Tuesday, April 26, 2011
இலங்கை அரசை காப்பாற்றினால் உலக அரங்கில் இந்தியாவுக்கு தீரா பழி ஏற்பட்டுவிடும்: ராமதாஸ்
ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் இருந்து இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்று இலங்கை அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மையாக இருந்தால், உலக அரங்கில் இந்தியாவுக்கு தீரா பழி ஏற்பட்டுவிடும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை போரில் சிங்களப்படையினர் நிகழ்த்திய போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்திய ஐ.நா.குழுவின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் ஈரமில்லாதவர்களின் இதயங்களையும் பதைபதைக்கச் செய்யும் அளவுக்கு உள்ளன.
இலங்கை போரில் 7,721 பேர் கொல்லப்பட்டதாகவும், 18,479 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ஐ.நா. அமைப்பு கடந்த 2009ஆம் ஆண்டு கூறியிருந்த நிலையில், இறுதிக்கட்டப் போரில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று இப்போது வெளியிடப்பட்ட ஐ.நா. விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வலய பகுதிகளுக்குள் மக்களை இடம்பெயரச் செய்து குண்டுவீசிக் கொன்றது. மருத்துவமனைகள் மீது குண்டுவீசியது, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தடுத்தது, தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது என இலங்கை படைகள் அரங்கேற்றிய அத்தனை போர்க்குற்றங்களையும் ஐ.நா. அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
இலங்கை படைகளின் இந்த போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரிக்க வேண்டும். இலங்கை பிரச்சனைக்கு காரணமான அம்சங்களுக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா. குழு வலியுறுத்தியுள்ளது. ஆனால் இவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூனோ, இலங்கை அரசும், ஐ.நா. அமைப்புகளில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டால் மட்டுமே, இலங்கை அரசு மீது விசாரணை நடத்தப்படும் என்று கூறியிருக்கிறார்.
பான் கி மூனின் இந்த நிலைப்பாடு போகாத ஊருக்கு வழிகாட்டுவதைப்போல அமைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களையும், அவர்களின் உரிமைகளையும் பாதுகாப்பதற்காகத்தான் ஐ.நா. மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டது உறுதியாக தெரிந்த பிறகும் அதுகுறித்து விசாரணை நடத்த தயங்குவது ஐ.நா. மன்றம் அமைக்கப்பட்டன் நோக்கத்தையே சிதைத்துவிடும்.
சூடான், தர்பர், ருவாண்டா, யுகோஸ்லாவியா போன்ற நாடுகளில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளுக்காக அந்த நாடுகளின் தலைவர்கள் பன்னாட்டு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டதைப்போலவே, தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவும் குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
இலங்கை இனச்சிக்கலுக்கு காரணமாக அமைந்துள்ள பிரச்சனைகளை தீர்க்க இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக மறையான விசாரணை நடத்தப்படவில்லை. இலங்கை அரசின் செயல்பாடுகள் எதுவுமே நம்பகத்தகுந்ததாக இல்லை என்றும் ஐ.நா. குழு கூறியுள்ளது. அவர்களுக்கு சம உரிமை வழங்கும் என்றோ எதிர்பார்த்து சூரியன் மேற்கே உதிக்கும் என்று எண்ணி காத்திருப்பதைப் போன்றதாகும். இனியும் இதற்காக காத்திருக்காமல் இலங்கை இனச்சிக்கலுக்கு ஓரே தீர்வு தனித் தமிழ் ஈழம் அமைத்துத் தருவதுதான் என்பதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை ஐ.நா.வும் உலக நாடுகளும் தொடங்க வேண்டும்.
பாகிஸ்தானுடன் இணைந்திருந்த கிழக்கு பாகிஸ்தானில் உள்ள மக்கள் கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாத அன்னை இந்திரா காந்தி எப்படி கிழக்குப் பாகிஸ்தானை பிரித்து வங்கதேசம் என்ற தனி நாட்டை ஏற்படுத்தித் தந்தாரோ, அதேபோல், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை பிரித்தெடுத்து தனித் தமிழ் ஈழம் அமைப்பதற்கான முன்முயற்சிகளை இந்தியா தொடங்க வேண்டும்.
ஐ.நா. அறிக்கையால் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் இருந்து இந்தியா தங்களை காப்பாற்றிவிடும் என்று இலங்கை அதிகாரிகள் கூறியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது உண்மையாக இருந்தால், உலக அரங்கில் இந்தியாவுக்கு தீரா பழி ஏற்பட்டுவிடும். தமிழர்களின் நலனிலும், இலங்கையை தண்டிப்பதிலும் இந்தியா அக்கறை கொண்டுள்ளது என்பதை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வகையில் இலங்கையுடனான தூதரக உறவுகளையும், வணிக உறவுகளையும் இந்தியா முறித்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
போர்க்குற்றம் குறித்து சர்வதேச குழு விசாரிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்: இலங்கைக்கு ஐ.நா. வலியுறுத்தல்
உள்நாட்டில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குழு விசாரிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று இலங்கை அரசை ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான தாக்குதலில் இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டுள்ளதை ஐ.நா. குழு ஆய்வு செய்து கண்டறிந்துள்ளது.
இதுதொடர்பாக இக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டனிடல் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி மூன்,
இலங்கை அரசு செய்துள்ள போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும். பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்துள்ளதன் மூலம், சர்வதேச மனித உரிமை சட்டத்தை இலங்கை ராணுவம் மீறியுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும். போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேசக் குழு விசாரிக்க இலங்கை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், இலங்கையில் உள்ள ஐ.நா. ஊழியர்களின் பாதுகாப்புக்கு அந்நாட்டு அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றார்.
இறுதிப்போர் குறித்து இலங்கை அரசு கூறிவந்த தகவல்கள் முற்றிலும் பொய் - ஐ.நா. அறிக்கை :
இலங்கை உள்நாட்டு போரில் அந்நாட்டு ராஜபக்சே அரசு நடத்திய இன படுகொலை குறித்து ஐ.நா. மூவர் குழு விசாரணை நடத்தியது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உத்தரவின்படி நடந்த முடிந்த இந்த விசாரணை அறிக்கை ஐ.நா. சபையிடம் கடந்த சில தினங்களுக்கு முன் சமர்பிக்கப்பட்டது.
பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது, மருத்துவமனைகள், முகாம்கள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை குண்டு வீசித் தகர்த்தது ஆகியவை உண்மைதான் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு செய்தி வெளியானது.
இந்நிலையில் இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
அதில், போரின் போது தமிழர்களுக்கு மனிதாபிமான சேவைகளை இலங்கை அரசு திட்டமிட்டு தடுத்தது. இலங்கை போரின்போது 40,000 தமிழர்களை இலங்கை அரசு குண்டு வீசி அழித்தது. போரன் போது சர்சதேச மனித உரிமை சட்டங்களை இலங்கை அரசு கடுமையாக மீறி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிப்போர் குறித்து இலங்கை அரசு இதுவரை கூறிவந்த தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் கூறியுள்ளது.
பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் இலங்கை ராணுவம் குண்டுகளை வீசியது - ஐ.நா. அறிக்கை :
இலங்கை உள்நாட்டு போரில் அந்நாட்டு ராஜபக்சே அரசு நடத்திய இன படுகொலை குறித்து ஐ.நா. மூவர் குழு விசாரணை நடத்தியது. ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் உத்தரவின்படி நடந்த முடிந்த இந்த விசாரணை அறிக்கை ஐ.நா. சபையிடம் கடந்த சில தினங்களுக்கு முன் சமர்பிக்கப்பட்டது.
பாதுகாப்பு வளையத்திற்குள் வரவழைக்கப்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இலங்கை ராணுவம் படுகொலை செய்தது, மருத்துவமனைகள், முகாம்கள், உணவு பொருள் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை குண்டு வீசித் தகர்த்தது ஆகியவை உண்மைதான் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு செய்தி வெளியானது.
இந்நிலையில் இலங்கை அரசின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
இறுதிக்கட்ட போர் நடந்த நேரத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழர்கள் ஒரே இடத்தில் முடக்கப்பட்டனர். அவர்கள் மனித கேடயமாகவும் பயன்படுத்தப்பட்டனர். அதில் இருந்து தப்பி ஓட முயன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பொதுமக்கள் தங்கி இருந்த இடங்களில் ராணுவம் குண்டுகளை வீசியது. மருத்துவமனை மற்றும் மனிதாபிமான முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் குண்டுவீசி தாக்கினார்கள். இதன் மூலம் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.
போரில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட குண்டுகளையும் வீசினார்கள். இரு தரப்பினரும் பொதுமக்கள் அருகில் இருந்தபடியே ஆயுதங்களை பயன்படுத்தினார்கள். போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவி செய்யவில்லை. அடிப்படை உரிமைகள் மீறப்பட்டன. போர் பகுதிக்குள் ஊடக அடக்குமுறை கையாளப்பட்டது. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர்.
அங்கு நடந்த படுகொலைகள் போர் குற்றமாகும். எனவே இலங்கை அரசு மீது போர் குற்ற விசாரணை நடத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அய். நா. சபை அறிக்கை முழு விவரம்
போட்டி போட்டது போதும் ஈழப் பிரச்சனையில் ஒன்றிணைந்து செயல்படுவோம்: தங்கர்பச்சான் வேண்டுகோள்
ஈழத்தமிழர்கள் பிரச்சனையில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இயக்குனர் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
இது குறித்து திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சாதியாகவும், மதமாகவும், பல அரசியல் கட்சிகளாகவும் பிரிந்து கிடந்து ஒற்றுமையை இழந்ததால் ஒவ்வொரு நாளும் தமிழன் இழந்து கொண்டிருப்பதும், இழந்ததும், இழக்க போவதும் ஏராளம். இந்தியாவில் மட்டுமே 7 கோடி தமிழர்கள் இருந்தும் நாம் தேர்ந்தெடுத்த தமிழர்களின் அரசாலும், இந்திய அரசாலும் இலங்கை சிங்கள அரசால் அழித்து ஒழிக்கப்பட்ட நம் தமிழினத்தை காப்பாற்ற முடியாமல் போய் விட்டது.
உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து, வாழ்ந்த மண்ணை இழந்து, பிய்த்து எரியப்பட்ட தலையணை பஞ்சு மாதிரி உலகமெங்கும் அகதிகளாய் சிதறி போன நம் சொந்தங்களுக்கு உதவ முடியாமல் இருந்து விட்டோம்.
வெற்றிக்களிப்பில் எக்காளமிட்ட கொடுங்கோலன் ராஜபக்சே உலகத்தின் முன்னே குற்றவாளியாக நிறுத்தி வைக்க ஐ.நா. மன்றம் அதன் விசாரணையை தொடங்க இருக்கிறது. எம் மக்களை அழித்து ஒழிக்க தமிழக அரசியல் கட்சிகள் நேரத்திற்கேற்ப வேடமிட்டு நடத்தி முடித்தது எல்லாம் போதும். தங்களின் ஆதாயத்திற்காக ஈழத்தமிழர் அரசியல் பேசி பிழைப்பு நடத்தியது எல்லாம் போதும்.
அரசியல் ஆதாயத்தை மறந்து தமிழர்களுக்காக ஓரணியில் நின்று போராட்டத்தை நடத்தி எதனையும் சாதிக்க விரும்பாதவர்கள் நாம். நீ பெரிய ஆள் இல்லை. நான் தான் பெரிய ஆள் என்பதை காண்பிப்பதற்காகவும், எங்களுக்கும் ஆள் எண்ணிக்கை இருக்கிறது என்பதற்காக தனித்தனியாக குரல் கொடுக்கும் போராட்டத்தையும் நடத்தி கணக்கு காட்டியதெல்லாம் போதும்.
தமிழ் மக்களுக்கு பாதுகாவலனாகிய அரசியல் கட்சிகளும், இயக்கங்களும், தமிழ் இன உணர்வாளர்களும் உடனே செய்ய வேண்டியது இவைகள் தான். சொந்த அரசியல் லாபங்களுக்காக அறிக்கை என்ற பெயரில் மக்களை மேலும் திசை திருப்பி இன உணர்வை சிதைக்காதீர்கள். தங்களின் பலத்தை காண்பிப்பதற்காக நாளுக்கொரு கட்சியாக, நாளுக்கொரு இயக்கமாக போராட்டங்களை நடத்தியும், அறிக்கைகளை வெளியிட்டும் காலம் தாழ்த்தாதீர்கள். இப்படிப்பட்ட போராட்டங்களாலும், அறிக்கைகளாலும் எந்த பயனும் இல்லை.
இதன்பிறகு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு நாம் குரலை ஐ.நா. மன்றத்திடமும், இலங்கை அரசுக்கும் உயர்த்தி, குற்றத்திற்கான தண்டனைகளையும், ஈழ மக்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தர வேண்டும். தமிழர்கள் இதை தான் எதிர்பார்க்கிறார்கள். இதனை செய்யாமல் போனால் ஈழத்தமிழர்களின் எதிரி ராஜபக்சே அல்ல. சுய லாபத்திற்காக ஈழத்தமிழர் அரசியல் பேசி, அரசியல் நடத்தும் கட்சிகளும், இயக்கங்களும் தான் என்பதையும் மக்கள் புரிந்து கொள்வார்கள்.
தமிழக மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்பிய 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டி ஐ.நா. மன்றத்தை பாராட்டி, ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்று தர கோருங்கள். அத்துடன் இலங்கை அரசுடன் இந்தியா கொண்டுள்ள பொருளாதார, ராணுவ உறவினை முற்றிலுமாக விலக்கிக்கொள்ள குரல் கொடுங்கள். இந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் நழுவவிட்டால் உங்களை அனுப்பி வைத்த தமிழக மக்களுக்கு நீங்கள் செய்யும் மிகப்பெரும் துரோகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
அதை போல் அடுத்த மாதத்தில் புதியதாக அமைய இருக்கும் புதிய தமிழக அரசு முதல் சட்டமன்ற கூட்டத்திலே இது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றி இந்திய அரசுக்கு அனுப்புங்கள்.
இவ்வாறு தனது அறிக்கையில் தங்கர்பச்சான் கூறியுள்ளார்.
ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்று தர அனைவரும் போராட முன் வர வேண்டும்: வைகோ
போர் குற்றம் புரிந்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்று தர கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரும் போராட முன் வர வேண்டும் என்று வைகோ கூறினார்.
ஈழத்தமிழர்களை படுகொலை செய்து போர் குற்றம் புரிந்துள்ள சிங்கள அரசை கண்டித்தும், ராஜபக்சேவை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கூண்டில் நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 25.04.2011 அன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், ஆசிரியர் நடராஜன் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
ஐ.நா.சபையின் அறிவிப்பால் உலகத்தின் கண்கள் ஒளிப்பெற்றது போல் இருக்கிறது. தமிழகத்தின் உறக்கம் கலைகிறது. ஐ.நா.சபை மூலம் சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்சேவை நிறுத்தி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்.
ஈழத்தமிழர்களுக்காக எத்தனையோ பேர் தீக்குளித்து மரணத்தை தழுவியிருக்கிறார்கள். நாங்கள் தீக்குளிப்பை ஊக்குவிப்பவர்கள் அல்ல. ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். யாரும் தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொள்ளாதீர்கள். நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்களுக்காக போராட வாருங்கள். மக்கள் கூட்டத்தை திரட்டுங்கள்.
எங்களை பொறுத்தவரையில் எந்த அணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் விடுதலைப்புலிகளை ஆதரித்து வருகிறோம். இனியும் ஆதரிப்போம். விடுதலைப்புலிகளை பற்றி பேச எந்த அரசியல் கட்சிக்கும் அருகதை கிடையாது. புலியை கூண்டில் அடைத்தாலும் உறுமத்தான் செய்யும்.
ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்காதவர்களை, விடுதலைப்புலிகள் பற்றி பேசாதவர்களை மக்கள் தூக்கி எறிவார்கள்.
சர்வதேச நீதிமன்றத்தில் கொடூரன் ராஜபக்சேவுக்கு தண்டனை பெற்று தர தமிழக மக்கள் ஒன்று திரள வேண்டும். இளைஞர்கள் போராட முன் வர வேண்டும். எங்கள் கட்சியில் சேர நான் அழைக்கவில்லை. தமிழர்களுக்காக, தமிழர்களை கொன்று குவித்த கொடூரனுக்கு தண்டனை பெற்று தர கட்சி பாகுபாடின்றி போராட முன் வாருங்கள் என்றுதான் அழைக்கிறேன் என்றார்.
ராஜபட்சே தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட ஒன்று - பழ.நெடுமாறன் :
ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் பேசுகையில்,
உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் இடைவிடாத போராட்டத்துக்கு இப்போது ஒரு உருவம் கிடைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையைக் கூட இலங்கைக்குள் அனுமதிக்காத தைரியம் ராஜபட்சேவுக்கு உண்டு.
இலங்கைக்குள் ஐக்கிய நாடுகள் சபையை அனுமதிக்காத ராஜபட்சே, இப்போது ஐக்கிய நாடுகளுக்கு எதிராக மே 1 ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சிங்களவர்களை தூண்டி வருகிறார். இவர் லண்டன் சென்ற போது அவரை போர்க் குற்றவாளி எனக்கூறி அங்குள்ள அமைச்சர்கள் அவரைச் சந்திக்க மறுத்ததுடன் அங்கிருந்து திருப்பி அனுப்பினர். இதைத் தொடர்ந்து மற்ற நாடுகளும் இதை பின்பற்றின.
போர்க் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகம் ஏற்றுக் கொண்ட ஒன்று. ஐக்கிய நாடுகள் சபை இப்போது எவ்வாறு முடிவெடுக்கப் போகிறது என்பதுதான் முக்கியம். ராஜபட்சே மீது விசாரணை இல்லாமல் தடுக்க இந்தியா உதவி செய்யும். இதை முறியடிக்க தமிழகத்தில் 6.5 கோடி தமிழர்களும் ஒன்று சேர்ந்து ராஜபட்சே போர்க் குற்றவாளி என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்றார்.
ஈழத்தமிழர்களுக்கான போராட்டம் தொடரும் - தா.பா. :
ஆர்ப்பாட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன்,
நாம் நடத்தும் போராட்டம் இன்றுடன் முடிந்துவிடுவதில்லை. இந்தப் போராட்டம் தொடரும். இலங்கைத் தமிழர்களுக்காக நாம் பல்வேறு கட்டங்களாக போராட்டம் நடத்தி, இப்போது உலக நாடுகள் பார்வைக்குச் சென்றுள்ளது. இதனால் ஐக்கியநாடுகள் சபையும் ராஜபட்சவை போர்க் குற்றவாளி என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் போர் நடந்தபோது சர்வதேச பத்திரிக்கையாளர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் கேமராவுக்கு அனுமதி அளிக்கவில்லை. செஞ்சிலுவைச் சங்கத்தைக் கூட அங்கு அனுமதிக்கவில்லை. ஆனால் அதையும் மீறி இலங்கை ராணுவத்தால், இலங்கைத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இப்போது சாட்சியமாக வந்துள்ளது.
இதுவரை நாம் போராடிய போராட்டத்துக்கு மேலும் வலு சேர்க்க இந்தியா முழுவதும் அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி போராட நாம் தயாராக வேண்டும். அப்போதுதான் ராஜபட்சவுக்கு தண்டனை பெற்றுத் தரமுடியும் என்றார்.
ராஜபக்சேவுக்கு தமிழர்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது போல செய்து காட்டி ஆர்ப்பாட்டம் :
நூதன முறையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சே போல் வேடமணிந்த ஒருவருக்கு கை விலங்கு அணிவிக்கப்பட்டு, மேடையில் அமைக்கப்பட்டிருந்த சிறை கூண்டில் அடைப்பட்டு இருப்பது போல் காட்சி அமைப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. அவருக்கு தமிழர்கள் தூக்கு தண்டனை நிறைவேற்றுவது போலவும் செய்து காட்டப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக ராஜபக்சேயின் உருவ பொம்மைகளை தமிழ் ஆர்வலர்களும், தமிழ் உணர்வாளர்களும் எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் ராஜபக்சேயின் உருவபடத்தின் மீது செருப்புகளை கொண்டு அடித்தனர்.
Monday, April 25, 2011
தனி ஈழம் தான் தீர்வு: நாஞ்சில் சம்பத்
இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் தான் தீர்வு என, நாஞ்சில் சம்பத் பேசினார்.
பாளை மார்க்கெட் திடலில் தாமிரபரணி பண்பாட்டு அரங்கம் சார்பாக இலங்கை தமிழர் படுகொலை குறித்த ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை உடனே வெளியிட வலியுறுத்தியும், ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்,
அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஹிலாரி கிளிண்டன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ஐ.நா. அமைப்பு இலங்கை பிரச்சினை குறித்து ஆராய 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு விசாரணை நடத்தி ஐ.நா. சபை தலைவர் பான்கிமூனிடம் 196 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த அறிக்கை இப்போது மெல்ல மெல்ல கசிந்து வெளி வருகிறது. அதன்படி இலங்கை தமிழர்கள் தங்கியிருந்த இடம், உணவு கூடங்கள், ஆஸ்பத்திரிகள், செஞ்சிலுவை சங்கத்தினர்கள் மீது இலங்கை ராணுவம் குண்டு வீசி தாக்கியது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. அனுப்பிய மருந்து கப்பல் மீதும் குண்டு வீசியது அம்பலமாகி உள்ளது.
ஐ.நா.சபை இந்த அறிக்கையை உடனடியாக முழுமையாக வெளியிட வேண்டும். இதன் அடிப்படையில் இலங்கை அதிபர் ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப் பட வேண்டும்.
இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு ஆதரவாக இலங்கை ஒரு போதும் செயல்பட்டதில்லை. காங்கிரஸ் தலைவர்களான காந்தி, நேரு, ராஜீவ்காந்தி போன்றோர் இலங்கை சென்ற போது கூட அந்நாட்டு அரசு அவர்களை பேச விடாமல் அவமதித்து அனுப்பி உள்ளது.
ஸ்பெயின், சீனாவில் மக்கள் பாதிக்கப்பட்ட போது இந்தியா மருந்து கப்பலை அனுப்பி உதவிகள் செய்தது. ஆனால் இலங்கை தமிழர்களுக்கு உதவ இந்தியா முன்வரவில்லை. ராஜீவ்காந்தி படுகொலையை காரணம் காட்டி, ஒரு நாட்டின் சுதந்திர போராட்டத்தை ஒடுக்கி, விடுதலைக்கு தடையாக இருந்து விட்டனர். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் மதத்திற்காகவும், பாகிஸ்தானில் இருந்து பங்களாதேஷ் மொழிக் காகவும் பிரிந்தது. அதுபோல இலங்கையில் இனத்திற்காக தனி ஈழம் கேட்டு போராட்டம் நடக்கிறது.
இந்திய விடுதலையும் ஆயுத புரட்சி மூலம் ஏற்பட்டது தான். இதனால் இலங்கை போராட்டத்தை தவறு என்று கூறக்கூடாது. இலங்கை பிரச்சினைக்கு தனி ஈழம் தான் தீர்வு என்றார்.
Sunday, April 24, 2011
இலங்கை அரசின் கொடுங்கரங்களை வலிமைப்படுத்தத்தான் உதவின.. :கி.வீரமணி
"ராஜபக்சேயை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தி 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' என்று கி.வீரமணி அறிவித்துள்ளார்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில்,
’’ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமைக்காக நடைபெற்ற உரிமைப் போரினை தனது ராணுவத்தாலும், வெளி ஆதிபத்திய சக்திகளின் ராணுவம் மற்றும் பல்வேறு நிதி ஆதாரம் பெற்று தமிழின அழிப்பு வேலையை சிங்கள ராஜபக்சே அரசு நடத்தியதை ஐ.நா. மன்றத்தால் இலங்கையின் ராஜபக்சே அரசு, போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மீது ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்திடச் செய்து, அதன்மீது நடவடிக்கை எடுக்கவும் உடனடியாக இந்திய அரசு முன்வர வேண்டும்.
அத்துடன் அவ்வரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முயன்ற மத்திய அரசு தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமையை மீண்டும் உறுதிப்படுத்த - உரிமைகளைப் பெற்றுத் தர முயலுவதுதான் அதன் செயலுக்கு ஒரே நடவடிக்கையாகும்.
தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்களக் குடியேற்றங்களை சிங்கள அரசு திட்டமிட்டே செய்யும் கொடுமை நடந்தேறி வருகிறது. ஈழத் தமிழர்களின் கண்ணீரும், செந்நீரும் வழிந்தோடும் நிலைக்கு முற்றுப்புள்ளி இல்லை.
நமது அரசுகள் கொடுத்த நிதி உதவிகள் இலங்கை அரசின் கொடுங்கரங்களை வலிமைப்படுத்தத்தான் உதவின போலும்.
மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவில்லை எனில் இனி காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணை அறவே மறந்திட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும். மீண்டும் `பழைய கள்; புது மொந்தை', பாணி அரசியல் நடத்தாமல், புதிய அணுகுமுறை மிகுந்த மனிதாபிமானத்துடன் கடைப்பிடிக்க முன்வரவேண்டும்.
இதனை வலியுறுத்தி வரும் 28-ம் தேதி தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகரம் அல்லது முக்கிய நகரங்களில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். கட்சிக் கண்ணோட்டம் இன்றி அனைத்து தமிழ் உறவுகளும் இதில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்’’ என்று கூறியுள்ளார்.
ராஜபக்சேவை கூண்டில் ஏற்ற வேண்டும் - ராமதாஸ் :
ராஜபக்சேவை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத்தர வேண்டும். இதற்கு முதல் குரல் இந்திய அரசு எழுப்ப வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில்,
’’ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் உலகமே அறிந்தவைதான் என்றபோதிலும், இப்போது ஐ.நா. அமைப்பின் மூலமாக அதிகாரப்பூர்வமாக அம்பலத்திற்கு வந்திருக்கின்றன.
இது பற்றி விசாரணை நடத்திய ஐ.நா. குழு, இலங்கைப் போரின்போது பாதுகாப்பு வலயம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழ் மக்களை இடம் பெயரச் செய்து, செயற்கைக்கோள் உதவியுடன் அவர்களை இலங்கைப் படையினர் குறிவைத்து தாக்குதல் நடத்தி கொன்றதை உறுதி செய்திருக்கிறது. தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, அரசை எதிர்ப்போர் கடத்திச் செல்லப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டது ஆகியவற்றுக்கும் ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு கூறியுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இந்தக் கொடுமைகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த சர்வதேச விசாரணை ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு அக்குழு பரிந்துரைத்துள்ளது.
ஐ.நா. குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து ராஜபக்சே மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க மனிதஉரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
உலகின் செல்வாக்குள்ளோர் பட்டியலில் ராஜபக்சேவை 4-வது இடத்தில் தேர்வு செய்திருந்த டைம்ஸ் இதழ் அவரை அப்பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
ஐ.நா. குழுவின் அறிக்கை 25-ம் தேதி முழு அளவில் வெளியிடப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் உறுதி அளித்துள்ளார். அத்துடன் அவர் நின்றுவிடக்கூடாது. ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு இலங்கைப் போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுத்தரவேண்டும். ஐ.நா. குழுவின் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இதற்காக எழும் முதல் குரல் இந்தியாவினுடையதாக இருக்க வேண்டும். ஏழு கோடி இந்தியத் தமிழர்களின் தொப்புள்க் கொடி உறவான ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக குரல் கொடுத்து ராஜபக்சேவிற்கு தண்டனை பெற்றுத்தருவதன் மூலம் மனிதஉரிமைகளை பாதுகாப்பதில் இந்தியா எந்த நாட்டிற்கும் சளைத்ததல்ல என்பதை மத்திய அரசு நிரூபிக்கவேண்டும்.
ஐ.நா. அறிக்கை வெளியான பிறகும் இலங்கையில் தமிழர்களுக்குத் துன்பம் தொடர்கிறது. இன்னும் 16 ஆயிரம் தமிழர்கள் அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்து அவர்களது சொந்த ஊர்களில் குடியமர்த்தவும் இந்தியா நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
Saturday, April 23, 2011
நிபுணர் குழு அறிக்கைக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ஐ.நா. தீவிர கண்காணிப்பு
இலங்கையில், கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி கட்ட போர் நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சர்வதேச போர் விதிமுறைகளை மீறி, பல்வேறு மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாகவும் இலங்கை அரசுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்துவதற்காக நிபுணர் குழு ஒன்றை, ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பான்கிமூன் அமைத்து இருந்தார். இந்த குழு தனது விசாரணையை முடித்துக் கொண்டு 196 பக்க அறிக்கை தயாரித்து உள்ளது.
இந்த அறிக்கை, கடந்த வாரத்தில் பான்கிமூனிடம் வழங்கப்பட்டது. அறிக்கை விவரம் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், இலங்கை அரசு போர்க்குற்றம் புரிந்ததாக அந்த அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
பொது மக்களை குறி வைத்தும், மருத்துவ மனைகள், ஐ.நா.சபை, செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் மீதும் இலங்கை ராணுவம் கண்மூடித்தனமான குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
நம்பகத்தன்மை வாய்ந்த இந்த குற்றச்சாட்டுகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்றும், அறிக்கையில் வற்புறுத்தப்பட்டு உள்ளது.
இறுதி கட்ட போரின் போது விடுதலைப்புலிகளுடன் அப்பாவி பொது மக்கள் 3 லட்சத்து 30 ஆயிரம் பேர் முள்ளிவாய்க்கால் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு இருந்தனர். பொது மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக, தாக்குதல் நடத்தா பகுதி என்று அறிவிக்கப்பட்ட 3 இடங்களிலும் ராணுவத்தின் தொடர் தாக்குதல் நடைபெற்றதாகவும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
ஆனால், இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் முற்றிலும் அடிப்படை ஆதாரமற்றது என்று, இலங்கை அரசு மறுத்து வருகிறது. அதே நேரத்தில், இந்த அறிக்கையை வெளியிட வேண்டாம் என்றும், ஐ.நா.சபையிடம் இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து இருந்தது.
அது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரீஸ், இந்த விசாரணை அறிக்கைக்கு சட்டபூர்வ அதிகாரம் கிடையாது என்றும், அறிக்கையை வெளியிட்டால், இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சமாதான முயற்சிக்கு பின்னடைவாக அமையும் என்றும் கூறி இருந்தார்.
ஆனால், இலங்கை அரசின் கோரிக்கையை நிராகரித்த ஐ.நா.சபை, இந்த போர்க்குற்ற அறிக்கை வெளியிடப்படும் என்று திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறது. நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அதன் செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் இந்த தகவலை வெளியிட்டார்.
இலங்கை அரசின் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல், போர்க்குற்றம் பற்றிய விசாரணை அறிக்கை எந்தவித திருத்தமும் இன்றி முழுமையாக வெளியிடப்படும் என்று அவர் உறுதியுடன் அறிவித்தார்.
நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ஐ.நா.சபையும் அதன் இலங்கை அலுவலகமும் தீவிரமாக கண்காணிக்கின்றன.
நிபுணர் குழு அறிக்கைக்கெதிராக இலங்கையில் மேற்கொள்ளப்படும் அனைத்துச் செயற்பாடுகள் மற்றும் வெளியிடப்படும் கருத்துக்கள் போன்றவற்றை தினந்தோறும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றது.
இதற்கான அறிக்கை இலங்கையில் அமைந்துள்ள ஐ.நா. சபையின் கிளை அலுவலக அதிகாரியொருவரால் தினந்தோறும் தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றது.
Friday, April 22, 2011
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை.. இலங்கை அரசு தலைவர்களை கூண்டிலேற்ற முதற்படி: ருத்திரகுமாரன்
ஐ.நா. நிபுணர் குழுவால் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையே, இலங்கையின் அரச தலைவர்களையும், படைத் தலைவர்களையும் கூண்டிலேற்ற முதற்படி என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்திரகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "ஐ.நா. பொதுச் செயலாளரின் நிபுணர் குழுவின் அறிக்கையின் தொடர் விளைவாக இலங்கையின் ஆளும் வர்க்கத்தையும் படை உத்தியோகத்தர்களையும் சர்வதேச சுயாதீன போர்க் குற்றவியல் விசாரணை நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு வலியுறுத்தியுள்ளது.
இதை நியாயப்படுத்திக் நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஐந்து பாரதூர அத்துமீறல்களில் நான்கு இலங்கை அரசாங்கத்தாலும், அதன் ஆயுதப்படைகளினாலும் திட்டமிடப்பட்டுச் செயற்படுத்தப்பட்டிருக்கும் ஓர் இன ஒழிப்புச் செயல் என கண்டறிந்துள்ளது என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளது. அவையாவன:
1) பரந்துபட்ட குண்டுத் தாக்குதல் மூலம் பொது மக்கள் கொல்லப்பட்டமை.
2) வைத்தியசாலைகளும், பாடசாலைகள் உட்பட பொதுமக்கள் வதிவிடங்கள் குண்டுத் தாக்குதலுக்கு உட்படுத்தியது.
3) மனிதாபிமான உதவி மறுப்பு.
4) போரில் உயிர் தப்பிப் பிழைத்து உள்ளூரில் இடம் பெயர்ந்தோரும் சந்தேகத்திற்குரிய விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ளடங்கிய பாதிக்கப்பட்டோர் அனுபவித்த மனித உரிமை மீறல்கள் ஆகியவை சிங்கள அரசாங்கத்தாலும் அதன் சிங்களப் படையாலும் இயக்கப்பெற்று பாதுகாப்பற்ற வன்னிப்பொதுமக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டவை என்பதனால், திட்டமிடப்பட்டு இலங்கை அரசினால் செயற்படுத்தப்பட்ட இனப்படுகொலை என்பது தெளிவாக் நிருபனமாகின்றது.
மேலும் நிபுணர் குழுவினரால் கண்டறியப்பட்ட பிரத்தியேகத் தீங்கான இனரீதியான அரசியல், சமூக, பொருளாதாரரத் தவிர்ப்புக் கொள்கைகளால் தமிழர்கள் தொடர்ந்தும் இனப்படுகொலைக் குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதைச் சான்றுபடுத்தும். இந்த அறிக்கை நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும், மற்றையோரும் ஒட்டுமொத்தத் தமிழர் படுகொலை சம்பந்தமாகக் கூறிவந்ததை ஊர்ஜிதப் படுத்துகின்றது.
போர்க் குற்றங்கள், மனிதாபிமானக் குற்றச் செயல்கள் ஆகியவை பற்றி அறிக்கை தெளிவுபடக் குறிப்பிடுகின்றது. இவ்வறிக்கை வெளியானதுடன் இலங்கை அரசின் தமிழர் படுகொலை சம்பந்தமான கண்துடைப்புப் பிரச்சாரம் தோல்வியுற்றுள்ளது.
இறுதியில் இலங்கையின் தலைவர்கள், அவர்கள் தமிழர்களின் மேல் நடாத்திய கொலைகளுக்குரிய விலையைக் கொடுப்பதுடன் நீதி வழங்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணமாயும் அமைகிறது.
அந்த அறிக்கையில் கற்பழிப்பு, சட்டத்திற்கு முரணான உயிர்ப்பறிப்பு, ஆட்கடத்தல், பரந்துபட்ட குண்டுத்தாக்குதல், உணவு மருந்து மறுப்பு, ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் மிரட்டல் முயற்சிகள் ஆகியன கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் மீது நம்பிக்கையற்ற தமிழ் மக்கள் ஆதியிலிருந்தே அபிப்பிராயப்பட்டது போன்று இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு பலத்த விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு பெருமளவு குறைபாடுகளுடையது என்பதுடன் சர்வதேசத் தரத்திற்கு அமைய நம்பகத் தன்மையற்றதும், செயற்திறன் அற்றதுமாகும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கம் நடாத்திய தமிழ்ப் பொது மக்களின் படுகொலைகள் சம்பந்தமான விவர அறிக்கை ஒன்று ஏற்கனவே ஜ.நா குழுவிற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினரால் சமர்ப்பிக்கப் பட்டதுடன் நடேசன் மகனுடைய நேர்முக வாக்குமூலத்திற்கும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
நடேசன் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்தவர். அவருடைய மகனது வாக்குமூலம், நடேசனின் இறுதிக் கணங்கள் சம்பந்தமான உண்மையான தகவல்கள் அடங்கியது.
இன்னுமொரு நம்பகரமான சாட்சியம் கேணல் ரமேஸ் மனைவியால் வழங்கப்பட்டது. இலங்கையின் அரச தலைவர்களையும், படைத்தலைவர்களையும் கூண்டிலேற்ற இதுவே முதற்படி என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நம்புவதுடன் இவர்கள் நாளடைவில் போர்க்குற்றங்கள், மனித விரோத மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் ஆகியவற்றிற்கும் முகம் கொடுத்தே ஆக வேண்டுமெனவும் நம்புகின்றது.
இவ்வறிக்கை, இறுதிப்போர் நடைபெற்ற காலத்திலும் போர் முடிவுற்ற அண்மைக் காலத்திலும் ஜ.நா.வினதும், மனித உரிமைகள் குழுவினரதும் மோசமான நடவடிக்கைகளையும் கண்டிக்கத் தவறவில்லை.
இவ்வறிக்கை ஜ.நா.வின் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த உந்துதலாக அமையுமென நாம் எதிர்பார்க்கின்றோம். நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்கும் கருத்துப் பரிமாறலை இவ்வறிக்கை ஆரம்பித்து வைக்கும் என்பது எங்கள் உளமார்ந்த நம்பிக்கை.
தமிழ் தேசத்தையும், சிங்கள தேசத்தையும் ஒவ்வாத பிணைப்பால், நல்ல அயலவர்களாக நிரந்தர முரண்பாட்டுப் போருடன் கூடியிருக்கச்செய்வது உசிதமல்ல என்று நாடுகடந்த தமிழீழ அரசங்கம் இங்கே கோடிட்டுக்காட்டுகின்றது," என்று ருத்திரகுமாரன் கூறியுள்ளார்.
மனித உரிமையை மீறினார் ராஜபக்ஷே! - தண்டனை வாங்கித் தருமா ஐ.நா. குழு அறிக்கை!
புது மாப்பிள்ளைபோல உலக நாடுகளை வலம் வந்த இலங்கை அதிபர் ராஜபக்ஷே, இப்போது மன உளைச்சலில் சிக்கித் தவிக்கிறார்! ஈழத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான 'ஐ.நா. பொதுச் செயலாளர் குழு’ வெளியிட்டுள்ள அறிக்கைதான் இதற்குக் காரணம்!
ஈழப் போரின் கடைசிக் காலம் பற்றி விசாரித்து, தனக்கு ஆலோசனை சொல்ல கடந்த ஆண்டு ஜூன் 22-ல் ஒரு குழுவை அமைத்தார், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். வட கொரியாவுக்கான ஐ.நா-வின் சிறப்புத் தூதரான இந்தோனேஷியாவின் மர்சுகி தருஸ்மன், தென் ஆப்பிரிக்க மனித உரிமை ஆர்வலரான யாஸ்மின் சூக்கா, அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிபுணர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோர் குழுவில் நியமிக்கப்பட்டனர்.
இந்த குழுவின் நியமனத்தையே கடுமையாக எதிர்த்தது இலங்கை அரசு. ''அந்த மூவர் குழு நாட்டுக்குள் வந்தால், அவர்களை அனுமதிக்க மாட்டோம்!'' எனப் பகிரங்கமாகவே சொன்னார் இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
இந்த மிரட்டலுக்கு ஐ.நா. தரப்பில் குறிப்பிடும்படியான பதில் எதுவும் தரப்படவில்லை. இலங்கைக்குள் போகாமலேயே விசாரணையை முடித்தது மூவர் குழு!
கடந்த 12-ம் தேதி பான் கி மூனிடம் அறிக்கையைச் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையைப் பகிரங்கமாக வெளியிடுவதற்கு முன்பே, இலங்கை அரசுக்கு அனுப்பிவைத்தார் பான் கி மூன். முறைப்படி அறிவிக்கப்படும் முன்பே, கொழும்பு பத்திரிகை மூலம் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது.
''இலங்கை ராணுவம் செய்தது போர்க் குற்றம்தான்!'' என அடித்துச் சொல்லும் இந்த அறிக்கை, ''2008 செப்டம்பர் முதல் 2009 மே 19 வரை வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் பெரிய அளவிலான குண்டு வீச்சுகளை நடத்தியதில், ஏராளமான பொது மக்களைக் கொன்று குவித்துள்ளது. வன்னியின் 3.3 லட்சம் மக்களையும் போரினால் சுருங்கிய குறுகிய பிரதேசத்தில் மொத்தமாக ஒதுங்கச் செய்தனர்.
'தாக்குதலற்ற பகுதி இது’ என்று அறிவித்துவிட்டு, ஒட்டுமொத்தமாக அங்கு குவிந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைக்கொண்டு தாக்கினர். மருத்துவமனைகள் எனத் தெரிந்தும் அரச படைகள் அவற்றின் மீது குறிவைத்து, எறிகணைகள், மோர்ட்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. ஐ.நா. அவையின் உணவு, உதவி முகாம்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்க வாகனங்கள், உதவிக் கப்பல்களும் அரசப் படைகளின் குண்டுவீச்சுகளுக்குத் தப்பவில்லை. சில மருத்துவமனைகள் மீது பல முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலால் படுகாயம் அடைந்த மக்களுக்கு உயிர்த் தேவையான அடிப்படை சிகிச்சைகூடக் கிடைக்கவிடாமல், மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியது இலங்கை அரசு.
2009 ஜனவரி முதல் மே வரை மட்டுமே பத்தாயிரக்கணக்கில் மக்கள் இப்படி அடையாளம் தெரியாமல் செத்துப்போனார்கள். சண்டைப் பிரதேசத்தில் இருந்து தப்பியவர்களிடம், அரசுத் தரப்பு மிக மோசமாக நடந்துகொண்டது. விடுதலைப் புலிகள் என சந்தேகப்பட்டவர்களை எல்லாம் ரகசியமாகக் கொண்டுபோய், கணிசமானவர்களைக் கொன்றுபோட்டது ராணுவம். அவர்களில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாகத் தெரிகிறது. தப்பியவர்கள் அனைவரும் முகாம்களில் நெருக்கடியாக அடைக்கப்பட்டனர். விசாரணைக்கு ஆளானவர்கள், கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். புலி என சந்தேகிக்கப்பட்டவர்கள் வெளியுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவாறு சொல்லவொண்ணாத சித்ரவதைத் துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டனர்!'' எனக் குற்றம் சாட்டும் ஐ.நா. நிபுணர்கள், புலிகள் மீதும் போர்க் குற்றம் சுமத்தியுள்ளனர்.
''போர்ப் பிரதேசத்தில் பொது மக்களைக் கேடயங்களாகப் பிடித்துவைத்து, விடுதலைப் புலிகள் அங்கிருந்து நகரவிடாமல் செய்தனர். 14 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களையும் அவர்கள் கட்டாயமாகப் படையில் சேர்த்தனர். பிப்ரவரி மாத காலத்தில் தப்பிச் செல்லும் பொது மக்களையும் அவர்கள் தாக்கினர்'' என்றும் ஐ.நா. நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைக் குற்றச்சாட்டுகளை அடுத்து, நல்லிணக்க ஆணைக் குழு என்ற ஒன்றை இலங்கை அரசு அமைத்தது. சண்டை நிறுத்தம் தொடங்கிய 2002 முதல் 2009 மே வரையிலான இனப் பிரச்னை குறித்து விசாரிப்பதாக அறிவிக்கப்பட்ட இந்தக் குழுவைப்பற்றியும், ஐ.நா. நிபுணர்கள் காட்டமாக விமர்சித்து இருக்கின்றனர். ''இலங்கை அரசு அமைத்த நல்லிணக்க ஆணைக் குழு, சர்வதேச மனித உரிமைச் சட்ட விதிகளின்படி அமைக்கப்படவில்லை. இறுதிக் கட்டப் போரில் உண்மையில் என்ன நடந்தது என்பதுபற்றி நேர்மையாக விசாரிக்கவும் இல்லை. பாதிக்கப்பட்ட துயரத்தில் இருப்பவர்களை மரியாதையாக நடத்தாததுடன், சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பையும் வழங்கவில்லை. ஏற்கெனவே, பான் கி மூனும் ராஜபக்ஷேவும் கூட்டறிக்கையில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக, இந்த நல்லிணக்க ஆணைக் குழு பெரும் தவறைச் செய்துவிட்டது!'' என்றும் நிபுணர் குழுவினர் குற்றம் சாட்டினர்.
ஆனால், வேதனை என்ன தெரியுமா? போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை அரசே, மனித உரிமை மீறல்கள், மனிதகுல விரோத அத்துமீறல்கள் குறித்து நேர்மையாக விசாரணையைத் தொடங்க வேண்டும். இந்த விசாரணையைக் கண்காணிப்பதற்கான சர்வதேச முறை ஒன்றை பான் கி மூன் ஏற்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது அறிக்கை.
மேலும், ''இலங்கை அரசு மற்றும் அதனுடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக் குழுக்களின் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். காணாமல் போகச் செய்யப்பட்டவர்களின் நிலைமை தொடர்பாக உடனடியாக அரசுத் தரப்பு புலன்விசாரணையை நடத்த வேண்டும். புலி என சந்தேகிக்கப்படுவோர் உள்பட பிடித்துவைக்கப்பட்டு உள்ள அனைவரின் பெயர்களையும் அறிவிக்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருடனும், வழக்கறிஞர்களுடனும் தொடர்புகொள்ள அனுமதிக்க வேண்டும். பிடித்துவைக்கப்பட்டதை எதிர்த்து சட்ட ரீதியாக வாதாடவும் அனுமதிக்க வேண்டும். மக்களைப் பய பீதியில் ஆழ்த்தி, சுதந்திரத்தைத் தடுக்கும் அனைத்து வித அரச வன்முறைகளையும் நிறுத்த வேண்டும். கடைசிக் கட்டப் போரின்போது ஏராளமான மக்கள் படுகொலை செய்யப்பட்டதில் அரசின் பங்குபற்றி பகிரங்கமாக விளக்கம் ஒன்றை வெளியிட வேண்டும். இந்த அறிக்கையின் அடிப்படையில், இலங்கை அரசின் மீதான மனித உரிமை மீறல் தீர்மானத்தை, ஐ.நா. மனித உரிமை ஆணையம் மறு பரிசீலனை செய்யவேண்டும். போரின்போதும், அதன் பின்பும், இலங்கையில் ஐ.நா. அமைப்புகளின் செயல்பாடுகள்பற்றி ஐ.நா. பொதுச் செயலாளர் ஆய்வு செய்ய வேண்டும்!'' என்றும் மூவர் குழு பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
தமிழ் மக்களைப் படுகொலை செய்து சிங்களப் படை செய்த போர்க் குற்றத்தை, ஐ.நா. நிபுணர் குழுவினர் ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து, ''சர்வதேச விசாரணைக் குழுவை பான் கி மூன் அமைத்து, போர்க் குற்றவாளிகளைத் தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இதைக் கேட்டு ஆவேசமடைந்த ராஜபக்ஷே, ''ஐ.நா-வுக்கு எதிராகப் போராட்டம் நடத்துங்கள்!'' என்று சிங்கள மக்களைத் தூண்டிவிட்டுள்ளார். ''உறுப்பு நாடு என்கிற முறையில் இலங்கையை ஐ.நா. காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால், ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரமுள்ள சீனா, ரஷ்யாவின் உதவியை நாடுவோம்!'' என மிரட்டும் தொனியில் பேசியுள்ளார் ராஜபக்ஷேவின் தம்பி கோத்தபய ராஜபக்ஷே.
புலம் பெயர்ந்த ஈழத் தமிழர் அமைப்புகளோ, ''முக்கியமான சில உண்மைகளை இந்தக் குழு ஒப்புக்கொண்டுள்ளது. போர்க் குற்றத்தை வேடிக்கை பார்த்த ஐ.நா. அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுபற்றி இதில் எந்தக் குறிப்பும் இல்லையே! எமது மக்களைத் துடிக்கத் துடிக்க சிங்களப் படை கொன்று குவித்தபோது, தடுத்திருக்க வேண்டிய ஐ.நா., இனி மேல் நீதியைத் தரும் என்று நம்பிவிட முடியாது!'' என்று பரவலாகக் கருத்துகளைத் தெரிவித்து உள்ளன.
வெள்ளைக் கொடி ஏந்திச் சென்ற நடேசன் குழுவினரைப் படுகொலை செய்தது தொடர்பாக, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஐ.நா-வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியான பாலித கோகன்ன மீது வழக்கு தொடுத்துள்ளது, சுவிஸ் ஈழத் தமிழர் அவை. அவையின் சட்ட ஆலோசகரும் இந்த வழக்கைத் தொடர்ந்தவர்களில் ஒருவருமான லதான் சுந்தரலிங்கத்திடம் இந்த அறிக்கைபற்றிக் கேட்டபோது, சட்ட நுணுக்கங்களை விவரித்தவர், ''சிங்களப் படை செய்த போர்க் குற்றங்களுக்கான ஆதாரங்கள் எம்மிடம் ஏராளமாக உள்ளன. இதைவைத்து, இலங்கை அரசுத் தரப்பை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி சர்வதேச சட்டங்களின் மூலம் நாமே தண்டனை பெற்றுத் தருவதுதான் சிறந்த வழி. கட்டாயம் நம்மால் இதைச் சாதிக்க முடியும். உலகின் எந்த சக்தியாலும் இதைத் தடுத்துவிட முடியாது!'' என்றார் உறுதியுடன்.
அவர்கள் சரி, தாய்த் தமிழகம் இதில் என்ன செய்யப்போகிறது?!
ஜூனியர் விகடன் 24-ஏப்ரல்-2011
'ஈழத்தில் நடந்ததை மறந்து விடாதீர்கள்!' - கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண்!
ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?' என்ற புத்தகம்!
சென்னை, தி.நகர், செ.தெ.நாயகம் பள்ளியில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்காஃபெர்னாண்டோ. இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின்தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?' என்றகவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.
இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. "நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன். இலங்கைக் குடிமகளான நான், எங்கள் நாட்டில் பேசப்படும் தமிழைப் பேசத் தெரியாமல் இருப்பதே, அங்கு உள்ள அரசியல் முரண்பாட்டைக் காட்டும். பெரும்பான்மை இனத்தின் ஆதிக்கம் எங்கள் தீவில் நிலவுகிறது. அநீதியின் வரலாற்றைப் பகுப்பாய்வதற்காக, நான் வரவில்லை. அந்த வரலாறு, தமிழ் மக்கள் படுகொலையில் முடிந்ததை நீங்கள் அறிவீர்கள்.
போரினால் ஏற்பட்ட பாதிப்புகளில்,பெண்களுக்குஏற்பட்ட தைத்தான் மோசமான கதியாகக் கருதுகிறேன். எந்த இனத்தைச் சேர்ந்தவளாகவும் நான் இங்கு வரவில்லை. இலங்கைத் தீவில் இருந்து ஒரு பெண்ணாகவே நான் இங்கு நின்று பேசுகிறேன். அண்மையில் மான்குளம், கிளிநொச்சி பகுதிகளுக்குச் சென்று வந்தேன். அடுத்த கட்டம் என்ன? அடுத்த நேர உணவுக்கு வழி என்ன? யாரிடமும் போய்க் கேட்க வாய்ப்பு இல்லாமல்... சிதிலமடைந்த வீடுகளைக் கட்டி எழுப்ப முடியாமல் இருக்கிறார்கள். அநேகமாக எல்லாப் பெண்களும் என்னிடம், 'எங்கே என் கணவர்? எங்கே என் பிள்ளைகள்?' என்றே கேட்டார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை..." என்றவர்,
"அங்கே, 'பிள்ளைகளைத் தனியாக வீட்டில் விட்டுப் போக முடியுமா? அதிலும் முடமாக்கப்பட்ட பெண் பிள்ளைகளைத் தனியாகவிட்டு நான் வேலைக்குப் போக முடியுமா? ஆனால், குறைந்தபட்சம் கஞ்சி காய்ச்சுவதற்கான ஊதியம் பெறுவதற்காவது நான் போக வேண்டுமே... எப்படி?' என்று கதறுகிறார்கள் அந்தப் பெண்கள்.
மறுகுடியமர்த்தப் பணிகளுக்காகப் பல நாடுகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்துள்ளன. ஆனால், என்ன நடந் தது? சில வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் ராணுவ நிலைகளை வலுவாக அமைத்து இருக்கிறார்கள். மக்கள் சுதந்திரமாகப் பேசிக்கொள்ளக்கூட முடியவில்லை. நான் என்னுடைய மக்களுடன் பேசினால், மூன்றாவது நபரால் கண்காணிக்கப்படுகிறேன். தமிழ் மக்கள் மட்டும் அல்ல, சிங்கள மக்களும் சுதந்திரமாகப் பேசிக்கொள்ள முடியவில்லை.. இங்கே கூட்டம் போட்டுப் பேசுவதுபோல இலங்கையின் வடக்கில், கிழக்கில் யாரும் பேசிவிட முடியாது. அரசியல்வாதிகள் பேசினால், கேள்விக்கு உள்ளாக்கப்படுவார்கள். அரசுக்கு எதிராகப்பேசியதாகக் குற்றம் சாட்டப்படுவார்கள், பின்னர் காணாமல் போவார்கள்.
போர், தமிழ் மக்களின் சுயமரியாதை,, தன்மானத்தின் நாடிநரம்புகளையும் சேர்த்தே நசுக்கி இருக்கிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பிச்சைக் காரர்களாக இதுவரை இருந் தது இல்லை. போரால் வாழ்வு இழந்தவர்கள் எல்லோரும், மீனவர்களாகவும் விவசாயிகளாகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டும் இருந்தவர்கள். அரசனாகவோ அரசியாகவோ வாழாவிட்டாலும், உங்களைவிட என்னைவிட வசதியாக வாழ்ந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்று கையேந்தி நிற்கிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் நல்ல வளங்கள் இருந்தபோதும்... மக்கள் வேலையின்றி, வறுமையில்தான் வாடுகிறார்கள். இதனால், தமிழ் மக்கள் சொந்த கிராமங்களைவிட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி, அங்கே இனப்பரப்பல் விகிதத்தை மாற்றிவிடுகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உருவாகிறது. அதுவும் சீனா போன்ற நாடு களின் உதவியுடன் நடக்கிறது!
தமிழ் மக்கள், சிங்கள ஊடகங்கள், பொதுஜன நியாயத்துக்கான குரலை இலங்கை அரசு கடுமையாக ஒடுக்குகிறது. நடந்ததை மறந்துவிடுமாறு அரசாங்கம் திரும்பத் திரும்பச் சொல்கிறது. போரினால் அழிக்கப்பட்ட எந்த ஒன்றையும் எளிதில் மறந்துவிட முடியாது. நீங்களும் மறந்துவிடாதீர்கள்.
இலங்கையின் அனைத்து மக்களும் இன்றைய நிலையில் இருந்து விடுதலை பெற வேண்டும். இந்தப் போராட்டத்துக்காக, வெளிநாட்டில் இருந்துநாங்கள் ஆதரவைப் பெறப்போவதில்லை. தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்களின் கூட்டு முயற்சியுடன், ஆட்சிக் கட்டிலில் இருந்து மகிந்த ராஜபக்ஷே வெளியேறும் காலம் வரும். அந்த நாளை நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறோம்!" என்று நிமல்கா முடித்தபோது, அரங்கம் அதிரக் கைதட்டல்கள்.
இன வெறி தலைக்கேறி, பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைக் குடித்த சிங்களத்தில் பிறந்தாலும், நியாயத்துக் காக நிற்கும் நிமல்கா போன்றவர்கள்தான், நிஜமான 'தகத்தகாயக் கதிரவன்'கள்!
* ஜூனியர் விகடன் 16-ஜனவரி-2011
Thursday, April 21, 2011
இலங்கை போர்க்குற்றம்: ஐ.நா. குழு அறிக்கை குறித்து இந்தியா அமைதி காப்பது ஏன்? டி.ராஜா கேள்வி
இலங்கையில் தமிழர்களை கொன்று அந்நாட்டு அரசு போர்க்குற்றம் புரிந்துள்ளது என்று ஐ.நா. குழு அறிக்கை குறித்து இந்தியா அமைதி காப்பது ஏன் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
இந்த அறிக்கை அனைத்து பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வெளியாகி உள்ளது. இவ்வாறு வெளியாகியும் அது பற்றி இந்தியா இன்னும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மவுனம் கடைப்பிடிக்கிறது. இறுதிக் கட்டப் போரில் இலங்கையுடன் இந்தியா இணைந்து செயல்பட்டதே இதற்குக் காரணமாகும்.
இலங்கைக்கு ஆயுத பலம், பண பலத்தை அளித்தது இந்தியா. அதன் மூலம் இலங்கை அரசு அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து போரில் வெற்றி பெற்றது. இதனால், இந்தியா இப்போது சர்வதேச அரங்கில் குற்றவாளி கூண்டில் நிற்கிறது. ஐ.நா. சபைக்குழு அறிக்கை மீது இந்தியா இதுவரை கருத்துத் தெரிவிக்காதது ஏன்?
விடுதலைப்புலிகளுக்கு எதிரானப் போரில் இலங்கைக்கு உதவிய இந்தியா, இப்போது தனது நிலையை வெளிப்படுத்தாதது ஏன்? இலங்கையில் 30 ஆண்டுகளாக நடந்த இந்த உள்நாட்டுப் போரில் இறுதிக் கட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியாவின் ஆதரவில்லாமல் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புக்கொண்டிருந்தார்.
இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளது என்ற அறிக்கைக்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது நிலையைத் தெரிவிக்க வேண்டும். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா ஆதரவு அளிக்கிறது என்று வெளியான செய்தியை இந்தியா எந்த சமயத்திலும் மறுத்தது இல்லை. தமிழர்களுக்கு எதிரான இந்த போரில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது.
இலங்கையில் இவ்வளவு அதிக அளவில் பொதுமக்கள் இறப்பதற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளுமே காரணம் என்றும், அங்கு மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. இதில் இந்தியாவின் நிலை என்ன என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டது படுகொலை சம்பவம் என பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் இலங்கையின் இந்தச் செயலை இந்தியா ஒருபோதும் கண்டிக்கவில்லை. காரணம், இந்த கொடுமையில் இந்தியாவும் உடந்தை என்பதுதான்.
அரசியல் சட்ட மசோதா இலங்கையில் தமிழர்களை ஒடுக்குவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது என்று விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இலங்கைப் பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் கருத்தை இந்தியா எந்த சமயத்திலும் ஏற்றுக்கொண்டதில்லை. மாறாக இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்து வந்துள்ளது.
இலங்கை பிரச்சனையில் தீர்வு காண இந்தியா எந்த சமயத்திலும் பொறுப்புடன் முயற்சி செய்யவில்லை. இலங்கை தமிழர் பிரச்சனை தீர அரசியல் சட்ட மசோதா தாக்கல் செய்ய இலங்கையிடம் தனது செல்வாக்கை இந்தியா பயன்படுத்தவில்லை. இலங்கை தமிழர் மறுவாழ்வுக்காக இந்தியா அளித்துள்ள உதவியை முறையாக செயல்படுத்த இலங்கையை இந்தியா உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
நாடகமாடுகிறது இலங்கை - எழில்.இளங்கோவன்
உலக நாடுகள் நடுவில் போர்க்குற்ற நாடாக சிங்கள இலங்கை நாடு காட்சி அளிக்கிறது.
அந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே போர்க் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையில் இது குறித்து விசாரிக்கக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அதை இலங்கை எதிர்த்து வருகிறது. தன்னைத் தானே விசாரித்துக் கொள்வதாக நாடகமும் ஆடுகிறது.
இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் டி.எம். ஜெயவர்தனே, தமிழகத்தின் கேரள எல்லைப் பகுதிகளில் விடுதலைப்புலிகள் மூன்று முகாம்கள் அமைத்து, இலங்கையில் உள்நாட்டுப் போரை ஏற்படுத்தவும், இந்தியத் தலைவர்களைக் கொல்லவும் புலிகள் முயல்வதாகக் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவை இருப்பிடமாகக் கொண்ட வி.ருத்திரகுமாரன், நார்வேயைச் சேர்ந்த நெடியவன், வினாயகம், புலேந்திரன் மாஸ்டரின் பங்களிப்புடன் தமிழகத்தில் புலிகளின் பயிற்சி முகாம்கள் உள்ளன என்ற இலங்கைப் பிரமரின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்து, நிராகரித்தார் தமிழக டி.ஜி.பி.லத்திகா சரண்.
இந்திய வெளியுறவுத் துறையும் இலங்கைப் பிரதமரின் குற்றச் சாட்டை மறுத்திருக்கிறது.
டி.எம்.ஜெயவர்தனேவின் இதே குற்றச்சாட்டுக்கு அதே நாடாளுமன்றத்தில் பதில் சொன்ன இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே, இந்தியாவில் விடுதலைப் புலிகள் முகாம்கள் இருப்பதாக பிரதமர் சொல்வது, இலங்கையில் அமலில் இருக்கும் அவசரச் சட்டத்தை நியாயப்படுத்தவே அன்றி வேறில்லை என்று கூறியிருக்கிறார்.
ஈழத்தில் தமிழர்களைக் கொன்று குவித்த பின், விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று அறிவித்த இலங்கை, இப்பொழுது தமிழகத்தில் புலிகளின் பயிற்சி முகாம் என்று சொல்வது ஒரு நாடகம், ஏமாற்று வேலை.
இதன் மூலம் இலங்கையில் நெருக்கடி நிலையை மேலும் இறுக்கி, அங்கு வாழ்விழந்து வாடும் தமிழர்களை முற்றாகவே ஒழித்தழிக்கப் பார்க்கிறது இலங்கைச் சிங்கள அரசு.
இலங்கையின் பிதற்றலை உலகம் ஏற்காது ; இராஜபக்சேவைப் போர்க்குற்றவாளிக் கூண்டில் ஏற்றித் தண்டிக்காமலும் விடாது !
நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்
எங்கள் தாய்! - திராவிட இயக்கத் தமிழர் பேரவை
எரிமலையை ஈன்றெடுத்த
ஒரே தாய்
உலகத்தில் நீதான் !
தலைவனை ஈன்றதால்
அனைவர்க்கும் தாயானாய் !
உலகம்
உனக்கழுத கண்ணீரில்
ஒரு சொட்டும் பொய்யில்லை !
எங்களுக்குத் தெரியும்...
எந்த நெருப்பும் உன்னை
எரித்திருக்க முடியாது !
ஓரிடத்தில் பிறந்தவள் நீ...
இன்று
உலகெல்லாம் வாழ்கின்றாய் !
தமிழினமே கூடிநின்று
உனக்குத்
தலைவணக்கம் செய்கிறது !
- திராவிட இயக்கத் தமிழர் பேரவை
Wednesday, April 20, 2011
தீக்குளித்து உயிர்நீத்த கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம்
ஈழத் தமிழருக்கு தனி நாடு கோரி கடந்த 18-4-2011 அன்று தீக்குளித்து உயிர் நீத்த பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா, குருவிக்குளம் ஒன்றியம், சீகம்பட்டி கிராமத்தில் அவரது உருவப்படத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தில்லியில் இருப்பதால் அவரது ஆணையின்படி கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் வன்னிஅரசு, கரும்புலி முத்துக்குமார் பாசறையின் மாநிலச் செயலாளர் சங்கத்தமிழன், மதுரை மாவட்டசெயலாளர் எல்லாளன், ஊடகப்பிரிவின் மாநில துணைச்செயலாளர் அகரன், நெல்லை மாவட்டச்செயலாளர் கார்த்திக் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் வீரவணக்கம் செலுத்தினர்.
தம்பி கிருஸ்ண மூர்த்தி தனக்கிட்ட தீ தமிழர்களின் எழுச்சிக்கும் விடுதலைப்புரட்சிக்கும் ஏற்றிய தீபம்: தமிழீழ விடுதலைப்புலிகள்
தம்பி கிருஸ்ண மூர்த்தி தனக்கிட்ட தீ தமிழர்களின் எழுச்சிக்கும் விடுதலைப்புரட்சிக்கும் ஏற்றிய தீபமாகவே நாம் பார்க்கின்றோம். அந்த வகையில் இவரின் ஈகைச்சாவு எமது போராட்ட வரலாற்றில் ஒரு பதிவாக இருக்கும். ஈகையாளன் கிருஸ்ணமூர்த்தியினைப் பெற்றெடுத்த பெற்றோரிற்கும் அவரது உறவுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தமிழீழ விடுதலைப்புலிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈகைச்சுடர் கிருஸ்ணமூர்த்திக்கு எமது அஞ்சலி
தலைமைச்செயலகம், த/செ/ஊ/அ/03/11
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
20/04/ 2011.
தமிழ்நாடு சீகம்பட்டியைச் சேர்ந்த இளம் பொறியியலாளன் இராமுசுப்பு கிருஸ்ணமூர்த்தி அவர்கள் தமிழின விடுதலைக்காகவும் தமிழீழ மக்களுக்கு நியாயம் வேண்டியும் தன்னைத்தானே தீமூட்டி ஈகைச்சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுச் சுவட்டில் பல்லாயிரம் வீரர்கள் தம்முயிர்களை ஆகுதியாக்கிக்கொண்டுள்ளனர்.இவ்வாறு தமிழரின் விடுதலைக்காக புறப்பட்ட பல்லாயிரம் வீரர்களின் தியாகங்களின் வரிசையில் தம்பி கிருஸ்ணமூர்த்தி தன்னையும் இணைத்துக் கொண்டார்.
2009 மே 18 இன் தமிழின அழிப்பின் உச்சத்தில் வெற்றிக்களிப்பில் சிங்களம் இன்னமும் மிதந்து கொண்டிருக்கின்றது. இதேவேளை தமிழர் வரலாற்றில் உயிரும் சதையும் கலந்த மறக்க முடியாத மாபெரும் மானிட அழிவின் எச்சத்தைத் தேடியவண்ணம் மனித உரிமை அமைப்புக்கள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. தம்பி கிருஸ்ண மூர்த்தியின் ஈகைச்சாவு இந்த மனித உரிமை அமைப்புக்களின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் என நம்புகின்றோம்.
ஈழத்தமிழர்களின் தொப்புட்கொடி உறவைப் புறந்தள்ளி அரசியல் செய்பவர்களுக்கெல்லாம் ஈகையாளன் அப்துல் ரவூப்,முத்துக்குமார் தொடக்கம் கிருஸ்ணமூர்த்தி வரையானோரின் தீயுடன் கலந்த ஈகமானது உடலில் இல்லாவிட்டாலும் உணர்வுகளிலாவது எரிகாயங்களை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.
எமது விடுதலைப்போராட்டம் பல அற்புத மனிதர்களின் தியாகத்தின் உச்சத்தின் வழிகாட்டலிலேயே வளர்ந்து நிற்கின்றது. இன்றைய சூழலில் எமது போராட்டத்தின் வீச்சை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். மனித உயிர்களின் மகத்துவத்தையும் அதன் அற்புத சக்தியினையும் ஆளுமைப்படுத்தி விடுதலைக்காக புடம் போட்டு வீறுகொண்ட மக்கள் புரட்சியாக மாற்றவேண்டிய பொறுப்பு இளையோர்களையே சார்ந்துள்ளது. இச்செய்தியைத்தான் தம்பி கிருஸ்ணமூர்த்தி உலகத் தமிழினத்திற்கு விட்டுச்சென்றுள்ளான் .
ஆற்றல் மிக்க இளையோரின் கைகளிலேயே எமது விடுதலையினை வென்றெடுக்கும் பொறுப்பு உள்ளது. தம்மைத்தாமே தீமூட்டி அழித்து மேற்கொள்ளப்படும் ஈகைப் போராட்டங்களை மாற்றி எல்லோரின் கைகளிலும் தீப்பந்தத்தைக் கொடுத்து எதிரிகளைக் கொளுத்தும் சக்திகளாக மாற்றவேண்டும்.
எம் அன்பிற்குரிய இளையோர்களே,
இனிவரும் காலங்களில் உயிர் அர்ப்பணிப்புக்களைத் தவிர்த்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தம்பி கிருஸ்ண மூர்த்தி தனக்கிட்ட தீ தமிழர்களின் எழுச்சிக்கும் விடுதலைப்புரட்சிக்கும் ஏற்றிய தீபமாகவே நாம் பார்க்கின்றோம். அந்த வகையில் இவரின் ஈகைச்சாவு எமது போராட்ட வரலாற்றில் ஒரு பதிவாக இருக்கும். ஈகையாளன் கிருஸ்ணமூர்த்தியினைப் பெற்றெடுத்த பெற்றோரிற்கும் அவரது உறவுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஜனநாயக முறையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கவும். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம்
தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் – 2011″
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
அன்பான தமிழ் மக்களே!
இன்று தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்.
எமது நீண்ட விடுதலைப் போராட்டத்தில் எம்மோடு தோளோடு தோள் நின்று பணியாற்றி சாவடைந்த மக்களை நினைவுகூரும் நாள்.எமது அமைப்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குக் கவசமாக நின்று தம்மை அர்ப்பணித்த தியாகிகளின் நினைவுநாள்.
�இந்திய அமைதி காக்கும் படை� என்ற போர்வையில் அன்னியப் படைகள் எமது மண்ணில் காலூன்றியிருந்த காலத்தில் அப்படையை எதிர்த்து அகிம்சை வழியில் போராடிய அன்னை பூபதியின் மறைவு நாளே �தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்� என நினைவுகூரப்படுகின்றது. அடக்குமுறைக்கெதிராக எமது மக்களை அணிதிரட்டிப் போராடிய அன்னை பூபதியின் தியாகம் எமது போராட்டப் பாதையில் முக்கிய மைற்கல்.
தியாகி லெப்.கேணல் திலீபன் அவர்களின் உண்ணாநிலைப் போராட்டம் இந்திய அரசின் கபட நோக்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறிந்தது. காந்திய வழிகாட்டலைப் போற்றி நிற்பதாகக் கூறிக்கொண்ட பாரதப் படைகள் தமிழீழத்தின் மீது ஏவிவிட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக எமது மக்களின் தியாக உணர்வை ஒருங்கே இணைத்துக்காட்டிய பெருமை அன்னை பூபதியையே சாரும்.
இந்தியப்படைகள் தமிழ்மக்களின் நலன்களில் எவ்வித அக்கறையும் கொள்ளாது தங்களது தாயக நிலத்திலேயே தங்களை அடிமைப்படுத்த முனைவதைப் புரிந்து கொண்ட மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்புணர்வை காந்திய வழியிலேயே போராடி, மக்களின் நியாயமான கோரிக்கைகளை மக்கள் போராட்டங்கள் ஊடாக அணிதிரட்டி உணர்த்திய அன்னை பூபதி அவர்களை சாகும்வரை வேடிக்கை பார்த்து நின்றது பாரதம்.
அன்னை பூபதியின் சாவு வல்லாதிக்கப் படைகளுக்கெதிராக மக்களால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டங்களுக்கு மகுடமாக மாறியது. ஈழப்போராட்டம் என்பது �ஆயுத வழியில் நாட்டம் கொண்ட இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு கிளர்ச்சியே� என தமது அரசியல் இலாபங்களுக்காகப் பேசித்திரிந்தவர்களுக்குப் பேரிடியாக மாறியது. தமிழரின் போராட்ட வரலாற்றில் அன்னை பூபதி அவர்களின் சாவு பெரும் மக்கள் புரட்சியை ஏற்படுத்திய உந்துசக்தியாகவே அமைந்தது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் முகிழ்ந்ததிலிருந்து, போர் தொடுத்து, பூமிப்பந்தெங்கும் வேர்விட்டு, விழுதெறிந்து, தமிழனுக்கென்றொரு முகவரி பதித்து நிலையாக நின்று நீறுபூத்த நெருப்பாகி, ஈழக்கனவை தமிழர் நெஞ்சங்களிலெல்லாம் உருக்காக உருவாக்கி, கருவாகச் சுமக்கும் காலம் வரை போராட்டத்தோடு வனங்கள் எங்கும் வழிகாட்டியாக, கடலெல்லாம் கடந்து காரிருள் கிழித்த கடலோடிகளாக, புலனாய்வு முகவர்களாக, பொருளாதார வழங்குனர்களாக, விழுப்புண்ணடைந்த போராளிகளின் மருத்துவர்களாக, பசிக்கு உணவளித்து பக்குவமாக உறைவிடம் தந்த பற்றாளராக, போராளிகளுக்கு அறிவூட்டிய அற்புதக் கல்விமான்களாக தங்களைத் தளத்தோடும் களத்தோடும் அர்ப்பணித்துச் சாவடைந்த மக்களை தமிழ் மக்கள் எல்லோரும் தங்களின் நெஞ்சங்களில் நிறுத்திப் போற்றுகின்ற நாள் இந்நாளாகும்.
காலத்துக் காலம் ஏற்பட்ட மக்கள் புரட்சியால் அடிமைப்பட்ட மக்கள் தம்மைத் தாமே ஆளும் இறையாண்மையைப் பெற்றெடுத்தனர். 21ஆம் நூற்றாண்டில் எம் கண்முன்னே நடந்துகொண்டிருக்கும் மக்கள் புரட்சிபற்றிய செய்திகள் அனைத்தும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகவே வருகின்றன. மானுட நீதியை மதிக்காமல் பல தசாப்தங்களாக ஆட்சி செய்தவர்கள் மக்கள் புரட்சியால் நாட்டை விட்டே விரட்டியடிக்கப்பட்டுள்ளார்கள். தர்மத்தின் வழியில் நம்பிக்கை கொண்ட மக்கள் கூட்டம் அணிதிரளும்போது எந்தச் சக்தியாலும் அடக்கிவிட முடியாது. மொழியால், கலாசாரத்தால், பண்பாட்டால், வீரத்தால் உயர்ந்து நிற்கும் எம்மினத்தின் விடுதலையின் நியாயத்தை எந்தச் சக்தியாலும் விலைகொடுத்து வாங்கிவிடவும் முடியாது.
புரட்சிகர சிந்தனைகளைக் களைய புனையப்படும் வரலாறுகளை எமது மக்கள் நன்கு அறிவார்கள். இன்றும் விடுதலைப் போராட்டத்தின் தாங்குசக்தியாக இருக்கும் மக்கள் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாளில் தமிழீழ விடுதலையை வென்றெடுக்க ஜனநாயக முறையிலான மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
இலங்கை அரசை சர்வதேச குற்றவாளி கூண்டில் நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம்: வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி படுகொலை செய்த சிங்கள கொலைக் காரப்பாவி மகிந்த ராஜபக்சே அரசு போர்க்குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று 2010 ஜனவரியில் அயர்லாந்து நாட்டின் டப்ளின் தீர்ப்பாயம் அறிவித்த பின்னணியில் ஈழத் தமிழ் இனத்தின் அவலம் மிக்க ஓலக்குரல் ஐ.நா.வின் மனசாட்சி கதவை ஓங்கித் தட்டியதால் அதன் பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கைத் தீவில் நடந்ததை விசாரிக்க மூவர் குழுவினை நியமித்தார்.
அனைத்து நாடுகளுடைய நிர்பந்தத்தால் மூவர் குழு இலங்கையை விசாரிக்க முடிந்தது. தமிழர்களின் கண்ணீர் பிரதேசத்தில் அக் குழுவினர் சரியான ஆய்வு நடத்த இயலவில்லை. இருப்பினும் தற்போது ஐ.நா.வின் பொதுச் செயலாளரிடம் அக் குழு அறிக்கை தந்துள்ளது.
அந்த அறிக்கையின் படி அனைத்துலக மனித நேயச் சட்டத்தையும், மனித உரிமைச் சட்டத்தையும் அப்பட்டமாக மீறியவாறு லட்சக்கணக்கான தமிழ் மக்களை சிங்கள ராணுவம் கொலை செய்திருக்கிறது. பத்திரிகை, ஊடகங்களின் குரல்வளையை நெறித்துள்ளது.
வெள்ளை வேன்கள் எனும் “எமன்”களை அனுப்பி எண்ணற்றோரை இருக்கும் சுவடு தெரியாமல் ஆக்கியுள்ளது. தாக்குதல் நடை பெறாத பாதுகாப்பு வளையங்கள் என அறிவித்த அந்த இடங்களுக்குள் உயிர்பிழைக்க தஞ்சம் புகுந்த 3 லட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களில் பெருமளவு தமிழ் மக்கள் சாக சிங்கள அரசு இன வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்க அலுவலகம் உணவு விநியோகிக்கும் இடங்கள் அனைத்தும் குண்டு வீச்சுக்கு இலக்காயின. மருத் துவமனைகள் இருக்கும் இடங்கள் எனத் தெரிந்து கொண்டே அவற்றின் மீது இடைவிடாத குண்டு வீச்சை வான்வெளித் தாக்குதலை இலங்கை விமானப்படை செய்துள்ளது.
2011 ஜனவரி மே மாதத்துக்குள் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டனர். சித்திர வதை முகாம்களில் தமிழ் மக்களை அடைத்து குறிப்பாக இளைஞர்களைப் படுகொலை செய்ததோடு தமிழ் இளம் பெண்களை கற்பழித்துக்கொன்ற கொடுமைகளையும் செய்தது.
அரசுக்கு எதிரான ஊடகவியலாளர்களும், சமூக ஆர்வலர்களும் படுகொலை செய்யப்பட்டனர். ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா.பொதுச் செயலாளர் தக்க விசாரணை நடத்த வேண்டுமென்று குழு பரிந்துரை செய்துள்ளது.
2006 ஆம் ஆண்டிலேயே சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து நாடுகள் சிங்கள அரசுக்கு எதிராக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டு வந்த போது அதனை வரிந்து கட்டிக் கொண்டு இந்திய அரசு தோற்கடித்தது.
தமிழ் இனப்படுகொலை நடத்திட சிங்கள அரசுக்கு ஆயுத உதவியும், பண உதவியும் செய்த காங்கிரஸ் தலைமையிலான இந்தியாவின் மத்திய அரசு 2009 தொடக்கத்தில் அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் போர் நிறுத்தம் கொண்டு வரமுயன்ற போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்தது இந்திய அரசு தான்.
கூண்டில் சிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை திரும்பத் திரும்ப இந்தியாவுக்கு அழைத்து வந்து வரவேற்றுக் கொண்டாடிய இந்திய அரசு இன்னமும் இலங்கை அரசை ஆதரிக்கின்ற வேலையில் ஈடுபடுமானால் இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு இந்தியாவும் பகிரங்கப் பங்காளி எனும் குற்றச்சாட்டுக்கு மேலும் ஆளாகும்.
இலங்கை அரசுடன் ஆன ராஜிய உறவுகளை இந்திய அரசு முறித்துக் கொள்ள வேண்டும். ஐ.நா. மன்றத்திலும் மனித உரிமை ஆணையத்திலும் இலங் கைக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும். ஐ.நா. அறிக்கைக்கு எதிராக இலங்கையில் ராஜபக்சே ஆள் திரட்டுகிறார். பேரணி என்று சவால்விடுகிறார்.
உலக நாடுகளின் கவனம் ஈழத் தமிழரின் அவலம் குறித்து திரும்பி இருக்கும் இந்த வேளையில் ஈழத் தமிழன் நாதியற்றுப் போய் விடவில்லை என்று அனைத்துலகிற்கும் அறிவிக்கும் வகையில் தாய்த் தமிழகத்து தமிழர்கள் ஆர்த்தெழ வேண்டியது தலையாய கடமையாகும்.
சிங்கள அரசைக் கூண்டில் ஏற்றவும், போர்க்குற்றங்களை விசாரித்து சர்வதேச குற்ற வியல் நீதிமன்றக் கூண்டில் ஏற்றிட வலியுறுத்தவும் ஈழத் தமிழர்களுக்கு வலுவான ஆதரவை உலகுக்கு காட்டவும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஏப்ரல் 25 (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பழ.நெடுமாறனும், நானும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முன்னணியினரும் பங்கேற்கும் இந்த ஆர்ப் பாட்டத்தில் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டுமெனக் கழக கண்மணிகளையும் தமிழ் பெருமக்களையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராஜபட்சே அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முன்வரவேண்டும் - நெடுமாறன் :
இந்திய அரசு ராஜபட்சே அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்வரவேண்டும் என்றும், இலங்கையின் போர்க்குற்றம் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 25ம் தேதி சென்னையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2010ஆம் ஆண்டு ஜனவரியில் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் ராஜபட்ச அரசு போர்க் குற்றவாளி என தீர்ப்பளித்து சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரிக்க வேண்டுமென்று கூறியது. இப்போது ஐ.நா. அமைத்த விசாரணைக் குழுவும் ராஜபட்சே அரசு போர்க் குற்றங்கள் புரிந்திருப்பதாகவும் சர்வதேச மனித நலச் சட்டம், மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றை அப்பட்டமாக மீறியிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த காலத்தில் ராஜபட்சே அரசு தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட அட்டூழியங்களை மூடி மறைக்க இந்திய அரசு உதவி செய்தது. ஆனால் இப்போது உலக அரங்கில் ராஜபட்ச போர்க் குற்றவாளி என்பது அம்பலமான நிலையில் இந்திய அரசு தன்னுடைய கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்பதுடன் ஐ.நா.வுடன் இணைந்து நின்று ராஜபட்சே அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்வரவேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி 25 04 11 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகைக்கு முன் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புகளும் மற்றும் பல தோழமை அமைப்புகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றன. தமிழர்கள் அனைவரும் திரண்டு வருமாறு வேண்டிக்கொள்கிறேன்.
இவ்வாறு நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சங்கரன்கோவில் கிருஷ்ணமூர்த்தி - வைகோ நேரில் அஞ்சலி!
சங்கரன்கோவில் கிருஷ்ணமூர்த்தி தீக்குளித்து உயிர் நீத்த தகவல் சென்னையில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே, பத்திரிக்கையாளர்களை அழைத்துக்கொண்டு இரவோடு இரவாக கலிங்கப்பட்டி கிராமத்துக்கு வந்த அவர், சீகம்பட்டி கிராமத்துக்கு 19.04.2011 அன்று காலை 9 மணிக்கு வந்தார்.
கிருஷ்ணமூர்த்தியின் உருவப்படத்தை பார்த்தத வைகோ கண்கலங்கினார். உருவப்படத்துக்கு மாலை அணிவித்துவிட்டு, மவுன அஞ்சலி செலுத்தினார்.
அப்போது பேசிய வைகோ,
நெல்லை மாவட்டம் சீவகம்பட்டியை சேர்ந்த ராமசுப்பு சுப்புலட்சுமி ஆகியோரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 25) என்ற இளைஞன், என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இலங்கை தமிழர்களையும், அவர்களின் பச்சிளங் குழந்தைகளையும் ராஜபக்சே அரசு கொன்று குவித்து விட்டது. இந்த கொடூர சம்பவத்தை என்னால் தாங்க முடியவில்லை என அந்த இளைஞன் தனது வீட்டிலும் நண்பர்களிடத்திலும் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி மனமுடைந்து, வீட்டில் வைத்து இருந்த 2 லிட்டர் பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயம் அடைந்த அவரை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும், ராஜேபக்சேவுக்கு எதிராகவும் பேசி உள்ளார். பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இதுகுறித்து போலீசார் இலங்கை தமிழர்களுக்காக கிருஷ்ணமூர்த்தி உயிரை விட்டதை தெரிந்தும், அதனை சாதாரணமான தற்கொலை என்று பதிவு செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
இலங்கை அரசு மீது போர் குற்றம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்த ஐ.நா. சபை 3 பேர் கொண்ட குழு அமைத்து இலங்கைக்கு அனுப்பியது. அவர்களை அந்த அரசு இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இலங்கை மந்திரி மூலம் ஐ.நா. சபை தலைவர் அவமதிக்கப்பட்டார். இந்திய அரசு, இலங்கை அரசை பல்வேறு நிலைகளில் ஆதரித்து வருகிறது.
உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி பெற்ற போது அதை இலங்கை ராணுவத்தினரால் தாங்க முடியாமல், சர்வதேச எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 4 பேரை யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்சென்று கொன்று, அவர்களது உடல்களை அரசு மருத்துவமனையில் வைத்து உள்ளனர். இதுகுறித்து தமிழகத்தில் மீனவர்களை காணவில்லை என கொந்தளிப்பு ஏற்பட்டது. உடனே இலங்கை அரசு அந்த மீனவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு விபத்தில் இறந்ததாக நாடகமாடுகிறது. எனவே இலங்கைக்கு சர்வதேச அளவில் எந்த உதவியும் இந்தியா செய்ய கூடாது.
தென்மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள இந்த கிருஷ்ணமூர்த்தியின் தியாகம் வெளியே தெரியாமல் இருந்துவிடக் கூடாது. தமிழர்களுக்கு தனி நாடு வேண்டும் என்கிற கிருஷ்ணமூர்த்தியின் உயிர்தியாகத்தின் மூலம் நிறைவேற்றப்படவேண்டும். ஐநா சபையால் போர்க்குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு இந்தியா உதவ வேண்டும். இல்லையென்றால் இந்தியாவும் குற்றவாளிதான் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுவேன்.
இளைஞர்களே போராடுங்கள், உங்களின் உயிர்களை தியாகம் செய்ய வேண்டாம். கிருஷ்ணமுர்த்தியை நம்பி இருந்த ஏழை குடும்பத்திற்கு அண்ணன் பழ.நெடுமாறன் மற்றும் அமைப்புகளோடு கலந்து ஆலோசித்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
தமிழருக்காய் இன்னுயிர் தந்த கிருட்டிணமூர்த்திக்கு நாம் தமிழரின் வீரவணக்கம் - சீமான் :
நாம் தமிழர் கட்சித்தலைவர் செந்தமிழன் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்கா குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ள சீகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொறியாளர் கிருட்டிணமூர்த்தி என்ற நம் தமிழ் உறவு ஈழத்தில் தமிழ்ச் சொந்தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை கண்டு மனம் பொறுக்காமலும், தமிழர்கள் இன்னும் அங்கு படும் இன்னல் கண்டும் நேற்று அதிகாலை 5 மணி அளவில், 3 லிட்டர் கல்லெண்ணையை (பெட்ரோலை), தன் மீது ஊற்றி பற்ற வைத்துக்கொண்டு தன் இன்னுயிரைப் போக்கிக் கொண்டார் என்னும் துயரச் செய்தி என் நெஞ்சில் இடியாய்த் தாக்கியது. அவருக்கு நாம் தமிழர் சார்பில் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ் மண்ணில் இன்னும் இனமானம் அற்றுப்போய் விடவில்லை அது இன்னும் நீறு பூத்த பெரு நெருப்பாக அனைவரின் நெஞ்சிலும் இருக்கிறது என்று அப்துல் ரவூப் தொடங்கி, முத்துக்குமார், ரவிச்சந்திரன், உள்ளிட்டு இப்பொழுது தன் இன்னுயிர் துறந்த கிருட்டிணமூர்த்தி போன்ற எத்தனையோ மானமுள்ள மறத்தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இந்தச் சமூகத்தின் செவிட்டுக்காதில் மட்டும் எம் தமிழ்ச் சொந்தங்களின் கூக்குரலும் அவர்கள் படும் துயரமும் இன்னம் விழவில்லை.
இனம் வீழ்ந்தது அழுவதற்கு அல்ல, மீண்டும் எழுவதற்கு என்றும் அதற்கு நம் அனைவரின் பங்களிப்பும் தேவை என்பதால் உயிரைப்போக்கிக் கொள்வது போன்ற அளப்பரிய தியாகச் செயலில் ஈடுபட வேண்டாம் என்று எம் சொந்தங்களை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன். அதே சமயத்தில் லட்சிய உறுதி கொண்ட கிருட்டிணமூர்த்தி போன்ற மறத்தமிழர்கள் எதற்காக தம் இன்னுயிரை இழந்தார்களோ அந்த லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். அதே சமயத்தில் இனியொரு கிருட்டிணமூர்த்தி தோன்றாமல் இருப்பது, நமது கையில்தான் இருக்கிறது. தமிழர்களின் ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும் தான் அந்த நிலையை உருவாக்கும். நம் இனம் விடுதலை பெறும் வரையில் நம் போராட்டப் பாதையை நாம் தொடர வேண்டும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தமிழன்! சங்கரன்கோவில் கிருஷ்ணமூர்த்தி
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ளது சீகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ராமசுப்பு நாயக்கரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர். இவர் உடன் பிறந்த இரு தம்பிகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்து வந்தார்.
கடந்த சில மாதங்களாகவே, இலங்கையில் அதிபர் ராஜபக்சே நடத்திய இனபடுகொலை, இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றவை கிருஷ்ணமூர்த்தியின் மனதை பாதித்துள்ளன.
தனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்தவில்லை. கடந்த 20 தினங்களுக்கு முன்னர் தனது கிராமத்துக்கு திரும்பினார் கிருஷ்ணமூர்த்தி. தன்னுடைய தாய் தந்தை உள்பட யாரிடமும் தனது உணர்ச்சிகளை காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்திருக்கிறார்.
இதற்கிடையில் 18.04.2011 அன்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி பத்த வைத்துக்கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.
ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்று விட்டது. இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.
மயக்கம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது. அதில்,
இலங்கை
ராமன் - ராவணன்,
ராமன் - ராஜபக்சே,
அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.
அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.
இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சிநேயரை அழைக்கிறேன்.
அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்.
இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
மே 18 துக்க நாள்: நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அறிவிப்பு
முள்ளிவாய்க்காலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட மே 18-ம் தேதியை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு துக்க நாளாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘’அரசின் இனப்படுகொலையின் உச்சமாக அமைந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்தேறிய நாட்களை நினைவுகூரும் வகையில் மே மாதம் 18-ம் தேதியை ’தமிழீழ தேசிய துக்க நாள்’ ஆக நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பிரகடனப்படுத்துகிறது.
முள்ளிவாய்க்கால் தமிழர் வரலாற்றில் ஒரு முக்கியமான ஒரு கூட்டு நினைவு ஆகும். யூதர்கள்மேல் நாஜிகளால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு எவ்வாறு யூத மக்களிடையே ஒரு வரலாற்றுக் கூட்டு நினைவாக அமைந்ததோ அதேபோல தமிழர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் வாழும் அனைத்துத் தமிழர்களுக்கும் முள்ளிவாய்க்கால்; ஒரு முக்கியமான கூட்டுநினைவாக அமைகிறது. தமிழருக்கு எதிரான இனப்படுகொலையின் ஓர் ரத்த சாட்சியமாக இருக்கிறது.
தமிழ் ஈழத் தாயகத்தில் தமிழருக்கான முதல் அரசாக தமிழ் ஈழத் தனியரசு அமைக்கப்படுவதற்கான தேவையினை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையும் அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளும் நமக்கு மேலும் தெளிவாக உணர்த்தி வருகின்றன.
உலகில் நியாயம் மறுக்கப்பட்ட மக்களாக நம்மை உலக சமூகத்தின் மனச்சாட்சியின் முன்னிறுத்தி அனைத்துலக சட்டங்களுக்கும் நடைமுறைகளுக்கும் உட்பட்டு நீதி கோரும் மக்களாக நம்மை வெளிப்படுத்த வேண்டியுள்ளது.
உலகில் நியாயத்துக்காக, நீதிக்காகக் குரல் எழுப்பக்கூடிய அனைத்துச் சக்திகளுடனும் நமது கரங்களை நாம் இறுகக் கோர்க்க வேண்டியுள்ளது. இவற்றுக்கெல்லாம் தமிழர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் கூட்டுநினைவு இதற்கான சக்தியை நம்மெல்லோருக்கும் வழங்கும் என நம்புவோம்.
முள்ளிவாய்க்காலை நினைவுகூரும் தமிழ் ஈழ தேசிய துக்க நாளையொட்டிய வாரத்தில் நினைவு வணக்க நிகழ்வுகள், வழிபாடுகள், கருத்தரங்குகள், ரத்த தானங்கள் உட்பட்ட பல்வேறு வகையான நிகழ்வுகளை நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பல்வேறு நாடுகளிலும் ஏற்பாடு செய்து வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மீது போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும்; ஐ.நா.விடம் நாடு கடந்த தமிழ்ஈழ அரசு
இலங்கை இறுதிப் போரில் போர் குற்றங்கள் நடந்ததா? என கண்டறிய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையில் இலங்கை அரசு போர் குற்றத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளது.
இதையடுத்து நாடு கடந்த தமிழ்ஈழ அரசின் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ருத்திரகுமாரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், ‘’ஐ.நா.குழு விசாரணை அறிக்கை மூலம் இலங்கை அரசும், ராணுவமும் போர் அத்துமீறல்களில் ஈடுபட்டு இன ஒழிப்பு செயல்களை செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அறிக்கையில் 4 முக்கிய அம்சங்கள் கூறப்பட்டுள்ளன. இலங்கை ராணுவம் விரிவான குண்டு தாக்குதல் மூலம் பொதுமக்களை கொன்று விட்டு ஆஸ்பத்திரி, பள்ளி கூடங்கள், மற்றும் பொதுமக்கள் வாழ் விடங்களில் குண்டு வீச்சுகளை நடத்தி உள்ளது.
மனிதாபிமான உதவிகளை மறுத்துள்ளது. போரில் உயிர் தப்பி உள்ளூரில் இடம் பெயர்ந்தோம். விடுதலைப்புலிகள் என சந்தேகப்பட்ட வர்களும், மனித உரிமை மீறல்களை சந்தித்து உள்ளனர். இந்த 4 அம்சங்களுக்கும் இலங்கையில் சிங்கள அரசு, ராணுவத்தால் இனப்படு கொலைகள் நடந்து இருப்பதை தெளிவாக நிரூபித்துள்ளது.
மேலும் இனரீதியான அரசியல், சமூக பொருளாதார புறக்கணிப்பு கொள்கை போன்றவற்றின் மூலம் தொடர்ந்து தமி ழர்கள் இனப்படுகொலை குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும் அறிக்கை சுட்டிகாட்டி உள்ளது. இதுவரை நாடுகடந்த தமிழ்ஈழ அரசும், மற்றவர்களும் கூறி வந்த போர் குற்றக் காட்சிகளை ஐ.நா. குழு அறிக்கை உறுதிபடுத்தி உள்ளது.
இந்த அறிக்கையில் கற்பழிப்பு, சட்டத்திற்கு முரணான உயிர்ப்பறிப்பு ஆள் கடத்தல், பறந்து வட்ட குண்டு தாக்குதல், உணவு மருந்து மறுப்பு, ஊடகங்களை கட்டுப்படுத்துதல், அரசின் மிட்டல் போன்றவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசு மீது ஆரம்பத்தில் இருந்தே தமிழ் மக்கள் சந்தேகப்பட்டார்கள். அவர்கள் சந் தேகப்பட்ட அனைத்தும் நடந்துள்ளது அறிக்கை மூலம் தெரிகிறது.
தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு நடத்திய படுகொலை சம்பந்தமான அறிக்கையை ஏற்கனவே நாடு கடந்த தமிழ்ஈழ அரசு ஐ.நா. சபைக்கு அனுப்பி இருந்தது. ஐ.நா. குழு அறிக்கையின் படி இலங்கை அரசு மீது சர்வதேச அமைப்பு மூலம் போர் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீமூனை கேட்டுக் கொள்கிறோம்.
இலங்கை அரசு தலைவர்களையும், ராணுவ தளபதிகளையும் கூண்டிலேற்ற இதுவே சரியான நேரம் என கருத்துகிறோம். இலங்கையில் நடக்கும் இனவெறி தமிழர்களிடமும், சிங்களர்களிடமும் நிரந்தர முரண்பாட்டை உருவாக்கி விட்டது. எனவே இரு தரப்பினரும் ஒன்றாக இருக்க சாத்தியம் இல்லை என்பதையும் சுட்டிகாட்ட விரும்புகிறோம்.
இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முன் வர வேண்டும்: பழ.நெடுமாறன்
ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசு முன் வர வேண்டும். இதனை தமிழர்கள் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அரசு அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த மக்களை படுகொலை செய்தது, மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி நோயாளிகளைக் கொன்றது, போர் முடிந்த பிறகு சித்ரவதை, முகாம்களில் அடைத்து படுகொலை, பாலியல் வன்முறை நிகழ்த்தியது, செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் மீது தாக்குதல் நடத்தியது, அரசுக்கு எதிரான பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்களை படுகொலை செய்தது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு மீது ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை குழு சுமத்தியுள்ளது.
2010 ஜனவரியில் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் ராஜபட்சே அரசாங்கத்தை போர்க் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததோடு சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரிக்க வேண்டும் என்றும் கூறியது. இப்போதும் ஐ.நா.வும் மேற்கு நாடுகளும் ராஜபட்சே அரசை போர்க் குற்றவாளிகள் என சுட்டிக் காட்டியுள்ளன.
ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிலிருந்து ராஜபட்சேவை காப்பற்றியதன் மூலம், அவரது கொடுஞ்செயல்களை மூடி மறைக்க இந்தியா துணை நின்றது.
இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவி உட்பட அனைத்து உதவிகளையும் செய்ததால், ராஜபட்சேவின் அட்டூழியங்களை மூடி மறைக்க இந்திய அரசு முயன்றது. இப்போது உலக அரங்கில் ராஜபட்சே போர்க் குற்றவாளி என்பது அம்பலமாகியுள்ளது.
இனியாவது தனது கடந்த காலத் தவறுகளுக்கு இந்திய அரசு மன்னிப்புக் கேட்பதுடன், ஐ.நா.வுடன் இணைந்து இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த முன் வர வேண்டும். இதனை தமிழர்கள் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழினப் படுகொலை செய்த அரசிடமே விசாரணைப் பொறுப்பா? ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரை நியாயமற்றது – சீமான் கண்டனம்
ஐ.நா.நிபுணர் குழு, ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனிடம் அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் சிறிலங்க அரசுப் படைகள் நிகழ்த்திய போர்க் குற்றங்கள், வன்னி முள்வேலி முகாம்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது பன்னாட்டு சட்டங்களின் கீழ் சிறிலங்க அரசே விசாரிக்க வேண்டும் என்றும், அதனை கண்காணிக்க பன்னாட்டுக் குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஐ.நா. நிபுணர் குழு அளித்து பரிந்துரை நியாயமற்றது, முறையற்றது.
மார்சுகி தாருஸ்மான் தலைவராகவும், யாஷ்மின் சூக்கா, ஸ்டீவன் ராட்னர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட ஐ.நா.நிபுணர் குழு, பொதுச் செயலர் பான் கி மூனிடன் அளித்துள்ள அறிக்கை, உலகத் தமிழினத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தமிழர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட இனப் படுகொலைப் போரை நடத்திய சிறிலங்க அரசிடமே விசாரணைப்ப பொறுப்பை ஒப்படைப்பது, கொலைகாரனிடமே வழக்கு விசாரணையை ஒப்படைப்பதற்கு நிகரான கேலிக்கூத்தாகும்.
தமிழர்களுக்கு எதிரான அந்தப் போரில் மிகப் பெரிய அளவிற்கு போர்க் குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், மக்கள் பாதுகாப்பு வலையத்தில் தஞ்சமடைந்த மக்கள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளதெனவும், போர்ப் பகுதியில் சிக்கியிருந்த மக்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் செல்வது திட்டமிட்டு தடுக்கப்பட்டுள்ளது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ள நிபுணர் குழு, இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்ட சிறிலங்க அரசிடம் விசாரணைப் பொறுப்பை எந்த அடிப்படையில் ஒப்படைக்குமாறு கூறுகிறது?
சிறிலங்க அரசு செய்த மிகப் பெரிய போர்க் குற்றம், தங்களோடு இருந்த மக்களைக் காப்பாற்றிக் கரைசேர்க்க, துப்பாக்கிகளை மெளனிக்கின்றோம் என்று அறிவித்துவிட்டு, வெள்ளைக் கொடிகளுடன் சரணடைய வந்த புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், அமைதி செயலகத் தலைவர் புலித்தேவன் உள்ளிட்ட 300 பேரை சித்தரவதை செய்து படுகொலை செய்ததும், அதன் பிறகு, மே 18ஆம் தேதி ஒரே நாளில் முள்ளி வாய்க்காலிலும், வட்டுவாகலிலும் காயமுற்று உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததும்தான்.
சரணடைய வந்த புலிகளின் அமைப்பினரை கொன்றதற்கும், இறுதிக் கட்டப்போரில் 50 ஆயிரத்திற்கும் மேலான மக்களை கொன்று குவித்ததற்கும் உத்தரவிட்டது சிறிலங்க அரசுதானே? சிறிலங்க அரசின் பாதுகாப்புச் செயலராக உள்ள அதிபர் ராஜபக்சவின் தம்பி கோத்தபய ராஜபக்சா அல்லவா? உலகம் அறிந்த இந்த உண்மைக்கும் பிறகும் விசாரணை பொறுப்பை சிறிலங்க அரசிடன் வழங்கு என்று பரிந்துரைப்பது அங்கு நடந்த உண்மைகளை வெளிக்கொணரவா? அல்லது தமிழினப் படுகொலையை புதைக்கவா?
சிறிலங்க அரசிற்கு எதிராக ஆதாரப்பூர்வமான குற்றச்சாற்றுகளை பட்டியலிட்டுள்ள நிபுணர் குழு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அடிப்படையற்ற குற்றச்சாற்றுகளையும் அறிவைச் செலுத்தாமலேயே பட்டியலிட்டுள்ளது வருத்தத்திற்குரியதாகும். தங்களோடு இருந்த மக்களை கேடயமாக விடுதலைப் புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற குற்றச்சாற்றை நிபுணர் குழு வைத்துள்ளது. தமிழினத்தையே அழித்தொழிக்கும் திட்டத்தோடு செயலாற்றிவரும் சிங்கள பெளத்த இனவாத அரசின் இராணுவத்தை, தமிழர்களை கேடயமாகக் கொண்டு எவ்வாறு தடுத்திட முடியும்? கொத்துக் கொத்தாக தமிழர்களைக் கொன்று குவித்துவரும் சிறிலங்க அரச படைகளுக்கு அப்படிப்பட்ட மனிதாபிமானம் உண்டென்று ஐ.நா.நிபுணர் குழு நம்புயுள்ளது வியப்பைத் தருகிறது.
உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் ஒரே கோரிக்கை, இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களை திட்டமிட்டு அழித்தொழித்த சிறிலங்க அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட வேண்டும் என்பதே. ஆனால், அதனைச் செய்யுமா ஐ.நா. என்ற ஐயம் நிபுணர் குழு பரிந்துரையால் ஏற்பட்டுள்ளது.
இலங்கை இனப் பிரச்சனை தொடர்பில், அங்கு நடந்த தமிழின அழிப்பிற்குக் காரணமான சிறிலங்க அரசு தண்டிக்கப்பட வேண்டும், அதற்கு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை இன்றியமையாதது. இரண்டாவது, ஈழத் தமிழினத்தின் தேச, அரசியல் விடுதலையை உறுதிசெய்ய பன்னாட்டு கண்காணிப்பின் கீழ் வாக்கெடு்ப்பு நடத்த வேண்டும். இவை இரண்டையும் ஐ.நா. செய்யத் தவறுமானால், அது சிறிலங்க அரசு நடத்திய இனப் படுகொலையை மறைக்க முயற்சிக்கிறது என்ற குற்றச்சாற்றி்ற்கு ஆளாகும். அப்படியொரு நிலை ஏற்பட்டால் ஐ.நா.விற்கு எதிராக உலகத் தமிழினம் பொங்கி எழும் என்று எச்சரிக்கின்றேன்.
போர்குற்ற அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்துவதா! – இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்த்து அதிபர் ராஜபட்ச பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதற்கு ஐநா சபை எச்சரிக்கை தெரிவித்துள்ளது .இதுகுறித்து ஐநாவின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக், “ஐநாவுக்கு எதிரான ராஜபட்சவின் சவாலை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை.” என்று கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
“கொழும்புவில் பணியாற்றும் ஐநா கிளை அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு.” என்றும் பர்ஹான் ஹக் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், “ஐநா உறுப்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கையிடம் வழங்கப்பட்ட அறிக்கையின் தகவல்கள் வேண்டுமென்றே கசிய விடப்பட்டுள்ளது கடுமையானது .” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐநா நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மே தினத்தில் ஐநாவுக்கு எதிராக பேரணி நடத்த ராஜபட்சே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐநா சபை இவ்வாறு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)