Friday, July 8, 2011
கார்த்திகேசு சிவதம்பி மாரடைப்பால் காலமானார் :
இலங்கையைச் சேர்ந்த மூத்தத் தமிழறிஞரும், இலக்கிய விமர்சகருமான கார்த்திகேசு சிவதம்பி கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் 06.07.2011 அன்று காலமானார். அவருக்கு வயது 79.
1932ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள கரவெட்டி என்னும் ஊரில் பிறந்த அவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். அவருக்கு மனைவி ரூபாவதியும், மூன்று மகள்களும் உள்ளனர்.
இவர் சங்க இலக்கியம் முதல் இப்போதைய தமிழ் சினிமா வரை பல்வேறு துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழின் மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர்களில் ஒருவராகப் போற்றப்பட்டவர்.
இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் "பண்டைத் தமிழகத்தில் நாடகம்' என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். "தமிழ்ச் சமூகம் ஒரு புரிதலை நோக்கி', "பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் நாடகம்', "மதமும் மானுடமும்' "தமிழ்ச் சிறுகதைகள் தோற்றமும் வளர்ச்சியும்', "இலங்கைத் தமிழர் யார், எவர்', "தொல்காப்பியமும், கவிதையும்' "தமிழ்ப் பண்பாட்டில் சினிமா' உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் எழுதியுள்ளார்.
உலகத் தமிழ் மாநாடு உள்பட பல்வேறு மாநாடுகளில் 200 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார். தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று திருப்பி அனுப்பப்பட்டார். கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்கத்தின் தலைவராக இருந்தார். இந்த மாநாட்டின் மிகப்பெரிய விளம்பரமாக அவரது பங்கேற்பை அப்போதைய தமிழக அரசு செய்தது.
கார்த்திகேசு சிவதம்பியின் மறைவு செய்தி அதிர்ச்சியை தந்தது: கலைஞர்
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பியின் மறைவு செய்தி அதிர்ச்சியை தந்தது. 79 வயதான பேராசிரியர் சிவதம்பி கடந்த சில நாட்களாகவே உடல் நலிவுற்றிருந்து நேற்றிரவு மறைந்திருக்கிறார்.
பேராசிரியர் கா.சிவதம்பி தமிழ்மொழி, இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். திறனாய்வாளர், சமூக வியலாளர், அரசியல் சிந்தனையாளர், பல்துறை புலமை கொண்டவர்.
இங்கிலாந்து, பின்லாந்து, ஜெர்மனி என்று பல நாடுகளிலும் பணியாற்றி பெருமை சேர்த்தவர். எட்டாவது தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பேராசிரியர் சிவதம்பி திருப்பி அனுப்பப்பட்டார் என்ற அநீதிக்கு பரிகாரமாக 2000 ம் ஆண்டில் தி.மு.க. அரசு அவருக்கு திரு.வி.க. விருது வழங்கியது.
அண்மையில் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வரங்க குழுவிற்கு தலைமை பொறுப்பு வழங்கி தி.மு.க. அரசு அவரை சிறப்பித்தது. செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள தனது உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் இலங்கையில் இருந்து பெங்களூர் வரை விமானத்தில் வந்து அங்கிருந்து கோவைக்கு காரிலேயே வந்து சென்றார்.
மாநாடு முடிந்து அவர் விடைபெறும் முன் என் அறைக்கு தேடி வந்து கைகளைப் பிடித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னார். 70க்கும் மேற்பட்ட நூல்களையும், 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதி உலக அறிஞர்களால் போற்றப்பட்ட பேராசிரியர் சிவதம்பியின் மறைவு தமிழ் உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரை பிரிந்து வருந்தும் அவரது துணைவியார் ரூபாவதி சிவதம்பிக்கும், அவரது மகள்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கலைஞர் கூறியுள்ளார்.
சிவத்தம்பியின் மறைவு, தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பு: வைகோ
ஈழத்தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மறைவுக்கு மதிமுக பொதுசெயலர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
ஈழத்தமிழ் அறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவுச் செய்தி அறிந்து அதிர்ச்சியும், மிக்க துயரமும் அடைந்தேன்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் சு. வித்தியானந்தத்தின் மாணவராகிய சிவத்தம்பி, பின்னர் அதே பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்புலத் தலைவராகவும், கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்துள்ளார்.
