Sunday, July 10, 2011
தெற்குசூடான் உதயமானதுபோல் தமிழ்ஈழம் மலரவும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்: வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
உலக வரைபடத்தில் ஒரு புதிய தேசம் இடம் பெற்று விட்டது. பிரபஞ்சப் பூச்செடியில் புதிதாக ஒரு மலர் பூத்து உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியில், தெற்குசூடான் சுதந்திரத் தனிநாடு என உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது. தலைநகர் ஜூபாவில் சுதந்திரக்கொடி பறக்கிறது.
சல்வாஹிர் மியார்டிட், நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக ஆகி விட்டார். இனப்படுகொலைக்கு ஆளாகி, துன்பம் என்னும் நரக இருளில் தத்தளித்த கருப்பர் இன மக்களின் அடிமை நுகத்தடியை முறித்து தங்கள் மண்ணை, சுதந்திர பூமியாக உலகம் ஏற்றுக் கொண்டதை, ஆடிப்பாடி கோலாகலமாக நடத்தும் கொண்டாட்டங்களில், கருப்பர் இனத்து சிறுவர் சிறுமிகள், தங்களின் சுதந்திர தேசக்கொடியுடன் குதித்து கும்மாளம் இடுவதை, ஊடகத்திரைகளில் காணும் போது, ஈழத்தமிழர்களும், அவர்களின் பிள்ளைகளும் இப்படி சுதந்திர ஆனந்தப் பள்ளு பாடும் நாள் விரைவில் மலராதா? என்ற ஏக்கம் நெஞ்சை அடைக்கிறது.
தெற்கு சூடான் விடுதலைத் திருநாள் கொண் டாட்டங்களில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன், அமெரிக்க குடியரசின் முன்னாள் தலைவர் ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட பன்னாட்டு அதிபர்களும் பங்கு ஏற்கின்றனர். இந்தியாவும், தன் பங்குக்கு குடியரசின் துணைத்தலைவர் ஹமீது அன்சாரியை அனுப்பி வைத்து உள்ளது.
நைல் நதி தீரத்தில் இந்த கருப்பர் நாடு மலர்ந்திட, அம்மக்களின் பொது வாக்குப்பதிவை நடத்தியது. அந்த தீர்வைத்தானே தமிழ் ஈழ மக்கள் இன்று கேட்கிறார்கள். தாய்த் தமிழகத்தின் இளைஞர்கள், கோடிக்கணக்கான மக்கள், அந்த இலக்கை அடைய, உரிமைப்போர், முழக்கம் செய்யும்போது எந்த சக்தி அந்த தீர்வை தடுத்து விட முடியும்? உலகின் மிகப்பழமையான நைல் நதி பாய்ந்தோடும் சூடான் குடியரசு நாடு, முன்னோரு காலத்தில் எகிப்தியப் பேரரசின் ஆதிக்கத்திலும், பின்னர் பிரித்தானியகக் காலனி நாடாகவும் இருந்து, 1956 முதல் சுதந்திர நாடாக ஆயிற்று.
வடக்கு சூடான் பகுதியில் அராபியர்களின் வழித்தோன்றல்களும், நூபியர்களும் வாழ்கின்றனர். தெற்கு சூடான் பகுதியில் கருப்பர் இன மக்களும், இயற்கை வழிப்பாட்டுப் பழங்குடியினரும் வசிக்கின்றனர். வடக்கே இஸ்லாம் மார்க்கமும், தெற்கே கிறிஸ்துவ மார்க்கமும் ஆளுமை கொண்டு உள்ளன. வடக்குக்கும், தெற்குக்கும் இடையே மூண்ட மோதல்களால் 56 முதல் 72 வரை உள்நாட்டுப் போரும், மீண்டும் 83 ல் இரண்டாம் உள்நாட்டுப் போரும் மூண்டன.
1989 ல் திடீர் புரட்சியை நடத்திய ராணுவ தளபதி உமல்அல்பசீர், குடியரசு தலைவராக முடிசூட்டிக் கொண்டார். இன்று வரையிலும், அவரே சர்வாதிகாரியாக இருக்கின்றார். எண்ணெய் வளம் மிக்க தெற்கு சூடானில் தொடர் ராணுவத் தாக்குதல்கள், இனப்படுகொலையாகவே அல்பசீர் அரசால் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் படுகொலைக்கு உள்ளாயினர்.
பாய்ந்தோடும் நைல் நதியில் அவர்களின் செங்குருதி கலந்தது. இனக்கொலை நடத்திய அதிபர் உசேன்அல்பசீருக்கு 87 சதவீத ஆயுதங்களை சீனாதான் வாரி வழங்கியது. ரஷியா தன் பங்குக்கு 8 சதவீத ஆயுதங்களை தந்தது. இதெல்லாம் எதற்காக? சூடானின் எண்ணெய் வளத்தை கொள்ளை அடிப்பதற்காக.
தெற்கு சூடானில் முதலில் ராணுவத்தில் பணி ஆற்றி அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ஜான்கராங், சூடான் மக்கள் விடுதலைப்படையின் தலைவர் ஆனார். 2005 ம் ஆண்டு விமான விபத்தில் அவர் மாண்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் விதித்த பொருளாதாரத் தடை உள்ளிட்ட அழுத்தங்களால், சூடான் அரசும், தெற்கு சூடான் மக்கள் விடுதலை இயக்கமும் நய்வாசா அமைதி உடன்படிக்கை செய்து கொண்டன. தெற்கு சூடான், தனி நாடாகப் பிரிந்து செல்வதா? அல்லது சூடான் குடியரசிலேயே நீடிப்பதா? என்பதை 2011 ம் ஆண்டு ஜனவரியில் பொது வாக்குப்பதிவு மூலம் தீர்மானிப்பது என்று முடிவு செய்தனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி பொது வாக்குப்பதிவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைப்பு தருமாறு அமெரிக்க குடியரசு தலைவர் ஓபாமா, சாட், லிபியா, கென்யா, உகாண்டா, தென் ஆப்பிரிக்கா, ஏதியோப்பியா, நைஜீரியா, ருவாண்டா ஆகிய நாடுகளின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். திட்டமிட்டவாறு வாக்குப் பதிவை நடத்தாவிடில் சூடான் நாட்டின் மீது பொருளாதார முற்றுகையை அமெரிக்கா தீவிரப்படுத்தும் என்றும், திட்டமிட்டப்படி வாக்குப்பதிவை நடத்தினால் பயங்கரவாத நாடு என சூடான் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவதாகவும் அறிவித்தார்.
தெற்கு சூடானில்தான் 80 சதவீத எண்ணெய் கிணறுகள் உள்ளன. இந்த எண்ணெய், வடக்கு சூடானின் துறைமுகங்கள் வழியாகத்தான் அயல்நாடுகளுக்கு அனுப்ப முடியும். எனவே தங்கள் துணை இல்லாமல் தனிநாடாக, தெற்கு சூடான் இயங்க முடியாது என்று சூடான் அரசும், அதற்கு துணையாக சில அதிபர்களும் கூறி வந்தது உரிமைச் சம்மட்டியின் அடியால் நொறுங்கிப் போய்விட்டது.
சூடான் ராணுவமும், அரசு ஏவிய ஆயுதப் குண்டர் கூட்டமும் நடத்திய படுகொலைகளால் வீடு, வாசல் இழந்து வடக்கு சூடானில் தலைநகர் கர்டோமைச் சுற்றிலும் உள்ள முகாம்களில் மட்டும் ஏறத்தாழ இருபது லட்சம் பேர் அகதிகளாக தஞ்சம் புகுந்து இருந்தனர். துன்பத்தில் துடிதுடித்த அந்த மக்களும், இந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க உரிமை கோரியபோது, முதலில் மறுத்த சூடான் அரசு பின்னர் வேறு வழியின்றி அதற்கு ஒப்புக்கொண்டது.
உகாண்டாவிலும், கென்யாவிலும் அகதிகளாக இருந்தவர்களும் தங்கள் தாயகத்துக்கு திரும்பி வந்து வாக்கு அளித்தனர். 2011 ஜனவரி 9 ந்தேதி முதல் 15 ந்தேதி வரையிலும், ஆறு நாட்கள் பொது வாக்குப்பதிவு நடைபெற்றது. தெற்கு சூடானின் மக்கள் தொகையில் அறுபது விழுக்காட்டினர் அந்த வாக்குப்பதிவில் பங்கு ஏற்க வேண்டும். அதில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தருகின்ற தீர்ப்பு எதுவாயினும் ஏற்பது என சூடான் அரசும், விடுதலை இயக்கமும் ஒப்புக்கொண்டு இருந்தன.
ஆனால் வாக்குப் பதிவில் பங்கு ஏற்ற 97 விழுக்காட்டினருள், 99 விழுக்காட்டினர் தெற்கு சூடான் தனி நாடாக அமைவதற்கு ஆதரவு அளித்தனர். வாக்கு அளிக்கப்பதிவு செய்து கொண்டோர் 39,47,676 பேர். வாக்கு அளித்தவர்கள் 38,41,994 பேர். செல்லுபடியான வாக்குகள் 38,37,406 பேர். தனிநாட்டுக்கு ஆதரவு 37,92,518 பேர். எதிர்ப்பு 44,888.
தெற்கு சூடான், சுதந்திர தேசக்கொடி பட்டொளி வீசுகிறது. விடுதலை சங்கநாதம் திசையெங்கும் கேட்கிறது. ஆனாலும், சூடான் நாட்டுக்குள் எந்த நேரமும் குமுறி வெடிக்கும் என்ற நிலையில், டர்புர் பிரதேசப் பிரச்சினை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. அங்கு வாழும் பழங்குடி மக்கள், ஆதிக்க இனத்தினரால் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டு உள்ளனர். மனித இனத்தின் பேரழிவுகளுள் ஒன்று என்றே உலகத் தலைவர்களுள் பலர் அதை குறிப்பிட்டு உள்ளனர். அங்கும் ஒரு வாக்குப்பதிவை 2012 ம் ஆண்டில் நடத்துவது என தீர்மானித்து உள்ளனர்.
வடக்கு, தெற்கு, மேற்கு டர்புர் பகுதிகளை உள்ளடக்கி, சுயாட்சி அதிகாரம் கொண்ட, ஒருங்கிணைந்த டர்புர் மாநிலம் அமைப்பதா? அல்லது தற்போது உள்ளவாறு மூன்று மாநிலங்கள் என்ற நிலையே நீடிப்பதா? என்பதை அந்த வாக்குப் பதிவு முடிவு செய்யும்.
மேலும் வடக்கு சூடானுக்கும், தெற்கு சூடானுக்கும் நடுவே அமைந்து உள்ள அபெய் மாநிலம், யாருக்கு சொந்தம் என்பதுவும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. மோதலுக்கு இது வழிவகுக்கக்கூடும் என்பதால், அதற்கும் ஒரு தனி வாக்குப்பதிவுதான் தீர்வாக அமையக்கூடும். சூடான் அதிபர் அல்பசீர் நடத்திய இனப்படுகொலைக் குற்றங்களுக்காக அனைத்து உலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் நிறுத்த வேண்டும் என்று 2004 ம் ஆண்டு ஐ.நா.வின் பாதுகாப்பு மன்றம், 1564 ஆவது தீர்மானத்தின்படி முடிவு செய்தது.
2005 ம் ஆண்டு மார்ச் மாதம், அதே மன்றம் அறிவித்ததற்கு இணங்க, 2008 ம் ஆண்டு ஜூலை 14 ம் நாள் அனைத்து உலக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் அல்பீசீரை கைது செய்யும்படி ஆணை பிறப்பித்தது. 2010 ம் ஆண்டு ஜூலை மாதம் திஹேக் நகரில் உள்ள நீதிமன்றம், அல்பசீரை இனக்கொலை நடத்திய குற்றவாளி என அறிவித்து விட்டது.
லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை துடிக்க துடிக்க கொடூரமாக கொலை செய்த இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவும் அவனது கூட்டாளிகளும் அனைத்து உலகக் குற்ற இயல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவும், அதற்கு உரிய நடவடிக்கைகளை ஐ.நா.மன்றமும், உலக நாடுகளும் மேற்கொள்ளவும், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கான பொது வாக்குப்பதிவு, பன்னாட்டுப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் நடத்தப்படவும், தெற்கு சூடான் உதயமான திருநாளான இந்த ஜூலை 9 ம் நாள் அன்று தாய் தமிழகத்து மக்கள் சூளுரைப்போம்.
சுதந்திர தெற்கு சூடானின் உதயம், சுதந்திரத் தமிழ் ஈழத்துக்கு பன்னாட்டு அரங்கில் நுழைவாயில் ஆகட்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment