Sunday, July 31, 2011
இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது: பிரகாஷ் காரத்
இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.
இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை, பெரியார் திடலில் 30.07.2011 அன்று சிறப்பு மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.வடசென்னை மாவட்ட செயலாளர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
இந்த மாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டி, தமிழகம் முழுவதும் ஆகஸ்டு 9-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இலங்கை தமிழர் சம உரிமை-அரசியல் தீர்வு-சிறப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து பேசியதாவது:
இலங்கையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியின் அராஜகத்தை மீறி, தமிழ் அமைப்புகள் வெற்றி பெற்றுள்ளன. இலங்கையில் நடந்த போரில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன. அங்கு பிரச்னைகள் தீரவேண்டுமானால், போரின்போது ஏற்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேச்சையான விசாரணை தேவை. சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட வேண்டும். தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும். சம உரிமை கிடைக்க வேண்டும். இதை இலங்கை அரசு செய்ய வேண்டும்; இந்திய அரசும் இதை இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஆகஸ்ட் 9ம் தேதி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அவர்களின் வாழ்வாதாரத்தை காக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ளன.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் பேசினார்.
மாநாட்டைத் தொடங்கி வைத்து காரத் பேசியதாவது:
இலங்கையில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. போருக்குப் பின் இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதுதான் இலங்கை அரசின் உடனடிப் பணியாக இருந்திருக்க வேண்டும். எனினும், தமிழ் மக்களுக்கு சம உரிமை அளிப்பதிலும், அதிகார பகிர்வு அளிப்பதிலும் இலங்கை அதிபர் ராஜபட்சே ஆர்வம் காட்டவில்லை.
போர் முடிந்த பின் அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று ராஜபட்சே முதலில் தெரிவித்தார். எனினும், இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இலங்கை இனப் பிரச்னையால் தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படவில்லை. ஒட்டுமொத்த இலங்கை மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எல்லா மக்களின் நலன்களும் காக்கப்பட வேண்டுமானால் முதலில் இனப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட வேண்டும். எனவே, இலங்கை வளர்ச்சி பெற வேண்டுமானால் தமிழ் மக்களுக்கு சம உரிமை அளிப்பது மிகவும் அவசியமாகும்.
நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட இலங்கை தமிழ் தேசியக் கூட்டணி நிர்வாகிகள் அங்கு உள்ளனர். அவர்களுடன் இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசு தொடங்க வேண்டும்.
ஆனால், இத்தகைய அரசியல் தீர்வுக்கு தடையாக இலங்கை ராணுவத்தினர் உள்ளனர். எனவே, தமிழ் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் பேசி, அரசியல் தீர்வை எட்ட இலங்கை அரசு முன்வர வேண்டும். ஏற்கெனவே 1987 ம் ஆண்டு ஏற்பட்ட இந்திய இலங்கை உடன்பாட்டின்படி இப்போது தீர்வு காண இயலாது. எனவே, அரசியல் தீர்வை எட்ட ஒரு புதிய அணுகுமுறையோடு இலங்கை அரசு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.
மேலும், இறுதிப் போரின்போது இலங்கை ராணுவ வீரர்களால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் பற்றி அதிக அதிகாரங்களைக் கொண்ட, சுதந்திரமான அமைப்பின் மூலம் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழர் குடியிருப்பு பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகளை படிப்படியாக குறைப்பதுடன், நெருக்கடி கால சட்டங்களை அறவே நீக்க வேண்டும். இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பொறுப்பு உள்ளது என்றார்.
இலங்கையில் ஒரு இனத்தையே அழிக்க இந்தியாவும் துணை போனது என்றே எதிர்கால வரலாறு கூறும் - சுரேஷ் பிரேமச்சந்திரன் :
மாநாட்டில் பேசிய இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,
இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஆனால், தமிழர்களின் பிரச்னைகள் முடியவில்லை. போருக்குப் பின்தான் பிரச்னைகள் மேலும் அதிகமாகியுள்ளன.
தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்க வேண்டும், சம உரிமை வழங்க வேண்டும் என்ற சிந்தனையோ, அதற்கான அக்கறையோ இலங்கை அரசிடம் அறவே இல்லை.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற வேண்டும் என்பதில் இலங்கையின் ஆளும் கட்சி அதிக முனைப்பு காட்டியது.
ஆனால் தமிழ் மக்கள் ஓரணியில் நின்று, ராஜபட்சேவுக்கு எதிராக வாக்களித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் பெரும் வெற்றி தந்தனர்.
இலங்கை அரசைப் பொருத்தவரை திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடன் செயல்பட்டு வருகிறது. தமிழர் பகுதிகளை முதலில் ராணுவமயப்படுத்துவது. அதன் தொடர்ச்சியாக அந்தப் பகுதி முழுவதையும் புத்தமயமாக்குவது. இறுதியில் சிங்களமயமாக்குவது என்பதே இலங்கை அரசின் திட்டம்.
மொத்தத்தில், தமிழர்களுக்கு சம உரிமை அளிப்பதிலோ, அதிகார பகிர்வு வழங்குவதிலோ, சுமூகமான அரசியல் தீர்வை எட்டுவதிலோ இலங்கை அரசுக்கு துளியும் விருப்பமில்லை.
இந்த சூழலில், எந்த நாடு சொல்வதையும் கேட்க இலங்கை அரசு தயாராக இல்லை. ஆனால், இந்தியா சொல்வதை இலங்கை அரசால் மறுக்க முடியாது. இலங்கையை நிர்பந்தப்படுத்தி, தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கச் செய்ய இந்தியாவால் மட்டுமே முடியும்.
இலங்கைத் தமிழர்கள் இந்தியாவை மட்டுமே நம்பி உள்ளனர். இலங்கை இனப் பிரச்னைக்கான தீர்வு இப்போது இந்திய அரசின் கையில்தான் உள்ளது.
இப்போது கூட இந்தியா அதைச் செய்ய முன்வராவிட்டால், இலங்கையில் ஒரு இனத்தையே அழித்தொழித்த குற்றத்துக்கு இந்தியர்களும் துணை போனார்கள் என்றே எதிர்கால வரலாறு கூறும் என்றார். இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.ஏக்கள் சவுந்தரராஜன், பீம்ராவ் மற்றும் தமிழ்செல்வன், சந்திரா, சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர் பேசினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment