Labels

Wednesday, July 27, 2011

ஈழத்தமிழர் நலனை பாதுகாப்பதில் அமெரிக்காவை விட இந்தியாவுக்கு அதிக பொறுப்பு உள்ளது: பாமக



பா.ம.க. தலைமை பொதுக்குழு சென்னையில் 27.07.2011 அன்று நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை விகித்தார். மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தலைமை பொதுக்குழு தீர்மானத்தில்,


இலங்கையில் சமஉரிமை, ஜனநாயக உரிமை மறுக்கப்பட்ட நிலையில் தனி தமிழ் ஈழம் கேட்டு போராடிய ஈழத்தமிழர்களை, பன்னாட்டு படை உதவி, ஆய்த உதவி, பண உதவி ஆகியவற்றின் மூலம் இராஜபக்சே தலைமையிலான சிங்கள இனவெறி அரசு கொன்றுக் குவித்தது.


2009இல் நடைபெற்ற இறுதிப் போரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர். 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு இன்னும் மறுவாழ்வு வழங்கப்படவில்லை.

இலங்கை போரில் போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடைபெற்றதாக ஐ.நா. வல்லுநர் குழு கண்டுபிடித்து அறிவித்த பிறகும், அதன் அடிப்படையில் இராஜபக்சே மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதைக் கண்டிக்கும் வகையில் போர்க்குற்ற விசாரணை நடத்தாதவரை இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகள் நிறுத்தப்படுவதாக அமெரிக்கா பொருளாதார தடை விதித்து அறிவித்திருப்பது மனநிறைவு அளிக்கிறது. ஈழத்தமிழர் நலனை பாதுகாப்பதில் அமெரிக்காவை விட இந்தியாவுக்கு அதிக பொறுப்பு உள்ளது. எனவே, உலக நாடுகளின் ஆதரவை திரட்டி, இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் ஒன்றாக வாழ வாய்ப்பே இல்லை என்பது பல தருணங்களில் நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளை பிரித்து தனித் தமிழ் ஈழம் அமைக்க ஈழத்தமிழர்களிடமும், தமிழ்நாடு உள்ளிட்ட உலகின் மற்ற பகுதிகளில் வாழும் தமிழர்களிடமும் ஐ.நா. அமைப்பின் மூலமாக பொதுவாக்கெடுப்பை நடத்த இந்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்
என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக பொதுக்குழு :

பா.ம.க. தலைமை பொதுக்குழு சென்னையில் 27.07.2011 அன்று நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலை விகித்தார். மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

தலைமை பொதுக்குழு தீர்மானத்தில்,


தமிழகத்திற்குச் சொந்தமான கச்சத்தீவு எப்போது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டதோ அன்று முதலே தமிழக மீனவர்கள் சிங்கள படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதுவரை 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள படையினரால் கொல்லப்பட்ட போதிலும், இதற்காக சிங்கள அரசு மீது இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


மீனவர்கள் கொல்லப்படும் விசயத்தில் இந்திய அரசு இனியும் மென்மையான போக்கை கடைப்பிடிக்கக்கூடாது. தமிழக மீனவர்கள் மீது கை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை அரசை எச்சரித்து, வங்கக் கடலில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க வகை செய்யப்பட வேண்டும். மீனவ சிக்கலுக்கு காரணமான கச்சத்தீவை இலங்கை அரசிடமிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



இவ்வாறு பாமக பொதுக்குழு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment