Labels

Friday, July 22, 2011

சூடான் இன்று - ஈழம் என்று?



ஏறத்தாழ 28 ஆண்டுகள் போராடி, 2 இலட்சம் உயிர்களைப் பலிகொடுத்து, தெற்கு சூடான் மக்கள் தங்கள் விடுதலையை வென்றெடுத்திருக்கிறார்கள்.

வடக்கு சூடானின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த தெற்கு சூடான் நாட்டின் இளைஞர்கள் 1980களின் தொடக்கத்தில் தங்களுக்கான தனி நாட்டுக் கோரக்கையை முன்வைக்கத் தொடங்கினர். மிகச்சில ஆண்டுகளிலேயே அவர்களின் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறிற்று. அன்றைக்கு அதிபராக இருந்த(இன்றும் அவர்தான்) ஓமர் பUர், போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் இராணுவத்தை அனுப்பினார். ஒடுக்கு முறையால் மக்கள் எழுச்சி பெற்றனர். போராட்டம் மெல்ல மெல்ல வலிவடையத் தொடங்கிற்று.

90களில் புதிய திருப்பம் அங்கு நிகழ்ந்தது. இராணுவத்திற்கு தலைமை ஏற்று மக்களை ஒடுக்க வந்த காரன் என்பவரின் மனநிலையில் பெரியதோர் மாற்றம் நிகழ்ந்தது. அடிப்படையில் அவரும் தெற்கு சூடானைச் சார்ந்தவர் என்பதால் அந்த மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்வது அவருக்கு எளிதாகவே இருந்தது. ஓமரை நோக்கி அவர் சில கேள்விகளை எழுப்பினார். தென் சூடானிய மக்களின் விடுதலைப் போராட்டத்தில் என்ன குறை கண்டீர்கள் என்று கேட்டார். இராணுவத் தலைமையின் பணி, அரசுக்குக் கீழ்படிவதுதானே தவிர, அரசைக் கேள்வி கேட்பதன்று என எதிர்விளக்கம் சொன்னார் ஓமர்.

நியாயத்தை வாதாடிப் பெற முடியாது என்பதைப் புரிந்து கொண்ட காரன், இப்போது ஓமரை நோக்கி கேள்விகளுக்குப் பதிலாகத் துப்பாக்கிகளைத் திருப்பினார். தென் சூடானிய மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு இராணுவப் பயிற்சி மிக்க ஒரு தலைவன் கிடைத்துவிட்டான். அதிலும் கெரில்லா போராட்டங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர் காரன். கலவரம் செய்யும் மக்களை அடக்குவது என்பது போன்ற எளிய செயலாக இல்லாமல், இன்னொரு இராணுவத்துடன் மோதும் கடிய செயலாகிவிட்டது ஓமருக்கு. 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், விடுதலைப்படை தென் சூடானின் பல பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது. வட சூடான் இராணுவம் பல நேரங்களில் பின் வாங்க வேண்டியதாயிற்று. ஆனால் அப்படிப் பின்வாங்கிச் செல்லும் போது, அப்பாவி மக்களைத் தொடர்ந்து அழித்துச் சென்றது அரசின் இராணுவம். பலியானோர் எண்ணிக்கை, ஆயிரங்களில் இருந்து இலட்சங்களுக்கு உயர்ந்தது.

இத்தருணத்தில்தான், ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்கா தலையிட்டது. அமெரிக்காவின் ஜனநாயக உணர்வையும், கருணையையும் நாம் நன்கு அறிவோம். ஈராக் மக்கள் நம்மைக் காட்டிலும் மிக நன்கு அறிவார்கள். ஈராக்கின் மீது படையயடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான், தென் சூடானிய மக்களுக்காக அமெரிக்கா வட சூடான் அரசிடம் சமரசமும் பேசிற்று. அதிபர் ஓமர் சீனாவிடம் நெருங்கிச் செல்வதை அமெரிக்காவால் அனுமதிக்க முடியாது என்பது ஒரு காரணம். தென் சூடான் எல்லையோரத்தில் இருக்கும் அப்பாயி பகுதிகளில் நிறைந்து கிடக்கும் எண்ணெய் வளம் இன்னொரு காரணம்.

அமெரிக்கா முன்னிலையில், 2005ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் ஓர் ஒப்பந்தம் நிறைவேறிற்று. தென் சூடானிய மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி இரு பகுதிகளும் இணைந்திருப்பதா, பிரிந்து போவதா என்பதைத் தீர்மானிக்கலாம் என முடிவாயிற்று. அந்த முடிவின்படி இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 37 இலட்சத்திற்கும் மேலான மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர். வெறும் 44 ஆயிரம் பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். விடுதலை உறுதியாயிற்று. கடந்த 9ஆம் தேதி(2011 ஜூலை 9), சுதந்திரக் காற்றைச் சுவாசித்தனர் அந்த மக்கள். அந்த மண்ணில் வெளிநாட்டுத் தூதரகத்தை அமைத்த முதல் நாடு எது தெரியுமா? இந்தியாதான்.

விடுதலை நாள் விழாவிற்கு, நாடு கடந்த தமிழீழ அரசின் தலைவர் உருத்திர குமாரன் அழைக்கப்பட்டார் என்பது அளவுகடந்த மகிழ்ச்சியை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்குத் தந்திருக்கிறது.

தமிழீழம் அமைந்து, அதன் விடுதலை நாள் விழாவிற்கு, தென் சூடான் உள்ளிட்ட சுதந்திர நாடுகளை நாம் அழைக்கப் போகும் நாள் எப்போது வரும் தமிழர்களே?

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்

No comments:

Post a Comment