Labels

Wednesday, July 27, 2011

இலங்கை தேர்தல்:வடக்கில் த.தே.கூ அமோக வெற்றி



இலங்கையின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், புலிகளின் ஆதரவுப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கை வடக்குப் பகுதியில் இக்கட்சி 17 மாகாண சபைகளை கைப்பற்றியது.

அதிபர் ராஜபக்ஷேவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட பகுதியில் வெறும் 3 மாகாண சபைகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

நெடுந்தீவு, வேலணை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபைகளை ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது. 17 சபைகளின் நிர்வாகம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வசமாகியது.

இலங்கையில் மொத்தம் உள்ள 65 மாகாண சபைகளுக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க சனிக்கிழமை (23.07.2011) தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை (24.07.2011) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

தேசிய அளவில் இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 மாகாண சபைகளை கைப்பற்றி உள்ளது.

தமிழீழம் அமைவதற்கான முன்னோடியே இலங்கைத் தேர்தல் முடிவுகள் - வைகோ கருத்து :

தமிழீழம் அமைவதற்கான முன்னோடியாகவே இலங்கையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் இருப்பதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் சுமார் 22 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவு பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் தாயகம் வடக்கு - கிழக்கு மாநிலங்களில், பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று உள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள 26 மாகாண கவுன்சில்களில், 18 மாகாண கவுன்சில்களைக் கைப்பற்றி உள்ளது; 183 உறுப்பினர்கள் வெற்றி பெற்று உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு, மதிமுக சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இலங்கை நாடாளுமன்றத்துக்கு 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், விடுதலைப்புலிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22 இடங்களில் வெற்றிபெற்றது.

தனித்தமிழ் ஈழமே தீர்வு என்று, 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் தந்தை செல்வா நிறைவேற்றிய தீர்மானத்துக்குப் பின்னர், 1977 ஆம் ஆண்டு, இலங்கை நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில், வடக்கு கிழக்கு மாநிலங்களில், 90 விழுக்காடு தமிழர்கள் அந்தத் தீர்மானத்தை ஆதரித்து வாக்கு அளித்தனர்.

அதேபோலத்தான், இப்போது, உள்ளாட்சித் தேர்தல்களிலும், தமிழ் ஈழ ஆதரவாளர்களையே தேர்ந்து எடுத்து இருக்கின்றார்கள். இது தமிழ் ஈழம் அமைவதற்கான முன்னோடித் தேர்தல் முடிவுகள் என்றே கொள்ள வேண்டும்.

எரித்ரியா, கிழக்குத் தைமூர், தெற்கு சூடான் ஆகிய பகுதிகளில், தனி நாடு அமைப்பதற்காக, அம்மக்களிடையே வாக்குப்பதிவு நடத்தி, புதிய நாடுகளை அமைத்துக் கொடுத்த ஐ.நா. மன்றமும், உலக நாடுகளும், அதேபோல தமிழ் ஈழத்தை அமைப்பதற்காக, தமிழ் ஈழ மக்களிடம் பொது வாக்குப்பதிவை நடத்திட வேண்டும் என்று, அண்மையில் நடைபெற்ற பிரஸ்ஸல்ஸ் மாநாட்டில் நான் தெரிவித்த கருத்தை, உலகம் முழுமையும் உள்ள தமிழ் ஈழ ஆதரவு அமைப்புகள் வரவேற்று உள்ளன.

எனவே, உலக நாடுகளின் பார்வையாளர்கள் முன்னிலையில், தமிழ் ஈழம் அமைப்பதற்கான வாக்குப் பதிவை நடத்திட வேண்டும்.

அந்த வாக்குப்பதியில், உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ள ஈழத்தமிழர்கள், அந்தந்த நாடுகளிலேயே வாக்கு அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும்; இலங்கையில் தமிழ் இனக்கொலை நடத்திய ராஜபக்ஷே மற்றும் அவரது கூட்டாளிகளை உலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதற்கும் நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வதாக
வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

194-வது நாடாக தமிழீழம் - ராமதாஸ் வலியுறுத்தல் :


இலங்கை வடக்குப் பகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலில் தமிழர் கட்சிகளின் கூட்டணி வெற்றியைச் சுட்டிக்காட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உலகின் 194-வது நாடாக தமிழிழத்தை அறிவிக்க ஐ.நா. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் தமிழர் கட்சிகளின் கூட்டணியான தமிழ்தேசியக் கூட்டமைப்பு, தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

வடக்கு மாநிலத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இலங்கை படையினர் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டனர். ஆளும் கட்சியினர் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது. இவற்றையெல்லாம் மீறி வடக்கு மாநிலத்தில் மொத்தமுள்ள 20 உள்ளாட்சி அமைப்புகளில் 18-ஐ தமிழ் தேசியக் கூட்டமைப்பு வென்றுள்ளது.

அதுமட்டுமின்றி, பதிவான வாக்குகளில் 75 விழுக்காட்டுக்கும் அதிக வாக்குகளை அக்கூட்டமைப்பு பெற்றுள்ளது.

இதன் மூலம், ராஜபக்ஷே தலைமையிலான சிங்கள இனவெறி அரசு மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்பதையும், தங்களுக்கென தனித்தமிழ் தலைமை தேவை என்பதையும் ஈழத்தமிழர்கள் உணர்த்தியிருக்கின்றனர்.இதை தனித்தமிழ் ஈழம் அமைவதற்கான கருத்துக்கணிப்பு முடிவாகவே உலக நாடுகள் கருதவேண்டும்.

இலங்கையில் சிங்களர்கள் வாழும் பகுதிகளை பொறுத்தவரை தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ராஜபக்ஷே கட்சி தான் பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இலங்கையில் தமிழர்களும், சிங்களர்களும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பே இல்லை என்பது இன்னொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இதை உணர்ந்து, தமிழர்கள் வாழும் பகுதிகளை பிரித்து, தனித்தமிழ் ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதற்காக ஈழத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் கிழக்கு தைமூர், தெற்கு சூடான் ஆகியவற்றுக்கு அடுத்தப்படியாக உலகின் 194-ஆவது நாடாக தமிழ் ஈழத்தை அறிவிக்க ஐ.நா. நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


அனைத்துலக நாடுகள் தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும்! - தொல்.திருமாவளவன் அறிக்கை!


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் இனப்படுகொலை குற்றவாளிகளான இராஜபக்சே கும்பலுக்கு அஞ்சிநடுங்கி வாழும் நிலையில் தமிழர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர்.


தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நல்வாழ்த்துக்களை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாபெரும் வெற்றியை வழங்கியுள்ளனர்.

சிங்களப் படையினரின் அச்சுறுத்தலையும் மீறி சிங்களவர்களின் தாறுமாறான முறைகேடுகளையும் தாண்டி ஒவ்வொரு தமிழரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து வாக்களித்திருப்பது தமிழினத்தின் நெஞ்சுரத்தையும் கொள்கை உறுதியையும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

வடக்கு கிழக்கு பகுதிகள் முழுவதையும் மெல்ல மெல்ல சிங்களமயப்படுத்தி கொடுங்கோன்மை செழுத்தி வரும் இராஜபக்சே கும்பலுக்கு அறவழியில் அரசியல்ரீதியாக சமட்டி அடிகொடுத்து பாடம் புகட்டியிருக்கிற ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.

சிங்கள இனவெறியர்களுக்கு மட்டுமின்றி சிங்களவர்களை நக்கி பிழைக்கும் தமிழ்க் குழுக்களுக்கும் இத்தீர்ப்பின் மூலம் படிப்பினையை வழங்கியுள்ளனர். அத்துடன் அய்.நா பேரவை மற்றும் அனைத்துலக சமூகத்தின் வழிகளை திறக்கும்படியும் தமிழீழமே தமிழினத்தின் ஒரே வேட்கை என்பதை அவர்களுக்கு உணர்த்தும்படியும் இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

இராஜபக்சே கும்பலை ஆதரிக்க கூடிய இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, கியுபா போன்ற நாடுகளுக்கும் இதன் மூலம் ஈழத்தமிழர்களின் உணர்வுகள் எத்தகையது என்கிற உண்மையை இது உணர்த்தியுள்ளது. இந்நிலையில் அய்.நா பேரவையும் அனைத்துலக நாடுகளும் ஒருங்கிணைந்து தமிழீழ விடுதலை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்திய பேரரசு தமிழினத்திற்கு எதிரான போக்கை கைவிட்டு தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து தமிழீழ விடுதலையை அங்கீகரித்து அனைத்துலக நாடுகளின் ஆதரவை திரட்டி தமிழீழத்தை வென்றெடுப்பதற்கு முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் இச்சூழலில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.


இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

சிங்கள அரசால் விடிவு ஏற்படப் போவதில்லை; இலங்கையிடம் கெஞ்சுதலோ கொஞ்சுதலோ கூடாது! - கி.வீரமணி :

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள, 30 கல் தொலைவில் உள்ள அண்டைய நாடான இலங்கையில் தற்போது உள்ள சிங்கள ராஜபக்சே அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரை நடத்துகிறோம் என்றுகூறி, அந்த மண்ணின் பூர்வீக மைந்தர்களான தமிழர்களின் வாழ்வுரிமையையே பறித்து, அவர்களில் பல லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர் சிவிலியன்களைக் கொன்றும், அவர்களை முள் வேலிக்குள் அடைத்தும், அவர்களது நிரந்தரக் குடியிருப்புகளைப் பறித்து, சிங்களக் குடியேற்றத்தை தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு நடத்தியும் வரும் கொடுமைக்கு இன்னமும் ஒரு முற்றுப்புள்ளி அங்கே இல்லை!


இந்திய அரசின் பொருளாதார உதவிகள், வீடு கட்டும் திட்டம், அரசியல் தீர்வு விரைவில் காண்போம் என்று கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக, அங்குள்ள ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரத்திற்குக்கூட வழிவகை செய்யாதது இவையெல்லாம் இன்று உலகத்தார் கண்களை அகலத் திறந்து பார்த்து, இந்த அவலத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற நிலையில், அய்.நா. மாமன்றம் ராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியாக்கிட நடவடிக்கை வேண்டும் என்று அறிக்கை கொடுத்து, அதன்மீது அமெரிக்கா போன்ற நாடுகள் இலங்கைக்கு செய்யவிருந்த உதவிகளைக்கூட நிறுத்தி வைத்துள்ளனர்!



இங்கிலாந்து நாட்டின் சேனல் 4 என்ற ஒளி வழித் தொலைக்காட்சியில் இலங்கையில் நடந்த பல லட்சக்கணக்கான அப்பாவி தாய்மார்கள், குழந்தைகள் முதலியவர்கள் உள்பட பலரைக் கொன்று குவித்த காட்சிகள் பல நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களை பார்வையாளர்களான பன்னாட்டு மக்களை குமுறிக் குமுறிக் ‘கோ’வென்று கண்ணீர் விட்டு அழச் செய்துள்ளது என்ற செய்தி மனிதாபிமானம் இன்னும் உலகத்தில் செத்துப் போய் விடவில்லை என்பதை நிரூபித்துக் கொண்டுள்ளது.


இலங்கையின் முன்னாள் அதிபரான திருமதி சந்திரிகா குமாரதுங்கே, ஒரு நிகழ்ச்சியில் நேற்று முன்னாள் பேசுகையில், அந்த தொலைக்காட்சி காட்டிய கொலைக் களக்காட்சி ஈழத் தமிழர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்ட கொடூரக்காட்சி குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.


அந்நிகழ்ச்சியில் தழுதழுத்த குரலில், சிறிது நேரம் பேசாமலே அமைதியாக இருந்த பின்னர் தொடர்ந்த உரையில் அவர், இந்த வீடியோ காட்சியை தனது 28 வயது மகன் பார்த்ததாகவும், தான் சிங்களவன் என்றுகூற வெட்கப்படுவதாகவும் விம்மி விம்மி அழுதபடி கூறியதாகத் தெரிவித்துள்ளார்!


இதே கருத்தை தனது மகளும் வெளியிட்டதாகக் கூறி, இலங்கையில் தமிழர்களின் உரிமையை அவர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் அங்கீகரித்து, அவர்களையும் கூட்டாட்சியாக நடத்திட ஒரு புதிய தீர்வு காணப்பட வேண்டும்; விடுதலைப்புலிகளை அழித்து விட்டோம் என்று கூறி அத்தோடு பிரச்சினை தீர்ந்தது. சிறுபான்மைத் தமிழர்களை மதிக்காமல், மிதித்தால் ஏற்படும் விளைவுகள்பற்றி சிந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். சிங்கள ஹிட்லர் ராஜபக்சே காதுகளில் இது செவிடன் காதில் ஊதிய சங்காகவே முடியும்.


இலங்கை அரசின்மீது பொருளாதாரத் தடையை விதிக்க இதுவரை அமெரிக்கா போன்ற நாடுகள் முன்வராவிட்டாலும், அது தரவிருந்த பொருளாதார உதவிகளை நிறுத்தி வைக்க, அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வற்புறுத்தியதை ஏற்றுச் செயல்பட்டிருக்கிறது!


7 கோடி தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளை மட்டுமல்ல; உலக முழுவதும் உள்ள தமிழர்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள் உட்பட இந்திய அரசின் தெளிவான, திட்டவட்டமான செயல்பாடுகளில் இனியாவது மனிதாபிமானம் மேலோங்கும் உறுதிப்பாடு வருமா என்று எதிர்பார்க்கின்றனர்!


சிங்கள ராஜபக்சே ஆட்சிக்கு இந்தியா இதுவரை கொடுத்த உதவிகள் இராணுவ உதவிகளில் தொடங்கி பல்வேறு உதவிகள்தான் இவ்வளவு பெரிய கொலைக்களக்காட்சி சிங்கள அரசால் தங்கு தடையின்றி நடப்பதற்கு மறைமுகமாக உதவியதாகவே அமைந்துவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.


நடந்தவை எப்படியோ போனாலும் இனி நடப்பவைகளாவது நல்லவைகளாக இந்திய அரசின் நிலைப்பாட்டைப் பொறுத்தவரை அமைய வேண்டாமா? அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் ஓடும் மனிதநேயப் பிரவாக வெள்ளம் சிங்கள சந்திரிகாக்களிடம் ஏற்பட்டுள்ள நெஞ்சின் ஈரம், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு அதுவும் தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளால் பெற்ற ஆதரவு காரணமாக அரியணையில் அமர்ந்து ஆட்சி நடத்தும் ஓர் (ரு.ஞ.ஹ) ஆட்சிக்கு வர வேண்டாமா? இன்னும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் ஆட்சியாக இருக்கலாமா? நியாயந்தானா?


ஒவ்வொரு தமிழனின் உணர்வு மட்டும் அல்ல இது. மனிதாபிமானம் பொங்கும் உலக மக்களின் அவர்கள் எந்த இனத்தவராக இருந்தபோதிலும், எந்நாட்டவராக இருந்தபோதிலும் எழுப்பும் கேள்விகள் இவைகள்!


இதனை அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் தலைவர் திருமதி சோனியாகாந்தியும், பிரதமரும், அவரது காங்கிரளி கட்சியும் யோசிக்க தயங்கக்கூடாது!


நேற்று சோனியாகாந்தி அவர்கள் பக்கத்து பங்களாதேஷ் நாட்டிற்குச் சென்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கென அந்நாடு தந்த முதல் விருதினை வங்கதேசம் உருவாவதற்கு அவர்கள் உதவியதற்கான விருது பெற்று நன்றிகூறி திரும்பியிருக்கிறார்! வங்கதேசம் பாகிளிதானிலிருந்து பிரிவதற்கு இந்தியாவும், அந்நாள் பிரதமரும், மக்களும் உதவியதற்கான காரணங்களைவிட, பல மடங்கு நியாயமான, அவசியமான, அவசரமான காரணங்கள், அரசியல் ரீதியாகவும், இன ரீதியாகவும், மனிதநேய அடிப்படையிலும் தமிழர்களுக்குத் தனி ஈழம் நிரந்தர வாழ்வுரிமையை அவர்கள் நிம்மதியாக அனுபவிக்க ஒரே தீர்வாக அமைவதற்கு ஆயிரமாயிரம் உண்டு.


எனவே இந்திய அரசு, இனியும் இலங்கை அரசுடன் கொஞ்சுதலோ, கெஞ்சுதலோ செய்யாமல், உத்தரவு போட வேண்டும். அவர்கள் சீனாவுடன், பாகிளிதானுடன் போய்ச் சேர்ந்து கொள்வார்கள் என்ற பூச்சாண்டிக்கு இணங்கி ‘‘பாம்புக்குத் தலை; மீனுக்கு வால்’’ என்பதுபோல நடந்து கொள்ளக்கூடாது.

அந்நாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி விடுதலைப்புலி போன்ற அமைப்புகளுக்கு இடம் தந்து ஆயுதப் பயிற்சி தந்தார் என்ற தொலைநோக்கிற்கான அரசியல் காரணங்களை ஆராய்ந்தால், இந்திய பாதுகாப்பும் அதன் முக்கிய அம்சம் என்பது புரியும்.


அரசியல் தீர்வு என்ற பெயரில் இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்களை மீண்டும் முள்வேலிக்குள் வசித்திடும்படிச் செய்யக் கூடாது.


தமிழ்நாட்டில், ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகள் என்ற பேதங்கள் இப்பிரச்சினையில் இல்லை என்ற நிலைப்பாடு உருவாக, இங்குள்ள நமது அரசியல் கட்சிகள் பொது எதிரி யார் என்று மட்டுமே சிந்தித்து, தமிழர்கள் வாழ்வுரிமையை மய்யப்படுத்திப் பாடுபட முன்வர வேண்டுமே தவிர குற்றப் பத்திரிகைகளைத் தயாரிக்கும் வீண் வேலையில் ஈடுபட்டு, காரியத்திலிருந்து நழுவி விடக் கூடாது என்பதே நமது அன்பான வேண்டுகோள் அனைவருக்கும்!


தனி ஈழத்தின் அடிநாதம் அங்கே போகாது என்பதைத்தான் அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழர்கள் வெளிப்படுத்திய விவேக முடிவுகளும், வெற்றிகளும் என்ற சுவர் எழுத்துகளையும் பார்த்துப் பாடம் அனைவரும் படிக்க வேண்டும். இந்திய அரசு ஆழ்ந்து சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.



இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment