விடுதலை இயக்கத்தை ஓரம் கட்டிவிட்டு, ஜெயவர்த்தனாவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதைத் தமிழர்கள் மீது திணித்தார். வலிமை மிக்க இந்திய ராணுவத்தின் முன் இந்த சின்னஞ்சிறு நாடுகள் எல்லாம் ‘தூசு’ என்ற சர்வாதிகார மனப்போக்கில் திளைத்திருந்த ஒருவருக்கு பிரேமதாசாவின் இந்த அறிவிப்பு ஆத்திரத்தை ஏற்படுத்தாதா? பிரேமதாசாவுக்கு ராஜீவ் எழுதிய பதிலில் இந்த ஆத்திரத்தின் வெளிப்பாட்டைப் பார்க்க முடியும். இலங்கை அரசுடன் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் செய்ய முன் வந்திருந்தாலும் அந்த போர் நிறுத்தத்தை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ராஜீவ், பிரேமதாசாவுக்கு பதில் எழுதினார்.

அமெரிக்காக்காரன் நடத்தி வரும் நாட்டாண்மையை எல்லாம் மிஞ்சக் கூடியதாக, இது இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். ராஜீவ் தனது பதில் கடிதத்தில் புலிகள் போர் நிறுத்தம் செய்தால் மட்டும் போதாது. இலங்கையின் ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும். இலங்கை அரசிடம் புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றெல்லாம் ராஜீவ் காந்தி நிபந்தனை விதித்தார். இதற்கு அர்த்தம் பிரேமதாசாவைவிட ராஜீவுக்கு இலங்கை ஒருமைப்பாட்டில் கவலை வந்து விட்டது என்பது அல்ல. விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் தமது முயற்சி தோல்வியில் முடிந்ததும், பிரேமதாசா, தனது ராணுவத்தைத் திருப்பி அனுப்ப கெடு விதித்து விட்டாரே என்ற ஆத்திரமும் தான் காரணம். பிரேமதாசா, ராஜீவ் மிரட்டலுக்கு அஞ்சவில்லை.

இன்னும் ஒரு படி மேலே போய் அவர் பதிலடி தந்தார். “ஒப்பந்தப்படி இந்திய ராணுவம் எனது கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. நானே இந்திய ராணுவத்தை வெளியேற உத்தரவிடுவேன்” என்று அறிவித்தார். தெற்கு ஆசியாவின் சக்தி மிக்க தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள துடித்துக் கொண்டிருந்த ராஜீவ் காந்திக்கு பிரேமதாசா விடுத்த சவாலை, ராஜீவால் செரிமானம் செய்து கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் ராஜீவ் மிரட்டலுக்கு பணிய மறுத்த விடுதலைப் புலிகளை ஒழிப்பதில் தீவிரம் காட்டி செயல்பட்டு வந்த உளவுத் துறையின் கவனம், பிரேமதாசாவின் பக்கம் திரும்பியது. பிரேமதாசாவுக்கு எதிரான திட்டங்களை உளவுத் துறை உருவாக்கத் தொடங்கியது. விடுதலைப் புலிகளுக்கு பச்சைக் கொடி காட்டினார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆயுதங்கள் தரத் தயாராக இருப்பதாகவும், பிரேமதாசாவை எதிர்த்து போராட்டத்தைத் தொடங்கினால், இந்தியா விடுதலைப் புலிகள் பக்கம் நிற்கும் என்று விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு தூது அனுப்பினார்கள். ஆனால், இந்திய சதி வலையில் சிக்கிட பிரபாகரன் தயாராக இல்லை. பிரபாகரன் இத்திட்டத்தை நிராகரித்து விட்டார்.

இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று நீங்கள் கேட்கலாம். ஆதாரங்களுடன் தான் ஒவ்வொரு கருத்தையும் நான் உங்கள் முன்னால் கூறிக் கொண்டிருக்கிறேன். நான் கூறிய இந்தக் கருத்துகளுக்கு சாட்சியாக நான் நிறுத்த விரும்புவது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனைத் தான்.

முரசொலி மாறன் அப்போது தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினர். பிரேமதாசா - ராஜீவ் முரண்பாடு முற்றியிருந்த நேரத்தில் ராஜீவ் முரசொலி மாறனை அழைத்துப் பேசினார். இது பற்றி முரசொலி மாறனே இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் விரிவாகக் கூறுகிறார். இதோ முரசொலி மாறன் பேட்டி:

“இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டபோதே அதை எதிர்த்தவர் பிரேமதாசா. இவர் இலங்கை அதிபர் ஆனதும் இந்திய அமைதிப் படையை வெளியேற்றச் சொன்னார். விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு, இந்தியப் படைக்கு எதிராக புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார். பிரேமதாசா - பிரபாகரன் நெருக்கம் அதிகமாவதைக் கண்ட இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி என்னை (முரசொலி மாறன்) அழைத்துப் பேசினார். பிரபாகரனுக்கு நாம் உதவிகள் செய்யலாம். புலிகள் பற்றி உண்மை நிலவரம் எனக்கு தெரியாமல் போய் விட்டது. எனவே தமிழக முதல்வர் கருணாநிதியை புலிகளுடன் பேசச் சொல்லுங்கள். சுதந்திர தமிழ் மாநிலம் அமைக்க நாம் உதவலாம் என்று கூறினார். நான் (முரசொலி மாறன்) இப்போதே அவர்கள் சுதந்திர தனி மாநிலமாகத்தான் உள்ளனர். வரி வசூல் வரை நீதிமன்றம் வரை நிர்வாகம் செய்கிறார்கள் என்றேன். உடனே ராஜீவ் காந்தி சிரித்தபடி தமிழ் ஈழத்தின் பிதாமகர் தி.மு.க. தான் என்றார்.” (‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ 16.12.1997)

முரசொலி மாறன் அளித்த இந்தப் பேட்டி, விடுதலைப்புலிகளை ஒழிப்பதைக் கூட நிறுத்திக் கொண்டு அவர்களிடம் சமரசம் பேசி ஆயுதம் வழங்கி, பிரேமதாசாவுடன் மோத விடும் நிலைக்கு ராஜீவ் வந்தார் என்பதைப் படம் பிடித்துக் காட்டுகிறது. ஆக, விடுதலைப் புலிகளைவிட பிரேமதாசா ராஜீவ் காந்தியின் முதன்மையான எதிரியாகக் கருதும் நிலைக்கு ராஜீவ் காந்தி வந்து விட்டார். அதற்கேற்ப உளவு நிறுவனமும் ‘காய்’களை நகர்த்தியது.

ஒரு முக்கியமான செய்தியை சுட்டிகாட்ட வேண்டும். பிரேமதாசா கொழும்பு புறநகர்ப் பகுதியான பட்டாரமுல்லா என்ற இடத்தில் 1989 ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி பேசும் போது இந்திய ராணுவம் இலங்கையிலிருந்து ஒரு மாத காலத்துக்குள் அதாவது ஜூலை 29 ஆம் தேதிக்குள் வெளியேறிட வேண்டும் என்று கெடு நிர்ணயித்து அறிவித்தார். (ஜூலை 29 - என்ற தேதிக்கான முக்கியத்துவம் ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் அமுலுக்கு வந்த தேதி என்பதாகும்). ராஜீவ் காந்தியும் இந்திய உளவு நிறுவனமும் பிரேமதாசாவின் இந்த ‘கெடு’வால் அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்கள் இதை சற்றும் எதிர்பார்க்க வில்லை.

அவசர அவசரமாக இந்திய உளவு நிறுவனம் பிரேமதாசாவுக்கு எதிரான சதித் திட்டங்களை உருவாக்கியது. என்ன திட்டம்?

1. இந்திய ராணுவம் வெளியேறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தும், ராஜீவ் - ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை பிரேமதாசா கை விடுவதை எதிர்த்தும், தமிழர் பகுதியில் தங்களின் ‘கைத்தடி’ அமைப்பிலிருந்து ஆட்களைப் பிடித்து பிரேமதாசாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்த இந்திய உளவு நிறுவனம் ஏற்பாடு செய்தது.

2. விடுதலைப் புலிகள் தாக்கும் நிலையில் பலமாகவே உள்ளார்கள் என்றும், இந்திய ராணுவம் இப்படிப்பட்ட நிலையில் வெளியேறக் கூடாது என்றும், விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பிரேமதாசாவின் இலங்கை ராணுவத்துக்குக் கிடையாது என்றும் சில சம்பவங்களை உருவாக்கி உணர்த்த வேண்டும் என்று திட்டங்களை வகுத்தனர். தமிழ் ஈழத்தில் ‘இந்தியாவின் தலையீடு’ என்ற விரிவான நூலை (Indian Intervention in Srilanka) ரோகனா குணரத்னா என்ற கொழும்பு பத்திரிகையாளர் எழுதியுள்ள இந்த நூலில் இந்திய உளவு நிறுவனத்தின் மேற்குறிப்பிட்ட திட்டங்களை அவர் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் வலிமை குறையாதவர்கள் என்றும், அவர்கள் தலைவர்களைக் கொலை செய்யக் கூடியவர்கள் என்றும் பிரேமதாசா இந்திய ராணுவத்தை வெளியேறச் சொல்லும் கருத்துக்கு கடும் எதிர்ப்பை உருவாக்கிவிடலாம் என்ற திட்டத்தின் கீழ் சில கொலைகளுக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டன. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள்ளேயே இந்திய உளவு நிறுவனத்தின் வலையில் சிக்கியிருந்த மாத்தையாவின் அணி, இதற்காக, களமிறக்கப்பட்டது.

பிரேமதாசா இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என்று ஒரு மாதம் கெடு விதித்து அறிவித்த நாள், 1989 ஜூன் 1, கெடு முடியும் நாள் ஜூலை 29. இந்த ஒரு மாத இடைவெளியில் தான் சில முக்கிய தலைவர்கள் கொலை செய்யப்பட்டு, அவர்களை கொலை செய்தவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்ற பழியை சுமத்தி ஊடகங்கள் வழியாக பரப்பினர். எந்தத் தேதியில், யார் யார் கொல்லப்பட்டார்கள்?

1989 ஜூலை 12 - தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர்கள் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன்.

1989 ஜூலை 17 - அதாவது, அடுத்த நான்கு நாட்களில் புளோட் இயக்கத் தலைவர் உமா மகேசுவரன்.

1989 ஜூலை 23 - அடுத்த 10 நாட்களில் ‘பிரபாகரன்’ மாத்தையால் கொல்லப்பட்டார் என்ற அறிவிப்பு (அனைத்து இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்களில் உயிருடன் இருந்த பிரபாகரன் - மாத்தையாவால் கொல்லப்பட்டதாக இந்திய உளவு நிறுவனம் செய்திகளைப் பரப்பியது).

பிரேமதாசா - இந்திய ராணுவம் வெளியேற கெடு விதித்த ஒரு மாத கால இடைவெளியில் மட்டும், இந்தக் கொலைகள் நடந்தன என்றால், அதன் நோக்கம், மூளை, பின்னாலிருந்து இயக்கிய சக்திகளைப் புரிந்து கொள்ள முடியும்.

அமிர்தலிங்கம் கொலையின் பின்னணி என்ன?

பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தைத் தொடங்கியதை குலைத்து பிரேமதாசாவுக்கு கடும் நெருக்கடிகளை உருவாக்க திட்டமிட்டது இந்திய உளவுத் துறை! தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இருவரும் 1989 ஜூலை 13 ஆம் தேதி கொழும்பில் அமிர்தலிங்கம் வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். அமிர்தலிங்கம் அவர்களோ, யோகேஸ்வரனோ, ஆயுதம் தாங்கிய போராளிகள் அல்ல. காந்திய வழியைப் பின்பற்றியவர் அமிர்தலிங்கம். அவர் செய்த ஒரே தவறு, இந்திய உளவுத் துறையை முழுமையாக நம்பியதுதான். தமிழ் ஈழ விடுதலையை இந்தியா மீட்டெடுத்து, தன்னிடம் ஒப்படைக்கும் என்று அவர் மலை போன்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தார். ஆனால் நடந்ததோ வேறு.

அமிர்தலிங்கம் - யோகேஸ்வரன் ஆகிய இரு தலைவர்களையும், அவரது வீட்டில் சுட்டுவிட்டு தப்பி வெளியே ஓடி வந்த 3 பேரை அமிர்தலிங்கம் வீட்டில் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட காவலர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தக் கொலைப் படைக்கு தலைமை தாங்கி காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர் விசு, அலாய்சியஸ், விக்னம் ஆகிய மூன்று பேர். இதில் விசு - யார்? மாத்தையாவின் வலதுகரமாக செயல்பட்டவர்.

இந்திய உளவுத் துறையின் வலையில் சிக்கியிருந்த மாத்தையா - பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தையைக் குழப்பிட இந்திய உளவுத் துறையின் திட்டத்தை ஏற்று நடத்திய கொலைதான் இது! இதைச் செய்தது யார் என்பது பற்றி பத்திரிகைகளிலே குழப்பமான செய்திகள் வந்தன. ‘வீரகேசரி’ நாளேடு விடுதலைப் புலிகள், அமிர்தலிங்கத்தைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டுவிட்டதாக செய்தி வெளியிட்டது. அதே நாளில் கொழும்பிலிருந்து வெளிவந்த ஆங்கில நாளேடுகள், இந்தக் கொலையில் தங்களுக்கு தொடர்பில்லை என்று புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர் என்று செய்தி வெளியிட்டன. ஒரே நாளிலேயே இரண்டு செய்திகளும் வெளி வந்ததுதான் வேடிக்கை.

“விடுதலைப் புலிகள் தமிழர்களைக் கொல்லும் சக்தியுடனேயே இருக்கிறார்கள். இலங்கை அரசால் விடுதலைப் புலிகளைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, இந்திய ராணுவம் வடக்கு - கிழக்குப் பகுதியிலிருந்து வெளியேறுவது ஆபத்து” என்ற கருத்தை உருவாக்குவதே உளவு நிறுவனங்களின் திட்டம். இந்தத் திட்டத்தை அப்படியே ஜே.என். தீட்சத்தும் தனது நூலில் (Assignment in Colombo) வழிமொழிந்து அமிர்தலிங்கம் கொலையை நடத்தியது விடுதலைப் புலிகளே என்று எழுதினார்.

“இலங்கைத் தமிழர்களை ஜனநாயகப் பாதைக்கு அமிர்தலிங்கம், திருப்பி விடுவார் என்ற அச்சத்தின் காரணமாகவே விடுதலைப் புலிகள் அமிர்தலிங்கத்தைக் கொலை செய்தார்கள்” என்று ஜே.என். தீட்சத் உண்மையை மறைத்து எழுதினார். கொன்றது விடுதலைப் புலிகள் அல்ல; இந்திய உளவு நிறுவனம் - மாத்தையாவைப் பயன்படுத்தி நடத்திய சதி என்பது தெரிந்திருந்தும் புலிகள் மீதே பழி போடும் நோக்கத்தையே பிரதிபலித்தார்.

அமிர்தலிங்கத்தைச் சுட்ட 3 பேரும் தப்பி வந்தபோது, அமிர்தலிங்கத்தின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள் என்பதும், அவர்கள் மாத்தையாவின் ஆட்கள் என்பதும் உண்மை. இது பற்றி மற்றொரு ஆதாரத்தை நான் முன் வைக்க விரும்புகிறேன். தமிழ் ஈழத்திலே நடந்த அரசியல் படுகொலைகள் பலவற்றுக்கும் காரணமாக இருந்த இந்திய உளவுத் துறை, அத்தனை பழிகளையும் விடுதலைப் புலிகள் மீதே போட்டதும், இங்கே பார்ப்பன ஊடகங்கள் அதையே மீண்டும் மீண்டும் எழுதி, உண்மையாக உறுதி செய்ததும், பாமர மக்களை நம்பச் செய்ததும், எவ்வளவு மோசமான பார்ப்பன சூழ்ச்சி என்பதை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். ராஜீவ் சர்மாவும் கூசாமல் இந்த நூலில் அதே பழியைத்தான் போடுகிறார்!

ஒரு மகத்தான விடுதலை இயக்கத்தின் மீது, இப்படி புழுதிவாரி தூற்றி, களங்கப்படுத்திய இந்த கயமைப் பிரச்சாரங்களுக்கு பதில் கூறுவதற்கான ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றே கருதுகிறேன். அவர்களோ விடுதலைப் புலிகள் மீது எந்த ஆதாரமும் இல்லாமல் அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். அதே வழியில் எந்த ஆதாரங்களும் இல்லாமல், ஏதோ, உணர்வுகளின் அடிப்படையில் நாம் அவற்றை மறுக்கவில்லை. மாறாக, மறுப்புகளை உரிய ஆதாரங்கள் தரவுகளுடன் தான் மறுக்கிறோம். அமிர்தலிங்கத்தை விடுதலைப் புலிகள் ஏன் கொலை செய்ய வேண்டும்? தீட்சத் கூறுவதுபோல் ஈழத் தமிழர்களின் கருத்துகளை அப்படியே தன் பக்கம் திருப்பிவிடக் கூடிய செல்வாக்குள்ள தலைவராகத் தான் அமிர்தலிங்கம் இருந்தாரா?

அந்தக் காலக்கட்டத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் முழுமையாக விடுதலைப் புலிகளிடமே தங்கியிருந்தது என்ற உண்மை சிறு குழந்தைகளுக்குக்கூட தெரியுமே! அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் விடுதலைப் புலிகள் கொல்வதற்கு ஏதேனும் ஒரு காரணத்தைக் கூறியாக வேண்டிய கட்டாயம் - உளவு நிறுவனத்துக்கும், ஜெ.என். தீட்சத்துக்கும் இருந்தது. எனவே சொத்தையான எவருமே ஏற்றுக் கொள்ள முடியாத காரணத்தை ஜே.என். தீட்சத் முன் வைக்கிறார்; அவ்வளவுதான்.

அமிர்தலிங்கத்தை சுட்டுக் கொன்றவர்கள் பற்றிய விவரங்களை அமிர்தலிங்கத்தின் வரலாற்றை எழுதிய டி.சபாரத்தினம் விளக்கிக் கூறியுள்ளார். டி.சபா ரத்தினம், 1996 ஆம் ஆண்டு, அமிர்தலிங்கத்தின் வரலாற்றை எழுதி ‘The Murder of a Moderate’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார். அதில் அமிர்தலிங்கம் கொலை பற்றி எழுதப்பட்டுள்ளது. என்ன?

“அமிர்தலிங்கத்தைக் கொன்றவர்கள், எந்த அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதில் பெரும் குழப்பமே நீடிக்கிறது. இதில் பல்வேறு கருத்துகள் கூறப்படுகின்றன. அமிர்தலிங்கத்தை சுட்ட விசு, வவுனியாவுக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுக்கு தலைவராக இருந்தவர். அதுவரை அந்தப் பதவியில் இருந்த தினேஷ் என்பவர் காணாமல் போன பிறகு நியமிக்கப்பட்ட விசு, அதன் பிறகு, விடுதலைப் புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி விட்டதாகக் கூறுகிறார்கள். வேறு சிலர், “இல்லை, விசு, அப்போதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் இருந்தார்” என்றார்கள். லண்டனில் உள்ள விடுதலைப் புலிகள் தலைமையகம் அமிர்தலிங்கம் கொலையில், விடுதலைப் புலிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிக்கையே வெளியிட்டது. புலிகளின் அந்த அறிக்கை அமிர்தலிங்கம், கொலையைக் கண்டித்தது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தையை விரும்பாத சக்திகளே, இந்தக் கொலையை செய்து, விடுதலைப் புலிகள் மீது பழிபோட்டு, களங்கம் கற்பிக்கின்றன என்றும் அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. அத்துடன், “தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் மறைவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் ஆழ்ந்த கவலையுடன் துயரத்தை வெளிப்படுத்திக் கொள்கிறது. சில ஈவிரக்கமற்ற கொடூர சக்திகள் விடுதலைப் புலிகளை களங்கப்படுத்தி, அரசுக்கும் புலிகளுக்குமிடையே நடக்கும் பேச்சு வார்த்தையை சீர்குலைக்க திட்டமிடுவதாகவே சந்தேகிக்கிறோம்.”

- “The LTTE learned with deep distress the tragic demise of the T.U.L.F. leaders, Amirthalingam and Yogeswaran. We suspect that diabolical forces are at work to discredit the organization and to disrupt the current peace talks between the LTTE and the government of Sri Lanka” - என்று அந்த அறிக்கை கூறியது.

ஆக, அமிர்தலிங்கம் வரலாற்றை எழுதியவறே புலிகள் மீதான குற்றச்சாட்டை உறுதி செய்யவில்லை. இத்தகைய ராணுவ ரீதியான நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டால் அவர்கள் அதை மறுக்கும் வழக்கமுமில்லை என்பது புலிகள் வரலாற்றை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

- இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற விடுதலைப் புலிகள் நியாயமான கோரிக்கைக்கு இலங்கை அரசே ஆதரவு தந்து போர் நிறுத்தம் செய்து புலிகள் சம்மதத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்த ஒரு நல்ல வாய்ப்புச் சூழலில் கிடைத்த நல்ல வாய்ப்பை விடுதலைப் புலிகளே குலைப்பார்களா என்பதை நடுநிலையில் சிந்திக்கும் எவருமே புரிந்து கொள்ள முடியும்.

இந்த உளவு நிறுவன சதியை அன்றைய பிரேமதாசா அரசும் நன்றாகவே புரிந்து கொண்டது. இலங்கை அரசாங்கமே நடத்தும் ‘டெய்லி நியூஸ்’ பத்திரிகை இது பற்றி வெளியிட்ட செய்தியே (1989 ஜுலை 14) என்ன தெரியுமா?

“அமிர்தலிங்கம் கொலையை நடத்தியதே விடுதலைப் புலிகள்தான் என்று தவறாக, புலிகள் மீது பழிபோடும் முயற்சிகள் நடக்கின்றன. இத்தகைய முயற்சிகள் பற்றி, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்” - இதுதான் இலங்கை அரசின் அதிகாரபூர்வ பத்திரிகை வெளியிட்ட செய்தி.

ஈழப் போராட்டத்தின் தொடக்கக் காலத்திலிருந்து உன்னிப்பாக ஆராய்ந்து ஜெயரத்தினம் வில்சன் என்ற ஆய்வாளர் ‘Break-up of Srilanka’ என்ற நூலை எழுதியுள்ளார். அதில் 1983-86 ஆம் ஆண்டுகளின் நிலையை இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“எனக்கு தெரிந்தவரை இலங்கையில் தங்களின் தலையீட்டுக்காகவே இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் திட்டங்களை உருவாக்கி வெவ்வேறு கட்டங்களில் அமுல்படுத்தி வந்துள்ளனர். இந்தியாவின் இத் திட்டத்தால் தமிழர் அய்க்கிய முன்னணி தலைவர்களும், போராளி இயக்கங்களும் நம்பிக்கை பெற்றன. தமிழர் தலைவர்களை ஏமாற்றி திசை திருப்புவதுதான் இந்தியாவின் நோக்கம் என்ற கருத்து ஊகமாகக்கூட இருக்கலாம். ஆனால் - ஒன்று மட்டும் உண்மை. தமிழ் தலைவர்களுக்கும் போராளிகளுக்கும் இந்தியா இந்த உதவிகளை செய்ததன் மூலம் அவர்கள் அனைவரும், இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டார்கள்” என்று எழுதும் ஜெயரத்தனம் வில்சன், மேலும் எழுதுகிறார்:

“இந்தியாவின் ‘ரா’ (RAW) உளவு நிறுவனம், இந்தக் கருத்தை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டது. ‘ரா’வின் ஏஜெண்டுகள் தமிழ் போராளி குழுக்களிடையே ஊடுருவினார்கள். அவர்களிடமிருந்து பல முக்கிய ரகசிய தகவல்களை சேகரித்ததோடு, போராளிகள் குழுக்களிடையே பிளவுகளை உருவாக்கி, ஒரு குழு, மற்ற குழுவை அடக்கிடும் வலிமை பெற்று விடாமல், சமநிலையில் இருக்குமாறு பார்த்துக் கொண்டனர். இந்த முயற்சியில் முதல் கூட்டத்தில் ‘ரா’ உளவு நிறுவனம் வெற்றிப் பெற்றது என்பது உண்மைதான். ஆனால், கடைசியாக விடுதலைப் புலிகள், வலிமை பெற்று உயர்ந்து நின்றதைத் தடுக்க முடியாமல் ‘ரா’ அவர்களிடம் தோற்றுப் போய் விட்டது” - என்று எழுதுகிறார். ஆக -

• அமிர்தலிங்கத்தை சுட்டவர்கள் - மாத்தையாவின் ஆட்கள்.

• அமிர்தலிங்கம் மரணத்தைக் கண்டித்த - புலிகள் இயக்கம். அவரைக் கொன்றவர்கள் பேச்சுவார்த்தையை குலைக்க விரும்பும் சக்திகள் என்று பகிரங்க அறிக்கை விடுத்தது.

• அமிர்தலிங்கம் வரலாற்றை எழுதியவரே கொலையில் உறுதியான முடிவுக்கு வரவில்லை.

• இலங்கை அரசே, அமிர்தலிங்கம் கொலையில் புலிகள் தொடர்பை மறுத்தது.

• அமிர்தலிங்கத்தை கொலை செய்யக் கூடிய தேவையோ, அரசியல் சூழலோ புலிகளுக்கு இல்லை - இவ்வளவுக்குப் பிறகு ராஜீவ் சர்மா, அமிர்தலிங்கத்தைக் கொன்றது புலிகள் தான் என்று பழிபோட்டு விடுகிறார்.

ஒரு காலத்தில் ஈழத்தில் தமிழர்களின் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்ந்து நின்ற அமிர்தலிங்கம், 1981க்குப் பிறகு இந்தியாவை நம்பினார். இந்திரா காந்தி தமிழ் ஈழத்தை வென்று, தம்மிடம் ஒப்படைப்பார் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால், 1984 இல் இந்திரா, சீக்கியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் அவரது கனவு தகர்ந்தது.

அமிர்தலிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் 5 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அந்த 5 ஆண்டுகாலமும் தற்காலிகமாக தமிழ்நாட்டில் அரசு பாதுகாப்போடு தங்கியிருந்தார். இந்திய உளவு நிறுவனத்தோடு அமிர்தலிங்கம் மேற்கொண்ட ரகசிய உடன்பாடுகள் இலங்கை நாடாளுமன்றத்துக்கு வந்த அமிர்தலிங்கம் வழியாக அம்பலமாகிவிடுமோ என்ற அச்சம், ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு வந்திருக்கக் கூடும். தாங்கள் வகுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கும் ரகசிய திட்டங்கள் அம்பலமாவதற்கு உளவுத் துறை எப்போதுமே வாய்ப்புகளைத் தருவதில்லை, இது உளவுத் துறையின் செயல்பாடுகளை அவதானிப்போருக்கு நன்றாகவே தெரியும். அந்த சதிக்கே அமிர்தலிங்கம் பலியானார்.

இதேபோல், 1985 ஆம்ஆண்டில் யாழ்ப்பாணத்தில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான வி.தர்மலிங்கம், எம். ஆலால சுந்தரம் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டபோது அந்தப் பழியும் விடுதலைப் புலிகள் மீது தான் போடப்பட்டது. அது உண்மை தானா? அதையும் தான் பார்த்து விடுவோமே!

உளவுத் துறை அதிகாரி உன்னி கிருஷ்ணன்களின் கதை!

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் கொலைகளை நடத்தியது புலிகள்தான் என்று பழிபோட்டது போல், அதற்கு முன்பே 1985 ஆம் ஆண்டில் இரண்டு நாடாளுமன்ற தலைவர்கள் கொல்லப்பட்டபோதும், புலிகள் மீதே வீண் பழி சுமத்தினர். கொல்லப்பட்ட வி.தர்மலிங்கம், எம்.ஆலால சுந்தரம் என்ற இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும், யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்தனர். தர்மலிங்கம் 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து, தமிழர்களுக்கு தொண்டு செய்தவர். அதேபோல் ஆலாலசுந்தரம் நியமன முறையில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். மிகவும் நயவஞ்சகமாக இவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். ஆலால சுந்தரம் வீட்டில் இருந்தபோது நன்னடத்தை சான்றிதழ் கேட்கச் சென்ற இரண்டு பேர், அவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து காரில் கடத்தினர். தர்மலிங்கம் திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது, ஆலால சுந்தரம் அவரை அவசரமாக சந்திக்க விரும்புவதாகக் கூறி வெளியே அழைத்து வந்து காரில் பலவந்தமாக ஏற்றி கடத்தினர். அடுத்த நாள் - தர்மலிங்கம் சடலம் கல்லறை ஒன்றின் அருகே நெற்றியில் குண்டுக் காயங்களோடு கிடந்தது. அருகே கிடந்த ஒரு துண்டு காகிதத்தில், “தமிழினத்துக்கு துரோகமிழைத்தவருக்கு வழங்கப்பட்ட தண்டனை இது. ஈழத்தை அடகு வைப்பவர்களுக்கு குறிப்பாக தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணிக்கு - இப்படிக்கு தன்மானமுள்ள தமிழர்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

ஆலால சுந்தரத்தின் சடலம் மார்பில் குண்டு காயங்களோடு யாழ்ப்பாணம் நகரில் கைப்பற்றப்பட்டது. இந்த படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தின. அதிலும் தர்மலிங்கம், டி.யு.எல்.எப். தலைவர் அமிர்தலிங்கம் போக்கு பிடிக்காமல் அதிலிருந்த விலகி, அதிருப்தியாளர்கள் உருவாக்கியிருந்த தமிழ் ஈழ விடுதலை முன்னணி அமைப்பில் இணைந்திருந்தார். பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். மற்றவர்களுக்கு உதவக் கூடியவர். பல ஏழைக் குழந்தைகளை தனது சொந்த செலவிலேயே பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தவர். அவரிடமிருந்த ஒரே வாகனம் சைக்கிள் தான். ஆலால சுந்தரம் - வழக்கறிஞர்; ஆனாலும் மிகவும் ஏழ்மையாகவே வாழ்ந்தவர். தன்னுடைய மகள், ஒரு சைக்கிள் கேட்டபோது, மனைவியின் நகையை விற்றுத்தான் வாங்கித்தர வேண்டிய நிலையில் இருந்தார். இந்த இருவரின் கொடூரமான கொலையும் யாழ்ப்பான மக்களின் நெஞ்சை உலுக்கியது. விடுதலைப் புலிகள் தான் ஈவிரக்கமின்றி, இந்தக் கொலையை செய்தார்கள் என்ற பிரச்சாரம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. பழிகள் புலிகள் மீது விழுந்தது.

இந்த சம்பவம் நடந்த 1985 ஆம் ஆண்டு கால கட்டத்தைப் பார்க்க வேண்டும். 1984 ஆம் ஆண்டுகளில் இந்திரா பிரதமராக இருந்தபோது போராளிகளுக்கு இந்தியாவில் ஆயுதப் பயிற்சி தர முன் வந்தார். ‘ரா’ உளவு நிறுவனம், அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அப்படிப் பயிற்சி பெறுவதற்கு ‘ரா’முதலில் தேர்ந்தெடுத்த அமைப்பு சபாரத்தினம் தலைமையில் இயங்கிய ‘டெலோ’ தான்! காரணம். இந்தியா சொல்வதை அப்படியே நிறைவேற்றும் அமைப்பாக ‘டெலோ’ இருந்தது. பிறகு படிப்படியாக ஏனைய அமைப்புகளுக்கும் பயிற்சி தர ‘ரா’ முன் வந்தது. ‘விடுதலைப்புலிகள்’ மட்டும் தனித்து விடப்பட்டனர். விடுதலைப் புலிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் வர மாட்டார்கள் என்ற உறுதியான முடிவில் உளவு நிறுவனம் இருந்ததே இதற்குக் காரணம். ஏனைய குழுக்கள் இந்தியாவின் பயிற்சி மற்றும் ராணுவ உதவிகளோடு பலம் பொருந்தியவைகளாக மாறும்போது விடுதலைப் புலிகள் அழிக்கப்படக்கூடிய ஆபத்தை உணர்ந்த பிரபாகரன், இந்தியாவின் ராணுவப் பயிற்சியில் புலிகள் இயக்கத்தையும் இணைக்கவேண்டும் என்று வற்புறுத்தி இணைத்தார்.

இந்த சூழ்நிலையில் 1984இல் இந்திரா, தனது மெய்க் காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ராஜீவ் பிரதமரானவுடன் இந்திராவின் ஈழத் தமிழர் ஆதரவு அணுகுறையில் அதிருப்தியுற்றிருந்த பார்ப்பன அதிகார வர்க்கம், ராஜீவை தங்கள் வழிக்கு திருப்பினர். அதுவரை ஈழத் தமிழர்ப் பிரச்சினைக்கு பொறுப்பேற்றிருந்த பார்த்தசாரதி என்ற அதிகாரி மாற்றப்பட்டு பண்டாரி என்ற அதிகாரி, அந்த பொறுப்புக்கு வந்தார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் சமரசத்துக்கு உட்படாத இந்தியாவின் வலையில் விழ மறுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி, அவர்களை பலவீனப்படுத்தும் திட்டங்களை உளவு நிறுவனம் உருவாக்கியது. தர்மலிங்கம், ஆலால சுந்தரம் படுகொலைகள் அந்த நேரத்தில்தான் நடந்தன. இந்தப் படுகொலைகளை விடுதலைப் புலிகள் மறுத்தாலும் எந்த ஆதாரமும் இன்றி புலிகள் மீது பழி போட்டே பிரச்சாரங்கள் நடந்தன.

ராஜீவ் சர்மாவும் இந்த நூலில், “1980-1990-க்கும் இடைப்பட்ட காலத்தில் சக தமிழ் இயக்கங்களைச் சார்ந்த 300 போராளிகளை மற்றும் எல்.டி.டி.ஈ. இயக்கத்திற்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த பல முக்கிய தலைவர்களை பிரபாகரன் கொன்றார்” என்று எந்த ஒரு சிறு ஆதாரமும் இன்றி புலனாய்வுத் துறை பரப்பிய அதே பொய்களை அப்படியே வாந்தி எடுத்து எழுதுகிறார். இதிலிருந்தே இந்த நூல், எந்த ‘எஜமானருடைய’ குரலை எதிரொலிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். எதைச் சொன்னாலும் நம்ப வைத்து விடலாம் என்று தமிழினம் ஏமாந்து இருந்த காலம் இப்போது இல்லை என்பதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த பொய் புனைவுகளை கிழித்தெறிந்து மக்கள் மன்றத்தில் நாம் உண்மைகளை அம்பலப்படுத்தியே தீருவோம்.

அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் படுகொலைகளைப் போலவே, தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் படுகொலைகளும் புலிகள் மீது வீண்பழி சுமத்தவே அரங்கேற்றப்பட்டன. இதற்கு இரண்டு ஆதாரங்களை முன் வைக்க விரும்புகிறேன். ஒன்று - உளவு நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய ஆய்வாளர் நாராயணசாமி, விடுதலைப்புலிகளுக்கு எதிராக எழுதி, உளவுத் துறையால் போற்றப்படுகிற, அவரது நூலிலேயே இந்தக் கொலையில் டெலோ கண்டனத்துக்கு உள்ளானது என்று கூறுகிறார். ஆனால் உளவு நிறுவனங்கள் விடுதலைப் புலிகளையே குற்றம் சாட்டியதாக குறிப்பிடுகிறார். சுட்டுக் கொல்லப்பட்ட தர்மலிங்கத்தின் மகன் ‘புளோட்’ என்ற போராளிகள் குழுவில் சேர்ந்திருந்தார். அவரும் விடுதலைப் புலிகள் தான் இதைச் செய்தார்கள் என்று கூறவில்லை. அப்போது ‘எல்.டி.டி.ஈ - டெலோ - ஈரோஸ் - ஈ.பி.ஆர்.எஃப்.’ அமைப்புகள் ஒன்று சேர்ந்து ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பை உருவாக்கியிருந்தன. இந்த அமைப்பில் இடம் பெற்றுள்ள ஏதோ ஓர் அமைப்பே தனது தந்தையை கொலை செய்ததாகவே கூறினார். ஆனால் உண்மையில் இந்தக் கொலையை செய்ய உத்தரவிட்டவர், இந்திய உளவு நிறுவனத்தின் உத்தரவுகளை ஏற்று செயல்பட்டு வந்த ‘டெலோ’ அமைப்பின் தலைவர் சிறீசபாரத்தினம் தான். இதற்கு சான்று விடுதலைப் புலிகளை கடுமையாக எதிர்த்து எழுதப்பட்ட நூலான ‘முறிந்த பனை’ என்பதாகும்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ராஜன் ஹுல் உள்ளிட்ட 4 பேராசிரியர்கள் எழுதிய இந்த நூல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக எழுதப்பட்ட நூலாகும். அந்த நூலே தர்மலிங்கம், ஆலால சுந்தரம் படுகொலைகளைச் செய்தவர்களை பற்றி இவ்வாறு எழுதியுள்ளது:

“தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணி, நாடாளுமன்ற உறுப்பினர்களுள் திருவாளர்கள் தர்மலிங்கமும், ஆலால சுந்தரமும், யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து வசித்து வந்தவர்கள். இந்தியாவில் வாழ்ந்து வந்த டெலோ, இயக்கத்தினருடன் பேசிய அநேகரின் சான்றாதாரங்களின்படி, இக் கொலைகள் பின் வருமாறு நடந்தனவென்று தெரிய வந்தது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரான பிரபாகரன், தமிழர் அய்க்கிய விடுதலைக் கூட்டணியைக் கடுமையாக மிரட்டி உரையாற்றியபின், பிரபாகரன் இக் கொலைகள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டு, மதிப்பிழக்கப்படுவார் என எதிர்பார்த்த டெலோ தலைவர் சிறீசபாரத்தினம், இந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்யுமாறு தனது ஆட்களுக்கு இரகசியமாக ஆணையிட்டார். எதிர்பார்த்ததுபோல், விடுதலைப் புலிகளே பெரும்பாலும் இக் கொலைகளுக்கு குற்றஞ்சாட்டப்பட்டனர். திரு.தர்மலிங்கத்தின் வீட்டுக்கு அண்மையில் காவல் நின்ற ஒரு புளோட் உறுப்பினர் கொலையாளிகள் வந்த வாகனம் ‘டெலோ’ வுக்குச் சொந்தமானதென இனங் கண்டார்.” - “முறிந்த பனை”, பக்.82

இதுதான் புலிகள் எதிர்ப்பாளர்களே தங்களது நூலில் எழுதியுள்ள உண்மை. இந்தியாவின் போராளிகளுக்கு பயிற்சி தரப்பட்ட காலகட்டங்களிலும் சரி, அதைத் தொடர்ந்து, ஈழத்தில் கொலைகள் நடந்த காலத்திலும், அவற்றில் இந்திய உளவு நிறுவனங்களின் பங்கு உண்டு என்பதற்கு, மற்றொரு முக்கிய தகவலை நாம் மக்கள் மன்றத்தில் சொல்லியாக வேண்டும். தமிழ்நாட்டில் பல்வேறு போராளிகள் குழுக்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்கு ராணுவப் பயிற்சிகளுக்கு ஏற்பாடு செய்த தரவேண்டிய பொறுப்பு ‘ரா’ உளவு நிறுவனத்தின் கள அதிகாரியாக டி.அய்.ஜி. நிலையில் பணியாற்றிய உன்னிகிருஷ்ணன் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த உன்னி கிருஷ்ணன்தான் பயிற்சிக்கு முதல் அணியாக ‘டெலோ’வை தேர்ந்தெடுத்தார். இந்த உன்னி கிருஷ்ணனின் பின்னணி என்ன என்பதையும் நாம் சொல்லியாக வேண்டும்.

“1981 இல் உன்னிகிருஷ்ணன் கொழும்பில் ‘ரா’வுக்காக வேலை செய்த போது - அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவருடன் நட்பு கொண்டார். இருவரும் நெருக்கமாகி, பல ‘ஒழுக்கக் கேடான’ செயல்களில் ஈடுபட்டனர். பல பெண்களுடன், பாலியல் உறவுகளை வைத்திருந்தனர். அப்போது - அமெரிக்க தூதரக அதிகாரி வழியாக - இந்திய உளவுத் துறையின் செய்திகளை அமெரிக்க உளவு நிறுவனமான ‘சி.அய்.ஏ.’க்கு அனுப்பி வந்தார். 1983 களில் தமிழ்ப் போராளிக் குழுக்களுடன் - நேரடி தொடர்பு கொண்டிருந்த காலத்தில், உன்னிகிருஷ்ணன், ‘ரா’வின் அதிகாரி மட்டுமல்ல; ‘சி.அய்.ஏ.’வுக்கும் உளவாளி! தமிழ்ப் போராளிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்ற பிறகு, அவர் - சிறீலங்கா உளவுத் துறைக்கும் நெருக்கமானார். கொழும்பில் - அவருக்கு பல பெண்களுடன் இருந்த உறவை சிறீலங்கா உளவுத் துறைப் பயன்படுத்திக் கொண்டு, மிரட்டி, உன்னிகிருஷ்ணனை தனது வலையில் சிக்க வைத்தது.

ஒரே கட்டத்தில் ‘ரா’ - ‘சி.அய்.ஏ.’ - சிறீலங்கா உளவுத் துறைகளுடன், ரகசியமாக செயல்பட்டுக் கொண்டும், அதே காலத்தில் ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுடனும் நேரடி தொடர்பு கொண்டும் உன்னிகிருஷ்ணன் செயல்பட்டுள்ளார். 1985 இல் சென்னையில். இவர் தமிழ் ஈழப் போராளிக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தபோது - பம்பாயில் - அமெரிக்காவின் ‘பான் விமான சேவை’யில் வேலை செய்த ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்தத் தொடர்பை ஏற்படுத்தித் தந்தவரும் உன்னி கிருஷ்ணனின் நண்பரான கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரக அதே அதிகாரிதான். சென்னையிலிருந்து - பம்பாய்க்குப் பறந்து கொண்டு, விமானப் பணிப் பெண்ணுடன், அடிக்கடி சிங்கப்பூருக்குப் போய், உல்லாசமாக இருந்தார், உன்னி கிருஷ்ணன். ஆனால் எப்படியோ இவர்கள் இருவரும் ‘இணைந்த நிலையில்’ இருந்த படங்கள் ரகசியமாக எடுக்கப்பட்டன. ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள்; இந்தியாவின் வெளியுறவுத் துறை முடிவுகள்; ‘ரா’வின் திட்டங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் - உன்னிகிருஷ்ணன் வழியாக - சிறீலங்கா அரசுக்குக் கிடைத்து வந்தன.

கொழும்பில் இந்திய தூதராகவிருந்த ஜே.என்.தீட்சித் இதை ஒப்புக் கொண்டு தனது நூலில் பதிவு செய்துள்ளார். தீட்சித் எழுதியிருப்பதைப் படிக்கிறேன்.

“1986 ஆம் ஆண்டுகளில் - முதல் 6 மாதங்களில் - நான் லலித் அதுலத் முதலியுடன் (இவர் இலங்கையில் செல்வாக்குள்ள அமைச்சர்) நடத்திய உரையாடல்களில் - அவர் தெரிவித்த கருத்துக்கள் - என்னை வியப்பில் ஆழ்த்தின. இந்தியாவின் வெளிநாட்டுத் துறை அதிகாரிகள்; உளவு நிறுவன அதிகாரிகள்; இவர்களின் செயல்பாடுகள் பற்றி, ஏராளமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டது. என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டது. உடனே நான், இதுபற்றி டெல்லிக்கு தகவல் கொடுத்தேன்” - என்று எழுதியுள்ளார். (நூல்: Assignment Colombo) இப்படி - இந்திய உளவுத்துறை ரகசியங்களை சிறிலங்காவுக்கு கொடுத்தது யார் என்பதையும் - ஜே.என்.தீட்சித் குறிப்பிடுகிறார்.

“சிறீலங்காவுக்கு, இந்தத் தகவல்களைத் தந்தது, எங்களது உளவு அமைப்பில் பணிபுரிந்த அதிகாரி உன்னி கிருஷ்ணன்தான் அவர். அமெரிக்க விமானப்பணிப்பெண் ஒருவர் மூலமாக, அமெரிக்கர் வலையில் வீழ்ந்து விட்டார். அவரது ‘எதிர்மறையான’ நடவடிக்கைகள் 1986 மத்தியில் தெரிய வந்தது. தொடர்ந்து - அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உன்னிகிருஷ்ணன் “அமைதியாக்கப்பட்ட” பிறகு, சிறீலங்காவுக்கு இந்தியா பற்றி கிடைத்து வந்த தகவல்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன. சிறீலங்காவுக்கு உன்னி கிருஷ்ணன்தான் ரகசியத் தகவல்களைத் தந்தார் என்பது இதன் மூலம் உறுதியானது” - என்று மேலோட்டமாக - விரிவாக உண்மைகளை வெளியிடாமல், ஆனால் உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியுள்ளார், ஜே.என். தீட்சித்.

“The Sri Lanka source of information was a senior operative of our own intelligence agency, Unnikrishnan, who had been subverted most probably by the Americans through a foreign lady working for Pan-American Airlines. His negative activities were discovered sometime towards the middle of 1986, which was followed by appropriate procedural action against him. The fact that the Sri Lankan Government’s advance knowledge about Indian policies and intentions clearly diminished after Unnikrishnan was neutralized proved that he was a major source of information to the Sri Lankans. (Assignment Colombo-(1998) pg. 61)”

உண்மைகளை மறைக்க முடியாமல் - மென்மையான வடிவில் ஜே.என்.தீட்சித் தந்துள்ளார் என்றாலும், கே.வி.உன்னி கிருஷ்ணனின் நடவடிக்கைகளை அவரால் மறைக்க முடியவில்லை.

- ஆக அமெரிக்கா, இந்தியா, இலங்கை என்று மூன்று நாடுகளுக்கும் ஒரே நேரத்தில் உளவு வேலை பார்த்த ஒரு ‘ஒழுக்கசீலரிடம்’ தான், போராளி குழுக்களுக்கு பயிற்சி தரும் பொறுப்புகள் தரப்பட்டன. இந்த ‘தர்மபுத்திரர்களுக்கு’ தலைமையேற்று சென்னையில் செயல்பட்டவர் பார்த்தசாரதி என்ற வெளியுறவுத் துறையைச் சார்ந்த பார்ப்பன அதிகாரி! இந்திய ராணுவம் ஈழத்தில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த காலத்தில், இவர், உளவுத் துறையினருடன் இணைந்து ஒவ்வொரு நாளும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பொய்யான தகவல்களை ஊடகங்களுக்கு தந்து வந்தார். அரசு கட்டுப்பாட்டிலிருந்த தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒவ்வொரு நாளும் புலிகளுக்கு எதிரான செய்திகளைப் பரப்பி வந்தன. (குறிப்பு : இந்த பார்த்தசாரதி என்ற பார்ப்பன அதிகாரி இப்போது ஓய்வு பெற்று விட்டார். கடந்த வாரம் ‘சேனல் 4’ தொலைக்காட்சி சிங்கள ராணுவத்தின் இனப்படுகொலை காட்சிகளை ஒட்டி ‘ஹெட்லைன்ஸ் டுடே’ நடத்திய விவாதத்தில் பங்கேற்றுப் பேசியபோது, ‘பிரபாகரன் கோழை; அவர், மக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்தி யதால் தான், இலங்கை ராணுவத் தாக்குதலில் மக்கள் பலியாக நேர்ந்தது’ என்று இறுமாப்போடு கூறி இலங்கை ராணுவத்தை நியாயப்படுத்தி பேசினார்.)

இப்படிப்பட்ட ‘உன்னிகிருஷ்ணன்களைக்’ கொண்ட நயவஞ்சக இந்திய உளவு நிறுவனத்தின் பார்ப்பன முகத்தை ராஜீவ் சர்மா தனது நூலில் எழுதாமல் எல்லா கொலைகளுக்குமான பழியையும் விடுதலைப் புலிகள் மீதே போடுவது என்ன நியாயம்? எது எவரின் குரல்?

• தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் என்ற மக்கள் செல்வாக்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை வஞ்சகமாகக் கொன்று பழியை புலிகள் மீது போட்டது - ‘டெலோ’ என்ற அமைப்பு.

• புலிகளை எதிர்ப்பவர்களே இந்த உண்மைகளை பதிவு செய்து விட்டனர்.

• அந்த ‘டெலோ’ உளவுத் துறையின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கிய அமைப்பு.

• இந்தியா, இலங்கை அமெரிக்கா என்று ஒரே நேரத்தில் 3 நாடுகளின் உளவாளியாகவும், அதே நேரத்தில் பல்வேறு போராளி குழுக்களுடனும் நெருக்கமாக உறவாடி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக திட்டங்களை வகுத்த உன்னி கிருஷ்ணன் தான் கொலைகளின் பின்னணியாக செயல்பட்டிருக்கிறார்.

பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்கும் கரங்கள்!

இந்திய ராணுவம் ஈழப் பிரதேசத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கை அதிபர் பிரேமதாசா கெடு விதித்ததால் ஆத்திரத்தின் எல்லைக்குச் சென்ற ராஜீவ் காந்தி - பிரேமதாசாவுக்கு எதிராக உளவுத் துறை வழியாக மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம். விடுதலைப் புலிகள் இயக்கத்திடமே பிரேமதாசாவை எதிர்க்க சமரசத் தூது அனுப்பியதை முரசொலி மாறன் தந்த பேட்டியிலிருந்தே எடுத்துக் காட்டினோம். பிரேமதாசாவுக்கு எதிரான அரசியல் நெருக்கடிகளையும் உளவு நிறுவனம் உருவாக்கியது.

பிரேமதாசாவின் எதிர்கட்சியான இலங்கை சுதந்திரக் கட்சியைப் பயன்படுத்தி பிரேமதாசா ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சிகளை இந்திய உளவு நிறுவனம் மேற்கொண்டது. இதை விடுதலைப் புலிகள் இயக்கமே மக்களிடம் கூறி எச்சரித்தது. மக்களுக்காக ‘புலிகளின் குரல்’ என்ற வானொலி சேவையை விடுதலைப் புலிகள் நடத்தி வந்தனர். இதைக்கூட புலிகளின் ‘ரகசிய வானொலி’ என்கிறார் ராஜீவ் சர்மா. அது தமிழீழ மக்களுக்காக நடத்திய வெளிப்படையான வானொலி சேவை. அந்த வானொலியில் விடுதலைப் புலிகள் அரசியல் பிரிவு பொறுப்பாளர் யோகரத்தினம் என்ற யோகி, இயக்க சார்பாக நாட்டு மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

“பிரேமதாசா அரசாங்கத்தை தூக்கி எறிவதற்காக, இந்திய அரசாங்கம் இலங்கை சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்துக் கொண்டுள்ளது. காமினி திசநாயகே மற்றும் அவரது குழுவினரைப் பயன்படுத்தி, பிரேமதாசா ஆட்சியைக் கவிழ்க்க திட்டம் தீட்டினர். ஆனால், அதில் தோல்வி அடைந்து விட்டனர். இப்போது விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தையை குலைக்கும் சதியில் இறங்கியுள்ளனர். இதற்கு, இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீது கொண்டு வந்துள்ள தடையைக் காட்டி, பேச்சுவார்த்தையை குலைக்க முயற்சிக்கிறார்கள்” - என்று 1992 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதி புலிகளின் வானொலி, நாட்டு மக்களுக்கு அறிவித்தது. இந்தத் தகவலை ராஜீவ் சர்மாவும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

அதே வேளையில், பிரேமதாசா கட்சியிலிருந்தே அவரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக இந்திய உளவுத் துறை ஆட்களை தயாரித்தது! பிரேமதாசா ஆட்சியில் ராணுவ அமைச்சராக இருந்தவர் ரஞ்சன் விஜயரத்னே. பிரேமதாசாவின் அய்க்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்தவர். ஆனால் பிரேமதாசாவுக்கு அரசியல் எதிரி. அதிபர் பதவிக்கு அவர் குறி வைத்துக் கொண்டிருந்தார். பிரேமதாசா அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்தார். எனவே, ராணுவம் விஜயரத்னே கட்டுப்பாட்டில் இருந்தது. அதைப் பயன்படுத்தி பிரேமதாசாவுக்கு எதிராக ராணுவப் புரட்சி ஒன்றை நடத்தி, பிரேமதாசாவை வீழ்த்த உளவுத் துறை திட்டங்களை தயாரித்தது. விஜயரத்னேவுக்கு அதிபர் பதவிக்கு முடிசூட்ட வலைவிரித்தார்கள். அந்த திட்டத்தின் அடிப்படையில் அதிபர் பிரேமதாசாவுக்கு தெரியாமலேயே ரகசியமாக தரைப்படை, கப்பல் படை மற்றும் விமானப் படை என்ற முப்படை தளபதிகளின் கூட்டத்தை 1991 மார்ச் 1 இல் விஜயரத்னே கூட்டினார்.

இந்த ரகசிய சதித் திட்டம் - பிரேமதாசாவுக்கு தெரிந்து விட்டது. ரகசிய கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே முன்னறிவிப்பின்றி பிரேமதாசா, கூட்டத்துக்குள் திடீர் என்று நுழைந்தார். உள்ளே இருந்த அனைவருக்கும் அதிர்ச்சி. பிரேமதாசா எதுவும் பேசாமல் அமைதியாக, சிறிது நேரம் இருந்துவிட்டு, மவுனத்தையே எச்சரிக்கையாக தந்துவிட்டு வெளியேறினார். கூட்டம் கலைக்கப்பட்டது. அடுத்தநாள் காலையே விஜயரத்னே காரில் அலுவலகம் சென்றபோது அவரது காரில் குண்டு வெடித்தது. அது குண்டு துளைக்காத அரசாங்க கார். ஆனாலும் குண்டு வெடித்தது. விஜயரத்னா கொல்லப்பட்டார். இந்த கொலைக்கும் விடுதலைப் புலிகள் மீதே பழி போடுகிறார், ராஜிவ் சர்மா! நியாயமாக பிரேமதாசா தனக்கு எதிராக திட்டமிட்டிருந்த ராணுவப் புரட்சியை ஒடுக்க, அதற்கு சதி செய்தவரை தீர்த்துக் கட்டினார் என்பது கொழும்பு ஊடகங்களே வெளியிட்ட செய்தி. அதை ஏற்றுக் கொள்வதற்கான நியாயமான காரணங்களும் இருக்கின்றன. ஆனால் பழி, ஆதாரம் இல்லாமல் புலிகள் மீதே போடுவதில் என்ன நியாயம்? விடுதலைப் புலிகள் லண்டன் தலைமை அலுவலகத்திலிருந்து தலைமையக பொறுப்பாளர் கிட்டு, புலிகளுக்கு இதில் தொடர்பில்லை என்று மறுத்து அறிக்கையும் விட்டார்.

இலங்கையில் காவல்துறை உயர் அதிகாரி தலைமையில் அதிகாரம் கொண்ட குழு ஒன்று செயல்பட்டது. இதன் தலைவராக இருந்தவரின் பெயர் பிரேமதாசா உருகம்பொல என்பதாகும். 34 ஆண்டு அனுபவம் பெற்ற காவல்துறையின் உயர் அதிகாரி. இவர், இந்திய உளவு நிறுவனத்துக்கு ஆதரவாக பிரேமதாசாவுக்கு எதிராக களமிறக்கப்பட்டார். இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டை இந்திய உளவுத் துறைப் பயன்படுத்தி, பிரேமதாசாவுக்கு எதிரான பேட்டி ஒன்றை அவரிடமிருந்து பெற்று பிரேமதாசாவுக்கு நெருக்கடியை உருவாக்கினார்கள். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ சார்பில் பேட்டி கண்டவர் - ஏதோ அப்பத்திரிகையின் செய்தியாளரோ, உதவி ஆசிரியரோ அல்ல. அந்த ஏட்டின் நிர்வாக இயக்குனராக இருந்த நலபம் என்பவரே பேட்டி எடுத்தார். விடுதலைப் புலிகளுடன் பிரேமதாசா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்றும், ராணுவ அமைச்சர் விஜயரத்னே கொலைக்கு விசாரணை ஆணையம் நியமிக்க வேண்டும் என்றும் பிரேமதாசாவுக்கு எதிராக இந்தியாவிலிருந்து வெளிவரும் அந்த ஏட்டுக்கு அவர் பேட்டி அளித்தார்.

இந்த அதிகாரி, இந்திய உளவு நிறுவனத்தின் சதி வலையில் வீழ்ந்ததைத் தெரிந்து கொண்ட பிரேமதாசா, அவரை உடனே பதவியிலிருந்து நீக்கினார். தலைமறைவாகிவிட்ட அவர் ரகசிய இடத்திலிருந்து இந்தப் பேட்டியை தந்தார். அவர் ரகசியமாக தங்கியிருந்த இடம் இந்தியாவின் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்? இந்திய உளவு நிறுவனத்தின் தொடர்பின்றி அவர், ரகசிய இடத்திற்குப் போய் பேட்டி எடுத்திருக்க முடியுமா?

பிரேமதாசா விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய அரசு பிரேமதாவிடம் நிர்ப்பந்தம் தந்தது. பிரேமதாசாவோ அதை ஏற்கவில்லை. ஈழத் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற உண்மையான கவலை ராஜீவ் காந்திக்கு இருந்திருந்தால், பேச்சுவார்த்தை முயற்சிகளை நியாயமாக ஆதரித்திருக்க வேண்டாமா? இப்படி சீர்குலைப்பது நியாயம் தானா? இந்திய பார்ப்பன ஆட்சியின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனாலும், விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா ஆட்சிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தொடர்ந்து முன்னேற்றப் பாதையிலேயே சென்று கொண்டிருந்தது. முதல் கட்டமாக இந்திய ராணுவம் இலங்கையை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து உருவானது. அதனடிப்படையில் இந்திய ராணுவம் படிப்படியாக வெளியேற இந்தியா ஒப்புக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அதே நேரத்தில் வடக்கு கிழக்கு மாநிலத்தில் இந்தியா, ‘மாகாண சபை’ என்ற ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கி, வரதராசப் பெருமாள் என்ற தனது ‘எடுபிடி’யை முதல்வராக நியமித்திருந்தது. அந்த ஆட்சிக்கு ஆதரவாக ‘தமிழ் தேசிய ராணுவம்’ என்ற ஒரு அமைப்பையும் இந்தியா உருவாக்கி வைத்திருந்தது. இந்த அமைப்பில் இடம் பெற்றிருந்த பெரும்பாலானவர்கள் சிறுவர்கள். அதேபோல் அம்பாறை மாவட்டத்தில் ‘குடிமக்கள் தொண்டர் படைகள்’ என்ற தனக்கு ஆதரவான அமைப்பை உருவாக்கி, அந்த அமைப்புக்கு ஆயுதங்களை இந்தியா வழங்கியிருந்தது. இந்திய ராணுவம் வெளியேறினாலும் இந்தியா உருவாக்கிய ‘விபிஷணப் படை’ ஈழத்தில் நிலை கொண்டிருந்த நிலையில் அந்தப் படைகளையும் கலைக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி, பிரேமதாசா விடுதலைப் புலிகளின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை முன்னேறியது. பிரேமதாசாவுக்கும் விடுலைப்புலிகளுக்குமிடையே நடந்த பேச்சுவார்த்தை வெற்றிப் பாதையில் விரைந்து செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்திய உளவுத் துறை அது பற்றி ரகசிய அறிக்கை ஒன்றை விரிவாகத் தயாரித்தது. (ectt (R&AW)UO No.1/17-A/89-SLM-346-6959)

அதே காலகட்டத்தில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் லலித் அதுலத் முதலி மற்றும் காமினி திசநாயகே இருவரும் விடுதலைப் புலிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தையை நிறுத்த வேண்டும் என்று சிங்களர்களிடையே தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கினர். கடும் நெருக்கடிக்குள்ளான பிரேமதாசா, ஒரு கட்டத்தில் வெளிப்படையாகப் பேசத் தொடங்கினார். இந்தியாவை வெளிநாட்டு சக்திகள் என்று குறிப்பிட்ட அவர், “வெளிநாட்டு சக்திகள், நாட்டின் நிலையான தன்மையைக் குலைக்க (Stability) திட்டமிடுகின்றன. அவர்கள் அரசியல் கொலைகளை நடத்த முயற்சிக்கிறார்கள்” என்று பிரேமதாசா பேசத் தொடங்கினார். 1991 அக்டோபர் 19 ஆம் தேதி இலங்கையின் கோவில் நகரமான கண்டியில் தன்னை பதவியிலிருந்து அகற்றிட மேற்கொண்ட சதித் திட்டங்களை வெற்றிகரமாக முறியடித்ததற்காக மாபெரும் பேரணி ஒன்றை பிரேமதாசா நடத்தினார். ‘ஜனநாயகத்தின் வெற்றி’ என்று அந்தப் பேரணிக்கு பெயர் சூட்டப்பட்டிருந்தது.

அதில் பேசிய பிரேமதாசா, “எனக்கு எதிராக அயல்நாட்டு சக்திகள், சதித் திட்டத்தில் இறங்கியுள்ளன. என்னுடைய அரசியல் எதிரிகளுக்கு இந்த சக்திகள் ஏராளமானப் பணம் தந்து எனக்கு எதிராக அணி வகுப்புகளை நடத்தச் சொல்கின்றன. அதற்கு பெரும் பணம் வாரி இறைக்கப்படுகிறது. அவர்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பெரிய தொகை வருகிறது? என்னை பதவியிலிருந்து நீக்க அவர்கள் போட்ட சதித் திட்டம் தோற்றுவிட்டதால், நாடாளுமன்ற அவைத் தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதுவும் தோற்கடிக்கப்பட்டது. இந்த அயல்நாட்டு சக்திகள் மூலம் எனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம். நான் அரசியல் ரீதியாகப் படுகொலை செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” - என்று பிரேமதாசா பேசினார். இந்திய தேசபக்தி பெருமை பேசுவோரையும், ராஜீவ் காந்தி உண்மையிலேயே ஈழத் தமிழர் பிரச்சினைகளை தீர்க்க முயற்சித்தார்; அவரை கொன்று விட்டார்களே என்று பழித் தூற்றுவோரையும் கேட்கிறோம். இதுதான் இந்தியாவின் உண்மையான முயற்சியா? இதுதான் ஈழத் தமிழர் பிரச்சினையில் ராஜீவ் காந்தி காட்டிய கவலையா?

ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்களை உருவாக்கிய பார்ப்பன இந்தியாவின் இந்த படுபாதகங்களை மன்னிக்க முடியுமா?

பிரேமதாசா கொன்னதுதான் நடந்தது! 1993 ஆம் ஆண்டு பிரேமதாசா மே நாள் பேரணியில் பங்கேற்றபோது மனித வெடிகுண்டுக்கு பலியானார். பிரேமதாசா மே தின அணி வகுப்பில் வந்தபோது அவரது உதவியாளர் மிதிவண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார். அவர் பிரேமதாசாவின் வீட்டில் வேலை செய்யும் பணியாள். எனவே பாதுகாவலர்கள் பேரணிக்கு உள்ளே செல்ல அனுமதித்தனர். பிரேமதாசாவின் சமையல்காரர் பரிந்துரையில் இந்த பணியாள் வேலைக்கு சேர்க்கப்பட்டவர். பிரேமதாசாவை நெருங்கியவுடன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை அவர் வெடிக்கச் செய்தார். இந்தத் தகவல்களை எல்லாம் ராஜீவ் சர்மாவே தனது நூலில் எழுதியிருக்கிறார். இவ்வளவையும் எழுதிவிட்டு, பிரேமதாசாவைக் கொன்றது விடுதலைப் புலிகள் என்று பழிபோட்டு விடுகிறார். “குண்டு வெடிக்கச் செய்த நபர் தான் ஒரு எல்.டி.டி.ஈ. உளவாளி என்பதை நிரூபித்தார்” என்கிறார் ராஜீவ் சர்மா. இறந்து போனவர் எப்படி தன்னை எல்.டி.டி.ஈ. உளவாளி என்று நிரூபிக்க முடியும்? ‘பிரேமதாசாவை புலிகள் கச்சிதமாக கொலை செய்தார்கள்’ என்று மீண்டும் மீண்டும் இந்த நூல் பல இடங்களில் புலிகளைக் குற்றம் சாட்டுகிறது.

விடுதலைப் புலிகள் மீது கொலைக் குற்றம் சாட்டுகிறவர்கள் எப்படி, எங்கே, எந்த முறையில் கொலை செய்தார்கள் என்று எழுதுகிறார்கள். ஆனால் ஒரு கேள்வியை மட்டும் அவர்கள் தந்திரமாக விட்டுவிடுகிறார்கள். ஏன் கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அந்தக் கேள்வி!

பிரேமதாசாவிடம் நெருங்கிச் சென்று வெடிகுண்டை வெடிக்கச் செய்தவன் பெயர் பாபு. பிரேமதாசாவிடம் எப்போதும் நெருக்கமாக இருந்து, அவரது உணவு உள்ளிட்ட அன்றாட பணிகளைக் கவனித்துக் கொண்டு, பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் ஈ.எம்.பி. மொய்தீன். இவர் மது, மங்கை போன்ற பலவீனங்களுக்கு உள்ளானவர். இந்தத் தேவைகளை நிறைவேற்றித் தந்தவன் பாபு. மொய்தீனைப் பயன்படுத்தி பாபு, பிரேமதாசாவை நெருங்கி குண்டை வெடிக்க வைத்தான். இந்த உண்மைகளை ஊடகங்களும் வெளியிட்டன. (‘afp’ - செய்தி நிறுவனம். ‘ஜப்பான் டைம்ஸ்’, ஜூன். 5, 1993)

பிரேமதாசா கொலையில் மறைந்து நிற்பது எவருடைய கரங்கள்?

1988-90 இல் உளவுத் துறை பின்னிய சதி வலைகள்

‘ரா’ உளவு நிறுவனத்தின் செயல்பாடுகளை கவனிப்போருக்கு பிரேமதாசா கொலையில், இந்திய உளவு நிறுவனத்தின் சதி இருப்பதை புரிந்து கொள்ள முடியும். ‘ரா’ உளவு நிறுவனத்தின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஆய்வாளர் எஸ்.எச். அலி, ‘Inside Raw’ (‘ரா’வின் உள்ளே...) என்ற நூலை எழுதி 1981இல் வெளியிட்டார். ‘ரா’ தனது உளவு நிறுவனத்தில் ஆட்களை இணைத்துக் கொள்ள பின்பற்றும் வழிமுறைகளை அதில் விளக்குகிறார். அதில், “அந்தந்த நாடுகளில் ‘ரா’ நிறுவனம் தங்களின் நோக்கத்தை நிறைவேற்ற உள்ளூரிலேயே ஆட்களைப் பிடித்து விடும். சாணக்கியன் தந்த வழிமுறைகளைப் பின்பற்றி, மனிதர்களின் பலவீனங்களான ‘மது, மங்கை, பணம்’ என்ற ஆசைகளைக் காட்டியும் தங்கள் திட்டத்தை செய்து முடித்து விடுவார்கள். சில நேரங்களில் மிரட்டலிலும் இறங்குவார்கள். பிரிவினைப் பற்று, இனப்பற்று, பிராந்தியப் பற்று போன்ற உணர்வுகளையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்” - என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே ‘மது-மங்கை’ பலவீனங்கள்தான் பிரேமதாசா கொலையிலும் பின்பற்றப்பட்டிருக்கிறது. “தென் கிழக்கு ஆசியாவில், இந்தியா பின்பற்றும் கொள்கைகளை (அதாவது ராஜீவ் காந்தியை தென் கிழக்கு ஆசிய நாடுகளின் கதாநாயகனாக்கும் கொள்கை) நான் கடுமையாக எதிர்ப்பதால், ‘ரா’ உளவு நிறுவனம், என்னைக் கொல்ல சதி செய்கிறது” என்று, பிரேமதாசா கூறி வந்திருக்கிறார். இது தொடர்பாக மற்றொரு முக்கிய செய்தியை சுட்டிக்காட்ட வேண்டும்.

பிரேமதாசா குண்டுவெடித்துக் கொல்லப்பட்டவுடன், கொழும்பு நகராட்சி அதிகாரத்தின் கீழ் செயல்பட்ட தீயணைப்புத் துறை உடனே அந்த இடத்துக்கு விரைந்து சம்பவம் நடந்த இடத்தில் கை ரேகை, ரத்தம் போன்ற தடயங்களை தண்ணீரைப் பீற்றி அழித்து முற்றிலுமாக அகற்றி விட்டது. இதனால் கொலைக்கான தடயங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. கொழும்பு ஊடகங்கள் இந்த செய்திகளை வெளியிடாமல் தடுக்கப்பட்டன; தீயணைப்புப் படையை அனுப்பும் உத்தரவை பிறப்பித்தது யார்? தடயங்களை அழிக்கச் சொன்னது யார்?

இந்தக் கேள்விக்கான விடைகள் மர்மமாகவே உள்ளன. பிரேமதாசாவின் கொலையில் அடங்கியுள்ள இத்தனை மர்மங்களையும் மூடி மறைத்து விட்டு, “விடுதலைப் புலிகள் பிரேமதாசாவை கச்சிதமாக கொலை செய்தார்கள்” என்றும், குண்டு வெடித்து இறந்தவரே விடுதலைப் புலிகளின் உளவாளி என்று நிரூபித்து விட்டான் என்றும் எழுதுவதும், நியாயம் தானா?

பிரேமதாசா படுகொலையைப்போல் புளோட் இயக்கத் தலைவர் முகுந்தன் கொலைப் பழியையும், ராஜீவ் சர்மா விடுதலைப் புலிகள் மீதே போடுகிறார். அதற்கான ஆதாரம் - சான்று எதையுமே முன் வைக்க அவர் தயாராக இல்லை.

புளோட் இயக்கத்தின் தலைவர் முகுந்தன் பின்னணி என்ன? ‘ரா’வுக்கும் அவருக்கும் உள்ள உறவு என்ன?

தென் கிழக்கு ஆசியாவில் காஷ்மீர், சிக்கிம், நேபாளம், பூட்டான் நாடுகள் இந்திய ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நிலையில், மாலத் தீவு மட்டும் வரவில்லை. மாலத் தீவிலே தொடர்ந்து அதிபராக இருந்த அப்துல் ஹ்யூம், பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருந்தார். அவரை பணிய வைக்க ‘ரா’ உளவு நிறுவனம் ஒரு கவிழ்ப்பு வேலையை நடத்த திட்டமிட்டது. அதற்கு முகுந்தனிடம் ‘ரா’ நிறுவனம் பேரம் பேசியது. இது 1987 ஆம் ஆண்டு நடந்தது. அப்போது விடுதலைப் புலிகளுக்கும், புளோட் இயக்கத்துக்குமிடையே மோதல்கள் நடந்த காலகட்டம். மாலத் தீவில் தாக்குதல் ஒன்றை நடத்த, புளோட் முகுந்தனிடம் பெரும் தொகையும், ஆயுதங்களும் ‘உளவு’ நிறுவனம் வழங்கியது. 1987 ஆம் ஆண்டு ஆக.22 ஆம் தேதி, இந்திய ராணுவத்தின் விசேட விமானத்தில் ‘ரா’ அதிகாரிகள் வவுனியா வந்து, உமாமகேசுவரனை சென்னைக்கு அழைத்து வந்து பேரம் பேசினர். மாலத் தீவில் அதிபருக்கு எதிராக தாக்குதல் திட்டத்தை வகுத்துக் கொடுத்து விட்டு, தாக்குதல் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், பிறகு இந்தியாவே தனது படைகளை அனுப்பி, தாக்குதல் நடத்திய புளோட் இயக்கத்தினரை கைது செய்து, மாலத் தீவு அதிபருக்கு உதவியது போல் நாடகம் நடத்தி, மாலத் தீவு அதிபரை இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

உளவுத் துறை விரித்த வலையில் வீழ்ந்தார் முகுந்தன். (குறிப்பு: மாலத்தீவு ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி விரிவான செய்திகளை நான் எழுதிய ‘ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி’ நூலில் படிக்கலாம்) பிறகு, கொழும்பு நகரில் முகுந்தன் கொல்லப்பட்டார்.

இந்தியா சதி செய்த ரகசியங்கள், முகுந்தன் வழியாக வெளியே தெரிந்து விடாமல் தடுக்க வேண்டிய அவசியம், உளவுத் துறைக்கு இருந்தது. 1989 ஜூலையில் உமாமகேசுவரன் கொழும்பில் ரயில் நிலையத்தில் சுடப்பட்டு, பிணமாகக் கிடந்தார். அப்போது புளோட் அமைப்பு இரண்டாகப் பிரிந்து நின்று, தங்களுக்குள் சகோதர யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்தன. முகுந்தனின் எதிரணி குழுவைச் சார்ந்தவர்களையே - முகுந்தனை “அமைதியாக்குவதற்கு” உளவு நிறுவனம் பயன்படுத்தியது. கொழும்பு ஊடகங்கள் முகுந்தனின் போட்டிக் குழுவைச் சார்ந்தவர்களே இதை செய்திருக்கக்கூடும் என்று எழுதின.

முகுந்தன் கொலைக்குக் காரணமானவர்கள் யார் என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. புலிகளுக்கு எதிராக ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள் எழுதிய ‘முறிந்த பனை’ நூலும், முகுந்தன் கொலையை புலிகள் மீது போடவில்லை. ‘முகுந்தன் கொல்லப்பட்டார்’ என்ற ஒற்றை வரியோடு முடித்துக் கொண்டுவிட்டனர். ஆனால், ராஜீவ் சர்மா, எந்த ஆதாரமுமின்றி புலிகள் மீதே பழி போட்டு விடுகிறார். 1988-90 காலகட்டங்களில் நடந்த பல்வேறு நிகழ்வுகளுக்கு விடுதலைப் புலிகளை மட்டுமே குற்றவாளியாக்கி இந்திய உளவுத் துறையின் ‘பிரச்சாரகர்களாக’ நூல்களை எழுதிய ராஜீவ் சர்மாவும், நாராயணசாமியும் ‘ரா’ உளவு நிறுவனம் அக்கால கட்டத்தில் நடத்திய திரைமறைவு சதிகளை திட்டமிட்டே மறைக்கிறார்கள்.

நாங்கள் கேட்கிறோம்; இந்த காலகட்டத்தில் -

• விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பை உயர்த்திப் பிடித்து, அதை வடகிழக்கு மாகாணத்தில் தங்களின் ‘எடுபிடி’ ஆட்சியாக உட்கார வைத்தது யார்?

• 1990 இல் சிறுவர்களைக் கொண்டு ‘தமிழ் தேசிய ராணுவம்’ என்ற அமைப்பை உருவாக்கி,அதற்கு இந்திய ராணுவ முகாம்களில் பயிற்சி தந்து ஆயுதங்களையும் வழங்கியது யார்?

மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ‘முறிந்த பனை’ நூலிலிருந்தே எடுத்துக் காட்டுகிறோம்:

“1989 ஜூன் மாதத்தில் - இந்தியா கட்டாய ஆள் சேர்ப்பு மூலம் இளம் பையன்களைக் கொண்டு (சிறுவர்கள்) தமிழ் தேசிய ராணுவத்தை உருவாக்கியது. இவர்கள் போர் புரிய விருப்பமில்லாதவர்கள் என்பதோடு, சண்டையிடுவதற்கான தார்மீகக் காரணங்களையும் நம்புவதற்குத் தயாராக இல்லை. இவ்வாறு மிகப் பெரும் சமூக நாசத்திற்கான தயாரிப்பிற்கு அரசாங்கம் தயாராக இருந்தது. இவர்களுக்கு இந்திய அதிகாரிகளால் பயிற்சி வழங்கப்பட்டது.” - (நூல் ‘முறிந்த பனை’ - பக்.538)

இப்படி இந்திய ராணுவத்தால் பயிற்றுவிக்கப்பட்டு, உளவு நிறுவனத்தால் விடுதலைப் புலிகளுக்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த தமிழ் தேசிய ராணுவம் தான் அம்பாறையில் 40 முஸ்லீம்களைக் கொன்று குவித்தது. ‘முறிந்த பனை’ நூல் இதை உறுதி செய்கிறது.

“1989 அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் அம்பாறையில் ஒரு கூட்டத்தில் இருந்த தமிழர்களை தமிழ் தேசிய இராணுவப் படையினர் அங்கிருந்து வெளியேறுமாறு கூறிவிட்டு, அங்கிருந்த 40 முஸ்லீம் மக்களை அங்கேயே கொன்று குவித்தனர். தமிழ் ராணுவப் படையின் சில உறுப்பினர்கள் சரணடைய முயற்சி செய்தபோது, சக ஆட்களாலேயே, அவர்கள் சுடப்பட்டனர்.” - (‘முறிந்த பனை’ நூல். பக்.539)

- இப்படி இந்திய உளவு நிறுவனம் நடத்திய சதிராட்டங்களை ஏன் இவர்கள் மறைக்கிறார்கள்?

• விடுதலைப்புலிகளுக்கு எதிராக மாத்தையாவை உருவாக்கி, பிரபாகரனையே தீர்த்துக் கட்ட சதி செய்தது யார்?

• ராஜீவ் கொலை வழக்கில் பிரபாகரன், பொட்டு அம்மான் பெயரை மட்டும் குற்றப் பத்திரிகையில் சேர்த்துவிட்டு, இயக்கத்தில் இரண்டாம் இடத்திலிருந்த மாத்தையா பெயரை மட்டும் சேர்க்காமல் விட்டது யார்?

- மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை திரைமறைவில் அரங்கேற்றிய உளவு நிறுவனம் பற்றி, இந்த நூல்கள் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?

அடுத்தப் பிரச்னைக்கு வருவோம். விடுதலைப் புலிகள் சில அன்னிய உளவு நிறுவனங்களுக்காக ராஜீவ் கொலையை நடத்தி முடித்து, அதற்காக ஆயுத உதவிகளையும், கப்பல் வசதிகளையும் பெற்றுக் கொண்டனர் என்பதுதான் ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்’ நூலின் மய்யமான கருத்து. விடுதலைப் புலிகள் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பான ‘மொசாட்’ அமைப்பிடம் பயிற்சிப் பெற்றார்கள் என்று ராஜீவ் சர்மா குற்றம் சாட்டுகிறார்.

ராஜீவ் சர்மாவின் குற்றச்சாட்டு உண்மைதானா?

புலிகள் இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றவர்களா?

ராஜீவ் கொலையில் அன்னிய சக்திகள் சதிப் பின்னணி உண்டு என்பதே நமது உறுதியான கருத்து. குறிப்பாக இஸ்ரேல் உளவு நிறுவனமான ‘மொசாத்’துக்கு இதில் பங்கு உண்டு என்று ஒரு வலிமையான கருத்து முன் வைக்கப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு தொடக்கம் - இஸ்ரேல் உளவு நிறுவனமான ‘மொசாத்’ இலங்கை அரசோடும், இந்திய உளவு நிறுவனத்தோடும் தனது தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொண்டு செயல்பட்டிருக்கிறது என்பது உண்மை. ஆனால், விடுதலைப் புலிகள் ‘மொசாத்’ உளவு நிறுவனத்தோடு நெருக்கம் கொண்டு, அந்த உளவு நிறுவனத்தின் கூலிப்படையாக மாறி, ராஜீவ் கொலையை செய்து முடித்தனர் என்று ராஜீவ் சர்மா தனது நூலில் குற்றம்சாட்டுவது அபாண்டம்; அபத்தம். அதற்கான வலிமையான ஆதாரம், சான்றுகளை ராஜீவ் சர்மா முன் வைக்கவில்லை.

ராஜீவ் கொலையில் அன்னிய சதி பற்றி விசாரணை நடத்திய நீதிபதி ஜெயின், தமது அறிக்கையிலும் விடுதலைப் புலிகள் மொசாத் சி.அய்.ஏ. (அமெரிக்க உளவு நிறுவனம்) இடையிலான தொடர்புகளை புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி ஒரு முடிவுக்கு நீதிபதி ஜெயின் வருவதற்கு காரணம் என்ன?

இஸ்ரேல் உளவு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி, அதிலிருந்து வெளியேறிய விக்டர் ஓஸ்ட்ரோஸ்கி (Victor Ostrovsky) மொசாத் ரகசிய செயல்பாடுகளைப் பற்றிய நூல் ஒன்றை எழுதியுள்ளார். நூலின் பெயர் ‘By way of deception’ என்பதாகும். அதில் “மொசாத் நிறுவனம், ஒரே நேரத்தில் சிங்கள ராணுவத்துக்கும் தமிழ் கொரில்லா குழுவுக்கும் பயிற்சிகளை அளித்தது” என்று எழுதியுள்ளார். அப்படி பயிற்சிபெற்றது விடுதலைப் புலிகள்தான் என்று வழக்கம் போலவே எல்லா பழிகளையும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது போட்டதுபோல், இந்தப் பழியையும் தூக்கிப் போட்டு விட்டார்கள்.

உண்மையில் அந்த நூலில் இது தொடர்பாக இடம் பெற்றுள்ளது ஒரே ஒரு வாக்கியம் மட்டும் தான்:

“Around 1983. a group of Tamil gurilla factions, collectively known as the Tamil Tigers, began an armed struggle to create a Tamil home land in the north called Elam - an on going battle that has claimed thousand of lives on both sides.” (1983 ஆம் ஆண்டுகளில் ஒட்டு மொத்தமாக விடுதலைப் புலிகள் என்று அழைக்கப்பட்ட தமிழ் கொரில்லாக்கள் குழு, இலங்கையின் வடக்குப் பகுதியில் ‘ஈழம்’ என்ற தமிழர்களுக்கான தேசத்தை உருவாக்குவதற்காக ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தொடங்கினர். தொடர்ச்சியாக நடந்த அந்தப் போராட்டத்தினால் இரு தரப்பிலும் உயிர்ப் பலிகள் நேர்ந்தன.)

- இந்த ஒரு வாக்கியத்தில் ‘தமிழ்ப் புலிகள்’ என்ற சொல் மேலோட்டமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நூலாசிரியர் குறிப்பிடும் அந்த 1984 ஆம் ஆண்டின் காலகட்டத்தில் ஈழ விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட எல்.டி.டி.ஈ. மட்டுமல்ல, ‘டெலோ’, ‘ஈ.பி.ஆர்.எல்.எல்.’, ‘ஈரோஸ்’, ‘புளோட்’ என்ற எல்லா அமைப்புகளுமே புலிகள் என்ற பெயரிலேயே அடையாளப்படுத்தப்பட்டன. இது எல்லோருக்குமே தெரியும். அதே காலகட்டத்தில் தமிழ்நாட்டிலும் பத்திரிகைகளானாலும், மக்களானாலும் எல்லா அமைப்புகளுமே ‘புலிகள்’ என்றே அழைக்கப்பட்டன. பல நேரங்களில் விடுதலைப் புலிகள் அல்லாத பிற குழுக்களின் முறைகேடான நடவடிக்கைகளும் புலிகளின் செயல்பாடுகளாகவே கூறப்பட்டதால், விடுதலைப் புலிகள் இயக்கமே, அவற்றையெல்லாம் மறுக்க வேண்டியிருந்தது. “தமிழ் மக்கள் இப்போட்டிக் குழுக்களை எவ்வகையிலும் வேறுபடுத்தி நோக்கவில்லை. அவர்கள் எல்லோரும் எமது ‘பொடியன்கள்’ என்றும், ‘புலிகள்’ என்றும் கூட அழைக்கப்பட்டனர்” - என்று யாழ் பல்கலை பேராசிரியர்கள் எழுதிய ‘முறிந்த பனை’ நூலும் (பக்.78) குறிப்பிடுகிறது. எனவே தமிழ்ப் புலிகள், இஸ்ரேல் உளவு நிறுவனத்திடம் பயிற்சிப் பெற்றதாக அந்த நூலில் மேலோட்டமாக எழுதப்பட்டதை - விடுதலைப் புலிகள் தான் என்று உறுதியாகக் கூற முடியாது. மாறாக விடுதலைப் புலிகள் இனவெறி இஸ்ரேலின் மொசாத்துக்கு எதிரான பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் பயிற்சி எடுத்தார்கள் என்று சர்வதேச புகழ் பெற்ற ‘எக்னாமிஸ்ட்’ ஏடு (22.3.1985) எழுதியது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஈழத்தில் நடந்த போராட்டத்தை ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதிய சிங்களரான ரோகன் குணரத்தினா சிங்கள ராணுவக் குழு இஸ்ரேல் சென்று பயிற்சி பெற்றது என்றும், இப்படிப் பயிற்சி பெற்ற குழுவுக்கு இஸ்ரேல் சூட்டியிருந்த ரகசிய பெயர் ‘குரங்குகள்’ என்றும் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, ரோகன் குணரத்னா, தனது நூலில் ‘விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி’ என்ற முன்னாள் மொசாத் அதிகாரி, தனது நூலில் விடுதலைப் புலிகளுக்கு இஸ்ரேலுடன் உறவு இருப்பதாக எழுதி, பரபரப்பை உருவாக்கி இருந்தாலும், உண்மை என்னவெனில், இஸ்ரேலுடன் விடுதலைப் புலிகளுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதே. Even though Victor Ostrovsky, a former Mossad agent sensationalized LTTE relatios with Israel, there was virtually no relationship - இது சிங்கள ஆய்வாளரே தரும் தகவல். இஸ்ரேலிய உளவுப் பிரிவைச் சார்ந்த 50 பேர் இலங்கை ராணுவத் தினருக்குத்தான் ரகசியமாக பயிற்சி அளித்தனர்.

இது பற்றி கொழும்பு ஏடுகளில் செய்திகள் வந்தன. அப்போது அதிபர் ஜூலியஸ் ஜெயவர்த்தனே, அதை மறுக்கவில்லை. மாறாக, ‘பயங்கரவாதிகளை ஒழிப்பதற்கு பேய்களின் உதவியைப் பெறவும் தயாராக இருக்கிறேன்' என்று கூறினார். இஸ்ரேல், வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரி ஒருவர், “இலங்கை அரசு விரும்பினால், எங்கள் நாடு ராணுவப் பயிற்சி அளிக்கத் தயார்” என்று ‘ஆசியன் மானிட்டர்’ என்ற ஏட்டுக்கு பேட்டியும் அளித்தார். இந்த நிலையில், தமிழர் அய்க்கிய விடுதலை முன்னணி தலைவர் அமிர்தலிங்கம், தமிழ் காங்கிரஸ் தலைவர் குமார், பொன்னம்பலம் ஆகியோர் விடுத்த அறிக்கையில், இஸ்ரேல் ராணுவம் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி தரும் செய்திகளுக்கு தங்களது அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

ராணுவப் பயிற்சி ஏற்கனவே தொடங்கி நடந்து கொண்டிருப்பதாகவும், வடக்கு, கிழக்கு தமிழர் பகுதிகளில் அவர்கள் ஊடுருவி நிற்பதாகவும், இது ஆபத்தான போக்கு என்றும், அவர்கள் எச்சரிக்கை செய்திருந்தனர். இவையெல்லாம் 1984 ஆம் ஆண்டில் நடந்த நிகழ்வுகள்.

2000 ஆம் ஆண்டில் ஏப்ரல் - மே மாதங்களில் இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இலங்கை இராணுவம் கடும் பின்னடைவுகளை சந்தித்தது. அப்போது இராணுவத்தின் தோல்விகளை பத்திரிகைகள் வெளியிடாமல், மக்களிடமிருந்து மறைக்க இலங்கை அரசு, கடும் தணிக்கைகளை செய்து வந்தது. அப்போது ‘அய்லேண்ட்’ பத்திரிகை கடும் தணிக்கைக்கிடையிலும் - பிரேமதாச ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட ஒரு விசாரணை ஆணையம் வெளியிட்ட ஒரு உண்மையை வெளிப்படுத்தியது. அதாவது, மொசாத் உளவுப் படையின் முன்னாள் அதிகாரி ஒரே நேரத்தில் புலிகளுக்கும் இஸ்ரேல் பயிற்சி வழங்குவதாக எழுதியதைத் தொடர்ந்து, அந்த செய்தி உண்மைதானா என்பதை விசாரிக்க அதிபர் பிரேமதாசா, ராணுவ அதிகாரிகளைக் கொண்ட விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார். புலன் விசாரணை நடத்திய ராணுவ அதிகாரிகள், புலிகளுக்கு இஸ்ரேல் பயிற்சி எதுவும் தரவில்லை என்றும், மாறாக, பாலஸ்தீன விடுதலை இயக்கம் தான், விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி தந்திருக்கிறது என்றும், தங்கள் விசாரணையில் கண்டறிந்து கூறினர். இந்தத் தகவலை 2000ம் ஆண்டில் அய்லேண்ட் பத்திரிக்கை வெளியிட்டது.

(During the Premadasa regime an ex-officer of the Mossad intelligence agency accused the Israelis of helping LTTE too and Premadasa appointed a Commission to investigate that allegation. The then service commanders testified to say that it was the PLO which helped the LTTE and not the Israelis.) (Island, May 7, 2000)

ஆக -

• முன்னாள் ‘மொசாத்’ அதிகாரி எழுதிய நூலில், விடுதலைப் புலிகள் தான் பயிற்சிப் பெற்றனர் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடப்படவில்லை.

• சிங்கள ஆய்வாளர்களே புலிகள், இஸ்ரேலிடம் பயிற்சிப் பெற்றதாக கூறுவது தவறு என்று எழுதி விட்டனர்.

• பிரேமதாசா நியமித்த ராணுவ அதிகாரிகள் விசாரணைக் குழுவும் இதை மறுத்து, புலிகள் பயிற்சிப் பெற்றது பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடம் என்று கூறிவிட்டது.

ராஜீவ் சர்மாவுக்குப் பின்னால் மறைந்து நிற்கும் சக்திகள் யார் என்பது, இப்போது புரிகிறதா?

இவ்வளவு உண்மைகளையும் மறைத்துவிட்டு, விடுதலைப்புலிகள் இஸ்ரேல் உளவு நிறுவனத்திடம் பயிற்சிப் பெற்றவர்கள் என்று ராஜீவ் சர்மா, தமது நூலில் கூறுகிறார் என்றால், உளவு நிறுவனம் கட்டமைக்கும் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தில், தன்னையும் இணைத்துக் கொள்கிறார் என்பதைத் தவிர வேறு என்ன முடிவுக்கு வர முடியும்?

ராஜீவ் சர்மாவின் இந்த நூல் சிறையிலிருக்கும் தமிழர்கள் விடுதலைக்கு வலிமை சேர்ப்பதாக நூலை வெளியிட்ட சவுக்கு பதிப்பகம் முன்னுரையில் கூறுகிறது. ஆனால் இந்த நூல் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டவர்களையேகூட குற்றவாளிகளாக சித்தரிக்கிறது. உதாரணமாக சிலவற்றை மட்டும் சுட்டிக்காட்டலாம்.

• உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட பத்மா-பாக்கியநாதன் மற்றும் இறந்து போன அரிபாபு ஆகியோர் ராஜீவ் கொலைக்கு முதல் நாள் நடந்த சதி ஆலோசனையில் பங்கேற்றவர்கள் என்கிறது, இந்த நூல். இப்படி ஒரு சம்பவம் நடப்பது முன் கூட்டியே தெரிந்திருந்தால் அரிபாபு, சம்பவ இடத்திலேயே தன்னை பலி கொடுக்க காமிரா சாட்சியுடன் நின்றிருப்பாரா?

• உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட ஆதிரையை கரும்புலி என்று எழுதுகிறது, இந்த நூல்.

• தாணு இடுப்பில் கட்டி வெடிக்கச் செய்த ‘பெல்ட்’டை உருவாக்கியது யார் என்ற கேள்விக்கு விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழுவினராலேயே இறுதி வரை விடை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார். புலனாய்வுக் குழுவில் முக்கிய இடம் பெற்றிருந்த ரகோத்தமன் என்ற அதிகாரி. தற்போது சிறையில் அடைக்கப்பட்டு, நீதி கேட்டு போராடி வரும் பேரறிவாளன், ரகோத்தமன் வெளியிட்ட கருத்தின் அடிப்படையிலேயே தனக்கு நியாயம் கேட்கிறார். ‘பெல்ட் பாம்’ செய்தது யார் என்பதைக் கண்டுப்பிடிக்காத புலனாய்வுத் துறை அதற்கு பேட்டரி வாங்கச் செய்த குற்றத்தை தம் மீது சுமத்தி, தண்டனை பெற்றுத் தந்துள்ளதே. இது என்ன நியாயம்? இது என்ன நீதி? என்பதுதான் பேரறிவாளன் எழுப்பும் கேள்வி. ஆனால், புலனாய்வுத் துறையாலே கண்டுபிடிக்க முடியாத உண்மையை ராஜீவ் சர்மா கண்டுபிடித்து இந்த நூலில் எழுதியுள்ளது தான் வேடிக்கை. ஜெர்மன் நாட்டில் பிராங்க்பர்ட் நகரத்தில் வாழ்ந்த தம்பி ஜெயபாலன் என்பவர் தான், சென்னைக்கு வந்து வெடிகுண்டு பெல்ட்டை தயாரித்தார் என்கிறார் ராஜீவ் சர்மா - இதற்கு என்ன ஆதாரம்? இதுதான் சிறையில் வாழும் 7 தமிழர்களைக் காப்பாற்றக் கூடிய கருத்தா?

சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையில் இருந்த கோடியக்கரை சண்முகம், மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். கடுமையான பாதுகாப்புகளுடன் விசாரணையில் இருந்த ஒருவர், எப்படி தூக்கில் தொங்க முடியும்? சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் அது தற்கொலை தான் என்று கூறி, சண்முகத்தின் வழக்கை முடித்து விட்டனர். சண்முகத்தின் மனைவி பவானியம்மாள், தன்னுடைய கணவரை சி.பி.அய். தான் விசாரணையில் சாகடித்து விட்டது என்று குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தந்தி அனுப்பினார். ஆனால் எந்த ஆதாரமோ, சூழ்நிலைச் சான்றுகளோ இல்லாமல் விடுதலைப் புலிகள் மீது கொலைப் பழிகளை சுமத்தும் ராஜீவ் சர்மா, சண்முகத்தின் மரணத்தில் சி.பி.அய்.யை காப்பாற்றவே விரும்புகிறார். சண்முகத்தின் மாமாவான சீதாராமன், ‘புலிகளை காட்டிக் கொடுத்து துரோகியாகி விட்டாய்’ என்று ஆத்திரத்தில் அவரது உறவினர்களோடு சேர்ந்து சண்முகத்தைக் கொன்று விட்டதாக எழுதுகிறார்.

“சண்முகத்தின் கூட்டாளிகள் அவரைக் காப்பாற்ற பாதுகாப்பான வழியை ஏற்படுத்துவோம் என்று சண்முகத்திடம் பொய்யான உறுதியைக் கூறியதாக வேதாரண்யம் மக்கள் நம்பினர். சண்முகம் செய்த துரோகத்தால், அவரைக் கொன்று விட்டுத் தற்கொலை செய்து கொண்டதைப் போல் காட்டுவதற்காக மரத்தில் தொங்கவிட்டனர்.”(நூல். பக்.125)

ராஜீவ் சர்மா, ஏன் வலிந்து சென்று, சி.பி.அய். அதிகாரிகளைக் காப்பாற்ற துடிக்கிறார்? உத்தமபுத்திரர்களாக சித்தரிக்க விரும்புகிறார்; ஆதாரம் ஏதுமற்ற தகவல்களை சி.பி.அய். விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ஏன் எழுத வேண்டும்?

No comments:

Post a Comment