Labels

Friday, July 22, 2011

இன்னும் என்ன வேண்டும் ஐ.நா.வுக்கு?



ருவாண்டா நாட்டின் முன்னாள் பெண் அமைச்சர் ஒருவருக்கு, 25.06.2011 அன்று ஐக்கிய நாடுகள் அவையின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது. அவர் பெயர் பாலின் நீராமசுகுகோ. 1994ஆம் ஆண்டு, இவர் மந்திரியாக இருந்தபோது, ராணுவத்தை ஏவிவிட்டு, சிறுபான்மையினரான துட்சிஸ் இன மக்கள் 8 இலட்சம் பேரைப் படுகொலை செய்து கொன்று குவித்தார். உடந்தையாக இருந்த அவருடைய மகன் ஆர்மன் ­ரோம்முக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், இன்றும் லிபியாவின் அதிபராகத் தொடர்ந்து கொண்டிருக்கும், முவாம்மர் கடாபி மற்றும் அவருடைய மகன் இஸ்மாயில் ஆகியோருக்கு எதிராகக் கைது ஆணை பிறப்பித்திருக்கிறது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம். நேட்டோ படைகளின் தாக்குதல், சர்வதேச நீதிமன்றத்தின் கைது ஆணை என்று கடும்நெருக் கடியில் சிக்கியிருக்கும் கடாபி தப்பிச் செல்ல வழிதேடிப் பதுங்கி வாழ்கிறார்.

ஆனால் கணக்கிலடங்கா கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், இன அழிப்பு வேலைகள் என்று அடுக்கடுக்கான படுபாதகங்களைச் செய்த ராஜபக்சேவோ முன்பைவிட காட்டுத்தனமான வலிமையுடன் சிங்கள அரசை நடத்தி வருகிறார்.

இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப்படுகொலைதான் என்பதற்கு வண்டி வண்டியாய்ச் சான்றுகளை அளித்தாயிற்று.பெரும்பாலான உலக நாடுகள்கூட, சிங்கள அதிபர் ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் எனச் சொல்லத் தொடங்கிவிட்டன. தொடர்ந்தும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகின் எந்த மூலையிலும், ஓர் இனப்படுகொலைக்கு இவ்வளவு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. இன்னும் என்னதான் தேவைப்படுகிறது ஐக்கிய நாடுகள் அவைக்கு?

இலங்கையின் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தலைவி அனோமா திசநாயக, தென்னிலங்கைக்குத் தமிழ்ப் பெண்களைத் தனியாக அனுப்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அந்தளவுக்குப் பெண்களும், குழந்தைகளும் நரவேட்டையாடப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து பிரதமர் கேமரூன் ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்று அறிவிக்க வேண்டும் என்கிறார். அந்நாட்டின் தொலைக்காட்சியான சேனல்‡4 இலங்கையின் இனப்படுகொலையை செய்திப்படமாக்கி, கொலைகாரர்களின் முகத்திரையைக் கிழித்திருக்கிறது. அமெரிக்க நீதிமன்றத்தில் ராஜபக்சே மீது வழக்கு.

இத்தனைக்குப் பிறகும், ஐக்கிய நாடுகள் அவையும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் அமைதி காப்பது ஏன்? காரணம் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் இராஜபக்சே ஆதரவுப் போக்குதான்.

உலகமே ராஜபக்சேவைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற நினைக்கும்போது, இலங்கையுடனான இராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க தலைநகர் தில்லியில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்தியாவின் மேஜர் ஜெனரல் ஐ.பி. சிங்கும், இலங்கையின் இராணுவ ஜெனரல் குணதிலகவும், ஜுன் 30, ஜுலை 1,2 ஆகிய மூன்று நாள்கள் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள். எத்தனை கொடுமனது பாருங்கள்?

ஒவ்வொரு ஆகஸ்ட்டு 15 அன்றும், சமாதானப் புறாக்களை விண்ணில் பறக்கவிடும் காந்தி தேசம், எதிர்வரும் விடுதலை நாளிலாவது அதன் பொருளை உணரத் தலைப்படுமா?

நன்றி : கருஞ்சட்டைத் தமிழர்

No comments:

Post a Comment