சிவத்தம்பி, சிறந்த விமர்சகர். மேலை நாட்டு விமர்சன முறையை தமிழ் இலக்கியத்தில் அறிமுகம் செய்தவர். தொல்காப்பியத்தைப் படித்து, தமிழ் இலக்கணத்தில் கரை கண்டவர். ‘தொல்காப்பியத்தை ஒருவர் எழுதவில்லை; பலர் எழுதி இருக்கிறார்கள்’ என்ற கருத்தை முன்வைத்தவர். திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருள்சோதியில் கலந்தார் என்பதற்கு, வரலாற்று ரீதியாக பகுத்தறிவு விளக்கத்தைக் கொடுத்தவர். சிறந்த பொது உடைமைவாதி, பகுத்தறிவாளர்.
அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தில், உலக அமைப்பின் பொதுச் செயலாளராக, தஞ்சாவூர் உலகத் தமிழ் மாநாட்டில் தெரிவு செய்யப்பட்டவர். விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று கூறி தமிழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இலங்கை சுதந்திராக் கட்சித் தவைர்களுடன் நெருக்கமாக இருந்த சிவத்தம்பி, நாடாளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகப் பணி ஆற்றினார்.
சிவத்தம்பியின் தந்தையார் கார்த்திகேசு, சைவப்புலவராகத் தமிழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். இலங்கையின் வடமராட்சி பகுதி ஈன்ற சிறந்த புலமையாளர்களுள் ஒருவர் சிவத்தம்பி. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வடமராட்சி தமிழ் இலக்கியவாதிகள் நிறைந்த பகுதி என்பதால், இலங்கை அரசு வடமராட்சி பகுதியைக் குறிவைத்துத் தாக்கியது. பிரபாகரனுக்கும், கவிஞர் காசி ஆனந்தனுக்கும் உறவினரான பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவு, தமிழ் இலக்கிய உலகுக்குப் பேரிழப்பாகும்.
அவரது மறைவுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தனது இரங்கல் செய்தியில் வைகோ குறிப்பிட்டுள்ளார்.
உடலால் மறைந்தாலும், தமிழ் மொழிப் பணிகளால் மக்கள் உள்ளங்களில் வாழுபவர் சிவதம்பி: வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தியில்,
முதுபெரும் தமிழர் அறிஞர் இலங்கையைச் சார்ந்த ஈழத் தமிழ்ப் பெரும் பேராசிரியர் முனைவர் கார்த்திகேசு சிவதம்பி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் துன்பமும், துயரமும் அடைந்தோம்.
பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி அவர்களது நுண்மான் நுழைபுல ஆற்றல், அவர் எழுதிய பற்பல நூல்கள் மூலம் தமிழ் கூரும் நல்லுலகத்திற்கு காணிக்கையாக்கப்பட்ட அரும் பெரும் இலக்கியச் செல்வங்களாகும்.
விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டு, எதையும் ஆராய்ந்து கூறும் ஆய்வுப் புலமை பெற்ற ஆற்றலாளர், முற்போக்குச் சிந்தனை உடையவர்.
சில கருத்துகளில், அணுகுமுறைகளில் நாம் மாறுபடக் கூடியவர்கள் என்றாலும், அவர் ஆற்றல்மிகு ஒரு நிறைகுடம்; பல்கலைக் கொள்கலன் ஆவார்.
கோவையில் மேநாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கூட்டிய உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் துவக்கி வைத்து அவர் ஆற்றிய பொழிவு, இன்னமும் நம் செவிகளைக் குளிர வைக்கின்றன.
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை என்றார் புரட்சிக்கவிஞர். ஆம், பேராசிரியர் கார்த்திகேசு சிவதம்பி உடலால் மறைந்தாலும் அவரது இலக்கியத் தொண்டாலும், தமிழ் மொழிப் பணிகளாலும் என்றும் மக்கள் உள்ளங்களில் வாழுபவர் ஆவார்கள்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, தமிழ் கூரும் நல்லுலகத்துக்கு திராவிடர் கழகம் சார்பில் நமது ஆழ்ந்த இரங்கல்!
கார்த்திகேசு சிவத்தம்பி மறைவு உலகத் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழுக்கம் ஏற்பட்ட பேரிழப்பு: ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஈழத் தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பி மாரடைப்பால் காலமான செய்து கேட்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்.
வீரம் விளையும் இலங்கை வல்வெட்டித்துறையில் பிறந்த சிவத்தம்பி, பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தமது வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி வந்த சிவத்தம்பி, சென்னை பல்கலைக்கழகம், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், தில்லி சவர்லால்நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் மதிப்புறு பேராசிரியராக பணியாற்றி தமிழ் வளர்த்தவர்.
இலங்கை தமிழ் வரலாறு மற்றும் இலக்கியம் குறித்து 200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் 70க்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியவர். தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். தமிழுக்கு இவர் ஆற்றிய தொண்டுக்காக தமிழக அரசின் திரு.வி.க. விருது பெற்றவர். கோவையில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டவர்.
ஒட்டுமொத்தத்தில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் முன்னோடியாகவும், மார்க்சிய சித்தாந்தவாதியாகவும் திகழ்ந்தவர். அவரது மறைவு உலகத் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழுக்கம் ஏற்பட்ட பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
சிவதம்பி மறைவு: இ.கம்யூனிஸ்ட் இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வெளியிட்ட இரங்கல் அறிக்கை:
உலகின் சிறந்த தமிழ் அறிஞரும், மார்க்சீய அறிஞரும், சமூகப்போராளியுமான பேராசிரியர் சிவதம்பிக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநிலக் குழுவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். வெல்வெட்டி துறைக்கு அருகில் அமைந்த கரவெட்டி என்னும் உரில் த.பி. கார்த்திகேசு, வள்ளிமை தம்பதியினருக்கு இவர் மகனாக பிறந்தார்.
தமிழகத்திலுள்ள தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், போன்றவற்றில் இவருடைய ஆய்வு பங்களிப்பு முக்கியமானதாகும். இங்கு வருகை பேராசியராகவும் வருகை தந்து சிறப்பித்துள்ளார். இங்கிலாந்து ஜெர்மனி முதலான நாடுகளின் புகழ் மிக்க பல்கலைக் கழகங்கள் பலவற்றில் வருகைப் பேராசியராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
சிவதம்பியின் மரணம் உலக அளவில் தமிழுக்கான ஆய்வு அரங்கில் ஒருவித வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. புதிய தலைமுறையினர், அந்த இடத்தை இட்டு நிரப்புவதற்கான தங்கள் பணியை உடன் தொடங்குவது தான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். இலங்கை தமிழ் மக்களுக்கு பெரும் துயர் நிகழ்ந்துள்ள இந்த நேரத்தில் பேராசிரியரின் இழப்பு, நமக்கு மேலும் வேதனையைத் தருகிறது. பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்துவதோடு அவரது இழப்பால் துயருற்ற குடும்பத்தினர் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கார்த்திகேசு சிவத்தம்பி மரணம்: மார்க்சிஸ்ட் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில்,
இடதுசாரி சிந்தனையாளரும், முற்போக்கு தமிழறிஞரும், தலைசிறந்த இலக்கிய விமர்சகருமான கலாநிதி கார்த்திகேசு சிவத்தம்பி (79) இலங்கை யாழ்ப்பாணத்தில் ஜூலை 6 ஆம் தேதி காலமானார். கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அஞ்சலி செலுத்துகிறது.
கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் தமிழ் இலக்கிய வெளியில் மார்க்சிய நோக்கில் ஆய்வுகளை மேற்கொண்டவர். தனது ஆய்வுக் கட்டுரைகளின் மூலமாக பழந்தமிழ் இலக்கிய உருவாக்கத்தில் உழைப்பாளி வர்க்கத்தின் பங்களிப்பை வெளிக் கொணர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சனின் மாணவராவார். உலக அளவிலான தமிழியல் ஆய்வுகளின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். நவீன தமிழ் இலக்கியமும், தமிழ் சினிமாவும் பயணிப்பதற்கான முற்போக்கு திசைவழியை அமைத்துக் கொடுத்தவர். 70க்கும் மேற்பட்ட புத்தகங்களும், 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளும் தமிழ் இலக்கியத்திற்கும், இடதுசாரி இயக்கத்திற்கும் அருங்கொடைகளாகும். அவரின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.
தமிழ் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்கு தமிழ்நாடு அரசு திரு.வி.க.விருது வழங்கி கவுரவித்தது. சென்னைப்பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கு பேராசிரியராக சென்று வந்துள்ளார்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது துணைவியார் மற்றும் குடும்பத்தினருக்கும், தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment