Labels

Wednesday, June 8, 2011

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்



தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா 08.06.2011 அன்று ஒரு தனி தீர்மானத்தை தாக்கல் செய்து முன்மொழிந்து பேசினார். அதன் விவரம் வருமாறு:

தமிழனின் பண்பு யாருக்கும் தாழ்ந்தவனாக இருப்பதல்ல. யாரையும் தாழ்த்துவதல்ல என்றார் பேரறிஞர் அண்ணா. இப்படிப்பட்ட உயரிய எண்ணத்தைக் கொண்ட தமிழர்கள் உலகெங்கும் பரவி இருக்கிறார்கள். மொழி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தில் ஒற்றுமையுடன் திகழும் இலங்கைத் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கும் இடையே உள்ள தொப்புள் கொடி உறவு அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

இலங்கைக்கு விடுதலை கிடைத்து விட்டாலும், அங்கு வாழும் தமிழர்கள் அவர்கள் நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படு வதை எதிர்த்து, இலங்கைத் தமிழர்கள் பல்லாண்டு காலமாக போராடி வந்தனர். இவர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து தேவையான அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து, தமிழர்கள் கவுரவத்துடனும், சம உரிமையுடனும், சுயமரியாதையுடனும் வாழ்வதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காமல் அவர்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தது.

பரவலாக குண்டுமழை பொழிந்து அப்பாவி மக்களை கொன்று குவித்தது. மனிதர்கள் வாழும் இடங்களின் மீதும், மருத்துவ மனைகள் மீதும் குண்டுகளை வீசியது. மனிதாபிமான முறையில் செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்தது. உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்கள் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்று சந்தேகப்படக்கூடியர்கள் உள்பட இந்தச் சண்டையில் பலியானவர்கள் மற்றும் எஞ்சியுள்ளவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது.

இலங்கை அரசை விமர்சிப்பவர்கள் மற்றும் ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதிக்கு வெளியே இருப்பவர்கள் மீது மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது. போன்ற கடுமையான, நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை உள்நாட்டுப்போரின் போது இலங்கை அரசு நிகழ்த்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்து இருக்கிறது.

எனவே, இத்தகைய போர்க் குற்றங்களை நிகழ்த்தியவர்களை போர்க்குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும், தற்போது இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பி, சிங்களர்களுக்கு இணையாக கண்ணியமாக வாழவகை செய்யும் வரையில், அனைத்து குடியுரிமை களையும் தமிழர்கள் பெறும் வரையில், மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை இந்திய அரசை கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதனை முன்மொழிந்து முதல்வர் ஜெயலலிதா பேசியது:

"இலங்கை நாட்டுக்கு பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை கிடைத்துவிட்டாலும் அங்கு வாழும் தமிழர்கள், தங்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தர குடிமக்களாக கருதப்பட்டனர். இதனையடுத்து, தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தும் "சுயாட்சி அந்தஸ்து", "தனி ஈழம்" உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் 1980-களில் இருந்து தொடர்ந்து குரல் எழுப்பி போராடியதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

அதிமுக உட்பட தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும், அவர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதிலும் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார்கள். இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு தங்களுடைய தார்மீக ஆதரவினையும் அளித்தனர்.

இந்தச் சூழ்நிலையில், தமிழீழம் என்ற போர்வையில் தீவிரவாதம் தலைதூக்க ஆரம்பித்து இதன் காரணமாக தமிழ்ச் சகோதரர்களே படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் எல்லாம், நடந்தேறின. இதன் உச்சகட்டமாக இந்திய நாட்டின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கும் வகையில், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பினரால் 1991 ஆம் ஆண்டு தமிழ் மண்ணில் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது இருந்த அனுதாபம் கடுமையான எதிர்ப்பாக மாறிவிட்டது.

1992-ஆம் ஆண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது என்னுடைய வற்புறுத்தலின் பேரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை 1967 ஆம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு தடை செய்து, அந்தத் தடை உத்தரவு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் முதல் குற்றவாளி பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சார்ந்த எவரையும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி 2002-ஆம் ஆண்டு இந்தச் சட்டமன்றப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அரசின் அதிபராக மஹிந்தா ராஜபக்ஷே பொறுப்பேற்றுக் கொண்டார். 2006-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழகத்திலும் துரதிர்ஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. மைனாரிட்டி தி.மு.க. அரசிற்கு மு.கருணாநிதி தலைமை வகித்தார். மத்தியிலும் தி.மு.க. அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி 2004-முதல் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தது.

2008-ஆம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும்; இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும்; இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு இவை அனைத்தும் நன்கு தெரிந்திருக்கும்.

திமுக அரசு மீது குற்றச்சாட்டு...

இந்தியாவிடமிருந்து தனக்குத் தேவையான ராணுவ உதவிகளைப் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் 2008-ஆம் ஆண்டு இறுதியிலும், 2009-ஆம் ஆண்டு துவக்கத்திலும், இலங்கைத் தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது. இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க. வலியுறுத்த வேண்டும் என்றும்; இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லையெனில் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் பல முறை வற்புறுத்தினேன்.

ஆனால், அப்போது மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சராக இருந்த கருணாநிதியோ, அதைச் செய்யவில்லை. மாறாக, "அனைத்துக் கட்சிக் கூட்டம்", "சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம்"; "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்", "மனிதச் சங்கிலி போராட்டம்" "பிரதமருக்கு தந்தி"; "நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா என்ற அறிவிப்பு"; "ராஜினாமா கடிதங்களை தானே பெற்றுக் கொண்டது"; "இறுதி எச்சரிக்கை என்ற அறிவிப்பு" என பல்வேறு வகையான நாடகங்கள் தான் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நடத்தப்பட்டன.



இவற்றின் உச்சகட்டமாக, காலை சிற்றுண்டியை வீட்டில் முடித்துவிட்டு தலைமைச் செயலகம் செல்லும் வழியில் திடீரென்று "போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்" என்று அறிவித்து கடற்கரையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார் கருணாநிதி.

மதிய உணவு வேளை வந்தவுடன் நண்பகல் 12 மணி அளவில் "விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக் கொண்டுவிட்டது" என்ற செய்தியை ஊடகங்களுக்கு அறிவித்துவிட்டு தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு விட்டார். இதன் மூலம் "உண்ணாவிரதம்" என்னும் அறப் போராட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டார் முன்னாள் முதலமைச்சர்.

"போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது" என்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேச்சைக் கேட்டு பாதுகாப்பாக பதுங்குக் குழிகளில் பதுங்கியிருந்த லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் வெளி வந்தனர். இவ்வாறு வெளிவந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.

இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கை ராணுவ முகாம்களில் கம்பிகளால் ஆன வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டதாகவும்; முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண்கள் இலங்கை ராணுவப் படையினரின் கண் முன்னேயே பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழிக்கக் கூடிய நிலைமைக்கும், குளிக்கக் கூடிய நிலைமைக்கும் ஆளாக்கப்பட்டதாகவும்; தமிழர்கள் குடியிருந்த பகுதிகளில் எல்லாம் சிங்களர்கள் குடியேறி இருப்பதாகவும் செய்திகள் வந்தன.

ஆனால், கனிமொழி உட்பட ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இலங்கை சென்று இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுடன் சிரித்துப் பேசி; விருந்துண்டு; பரிசுப் பொருட்களை பெற்று சென்னை திரும்பிய நாடாளுமன்றக் குழுவோ, "இலங்கைத் தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள்" என்று ஒரு உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டது. உண்மை நிலை என்னவென்றால், போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் மறுவாழ்வு பெறாமல் இன்னமும் அவதிப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

"போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது" என்ற உண்மைக்கு மாறான தகவலைக் கூறி இலங்கைத் தமிழர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. "தமிழினப் பாதுகாவலர்" என்று தன்னைத் தானே சொல்லிக் கொண்டு "தமிழினப் படுகொலை"-க்கு துணை போயிருப்பதை பார்க்கும் போது "உறவு போல் இருந்து குளவி போல் கொட்டுவது" என்னும் பழமொழி தான் நினைவிற்கு வருகிறது.

இவற்றை எல்லாம் நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம் முன்னாள் முதலமைச்சரை குற்றம் சாட்ட வேண்டும்; முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. அப்பாவி இலங்கைத் தமிழர்கள் உயிர் இழப்பதற்கு முந்தைய அரசு காரணமாக அமைந்துவிட்டதே என்ற ஆற்றாமையால் தான் இவற்றை நான் இங்கே குறிப்பிடுகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. அரசின் சுயநலப் போக்கு மற்றும் கையாலாகாத்தனம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பலியாகி இருக்கிறார்கள்; குண்டு மழைக்கு விலக்களிக்கப்பட்ட பகுதி மற்றும் மருத்துவமனைகள் மீதெல்லாம் இலங்கை ராணுவம் குண்டுமழை பொழிந்து இருக்கிறது; மனிதாபிமான அடிப்படையில் நிவாரணப் பொருட்கள் மக்களை சென்றடைவதை இலங்கை அரசு தடுத்து நிறுத்தி இருக்கிறது; உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறை காரணமாக ஏராளமான தமிழர்கள் மரணமடைந்துள்ளனர்; மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளன. இந்தக் காரணங்களுக்காகத்தான் இந்தத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இலங்கை மீது பொருளாதார தடையின் அவசியம்...

இங்கே பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் சௌந்தரராஜன், பொருளாதாரத் தடையைக் கொண்டு வர வேண்டுமென்ற வரிகளை விலக்கிக் கொண்டால் என்ன என்ற ஒரு கருத்தை இங்கே தெரிவித்தார். இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்களே என்ற ஒரு கருத்தைச் சொன்னார். இப்போதே இலங்கை அரசு யாருக்கும் பணியவில்லை. அங்கே வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களர்களோடு அனைத்து உரிமைகளையும், குடியுரிமைகளையும் வழங்க வேண்டுமென்று இந்தியா சொன்னாலும், யார் சொன்னாலும், அவர்கள் அதை மதிக்கவில்லை. அதனால், அவர்களை எப்படி வழிக்குக் கொண்டு வருவது, அவர்களை வழிக்குக் கொண்டு வருவதற்கு ஒரே வழி பொருளாதாரத் தடைகள்தான். இதுவொரு தற்காலிகமான ஒரு முறைதான்.

இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். வேறு வழியில்லை என்பதற்காகத்தான் இதைச் சேர்த்திருக்கிறோம்.

ராஜபக்ஷே போர்க்குற்றவாளியா?

இந்தத் தீர்மானத்தின்மீது இங்கே கருத்துத் தெரிவித்து பேசிய இன்னும் சில உறுப்பினர்கள் பேசுகின்றபோது, ஐ.நா. சபை ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளி என்று அறிவித்து விட்டதாக இங்கே தெரிவித்தார்கள். அப்படியில்லை. ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் ஒரு குழுவை அமைத்து, அவர்கள் அங்கே நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்களைப் பற்றி ஒரு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இப்படிப்பட்ட போர்க் குற்றங்களெல்லாம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது; அங்கே வாழ்கின்ற தமிழ் மக்கள் மீது இத்தகைய குற்றங்களெல்லாம், கொடுமைகளெல்லாம் நிகழ்த்தப்பட்டன என்பதையெல்லாம் தெரிவித்துவிட்டு, இதனை இலங்கை அரசே விசாரிக்க வேண்டும் என்றுதான் சொல்லியிருக்கிறார்களே தவிர, இதை உறுதியும் செய்யவில்லை - ராஜபக்ஷேவோ, மற்றவர்களோ போர்க் குற்றவாளிகள் என்று ஐ.நா. சபை அறிவிக்கவும் இல்லை.

அதனால்தான் இந்தத் தீர்மானத்தில் இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்.

எனவே, மனிதாபிமானமற்ற முறையில் பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுவதற்குக் காரணமானவர்களை போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும்; இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழு மறுவாழ்வு அளித்து, அவர்கள் வசித்த இடங்களிலேயே அவர்களை மீண்டும் குடியமர்த்தி; சிங்களர்களுக்கு உரிய அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு இலங்கை அரசு வழங்கும் வரையில் மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை அரசு மீது பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, அரசு சார்பில், என்னால் முன்மொழியப்பட்ட தீர்மானத்தினை இந்த மாமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்று ஜெயலலிதா பேசினார்.

இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்துவது தொடர்பான தீர்மானம் மீது உறுப்பினர்கள் சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்), துரைமுருகன் (திமுக), விஜயகாந்த் (தேமுதிக) ஆகியோர் பேசினர். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.

முன்னதாக, தி.மு.க. சார்பில் துரைமுருகன் பேசினார். அவரும் இந்த தீர்மானத்தை வரவேற்பதாக கூறினார். அவரை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசும் போது தி.மு.க. தலைவர் கருணாநிதி பற்றியும், தி.மு.க. ஆட்சியைப் பற்றியும் சில கருத்துக்களை கூறினார். இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு குரல் கொடுத்தனர்.

விஜயகாந்த் கருத்துக்கு பதில் அளிக்க வாய்ப்பு தர வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர் துரைமுருகன், சபாநாயகர் ஜெயக்குமாரிடம் கோரிக்கை வைத்தார். விஜயகாந்த் பேசி முடிந்த பிறகும் துரைமுருகனுக்கு பதில் அளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து துரைமுருகன் தலைமையில் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இருந்து வெளியேறிய பிறகு துரை முருகன் கூறியதாவது:

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடும் தீர்மானத்தை முதல் அமைச்சர் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை ஆதரிப்பது அனைவரின் கடமை. நாங்களும் ஆதரிக்கிறோம் என்று பேசினேன்.

சிலர் தி.மு.க.வை மறைமுகமாக தாக்கி பேசினார்கள். நான் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தனிப்பட்ட தாக்குதலை வெளியே வைத்துக் கொள்ளலாம் என்று கூறினேன். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் பேச தொடங்கிய உடனே தி.மு.க. தலைவர் கருணாநிதியையும், தி.மு.க.வையும் சரமாரியாக தாக்கி பேசினார்.

எனக்கு பதில் சொல்ல தெரியும். விளக்கம் அளிக்க அனுமதி வேண்டும் என்று கேட்டேன். எதிர்க்கட்சி தலைவர் பேசி முடித்த பிறகு என்னை பேச அனுமதிப்பதாக கூறினார். ஆனால் அவர் பேசி முடிந்த பிறகும் அனுமதி தரவில்லை. எனவே நாங்கள் வெளிநடப்பு செய்தோம். ஆனால் நாங்கள் இந்த தீர்மானத்தை ஆதரித்தோம்
என்றார்.


இலங்கையுடனான ராஜ்ய உறவை இந்திய அரசு துண்டிக்க வேண்டும் - பேரவையில் உறுப்பினர்கள் வலியுறுத்தல் :


இலங்கை அரசு மீது பொருளாதார தடை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா தனித் தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது உறுப்பினர்கள் பேசியதாவது:

செ.கு.தமிழரசன் (இகுக):

உலகம் முழுவதும் உள்ள மக்கள் எதிர்பார்க்கும் இந்த தீர்மானத்தை வரவேற்கிறேன். இலங்கை தமிழர்கள் படுகொலை, கற்பழிப்பு என்று பல்வேறு துன்பங்களுடன் சொந்த மண்ணிலேயே வாழ முடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் துன்பங்களுக்கு மருந்தாக இந்த தீர்மானம் உள்ளது.

கிருஷ்ணசாமி (பு.த):

முள்ளிவாய்க்கால் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரே நாளில் 30 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். அதற்கான முன்னோட்டமாக இந்த தீர்மானம் உள்ளது. என்ன நடக்கிறது என்பதை அறிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.

ஜவாஹிருல்லா (ம.ம.க):

தமிழ் மக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் இலங்கையுடனான ராஜ்ய உறவை உடனடியாக துண்டிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

கலையரசன் (பா.ம.க):

சரித்திர புகழ் வாய்ந்த இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ள முதல்வரையும், அரசையும் பாராட்டுகிறோம். கர்நாடக மக்களுக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் கட்சி பாகுபாடின்றி, அனைவரும் ஒன்றாக நிற்பார்கள். அதேபோல், நாமும் இலங்கை தமிழர்களுக்காக ஒரு அணியில் நின்று குரல் கொடுக்க வேண்டும்.


என்.ஆர்.ரங்கராஜன் (காங்.):


இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக பல்வேறு நலன் தரும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. காங்கிரஸ் சார்பில் இந்த தீர்மானத்தை ஆதரிக்கிறோம்.

நஞ்சப்பன் (மார்க்சிஸ்ட்):

இலங்கையில் தமிழர் பிரச்னைக்கு காரணம் இந்திய அரசுதான் என்று உலக தமிழர்கள் நினைக்கிறார்கள். எனவே, இந்திய அரசு தனது போக்கை மாற்ற வேண்டும். உலக அரங்கில் இலங்கை அரசை தனிமைப்படுத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் 500 பேரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றுள்ளது. பகை நாடான பாகிஸ்தான்கூட நமது மீனவர்களை சுடுவதில்லை. மத்திய அரசின் தவறான போக்கினால்தான் இந்த தேர்தலில் மக்கள் பலத்த அடி கொடுத்துள்ளனர். இலங்கை அரசுக்கு எதிரான போர்ப்பிரகடனமாக இந்த தீர்மானம் உள்ளது.

குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்):

ராஜிவ்காந்தி கொலையை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பலியான நேரத்தில் அவருடன் இருந்த எங்கள் கட்சி செயலாளர் பாண்டியனின் உடலில் இன்றளவும் குண்டு துகள்கள் உள்ளன. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு பின்கள உதவிகளை செய்து மக்கள் நடமாட்டங்களை அறிய உதவிகளை மத்திய அரசு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழர் விரோத கட்சியாக உள்ளது. அதோடு துணை நிற்கிற கட்சிகளும் அப்படித்தான்.

சவுந்திரராஜன் (மார்க் சிஸ்ட்):

இலங்கை யில் போ ரால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய சர்வ தேச செஞ்சிலுவை சங்கத்தை அனுமதிக் கவில்லை. வெளிநாட்டு பத்திரிகையாளர்களை அனுமதிக்கவில்லை. அதே நேரத்தில், இலங்கை மீது பொருளாதர தடை விதித்தால், அங்குள்ள அப்பாவி தமிழ் மக்களும் பாதிக்கப்படுவர். இலங்கை யில் போர்க் குற்றம் விளைவித்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உறுதியாக வலியுறுத்த வேண்டும்.

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கக்கோரி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் - வைகோ வரவேற்பு :

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


இலங்கையில் ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு மீது, ஐ.நா. சபை போர்க் குற்றவாளி என்று அறிவித்து, விசாரணை நடத்த வேண்டும் என்றும், அதற்கு இந்திய அரசு ஐ.நா. சபையை வற்புறுத்த வேண்டும் என்றும், மேலும் தமிழர்களுக்கு சிங்கள அரசு துன்பம் விளைவிப்பதைத் தடுக்கவும் தமிழர்களுக்குப் பாதுகாப்பான நிலை ஏற்படுத்தவும் இலங்கை அரசு மீது பிற நாடுகளோடு சேர்ந்து இந்திய அரசும் பொருளாதாரத் தடை கொண்டு வர வேண்டும் என்றும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

சட்டமன்றத்தில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது, தமிழகத்திலும் உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறது.


இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சே போர்க்குற்றவாளி என்பதற்கு வலு சேர்க்க இந்தியத்தலைவர்களின் ஆதரவை திரட்ட வேண்டும் - ஜெ.வுக்கு நெடுமாறன் வேண்டுகோள்:

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’ராஜபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்து நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு அவரை மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.

ஆறரைக் கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இத்தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும்.

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும்.

இந்தியா முழுவதும் உள்ள அகில இந்தியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் ஆகியவற்றின் தலைவர்களை அழைத்து டெல்லியில் கூட்டம் ஒன்று நடத்தி இத்தீர்மானத்திற்கு அவர்களின் ஆதரவையும் பெறுவதின் மூலம் மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கவும், இந்தியா முழுவதும் இந்தப் பிரச்சினைக்கு ஆதரவு திரட்டவும் வழிவகுக்கும்.

எனவே இந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு முதல்வர் ஜெயலலிதாவை வேண்டிக்கொள்கிறேன்
’’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழினத்திற்கு விடிவு தேடித் தரும் தீர்மானம் – சீமான் :

தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியென்றும், சிறிலங்க அரசிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு நன்றி தெரிவித்தும் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை.

ஈழத் தமிழினத்தை திட்டமிட்டு இனப் படுகொலை செய்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்றும், இன்றளவும் தமிழின அழிப்பில் ஈடுபட்டுவரும் அந்நாட்டிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதை நாம் தமிழர் கட்சி மகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.

சிங்கள பெளத்த இனவாத அரசின் தமிழின அழிப்பிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு, கண்ணியமிக்க, சமவுரிமையுடைய வாழ்வைப் பெறுவதற்காக கடந்த அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக போராடிவரும் ஈழத் தமிழினத்தின் விடுதலை வரலாற்றில் தமிழக சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஒரு திருப்பு முனையாகும். அதற்காக பெரும்பான்மை பலத்துடன் 3வது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களுக்கும், தீர்மானத்திற்கு ஆதரவாக நின்ற சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் நாம் தமிழர் கட்சி இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த, பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த மூவர் குழு அளித்த அறிக்கையின் பரிந்துரைத் தொடர்பாக எந்த வித நடவடிக்கையும் எடுக்க முன்வராத சிறிலங்க அரசிற்கும், அந்த அறிக்கையின் மீது ஆதரவு நிலையெடுக்காத இந்திய அரசிற்கும் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இத்தீர்மானம், தமிழினத்தின் சார்பாக விடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமான, ராஜதந்திர ரீதியிலான நியாயமான அழுத்தமாகும்.

‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று கூறி, ஈழத் தமிழினத்திற்கு எதிரான திட்டமிட்ட இனப் படுகொலைப் போரைத் தொடங்கி, இந்தியா உள்ளிட்ட பன்னாட்டு ஆதரவுடன் இரண்டரையாண்டுக் காலம் நடத்தப்பட்ட அந்தப் போரில் மட்டும் ஒன்றரை இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்ச அமைத்த கற்ற பாடங்கள் மற்றும் இணக்கப்பாடு ஆணையத்தின் (Lessons Learnt and Reconciliation Commission – LLRC) முன்னின்று ஈழத்தில் நடந்த மானுடப் பேரழிவு குறித்து தனது சாட்சியத்தை அளித்த மதிப்பிற்குரிய மன்னார் மாவட்டப் பேராயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள், இந்தப் போருக்கு முன் இருந்த வன்னி பகுதி மக்கள் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில், போர் முடிந்த பிறகு வன்னி முள்வேலி முகாம்களுக்கு வந்த சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 1,46,679 பேர் குறைவாக உள்ளனர் என்றும், அவர்கள் கொல்லப்பட்டோ அல்லது காணாமல்போய் உள்ளவர்களாகவோ இருக்கலாம் என்று எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் அளித்தார். உலகை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த உண்மையை இன்று வரை சிறிலங்க அரசு மறுக்கவில்லை. ஆனால், அதுபற்றி இன்று வரை எந்த வினாவையும் சிறிலங்க அரசை நோக்கி இந்திய அரசு எழுப்பவில்லை. இது இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையில் அது உடந்தையாக நின்றது என்பதற்கான மற்றுமொருச் சான்றாகும்.

இந்திய அரசின் மெளனமே, சிறிலங்க அரசு திட்டமிட்டுச் செய்த மாபாதகச் செயலை இனப் படுகொலை என்று சர்வதேசம் கூற முன்வராததற்குக் காரணமாகும். எனவேதான் தமிழின அழிப்பு என்பது போர்க் குற்றம் என்ற அளவோடு நி்ற்கிறது. இந்த நிலையில்தான், தமிழினத்திற்கு எதிராக சிறிலங்க அரசு போர்க் குற்றம் செய்துள்ளது என்பது நம்பகமான குற்றச்சாற்று என்று ஐ.நா.நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்தது. அந்த அடிப்படையிலேயே, ராஜபக்சவை போர்க் குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இனப் படுகொலைப் போர் முடிந்து வன்னி முகாம்களில் வந்தேறிய சற்றேறக்குறைய 3 இலட்சம் தமிழர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அவர்களுடைய வாழ்விடங்களில் குடியமர்த்தப்படவில்லை. ஏனெனில் தமிழர்கள் வாழ்ந்த பூமியில் சிங்களர்கள் குடியேற்றம் நடைபெறுகிறது. அவர்களுடைய காணிகள் சிங்களர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களை நிரந்தரமாக ஒடுக்குவதற்கு, அவர்களின் பாரம்பரிய பூமியின் பெரும்பகுதியை இராணுவப் பகுதிகளாக (Cantonments) சிங்கள இனவெறி அரசு அறிவித்துள்ளது. வாழ்ந்த இல்லங்கள் போரினால் சிதைக்கப்பட்டு, வாழ்க்கைக்கு ஆதாரமான காணிகள் பறிக்கப்பட்டு, பிழைக்க வழியேதுமின்றி, ஈழத் தமிழினம் சிதறடிக்கப்பட்டு, சின்னபின்னமாக்கப்பட்ட நிலையில், சிறிலங்க அரசை மண்டியிடச் செய்ய வேண்டுமெனில், அந்நாட்டிற்கு எதிராக பொருளாதார தடையை கடைபிடிப்பதே ஒரே வழியாகும். அந்த புரிந்துணர்வோடு தமிழக சட்டப் பேரவை இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடையை அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது ராஜதந்திர ரீதியில் மிகச் சாமர்த்தியமான தீர்மானமாகும்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் கொண்டு வந்த தமிழ் மக்கள் எதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்தார்களோ அந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள், அனைத்துக் கட்சிகளின் பேராதரவோடு நிறைவேற்றியுள்ளார்.

இதற்காக தமிழினம் அவருக்கும், தமிழக சட்டப் பேரவைக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் என்றென்றும் நன்றி தெரிவிக்கும் என்பது மட்டுமின்றி, இத்தீர்மானம் தமிழினம் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு ஒரு புத்துணர்வை தந்துள்ளது என்பதை நன்றியுடன் நாம் தமிழர் கட்சி தெரிவித்துக்கொள்கிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, காணாமல் போன மீனவர்கள் 4 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் தெரிவித்ததற்கும் நாம் தமிழர் கட்சி நன்றி கூறுகிறது.


அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாக பயன்படுத்த வேண்டும் - திருமாவளவன்:

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’உலகத்தமிழர்களின் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் தமிழக அரசு இன்று சட்டப்பேரவையில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை விடுதலை சிறுத்தைகள் மனதார வரவேற்கிறது.

ஐநா பேரவையால் நியமிக்கப்பட்ட ஆய்வுக்குழு சிங்கள இனவெறி அரசின் போர்க்குற்றத்தை குறிப்பாக ராஜபக்சேயின் போர்க்குற்றங்களை அண்மையில் அம்பலப்படுத்தியது.


அதன் அடிப்படையில் ராஜபக்சேவையும் சிங்கள இனவெறி அரசின் இதரப் போர்க்குற்றவாளிகளையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்க வேண்டும் என தமிழகத்தில் இருந்தும் உலகின் பிற நாடுகளில் இருந்தும் கோரிக்கைக்குரல்கள் எழுந்தன.

அத்துடன் புதிதாக ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள அதிமுக தலைமையிலான தமிழக அரசும் இக்கோரிக்கையை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்றி இந்திய அரசை வற்புத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் அதிமுக அரசு இத்தகைய தீர்மானத்தை
நிறைவேற்றி யிருப்பது ஆறுதலை அளிப்பதாக அமைந்துள்ளது.

ஆனால் கடந்த காலங்களில் தமிழக மக்களின் உணர்வுகளையும் ஒட்டுமொத்தத் தமிழினத்தின்
அவலங்களையும் ஒரு பொருட்டாகவே மதிக்காத இந்திய அரசு தமிழக அரசின் இந்தத்தீர்மானத்தையும் ஒரு பொருட்டாக மதித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க இயலாத நிலையே உள்ளது.

ஈழத்தமிழர்கள் தொடர்பாக இது வரை தமிழக மக்கள் நடத்தியிருக்கிற போராட்டங்களையோ, விடுத்திருக்கிற வேண்டுகோள்களையோ அல்லது சட்டப்பேரவைத் தீர்மானங்களையோ இந்திய அரசு கடுகளவும் மதித்ததில்ல என்பதுதான் கடந்த கால வரலாறாக உள்ளது.

குறிப்பாக ஈழத்தமிழர்கள் தமிழக மீனவர்கள் மற்றும் கச்சத்தீவு தொடர்பாக ஏராளமான தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அவையெல்லாம் சட்டப்பேரவையில் அவைக்குறிப்பில் இடம்பெறும் தகவல்களாக மட்டுமே அமைந்துவிட்டன.

அத்தகைய தீர்மானங்களையொட்டி இந்திய அரசு கடந்த காலத்தில் எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்பதை நாடறியும்.

எனவே தற்போது தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத்தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசைச்செயல்பட வைக்கிற அளவுக்கு அதிமுக அரசு தனது வலிமையை முழுமையாகப்பயன்படுத்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது
’’ என்று தெரிவித்துள்ளார்.

இலங்கை பிரச்சனையில் டெல்லியில் முகாமிட்டு வலியுறுத்த வேண்டும் - ஜெயலலிதாவுக்கு தங்கர்பச்சான் கோரிக்கை :

இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க டெல்லியில் முகாமிட்டு வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


இது குறித்து திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


மூன்று லட்சம் தமிழர்களின் உயிரிழப்பும் நாற்பதாயிரம் போராளிகளின் முப்பது ஆண்டுகளுக்கு மேலான போராட்டமும் வீணாகிப் போனதே என தமிழனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவித்திருந்த வேளையில், ஐ.நா.சபை விசாரணைக் குழுவின் போர்க்குற்ற அறிக்கை நம்பிக்கையை விதைத்தது.


இலங்கைத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்துக்கு தண்டனையாக கடந்த ஆட்சி தோல்வி கண்டு மக்களின் புதிய ஆட்சி மலர்ந்துள்ளது. தேர்தல் முடிவு வரும் முன்னரே புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்பவர்கள் முதல் சட்டப்பேரவைத் தொடரிலேயே இலங்கை அரசுக்கு பொருளாதாரத் தடையை விதித்து தீர்மானம் நிறைவேற்றி இலங்கை ஆட்சியாளர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என எனது கோரிக்கையை வெளிப்படுத்தியிருந்தேன்.


என்னைப் போன்றோரின் வேண்டுகோள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது


சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் எப்போதும் இல்லாத அளவுக்கு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். உலகின் ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பையும் தீர்த்து வைக்கும்படியான தீர்மானம் நிறைவேறக் காரணமாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் தமிழர்கள் சார்பில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இதற்கு அடுத்த கட்டமாக முதல்வர், டெல்லியில் முகாமிட்டு அனைத்துக் கட்சியினரையும் கூட்டி இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன்
என அந்த அறிக்கையில் தங்கர்பச்சான் குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர் பற்றிய விமர்சனத்தை ஜெயலலிதா தவிர்த்திருக்க வேண்டும் - கி. வீரமணி :

தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஈழத் தமிழர்களுக்காக 08.06.2011 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்மீது முதலமைச்சர் ஜெயலலிதா பேசிய உரை குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

08.06.2011 அன்று தமிழக சட்டமன்றத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா முன் மொழியப்பட்ட ஈழத் தமிழர்களை பல லட்சக்கணக்கில் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்; இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி, ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது வரவேற்கப்பட வேண்டிய, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.


இதனை தி.மு.க. உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன; ஆதரவு தெரிவித்துள்ளன.

தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய முதல்வரின் விமர்சனங்கள்


ஒட்டு மொத்தமாக தமிழர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் இத்தீர்மானத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் தி.மு.க.வையும், அதன் தலைவர் கலைஞர் அவர்களையும் கடுமையாக தாக்கி விமர்சித்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும்; தமிழ்நாட்டு அரசியலில் நடந்த கடந்த கால கசப்பான அனுபவங்களையே சுட்டிக் காட்டி, ஒவ்வொருவரும் பரஸ்பரக் குற்றச்சாற்றுகளுக்கு ஆளாக்கப்படும் நிலையால் ஏற்படும் விளைவுகள் என்ன?


அருள்கூர்ந்து நடுநிலையோடு விருப்பு, வெறுப்பின்றி யோசிக்க வேண்டும்.


பொது எதிரியைத் தப்பிக்க விடுவதா?




1. பொது எதிரியான போர்க்குற்றவாளி ராஜபக்சே தப்பித்துக் கொள்ளவே இது வழி வகுக்கக்கூடும்.

2. மத்திய அரசை அந்தரங்க சுத்தியுடன் வற்புறுத்தி செயல்பட வைக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற நிலைக்கு எதிர் விளைவாக, இங்குள்ள கட்சிகள் பொதுப் பிரச்சினையை மறந்து விட்டு, பொது எதிரியை ஒதுக்கிவிட்டு, ஒருவருக்கொருவர் மறுப்பு அல்லது தன்னிலை விளக்கம் அளித்து, தமிழ்நாட்டவர்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பிரச்சினையை இனவுணர்வுப் பிரச்சினையாகவோ, மனித உரிமைப் பிரச்சினையாகவோ பாராமல், நல்ல அரசியல் முதலீடு என்றுதான் கருதி, தீப்பற்றி எரியும் நேரத்திலும், அணைப்பதற்கு முந்துவதற்குப் பதிலாக, யார் எந்த அளவுக்கு தண்ணீர் ஊற்றி அணைத்தார்கள்; அணைக்கவில்லை என்ற ஆராய்ச்சியிலா இறங்குவது?


காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுக்க செல்வி ஜெயலலிதா முன்வரவில்லையா?


மத்தியில் ஆளும் காங்கிரசை ஆதரிப்பதில் இதற்கு முழு முதற் காரணமான இலங்கைக்கு இராணுவப் பயிற்சி முதற்கொண்டு அளித்ததற்குக் காரணமான காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவைக் கொடுப்போம் என்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கூறியதையெல்லாம் இப்போது


மறுமொழியாக தி.மு.க. பதிலுக்குக் கூற ஆரம்பித்தால், எந்த நோக்கத்தோடு இத்தீர்மானம் சட்டமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமையுணர்வுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதோ அந்தச் சூழல், அதனால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட வலிமை குறைந்து விடுமே! மீண்டும் பழைய கருப்பனாகவே ஈழத் தமிழர் வாழ்வுரிமை ஆகிவிடுமே என்ற கவலையாலும், பொறுப்புணர்ச்சியினாலும் தான் நாம் இதனைச் சுட்டிக் காட்டுகிறோம். மற்றபடி யாருக்காகவும் வாதாட அல்ல.

தி.மு.க. தோல்விக்குக் காரணம்


தி.மு.க. தேர்தலில் இவ்வளவு பெரிய தோல்வியைப் பெற்றதற்குள்ள பல காரணங்களில் ஒன்று மத்திய ஆளும் காங்கிரசுடன் இருந்து அதன் பல்வேறு செயல்களுக்கும் பழியேற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகும்.


எனவே அனைத்துக் கட்சி ஆதரவைப் பெற்று தீர்மானத்தை செயல் உருவாக்கம் கொள்ளச் செய்ய ஆளுங்கட்சியும், முதலமைச்சர் அவர்களும் முன்வர வேண்டும் என்றால் ஒற்றுமை, ஒத்துழைப்பு நம் அனைவருக்கும் இடையே தேவை.


இல்லையானால் ராஜபக்சேக்கள் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளத்தான் உதவும்; மற்ற நாடுகளுக்குள்ள மனிதநேயம்கூட மத்தியில் ஆளும் கட்சிக்கு இல்லை என்ற நிலைப்பாடு மாறியுள்ளது என்று காட்ட மத்திய அரசுக்கும் இது ஒரு நல் வாய்ப்பு செய்யுமா மத்திய அரசு?


இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment