Friday, July 22, 2011
தமிழீழத் தனியரசுக்கான தேவையினை உறுதி செய்த கறுப்பு யூலையினை நினைவிருத்தி செயற்படுவோம்! - பிரதமர் வி.ருத்ரகுமாரன்
1983 யூலை கறுப்பு நாட்கள் இலங்கைத்தீவில் தமிழீழ மக்களின் இருப்பும் வாழ்வும் தொடர்பாக அடிப்படையான பல கேள்விகளை எழுப்பி அவைக்கான பதில்களையும் வழங்கி நின்றன.
இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை மனிதில் இருத்தி வீச்சுடன் செயற்படுவதற்கு இக் கறுப்பு யூலை நினைவு நாளில் நாம் உறுதி கொள்வோமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அறிக்கையின் முழுவிபரம் :
தமிழீழ மக்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாதம் புரிந்த இனப்படுகொலைக் குற்றங்களின் ஒரு பதிவாக - தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நெருப்பு நினைவுகள் சுமந்த நாட்களாய் அமைந்து விட்ட கறுப்பு யூலைப் படுகொலைகள் நிகழ்ந்து 28 ஆண்டுகள் கழிந்து போயுள்ளன.
1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலைப் படுகொலைகள் நடைபெற்ற போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள்ளும், கொழும்பு உட்பட சிறிலங்காவின் ஏனைய பகுதிகளிலும் சிங்கள அரசின் துணையுடன் சிங்களக் கொலை வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துப் போராளிகளுக்கும் மக்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இத் தருணத்தில் தனது மரியாதை வணக்கத்தைச் செலுத்தி நிற்கிறது.
சிங்களக் கொலைவெறியர்களின் கரங்களில் இருந்து பல தமிழ் மக்களைப் பாது காத்த சிங்கள மக்களையும் இப் படுகொலைகளுக்கெதிராக குரல் எழுப்பிய சிங்கள முற்போக்காளர்களையும் நாம் இத் தருணத்தில் நன்றியுடன் நினைவில் இருத்திக் கொள்கிறோம்.
1983 யூலை கறுப்பு நாட்கள் இலங்கைத்தீவில் தமிழீழ மக்களின் இருப்பும் வாழ்வும் தொடர்பாக அடிப்படையான பல கேள்விகளை எழுப்பி அவைக்கான பதில்களையும் வழங்கி நின்றன.
சிறிலங்காவின் அதிபாதுகாப்பு நிறைந்த சிறைச்சாலைகளில் ஒன்றாக வர்ணிக்கப்படும் வெலிக்கடைச் சிறையில் சிறைப் பாதுகாவலர்களின் துணையுடன் சிங்களக் கொலைவெறிக் கைதிகள் தமிழ்ப் போராளிகள் உள்ளடங்கலாக 50 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளை கொன்று குவித்த போது –
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தமது கண்களைத் தானம் செய்து அக் கண்களின் ஊடாக மலரப் போகும் தமிழீழத்தைப் பார்ப்பேன் எனப் பிரகடனம் செய்த போராளி குட்டிமணியின் கண்களைத் தோண்டியெடுத்து காலால் நசுக்கித் துவம்சம் செய்த போது -
தமிழ் இனத்தைச் சேரந்தவர்கள் என்பதற்காக, தமிழ் மொழி பேசுபவர்கள் என்பதற்காக மட்டும் சிறிலங்கா அரசின் துணையுடன் பேரினவாதக் கொலை வெறிக் கும்பல் 3000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களை பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள் என்று கூடப் பார்க்காது வீதிகள் எங்கும் வீடுகள் எங்கும் கொன்று குவித்த போது –
தமிழர்களின் வீடுகளையும், உடைமைகளையும், ஆலயங்களையும், வர்த்தக நிறுவனங்களையும் ஏனைய தொழில் முயற்சிகளையும் கொள்ளையிட்டு அதன் பின்னர் தீயிட்டு அழித்த போது –
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தென்னிலங்கையில் தமக்குப் பாதுகாப்பில்லை என்பதனையுணர்ந்து தமிழர் தாயகக் பகுதிகளான வட கிழக்குப் பகுதிகளுக்கு ஓடி வந்த போது –
சிங்கள அரசும் தமிழ் மக்களை தென்னிலங்கையில் வைத்து பாதுகாக்க வேண்டிய தனது கடமையினை செய்ய முடியாது அவர்களை தமது தாயகத்துக்கு கப்பல் ஏற்றி அனுப்பி வைத்த போது –
இவையெல்லாம், இந் நிகழ்வுகளெல்லாம் தமிழீழ மக்களின் ஆழ்மனங்களில் பல கேள்விளை எழுப்பின.
இக் கேள்விகள் எல்லாம் தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழுத் தனியரசினை அமைப்பதனைத் தவிர வேறு மார்க்கம் இல்iலை என்ற பதிலினை உறுதியாய் வழங்கின.
ஆயிரமாயிரம் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிப் போராட களம் இறங்கினர். வரலாற்றோட்டத்தில் தேசியத் தலைவர் தலைமையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் எழுச்சியுடன் முன்னோக்கி நகர்ந்தது. விடுதலைப்புலிகளின் தலைமையில் நடைமுறையரசும் அமைக்கப்பட்டது.
கறுப்பு யூலை நிகழ்வுகள் நடைபெற்று 25 வருடங்கள் நிறைவுற்ற பின்னர் மாறிப் போய் விட்ட உலக ஒழுங்கில் ஒடுக்குமுறை சிறிலங்கா அரசுடன் பயங்கரவாத ஒழிப்பு எனும் பெயரில் உலகம் கூட்டுச் சேர்ந்த போது –
நீதியையும், தர்மத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கனவு என்ற தார்மீக இலட்சியத்தினயும் நிராகரித்து தமது சுய நலன்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகள் அமைப்பை அழிப்பதற்கான முடிவை உலக நாடுகள் எடுத்த போது -
இதன் பெயரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதனை தடுத்து நிறுத்துவதற்கு உரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அனைத்தலக சமூகம் எடுக்கத் தவறிய போது –
2009;; ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழன அழிப்பினை முள்ளிவாய்க்கால் மூலைக்குள் வைத்து சிங்களம் செய்து முடித்தது.
1983 இல் தான் இறந்தாலும் கண்தானம் வழங்கி மலரப் போகும் தமிழீழத்தை பார்தது மகிழ்வேன் என்று தனது விடுதலை வேட்கையினை வெளிப்படுத்திய போராளியின் கண்களைத் தோண்டியெடுத்து காலால் நசுக்கித் துவம்சம் செய்தவர்கள் 2009 இல் தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையினை நசுக்குவதற்கு பெரும் இனஅழிப்பை நடாத்தி முடித்திருக்கிறார்கள்.
கறுப்பு யூலையில் அரசின் துணையுடன் சிங்கள் காடையர்கள் செய்து முடித்த காரியத்தை முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரசே தனது ஆயுதப்படைக் காடையர்களைக் கொண்டு மிகப் பெரும் அளவில், மிகக் கொடுரமான முறையில் செய்து முடித்திருக்கிறது.
1983 கறுப்புயூலை எவ்வர்று தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தியதோ அதேபோல் முள்ளிவாய்க்கால் இனஅழிப்பும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இன்னொரு தளத்தில் முன்னோக்கி நகர்த்தி வருகிறது.
முள்ளிவாய்க்காலில் சிங்களம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் நாலாபுறத்தலிருந்தும் கிளம்பி வருகின்றன. அனைத்துலக சமூகம் இவற்றை போர்க்குற்றங்கள் என்ற பெயரில் அழைத்தாலும் தமிழீழ மக்களைப் பெறுத்தவரை இவை இனப்படுகொலையே.
ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பினுள் வாழ்ந்து வந்த அனைத்து மக்களையும் குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள் இவற்றை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. இந் நிலப்பரப்பினுள் குறிப்பிட்டளவு சிங்கள மக்கள் வாழ்ந்திருந்தால் இவ்வர்று கூட்டாகத் தண்டிக்கும் அணுமுறையினை சிங்கள அரசு எடுத்திருக்க மாட்டாது.
இன்று சிங்களத்தின் சிறையில் ஆயிரக்கணக்கான போராளிகளும் தமிழ் மக்களும் கைதிகளாக்கபட்டுள்ளனர். சிங்களத்தின் சிறைக்கூடங்கள் தமிழர்களுக்கு என்றும் ஆபத்தானவை என்பதனை கறுப்பு யூலை நினைவுகள் நமக்கு நன்கு வெளிப்படுத்தி நிற்கின்றன. கறுப்பு யூலையினை நினைவு கொள்ளும் இத் தருணத்தில் சிங்களத்தின் சிறைக்கூடங்களில் உள்ளவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலை மீண்டும் முன்வைக்கிறோம்.
இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை மனிதில் இருத்தி வீச்சுடன் செயற்படுவதற்கு இக் கறுப்பு யூலை நினைவு நாளில் நாம் உறுதி கொள்வோமாக!
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment