Labels

Tuesday, June 7, 2011

ஈழம்.. கொடூரமும் கொலையும்!



தொடர் - 9

மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்​களில் சர்வதேச நாடுகளுடன் கையெழுத்துப் போட்ட சிங்கள அரசு, இலங்கையின் இறுதிக் கட்டப் போரிலும் சரி, முடிந்த பிறகும் சரி... மனிதநேயத்துக்கு விரோதமாகச் செயல்பட்டு இருக்கிறது. கூடவே, சொந்த நாட்டின் சட்டங்களைக்கூட, அதன் ராணுவம் பின்பற்றவில்லை.

உரிமை மீறல்கள் குறித்து உள்நாட்டில் இருந்து பெறப்படும் புகார்களை விசாரிக்க, இலங்கை மனித உரிமை கமிஷன் அமைக்கப்பட்டது. இதன் தலைவரையும் நிர்வாகிகளையும் அந்த நாட்டின் அதிபரே நியமிப்பார். இதனால், 'அரசுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவிப்பது இல்லை’ என்ற முடிவோடு இந்த அமைப்பு செயல்பட்டது. தப்பித் தவறி உண்மையை வெளிப்படுத்தினாலும், அரசு அதை ஏற்காது!

குறிப்பாக, யாழ்ப்பாணம் பகுதியில் அப்பாவிப் பொதுமக்களை ஒரு ராணுவ முகாமின் கமாண்டர், தனது வாகனத்தில் கடத்திச் சென்று கொலை செய்ததை விசாரித்த இந்த அமைப்பு, அதில் உண்மை இருப்பதை அம்பலப்படுத்தியது. விசாரணை அறிக்கையில், அந்த அதி​காரியின் பெயரைக் குறிப்பிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சம்பவம் அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்க, அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இத்தகைய தர்மசங்கடம், மறுபடியும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, மனித உரிமை கமிஷன் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு நீக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய வேண்டிய அதிபர், அதைக் கண்டுகொள்ளவே இல்லை. இதுவும், இலங்கை அரசின் திட்டமிட்ட செயல்தான்.



அனைத்து அம்சங்களையும் சீர்தூக்கிப் பார்க்கும்போது, இலங்கை அரசின் உயர் மட்டப் பொறுப்புகளில் இருப்பவர்கள், ராணுவத்தின் தலைமைப் பொறுப்புகளில் ஏற்கெனவே இருந்தவர்கள், இப்போது பதவி வகிப்பவர்கள், ராணுவ கமாண்டர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர்... போர் முனையிலும், அதற்குப் பின்னரும் நடந்த கிரிமினல் குற்றங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்​பேற்க வேண்டியவர்கள்!

பரிந்துரைகள்!

இலங்கைப் பிரச்னைக்கு முக்கியக் காரணம்... அரசியல், சமூக, பொருளா​தாரத்தில் அனைத்துத் தரப்பினரையும் சமமாக மதிக்காததுதான். அதனால், தமிழர்கள், இஸ்லாமி​யர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம உரிமைகள் கிடைக்கச் செய்ய வேண்டும். இலங்கை அரசின் மும்மொழிக் கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என்ற உறுதியை தமிழர்களுக்குக் கொடுக்க வேண்டும். அதற்கு எதிர்மாறாக, 'அனைத்து மக்களும் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாட வேண்டும்’ என்று இலங்கை அரசு செய்த அறிவிப்பு, தமிழ் பேசும் மக்களைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. இத்தகைய செயல்களை இலங்கை அரசு முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.

போரில் பாதிக்கப்பட்டு முகாம்களில் அடைபட்டுக்கிடந்​தவர்களில் சிலர், மீண்டும் சொந்த கிராமங்களுக்குத் திரும்புகின்றனர். ஆனால், அவர்கள் செல்லும் வழி எங்கும் ராணுவப் படையினர் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளனர். ஆகவே, மனித உரிமை மீறல்கள் இன்னும் சர்வ சாதாரண​மாகவே தொடர்வதால், ராணுவப் படைகளைத் திரும்பப் பெறுவது அவசியம்.

ஊடகங்கள் மீதான அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்த லசந்தா விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். ராணுவத்தின் அத்துமீறல்கள் பற்றி துணிச்சலுடன் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர் திசநாயகம் மீது, தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட முதல் பத்திரிகையாளர் இவரே. இது தவிர, பிரபல கார்ட்டூனிஸ்ட் பிரகீத் கடந்த ஆண்டு தலைமறைவானார். இதுவரை அவரைப்பற்றிய தகவல் எதுவும் இல்லை. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை தேவை.

இதற்காக ஐ.நா சார்பில் சர்வதேசப் பிரதிநிதிகள் அடங்கிய விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழு, இறுதிக் கட்டப் போரில் நடந்த விதிமுறை மீறல்கள்பற்றி முழுமையாக விசாரணை நடத்தும். இதில் போர்க் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான ஆதாரங்களை ஏற்கெனவே விசாரணை நடத்திய எங்களிடம் (ஐ.நா. நிபுணர் குழு) இருந்து பெறலாம். அத்துடன், போர் முனையில் கடுமையான சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றிய செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினரிடம் இருந்தும் ஆதாரங்களைத் திரட்டலாம்.

உடனடித் தேவை!

போரில் பலியானவர்களது எண்ணிக்கையை இலங்கை அரசு மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும். அவர்களின் உறவினர்களிடம் இறப்புச் சான்றிதழ் தரப்பட வேண்டும். அத்துடன், போர்க் காலத்தில் அடிக்கடி நிறையப் பேர் காணாமல்போனார்கள். 'ஒயிட் வேன்’ ஆபரேஷன் மூலமாக நிறையப் பேரை ராணுவத்தினர் கடத்திச் சென்றனர். அவர்களின் நிலை என்ன என்பதை உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும்.

இலங்கையில் இப்போது அமலில் இருக்கும் தீவிரவாதத் தடுப்புச் சட்டம் மிகவும் கடுமையாக உள்ளது. அதன் தீவிரத்தைக் குறைக்கும் வகையில், சட்டத்தில் உடனடி மாற்றம் தேவை. இதன் மூலம், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி ஏற்படும்.

புலிகள் அல்லது அவர்களுக்கு உதவி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயிரக்கணக்கான மக்களை சிங்கள ராணுவம் கைது செய்தது. அவர்களது பட்டியலை ராணுவம் உடனடியாக வெளியிட்டு, நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி சட்ட உதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இன்னும் சிலர், ரகசிய இடங்களில் அடைத்துவைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. இத்தகைய பாதகமான செயல்களை உடனடியாக நிறுத்துவது அவசியம்!

தொடர் - 8

மக்கள் வசிக்கும் இடங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், கொலைக் குற்றத்துக்கு சமம். திட்டமிட்டு இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்பட்டு இருக்குமானால், அதை உலகின் எந்தச் சமூகமும் ஏற்காது. இலங்கையில் நடந்த போரில், சிங்கள ராணுவம் இத்தகைய திட்டமிட்ட தாக்குதல்களையே நடத்தி இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

சிங்கள ராணுவத்திடம் ஆள் இல்லாத போர் விமானம்கூட இருந்தது. அவற்றின் மூலம் மக்களின் வசிப்பிடங்களையும், புலிகளின் முகாம்களையும் பிரித்துப் பார்க்க முடியும். ஆனாலும், மக்களின் வசிப்பிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தற்செயல்தானா? இது தவிர, மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்​களை உடனே நிறுத்தும்படி வன்னிப் பகுதியின் கமாண்டருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் செவிசாய்க்கப்படவில்லை. இலங்கை அரசு சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

சர்வதேச மனித உரிமை சட்டத்தின்படி, மக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் வான் வழித் தாக்குதல்களை நடத்தினால்கூட, முன்கூட்டியே அதுபற்றி எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டும். இதையும் சிங்கள ராணுவம் கடைப்பிடிக்கவில்லை.

காலில் மிதிபட்ட சட்டங்கள்!

போரில் இரு தரப்பும் காயம் அடையும்; உயிர் இழப்புகளையும் சந்திக்கும். இந்த சமயங்களில், சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகள், அச்சம் இன்றி போர் முனையில் பணியாற்றும் சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். சிங்கள ராணுவமோ, இத்தகைய தன்னார்வ அமைப்பினர் மீதே நேரடித் தாக்குதல் நடத்தியது. அந்த அமைப்புகளின் கொடிகள் ஏற்றப்பட்ட முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.



இதேபோல், 'காயம் அடைந்தவர்கள் எதிரியாகவே இருந்தாலும், அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும்’ என்று வலியுறுத்துகின்றன சட்டங்கள். இதையும் சிங்கள ராணுவம் காலில் போட்டு மிதித்தது. மருத்துவமனைகளைக்கூட தொடர்ந்து ராணுவம் தாக்கிய நிலையில், காயமடைந்த புலிகளின் நிலை என்னவாகி இருக்கும்?

போர் முனையில் உயிர் இழப்பவர்களையும் உரிய மரியாதையுடன் நடத்த வேண்டும் என்கிறது சர்வதேச மனிதநேய சட்டம். இதுவும் சிங்கள அரசால் மீறப்பட்டது. இவற்றுக்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. உயிர் இழந்த புலிகளையும், பெண்களையும் அவர்கள் நடத்திய விதம் குறித்த ஆதாரங்கள் அதிர்ச்சியைத் தருகின்றன. பெண் புலிகள் நிர்வாண நிலையில் இருந்ததும், அந்த உடல்களைக் குப்பைபோல, டிராக்டர்களில் ராணுவம் ஏற்றிச் சென்றதற்கும் ஆதாரம் கிடைத்து இருக்கிறது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

மீடியாவின் குரல்வளையையும் சிங்கள ராணுவமே நெரித்தது. சில பத்திரிகையாளர்களின் பெயர்களை ராணுவ இணைய தளத்தில் வெளியிட்டதே இதற்கு சாட்சி. பல்வேறு காலகட்டங்களில், நேர்மை​யாக செய்திகளை வெளியிட்​டவர்​களை அடித்து உதைத்தனர். மிரட்ட​லோடு சிலரை விடுவித்த ராணுவம், மேலும் சிலரைக் கொன்று இருக்கிறது.

பல்வேறு தரப்பினரிடமும் நிபுணர் குழு நடத்திய விசாரணையில் கிடைத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களைப் பார்க்கும்போது, சிங்கள அரசு திட்டமிட்டே போர்க் குற்றத்தில் ஈடுபட்டு இருப்பது அம்பலமாகிறது. சர்வதேச மனிதநேய சட்டங்களும், சர்வதேச மனித உரிமை சட்டங்களும் சிங்கள ராணுவத்தின் பூட்ஸ் கால்களால் நசுக்கப்பட்டது நிஜம்!

புலிகள் செய்த தவறுகள்!

இறுதிக் கட்டப் போரின் உச்சத்தில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை புலிகள் மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்கிற குற்றச்சாட்டை இலங்கை அரசு கூறி வருகிறது. அப்படி நடந்து இருந்தால், அதுவும் மனித உரிமை மீறல்தான். ஆனால், இந்தப் புகாருக்கு எந்தவித ஆதாரமோ, சாட்சியமோ இல்லை. மக்கள் வசிக்கும் பகுதிகளில் ராணுவ முகாம்களை அமைக்கக் கூடாது என்கிறது சர்வதேச மனித உரிமை சட்டம். ஆனால், இந்த சட்டத்துக்கு முரணாக நடந்துகொண்ட புலிகள், சில பகுதிகளில் மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே தங்களுடைய முகாம்களை அமைத்தனர். அங்கு ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள், வாகனங்கள் ஆகியவற்றை மறைத்துவைத்தனர். இதைக் கண்டுபிடித்த சிங்கள ராணுவம், மக்களைப்பற்றிய அக்கறை இல்லாமல் தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

சிறுவர்களைப் படைப் பிரிவில் சேர்ப்பதை சர்வதேச விதிமுறைகள் கடுமையாக எதிர்க்கின்றன. புலிகளோ தங்கள் படையில் சிறுவர்களையும் சேர்த்தனர். அத்துடன் இறுதிப் போரில், ஆயுதங்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டுசெல்வது, குண்டுப் பொழிவுக்கு மத்தியில் பதுங்கு குழிகளை அமைப்பதுபோன்ற அபாயகரமான வேலைகளில் சாமான்ய மக்களை புலிகள் ஈடுபடுத்தினர். புலிகள் அவ்வப்போது நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் சிக்கி உயிர் இழந்த சம்பவங்களும் நடந்தன. இந்தச் சட்ட மீறல்களை புலிகள் தரப்பு நியாயப்படுத்த முடியாது!

தொடர் - 7

இலங்கையில் போர் முடிந்த பின்னரும் பல்வேறு அத்துமீறல்கள் நடந்தன. அப்பாவி மக்கள் அடைந்த துன்பத்துக்கு அளவே இல்லை! இவற்றை மிகவும் கவனமாக நாங்கள் (ஐ.நா. நிபுணர் குழு) ஆய்வு செய்தோம். குறிப்பாக, 'சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமை சட்டத்துக்குப் புறம்பாக நடந்த சம்பவங்கள் எவை?’ என்பதை உன்னிப்பாக ஆய்வு செய்தோம்.

சிங்கள ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே போர் நடந்தபோது, இரு தரப்பினருக்கும் இடையே அப்பாவி மக்கள் சிக்கிக்கொண்டனர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால்தான், சர்வதேச சட்டங்களையும் அளவுகோலாக வைத்து இந்த ஆய்வை நடத்தினோம்.

சர்வதேச சட்டங்கள் சொல்வது என்ன?

போரில் ஈடுபட்ட எந்த ஒரு குழுவைச் சேர்ந்தவராக இருந்தாலும், அவர் நிராயுதபாணியாக இருக்கும்போது, எதிர்த் தரப்பினர் எந்த விதத் தாக்குதலிலும் ஈடுபடக் கூடாது. ஒருவேளை, காயம் காரணமாகவோ அல்லது நோய் பாதிப்பாலோகூட ஆயுதத்தைக் கைவிட் டாலும்கூட, அவர்களிடம் மனிதாபிமானம் காட்டப்பட வேண்டும். தாக்குதல் நடத்துவதோ... சித்ரவதை செய் வதோ, பிணைக் கைதிகள் ஆக்குவதோ கூடாது. இதைத்தான் சர்வதேச சட்டம் வலியுறுத்துகிறது.



இலங்கையில் இந்த விதிமுறைகள் கடைப்பிடிக்கப் பட்டனவா? நிச்சயமாக இல்லை!

சட்டங்கள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டு, மனிதாபிமானம் இல்லாத செயல்கள் நிறைய நடந்தன. சிங்கள ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் மேற்கொண்ட அத்துமீறல்கள் அனைத்துக்கும் இலங்கை அரசே பொறுப்பு. புலிகளைப் பொறுத்த வரை, மனித உரிமை தொடர்பான எந்த ஒரு சர்வதேச உடன்படிக்கையிலும் கையெழுத்துப் போட்டது இல்லை. இருந்தாலும், அவர்கள் தரப்பில் ஏதேனும் விதிமீறல்கள் நடந்து இருந்தால், அதற்கும் அவர்களே தார்மீகப் பொறுப்பு ஏற்க வேண்டும்.

இலங்கை அரசின் சட்ட மீறல்கள்!

சர்வதேச சட்ட திட்டங்களை மதித்து சிங்கள ராணுவம் போர் நடத்தவே இல்லை. குண்டு வீச்சு, ராக்கெட் தாக்குதல், பீரங்கித் தாக்குதல், சித்ரவதை எனப் பல வழி களில் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். பாது காப்பான பகுதிகளிலும்கூட தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவற்றை அரசு மறுத்தபோதிலும், ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்ததைத் திட்டமிட்ட ஒரு தாக்குதலாகவே கருத வேண்டும்.

போரில் சிங்கள ராணுவத்திடம் பிடிபட்டவர்கள், காயம் அடைந்து சரண் அடைந்தவர்கள் உள்ளிட்டோரி டம், ராணுவம் மிகக் கொடூரமாக நடந்தது. அவர்களிடம் நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரையும் நிர்வாண நிலை யில், கண்களையும் கைகளையும் கட்டிக் கோரமாகக் கொலை செய்தனர். இதற்கு வீடியோ காட்சிகள் பலமான சாட்சி.

சர்வதேச சட்டத்தின்படி, 'தாக்குதல் நடத்துபவர் மீது மட்டுமே எதிர்த் தாக்குதல் நடத்த வேண்டும். அதுவும் குறிப்பிட்ட ஓர் இடத்தில் இருப்பவர்கள் போராளியா... பொதுஜனமா என்ற சந்தேகம் வந்துவிட்டால், அவர்களை பொதுஜனமாகவே கருத வேண்டும்.’ இந்த விதிமுறையும் சிங்கள ராணுவம் பொருட்படுத்தவில்லை.

இறுதிக் கட்டப் போரில், வன்னிப் பகுதியில் அப்பாவி மக்கள் ஒருவர்கூட கொல்லப்படவில்லை என்பது அரசின் வாதம். ஆனால், உண்மை என்ன? அந்தப் பகுதியில் சிங்கள ராணுவம் வான் வழியாகவும், பீரங்கி மூலமாகவும் நடத்திய தாக்குதல்களில், ஆயிரக்கணக் கான மக்கள் குற்றுயிரும் குலையுயிரும் ஆனார்கள். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பலரும் பரிதாபமாக உயிர் இழந்தனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.

'புலிகள் மீது மட்டுமே தாக்குதல் நடந்து வந்ததாகவும், பொதுமக்களில் ஒருவர்கூட கொல்லப் படவில்லை’ என்றும் ராணுவம் சொன்னதில் துளியும் உண்மை இல்லை. செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வன்னியில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் அளித்த எச்சரிக்கைகள், கடைசி வரையிலும் மதிக்கப்படவில்லை.

ஒரு தாக்குதல் நடக்கும்போது, மனிதர்கள் தங்கி இருக்கும் இடங்களுக்கு சிறிய பாதிப்பு ஏற்படும் என்ற சந்தேகம் எழுந்தாலே, அத்தகைய தாக்குதலை நடத்தக் கூடாது. இலங்கைப் போரின்போது இந்த சட்டமும் காக்கப்படவில்லை. உணவுக்காக மக்கள் கூட்டம் காத்திருந்த இடத்திலும், போக்கிடம் இல்லாமல் தவித்த நோயாளிகள் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகள் மீதும் ஏவுகணைகள் குறிவைத்தன. விமானங்களில் இருந்து பெய்த குண்டு மழை, பீரங்கித் தாக்குதல் போன்றவை மனிதக் குடியிருப்புகளை இலக்காகக்கொண்டு நடத்தப்பட்டது. இத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு முன்பாக மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தால், உயிருக்குப் பயந்து பதுங்கி இருப்பார்கள். பெரும் அளவிலான உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டு இருக்கும். அதை ஏன் சிங்கள ராணுவம் செய்யவில்லை?

தொடர் - 6

இறுதிக் கட்டப் போரில், திசை தெரியாமல் தவித்த அபலைப் பெண்களை எள்ளி நகையாடிய சிங்கள வீரர்கள், அவர்களை இழுத்துச் சென்று துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்தனர். 'தம் சமூகத்துக்கு உரிய பண்பாடு மற்றும் அச்சம் காரணமாக, இந்தக் கொடூரங்கள் தங்கள் குடும்பத்தினருக்குக்கூட தெரிந்துவிடக் கூடாது!’ என்று மனதுக்குள் புழுங்கித் தவித்தனர் பெண்கள்.

சிங்கள ராணுவத்தினருக்கு இது சாதகமாகிவிட... பெற்றோரைப் பிரிந்து தனியாக முகாம்களில் சிக்கிய சிறுமிகளை, கைம்பெண்களை, அநாதைப் பெண்களைக் குறிவைத்து, நாக்கில் எச்சில் வழியத் தேடி அலைந்தனர். எதிர்ப்பு தெரிவித்த பெண்களை, 'புலிகளின் ஆதரவாளர்’ என முத்திரை குத்தி, பொதுமக்கள் முன்னிலையில் அடித்துத் துவைத்தனர். அப்படி கொண்டுசெல்லப்பட்ட பல பெண்களும், சிறுமிகளும் திரும்பி வரவே இல்லை.



முகாம்களில், உணவுத் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தது. அதைப் போக்க, அரசு நிர்வாகம் கொஞ்சம்கூட அக்கறை காட்டவில்லை. 'ஒட்டிய வயிற்றுடன் பசி தாங்காமல் கதறிய குழந்தைகளுக்கு ஏதாவது உணவுப் பொருள் கிடைத்துவிடாதா?’ என்று ராணுவத்தினரிடம் தாய்மார்கள் கையேந்தும் நிலைமை தொடர்ந்தது. மனம் பொறுக்காமல், உணவுக்காக பால் பவுடர் கேட்டுக் கதறும் பெண்களிடம், சிங்களச் சிப்பாய்கள் மானத்தை விலை பேசினர்.

அதே சமயம், 'இந்தக் கொடூரங்களால் அச்சப்பட்ட மக்கள், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருந்து வெளியேறினால், எல்லாம் வெளி உலகத்துக்கு தெரிந்துவிடுமே?’ என்கிற கவலையும் ராணுவத்துக்கு இருந்தது. அதனால், மக்களை வெளியேறவிடாமல் தடுத்தனர். அந்த இடங்களைச் சுற்றிலும் முள் வேலிகள் அமைக்கப்பட்டன.

காடுகளின் நடுவில் தார்ப்பாய் மூலமாக அமைக்கப்பட்ட குடில்கள்... சுட்டெரிக்கும் வெயில்... தகிக்கும் அனல்... தாகம்... கொடும் பசி என இந்தச் சூழலில் குடிலுக்குள் முடங்கிக்கிடந்தவர்கள் பலர், தொற்று நோய்களால் மாண்டனர். உடல் உபாதையைத் தணிக்க வெளியே செல்லும்போதும், குளிக்கும்போதும், உடைகளை மாற்றும்போதும், பக்கத்​திலேயே பல்லை இளித்தபடி வஞ்சகத்​தோடு நின்றது சிங்களப் படை.

தட்டிக் கேட்க யாரும் இல்லை என்கிற தைரியத்தில் ஈழப் பெண்களைச் சிதைத்தனர். முகாம்களில் ராணுவத்​துக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் முகம் அறியா நபர்களோ, ஏஜென்ட்டுகள்போல செயல்பட்டதால், அவர்கள் சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்துவிட்டு, அதற்குப் பிரதிபலனாக பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற வன்கொடுமைகள் பெண்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்த, 'இந்த வேதனைகளை சகிப்பதற்குப் பதிலாக, ராணுவம் வீசிய கொத்துக் குண்டு​களுக்கும், பாஸ்பரஸ் குண்டுகளுக்கும் இரையாகி மடிந்து இருக்கலாமே’ என்ற ஆற்றாமையில் தவித்தனர். மன அழுத்தத்துக்கு உள்ளான பெண்கள், சிறுமிகள் பலர் தற்கொலை மூலம் தங்களின் இறுதி முடிவை வலிந்து தேடிக்கொண்டனர். அவர்களின் உடல்களை காடுகளுக்குள் வீசி எறிந்தது ராணுவம்.

முள் வேலிகளைக் கடந்து தப்பிச் செல்ல முயன்றதில் பிடிபட்டவர்கள், தீவிர விசாரணை என்ற பெயரில் வதை முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். செஞ்சிலுவை சங்கத்தினரும், தொண்டு நிறுவனத்தினரும் கடுமையான நிபந்தனைகளுக்குப் பின்னரே, வதை முகாம்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மக்களிடம் பேசுவதற்கும், அனுபவங்கள்பற்றி விசாரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இவற்றை ராணுவத்தினர் தீவிரமாகக் கண்காணித்தனர்.

இதை எல்லாம் மீறி முகாம்​களின் கொடுமையான நிகழ்வுகள் ஊடகங்களில் வெளிவந்தன. குறிப்பாக, சர்வதேச ஊடகங்கள் இந்த விவகாரங்களில் அதிக அக்கறை எடுத்துச் செயல்பட்டன. இது ராணுவத்துக்கு எட்டிக்காயாக இருந்தது. ஆகவே, அவர்கள் தங்கள் ஆத்திரத்தை மக்களிடமே சுமத்தினர். தமிழர்கள் யாராவது, தொண்டு அமைப்பினருடன் பேசிக்கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்தால், 'புலிகளுக்கு உதவியவர்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, உடனடியாக அவர்களை வதை முகாமுக்கு அனுப்பினர். இதனால், முகாம்களில் இருந்தவர்கள்கூட, ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்கு அஞ்சி நடுங்கினர்.

அத்துடன், முகாம்களில் லஞ்ச ஊழல் தலை விரித்து ஆடியது. ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் சொற்பப் பணத்தையும் ராணுவத்தினரிடம் கொடுத்து​விட்டு சலுகைகளை எதிர்நோக்கினர். முள் வேலியைச் சுற்றி இரவும் பகலும் ராணுவத்தினர் காவல் காத்து நின்றபோதிலும், லஞ்சம் கொடுத்துவிட்டு சிலர் முகாம்​களில் இருந்து தப்பித்தனர்.

செய்திகள் கசிவதற்கான அனைத்து வழிகளையும் ராணுவம் அடைத்த பிறகும்கூட, வெளி உலகுக்குத் தகவல்கள் போய்க்கொண்டே இருந்தன. இதற்கு சர்வதேச உதவி அமைப்புகள் காரணமாக இருப்பதாக நம்பியதால், கோபம் அடைந்த ராணுவம், முகாம்களில் பணியாற்றிய செஞ்சிலுவைச் சங்கத்தினரை வெளி​யேற்றுவதில் குறியாக இருந்தது. இதைத் தவிர, தவறுகளைச் சரிப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையைப் புனரமைப்பு செய்யும் பணிக்காகப் பல்வேறு நாடுகள் நிதி உதவி செய்தன. 'இலங்கை அரசு, முகாம்களின் நிலை​மையை மாற்றாவிட்டால், நிதி உதவியை நிறுத்துவோம்’ என அவை எச்சரித்தன. அதன் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கையாக முள் வேலி முகாம்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது, ராணுவம்.

அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழிந்து கொன்று ஒழித்தது, மருத்துவமனைகள் மற்றும் உதவி மையங்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது, போரின்போது பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்கள் கிடைக்க​விடாமல் தடுத்தது என மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதன் மூலம், இலங்கை ராணுவம் சட்டத்துக்கு புறம்பாகச் செயல்பட்டு இருக்​கிறது. சர்வதேச விதிமுறைகளை ராணுவம் காற்றில் பறக்கவிட்டது எப்படி?

தொடர் - 5

ஈழப் போரின் ஆரம்பத்தில் இருந்தே... 'புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு​விட்டு சரணடைய வேண்டும்’ என்பதை சிங்கள ராணுவம் வலியுறுத்தி வந்தது. அதனை ஏற்று, கடைசிக் கட்டப் போரின்போது, சரணடைய முன்வந்த முன்னணித் தலைவர்​களைக் கொடூரமாகத் திட்டமிட்டுக் கொன்ற ராணுவம், அதற்குப் பின்னரும் பல்வேறு அத்துமீறல்களை அரங்கேற்றியது. இந்தக் கொடு​மைகள் தொடர்பாகவும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

புலிகள் பலவீனம் அடைந்ததும், சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அப்பாவி மக்கள் அதிக அச்சத்துடனேயே சென்றனர். அதை நிரூபிக்கும் வகையில், அவர்களை ராணுவம் சந்தேகத்தோடு பார்த்து கொலைகள் செய்தது. நிறையப் பெண்கள் புதிய விதவைகளாக மாறிவிட்டனர். அழவும் முடியாமல், அலறவும் முடியாமல் அவர்கள் நிலை குத்திய கண்களோடு வானத்தைப் பார்த்தனர். தஞ்சமடைய வெவ்வேறு இடங்களுக்கு ஓடியதால், பல குடும்பங்கள் திசைக்கு திசை சிதறிவிட்டன. குழந்தைகள் தனியாக... தாய் தனியாக... தந்தை தனியாக... வெவ்வேறு முகாம்களில் அவலத்துடன் தங்கினர்.



உதவிய கருணா...

உதறலில் மக்கள்!

நம்பி வந்த மக்களை வட்டுவாகல் பாலம் அருகே நிறுத்திய சிங்கள ராணுவம், 'அவர்களில் புலிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் இருக்கக்கூடும்’ என அஞ்சியது. 'வெடிகுண்டுகள் இருக்குமோ... துப்பாக்கிகள் இருக்குமோ’ என்ற பயத்தால், மக்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து சோதனை செய்தனர். உயிருக்குப் பயந்து ஓடி வந்தவர்களிடம் இருந்த விலை உயர்ந்த பொருட்களையும் பறிமுதல் செய்தது ராணுவம். இதனால், கேமரா, லேப்-டாப் போன்றவற்றில் பதிவு செய்யப்பட்ட போர்க் காட்சிகள், கொடூரச் செயல்கள்போன்ற ஆவணங்கள் எல்லாம் சுவடற்றுப்போய் விட்டன!

பின்னர், அவர்களை அங்கு இருந்து கால்நடையாகவே கிளிநொச்சி, புல்மோட்டை, பாடவியா பகுதிகளுக்கு இழுத்து வந்தனர். வழி எல்லாம் முளைத்து இருந்தன பல சோதனைச் சாவடிகள்; அவற்றில் நடந்ததோ... ஈரமற்ற சோதனைகள்! புலிகளின் ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களைத் துளைத்து எடுத்தனர். கேவலமான இந்த சோதனைகளில் பெண்களும், குழந்தைகளும்கூட தப்பவில்லை.

அத்துடன் சிங்கள ராணுவத்துக்குத் துணையாக வந்திருந்தது, புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கருணாவின் அமைப்பு. புலிகள் அமைப்பினரை மட்டும் அல்லாமல், அவர்களின் ஆதரவாளர்களையும் அந்த அமைப்பு காட்டிக் கொடுத்தது. புலிகள் அமைப்பில் கட்டாயமாக சேர்க்கப்​பட்டவர்கள், குறுகிய காலம் மட்டுமே இருந்தவர்கள், ஒரு சில உதவிகளை மட்டும் செய்தவர்களைக்கூட கருணா அமைப்பு காட்டிக்கொடுத்தது. அப்படிப் பிடிபட்டவர்கள் விசாரணைக்காக தனியாக அழைத்துச் செல்லப்பட்டு... பலர் கொல்லப்பட்டனர். கூடுதல் விசாரணை என்ற பெயரில் போனவர்களும், திரும்பி வரவே இல்லை.

இந்த சோதனைகளுக்குப் பிறகு, துயரப்பட்டு நகர்ந்த மக்கள் கூட்டத்தை ஓமந்தை என்ற இடத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அடுத்த கட்ட நரகப் பரிசோதனை... வந்தவர்களின் ஆடைகளை எல்லாம் ராணுவம் அவிழ்க்கச் சொல்லியது. பெண்கள், சிறுமிகளின் உடைகளையும் கட்டாயப்படுத்தி அவிழ்த்து சோதனை இட்டனர். தலை குனிந்து கூனிக் குறுகிய அந்த ஈழப் பெண்களைப் பார்த்து கொக்கரித்தனர் சிங்கள வீரர்கள். கூடவே அவர்களின் பரிகாசமும், அட்டகாசச் சிரிப்பும் அந்த இடத்தையே நிறைக்க... கதறித் துடித்தனர் ஆதரவற்ற பெண்கள்!

மருத்துவமனைகள் சிங்கள ராணுவத்தின் கட்டுப்​பாட்டுக்கு வந்ததும், சிகிச்சைக்கு வந்தவர்களுக்கு ஏகப்பட்ட இன்னல்கள். ராணுவ வீரர்களும், சி.ஐ.டி. பிரிவும் மாறி மாறி அடுத்தடுத்து கேள்விகளைத் தொடுக்க, அப்பாவி மக்கள் நொந்து போய்விட்டனர். பயங்கரவாதப் புலனாய்வு அமைப்பினர் (டி.ஐ.டி) தனியாக விசாரணை நடத்தினர். இந்த வேதனையை சகிக்க முடியாத நோயாளிகள் பலர், 'சிகிச்சை இல்லாமல் உயிர் போனாலும் பரவாயில்லை’ என்ற முடிவெடுத்து மருத்துவமனையைவிட்டு வெளியேறினர்.

மரண தண்டனை!

ராணுவத்தால் பிடிக்கப்பட்ட புலிகள் பலர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். அதற்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்கள் இருக்கின்றன. பிரிட்டனின் சேனல்-4, சில வீடியோ காட்சிகளை வெளி​யிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் அப்பாவிகள் தரையில் உட்காரவைக்கப்பட்டனர். அவர்களின் கண்கள் கட்டப்பட்டு உள்ளன. ஒட்டுத் துணியும் அவர்களிடம் இல்லை. அவர்களின் முகத்தை தரையை நோக்கி குனியும்படி சிங்கள ராணுவத்தினரிடம் இருந்து கட்டளை வருகிறது. அதைத் தொடர்ந்து, பின்னால் இருந்தபடி சிங்கள வீரர்கள் சரமாரியாக சுடுகிறார்கள். துடிதுடிக்கும் உடல்கள் ஓய்ந்து அடங்குகின்றன. அதே இடத்தில், ஏற்கெனவே கொல்லப்பட்டுக்கிடக்கும் நிறைய உடல்களும் காட்சிகளில் தெரிகின்றன.

அதே சேனலில் மீண்டும் ஒரு வீடியோ ஒளிபரப்பானது. அதில், தலையில் சுடப்பட்டு சிதறிக்கிடக்கும் ஆண்கள், பெண்களின் நிர்வாண உடல்கள் சிதறிக்கிடந்தன. அதில் ஒரு சிறுவனும், இளம் பெண்ணும் அலங்கோலமாகக்கிடக்க... அந்தப் பெண், புலிகளின் மீடியா அமைப்பில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த இசைப்பிரியா!

கொல்லப்பட்ட அனைவரும் கடுமையான சித்ரவதைக்கு உட்பட்டு இருக்கிறார்கள் என்பதை அந்த உடல்களே சாட்சியம் அளிக்கின்றன. இந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் நம்பகத்தன்மை பற்றி முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டபோது, அவை உண்மை​யானவை என்பது தெளிவானது.

அத்துமீறல்கள் இத்துடன் நின்றுவிடவில்லை. சிங்கள ராணுவ வீரர்களின் பிடியில் சிக்கிச் சீரழிந்த அபலைப் பெண்களின் நிலைமையோ துன்பக் கேணிதான்!

நன்றி : ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment