Labels

Tuesday, June 7, 2011

திருப்பி அடிப்பேன்! – சீமான்



பாகம் - 1

ஏனடா எரிக்கிறாய் என்றோ,


ஏனடா அடிக்கிறாய் என்றோ

எவனடா கேட்டீர் அவனை?

அடியென அவனுக்குச்

சாட்டை கொடுத்தவனும்

சுடுவென தோட்டா கொடுத்தவனும்

தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.

என்ன கொடுமையடா இது!


- புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய வரிகள் என் நித்திரையைக் கிழிக்கின்றன. புரண்டு புரண்டு படுக்கிறேன். கொசுக்கடி இல்லை. குளிர் இல்லை. அட்டைப்பூச்சியோ… அரிப்புத் தொல்லையோ இல்லை. ஆனாலும், நித்திரை வரவில்லை. ‘தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சுகிற அளவுக்கு அப்படி என்ன செய்தோம்?’ என்கிற கேள்வி மனதுக்குள் குறுகுறுக்கிறது. என் மீனவனின் தொண்டையில் விழுந்த தூண்டிலின் வலியைச் சொன்னது தவறா? அதற்கா தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிட்டதாகப் பாய்ச்சல் காட்டினார்கள்?

என்னை ஒருவன் அடித்தான். ‘ஐயோ வலிக்கிறது’ என்றேன். மீண்டும் அடித்தான். ‘ஐயோ வலிக்கிறது’ எனத் துடித்தேன். மறுபடியும் சக்தி திரட்டி அடித்தான். ‘ஐயோ வலிக்கிறது’ என அலறினேன். அடுத்தும் அடித்தான். இனிமேல் அடித்தால், ஓங்கித் திருப்பி அடிப்பேன். ‘ஐயோ வலிக்கிறது’ என அலறு வான். ‘வலிக்கிறதா அய்யா, அப்படித்தான் எனக்கும் வலித்தது அய்யா, இனிமேல் என்னை அடிக்காதே!’ என்பேன்.

இதைத் தவிர உலக மகா குற்றத்தை ஏதும் இந்த சீமான் செய்துவிடவில்லை. 60 ஆண்டுகளாக ஈழத்திலும், 20 ஆண்டுகளாக இங்கேயும் தமிழக மீனவர்களைத் துரத்தித் துரத்தி அடிக்கிறான் சிங்களவன். ‘இனியும் அடித்தால்…’ என வலி பொறுக்காமல் அலறியது, இந்த அரசாங்கத்தை ஆத்திரப் படுத்திவிட்டதாம். வலையோடு போனவர்கள் ரணமாகவும் பிணமாகவும் ஒதுங்கியபோது, தமிழினத் தலைவராக இருக்கும் மனிதருக்கு வராத கோபம்… ‘எம் இனத்தை ஏனடா அடிக்கிறாய்?’ எனக் கேட்டபோது கிளர்ந்துவிட்டதாம்!

”சிங்கள மாணவனை அடிப்பேன் என எப்படிச் சொல்லலாம்? இரு இனங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டும் வாதம் அல்லவா இது?” – ஆத்திரத்தில் அலறியது அரசுத் தரப்பு. எங்களவனை அடிக்கும்போது பாயாத சட்டம், சிங்களவனை அடிப்பேன் எனச் சொல்லும்போதே பாய்கிறது.

சட்டம் – ஒழுங்கு குலைந்துவிட்டதாக, பேருந்துகள் கொளுத்தப்பட்டதாக, போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டதாக, ரயில்கள் தடம் புரளவைக்கப்பட்டதாக எங்கெங்கு இருந்து தகவல் வந்ததோ… ‘இனியும் சீமானை வெளியேவிட்டு வைத் திருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்!’ எனப் பதறி, தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சினார்கள்!

அதன் பிறகுதான் தமிழகம் அமைதியானதாம். சட்டம் – ஒழுங்கு சீரானதாம். பொது மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அமைதியாக நடமாடினார்களாம். இந்த தனிப்பட்ட சீமானால் தமிழ்நாட்டின் சட்டம் – ஒழுங்கைக் கெடுக்க முடியுமானால், இந்த நாட்டைவிட பலம் வாய்ந்தவனா நான்? சிரிப்பாகத்தான் இருக்கிறது!

ஓர் அறையைவிட்டு வெளியே வருவதைப்போலத்தான், சிறையைவிட்டு வெளியே வந்திருக்கிறேன். கம்பிக்குள் தள்ளிக் களி தின்னவைத்தால், ‘தம்பி’க்காகப் பேசும் பேச்சைத் தடுத்துவிடலாம் என எண்ணினார்களோஎன்னவோ… வேலூர் சிறையில் அடைத்தார்கள். என் குரல்வளையை உடைக்கிற சக்தி அந்தக் கொட்டடிக்கு இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. நஞ்சுக் குப்பி கடிக்கவும் தயங்காதவன், அட்டைப் பூச்சிக் கடிக்கு அரண்டுவிடுவான் என நினைத் ததே கேவலம். அவர்கள் பெரியாரின் கொள்கை வழி வந்தார்களோ இல்லையோ… நான் அந்தப் பழுத்த தாத்தாவின் பழுக்கக் காய்ச்சிய தத்துவங்களின் தடம் வந்தவன். ‘சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்!’ என 90 வயதில் சொன்ன அந்தப் போராளியின் பேரனை ஒரு அறைக்குள் அடைத்துவைத்து அடக்கி விட முடியுமா?



ஐந்து தடவை சிறைவாசம்… அதில் இரண்டு முறை தேசியப் பாதுகாப்பு சட்டம். சரமாரியாக வழக்குகள்… ஏன் இவை எல்லாம்? அரசாங்கத்தையும் அதன் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, இந்தத் தேசத்தின் வளத்தை சுரண்டித் தின்றேனா… உறவுக் கூட்டத்தை ஊரெல்லாம் வளர்த்து, அகப்பட்ட இடம் எல்லாம் அள்ளி, உலகம் எங்கும் ஓடி ஓடிப் போய்ப் பதுக்கும் அளவு சொத்து குவித்தேனா? எத்தனை சுழியன் என எண்ண முடியாத அளவுக்கு லட்சம் கோடிகளைப் பதுக்கிவிட்டேனா?

ஈசல் இறந்தால்கூட இழவு கொண்டாடும் இனத்தில் பிறந்துவிட்டு, இனமே இறந்துகிடக்கையில் கை கட்டி, வாய் மூடி, கதறல் அடக்க இந்த மூர்க்கக்காரனால் முடியவில்லை. ஒப்பாரி வைத்ததைத் தவிர, ஒரு தவறும் செய்யாதவனை பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களே… இந்த சீமான் சென்னைக்கு எதற்காக வந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

150 ரூபாய்க்கு மிளகாய் மூட்டையைப் போட்டு விட்டு சென்னைக்கு என்னை பேருந்து ஏற்றி அனுப்பினான் என் அப்பன். வறுமையை ஜெயிக்கவும் – வாழ்ந்து காட்டவும் சென்னைக்கு வந்து, மாதத்துக்கு ஒரு முறை 100 ரூபாயைக்கூட அப்பனுக்கு அனுப்ப முடியாமல், எத்தனையோ வருடங்களை இயலாமையிலேயே கழித்தவன். இன்றைக்கும் சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட முடியவில்லையே என்கிற ஏக்கம் நீங்காதவன். என்னையா பயங்கரவாதி எனச் சொல்லி பயம் காட்டுகிறீர்கள்?

அறிவாற்றலும், வீரமும் செறிந்துகிடக்கும் இந்த இனத்துக்கு அரசியல் வலிமை சேர்க்கும் பற்றா ளர்கள் பற்றாக்குறையாகிவிட்டதுதானே எங்கள் பதற்றத்துக்குக் காரணம். கண் முன்னே சொந்த இனம் கருவறுக்கப்பட்டபோது, பட்டம் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டுத் துடிக்கிற தலைவன் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டானே… இனத்துக்காகக் குடும் பத்தையே வாரிக் கொடுத்த தலைவன் பிரபாகரன் அங்கே களமாடி நிற்க… குடும்பத்துக்காக இனத்தையே காவு கொடுத்து வேடிக்கை பார்த்த கருணாநிதியை எப்படி எங்களின் தலைவனாய் ஏற்க முடியும்?

ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தைச் சுட்டி ருந்தால்… வல்லூறுகளின் கொடூரங்கள் அவருடைய வாயைத் திறந்திருந்தால்… நாங்கள் ஏனய்யா நரம்பு முறுக்கி சிறைக்குக் கிளம்பப்போகிறோம்? இனத்தைக் காக்க நீங்கள் இருப்பதாக எண்ணி சினத்தை அடக்கி இருப்போமே… ‘இனப் பாசம் கிலோ என்ன விலை?’ எனக் கேட்கிற ஆளாக, மொத்தக் கொடூரத்தையும் சத்தமின்றிப் பார்த்துக்கொண்டு இருந்தீர்களே… இப்படிப்பட்ட இதயத்தோடு வாழும் உங்கள் ஊரில் ஒப்பாரிவைப்பதும் உலக மகாக் குற்றம்தான்! கேள்வி கேட்பதும், கேவி அழுவதும் தேசியப் பாதுகாப்பு மீறல்தான்!

கொடூரப் போரில் ஈழமே எரிந்து காடாகிக் கிடந்த வேளையில், எங்களின் கோபம் தமிழகத்தில் வசிக்கும் ஒரு சிங்களவனையாவது சீண்டியதா? ஒரு புத்த துறவியாவது எங்களால் துரத்தப்பட்டாரா? சிங்கள ராணுவத்தின் வெறித் தாண்டவத்துக்கு டெல்லி ஆயுதம் கொடுக்க… அதை சென்னை கை கட்டி வேடிக்கைப் பார்க்க… துடித்துப்போன நாங்கள் எங்கள் உயிர்களைத் தானே தீக்குச்சிக்குத் தின்னக் கொடுத்தோம். எங்களின் இயலாமையும் கோபமும் ஒரு சிங் களவனின் மீதாவது திரும்பியதா? அப்போதும் சிங்கள மாணவர்கள் இங்கே படித்துக்கொண்டு தானே இருந்தார்கள்? சிங்கள வியாபாரிகள் எங்கள் தெருக்களில் திரிந்துகொண்டுதானே இருந்தார்கள்? மாற்று இனத்துக்கு மதிப்புக் கொடுக்கும் எங்களின் மாண்பு அப்போது புரிய வில்லையா இந்த அரசாங் கத்துக்கு? என் இனமே எரிந்து சாய்ந்தபோது… எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்கள், சிங்கள மாணவனை அடிப்பேன் என்றதும் சீறுகிறார்களே… இது எந்த ஊர் நியாயமய்யா?

சிறையில் தள்ளி என் குரல்வளையைச் சிதைத்து விடலாம் எனத் திட்டமிட்ட கருணாநிதிக்குச் சொல்கிறேன்… எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களின் பயங்கர சட்டங்களைப் பாய்ச்சுங்கள். உங்களைப்போல், ‘ஐயோ… கொலை பண்றாங்கப்பா… காப்பாத்துங்கப்பா…’ என அலறித் துடிக்கும் ஆள் நான் இல்லை! என் நாடி நரம்பின் கடைசித் துடிப்பையும் நீங்கள் துண்டித்துப் போட்டாலும், உங்களிடம் மண்டியிட நான் தயார் இல்லை.

எந்த வார்த்தைகளுக்காக என்னை வளைத்தீர்களோ… அதே வார்த்தைகளை கொஞ்சமும் பயமின்றி உரக்கச் சொல்கிறேன்…

”எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்!”

பாகம் - 2

கடந்த ஜூலை 10-ம் தேதி… மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்துப் பேசிவிட்டு, வீட்டுக்கு வந்தேன். காவல் துறையில் இருக்கும் நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. ”அடிபட்ட மீனவர்களில் ஒருவராக நீங்கள் அலறியதுபோல் இருந்தது உங்கள் பேச்சு. அதேவேளை, அரசு வேறு விதமாக யோசிக்கிறது. உங்களின் பேச்சைவைத்து மீள முடியாத அளவுக்கு வலுவான வழக்காக இருக்கும். என்ன காரணத்தி னாலோ, முதல்வர் உங்கள் மீது கடுமை யான கோபத்தில் இருக்கிறார். நீங்கள் அவரைப்பற்றி ஆவேசமாகப் பேசுவதை எல்லாம், அவர் கவனத்துக்குக் கொண்டுபோய் சேர்த்து இருக்கிறார்கள். முதல்வரின் கோபத்தைத் தணிக்கும் விதமாக வழக்குகளைப் போட வேண்டும் என்பதுதான் உளவுத் துறையின் உத்தேசம்!” என்றார் அந்தக் காக்கி நண்பர்.

அவர் மட்டும் அல்ல… அரசியலில் இருப்பவர்கள் தொடங்கி என் அடிமட்ட அபிமானிகள் வரையிலான பலர் என் மீதான அக்கறையிலோ… இல்லை எச்சரிக்கும் தொனி யிலோ… ”அவரைப்பற்றிப் பேசும்போது மட்டும் அதிகமாகத் தாக்காதீர்கள்…” என்பார்கள்!

எனக்கு அறிவுரை வழங்கும் இந்த அன்பர்களுக்கு ஒரு விஷயம் தெரியாது. இவர்கள் சொல்லும்அறிவுரையை, அறவுரையாக ஏற்கெனவே எனக்கு இன்னொருவர் சொல்லி இருக்கிறார். ”முதல்வர் கலைஞரையோ, காங்கிரஸ் தலைவர் சோனியாவைப் பற்றியோ பேசும்போது சொல்ல வேண் டிய கருத்துகளை மட்டும் சொல்லுங்கள். ஆவேசமோ… ஆத்திரமோ… கொள்ளாதீர்கள். விமர்சனங்கள் வைக்காதீர்கள். அது சம்பந்தப் பட்டவர்களை மனரீதியாய் வருத்தம்கொள்ள வைத்துவிடும்!” எனச் சொன்ன அந்த நபர் யார் தெரியுமா?

யாரை என் வாழ்வியல் வடிவமாக… யாரை என் நெஞ்சத்து நெருப்பாக… யாரை என் நாடித் துடிப்பின் நரம்பாக நினைக்கிறேனோ… அந்தத் தமிழ்த் தேசியத் தலைவன் பிரபாகரன் சொன்ன வார்த்தைகள் இவை!

ஈழ மண்ணில் கால்வைத்து, என் நெஞ்சத்து நாயகனை சந்தித்த திருநாளில், அவர் என் புத்திக்குள் ஏற்றிய போதனை இது. குருதியாறு ஓயாத – கொந்தளிப்பு அடங்காத அந்த மண்ணில், எதிரியையும் மதிக்கத்தக்க மாண்புகொண்டவனாக எம் தலைவன் இருந்தது, ஆத்திரத்தோடு அலையும் இந்த உலகத்தின் ஆச்சர்யம்!

”பேச்சும் ஒரு ராணுவம்தான். எங்கள் துப்பாக்கிகளில் இருந்து வெளியேறும் தோட்டாக்களைவிட, உங்களின் வார்த்தைகள் வல்லமை வாய்ந்தவை. அதனால், தரம் தாழ்ந்த பேச்சு உங்களுக்குத் தேவை இல்லை. மூன்றாம்தர அரசியலில் நீங்களும் ஒரு ஆளாக உருவெடுத்துவிட வேண்டாம்!” என என் தலைவன் தட்டிக்கொடுத்துச் சொன்ன வார்த்தைகளைத்தான் தடம் மாற்றும் மந்திரங்களாக ஏற்றுக்கொண்டு தமிழகத்துக்கு வந்தேன்.

ஈழத்தில் போர் தீவிரம் எடுத்து கொத்துக் கொத்தாக தமிழர்கள் செத்தழிந்த நேரம்… தமிழ்த் திரையுலகம் ஏற்பாடு செய்து இருந்த ராமேஸ்வரம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழ விவகாரத்தின் உண்மைகளை உரக்கச் சொன்னேன். அவை இறையாண்மை மீறலாகக் கையில் எடுக்கப்படும் என நான் எண்ணவில்லை. ஆனால், ராமேஸ்வரம் போராட்டத்தை நேரலையில் பார்த்த தலைவர் பிரபாகரன், ”என்னைய தலைவன்னு சொல்லலைன்னா இப்போ என்ன? அந்த ரெண்டு பேருக்குமே என்னையப் பிடிக்காதே… இந்தளவுக்குப் பேசிய சீமானை வெளியே விட்டு வெச்சிருப்பாங்களா?” எனச் சொன்னாராம். ராமேஸ்வரம் கூட்டம் முடிவதற்குள்ளேயே தலைவரின் கருத்தை என்னிடம் அலைபேசியில் சொன்னார் நடேசன் அண்ணா. அடுத்த சில நாட்களிலேயே ராமேஸ்வரம் விவகாரத்தில் என் மீதும், அமீர் மீதும் வழக்குப் போடப்பட… ‘இதைத்தான் நான் அப்போதே சொன்னேன். ஆனாலும், பரவாயில்லை. அவனுக்கு யாரும் ஆறுதலோ தேறுதலோ சொல்ல வேண்டியதில்லை. என் தம்பி புலிபோல் சிறைமீண்டு வருவான்!” எனச் சொல்லி இருக்கிறார் தலைவர். இங்கே பேசப்படும் வார்த்தைகளுக்கு என்ன விளைவு நடக்கும் என்பதை அங்கே இருந்தபடியே அனுமானித்த புலித் தலைவரின் முன்யோசனை இன்றைக்கும் என்னை சிலிர்க்கவைக்கிறது.

போர்க் களத்தில் இருந்தபடியே தமிழக அரசியல் கள நிலவரங்களை அறிந்த புலித் தளபதிகள் அடிக்கடி என்னைத் தொடர்புகொண்டு பேசுவார்கள். ”தலைவரை நினைத்து கவலைப்படாதே… எங்களின் துயரங்களை நினைத்து தமிழகத்தில் இருப்பவர்களை விமர்சிக்காதே… கவனம்… கவனம்…” என ஒவ்வொரு முறையும் பாசத்தோடு அறிவுறுத்தும் அண்ணன் சூசை, கடைசிக் கட்ட போர் முனையில் இருந்தபடி என்னைத் தொடர்புகொண்ட கடைசிப் பேச்சு, நினைக்கும் போதெல்லாம் நெஞ்சைக் கிழிக்கக்கூடியது.

கடற்புலி சூசையின் கடைசி குரல்…

ஈழத்தின் துயரமான திசை மாற்றம் என்னை எல்லா விதத்திலும் இயலாமைக்காரனாக மாற்றிப்போட்டு இருந்த நேரம்… சூசை அண்ணனிடம் இருந்து எனக்கு வந்த அழைப்பை தம்பி ஒருவன் எடுத்திருக்கிறான். ”சாவின் விளிம்பில் நிற்கிறோம்டா தம்பி… நான் பேசுவதைப் பதிவுசெய்து தம்பி சீமானிடம் கொடு. திரும்பிய பக்கம் எல்லாம் எங்கட சனங்கள் செத்துக்கிடக்குறாங்க. இதுவே என்னுடைய கடைசிப் பேச்சாக இருக்கலாம். எல்லோரும் தைரியமாக இருங்கள்…” எனச் சொல்லி இருக்கிறார். அப்போது என் சார்பாக பேசிய தம்பி தாங்க முடியாமல் அழ, ”அழக் கூடாது. தைரியமா இருக்கணும். தமிழன் அழக் கூடாது. அழுதால் இனி என்னிடம் பேசாதே…” எனச் சொல்லி இணைப்பைத் துண்டித்துவிட்டார். அந்தப் பேச்சின் பதிவை இப்போது கேட்டாலும், அவர்களின் நெஞ்சுறுதியும் நிலைகுலையாத் தைரியமும் கண் முன்னே வந்துவிட்டுப் போகின்றன.

சூசை அண்ணனின் சொல்படி யாரையும் விமர்சித்துப் பேச எனக்கும் விருப்பம் இல்லைதான். ஆனால், இந்த அன்னை மண்ணில் நடக்கும் அக்கிரமங்களையும் கேலிக்கூத்துகளையும் பார்த்தால்… கிறுக்குப் பிடித்தே செத்துவிடுவேன்போல் இருக்கிறது தம்பிகளே! ராஜபக்ஷேயின் போர்க் குற்றத்தை விசாரிக்கக் கோரி உலக நாடுகளே ஒருசேரக் குரல் கொடுக்கையில், சொந்த இனத்துக்காக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை இயற்றக்கூட நம் முதல்வருக்கு தெம்பில்லாமல் போய்விட்டதா? சுட்டு விளையாட ஈழ உயிர்கள் இல்லாது போனதால், மீனவர்களை விரட்டும் சிங்கள கடற்படையைக் கண்டிக்க இந்த வக்கற்ற மண்ணில் யாருக்குமே வாய் இல்லையா? ஈழப் போர் துயரமான முடிவாக அமைந்த வேளையிலும், தொப்புள் கொடி உறவாகத் துடிக்க வேண்டிய தமிழகத் தலைவர், ‘சகோதர யுத்தம்… சகோதர யுத்தம்’ என்றே திரும்பத் திரும்பச் சொல்லி, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சினாரே… இந்தக் குரூரத்தை எப்படி அய்யா பொறுப்பது? பிரபாகரன் நிகழ்த்தியது சகோதர யுத்தம் என்றால், தா.கிருட்டிணன் கொல்லப்பட்டது என்ன சகோதர முத்தமா? இதைக் கேட்டால், உங்களுக்குப் பொத்துக்கொண்டு வருகிறதா கோபம்?

அவர் வீட்டில் சோதனை… இவர் வீட்டில் விசாரணை… எனத் தமிழகமே அல்லோலகல் லோலப்பட்டுக் கிடக்கையில், தமிழக டி.ஜி.பி. மூலமாக அதிமுக்கிய அறிக்கை ஒன்றை அவசரமாக வெளியிடவைத்து இருக்கிறீர்கள். பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரைக் கொலை செய்ய விடுதலைப் புலிகள் திட்டமிட்டு இருப்பதாகச் சொல்லி, இழவு வீட்டிலும் இடி பாய்ச்சி இருக்கிறீர்களே… உங்களின் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள். நிஜமாகவே புலிகளால் உங்களுக்கு ஆபத்து இருக்கிறதா?

பிச்சைக்காரர்கள் இல்லை… பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை… இச்சைக் கேடுகள் இல்லை… இரவானால் பயம் இல்லை… என உங்களாலோ, உலக மகா தலைவர் களாளோ நடத்திக் காட்ட முடியாத நாட்டின் தலைவனாக இருந்த எங்கள் பிரபாகரன்… உங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்கிறாரா?

ஏன் இந்த அவசர அறிவிப்பு…

என்ன பின்னணி..? காலம் காலமாக உங்களின் தந்திர – எந்திர விளையாட்டை சகித்துவரும் எங்களை மேற்கொண்டும் நீங்கள் குழப்ப வேண்டாம் மொத்தத்தையும் வாரிக் கொடுத்துவிட்டு நாதியற்று அலையும் புலிப் படையின் மீது பழி போட்டு, உங்களின் பழி பாவங்களைப் பதுக்கப் பார்க்கிறீர்களே… ‘புலிகளால் ஆபத்து!’ என மத்திய உளவுத் துறை அபாயம் பாடியதாகச் சொல்லி ப.சிதம்பரம் வீட்டுக்குப் பாதுகாப்பைப் பலப்படுத்தி இருக்கிறீர்கள்… பிரதமரின் விழாவுக்குப் பெருவாரியான கண்காணிப்புகளை மேற்கொள்ளச் சொல்லி இருக்கிறீர்கள்… தமிழகத்தில் புலிகளின் நடமாட்டம் இருக்கிறதா எனத் தீவிரமாக தேடச்சொல்லி இருக்கிறீர்கள்.

நாடாளும் தலைவர்களே… உங்களின் பதற்றத்தைத் தணிக்க… படபடப்பை அடக்க… பாதுகாப்பை உறுதி செய்ய… ஒரே ஒரு விஷயம் சொல்லவா… ‘கோழைகளைக் கொல்லும் பழக்கம் புலிகளுக்குக் கிடையாது!’


பாகம் - 3


‘சிறையில் எப்படி அண்ணா இத்தனை நாள் இருந்தீர்கள்?’ – தம்பிகள் பலரும் தவிப்போடு
கேட்கிறார்கள். என் சிறைக்குக் கூரை இருந்தது. நான்கு புறமும் சுவர்கள் இருந்தன. கழிவறை இருந்தது. மூன்று வேளைகளும் சாப்பாடு வந்தது தம்பிகளே!


ஆனால், எந்தத் திசையிலும் தடுப்பு இல்லாமல், கால் நீட்டி அமரக்கூட நிலம் இல்லாமல் மழை யிலும், குளிரிலும் தத்தளித்தபடி முள்வேலிக்குள் முடக்கப்பட்டுக்கிடக்கும் என் உறவுகளின் நிலையை ஒப்பிட்டால், என் சிறை வலி… ஒரு விஷயமே இல்லை.

சிறையில் இருந்து மீள்வதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தாங்க முடியாத துயரத்தில் தள்ளும் விதமான செய்தியை தம்பி ஒருவன் சொன்னான்.

”இசைப் பிரியா கற்பழித்துக் கொல்லப்பட்ட காட்சிகளை சேனல் 4 ஒளிபரப்பி இருக்கிறதாம் அண்ணா! நெஞ்சு நடுங்கவைக்கும் அந்தக் கொடூரத்தைப் பார்த்துவிட்டு, லண்டன், கனடா, நார்வே நாடுகளில் கடுமையான கொந்தளிப்பாம். போர்க் குற்றவாளியாக ராஜபக்ஷேவை அறிவிக்கக் கோரி உலக நாடுகள் பலவும் கண்டனம் எழுப்பி இருக்கின்றனவாம்!” என்றான். அடுத்த சில நிமிடங்களிலேயே சமாதானப் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் கொல்லப்பட்ட காட்சிகளும் ஒளிபரப்பாவதாக எனக்குச் சொல்லப்பட்டது.

மனதளவில் நான் சோர்ந்து சுருண்டு போனேன். அடுத்த இரண்டாவது நாளில்என் மீதான வழக்கு உடைக்கப்பட்டதாக தாங்க முடியாத மகிழ்ச்சியுடன் தகவல் சொன்னார்கள். ஆனால், உண்மையில் எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. வெளியே வரவே வெட்கமாக இருந்தது.

இசைப்பிரியா சீரழிக்கப்பட்டார்… ரமேஷ் கொல்லப்பட்டார்… என்பதெல்லாம் பலருக்கும் ஒரு செய்தியாகவே இருக்கும். ஆனால், எனக்கு அது என் வீட்டில் விழுந்த இழவுக்குச் சமம். என் மனக் கண்ணில் இசைப்பிரியா சிரிக்கிறாள்… ஈழத்தில் நான் இசைப்பிரியாவுடன் உரையாடிய நிகழ்வுகள் நெஞ்சுக்குள் வந்து போகின்றன.

இசைப்பிரியா… ஈழத்து உயிரோவியம். அவள் பேசுவதே கவிதை வாசிப்பதுபோல் இருக்கும். அழகுத் தமிழில் என்னை அவள் நேர்காணல் எடுத்த நிகழ்வு, ஏதோ இன்றைக்கு நடந்ததைப்போல் இருக்கிறது. புலிகளின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிக்காக இசைப் பிரியா கேள்வி கேட்க… நான் பதில் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ‘அண்ணா கிபீர் வரும் சத்தம்…’ என என்னை அடுத்த இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போவார்கள். பின்னர், ஆசுவாச நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பேட்டி தொடரும். நான்கைந்து நிமிடங்களுக்கு மேல் ஓர் இடத்தில் நின்று பேச முடியாது. எந்நேரமும் குண்டு விழும் என்கிற அபாயச் சூழலிலும், புன்னகை மாறாத முகத்தோடு இசைப்பிரியா, ஈழம் குறித்தும் தமிழகம் குறித்தும் நிறைய உரையாடினாள்.

ஈழப் போரின் இறுதிக்கட்ட நேரத்தில் யார் யாருக்கு என்ன நேர்ந்ததோ எனப் பதற்றத்தோடு நான் பட்டியலிட்டுப் பார்த்தவர்களில் இசைப்பிரியாவும் ஒருவர். போர் முடிந்த சில மாதங்களில், ‘பிரபாகரன் மகள் துவாரகா கொல்லப் பட்டதாக’ சில ஊடகங்கள் இசைப் பிரியாவின் புகைப்படத்தை வெளியிட்டன.

‘கொல்லப்பட்டது இசைப் பிரியாதான்… துவாரகா இல்லை!’ என அடுத்த சில நாட்களிலேயே வெளியான உண்மை, தடதடத்த தமிழ் இதயங்களை தைரியம் கொள்ளவைத்தது. ஆனால், அன்றைக்கும் இந்த சீமான் இருந்தது அழுகையோடுதான்!

சிறை வாசலில் திரண்ட கூட்டம்… ஆவேச முழக்கம்… ஆதரவுக் கரங்கள்… வழி நெடுக வரவேற்பு… இத்தனைக்கு மத்தியிலும் இசைப்பிரியாவின் துயரம் என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டே இருந்தது. அதேபோல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ரமேஷின் மரணமும்!

போராளிகளின் கட்டளைத் தளபதியாக இருந்த ரமேஷ், அங்கே பெருமரியாதையோடு பார்க்கப் பட்டவர். கண்ணியில் சிக்கிய காடைக் குருவியாய் சிங்களப் பிடியில் சிக்கிய அவருடைய கோலத்தை இணையதளத்தில் கண்டு சுக்குநூறாகிப்போனேன். கொன்றார்களா… வெறி பிடித்துத் தின்றார்களா என்றே தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட இசைப் பிரியாவின் இறுதி நிமிடங்களைக் கண்டித்து எழுதக்கூட என் கைகள் நடுங்குகின்றன.

ராஜபக்ஷேவுக்கு எதிராகப் போர்க் குற்ற விசாரணையை நார்வே நடத்தச் சொல்கிறது… கனடா கண்டிக்கிறது… லண்டன், ராஜபக்ஷேவை வளைக்கிறது… சுவிட்சர்லாந்து, கண்டனமும் போராட்டமுமாகக் கொந்தளிக்கிறது. ஆனால், என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் தமிழ்நாடு மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் கிடக்கிறது!

ஒரு குரல் இல்லை… ஒரு கூப்பாடு இல்லை… முதல் தமிழனாக அலறி இருக்க வேண்டிய எங்கள் தமிழினத் தலைவரோ, ‘இளைஞன்’ திரைப்பட விழாவில் நமீதாவின் வணக்கத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார். தன் மகளாக எண்ணக்கூடிய தளிர் ஒன்றை சிங்கள வல்லூறுகள் சிதைத்துப்போட்ட கோலத்தை எங்களின் தமிழினத் தலைவரிடம் எடுத்துச் சொல்லக்கூட இங்கே ஆள் இல்லை!

அப்படியே சொல்லி இருந் தாலும் என்ன செய்துவிடப் போகிறார்..? ‘எடுங்கப்பா ஒரு கடுதாசியை…’ எனச் சொல்லி கடமைக்காக ஒரு கடிதம் எழுதி இருப்பார். ஈழமே இழவுக்காடாகிக் கிடந்த வேளையிலும் அரை நாள் உண்ணாவிரதம் இருந்து அசத்திய தமிழ் மகனிடம், எங்களுக்கான குரலை இன்னமும் எதிர்பார்த்துக் காத்திருப்பது தவறுதான். ஆனால், பிணத்தைப் புணர்ந்து இனத்தை ஈனப்படுத்தும் சிங்கள வெறியாட்டங்களாவது, பாசத் தலைவனின் மனதைக் கொஞ்சமேனும் பதறவைக்காதா என்று ஒரு நப்பாசை! இருக்கட்டும், காலம் இப்படியே போய்விடாது. ஈழத்துக் கண்ணீரை இன்னமும் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழினத் தலைவனின் பாராமுகத்துக்குப் பதில் தேடும் காலம் நெருங்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.

இன்றைக்கு பத்திரிகைகளைப் புரட்டினாலே உங்களின் குடும்ப பராக்கிரமங்கள்தான் கொடி கட்டிப் பறக்கின்றன. மகனை, மகள் திட்டுகிறார். மகளை, பேரன் திட்டுகிறார். இருவரும் உங்களையே ‘இயலாத வராக’ விமர்சிக்கிறார்கள். எல்லோருடைய உரையாடல் பதிவுகளும் வெளியாகி, தமிழினத் தலைவராகிய உங்களைத் தத்தளிக்கவைக்கின்றன. அங்கே… இங்கே… என அத்தனை இடங்களிலும் சோதனை நடத்திய மத்தியப் புலனாய்வுத் துறை, அடுத்தபடியாக உங்களின் சி.ஐ.டி. காலனி வீட்டில் நுழைந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள். இத்தனை வயதில், ‘பதவிகள் நிலைக்குமா… கூட்டணி நீடிக்குமா?’ என ஒவ்வொரு நிமிடமும் உறக்கம் இன்றித் தவிக்கிறீர்களாமே?

உலகத் தமிழர்களின் கண்ணீர்தான் உங்களின் நிம்மதியைக் காவு வாங்கி இருக்கும் என்பது என்அழுத்தமான அனுமானம். இலவசத் தொலைக்காட்சி, ஒரு ரூபாய்க்கு அரிசி என மக்களை சோம்பேறிகளாக்கி, அதைவைத்தே மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நம்பிக்கையோடு இருந்த நீங்கள்… இன்னும் சில இலவசத் திட்டங்களுக்கு புத்தியைத் தீட்டிக்கொண்டு இருந்தீர்கள். ஆனால், வெண்ணெய் திரண்ட நேரத்தில் தாழி உடைந்த கதையாக, ஸ்பெக்ட்ரம் விவகாரம் இன்றைக்கு சந்தி சிரிக்கிறது.

‘போரை வழிநடத்துவதே இந்திய ராணுவம்தான்!’ எனச் சொல்லி காங்கிரஸை நாங்கள் கண்டிக்கச் சொன்னபோது, மந்திரிப் பதவிகளை தூக்கி வீசிவிட்டு நீங்கள் வந்திருக்க வேண்டும். நியாயமான மனிதராக – நெஞ்சுரம்கொண்ட தமிழராக இல்லாத நீங்கள், அன்றைக்கு அந்த அற்பப் பதவிகளைத் தூக்கி வீச அஞ்சினீர்களே… இன்றைக்கு காங்கிரஸின் நிர்ப்பந்தமே அதிமுக்கியப் பதவியாக – பணம் காய்க்கும் மரமாக நீங்கள் நினைத்த தகவல் தொடர்புத் துறையைத் தட்டிப் பறித்துவிட்டதே… அது ஈழத்துப் பாவத்தால் நிகழ்ந்திருக்காது என்பது என்ன நிச்சயம்? பதவியை இழந்ததற்கே இப்படிப் பதறுகிறீர்களே… உயிரை இழந்தவர்களின் வலி உங்களுக்கு ஏனய்யா புரியாமல் போய்விட்டது?

இது ஆரம்பம்தான்… நீங்கள் எதற்காக ஈழத் துயரத்தைக் கண்டிக்காமல் கை கட்டி, வாய் பொத்தி, ‘ஆமாம் சாமி’யாக இருந்தீர்களோ… அவை அத்தனையும் காங்கிரஸின் இக்கட்டுகளால் உங்களின் கைகளைவிட்டுப் போகும் பாருங்கள். கோபமாக இதனை நான் சொல்லவில்லை. உங்களின் பாராமுகத்தால் பலியான ஆயிரமாயிரம் உயிர்களின் சாபமாகச் சொல்கிறேன்!

ராஜ தந்திரங்களின் தகப்பனாக – சாதுர்யச் சிறுத்தையாக – அரசியல் நெளிவுசுளிவுகளை ஆகக் கற்றவராக வலம் வந்த நீங்கள், இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் நிலை குலைந்தவராக – நிம்மதி இழந்தவராக – நெருக்கடி சூழ்ந்தவராக இருக்கிற நிலையைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறேன்… தமிழினத்தின் வீரத்தை உலகத்துக்கே பறைசாற்றி புலித் தலைவனாய் தீரம் காட்டிய பிரபாகரன் எங்கே… ஊழலில் எப்படி சாதனை படைப்பது என உலகையே திகைக்கவைத்துப் பழித் தலைவனாய் பட்டம் வாங்கி இருக்கும் நீங்கள் எங்கே..?!

பாகம் - 4

”நான் ஈழத்து சீமான் பேசுகிறேன்…”


”நான் தமிழகத்து நடேசன் பேசு கிறேன்…”


எனக்கும் நடேசன் அண்ணாவுக்கும் இடையேயான உரையாடல் இப்படித்தான் தொடங்கும்.

வார்த்தை குறைவாகவும் வாய் நிறைந்த புன்னகையாகவும் பேசுவார் தமிழ்ச்செல்வன், ”தமிழ் ஈழ ஆர்வலர்களின் தொலைபேசிப் பேச்சுகள் பதிவு செய்யப்படுகிறதாமே… அடிக்கடி நான் உன்னோடு பேசுவதால் உனக்கு ஏதும் பிரச்னைகள் வருமா?” – தமிழ்ச்செல்வனின் குரலில் பரிவும் பதற்றமும் இருக்கும்.

”நீங்கள் என்ன, தமிழ்நாட்டில் என்னை குண்டு வைக்கச் சொல்லியா பேசுகிறீர்கள்? அங்கே நம் உறவுகளின் தலையில் குண்டுகள் விழுவதைப் பற்றித்தானே அண்ணா பேசுகிறோம்… பதிவு செய்பவர்கள் அதனை உரியவர்களிடம் போட்டுக்காட்டினாலாவது அவர்களின் உள்ளத்தில் கருணை சுரக்கிறதா எனப் பார்க்கலாம்!” எனச் சொல்வேன். அதைக் கேட்டு வேதனையாக சிரிப்பார் தமிழ்ச்செல்வன்.



”வா… வா…” என்று வாஞ்சையோடு அழைத்தவன், நான் அங்கே போனபோது எதிர்கொள்ள எதிரே வரவில்லை. ”இறந்து ஒரு வருடத்துக்குப் பிறகுதான் நினைவு இல்லம் எழுப்புவது வழக்கம். அண்ணன் இறந்து 90 நாட்கள்தான் ஆகிறது. அதனால்தான் அவர் புதைக்கப்பட்ட இடம் இப்படி இருக்கிறது…” எனச் சொல்லி கை காட்டினார்கள். மலர்ந்து சிரித்தவன் மண் குவியலாகக் கிடந்தான். கை நிறையக் கார்த்திகைப் பூக்களைக் கொட்டி கையறு கோலத்தில் நின்ற பாவி நான்!

இதுபோல் ஒன்றா… இரண்டா… ஈழப் போர் தீவிரம் எடுத்த வேளையில், ‘நிச்சயம் வெல்வோம்!’ என என்னைத் தைரியப்படுத்திய குரல்கள். இறுதிக் கட்டப் போர்க் களத்தில் நின்றபடி, ‘சாவை எதிர்நோக்கி நிற்கிறோம். ஆனாலும், போரைக் கைவிடுவதாக இல்லை!’ என உறுதியோடு சொன்ன குரல்கள்!

உலகத்தின் கண் பார்க்க அவர்கள் அழித் தொழிக்கப்பட்ட நிகழ்வு முடிவுக்கு வந்தபோது, என் சிந்தனை எவை குறித்தெல்லாம் ஓடி இருக்கும்? என் மூளை நரம்புகள் எப்படி எல்லாம் மூர்க்கத்தில் தவித்திருக்கும்?

தோற்றவனாகவும் துடித்தவனாகவும் சொல்கிறேன்… மே 18-ம் தேதியே என் உயிர் பிரிந்துவிட்டது. இது இரவல் மூச்சு. உங்களின் முன்னால் ஒரு சவம்தான் உரையாடுகிறது. இந்த சவத்தை உங்களால் என்ன செய்ய முடியும்? செத்துப்போனவனை வெட்டி வீழ்த்தும் தைரியம் சிறைச் சாலைகளுக்கோ, காக்கி உடுப்புகளுக்கோ இருக்கிறதா?

”ஈழத்து விடிவை இயக்கக் கொள்கையாகப் பூண்டிருப்பவர்களே அமைதியாகிவிட்ட நிலையில் சீமானுக்கு மட்டும் ஏன் இன்னமும் சிலிர்த்துக்கொண்டு நிற்கிறது?” – அரசியல் சார்ந்தவர்களின் இந்தக் கேள்வி என் காதுபடவே நீள்கிறது.

ஈழத்துக்கும் எனக்கும் நிலவிய உறவைப்போல், தமிழகத்தில் உள்ள பலருக்கும் தமிழ் ஈழ ஆர்வம் இருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஈழ மக்களும் போராளிகளும் மீள முடியாத கொடூர வளையத்துக்குள் சிக்கித் தவித்தபோது, அண்ணன் பிரபாகரன் மீது பேரன்புகொண்ட முத்துக்குமார் உள்ளிட்ட தமிழகத்து இளங்குருத்துகள் தங்களுக்குத் தாங்களே தீ வைத்து மடிந்தபோது, ‘இறுதி நிமிடங்களில் நிற்கிறோம்… தாய்த் தமிழ் உறவுகளே கைகொடுங்கள்’ என யோகி உள்ளிட்ட மூத்த புலிகள் ஏக்கக் குரல் எழுப்பியபோது… ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள்கூட தமிழகத்தையே ஸ்தம்பிக்கவைக்கும் முயற்சியில் இறங்காதது ஏன்?

மது ஒழிப்பு மாநாட்டுக்குக் கூட்டம் திரட்டுபவர்கள், இன ஒழிப்பு நாட்டுக்கு எதிராக வீதிக்கு வராதது ஏன்? மாநில மாநாடுகளுக்கு லட்சோப லட்சம் தொண்டர்களைத் திரட்டும் கட்சிகள் பலவும் இணைந்து ஈழப் போரைத் தடுக்கக்கூடிய கூட்டத்தில் 5,000 பேர்கூட திரளவில்லையே… இதுதான் ஈழத்து கூக்குரலுக்கு நாம் காட்டும் இரக்கமா? மாநாட்டுக்குக் காட்டும் அக்கறையைக்கூட ஆயிரக்கணக்கான தமிழர்கள் மடிந்தபோது நாம் காட்டாமல் போய்விட்டோமே… ஒப்புக்குக் கூட்டத்தைக் கூட்டி, தப்புக்குத் துணை போனவர்கள் பட்டியலில் ஆள்பவர்களின் பெயரோடு நமது பெயரும்தானே கலந்திருக்கும்?

‘நாங்கள்தான் திரட்டவில்லை… நீ எங்கே போனாய்?’ என நீங்கள் திருப்பிக் கேட்கலாம். அன்றைக்கு இந்த சீமானுக்கு அவ்வளவு ஆதரவு கிடையாதய்யா! சுற்றி நின்ற 10 பேரைத் தவிர வேறு படை இல்லை. என் பலம் எனக்குத் தெரியும். அதனால்தான் ஈழ ஆர்வலர் களாகத் தெரிந்த உங்கள் அனைவரின் பின்னாலும் நான் ஓடோடி வந்தேன். இறுதி மூச்சின் கணத்திலும் ஈழ வலியை உணர்த்தும் சக்தி உங்களுக்கு இருக்கும் என நம்பி, தேடித் தேடிப் பின்னால் வந்தேன். பேரதிர்வு நடந்தபோதும், பூமி நழுவாதவர்களாய் தமிழகத்து ஜீவன்கள் வழக்கமான வேலைகளில் மூழ்கியபோதுதான் அரசியல் பக்குவங்கள்(?) பொட்டில் அறைந்தாற்போல் எனக்குப் புரிந்தது.

இயலாமையில் துடித்து அழுதவர்கள் எல்லோரும் கூடி எடுத்த முடிவுதானய்யா, ‘நாம் தமிழர்’ அமைப்பு. இது தொடங்கப்பட்டது அல்ல… தொடரப்பட்டது. அய்யா ஆதித்தனார் இந்த அமைப்பைத் தொடங்கிய போது, அவருக்கு வலு சேர்க்கத் தவறிவிட்டது தமிழினம். ‘என் வழிவரும் வீரப் பிள்ளைகள் இந்த இயக்கத்தைத் தொடருவார்கள்!’ என அப்போதே நம்பிக்கையோடு சொன்னார் ஆதித்தனார். சிறு பொறிகளாய் திசைக்கொரு பக்கமாய் சிதறிக் கிடந்தவர்களைத் திரட்டி பெருநெருப்பாக அய்யாவின் வழியில் பின்தொடர்கிறோம்.

ஈழத்தை இழவுக்காடாக்கிய காங்கிரஸுக்கு தமிழர் களின் வலியைப் புரியவைக்கும் விதமாகத்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் எவராக இருந்தாலும் சரி என்று நாங்கள் ஆதரித்தோம். காங்கிரஸின் தமிழகத் தலைவர் தங்கபாலுவை வீழ்த்தியதன் மூலம் தமிழர்களின் நெத்தியடியை டெல்லி தலைமைக்கே உணர்த்தினோம். இளங்கோவனை மண் கவ்வவைத்தோம். அப்போதே அரசியல் அதிரடிகளை அரங்கேற்றுவதற்கான சக்தி எங்களுக்குப் பிறந்துவிட்டது. ஒடுக்குவதாக நினைத்து இந்த அரசாங்கம் அடுத்தடுத்து என்னை சிறையில் தள்ளி, என் சக்தியைத்தான் பெருக்கிவிட்டது. ஈழத்து வலியை வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிர ஸுக்குப் புரியவைக்க எங்களின் இயக்கம் இப்போதே தயார்.

ஆனால், காங்கிரஸை கம்பீரமாக நிமிரவைக்க… தாய்த் தமிழகத்தில் இன்றைக்கு நடைபோடுகிறாராம் ராஜீவ் காந்தியின் வாரிசு. தன் முகம் பார்த்த தமிழர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக அந்த ராஜீவ் பெருமகனாரின் வாரிசு, ‘இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் நிச்சய மாகத் தலையிடுவேன்!’ எனச் சொல்லி இருக்கிறாராம்.

வேண்டாமய்யா அப்படி ஒரு விபரீத முடிவு! உங்களின் தகப்பன் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டார்… 12 ஆயிரத்துக்கும் மேலான எங்களின் உறவுகள் பலியானார்கள். உங்கள் தாய் சோனியா காந்தி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலை யிட்டார். எங்களின் இனமே பிணமானது. இப்போது நீங்களுமா? அங்கே மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களும் உங்கள் கண்களுக்கு உறுத்தலாகத் தெரி கிறார்களா?

ராகுல் காந்தி அவர்களே…. நீங்கள் தலையிடவும் வேண்டாம்… எங்களைக் கொலையிடவும் வேண்டாம்.

தமிழகத்தை மீட்கும் சக்தி உங்களுக்கு இருப்பதாக எண்ணி, அறிவுமிகு மேதாவிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டார்கள். சோற்றில் விஷம் ஊற்றிய வனிடம், செரிமான வெற்றிலைக்கு சுண்ணாம்பு கேட்கும் என் மறத் தமிழர்களின் அறியாமை மிக்க மாண்பை நான் எங்கே போய்ச் சொல்வேன்?

ராகுல்காந்தி அவர்களே… தமிழக இளைஞர்களுக்கு அக்கறையோடு ஓர் அறிவுரையைச் சொல்லி இருக் கிறீர்கள்… ‘மது குடிப்பது தவறு’!

அப்படியானால்… ரத்தம் குடிப்பது?!


பாகம் - 5


சிறையில் இருந்து வந்ததும் முதல் கூட்டம்… இன விடுதலைக்காகப் போராடிய தந்தைக்கும்

ஈழவிடுதலைக்காக உதவிய தலைவருக்கும் வீர வணக்கம் செலுத்த சென்னையில், எம்.ஜி.ஆர். நகரில் திரண்டோம்!


முதன் முறையாக எம்.ஜி.ஆர். குறித்து முழங்கினேன். பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை எம்.ஜி.ஆர். எப்படி எல்லாம் பரப்பினார் என்பதை விளக்கிவிட்டு, நான் வீட்டுக்கு வருவதற்குள் எக்கச்சக்க விமர் சனங்கள்… ”எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் என்று சீமான் எப்படிச் சொல்லலாம்? பெரியாரும் எம்.ஜி.ஆரும் ஒன்றா? இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்காக இருக்கும் கூட்டத்தைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் சீமான்!” என்கிற வாதங்கள் ஒரு பக்கம். ”எம்.ஜி.ஆரை ஆதரித்துப் பேசும்போதே தெரிகிறது… வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகத்தான் சீமான் செயல்படப்போகிறார்!” என்கிற அனுமானங்கள் ஒரு பக்கம்.

எம்.ஜி.ஆர். நடித்த படங்களைக்கூட பார்க்கக் கூடாது என மனதுக்குள் சத்தியம் ஏற்றித் திரிந்தவன் நான். திரை உலகுக்கு வருவதற்கு முன்னர் நான் எம்.ஜி.ஆரின் படங்களையே பார்த்தது கிடையாது. ‘அழகு என்கிற ஒற்றை வலிமையைத் தவிர, அவரிடத்தில் வேறு எந்த ஈர்ப்பும் இல்லை’ என நினைத்தவன் நான். ஆனால், அப்படி நினைத்ததற்காக, ஈழத்தில் நான் வெட்கப்பட்டு தலை குனிந்து நின்றேன்.



”எம்.ஜி.ஆரை இழந்தது நம் இனத்தின் விடுதலையைத் தள்ளிப்போட்டுவிட்டது. நம் உணர்வுகளையும் உரிமைகளையும் மனமார ஆதரித்த அந்த மனிதரை இவ்வளவு சீக்கிரம் நாம் இழந்துவிட்டோமேடா தம்பி!” – அண்ணன் பிரபாகரன் இப்படிச் சொன்னபோது குற்றறிவுகொண்டவனாக நான் குறுகிப்போய் நின்றேன். ‘எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி!’ என தி.மு.க. தலைவர்கள் திரும்பத் திரும்ப சொன்ன வாதங்களை நிஜம் என நம்பி, என் மூளை பழுதடைந்திருந்த நேரத்தில், அண்ணன் சொன்ன வார்த்தைகள் என் சொரணையில் சூடு போட்டன.

தலைவர் பிரபாகரனுடன் மூன்று மணி நேரம் பேசினால், அதில் முக்கால் மணி நேரம் எம்.ஜி.ஆரைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

”இந்திய அமைதிப் படையை நம்பி நாம் ஆயுதங்களை ஒப்படைத்த நேரம்… நம் ஆயுதங்களை வாங்கிப் போட்டிக் குழுக்களுக்கு கொடுத்து, நமக்கு எதிரான போரைத் தூண்டிவிட்டது இந்திய அமைதிப் படை. மொத்தமாக 600 போராளிகள் மட்டுமே அப்போது இருந்தார்கள். 100 பேர்கொண்ட குழுக்களாகப் போராளிகளைப் பிரித்து அனுப்பிவிட்டு, நான் களத்தில் நிற்கிறேன். எந்தக் கணத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற நிலை. ‘பிரபாகரனை நெருங்கிவிட்டோம். இனி அவர் தப்பிப்பது கனவிலும் சாத்தியம் இல்லை!’ என இந்திய அமைதிப் படை கொக்கரிக்கிறது. எது குறித்து சிந்திப்பதற்கும் கணமற்ற வேளையில் தம்பி கிட்டு ஒரு பெட்டியில் பணத்தோடு வந்தார். மொத்தமாக 36 லட்ச ரூபாய். ‘தம்பி கஷ்டப்படுவார்… இதை நான் கொடுத்ததாகச் சொல்லி அவரிடம் கொடு. எதுவும் நடக்காது. தம்பியை தைரியமாக இருக்கச் சொல்!’ எனச் சொல்லி, எம்.ஜி.ஆர். கொடுத்து அனுப்பிய பணம் என்றார் கிட்டு. நிஜமாகவே என்னைத் தம்பியாக நினைத்தவரப்பா எம்.ஜி.ஆர்.!” – அண்ணன் சொல்லச் சொல்ல என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. இந்திய அமைதிப் படை அண்ணனை அழித்தொழிக்க நினைத்த வேளையிலும், தேசியக் குற்றம் எனத் தெரிந்தும் அண்ணனுக்கு எம்.ஜி.ஆர். உதவத் துணிந்தது என் நெஞ்சத்துத் தசைகளை எல்லாம் துள்ளத் துடிக்கவைத்தன.

‘ஈழம் அடைய எவ்வளவடா தம்பி தேவைப்படும்?’ என எம்.ஜி.ஆர். கேட்க, ’100 கோடி ரூபாய் தேவைப்படும்!’ என அண்ணன் சொன்ன உடனேயே, ‘நான் தர்றேன்… நான் தர்றேன்… நீ நல்லா சண்டை பிடி!’ என தைரியம் வார்த்த எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசாமல்… வேறு எவரைப்பற்றி அய்யா பேசுவது?

வாய் முழுக்க தமிழ் தமிழ் என முழங்கிவிட்டு, தமிழருக்கே வாய்க்கரிசி போட்டவரைப்பற்றியா பேசச் சொல்கிறீர்கள்? எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் எனச் சொல்வது பலருக்கும் பொறுக்கவில்லை. அன்னைத் தமிழ் மண் அடிமைப்பட்டுக் கிடந்தபோது, உலகத்தின் எந்தப் புரட்சியாளனுக்கும் குறைவு இல்லாத புரட்சியாளன் அண்ணன் பிரபாகரனின் போராட்டத்துக்குத் தோள் கொடுத்து துணை நின்ற எம்.ஜி.ஆரை புரட்சித் தலைவர் என்று சொல்லாமல், வேறு எவரைச் சொல்வதாம்?

அரசியல் ராஜ தந்திரியாக இன்றைக்கு அரியணையில் அமர்ந்து இருப்பவரிடம் கேட்கிறேன்… ஈழப்போர் தீவிரம் எடுத்த வேளையிலும், மத்திய அரசுக்கு எதிராக வாய் திறக்காமல், கூட்டணியைக் கெட்டியாகப் பிடித்து நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை வென்ற உங்களை அரசியல் சாணக்கியராகப் புகழாரம் பாடுகிறார்களே… எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்த வரை, ஏனய்யா உங்களின் சாணக்கியத்தனம் எடுபடவில்லை?

எம்.ஜி.ஆரின் பெயரைச் சொல்லி வந்த ஜெயலலிதாவையே 10 வருடங்கள் அரியணையில் உட்காரவைத்ததுதானே உங்கள் அரசியல் ராஜ தந்திரத்தின் மகிமை?

அரைக்கால் சட்டையோடு உங்களின் கூட்டத்தை ஓடியோடி வந்து ரசித்தவன் – உங்களின் சாலச் சிறந்த தமிழுக்குக் கை தட்டியவன் – காங்கிரஸ் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தமிழ் ஈர்ப்பால் உங்களின் தடம் ரசித்து, உதயசூரியனுக்கு ஓட்டுப் போட்டவன், இன்று உங்களைக் கேட்கிறேன்…

ஆட்சியே கவிழ்ந்தாலும் பரவாயில்லை என நினைத்து, அமைதிப் படை துவம்சம் செய்தவேளையிலும் அண்ணன் பிரபாகரனுக்கு அள்ளிக்கொடுத்த எம்.ஜி.ஆர். எங்கே… எத்தனை பேர் இறந்தாலும் சரி… ‘இருக்கை பத்திரம்’ என நினைத்து இரு கைகளையும் விரித்துக் காட்டிய நீங்கள் எங்கே?

‘பெரியாரின் பேரன் எம்.ஜி.ஆருக்கு வால் பிடிக்கிறானே…’ என உங்கள் தரப்பு வசவாளர்கள் கேலி பேசுவார்கள். பகுத்தறிவுப் பகலவனின் நிஜ வாரிசாக வரித்துக்கொண்ட உங்களைப் பார்த்து அவர்கள் வாய் திறக்காத அதிசயம்தான் எனக்குப் புரியவில்லை. மஞ்சள் துண்டு கேள்விக்கு இதுவரை நீங்கள் நெஞ்சம் திறந்து பதில் சொல்லவே இல்லை, அய்யா… ராஜராஜன் கட்டிய திருவுடையார் கோயிலுக்குள் போகும்போது மட்டும் மஞ்சள் துண்டைக் கழற்றிவிட்டு, பட்டாடை உடுத்திய ரகசியம் என்ன அய்யா? புட்டபர்த்தி சாய்பாபா உங்கள் வீட்டுக்கு வந்தபோது, தாயார் தயாளு அம்மாள் நடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினாரே… உங்கள் வீட்டில் இருந்த பெரியாரின் புகைப்படத்தை அன்று மட்டும் பரணில் தூக்கிப்போட்டு விட்டீர்களா? மாய மந்திரத்தால் தங்க மோதிரம் வரவழைத்துக் கொடுத்த சாய்பாபாவை உங்கள் வீட்டிலேயே தங்க வைத்து, வேண்டிய தங்கத்தை பெற்று இருக்கலாமே… புதிய சட்டமன்றக் கட்டடம் கட்டி முடிக்காதபோதே எந்த ஜோசியக்காரன் சொல்லி அய்யா அவசரமாகத் திறந்தீர்கள்?

வெண்தாடிக் கிழவனின் பேரனாகச் சொல்கிறேன்… அய்யா! நீங்கள் செய்த துரோகத்துக்கு, இந்தத் தமிழினம் எப்படிப் பதிலடி கொடுக்கப்போகிறது என்பதை நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்ந்து, கண்கூடாகப் பார்க்க வேண்டும்.

‘எம்.ஜி.ஆர். ஒரு மலையாளி’ என்று எத்தனையோ முறை இனத்தால் அவரைத் தமிழனிடம் இருந்து பிரிக்கப் பார்த்தீர்கள். உண்மையில், மலையாள எம்.கே.நாராயணனுக்கும், கன்னடத்து எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் கை கொடுத்து ஈழத்தைக் கருவறுக்கத் துணைபோனது யார்?

துக்கமும் தோற்றுப்போன வெட்கமுமாகத் துடிக்கும் தமிழர்களுக்குத் தெரியும்… யார் மலையாளி என்பதும், யார் கொலையாளி என்பதும்!

பாகம் - 6

இலங்கையின் முள்வேலி முகாமில் இருந்த சகோதரி ஒருத்தி பேசினாள்… ”அண்ணா, முழங்கால்

அளவு தண்ணீர். படுக்கக்கூட இடம் இல்லை. மடியில் இருக்கும் குழந்தைக்குக் கொடுக்க பால் இல்லை. சாப்பாட்டுக்குத் திண்டாடுற மாதிரியே, அன்றாடக் கடன்களைக் கழிக்கவும் அல்லாட வேண்டிய நிலை. மாற்று உடைகள் இல்லாமல் தவிக்கிறோம் அண்ணா. இங்கே சாகக்கூட எங்களுக்கு வழி இல்லை. ஒருவர் குரல்வளையை இன்னொருவர் நெரிச்சு செத்தாத்தான் உண்டு!”

என் தொலைபேசியை ஒட்டுக்கேட்கும் உளவுத் துறை பெருமகன்களே… இந்தக் கண்ணீரையும் கதறலையும் உரியவர்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். அப்படியாவது அவர்களுடைய கல் மனது கரைகிறதா எனப் பார்க்கலாம். ஈழத்தில் இழவு விழுந்தாலும், ராமேஸ் வரம் ரத்தக்களறி ஆனாலும், தனுஷ்கோடியில் தமிழன் பிணம் மிதந்தாலும்… மூச்சுவிடாமல் இருப்பது எங்களின் தமிழர் குணம். ஆனால், ‘ஐயோ’ எனக் கதறினால், ‘அனுப்புங்கள் போலீஸை…’ என்கிற உத்தரவு மட்டும் பொத்துக்கொண்டு வந்துவிடும்.

‘இலங்கைக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை பயிற்சி அளிக்கும். இரு நாட்டுப் படைகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும்!’ என இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் அறிவிக்க… அதை எதிர்த்து இந்த அன்னை மண்ணில் இருந்து ஒரு குரல்கூடக் கிளம்பவில்லை. ”எதற்கு அங்கே இந்திய ராணுவம்? மிச்சம் இருக்கும் தமிழர்களையும் சுட்டு வீழ்த்தவா? எங்களின் மீனவர்களைச் சிங்களவன் சுட்டான்… சீனன் சுட்டான்… இறுதியாய் இந்தியனும் சுடப்போகிறானா? இல்லை, ‘நீங்கள் சரியாகச் சுடுவதில்லை… நாங்கள் சொல்லிக்கொடுப்பதுபோல் சுட்டால், தமிழர்களின் தலை பரங்கிப் பழமாய் சிதறிவிடும்!’ எனக் கற்றுக்கொடுக்கப் போகிறீர்களா?” என காங்கிரஸ் அரசின் சட்டையை உலுக்கி கேள்வி கேட்க இங்கே ஆள் இல்லை.

‘கச்சத்தீவைச் சுற்றி சீன ராணுவம் இருப்பது ஏன்?’ எனத் தமிழர்களுக்காகக் கேட்க இங்கே எந்த நாதியும் இல்லை. இதைச் சொன்னால், ‘சீமான் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறான்’ என அலறுகிறார்கள். வெள்ளையர் காலத்தில் இருந்த வாய்ப் பூட்டுச் சட்டம் இந்தக் கொள்ளையர் ஆட்சியிலும் தொடர்கிறதே! நெய்வேலியில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டால், ‘சீமான் பேசினால் மின் உற்பத்தி பாதிக்கப்படும்!’ எனச் சொல்லி தடை விதிக்கிறார்கள். மின் உற்பத்திக்கும் என் பேச்சுக்கும் என்ன சம்பந்தம்? நான் பேசாவிட்டால் மட்டும் மின் உற்பத்தி சீராகி, தமிழகம் ஜொலிக்கப்போகிறதா? ஆற்காட்டார் இருக்கும் வரை ‘இருண்ட பூமி’யாகத்தானே தமிழ்நாடு இருக்கும்? குரலை அடக்க எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் அரசாங்கத்தில்? அதையும் மீறிப் பேசினால், இறையாண்மை அஸ்திரத்தை ஏவிவிடுகிறார்கள்.

எங்களைப்போல் இறையாண்மையைக் காக்கக் கூடியவர்கள் யாரேனும் இருக்கிறார்களா இந்த மண்ணில்? இளிச்சவாயர்களாக, ஈனப் பிறவிகளாக ஏதும் செய்ய வழி இன்றி, இன்று வரை அழுகையை மட்டுமே ஆயுதமாக ஏந்தும் எங்களைப் பார்த்து இறையாண்மை மீறல் என்கிறீர்களே, உங்களிடம் ஒரே ஒரு கேள்வி… சிங்களவன் இன்று வரை ஒரு மலையாள மீனவனையாவது தாக்கி இருக்கிறானா? இலங்கையின் கடல் எல்லையை எட்டாமல் மீன் பிடிக்க மலையாளி மட்டும், கலை கற்றுவைத்து இருக்கிறானா? மலையாள மீனவனைத் தாக்கினால், அடுத்து என்ன நடக்கும் என்பது சிங்களவனுக்குத் தெரியும். இந்திய அரசியலில் அதி முக்கிய சக்திகளாக இருக்கும் மலையாளிகள் சிங்களவனின் குடுமியை உலுக்கிவிடுவார்கள்.

ஆனால், எத்தனை தமிழர்கள் சிங்களவனால் சிதைக்கப் பட்டாலும், எங்கள் பிரதிநிதிகள் எதிர்த்துக் கேட்கப்போவது இல்லை. தியாகப் பெருந்தகை, அருட்பெருஞ்ஜோதி அன்னை சோனியா காந்தியின் முகம் சுண்டிவிடக் கூடாது என்பதுதான் இங்கு இருப்பவர்களின் முழு நேரக் கவலை.

இந்த தைரியத்தில்தான் தமிழர்களின் தலையில் கால் வைத்து விளையாடுவதில் அன்னை சோனியாவுக்கும் அறிவார்ந்த மன்மோகன் சிங்குக்கும் மட்டற்ற மகிழ்ச்சி. சிங்கள ராணுவத்தோடுகூட்டுப் பயிற்சியில் இறங்க இந்திய ராணுவம் செல்வது ஏன்? இனப் படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்ஷேயை ஆதாரத்தோடு வளைக்க, ஐ.நா. குழு ஆயத்தமாகி வரும் வேளையில் இந்திய ராணுவம் அங்கே செல்வது கூட்டுப் பயிற்சிக்கா? இல்லை குழப்பம் உண்டாக்கும் சூழ்ச்சிக்கா? சிங்களவனின் இனப் படுகொலையை மறைக்கவே இந்தியா முயல்கிறது என்பது என் அழுத்தமான குற்றச்சாட்டு.

‘கொஞ்சம் ரத்தம் தாருங்கள்… நிறைய சுதந்திரம் தருகிறோம்’ என்றான் இந்திய தேசிய ராணுவத்தை நிறுவிய புரட்சியாளன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். ‘நிறைய ரத்தம் தந்துவிட்டோம். கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள் உலகத்திலே!’ என்பதுதான் தமிழ்த் தேசியப் புரட்சியாளன் அண்ணன் பிரபாகரனின் கோரிக்கை. ஒருபோதும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதில் இறுதி வரை புலிகள் உறுதியாக இருந்தார்கள். புலிகளிடம் சீன அரசு இணக்கம்கொள்ளத் துடித்ததை உலகத்தில் எவரேனும் மறுக்க முடியுமா? ‘என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் இந்தியாவுக்கு எதிராக என் சிந்தை எப்போதும் திரும்பாது!’ என உரக்கச் சொன்னவர் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரன். ஆனால், தாய்த் தமிழ் உறவுகள் வசிக்கும் இந்தியா, போரின்போது சிங்களத்துக்குச் செய்த உதவிகள் போதாது என இப்போதும் கூட்டுப் பயிற்சிக்குப் படை அனுப்புகிறது.



பெருமதிப்புக்குரிய பிரதமர் அவர்களே… காமன் வெல்த் மோசடி, அலைக்கற்றை அமளிதுமளி என உங்களைச் சுற்றி இத்தனை களேபரங்கள் நடக்கையிலும், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மட்டும் தவறாமல் செய்கிறீர்களே… சிங்களத்துக்கும் சீக்கியத்துக்கும் அப்படி என்ன அண்ணன் – தம்பி உறவு? ஈழத் தமிழர்கள் என்ன ஆனாலும் வாய் பேசா மௌனியாக இருக்கும் நீங்கள், சீக்கிய இனத்துக்கு சிக்கல் நேர்ந்தால், ஊமையாகவே உட்கார்ந்து இருப்பீர்களா அய்யா? பொழுதுபோகாத குறைக்கு ‘புலிகள் கொல்லப் பார்க்கிறார்கள்’ எனக் கிளப்பிவிட்டுத் தாடியை நீவிக்கொள்ளவும் செய்கிறீர்கள். இதை எல்லாம் முன்கூட்டியே கண்டுபிடித்து உங்களை உஷார்படுத்திய உளவுத் துறை, மும்பையில் 25 தீவிரவாதிகள் நுழைந்து 150-க்கும் மேற்பட்டோரை சல்லடையாக்கியபோது எங்கே போய் உறங்கிக்கிடந்தது?

கார்கில் போரில் மடிந்த வீரர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்ததில் ஊழல், காமன் வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல் என உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலில் ஏற்றிய காங்கிரஸ்காரர்களே… இப்போது 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் புரிந்து உலக மகா சாதனையையும் செய்து இருக்கிறீர்களே… ஊழல் செய்வது எப்படி? அவை உலகுக்குத் தெரியும்போது உணர்ச்சியற்ற ஜடமாக இருப்பது எப்படி? விசாரணை என வந்தால், ஆவணங்களைத் தொலைப்பது எப்படி? அப்படியே விசாரணை நடந்தாலும், அதனை இழுத்தடிப்பது எப்படி? ஒரு ஊழலை மறைக்க அதைவிட பெரிய ஊழலைச் செய்வது எப்படி என்கிற வித்தைகளை எல்லாம் இலங்கை அரசுக்கும் கற்றுக்கொடுத்து அவர்களையும் ஊழலில் சாதிக்கவைக்க… காங்கிரஸ் கட்சியின் அமுக்கல் படையை இலங்கைக்கு அனுப்புவதுதானே சரியாக இருக்கும்?!

அதைச் செய்யாமல் ஏனய்யா இன்னமும் எங்களைக் குதறுவதிலேயே குறியாக இருக்கிறீர்கள்?

தங்களைச் சுற்றி இவ்வளவு அழுக்கு மூட்டைகளை வைத்திருக்கும் உங்களைப் பார்த்து இப்படித்தான் கோஷம் எழுப்பத் தோன்றுகிறது.

சோனியாஜி… மன்மோகன்ஜி… 2ஜி… 3ஜி… அடச்சீ!


பாகம் - 7


நிலைகள் தளர்ந்து தலைகள் குனிந்து


நின்றது போதும் தமிழா – உந்தன்

கலைகள் அழிந்து கவலை மிகுந்து

கண்டது போதும் தமிழா – வரிப்

புலிகள் எழுந்து புயலைக் கடந்து

போர்க்களம் ஆடுது தமிழா – இன்னும்

உயிரை நினைந்து உடலைச் சுமந்து

ஓடவா போகிறாய் தமிழா?


- ஈழத்து அக்னியாய் இன முழக்கம் எழுப்பிய புதுவை இரத்தினதுரை இன்றைக்கு இருக்கிறாராஇல்லையா என்பதே தெரியவில்லை. தகிக்கத் தகிக்கத் தமிழ்ப் பேசிய அந்தக் கவிஞனின் நிலையை அறியக்கூட இந்தத் தொப்புள்கொடி சொந்தத்துக்குத் துப்பில்லாமல் போய்விட்டது. வெறும் ஒன்றரைக் கோடிப் பேரை மட்டுமே கொண்ட சிங்கள இனம், 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களை வீழ்த்தி இருக்கிறது. இந்த வேதனை விசித்திரம் ஏன் நிகழ்ந்தது என்பதை எண்ணிப் பார்க்கக்கூட எங்கள் தமிழர்களுக்கு நேரம் இல்லை!

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்துக்கு ராஜபக்ஷே உரையாற்ற வருகிறார் என்பது தெரிந்து, கொட்டும் பனியில் 20 ஆயிரத்துக்கும் மேலான தமிழர்கள் இரண்டு மணி நேரத்துக்குள் கூடினார்களே… காமன்வெல்த் விழாவுக்கு ராஜபக்ஷே வந்தபோது நம்மில் ஏனய்யா அப்படி ஒரு கூட்டம் கூடவில்லை? தமிழகத் தமிழனின் உணர்வுகள் இந்த அளவுக்கா தளர்ந்துபோய் விட்டது? ஈழத்துக்காக முத்துக்குமார் தொடர்ந்து 16 பேர் மடிந்தபோதும், அவர்கள் ஏன் இறந்தார்கள் என்கிற ஆராய்ச்சிதான் இங்கு நடந்ததே தவிர, ஆவேசம் எழவில்லை! இனவெறிக் கொடூரன்ராஜபக்ஷே சிங்கள மக்களுக்கு உண்மையாக இருக்கிறான். அவனுக்கு சிங்கள மக்கள் உண்மையாக இருக்கிறார்கள். ஆனால், அவனைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு தன் இனத்துக்கு உண்மையாக இருந்தவர் என் அண்ணன் பிரபாகரன். அவருக்கு இந்தத் தமிழினம் ஒரு விழுக்காடுகூட உண்மையாக இல்லாமல் போய்விட்டது. காரணம், சாதியையும் மதத்தையும் தாண்டியது இனம் என்பது தமிழகத்து தமிழர்களுக்கு இன்னமும் புரியவில்லை. ராவுக்கு, ரெட்டியாருக்கு, நாயுடுவுக்கு என சாதியத்துக்காக ஆந்திராவில் கட்சி இல்லை. பெருமகனார் ராமராவ் கட்சி தொடங்கிய போதுகூட ‘தெலுங்கு தேசம்’ என்றுதான் பெயர் வைத்தார். சகோதரர் சிரஞ்சீவியும் ‘பிரஜா ராஜ்யம்’ என்றுதான் கட்சி தொடங்கினார். மும்பையில் வசிக்கும் மூன்று லட்சம்

மலையாளிகள், ‘மலையாள சமாஜம்’ அமைத்து அரசியல் சக்தியாக வாழ்கிறார்கள். ஆனால், அங்கே 20 லட்சத்துக்கும் அதிகமாக வசிக்கும் தமிழர்கள் நாடார், செட்டியார், பிள்ளைமார் என சாதி பெயரில் சங்கங்கள் வைத்துக் கூறுபட்டுக்கிடக்கிறார்கள். சங்கம் சங்கமாக பிரிந்து கிடக்கும் வரை நம்மை அங்கம் அங்கமாக வெட்டத்தானே செய்வார்கள்? தமிழனுக்குள் சாதி என்று இல்லாமல் சாதிக்குள் தமிழன் என்றாகிவிட்டதால்தானே இத்தனை துயரங்களும்… எது செத்தாலும் சாதி சாகக்கூடாது எனக் காத்தான் என் மூத்தோன். அதனால்தான் இன்றைக்கு இனத்தையே இழவுக்குக் கொடுத்துவிட்டுக் கதறிக் கிடக்கிறோம்.

ஈழத்துக்கு நான் போயிருந்த போதே இந்த ஆதங்கம் இருந்தது. ”உங்களுக்கு உண்மையாக இல்லாத தமிழர்களுக்காகப் போராடுகிறோமே என எப்போவாவது எண்ணி இருக்கிறீர்களா அண்ணா?” என ஆதங்கத்தோடு கேட்டேன். சட்டெனப் பதறிப்போனவர், ”அப்படி சொல்லக்கூடாதுப்பா… நம்மளை நேசிக்கிறவங்க, எதிர்க்கிறவங்க எல்லாருக்கும் சேர்த்துதான் நாம நாடு அடையணும். அதுதான் நம்ம கடமை!” என்றார். ”அரசியல் ரீதியா நீங்க எந்த முயற்சியும் எடுக்கலைன்னு சிலர் சொல்றாங்களே அண்ணே…” எனத் தயங்கியபடியே கேட்டபோது, அமைதியாக என் முகம் பார்த்தார். ”நான் தண்ணிக்குள்ள நிக்கிறேன். என்னால நீஞ்சத்தானே முடியும். தரையில நிக்கிற நீங்கதானேப்பா ஓடணும். தண்ணிக்குள்ள இருக்கிற நானே நீஞ்சணும்… நானே ஓடணும்னு எதிர்பார்த்தால் எப்படிப்பா சரியா இருக்கும்? நமக்கான தேச விடுதலைக்கான போரை இந்த அண்ணன் செய்யலாம். அதுக்கான போராட்டத்தையும் அரசியலையும் புரட்சியையும் தாயகத் தமிழர்களும் புலம்பெயர்ந்த எம்மக்களும்தானேப்பா செஞ்சிருக்கணும்?” என்றார். என் முகத்தை ஆழமாக ஊடுருவியவராக, ”இந்த நாடு எனக்கானதா… நமக்கானது இல்லையாப்பா?” எனக் கேட்டபோது அவருடைய முழு வலியும் புரிந்தது.

”புலிகள் போர் செய்த அளவுக்கு அரசியல் செய்யவில்லை?” என விமர்சனம் வைக்கும் அதிமேதாவிகளிடம் இதற்குப் பதில் இருக்கிறதா? அண்ணனின் கேள்வியையே அவர்களிடமும் வைக்கிறேன்… அவர் போர் செய்தபோது, நீங்கள் என்ன செய்தீர்கள்?

இத்தனை இழப்புகளுக்குப் பிறகும் நாம் எழுச்சி பெறாமல் இருப்பதற்குக் காரணம்… சாதிக்கு கொடுக்கும் முக்கியத்தை வீதிக்குக் கொடுக்கத் தயங்கியதுதான். மதத்துக்கு கொடுத்த மரியாதையை தமிழ் இனத்துக்குக் கொடுக்க மறந்ததுதான்.

பிணமான பின்பும் ரணமாக்கப்பட்ட இசைப்பிரியா இந்தச் சாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிந்தால், அதன் கொந்தளிப்பு வேறு மாதிரி இருந்திருக்கும். தமிழச்சியாக மட்டுமே இருந்ததால்தான் அங்கே அவள் நாதியற்றுக் கிடந்தாள். அங்கே இடிக்கப்பட்ட என் பாட்டன் பண்டார வன்னியன், தாகத்தையும் ஆயுதமாக ஏந்திய அண்ணன் திலீபன் உள்ளிட்டவர்களின் சிலைகள் சாதியத் தலைவர்களின் சிலைகளாக இருந்திருந்தால், தமிழகமே குமுறிக் கொந்தளித்து இருக்கும்.

தமிழர்களுக்குத் தலைவர்களாய் வாய்த்தவர்கள் இனப் பற்று இற்றுப்போகும் வரை வேடிக்கை பார்த்துவிட்டார்கள். ஒருவேளை இனப்பற்று இற்றுப்போவதுதான் தங்களின் பணப்பற்றுக்குப் பாதுகாப்பு என அவர்கள் எண்ணி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால்தான் இயக்கங்களையோ, தலைவர்களையோ ஒருங்கிணைக்காமல், இனத்துக்காக எதையும் செய்யத் துணிந்த சிறு சிறு நெருப்புப் பொறிகளாக சிதறிக் கிடப்பவர்களை ஒருங்கிணைத்து பெருநெருப்பாக மாற்றும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம். சாதி மறந்து, மதம் துறந்து, கட்சிப் பாகுபாடு களைந்து தமிழால் இணைந்து ‘நாம் தமிழராக’ நிமிர்வதுதான் ஒரே வழி.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் என்னை அடைத்திருந்தார்கள். ‘தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உண்டாக்கிவிடக் கூடாது’ என்பதற்காகவே வேட்பு மனு தேதி முடிந்த பிறகு வெளியே விட்டார்கள். வெறும் ஏழெட்டு நாட்கள்தான் பரப்புரையில் இறங்கினேன்.

இனத்தின் ரணத்தைத் துடைக்கத் துப்பற்றுக் கிடந்த இயலாமையை மனதில் ஏற்றி, காங்கிரஸ் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளையும் சுற்றி வந்தேன். அதற்கான பலனை நாங்கள் அடைந்தோமா என்பதைத் தோற்றுப்போன காங்கிரஸ் தலைவர்களின் துடிப்பே தமிழ் மக்களுக்கு உணர்ந்திருக்கும்!

அன்றைக்கு இருந்த ஆதங்கமும் அடிபட்ட வலியும் இன்றைக்கு ஆயிரம் மடங்கு அதிகமாய்ப் பெருகிப்போய்க் கிடக்கிறது. இப்போதும் ஐந்து மாதங்கள் சிறையில் கிடந்திருக்கிறேன். பசித்துப் பசித்து இரைக்காகக் காத்திருக்கும் புலியைப் போலவே வெளியே வந்திருக்கிறேன். என் இரை… இனத்தைப் பலிவாங்கிய காங்கிரஸ். இனத்தை அழித்த பழிகார காங்கிரஸையும், அதற்குத் துணைபோன தி.மு.க-வையும் எங்களின் லட்சிய நெருப்பின் தகிப்பு, சூறையாடப்போகும் நாள் தூரத்தில் இல்லை!

ஏற்கெனவே, ‘இலை மலர்ந்தால் ஈழம் மலரும்!’ என நான் சொன்னது சிலரால் விமர்சிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸை எதிர்த்து அ.தி.மு.க-தான் போட்டியிட்டது. அப்படியிருக்க, ‘நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். நீங்க யாருக்கோ போடுங்க…’ என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது.

களத்தில் நிற்கும் காங்கிரஸ்தான் என் எதிரி. எதிரியைக் கொல்லக் கையில் கிடைப்பது களைகொத்தோ… மண்வெட்டியோ… எதுவாக இருந்தாலும் எடுத்து அடிப்பதுதானே சரியாக இருக்கும். அந்த நேரத்தில் என் கையில் கிடைத்தது இரட்டை இலை என்கிற ஆயுதம். அதனால்தான் அதை எடுத்து அடித்தேன். இலைக்கு வாக்குக் கேட்டதை வம்பாக மாற்றியவர்கள் பம்பரத்துக்கும், மாம்பழத்துக்கும், சுத்தியல் நட்சத்திரத்துக்கும் நான் ஓட்டுக் கேட்டதை நயமாக மறந்து விட்டார்கள். ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் கிளப்பி, என்னைக் களங்கப்படுத்தி விடலாம் என நினைப்பவர்களுக்குச் சொல்கிறேன்… இந்தத் தேர்தலிலும் காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிடும் கட்சி அ.தி.மு.க-வாக இருந்தால், இந்த சீமானின் குரல் இரட்டை இலைக்குத்தான் பரப்புரை செய்யும். இதை வைத்தே, ‘அம்மையார் அள்ளிக் கொடுத்துவிட்டார்’ எனக் கிளப்பிவிடத் துடிக்கும் அரைகுறைகளே… உங்களுக்குச் சொல்கிறேன்…

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் இந்த சீமான் இருக்கப்போவது சிறைச்சாலையில்தான்!


பாகம் - 8


ஈழத்து நிகழ்வுகளை நெஞ்சு தகிக்கச் சொல்லும் ‘ஆணிவேர்’ படத்தின் படப் பிடிப்பு நடந்த நேரம்… ‘தன் பிள்ளைகளைப் பறிகொடுத்த தாயின் கண்ணீரை அப்படியே பதிவாக்கினால் ஈழக் கோரத்தை எல்லோருக்கும் புரியவைக்க முடியும்!’ என இயக்குநர் ஜான் சொல்ல… அப்படி ஒரு தாயை அழைத்து வருகிறார் கள். சிங்கள ராணுவத்தின் கோரப்பசிக்கு தன் குழந்தைகளைப் பறிகொடுத்தவள் அந்தத் தாய்.

”அம்மா, நீங்க அழுவதுபோல் படம் எடுக்க வேண்டும். குழந்தைகள் இறந்ததை மறக்கச் சொல்ல வேண்டிய நாங்களே, அதை நினைத்து உங்களை அழச் சொல்லும் சூழலில் இருக்கிறோம். உங்கள் கண்ணீர் இந்த உலகத்தை நிச்சயமாக உலுக்கும்!” என விளக்கிச் சொல்கிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர். அவர்கள் சொல்லச் சொல்ல… வெறித்துப்போய் பார்த்த அந்தத் தாய் ஒருகட்டத்தில் கதறத் தொடங்கினாள். ஆனால், அவள் கண்களில் இருந்து ஒரு சொட்டு நீர்கூட வரவில்லை.



”அழுது அழுது கண்ணீரே வத்திப்போச்சுப்பா… எத்தனை வருஷத்துக்குத்தான் எங்களால அழ முடியும்? நான் மட்டும் இல்லை… எங்கட சனங்க எல்லோருடைய கண்ணுலயும் கண்ணீரே இல்லப்பா… இனி பறிகொடுத்து அழறதுக்கு எங்ககிட்ட எதுவுமே இல்லைப்பா..!” என அவர் சொல்ல, மொத்தக் குழுவுக்கும் கண்ணீர் கோத்துக்கொண்டது.

கண்ணீர் சுரப்பியே இயங்காமல் போகிற அளவுக்கு இற்றுத்தவிக்கும் இனமாகிவிட்டதடா தம்பி நம் இனம்… ‘பேசினால் குற்றம்… எழுதினால் எதிர்ப்பு…’ என்கிற ஆட்சியில் நம்மால் என்ன செய்ய முடியும் என்கிற தயக்கம்தானடா தம்பி நம்மை முறுக்கேறவிடாமல் தடுக்கிறது. நம் இன விடுதலைக்கான போராட்டம் மட்டும்தான் இன்றைக்கு நடக்கவில்லையே தவிர, தினந்தோறும் ஏராளமான போராட்டங்கள் தமிழகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இஸ்லாமிய மக்களுக்கு, தாழ்த்தப்பட்டோ ருக்கு, உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பாட்டாளி வர்க்கத்துக்கு, கிறிஸ்துவ சிறுபான்மை மக்களுக்கு, நலிந்த தொழிலாளர்களுக்கு என பலதரப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தமிழர் தேசிய இன விடுதலை அடைந் தால்தான் இதர விடுதலைகளை நாம் அடைய முடியும் என்கிற அடிப்படை உண்மை நமக்குப் புரியவில்லை.

ஐந்து மகன்கள் வாழும் ஒரு குடும்பத்தின் சொத்து அடமானத்தில் இருக்கிறது. ‘எனக்கு இவ்வளவு’ என ஐந்து பேரும் அடித்துக் கொள்கிறார்கள். அடமானத்தில் இருக்கும் நிலத்தை மீட்டால்தானே பங்குபோட முடியும் என்கிற உண்மை ஒருவருக்கும் புரியவில்லை. அதேபோல்தான் தமிழகத்தின் நிலையும்!

ஈழப் போர் இத்தனை துயரமான முடிவுக்கு வந்தபோதும் – முள்வேலி முகாமில் தமிழ் மக்கள் முடக்கப்பட்டபோதும் – ஆயிரக் கணக்கான போராளிகள் சிறுகச் சிறுகச் சிதைக்கப்பட்டபோதும் நாம் அமைதியாக இருந்தது ஏன் தெரியுமா? இனத்தின் மீதான தலையாயப் பற்றுத் தளர்ந்துபோனதும், ‘நம்மால் எதுவும் முடியும்!’ என்கிற தன்மானப் பற்று உலர்ந்து போனதும்தான்!

ஈழப் போர் உக்கிரமாகி, ரத்தமும் சதையுமாக ஆயிரமாயிரம் பேர் செத்து வீழ்ந்தபோதும், ‘முதல்வர் என்கிற பதவியை வைத்து ஒன்றும் செய்ய முடியாது!’ என சப்பைக்கட்டு கட்டி னார்களே… ஒன்றும் செய்ய முடியாதப் பதவியைத் தக்க வைக்கத்தானே இன்றைக்கு கூட்டணியையும் தங்கள் பாதுகாப்பையும் தக்க வைத்துக்கொள்ள அல்லாடுகிறார்கள்? இடையில், ‘நாங்கள் தலையிட்டுஇருந்தால் போர் நின்று இருக்குமா?’ என்கிற துப்பற்ற கேள்வி வேறு… ‘நம்மால் செய்திருக்க முடியும்!’ என்பதற்கான பட்டியலை இவர்கள் முன்னால் இப்போது வைக்கிறேன். துப்பற்ற கேள்வியைத் துப்பியவர்களால் என் கேள்விக்கு பதில் சொல்ல முடியுமா?

சந்திரசேகரராவ் என்கிற ஒற்றைத் தலைவனின் உண்ணாவிரதம் ஆந்திராவையும் தாண்டி, இந்தியாவை ஆளும் காங்கிரஸின் தலையில் ஆணி அடித்ததே… அவர் கிளப்பிய தனித் தெலங்கானா கோரிக்கையைத் தணிக்க முடியாமல் மத்திய – மாநில அரசுகள் ஸ்தம்பித்து நின்றனவே… மாநிலப் பிரிவுக்கே அந்த அளவுக்குப் போராடிய ஒரு தலைவனைப் போல், இனத்தின் விடி வுக்குப் போராட இங்கே ஒரு தலைவனும் இல்லையா?

ஈழத்துப் போரின் இன்னல் பொறுக்காமல் துடித்து வெடித்த இந்தத் தொப்புள்கொடி உறவுகளுக்கு தமிழகத்தை ஆளும் தி.மு.க. அரசு துணையாக நிற்காதது வரலாற்றுத் துயரம். அவர்களே இனத்தின் போராட்டத்துக்கு வினையாக நின்றது வரலாற்றுத் துரோகம்!

ஈழத்துக்கு ஆதரவான போராட்டங்கள் பொங்கி வெடித்தபோது, ‘மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் மதிக்க வேண்டியவர்கள் நாங்கள். இனியும் தாமதித்தால் தமிழகத்தின் போராட்டங்கள் பன்மடங்காகப் பெருக்கெடுக்கும். அதனால், உடனடியாகப் போரைத் தடுத்து நிறுத்துங்கள்!’ என காங்கிரஸ் அரசுக்கு தமிழக அரசு எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால், ஈழத்தில் எத்தனை பேர் செத்தாலும் சரி, இருக்கைக்கு இடைஞ்சல் வந்துவிடக் கூடாது என நினைத்தது தி.மு.க. அரசு.

‘எங்களால் என்ன செய்ய முடியும்?’ எனக் கேட்டவர்கள் ஏன் எங்களின் போராட்டங்களை முடக்கினார்கள்? தம்பி முத்துக்குமார் தொடர்ந்த ரத்த உறவுகள் உடலையே தீக்குச்சி யாக ஏந்தியபோதும், அந்த உணர்வு எழுச்சியை எந்த உள்நோக்கத்துக்காக அடக்கினார்கள்? முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட மாணவர் கூட்டத்தைப் பார்த்து, அத்தனை கல்லூரிகளுக்கும் விடுதிகளுக்கும் விடுமுறை அறி வித்து மாணவ ஒருங்கிணைப்பை மட்டுப்படுத்திய மர்மம் என்ன? முத்துக்குமாரைத் தொடர்ந்து தங்கள் இன்னுயிரை ஈழத்துக்காக எரியூட்டிய வீரக்கொழுந்துகளைக் குடிகாரர்கள் என்றும், குடும்பப் பிரச்னை என்றும் சொல்லி, இழவு வீட்டையும் இழிவுபடுத்தியது எதற்காக? கொதிப்பு அடங்காமல் குவிந்த வழக்கறிஞர்கள் மீது காவல் துறை அதிகாரிகளை வைத்தே கண்மூடித் தாக்குதல் நடத்தியது எதற்காக? ஈழம் குறித்த செய்திகளோ படங்களோ எதிலும் வந்துவிடாதபடி தடுத்து ஊடக சர்வாதிகாரம் செய்தது யாருடைய உறுதுணைக்காக?

‘எங்களால் என்ன செய்ய முடியும்?’ எனக் கேட்டுக்கொண்டே எங்களுக்கு எதிராக எல்லாமும் செய்தவர்கள்தானே நீங்கள்? ‘நாங்கள் கூட்டணியில் இருந்து விலகி இருந்தால் மட்டும் என்ன நடந்திருக்கும்?’ என உங்கள் மீதான பழியைத் தாங்க முடியாமல் இன்றைக்கும் பரப்புரை செய்கிறீர்களே… காங் கிரஸ் அரசின் உச்சந்தலையை உலுக்கி இருக்க உங்களால் நிச்சயம் முடிந்திருக்கும்! அன்றைய நிலையில் காங்கிரஸ் அரசைத் தாங்கிப்பிடிக்கும் சக்தியாக இருந்தது இந்தத் தாய்த்தமிழகம்தான். நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 பேரும் அன்றைக்கு காங்கிரஸ் அரசுக்காக ஆதரவை விலக்கி இருந்தால், காங்கிரஸ் அரசு நிச்சயமாக கவிழ்ந்து இருக்கும். ‘இந்திய அரசு கவிழ்ந்தது ஏன்?’ என்கிற கேள்வி உலகையே உலுக்கி இருக்கும். உலக ஊடகங்களை ஒரே கணத்தில் தமிழர்கள் பக்கம் திருப்பி இருக்கும். அன்றைய தினத்திலேயே ஈழப் பிரச்னை உலக அரசியலாக மாறி இருக்கும். சொந்த இனத்தின் பிரச்னையை சர்வதேச அரசியலாக மாற்றக் கிடைத்த வரலாற்று வாய்ப்பை… கண்முன்னாலேயே தொலைத்தீர்களே… அந்தத் துரோகம் யாரை அய்யா சேரும்? ‘நானே அடிமை’ என உதடு துடிக்கச் சொன்னீர்களே… ஒரு அடிமை ஐந்து முறை நாடாண்ட அதிசயம் எப்படி அய்யா நடந்தது? மன்னிக்கவே முடியாத வரலாற்றுத் துரோகத்தைச் செய்துவிட்டு, ‘என்னால் முடிந்தது இவ்வளவுதான்… நான் ஈழப் பிரச்னைக்காக இரண்டு முறை பதவியை இழந்தவன்!’ என உதடு பிதுக்கிச் சொல்கிறீர்களே… ஈழத்துக்காக முதல் முறை பதவி இழந்த உங்களை மறுபடியும் பதவியில் அமர்த்தியது யாராம்? அந்த இன்னொரு வாய்ப்பை உங்களுக்கு வழங்கியது எங்களின் தன்மானத் தமிழர்கள்தானே… நீங்கள் நகத்தை இழந்தால் விரலையே இழக்கத் தயாராக இருந்த தமிழ் மக்களை நம்பாமல் போனது ஏன்? இனமானம் இழந்து – தன்மானம் தளர்ந்து இன்னமும் நீங்கள் பாடும் இயலாமைப் பாட்டைக் கேட்க நாங்கள் ஒன்றும் கிளிப்பேச்சு கேட்பவர்கள் அல்ல… புலிப்பேச்சு கேட்பவர்கள்!

பாகம் - 9

இன வெறியன் – என் போன்றவர்கள் மீது சுமத்தப்படும் பட்டம் இது. பற்றுக்கும் வெறிக்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிவார்ந்த பெருமக்கள் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன். பெற்ற தாயைப் பத்து தடவை அம்மா என அழைத்தால்… அது பற்று. நூறு தடவை அழைத்தால் அது வெறி என்பார்களோ? அன்புக்கும் பற்றுக்கும் அளவுகோல் வைக்க முடியுமா? தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர் விளையாட்டு, தமிழர் தொன்மம், தமிழர் பெருமை எனத் தனித்த பெருமிதங்களைத் தமிழர்கள் தன்னகத்தே கொண்டுவிடக் கூடாது என்பதற்காகவே, ‘திராவிட… திராவிட’ எனத் திசையெங்கும் பரப்புகிறார்களே… என் பாட்டன் ராஜராஜ சோழன் கட்டிய பெருவு​​டையார் கோயிலை தமிழர் கட்டடக் கலை எனச் சொல்லாமல், திராவிடக் கட்டடக் கலை என்று விளிக்கிறார்களே… தமிழனின் தனித்​தன்மை​யைக் குலைத்துவிடத் துடிக்கும் இவர்கள் வெறியர்களா… இல்லை, அதைத் தட்டிக்​கேட்பவர்கள் வெறியர்களா?


‘நான் தமிழன்’ என்பது இன வெறி என்றால், ‘நான் திராவிடன்’, ‘நான் இந்தியன்’ என்பதெல்லாம் என்ன வெறிகள்?



எங்கள் தமிழனுக்கு இருக்கும் உலகளாவிய அறிவும் அன்பும் இந்த பூமியில் வேறு எவருக்கு இருக்கிறது? ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என எங்கள் முப்பாட்டன் கணியன் பூங்குன்றனாரை முந்திக்கொண்டு சமத்துவம் பேசியவர்கள் எவராவது இருக்கிறார்களா? வள்ளுவன், இளங்கோவடிகள், கம்பன், கணியன் பூங்குன்றன் எனப் பாடிய தமிழ்ப் பெருமகன்கள் எல்லாம் உலகம் உலகம் என்றே உரத்துப் பாடினார்கள். ‘யாதும் ஊரே’ என்றதாலேயே தமிழனுக்கு என ஓர் ஊர் இல்லாமல் போய்விட்டது. ‘யாவரும் கேளிர்’ என்றதாலேயே கை கொடுக்கக்கூட கதியற்றுப் போய்விட்டது. கியூபாவில் கரும்பு வெட்டும் தொழிலாளிகளுக்குக் கூலி கிடைக்காததை நினைத்துக் கதறியவன் தமிழன். ஆனால், தமிழனின் கழுத்து வெட்டப்படும் துயரத்​துக்குக்கூட இந்த உலகம் துடிக்காமல் போனதுதான் துயரம்.

மார்க்ஸ், ஏங்கல்ஸ், இங்கர்சால், கார்க்கி, ஸ்டாலின், மாவோ என உலகப் புரட்சியாளர்களை எல்லாம் உள்ளத்தில் ஏற்றிக்கொண்டவன் தமிழன். ஆனால், எங்களின் தோழர்கள் ஜீவானந்தத்தையும், சிங்காரவேலரையும், ஆத்தி​கத்தின் தலையில் ஆணியடித்த ராமசாமி அய்யாவையும் கொண்டாட இந்த உலகில் எவரடா இருக்கிறீர்கள்?

மலையாளத்தின் ஓணம் பண்டிகைக்கும், ஆந்திரத்தின் யுகாதித் திருநாளுக்கும் தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், எங்களின் பொங்கல் திருநாளுக்கு வேறு எந்த மாநிலத்திலாவது விடுமுறை விடுகிறார்களா? குருநானக் பிறந்த நாளை எங்கள் தமிழகம் கொண்டாடுகிறது. ஆனால், உலகத்துக்கே பொதுமறை படைத்த எங்கள் பாட்டன் வள்ளுவனை வேறு எவராவது கொண்டாடு​கிறார்களா? இதை உரக்கச் சொன்னால், உள்ளே தள்ளக்கூடிய இன வெறியனாகிவிடுகிறான் சீமான்.

இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய புரட்சியாளன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இளங்குருத்து வயதில் தூக்குக்கு கழுத்து கொடுத்த பகத்சிங், அகிம்சையால் ஆங்கிலேயனின் அடக்குமுறையையே அடக்கிக்காட்டிய அண்ணல் காந்தி என எத்தனை​யோ தலைவர்களின் பெயர்களை என் தாய்த் தமிழக உறவுகள் தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டி இருக்​கிறார்கள். ஆனால், எங்கள் மண்ணில் இருந்து சுதந்திரத்துக்காகப் போராடிய வீர நங்கை வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பூலித்​தேவன் உள்ளிட்ட சாலச்சிறந்த வீரப் பெருமகன்களின் பெயர்களை வடக்கத்திய மண்ணில் எந்த மனிதருக்காவது சூட்டி இருக்கிறார்களா?

நேரு தொடங்கி ராஜீவ் வரை வடக்கத்தியத் தலைவர்களின் பெயர்களைத் தங்கள் வாரிசு​களுக்குச் சூட்டி, ‘எல்லோரும் நம் நாட்டுத் தலைவர்கள்’ எனத் தமிழர்கள் தழுதழுக்கிறார்கள். நேரு, இந்திரா, ராகுல், சோனியா, பிரியங்கா என எங்கள் காங்கிரஸ் அபிமானிகள் தங்களின் தாய் வீட்டுச் சொந்தம்போல் உரிமை கொண்டாடி உறவுகளுக்குப் பெயர் வைக்கிறார்களே… ஒரு வடக்கத்திய காங்கிரஸ்காரனுக்காவது கக்கன் என்றோ, காமராஜர் என்றோ பெயர் வைக்கப்​பட்டு இருக்கிறதா? எங்கள் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களின் பெயர்கள் வடக்கத்திய மண்ணில் எங்கேனும் வாழ்​கிறதா? எங்களின் தியாகம்கூட உங்களின் பார்வையில் தீண்டத்தகாததாகப் போய்விட்டதே… எங்கள் பாட்டன்களின் பங்களிப்பு இல்லாமலா இந்த மாபெரும் தேசத்துக்கு சுதந்திரம் கிடைத்தது? எங்களின் தாத்தாக்களைத் தள்ளிவைக்கும் உங்களிடம் எப்படி அய்யா எதிர்பார்க்க முடியும் எங்கள் இனத்துக்​கான சுதந்திரத்தை?

உச்சந்தலையில் இருப்பதற்காக காஷ்மீரைக் கட்டிக் காக்க லட்சக்கணக்கான கோடிகளை ஒதுக்குகிறீர்கள்… ராணு​வத்தைக் குவிக்கிறீர்கள்… எத்தனை போர் வந்தாலும் காஷ்மீரின் எல்லையைக்கூட தொட்டுவிடக் கூடாது என்​பதில் எவ்வளவு உறுதியாக இருக்​கிறீர்கள்? ஆனால், எங்களின் மீனவர்கள் வலை உலர்த்தவும், ஓய்வு எடுக்கவும் தக்க தளமாக விளங்கிய கச்சத் தீவை சிங்கள தேசத்துக்கு வலியப் போய் வழங்கி​னீர்களே… தலையில் இருந்தால் தாங்குவீர்கள்… காலுக்கு கீழே இருந்தால் கழற்றிவிடுவீர்களா? நீங்கள் கழற்றுவதற்கும் மாட்டு​வதற்கும் கச்சத் தீவு என்ன உங்களின் பழைய செருப்பா?

எங்கள் பாட்டன் ஆண்ட சொத்தை இத்தனை சீக்கிரமாக எடுத்துக் கொடுத்தீர்களே… மலை​யாளச் சேட்டன் வீட்டுச் சொத்தில் ஒரு துளியை எடுத்துக் கொடுக்க முடியுமா உங்களால்?

எந்த இனத்துக்கும் இல்லாத இந்தப் பரிதாபங்களைப் பட்டியல் போட்டால், இன வெறியன் எனப் பட்டம் கட்டிப் பாய்ச்சுகிறார்கள் சட்டத்தை…

சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு கட்டித் தப்பி வந்த தமிழர்கள் மலேசியக் கடற்பரப்பில் சுற்றி வளைக்கப்பட்டார்கள். கை கொடுத்து உதவ எந்த நாடும் முன்வரவில்லை. அகதி என்கிற அடிப்படையில்கூட உலகத்தின் பார்வை அந்தப் படகின் பக்கம் படவில்லை. தாகத்துக்குத் தண்ணீர்கூட இல்லாமல், ஒரு மாதத்துக்கும் மேலாக அந்தப் படகில் வந்த தமிழர்கள் மனிதக் கருவாடுகளாக மிதந்தபோதும், இந்த உலகம் உற்றுப்பார்க்கவில்லை.

அவர்களின் நிலையையும், அவர்கள் நின்ற நிலப்பரப்பையும் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்​கள் தமிழர்களே… மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பரப்புகளை உள்ளடக்கிய கடாரத்தை எங்களின் சோழப் பெருவளத்தான் கட்டியாண்ட காலம் எல்லாம் நெஞ்சுக்குள் மோதுகிறது தமிழர்களே… முப்​பாட்​டன் ஆண்ட நிலத்தில், பேரப் பிள்ளைகள் பிச்சை கேட்டு நின்ற நிலையை, வேறு எந்த இனமாவது எதிர்கொண்டு இருக்கிறதா? 1000 ஆண்டு​கள் இடைவெளி என்பது எங்கள் இனத்தில் இந்த அளவுக்கு விளையாடிவிட்டதே… வாழ்ந்து கெட்டவர்​களாக எங்கள் தமிழினம் வீழ்ந்துகிடக்கிறதே… அகல நிலப்பரப்பை வென்றபோது எல்லாம் எங்கள் தமிழர்கள் அங்கே கொடி ஏற்றினார்களே தவிர, யாரையும் குடியேற்றவில்லை. இத்தனைத் துயரங்​களும் தமிழனின் பெருந்தன்மையால் நிகழ்ந்த பிழை​தானய்யா… வந்தவர்களை எல்லாம் வாழவைத்த தமிழினம் சொந்த இனத்தை இன்று வாடகைக்கு வைத்து​விட்டதே… இதைச் சொன்னால் நான் இன வெறியனா?

கருங்கல்பாளையம் பொதுக் கூட்டத்தில் இந்த ஆதங்கத்தைக் கொட்டியதற்காக, இறையாண்மை மீறல் எனச் சொல்லி என்னையும், அண்ணன் கொளத்தூர் மணியையும், பெ.மணியரசன் அய்யாவையும் கோவை சிறையில் அடைத்தார்கள். எங்கள் அறைக்குப் பக்கத்து அறையில்​​​தான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அடைக்க​ப்​​பட்டு இருந்ததாகச் சொன்​னார்கள். அப்போது பெ.மணியரசன் அய்யா, ”இந்திய தேசிய விடுதலைக்காக நமது பாட்டன் பூட்டப்பட்டுக்கிடந்த அறைக்குப் பக்கத்து அறையில், தமிழ்த் தேசிய விடுதலைக்காக நாம் பூட்டப்பட்டு இருக்கிறோம். கால இடைவெளிதான் மாறி இருக்கிறதே தவிர, கம்பிகளின் அடக்குமுறை மாறவில்லை!” என்றார்.

பசி, உறக்கத்தைப்​போன்றது​தான் இன உணர்வும்… காக்கை, குருவிகளுக்கும் நாய், நரிகளுக்கும் இருக்கும் இன உணர்வு சீமானுக்கு இருந்தால் மட்டும் வெறியாகி​விடுகிறதா?

”ஓர் இனத்தைச் சேர்ந்த ஒருவன் செய்கிற அனைத்து நன்மைகளையும் ஆதரிப்பது பற்று… அவன் செய்யும் அனைத்துத் தீமைகளையும் ஆதரித்தால்… அது வெறி!” – பெருமகனார் நபிகளின் வார்த்தைகளையே நானும் சொல்கிறேன். என் வார்த்தைகள் தீமைகளைத் திரும்பிக்கூடப் பார்த்தது இல்லை. நாதியற்ற இனத்தின் நன்மைக்காகவே நா தேயப் பேசுகிறேன். இன்னமும் என்னை இன வெறியன் என்றே நீங்கள்உருவகப்​படுத்தினால், அதை நான் மறுக்கப்போவது இல்லை.

பிண வெறியனையும், பண வெறியனையும் தலைவன் எனக் கொண்டாடும் உலகில், இனவெறியன் என நான் இடிந்துரைக்கப்படுவது எல்லா​விதத்​திலும் எனக்குப் பெருமையே!

பாகம் - 10

காக்கைகள் மாநாட்டில்
கண்டனத் தீர்மானம்
பாரதியே…
எப்படிப் பாடினாய்
‘காக்கை குருவி
எங்கள் சாதி’ என்று?
எங்களில்
ஒருவர் இறந்தால்
ஊரே கூடி அழுவோம்…
ஊரே இறந்துகிடந்தபோதும்
உங்களில்
ஒருவர்கூட அழவில்லையே…
இனியும்
காக்கை சாதி
எனச் சொல்லி
எங்கள் இனத்தை
களங்கப்படுத்தாதே பாரதியே…



- இது கவிதை அல்ல… ஒவ்வொரு தமிழனின் தலையிலும் காக்கைகள் இட்ட எச்சம்!

இன உணர்வும் மன உணர்வும் இற்றுப்போய்க்கிடப்பவர் களைப் பார்த்து காக்கைகள் காறித்

துப்புவதில் தப்பு இல்லையே. இத்தனை மொழிகள் வாழும் என் தாய்த் திருநாட்டில் மலையாளத் தீவிரவாதி என எவனாவது மாட்டி இருக்கிறானா? ஆந்திரத் தீவிரவாதி என யாரேனும் அலறி இருக்கிறார்களா? கன்னடத் தீவிரவாதியைக் கண்டுபிடித்து இருக்கிறார்களா? மராட்டியத் தீவிரவாதியை எங்கேயாவது தேடி இருக்கிறார்களா? மொழிவாரியாய் வேறு எங்கேயும் இல்லாத தீவிரவாதிகள் ‘தமிழ்த் தீவிரவாதிகளாக’ இந்தத் தாய் மண்ணில் மட்டும் தேடப்படுகிறார்களே… மொழிக்காகப் போராடுபவர்களைத் தீவிரவாதிகளாக இட்டுக்​கட்டும் துயரங்களை வேறு எங்கேயாவது பார்க்க முடியுமா தோழர்களே?

தனித்த பெருமைகளைத் தடுப்பதற்காகவே ‘இந்தியன்’ என்கிற கட்டுக்குள் எங்களைக் கட்டிய புத்திமான்களே… எங்கள் இனத் துயரத்துக்கு மலையாள மண் என்றைக்​காவது மனம் வருந்தி இருக்கிறதா? ஆந்திர தேசம் என்றைக்​காவது எங்களுக்காக அழுது இருக்கிறதா? கர்நாடகம் என்றைக்காவது எங்களுக்காகக் கதறி இருக்கிறதா? என் மீது விழுந்த அடி எவனுக்குமே வலிக்கவில்லை. சக மனிதனாகக்கூட என் கவலை​யில் நீங்கள் கலந்துகொள்ளவில்லை என்றால் எதற்கடா எங்களுக்கு இந்தியன் என்கிற அடையாளம்?

ஈழமே இறந்து கிடந்தபோதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்​காத தமிழகம், ஆந்திரத்தின் முதல்வர் ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் மறைந்தபோது, பக்கத்து மாநிலம் எனப் பதறி ஒரு நாள் அரசு விடு​முறையை அறிவித்ததே… அது தவறு என எந்தத் தமிழனாவது தடுத்தானா?

தமிழ்த் தேசிய உணர்வுக்குள் எங்களைத் தள்ளிவிட்டதே நீங்கள்தானே… மலேசியாவில் தமிழர்கள் துரத்தப்பட்டபோது, அங்கே இருந்த மலையாளிக்கோ, தெலுங்கருக்கோ வலிக்கவில்லை. காவிரிக்காக கருணை காட்டாதவர்கள் – முல்லை பெரியாறு விவகாரத்தில் முறுக்கிக்​ கொண்டு நிற்பவர்கள் – ஒகேனக்​கல் விவகாரத்தில் எங்களை ஒதுக்கி​வைப்ப​​வர்கள் – பாலாறு விவகாரத்தில் கோளாறு​கொள்பவர்கள் ‘இந்தியர்’ என்கிற அடையாளத்தில் மட்டும் நம்மோடு இணைவது சாத்​தியமா தமிழர்களே? இதைச் சொன்னால் இன வெறி… இறையாண்மை மீறல்… தேசிய பாதுகாப்புக்குப் பங்கம்… தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம்!

மராட்டிய மண்ணில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவன் பேருந்து ஒன்றைக் கடத்துகிறான். மராட்டியக் காவலர்கள் அவனைச் சுட்டு வீழ்த்துகிறார்கள். அடுத்த கணமே கட்சி வேறுபாடுகளை தூக்கி வீசிவிட்டு, பீகார் முதல்வர் நிதீஷ் குமாரும், லல்லு பிரசாத் யாதவும், ராம் விலாஸ் பஸ்வானும், ‘எங்கள் மாநிலத்​தானை எப்படிச் சுடலாம்?’ என மராட்டிய மண்ணையே உலுக்கினார்களே… தீவிரவாதச் செயல் செய்த ஒருவன் கொலையானதற்கே, அந்த மாநிலத் தலைவர்கள் குலைநடுங்கக் கொதித்தார்களே… ஆனால், கொத்துக் கொத்தாய் ஆயிரமாயிரம் தமிழர்கள் செத்து வீழ்ந்தபோதும் இந்தத் தாய்த் தமிழகம் கொதிக்கவில்லையே அய்யா? நிதீஷ் குமாரும் லல்லுவும் கொதித்தால்… அது இன உணர்வு. நான் கொதித்தால் மட்டும் இன வெறியா?

எப்போதுமே காங்கிரஸின் எதிரி… அதோடு, பாரதிய ஜனதா கட்சியை மட்டுமே நிலையான கூட்டாகக் கொண்டவர் மராட்டிய மண்ணின் தலைவர் பால் தாக்கரே. குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸும் பாரதிய ஜனதா கட்சியும் வேட்பாளர்களை அறிவித்தபோது, அவர் ஆதரித்தது காங்கிரஸ் வேட்பாளரைத்தான். காரணம், அம்மையார் பிரதீபா பாட்டீல் மராட்டிய மண்ணுக்குச் சொந்தக்காரர். ‘மண்ணுக்குப் பிறகுதான் மற்றதெல்லாம்’ என்று நினைத்த பால் தாக்கரே எங்கே… ‘கூட்டணிக்குப் பிறகுதான் குடிமக்கள்’ என்று நினைக்கும் நம் தலைவர்கள் எங்கே?

‘எங்கள் மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்!’ எனச் சொன்னதற்காக தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சி, ஐந்து மாதங்கள் என்னை சிறையில் அடைத்தவர்களிடம் கேட்கிறேன். ராமர் பாலம் விவகாரத்தின்போது, ‘கருணாநிதியின் தலையை வெட்டுவேன்’ என வேதாந்திரி சாமியார் வெறிக் கூச்சல் போட்டாரே… ‘தமிழகத்தின் முதல்​வரை வெட்டுவேன் எனச் சொல்வது தேசியப் பாதுகாப்புக்குப் பங்கமாகிவிடாதா?’ என அந்தச்சாமி​யாரை யாருமே கேட்காதது ஏனய்யா? அடிப்பேன் என்றதற்காக என்னை அடைத்தவர்கள், வெட்டுவேன் என்றவரை விட்டுவிட்டார்களே… தமிழனை யார் வேண்டுமானாலும் திட்டலாம்; யார் வேண்டுமானாலும் வெட்டலாம் என்கிற விதியை தமிழகத்தை ஆளும் தலைவர்களே உருவாக்கிவிட்டதுதான் சொரணையைச் சுண்டும் துயரம்!

நாகசாகி நச்சு எங்களின் தலைமுறையைத் தாக்கியது. சோமாலியாவின் பசி எங்களின் வயிற்றை எரித்தது. அமெரிக்க இரட்டைக் கோபுரத் தகர்ப்பு எங்களை அலறவைத்தது. ஆப்கானின் துயரம்எங்களின் அடிமடியை நொறுக்கியது. ஈராக்கில் விழுந்த இழவு எங்களில் ஈரக்​குலையை நடுக்கியது. சதாம் உசேனின் தூக்குக் கயிறு எங்கள் குரல்வளையையும் இறுக்கியது. பெனாசிர் பூட்டோவின் முடிவு எங்களையும் பேதலிக்கவைத்தது. உடலில் எங்கே அடிபட்டாலும் கண் அழுவதைப்போல, இந்த உலகத்தில் எங்கே துயரம் நிகழ்ந்தாலும் என் மண் அழுதது. ஆனால், என் மண் அழுதபோது, அதற்காக உலகில் எவருடைய கண் அழுதது? எல்லாவற்றுக்காகவும் அழும் எங்களைப் பார்த்து, எதற்காகவும் அழாதவர்கள் ‘இன வெறி’ என்கிறீர்களே… இது வரலாற்று வஞ்சனையாக இல்லையா?

பந்தங்களுக்காகப் பதறுவதையும், சொந்தங்​களுக்காகத் துடிப்பதையும் இன வெறி எனப் பரப்புகிறார்களே… இதில் இருக்கும் மறைமுக அடக்குமுறையை படித்த தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், அவர்களில்சிலரேகூட இணையதளத்தில் ‘இன வெறி​யன்’ என எனக்கு அடையாளம் ஏவுகிறார்கள். இணையத்தில் ‘சீமான்’ என்கிற வார்த்தையை வைத்து விளையாடப்படும் விமர்சனங்களைப் படிக்கையில், சினம் வருவதற்குப் பதிலாக சிரிப்புத்தான் வருகிறது.

பிச்சை எடுத்துக்கொண்டு இருந்த ஒருவனிடம், ‘உனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் கிடைத்​தால் என்ன செய்வாய்?’ எனக் கேட்டார்களாம். ‘தங்கத்தில் திருவோடு செய்து சிங்கப்பூருக்குப் போய் பிச்சை எடுப்பேன்!’ எனச் சொன்னானாம் அவன். விஞ்ஞானம் என்னும் வரப் பிரசாதத்தை நம் இளைய தலைமுறையும் அப்படித்தான் பயன்படுத்துகிறது. வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து வெட்டி வாதங்கள் பேசிய காலம் கரையேறிவிட்டது என நினைத்தால்… இன்றைக்கு இணையத்தில் உட்கார்ந்து ‘அவன் அப்படி… இவன் இப்படி’ எனச் சொல்கிற அளவுக்கு வெட்டிக்கூட்டம் விசாலமாகிவிட்டது. அன்பிற்கினிய இணையதளப் புரட்சியாளர்களே… நீங்கள் காறித் துப்ப நினைத்தாலும் களத்துக்கு வந்து நின்று துப்புங்கள்!

அதையும் தாண்டி இந்த அரசாங்கத்தைப்​போலவே, இன்னமும் என்னை இன வெறியன் என்றே நீங்கள் உருவகப்படுத்தினால், அதனை பெருமை பொங்க ஏற்றுக்கொள்கிறேன். நல்ல தமிழ்த் தாய்க்கும் நல்ல தமிழ்த் தகப்பனுக்கும் நான் பிறந்திருக்கிறேன் என்பதை ‘இன வெறியன்’ என்கிற வார்த்தை மூலமாக உறுதி செய்து கொடுத்தமைக்கு நன்றி!

பாகம் - 11

மீண்டும் என் மீனவ சொந்தத்தின் மீது துப்பாக்கிப் பாய்ச்சி இருக்கிறது, திமிர்எடுத்த சிங்களக்


கடற்படை! கடந்த 60 ஆண்டுகளாக சிங்கள இனவெறியர்கள் தமிழக மீனவர்கள்மீது நடத்தும் வெறிகொண்ட தாக்குதல்கள், இந்த அரசாங்​கத்தின் செவிகளை அறையவில்லை. இதுவரை 537 மீனவர்கள் சிங்களத் தாக்குதல்களால் செத்து மிதந்​திருக்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் நம் இந்திய அரசு சொல்கிறது, ‘இலங்கை நம் நட்பு நாடு’ என்று! பகை நாடாகச் சொல்லப்படும் பாகிஸ்தான்கூட எல்லைமீறும் இந்திய மீனவர்களை இதுவரைத் தாக்கி​யது இல்லை!


கடற்பரப்பில் எல்லையை நிர்மாணிப்பது கடினம். தெரியாமல் எல்லை தாண்டும் மீனவர்களைக் கைது செய்வார்கள். எச்சரித்து அனுப்புவார்கள். கடற்பரப்பு கொண்ட அத்தனை நாடுகளும் அனுசரிக்கும் நியதி இதுதான். ஆனால், கோடானுகோடி பண உதவிகளையும் படை மரியாதைகளையும் ராணுவப் பயிற்சிகளையும் இந்திய அரசிடம் பெற்றுக்கொள்ளும் நட்பு நாடு என்கிற நாமகரணம் கொண்ட இலங்கை அரசு, தமிழக மீனவர்களைக் குருவியைப் போன்று சுட்டு வீழ்த்துகிறது! நடுக்கடலில் நம் தமிழ் மீனவர்கள் சிங்கள மீனவர்களால் எப்படி எல்லாம் சிதைக்கப்படுகிறார்கள் என்பது தெரியுமா? உறவுகளே… திருக்கை மீனோடு மனிதனை உறவுக்கு உட்படுத்தும் கொடூரங்களை இதுவரை உலகம் கேள்விப்​பட்டு இருக்கிறதா தமிழர்களே? அப்பனை விட்டு மகனை நிர்வாணமாக்குவது, சூடு போடுவது, பச்சை மீன்களை வாயில் திணிப்பது, ஒவ்வாத உறவுகளுக்கு உட்படுத்துவது… இப்படிச் சிங்கள வெறியர்களால் நடுக்கடலில் நம் உறவுகளுக்கு நிகழும் உபத்திரவங்கள் ஒன்றா, இரண்டா?



இதில் எல்லாம் ஏற்படாத இனப்பகை, ‘எங்கள் மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்’ எனச் சொன்னதில் ஏற்பட்டுவிட்டதா? என்னை முடக்க நினைப்பவர்கள், சிங்கள மூர்க்கர்களை அடக்கத் துணியாதது ஏன்? உலக வல்லமை படைத்த இந்தியக் கடற்படை திறமைகள் எல்லாம் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மட்டும் தடுமாறுவது ஏன்? எல்லை மீறும் சிங்கள மீன​வனை என்றைக்காவது இந்தியக் கடற்படை சுட்டிருக்கிறதா? தமிழ் மீன​வர்கள் தாக்கப்படும்போது, என்றைக்காவது குறுக்கே விழுந்து தடுத்திருக்கிறதா?

மும்பைக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றபோது, எந்த நேரமும் போர் மூளும் என்கிற அளவுக்கு ஆக்ரோஷம் கொண்ட இந்திய அரசு, தவணை முறை​யில் தமிழர்கள் காவு வாங்கப்படும் துயரத்தை மட்டும் கண்டுகொள்வதில்லையே!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்வது எல்லை மீறிய பயங்கரவாதம் என்றால் சிங்களவன் செய்வதும் அத்தகைய அயோக்கியத்தனம்தானே! தனுஷ்கோடி வரை தமிழக மீனவர்களை விரட்டிவந்து வேட்டையாடும் சிங்களக் கடற்படையை வேடிக்கை பார்க்கத்தான் எங்கள் கடற்படை கடலில் நிற்கிறதா? இந்தியக் கடற்​படைக் கப்பலில் பறக்கும் தேசியக் கொடிதானே எங்கள் மீனவன் படகிலும் பறக்கிறது. இந்தியக் கொடி கட்டிய படகு நொறுக்கப்படுவது இந்தியக் கடற்படைக்கு இழுக்கு இல்லையா?

சிங்கள மீனவர் ஒருவர், அவருடைய நண்பரைச் சந்திப்பதற்காக மதுரை சிறைக்கு வந்தார். முகச் சாயலை வைத்து சந்தேகத்தில் நம் காவல்துறை அவரை விசாரித்தது. அந்த சிங்கள மீனவரின் பதிலும் நடவடிக்கையும் சந்தேகத்தை மிகுதியாக்கவே ஒரு கட்டத்தில், சுட்டுக் கொன்றுவிட்டது நம் காவல்துறை. உடனடியாக அந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்ற நம் அரசு, நம் சார்பாகவே அந்த மீனவரின் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கியது.

60 வருடங்களாக தமிழக மீனவர்களைத் தொடர்ந்து துயரத்துக்கு உள்ளாக்கும் இலங்கை ராணுவம் என்றைக்காவது எங்களின் துயரத்துக்குப் பொறுப்பேற்று இருக்கிறதா? மீனவப் பாண்டியனை நாங்கள் சுடவில்லை என்று இப்போதும் மறுக்கிறது சிங்கள அரசு. நீங்கள் சுடவில்லை என்றால், எங்கள் மீனவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு மடிகிறார்களா? இல்லை, உங்களுக்குக் கூட்டுப் பயிற்சி கொடுக்கும் எங்கள் இந்திய ராணுவமே எங்களைக் கொத்திக் குதறுகிறதா? எங்கள் இனத்தாரும் உள்துறை அமைச்சர் பெருமானுமாகிய ஐயா ப.சிதம்பரம், ‘தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதே இல்லை’ என்கிறாரே? இத்தனை மீனவர்களின் பிணங்களையும் பார்த்துவிட்டுப் பேசுகிற பேச்சா இது? உங்களின் உளவுக் கண்களுக்கு எங்கள் வீட்டு இழவு ஏனய்யா தெரியாமல் போய்விட்டது? ‘கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்தது, கொடுத்ததுதான்’ என எஸ்.எம். கிருஷ்ணா சொல்கிறாரே…. கர்நாடக மீனவன் ஒருவன் சிங்கள அட்டூழியத்தால் செத்து மிதந்திருந்தால், எஸ்.எம்.கிருஷ்ணாவால் இப்படிச் சொல்லி இருக்க முடியுமா? சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கிற நேரத்தில் இறந்ததாலோ என்னவோ எங்களின் முதல்வர், பாண்டியன் கொலைக்கு ரொம்பவே பதறி​விட்டார். அடுத்த கணமே 5 லட்சம் பண உதவி அறிவிப்பு வெளியானது. தமிழன் தலையில், இடி விழுந்தால்கூட தபால் மட்டுமே எழுதும் எங்கள் முதல்வரின் நடவடிக்கையில் இந்த முறை கொஞ்சம் முன்னேற்றம்! தபாலுக்கு பதிலாக பிரதமருக்கு தந்தி அனுப்பியிருக்கிறார்.

ஆழ்ந்த அனுதாபமும் அவசரத் தந்தியும் கொடுத்​திருக்கும் முதல்​வர், அடுத்த​கட்ட முயற்சிகளையும் முன்​னெடுப்பதாகச் சொல்லி​யிருக்கிறார். தமிழர்​களே, தைரியமாக இருங்கள். பறிபோன பாண்டியனின் உயிரை அவர் பத்திரமாக மீட்டுத் தந்துவிடுவார்!

கடல் அளவுக்குக் கண்ணீரோடு போராடும் நம் மீனவச் சொந்தங்களை நினைக்கும்போதெல்லாம் ஈழத்துக்கு போய்வந்த நினைவுகளே என்னுள் ஏக்கத்தோடு எழும்புகின்றன. ஈழத்துக்குப் போய்த் தங்கிவிட்டு நம் மண்ணுக்குத் திரும்பவும் புலித் தம்பிகளோடு படகில் புறப்​பட்டேன். அப்போது தூரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் நின்றுகொண்டிருந்தன. ”அங்கே பார்த்தீர்களா, அண்ணா? நம் கட்டுப்பாட்டுப் பரப்பில் நம் தமிழகச் சொந்தங்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கிறார்கள்!” எனக் கை காட்டிச் சொன்னார்கள். பக்கத்தில் போனபோது என் முகம் அறிந்து நம் மீனவர்கள் கையை அசைத்து ஆரவாரிக்க,

”இவர்களின் படகிலேயே உங்களை அனுப்பி வைத்துவிடலாம். அரை மணி நேரத்தில், நீங்கள் தமிழகம் போய்விடுவீர்கள். ஆனாலும் அண்ணன் திட்டு​வார்!” எனச் சொன்னார்கள் புலித் தம்பிகள். என் நெஞ்சம் எல்லாம் நிரம்பி வழிந்த நேரம் அது. தமிழக மீனவர்களுக்குப் புலிகளின் கடற்படை துணை நின்ற தருணங்களை நினைக்கிறபோதெல்லாம் சிங்களவனின் வெறியாட்டம் ரெட்டிப்பு வேதனையாய் என் நெஞ்சை அறுக்கிறது. தாய்த்தமிழ் உறவுகளாகத் தழுவிய அந்தச் சொந்தங்களைத்தான் பயங்கரவாதிகளாக நம் தேசம் பிரகடனப்படுத்தியது. பாசம் காட்டியவர்கள் பயங்கர​வாதிகள்! படுகொலை செய்பவர்கள் பாசக்காரர்கள்! இந்தியாவின் அணுகுமுறை என்னே! என்னே!



வியன்னாவில், ஒரு சீக்கியனின் தலைமுடியை அறுத்தமைக்காக சீக்கிய இனமே மொத்தமாக தெருவில் இறங்கிப் போராடியது. ஆனால், இங்கே எங்கள் தலையையே அறுத்த பின்னும் ஒருவனுமே போராட​வில்லை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் தாக்கப்பட்டபோது, மொத்த தேசமும் பொங்கி வெடித்​ததே! இந்திய மாணவனுக்கு கொடுக்கும் குரலை இந்திய மீனவனுக்கு கொடுக்க ஏனய்யா மறுக்கிறீர்கள்? எங்களின் மீனவன் கடலில் மிதக்கும்போது ‘இந்திய மீன​வனின் சடலம்’ என்கிற அடையாளத்தைக்கூட இந்த அரசாங்கம் கொடுப்பது இல்லை. தமிழக மீனவனை இந்திய தேசத்தில் இருந்து தள்ளிவைக்கும் சட்டத்தை என்றைக்கு அய்யா பிறப்பித்​தீர்கள்?

இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் எங்களின் முதல்வர் திருமகனார் ‘மட்டற்ற மகிழ்ச்சியில் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்’ என அறிவித்து, தமிழர் தலைவனாக தன் கடமையைச் செவ்வனே செய்கிறார். கொலையான பாண்டியனின் செந்நீரிலும் அவர் குடும்பத்துக் கண்ணீரிலும் எங்கே அய்யா தேடுவது ‘மட்டற்ற மகிழ்ச்சியை?’ இதற்காகத்​தானடா ‘தமிழா இன உணர்வு கொள்’ என்பதைத் தொண்டை வரள வலியுறுத்துகிறேன். ‘கொல், கொல்’ எனக் குரூரம் காட்டுபவனை வெல்வதற்காகவாவது இன உணர்வு கொள்ளடா தமிழா!

இதைச் சொன்னாலும் மீண்டும் ஏவுவார்கள் சட்டத்தை. ‘மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்’ என்றதற்காக என்னைத் தேசியப் பாது​காப்புச் சட்டத்தில் அடைத்த அறிவாளிகளே… ‘சட்ட​மீறல்’ என சந்திக்கு இழுத்தவர்களே… ‘அத்துமீறல்’ என அலறிய அரசியல் நுண்ணறிவாளர்களே! நான் அடிப்​பேன் என்றதில் குலைந்துபோன தேசியப் பாதுகாப்பு, சிங்களவன் அடித்ததில் குலையவில்லையா? என் பேச்சால் உருவான இனப்பகை சிங்களவனின் குண்டு வீச்சால் உருவாகவில்லையா?

அன்றைக்கு என் வார்த்தைகளை ‘வரம்பு மீறல்’ என உரைத்த உத்தமர்களே! இப்போது சொல்லுங்கள்… நான் என்ன செய்ய?

பாகம் - 12

”குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தாய்ப்பால் எவ்வளவு இன்றியமை​யாததோ, அதேயளவு அதன் மனவளர்ச்சிக்கு தாய்மொழி இன்றிய​மையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிடம் இருந்துதான். அப்படியிருக்க, குழந்தையின் உள வளர்ச்சிக்கு தாய்மொழி அன்றி, வேறொரு மொழியைத் திணிப்பது தாய்நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம் என்றே நினைக்கிறேன்!” – அண்ணல் காந்தியடிகள் தாய்மொழி குறித்துத் தீர்க்கமாகச் சொன்னது இது! அகிம்சை என்கிற ஒன்றை மட்டுமே அவர் போதித்ததாக நினைத்து, புத்தி மறத்துக்கிடக்கும் எம்தமிழன் ஆண்டுதோறும் சனவரி 25-ம் தேதி மறக்காமல் அனுசரிக்கிறான், மொழிப்போர் தியாகிகள் தினமாக. இனத்தை மறந்தவன், மொழிக்காக விழுந்த பிணத்தை மறந்தவன், தியாகிகள் தினத்தையாவது மனதில் வைத்திருக்கிறானே என மனதை தேற்றிக்கொள்ளலாம்.




‘நாளை என் மொழி அழியுமானால், இன்றே நான் அழிவேன்!’ என உரக்கச்சொன்னான் அம்சத் என்கிற பற்றாளன். ஆனால், மொழியைக் காக்க தங்களையே அழித்துக்கொண்ட தாளமுத்து ராசேந்திரன், அரங்கநாதனை எல்லாம் அடையாளம் மறந்துவிட்டு, தினத்தை மட்டும் ஒப்புக்கு அனுசரிப்பது, நெஞ்சத்தை அறுத்துவிட்டு நினைவஞ்சலி செலுத்துவதுபோல் அல்லவா இருக்கிறது. தமிழ் மொழிக்காக தன் மூச்சு நிறுத்தியவர்களை நாம் எந்த அளவுக்கு இழிவுபடுத்துகிறோம் என்பதற்கு ஓர் உதா’ரணம்’ சொல்லவா தமிழர்களே… மொழிக்காக உயிர்விட்டவனின் மூச்சைக் கௌர​விக்க சென்னையில் ‘அரங்கநாதன் சுரங்கப்பாதை’ என்று பெயர் வைத்தோமே… அதை இன்றைக்கு எப்படி உச்சரிக்கிறார்கள் தெரியுமா? ‘அரங்கநாதன் சப்-வே’ என்று… தமிழுக்காக உயிர்விட்டவனை ஆங்கில வார்த்தைகளால் அடையாளப்படுத்தும் ஈனத்தனத்தை வேறு எந்த இனத்திலாவது கண்டிருக்கிறீர்களா?

தாளமுத்துவின் கல்லறையை என்றைக்காவது கண்டிருக்​கிறீர்களா தமிழர்களே… அது இப்போது கல்லறையாக இல்லை… கழிவறையாக! மொழிப்போரில் முளைத்த எழுச்சியை வைத்து ஏற்றம்கண்டவர்கள், அந்தத் தியாகிகளின் பக்கம் திரும்பிக்கூடப் பார்ப்பது இல்லை.

தாய்மொழியைப் பற்றிப் பேசினாலே, ‘தமிழ்ப் பாசிசம்’ எனப் பாய்பவர்களே… ‘இது தமிழர்கள் நாடு. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட ஆதிக்குடிகளே இந்த மண்ணை ஆண்டு இருக்கிறார்கள்!’ இதை நான் சொல்லவில்லை. புரட்சியாளர் அம்பேத்கரும் மூத்த தோழர் ஜோதிபாசுவும் சொல்லி இருக்கிறார்கள். இமயம் வரை எனது இனம் பரவி இருந்தது என்பதற்கு அங்கே புலிக்கொடி பறந்த உதாரணங்கள் போதாதா? எங்கள் முப்பாட்டன் சேரன் செங்குட்டுவன் பாட்டி கண்ணகிக்கு கோயில் கட்ட இமயத்தில் கல் எடுத்த வரலாற்றை ‘பாசிச’ பட்டம் சூட்டுபவர்கள் மறுக்க முடியுமா? ஊரான் வீட்டுக் கல்லை எங்கள் பாட்டன் தொட்டு இருக்க முடியுமா? இமயம் வரை விரவி இருந்த எங்கள் இனம், எப்படியடா இப்படிச் சுருங்கிப்போனது? மொழித் திரிபும் மொழிக்கலப்பும் எங்களை இந்த அளவுக்கு முடக்கி​விட்டதே… கருவியை ஆயுதம் என்றோம். கோயிலை ஆலயம் என்றோம். மகிழ்ச்சியை சந்தோஷம் என்றோம். மலரை புஷ்பம் என்றோம். மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழிகளை சமஸ்கிருதக் கலப்பில் இருந்து பிரித்துப் பார்த்​தால், எங்களுடைய தூய தமிழ் தும்பைப்பூவாக வீசுமே… எங்கள் முப்பாட்டன் சேரனின் வாரிசு​களை மலையாளி ஆக்கி​விட்டு, நாங்கள் கொலையாளிகளாகத் தவிக்கிறோமே… எங்கள் மொழியின் முகத்தில் விழுந்த காயங்களைச் சொன்னால் அது தமிழ்ப் பாசிசமா?

அறிவழகன், இளஞ்சேரன், புகழ்மாறன், கணியன், இனியன் என்கிற பெயர்கள் எல்லாம் இன்றைக்கு ரமேஷ், தினேஷ், சுரேஷ் என்று மாறிப்போகிற அளவுக்கு எங்கள் மொழி, கலப்புக்கு களமாகி​விட்டதே…

ஈழத்தில் இத்தனை பிணங்கள் விழுந்தபோதும், ‘தமிழர்கள் இறந்தார்கள்’ என்றுதானே சொன்னார்கள். பர்மாவில் இருந்து துரத்தப்பட்டபோதும், மலேசியாவில் இருந்து விரட்டப்பட்டபோதும் தமிழர்கள் என்கிற அடையாளம்தானே அனைவராலும் அறியப்பட்டது. பிணமாகும்போதும் நாம் இனமாகத்தானே வீழ்​கிறோம். ஆனால், உயிர்வாழும்போது சாதிக்கும் மதத்துக்கும் கொடுக்கும் பற்றை என்றைக்காவது மொழிக்குக் கொடுத்து இருக்கிறோமா? பாலில் தண்ணீர் கலந்தால் வாங்க மறுக்கும் என் தமிழ்சாதி, அரிசியில் கல் இருந்தால் ஒவ்வொன்​றாகப் பொறுக்கிவீசிவிட்டு சமைக்கும் என் தமிழ்க்குடும்பம் உயிருக்கு நிகரான மொழியில் மட்டும் ஊடுருவலையும் கலப்பையும் அனுமதித்தது அடுக்குமா தமிழர்களே? எது ஒன்றிலும் கலப்படத்தை விரும்பாத நாம் தாய்மொழிக் கலப்படத்தைத் தடுக்காமல் போனது ஏன்? தாயோடு பிறிதொரு ஆண் இருப்பதை நெஞ்சத்தால் எப்படி நினைத்துப் பார்க்க முடியாதோ… அதேபோல்தான் தமிழர்களே, தாய்​மொழியில் அந்நியம் கலப்பதும்!

இங்கே ஸ்ட்ரீட் இருக்கிறது; தெரு இல்லை. எக்ஸ்டென்ஷன் இருக்கிறது; விரிவு இல்லை. ரோடு இருக்கிறது; சாலை இல்லை. போகவேண்டிய இடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டால், ‘லெஃப்டில் கிராஸ் பண்ணி, யு டர்ன் அடிச்சா ஸ்பாட் வந்துரும்!’ என பதில் சொல்கிறார்கள். அடக்கொடுமையே… வழி கேட்கும் இடத்தில்கூட நம் மொழி கேட்க முடியவில்லையே! வாய்மொழியாகக்கூட என் தாய்மொழியை இந்தத் தமிழகத்தில் கேட்க முடியவில்லையே… மூளை நரம்புகளை முறுக்கேற வைக்கவேண்டிய இந்த வருத்தம், எந்தத் தமிழனிடத்திலும் முளைக்காமல் போனது ஏனய்யா?

ஒவ்வொரு தமிழனின் மண்டையிலும் மான உணர்வு மரித்துப்போனதற்குக் காரணம்… நாம் தண்ணீர் பருகுவது இல்லை. மாறாக வாட்டர் குடிக்கிறோம். சோறு உண்பது இல்லை. ரைஸ் உண்கிறோம். காலை​யில் ‘குட் மார்னிங்’, இரவில் ‘குட் நைட்’ என்பதை வழக்கமாக்கிக்கொண்டோம்!

கோடிகளைக் கொட்டி செம்மொழி மாநாடு நடத்தியவர்கள், ஆறே மாதங்களில் வணிக நிலையங்​களுக்குத் தமிழ்ப் பெயர் சூட்டப்படும் என சூளுரை சொன்னார்களே… இந்த நொடி வரை எங்கேயாவது தமிழ்ப் பெயர்களைத் தாங்கிய வணிகப் பலகைகளைப் பார்க்க முடிகிறதா? ஆனால், ஈழத்தில் அப்போதே அண்ணன் பிரபாகரன் வங்கியை ‘வைப்பகம்’ என்றும் பேக்கரியை ‘வெதுப்பகம்’ என்றும் மாற்றினார். ”வெதுப்பகம்னு சொன்னப்ப சனங்க எல்லோரும் சிரிச்சாங்க தம்பி… ஆனால், இப்போது பேக்கரின்னு சொன்னா சிரிப்பாங்க தம்பி. நாம் உறுதி எடுத்தால் நிச்சயம் நிலைமை எல்லாம் மாறும்!” என அண்ணன் சொன்ன வார்த்தைகள் மறக்கக்கூடியவையா?



அண்ணன் தமிழ்ச்செல்வனின் இயற்பெயர் தினேஷ். ஒரு திருமண நிகழ்வுக்கு தமிழ்ச்செல்வனோடு தலைவர் போய் இருக்கிறார். அப்போது தமிழ்ச்செல்வனின் தமிழாசிரியை தலைவரிடம், தமிழ்ப் பெயர்களின் அவசியம் குறித்து வலியுறுத்தி இருக்கிறார். அப்போதே துடித்துப்​போன அண்ணன் பிரபாகரன், ‘இயக்கத்தில் இருப்பவர்கள், முழுதும் தமிழின அடையாளத்தோடு மட்டுமே இருங்கள்!’ என ஓர் உத்தரவு போட்டார். போராளிகள், தலைவர்கள், தளபதிகள் பெயர்கள் எல்லாம் அன்றைக்கே தமிழ்ப் பெயராயின!

மாற்ற முடியும் என்கிற மன உறுதியும், மாற்ற வேண்டும் என்கிற நோக்கமும் தமிழகத்தை ஆண்ட – ஆளும் தலைவர்கள் எவருக்​குமே இல்லாமல் போனது ஏன்? கர்நாட​கத்தில் ஆங்கிலப் பெயரைத் தாங்கி வணிகப் பலகைகள் இருந்தால், அங்கே கிளம்பிச்செல்லும் கன்னட அமைப்பினர், அப்போதே ஆங்கிலப் பெயரை அழித்து, கன்னடத்தில் எழுதுகிறார்கள். அந்த இடத்திலேயே அந்த நிறுவனத்துக்கு அபராதம் போடுகிறார்கள். அதற்கு காவல் துறையும் துணையாகத்தானே நிற்கிறது… அதையத்த வீரம், இந்த அன்னை மண்ணில் எவருக்குமே ஏற்படாதது ஏனய்யா தமிழர்களே?

ரஷ்யாவில் இருந்து பிரிந்த லாட்வியா நாட்டில், அவர்களின் தாய்மொழியில் ரஷ்ய மொழியின் கலப்பு இருந்திருக்கிறது. அதைத் தடுக்க அந்த நாட்டில் சீருடை இல்லாத காவலர்களை நியமித்து, ரஷ்ய மொழியைக் கலந்து பேசுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். சட்டம் போட்டு மொழியைக் காக்கத் துடிக்கும் நாடுகளுக்கு மத்தியில், நாம் திட்டம் போட்டு ஆங்கில மோகம் பிடித்து அலைவது நியாயமா தமிழர்களே?

ஆங்கிலம் என்பது அறிவு என நினைக்கும் அதிமேதாவிகளே! அமெரிக்காவில் ஆடு மேய்ப்பவனும், பிரிட்டனில் பிச்சை எடுப்பவனும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவது அறிவின் உச்சமா? இங்கிலாந்தின் காலடியில் வாழும் ஜெர்மனும் பிரான்ஸும் தங்கள் மொழியில் ஆங்கிலக் கலப்பை இன்றைக்கும் அனுமதிக்கவிடாமல் கட்டிக்காக்கையில், 50 ஆயிரம் ஆண்டுகள் பாரம்பரியச் சிறப்புக்கொண்ட நம் தமிழ் மொழியை பாழாக்கித் தவிக்கிறோமே! ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாக இருந்த வரை தவறு இல்லை. ஆனால், ஆங்கிலமே பயிற்று மொழியாகி, தமிழ் மொழிப்பாடமாக மாறிய துயரத்தை மறத்தமிழன் மறந்தும்கூடத் தட்டிக்கேட்கவில்லையே! தாய்த்தமிழ்ப் பள்ளிகளை அங்கீகரிக்க மறுக்கும் இந்தத் தமிழக அரசு, ஆங்கிலப் பள்ளிகளுக்கு ஏகபோக அங்கீகாரத்தை அள்ளி விடுகிறதே… உண்மையில் பார்த்தால், கலப்பாலும் திணிப்பாலும் கதறிக்கிடக்கும் தமிழைக் காக்கத் தாய்த்தமிழ்ப் பள்ளிகளை இந்த அரசாங்கம்தானே முன்னின்று நடத்தி இருக்கவேண்டும்?!

‘ஸோ’ என்று சொல்லாமல் நமக்கு சோறு இறங்குவது இல்லை. ‘ஆக்ச்சுவலி’ இல்லாமல் நாம் எதையும் ஆரம்பிப்பது இல்லை. அன்பை வெளிப்படுத்தக்கூட ‘ஐ லவ் யூ’தானே! ‘சார், சார்’ என்றுதான் மோர் ஊற்றுகிறோம்… ‘மேடம், மேடம்’ எனச் சூடம் காட்டுகிறோம்!

‘வெள்ளைக்காரா, எங்களை அடிமைப்படுத்த நீ தேவை இல்லை. உன் மொழியே போதும். அதை விட்டுவிட்டுப் போ’ எனச் சொன்னவர்களாக – சொரணையற்றவர்களாக – அந்நிய மொழியில் நாம் சொக்கிக்கிடக்கிறோம் தமிழர்களே… சுதந்திரம் வாங்கியவர்களாக சொல்லிக்கொண்டாலும், இப்போதும் நம்மை வெள்ளையர்கள்தான் ஆள்கிறார்கள். அன்றைக்கு நாட்டை… இன்றைக்கு நாக்கை!


பாகம் - 13


”என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்… இலவசம்!”


- குன்றக்குடி அடிகளார்

ஆனால், ‘ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!’ என்கிறார் தன்மானத் தமிழர்களைக்

காக்கப் பிறந்த தலைவர் கருணாநிதி. இலவசங்கள் தொடரும் வரை ஏழைகள் தொடருவார்கள் என்கிற பேருண்மை அந்தப் பெரியவருக்குத் தெரியாதுபோலும்.

”பசியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே… மீன் பிடிக்கக் கற்றுக்கொடு!” என்கிற மேலை நாட்டுப் பொன்மொழி இந்த ஏழை நாட்டுத் தலைவர்களுக்கு ஏன் புரியாமல்போனதோ?

தொலைக்காட்சி இலவசம், உடுப்பு இலவசம், அடுப்பு இலவசம் என அனுதினமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு, கையேந்தும் பெரு​மக்களை பெருக்கிக்கொண்டே போ​கிறது இந்த அரசாங்கம்.

65 ஆண்டு கால சுதந்திரத்தில், 45 ஆண்டுகள் இந்தத் தாய்த் தமிழகத்தை திராவிட இயக்கங்கள் ஆண்டிருக்​கின்றன. இன்றைக்கு இலவ​சத்தை மகத்தான திட்டமாக வாய் வலிக்​கச் சொல்பவர்கள், இத்தனை காலங்கள் ஆண்டும் என் மக்களைக் கையேந்த​வைத்த கயமைக்குப் பொறுப்பு ஏற்பார்களா?



கலைஞரின் ‘இளைஞன்’ படம் தமிழ்த் திரையுலகத்தின் புரட்சியாய், புகழாரக் கூட்டத்தால் கொண்டா​டப்படுகிறது. மாக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலை, தாய்க் காவியமாக வடித்த முதல்வர் பெருமகனாருக்குச் சொல்கிறேன்… அய்யா, கார்க்கியின் எழுத்துகள் மேல் நீங்கள்கொண்டு இருக்கும் ஈர்ப்பும் பிரியமும் என்னை வியக்கவைக்கிறது. கார்க்கி எழுதிய சாலச் சிறந்த வாக்கியம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.

‘பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை!’

கார்க்கியின் எழுத்துகளைப் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து உரைத்திருக்கும் நீங்கள், இந்த வரிகளுக்கு என்ன அய்யா பதில் சொல்ல முடியும்? உடனே, பிச்சைக்கும் இலவசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என வழக்கம்போல் விளக்கப் புராணம் பாடாதீர்கள். தனி மனிதனுக்குப் போட்டால் பிச்சை… தமிழ்நாட்டுக்கே போட்டால் இலவசமா? எங்களின் பணத்தை எங்களுக்கே பிச்சையாக்கும் வித்தையை இத்தனை காலம் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்ததே ஆச்சர்யம்தான்.

இலவசத் திட்டங்களுக்காக அரசாங்கம் இழக்கும் தொகையை நீங்கள் எதன் மூலமாக ஈடுகட்டுகிறீர்கள்? மது விற்பதன் மூலமாக… ஏழைக் குடியானவன் சாராயம் காய்ச்சினால், சட்டப்படி அது குற்றம். அரசாங்கமே சாராயம் காய்ச்சினால், அது திட்டம். நல்லா இருக்கிறதய்யா உங்கள் நியாயம்? தீபாவளி தினத்தில் மட்டும் 90 கோடிக்கு சாராயம் விற்றதாக இந்த அரசாங்கம் சாதனை அறிக்கை வெளியிடுகிறது. வயிற்றுக்கு விஷம் வைத்துவிட்டு, வாய்க்கு உணவு கொடுப்பதுதான் உங்கள் சாதனையின் மகத்துவமா அய்யா?

இலவசம் என்றால் என்ன பொருள் உங்கள் அகராதியில்? பல்துறைப்பட்ட வருமானத்தின் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தியதுபோக, மீதம் இருக்கும் உபரி வருமானத் தொகையை வைத்துமக்களுக்கு ஏதாவது வழங்​கினால் அதற்குப் பெயர்தான் இலவசம். ஆனால், 80 ஆயிரம் கோடியை தமிழகத்தின் கடனாக ஏற்றிவைத்துவிட்டு, இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்கிற நிலைமையிலும், இலவசத்தை வழங்கினால், அதற்கு உண்மையான அர்த்தம் ‘உள்நோக்கம்’ என்பதுதானே!

உடனே அறிவார்ந்தவரும் மூத்த அமைச்சருமான அய்யா அன்பழகனார் அறிவிக்கிறார்… ‘தமிழக அரசின் 80 ஆயிரம் கோடி கடன் தமிழக மக்களைப் பாதிக்காது!’ அப்படி என்றால், எங்களின் கடனை கன்னடக்​காரன் கட்டுவதாகச் சொல்லி இருக்கிறானா? இல்லை தெலுங்குக்காரன் திரட்டிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறானா?

இலவசங்கள் தொடர்ந்துகொண்டே போகட்டும்… என்றைக்கோ ஒரு நாள் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, இலவசங்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் நிலை என்னாகும் என்பது உங்களின் புத்திக்குப் புலனாகவில்லையா முதல்வரே?

இலவசம் இல்லாமல் போனால், பிறர் சவம் என்றாலும், பிய்த்துத் தின்னும் நிலை வந்துவிடாதா? இத்தனை காலம் உண்டபடியே உறங்கியவனை, ஒரே நாளில் உழைப்புக்குப் பழக்கப்படுத்திவிட முடியுமா? கொலை, கொள்ளை, வழிப்பறி என இந்த நாடே சுடுகாடாகிவிடாதா? அப்படி ஒரு நிலை வரத்தானே இத்தனை இலவசங்களை அறிவித்து, எம்மக்களின் சொரணைக்குச் சுருக்குப் போட்டுவிட்டீர்கள்?

தேர்தல் நெருங்க… நெருங்க… எப்படி எல்லாம் இலவசங்களை அறிவிக்கலாம் என மூளையைக் கசக்கி முப்பொழுதும் யோசிக்கிறீர்கள். வாரம் ஐந்து முட்டை என அறிவித்து குழந்தைகளைக் குதூகளிக்க​வைத்தீர்கள்… இத்தனை காலம் ஒரு முட்டை போட்ட கோழிகள் திடீரென ஐந்து முட்டைகள் போட ஆரம்பித்துவிட்டதா அய்யா? நாலரை ஆண்டு காலம் ஏழைகள் எந்தக் குடிசையில் வாழ்ந்தாலும் சரி என நினைத்த நீங்கள், இப்போது திடீரென வீடு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். கடகட வேகத்தில் மூன்று லட்சம் வீடுகளைக் கட்டவைக்கும் நீங்கள், அடுத்த மூன்று லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான ரசீதைக் கொடுத்து இருக்கிறீர்கள். ‘எங்கள் ஆட்சி மீண்டும் வந்தால், உங்களுக்கு வீடு நிச்சயம்!’ என்பதை ஏழைகள் மனதில் எவ்வளவு சூசகமாக ஏற்றி இருக்கிறீர்கள் பார்த்தீர்களா? அடிக்கத் திட்டமிட்டு இருக்கும் கொள்ளையில் மக்களையும் மறைமுகப் பங்குதாரர்களாக மாற்றுவதற்குத்தானே இலவசம் என்கிற பெயரில் இந்தக் கையூட்டு?

ஆனால், உங்கள் நெஞ்சத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்… இலவசமாக்கப்பட்டு இருக்க​வேண்டி​யது கல்வியும், மருத்துவமும்தானே… ஏழைக்கு ஓர் உயிர்; பணக்காரனுக்கு ஓர் உயிர் என்கிற பாராமுக நிலைப்பாடுதானே இன்றுவரை தொடர்கிறது. கல்வி ஏற்றத்தாழ்வுகளை இன்று வரை இந்த அரசாங்கத்தால் களைந்து எடுக்கமுடியாமல் போனது ஏன்?

ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு, ‘உழைப்பு தேவை இல்லை!’ என்கிற சோம்பேறித்தனத்தை விதைப்புச் செய்தீர்கள். புத்தியை மழுங்கடிக்க இலவசத் தொலைக்​காட்சி கொடுத்தீர்கள். எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் தன் வீட்டில், ‘மானாட மயிலாட’ ஆடினால் சரி என்கிற சாக்கடை எண்ணத்துக்குள் ஒவ்வொரு தமிழனையும் தள்ளினீர்கள். உங்களின் இலவசம் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்பதை காவிரிக் கரையோர விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்​கள்… கூலிக்கு வேலை இல்லாமல் திண்டாடிய காலம் போய், வேலைக்கு ஆள் இல்லாமல் அல்லாடும் காலம் உருவாகி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம் அல்ல அய்யா… அயோக்கிய மாற்றம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய மாவட்டங்​களில் பட்டினிச் சாவுகள் தொடர்ந்தபோது, அரசாங்கமே சோறு போடும் என அறிவித்தார் அன்​றைய முதல்வர் ஜெயலலிதா. கூட்டுப் பொறியலோடு குக்கிராமங்கள்தோறும் சாப்பாடு தயாரானது. அப்போது நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா அய்யா… ”ஊருக்கே படியளந்த மக்களை சோற்றுக்குக் கையேந்த வைத்துவிட்டார் ஜெயலலிதா!”

அந்த அம்மையாரின் நிலைப்பாட்டை நான் நியாயப்​படுத்தவே இல்லை. ஆனால், அன்றைக்கு எம் விவசாய வர்க்கம் கையேந்தியதைக் காணச் சகிக்காத நீங்கள், இன்​றைக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறீர்களே… நீங்கள் அரிசி போட்டால், அது மகத்தான திட்டம்… அந்த அம்மையார் ஆக்கிப்போட்டால் அது குற்றமா?

நாவைச் சுழற்றியே நாட்டைச் சுழற்றும் உங்களின் அபூர்வ ஆட்சியை மீண்டும் தக்கவைக்க நீங்கள் தீட்டி வரும் சில திட்டங்கள்பற்றிக் கேள்விப்பட்டேன். ‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓர் அலைபேசி இலவசம்’ என அறிவிக்கப்போகிறீர்களாமே… தொலைக்காட்சியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எங்களிடமே பணம் பறித்ததைப்போல, அலைபேசியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எந்த நிறுவனத்திடம் பேசி வைத்திருக்கிறார்களோ?

உலகத்தில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயுமே சுய மரியாதைக்கு கட்சி தொடங்கியதாகவோ, தன்​மானத்துக்காக இயக்கம் தொடங்கியதாகவோ, சரித்திரம் இல்லை. ஆனால், இன்றைக்கு அவமரியாதையின் அடை​யாளமாகவும், அவமானத்தின் சின்னமாகவும் எம் மக்கள் மாறிக்கிடக்கிறார்களே… அடுப்பு இலவசம், உடுப்பு இலவசம், மின்சாரம் இலவசம், சம்சாரம் இலவசம் (இலவசத் திருமணங்கள்), முட்டை இலவசம், சட்டை இலவசம் என அள்ளி வழங்கும் இந்த அரசாங்கம் தேர்தல் நெருங்குவதால் சீக்கிரமே இன்னொரு இலவசத்தையும் அறிவிக்கப் போகிறது. இனமானம் மிகுந்த தன்மானம் தளும்பிய தமிழர் பெருமக்களே… அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும், காத்திருங்கள்… ‘இல்லங்கள் தோறும் பிள்ளைகளும் இலவசம்!’

பாகம் - 14

சிறகுவிரித்ததோ வானத்தில் ஏறியோர்


சிட்டுக்குருவி பறக்குதே… அதுவிடுதலை.

உறவுகூடிச்சிற் றெறும்புகள் அணிவகுத்து

ஊருகின்றன வேயது விடுதலை.

இறைமையோடுநான் நானென இருந்திடும்

இருப்பு என்பதே விடுதலை எனப்படும்

வறுமை வந்துறும் போதுமின் னொருவனின்

வாசல்நின்றிடா வாழ்வதே விடுதலை!


- புதுவையாரின் கவிதை புலன்களை முறுக்குகிறது. வாழக் கதியற்ற ஏழைகளின் வறுமையையே

வாழ்வாதாரமாகக் கொண்டு, தமிழக அரசியல் வாழ்ந்து வருகிறதே… மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம், சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, சாதியப் பிரச்னைகள், குழந்தைகள் கடத்தல், கல்விக் குளறுபடிகள், தற்கொலைகள் என என்னதான் ஆயிரம் பிரச்னைகள் நிலவினாலும், ஆயிரம் ரூபாய் நோட்டின் மூலம் அனைத்தையும் மறக்கடித்துவிட முடியும் என நினைக்கிறது ஆளும் கட்சி. வாக்குக்குப் பணம் வாங்குவது தவறு என்பது தெரிந்தும், வாழ்க்கையை ஓட்ட வக்கற்ற நிலையால் கையேந்தும் நிலையில்தான் கடைக்கோடி தமிழனும் இருக்கின்றான். வறுமையை தமிழக அரசியல்வாதிகள் வாழவைக்கும் பின்னணி வாக்குகளை விலைக்கு வாங்குவதற்குத்தான்!

ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தால் பலன் அடைபவர்கள் ஒரு கோடியே 88 லட்சம் பேர், கூட்டுறவு கடன் தள்ளுபடியால் பலன் பெற்றவர்கள் 23 லட்சம் பேர், இலவச தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியவர்கள் ஒரு கோடியே 50 லட்சம் பேர், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் நலம் பெற்றவர்கள் ஒரு கோடியே 34 லட்சம் பேர்… இன்னும் இன்னும் பல கணக்குகளைப் போட்டு மொத்தமாக பலன் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக்கொண்டு இருக்கிறது ஆளும் தி.மு.க. அரசு. கவர்ச்சித் திட்டங்களாலேயே வாக்குகளைக் கவர முடியும் என்பதை உணர்த்துகின்ற கணக்கு இது. ‘இதை விதைத்தால் இதை அறுக்கலாம்’ என்கிற வணிக நோக்கம் மட்டுமே கொண்ட ஒரு வியாபாரியைப் போல் அரசியல்வாதிகள் இன்றைக்கு இயங்கத் தொடங்கிவிட்டார்கள்.



வயிற்றுக்கு மீன் வழங்க வேண்டியவர்கள் தொண்டை​யைக் குறிவைத்து புழுகோர்க்கப்பட்ட தூண்டிலை வீசுவது வாக்குகளை வளைக்க வேண்டும் என்பதால்தானே! அதற்காகவே, பணத்தை இறைக்கிறார்கள், கவர்ச்சித் திட்டங்களை குவிக்கிறார்கள், தேர்தல் நெருங்க நெருங்க தெருக்கள் தோறும் வலம் வருகிறார்கள். ‘இப்படி ஒரு இடம் இருக்கிறதா’ என்பதைக்கூட இத்தனைகாலம்அறியாமல் இருந்தவர்கள் குக்கிராமப் பகுதியிலும் குனிந்து நுழைகிறார்கள். பதவிப் பகட்டுகளில் மிதந்தவர்கள், திடீரென நம்மைத் திரும்பிப் பார்ப்பது ஏன்? கடன் கேட்டாலும் கொடுக்க மறுத்தவர்கள் வலிய வந்து கவர் போட்டு பணத்தை திணிப்பது ஏன்? அலுவலகம் தேடிப்போய் அலைந்து திரிந்தாலும் காண மறுத்தவர்கள் வீடு தேடி வந்து விசனம் விசாரிப்பது ஏன்? வாக்கு என்ற ஒற்றை வார்த்தையை வளைக்கத்தானே இத்தனை கூத்துகளும். பணத்துக்கு உரிமைகளை விற்கும் இந்த இனத்துக்கு என்றைக்கடா தம்பி விழிப்பு வரும்? பாலில் சத்தியம் வாங்கி, தலைப்பிள்ளை உச்சியில் அடித்து, சாமியின் சந்நிதியில் முன்னிறுத்தி பணத்தைக் கொடுத்து, வாக்குக்கு பேரம் பேசும் ஈனத்தனங்களை தமிழன் எப்படியடா தாங்கிக் கொள்கிறான்?

‘யப்பா சாமி உனக்கு ஏதப்பா இவ்வளவு பணம், நாத்து பறிச்சியா? சேத்துல உருண்டியா? எங்கிருந்தப்பா சேத்த இவ்வளவு பணத்த? தேடிவந்து பணம் கொடுக்க நீ என் பங்காளியா… அங்காளியா?’ எனக் கொடுக்க வந்தவர்களை உன் கொடுக்கால் கொட்டாதது ஏனடா தமிழா?

அவனிடம் கொடுத்த வாக்கைக் காப்பதாக சொல்லி உன்னிடம் உள்ள வாக்கை ஊனமாக்குவது தவறில்​லையா தமிழா? கவர்ச்சித் திட்டங்களால் உன்னை மட்டமாக்கியவர்கள் கடைசி நேரப் பணத்தால் உன் சினத்தையும் சிதைக்கிறார்களே… இந்த தேசத்தின் அழுக்கை பொடி பொடியாக்கத்தானடா உன் விரலில் மை வைக்கிறார்கள். ஒரு துளி மையால் மொத்தத்தையும் சுத்தமாக்கும் வாய்ப்பு எப்போதடா வாய்க்கும். பிரியாணி பொட்டலத்தால் உன் வாக்கை பிரிக்கப்பார்ப்பதும், மது புட்டியால் உன்னை மயக்கப் பார்ப்பதும் இன்னும் எத்தனைக் காலத்துக்கு தமிழா தொடரும்?

சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதியான பேராவூரணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். இன்றைய போக்கின் சக்தியையும் நம் வாக்கின் சக்தியையும் உரக்கச் சொன்னேன். கட்டுக்கடங்காத கூட்டம் கொட்டக்கொட்ட கேட்டது. கூட்டம் முடிந்து திரும்புகையில் கிராமத்துச் சுவடு சுமந்த பெரியவர் ஒருவர் என் கைகளைப் பற்றிக்கொண்டு பேசினார். ‘நீங்க பேசுறதைக் கேட்கிறப்ப ரத்தமே முறுக்கேறுது தம்பி. நீங்க சொல்ற மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு ஓட்டுப்போடுற கூட்டம்தான் நாங்க. ஆனா, இந்த தடவை நிச்சயம் பணம் வாங்க மாட்டோம். இருந்தாலும் நாங்க யாருக்குத் தம்பி ஓட்டுப் போடுறது?’ எனக் கேட்டார். பணம் வாங்கக் கூடாது என்று முடிவெடுத்ததே ஜனநாயகத்துக்கு கிடைத்த பாதி வெற்றிதான். ‘யார் வரவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாவிட்டாலும் யார் வரக்​கூடாது என்பதை நிச்சயமாக நீங்கள் புரிந்திருப்பீர்கள். அதுவே உங்கள் வாக்கு யாருக்கு என்பதை உங்களுக்கு உணர்த்திவிடும்’ என்று சொன்னேன். அந்தக் கடலோரத் தமிழனிடம் ஏற்பட்ட விழிப்பும் முழிப்பும் கடைக்கோடித் தமிழனுக்கும் ஏற்படும் நாளில் நிச்சயம் இந்த தேசத்துக்கு நிம்மதி பிறக்கும்.

இதில் கொஞ்சமும் சகிக்க முடியாத கொடுமை என்னவென்றால், வாக்குப் போடுவதை தேவையற்ற வேலை என்று எண்ணி அதைப் புறக்கணிப்பது. வாங்கிக்கொண்டு வாக்கு போடுவது எவ்வளவு மோசமான காரியமோ, அதற்குச் சற்றும் குறையாததுதான், வாக்கு போடாமல் புறக்கணிப்பதும். புறக்கணிக்கவோ, பொழுதைக் கழிக்கவோ நீங்கள் தவறவிட்ட நல்ல வாக்கு எங்கோ ஒரு மூலையில் கள்ளவாக்காக பதிவாகிறதே, அதை ஏன் உணர மறுக்கிறீர்கள்? ஒரு தொகுதியில் வெறும் நாலு ஓட்டு மட்டுமே விழுந்தாலும் அதில் மூன்று ஓட்டு வாங்கியவனுக்கு வெற்றி என்று அறிவிப்பதுதான் நம் விசித்திர ஜனநாயகத்தின் வழக்கம். இலங்கையில், வெறும் எட்டு ஓட்டுகள் மட்டுமே வாங்கிய டக்ளஸ் தேவானந்தா அங்கு அமைச்சராக பொறுப்பேற்றது புறக்கணிப்பு காட்டும் மேதாவிகளுக்குப் புரியாதா?

வறுமை தீரவில்லை என்று சொல்லி பணம் வாங்குபவனுக்கும், பொறுமை இல்லை என்று சொல்லி புறக்கணிப்​பவனுக்கும் என்ன வித்தியாசம்?

இதற்கிடையில், இன்னும் சிலரோ தங்களின் புறக்கணிப்பை பதிவு செய்யும் விதமாக 49ஓ-வுக்கு வாக்களிக்கிறார்கள். அதனால் என்ன பயன் என்பது அந்த அறிவாளிகளுக்கே வெளிச்சம். ஓ போட்டால் எதிரிகள் நமக்கு ஓ போட்டுவிட மாட்டார்களா? ஒரு வாக்கால் ஒரு நாட்டின் போக்கையே மாற்ற முடியும் என்கிற உண்மை புரியாமல் வாக்காளன் இப்படி வாடிக் கிடக்கிறான் என்றால் தேர்தல் ஆணையத்தின் பாராமுகம் அதைவிடப் பரிதாபம். கண்ணுக்கு முன்னே காசுகள் வீசப்படுவது தெரிந்தும் கைகட்டப்பட்ட நிலையில்தான் அதிகாரிகள் அல்லாடுகிறார்கள். வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாலேயே அவர்களுக்கு ஆயிரம் விதமான சலுகைகளை வழங்கி ஆதாயம் தேடப்பார்க்கிறது ஆளும்கட்சி. மாற்று மாநில ஆசிரியர் பெருமக்களை தேர்தல் பணிக்குப் பயன்படுத்தினால் ஆளும்கட்சியின் ஆதாய நோக்கை நிச்சயமாக தடுக்க முடியும். உடனே, ‘மாற்று மாநிலத்தவர்களால் மொழி புரியாமல் எப்படி பணியாற்ற முடியும்?’ என்ற கேள்வி பாயக்கூடும். மாற்று மாநிலத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர் நம் மாநில தேர்தல் ஆணையாளர்களாக பணியாற்றி இருக்கிறார்களே அடையாள அட்டை வைத்து பெயரையும் முகத்தையும் சரிபார்க்க மொழி அறிவு முக்கியமா என்ன?

தேர்தல் ஆணையம் பெரும் கவனம் எடுத்து பரிசீலிக்க வேண்டியது, அடையாள மை குறித்தஆதங்கத்தைத்தான். அஞ்சு ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட பணம் கொடுத்ததற்கு சாட்சியாக ரசீது தருகிறார்கள். ஆனால், விலைமதிக்க முடியாத வாக்கை செலுத்தும் வாக்காளனுக்கு ஒரு துளி மைதான் ரசீதா? வாக்காளர் அடையாள அட்டை போலவே வாக்கை செலுத்தியதற்கு ஆதாயமாக ஒரு அட்டை வழங்கலாமே. மையை அழிக்கக்கூடிய வழிமுறைகளை எல்லாம் கள்ள ஓட்டுக்காரர்கள் இதுவரை கண்டுபிடிக்காமல் இருப்பார்களா என்ன? முறைகேடுகளை தவிர்க்க வேண்டிய தேர்தல் ஆணையம் முடங்கிக் கிடப்பதால்தானே தேர்தல் என்றாலே நமக்கு திருமங்கலம் நினைவு வருகிறது. ‘நம் எம்.எல்.ஏ. ஜெயிச்சு நல்லது செய்வாரு’ என நம்பிய காலம் போய், ‘நம் எம்.எல்.ஏ. மண்டைய போட்டார்னா தேவலாம்’ என எதிர்பார்க்கிற காலம் உருவாகியது எதனால்? அள்ளி இறைக்கிற கூத்துகளை அதிகாரிகள் தடுக்காததால்!

தேர்தலுக்கு மிகக்குறுகிய காலமே இருக்கிறது தமிழா, உன் கையில் இருக்கிற வாக்கு மிகப்பெரிய கருவி. வாக்காளப் பெருங்குடி மக்களே என வாய் பூரிக்க சொன்னபடி குனிந்த தலையும், கும்பிட்ட கைகளுமாய் உன் வீடு தேடி வருவார்கள். விலை பேசுவார்கள், ஆதரிப்பீர்… வாக்களிப்பீர் என வாக்கு கேட்கும் வார்த்தைகளில் கூட பீர் விற்பார்கள். ஈழத்துக்காகத் துடித்தவர்களே, இல்லத்துக்காக கண்ணீர் வடிப்பவர்களே நீங்கள் இந்த நேரத்தில் வாங்க வேண்டியது காசு அல்ல… காவு!


பாகம் - 15


நெருப்பு விதையானால்

நெருப்பே பயிராகும்

இன்னும்தான் கொஞ்சம்கூட

எரியாமல்

சில பட்ட மரங்கள்!




- கவிஞர் காசி ஆனந்தனின் வரிகள், வலிகளாய் நெஞ்சத்து நரம்புகளைப் புடைக்கவைக்கிறது. தமிழ் சொர​ணையைச் சுடராக ஏந்திய தம்பி முத்துக்குமாரின் நினைவு தினத்தில், இன்றைய இளைய சமூகத்தை நோக்கிய பார்வை என்னி​டத்தில் பரிதாபமாக நீள்கிறது. தமிழ்ச் சாதியின் தளர்ச்சி பொறுக்காமல் உணர்ச்சியாய் வெடித்து சதையையே விதை​யாக்கிய இளைஞன் அவன். சிறு நெருப்பை மட்டுமே காற்று சிதைக்க முடியும் எனக் கருதி, பெரு நெருப்பாகப் பிரளயம் படைத்தவன். ஈழக் கொலைகளைத் தடுக்க தன் ஈரக்குலையைக் கருக்கியவன். தனி ஒருவன் தணலானால், தமிழகமே தகித்தெழும் என நம்பி தேகத்தை தீக்குத் தின்னக் கொடுத்தவன்.

நம்பிக்கை நரம்பு முறுக்க வேண்டிய இளைஞர் கூட்​டமே… அந்தத் தமிழ் மறவனைப்போல் உன்னை நான் தணலில் குதிக்கச் சொல்லவில்லை. தமிழைத் தணலில் தள்ளி​விடாதே என்பது மட்டுமே உன்னிடம் நான் இறைஞ்சும் கோரிக்கை.

நம்பிக்கை நட்சத்திரங்களாக கல்வியில் சிறந்து விளங்கும் இளைஞர்கள் படிப்பு முடித்த

உடன் வெளிநாட்டு வேலை​களுக்குக் கிளம்புகிறார்களே… அதைத் தவறு எனச் சொல்லித் தடுக்க இந்தத் தாய்த் தமிழகத்தில் ஆள் இல்லாமல் போய்​விட்டது. விதை பாகி நாற்றங்கால் செழித்த நிலையில், அங்கே வளர்ந்த பயிர் வேறு நிலத்தில் நடப்படும். அப்போது, பயிரை உற்பத்தி செய்த நாற்றங்கால் வெறுமனே கிடக்கும். அந்த நாற்றங்காலைப்போலத்தான் நம் நாடும் வெறுமனே கிடக்கிறது. இங்கே உருவாக்கப்படும் அறிவார்ந்த மூளைகள் அடுத்த நாடுகளில் அல்லவா நடப்படுகிறது. ’30 லட்சம், 40 லட்சம் எனப் பணத்தைக் கொட்டிக் கொடுத்துத்தானே, நாங்கள் படித்தோம். அவற்றைச் சம்பாதிக்க நாங்கள் அடுத்த நாடுகளுக்குத்தானே போக வேண்டி இருக்கிறது?’ என்கிற கேள்வியை இன்றைய இளைய தலைமுறை எழுப்பக்கூடும். தம்பி… நீ கொடுத்த பணம் இந்த நாட்டுக்கோ, இங்கு வாழும் மக்களுக்கோ இல்லை. ‘அன்பளிப்பு’ என்கிற பெயரில், கல்லூரி நிர்வாகத்துக்கு நீ வலியக் கொடுத்த வசூல் அது!

வலிக்க வலிக்க உழைத்தவனின் வரிப் பணத்​தில்தான் நீ மருத்துவத்தையும் பொறியியலையும் படித்திருக்கிறாய். எங்களின் பணத்தில் படித்த நீ எங்களின் வலிக்கு ஊசி போடாமல் ஓடுவது நியாய​மாடா தம்பி? ‘என் படிப்பு உனக்குப் பங்கு அளிக்காது’ எனச் சொல்லிப் புறக்கணிப்​பவனைக்கூட இந்த தேசம் புகழாரப்​படுத்துகிறது. ‘மகன் ஃபாரின்ல டாக்டரா ஒர்க் பண்றார்!’ என வியந்து பேசும் விந்தைத்தனங்கள் இந்தச் செம்மறி ஆட்டுச் சந்தையில் வெகுவாகக் கேட்கிறது.

கர்ம வீரர் காமராஜரின் ஆட்சி அமைய அப்போது பேருதவியாய் இருந்தார் தந்தை பெரியார். ‘நான் என்ன நன்றிக்கடன் செய்யப்போகிறேன்’ என காமராஜர் கேட்டபோது,. ”நீங்க பெரிசா ஒண்ணும் பண்ண வேணாம்… நம்ம புள்ளைங்களை நல்லபடியாப் படிக்க​வெச்சுடுங்க. அது ஒண்ணு போதும்… அத்தனை விதமான வெளிச்சத்துக்கும்!” எனச் சொல்லி இருக்கிறார் பெரியார்.

உடை, குறிப்பேடு, புத்தகம் உள்ளிட்ட தேவை​களை இலவசமாக வழங்கிய காமராஜர், இலவச மதிய உணவையும் அறிவித்தார். ‘அதற்குப் பெரிய அளவில் நிதி தேவைப்படும்!’ என அதிகாரிகள் அச்சம் தெரிவித்த​போது, ‘நிதி இருக்கும் வரை போடுங்க… மற்றபடி தேவைப்​படுவதை நான் மக்களிடம் மடிப் பிச்சை கேட்டு வாங்கித் தருகிறேன்!’ எனச் சொன்னார் காம​ராஜர். எத்தகைய இக்கட்டுக்களைத் தாண்டி கல்வியில் நாம் கரையேறி இருக்கிறோம் என்பதை உணர்ந்தால், காசுக்​காக அதனை அந்நிய நாட்டுக்கு கடை விரித்து இருக்க மாட்டோம். அமெரிக்கா, ஆஸ்திரேலியா என அந்நிய நாட்டுக் கனவுகளை நம் இளைஞர்கள் ஒவ்வொருவரும் உள்ளத்தில் ஏந்தி அலைகிறார்களே… அதேபோல் இந்தியக் கனவுகளை எந்த நாட்டுக் குடிமகனும் ஏந்தாதது ஏன்?

படிக்கவே வழியற்றவர்கள் ஒரு பக்கம்… படிப்பை முடித்த உடனேயே பயணப்படுபவர்கள் ஒரு பக்கம்… என இருப்பதால்தான் அடி மடியைச் சுரண்டும் அயோக்​கியத்தனங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. அந்நிய நாடுகள் தொழில் தொடங்க அனைத்து சலுகைகளை வழங்கும் இந்த தேசம், சொந்தமாகத் தொழில் தொடங்க கதியற்றுக்கிடக்கிறது. அந்நியத்துக்குப் பச்சைக் கம்பளம் விரித்துசொந்த நாட்டினரைக் கூலி​களாக மாற்றும் இந்தத் தேசம் என்ன பெருமைக்காக 71 ஆயிரம் கோடிக்கு விளையாட்டு விழா நடத்த வேண்டும்? ஆட்டங்களுக்காக ஒதுக்கிய பணத்தை ஆலைகளுக்கு ஒதுக்கி இருந்தால், எத்தனை பேரின் வாழ்​வாதாரங்களுக்கு வழி பிறந்திருக்கும்? இதற்கிடையில், பல்லாயிரம் ஏக்கர் நிலத்தை வலியக் கொடுத்து சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடங்கவும் இந்த தேசம் வெளிநாடுகளிடம் வேண்டுகோள் வைக்கிறது. வல்லாதிக்க நாடுகளின் வர்த்தக மையமாகவும், ஏகபோக முதலாளிகளின் எடுபிடி இடமாகவும் இந்த தேசம் மாறிக்கிடக்கும் கோலத்தைப் படித்த இளைஞர்கள் அல்லவா பதறி அறிய வேண்டும்? சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இந்திய அரசியல் சட்டம் பொருந்தாது என்கிற உண்மை என்ன கொடுமை? அங்கே ஏதும் குற்றங்கள் நிகழ்ந்தால், இந்திய அரசால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பது தெரியுமா? கடலுக்குள் இருக்கும் தீவுகள் நமக்குத் தெரியும். கடனுக்கு முளைத்த தீவுகளாக, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் மூலமாக ஒவ்வொரு தேசமும் இந்த மண்ணில் ஆட்சி நடத்தும் அவலங்கள் எவருடைய கன்னத்தையும் அறையாதது ஏனோ? தேகத்தில் தேமல் விழுந்ததுபோல், இந்தத் தேசத்தில் விழுந்த தேமல்கள்தான் சிறப்புப் பொருளாதார மண்ட​லங்கள். இங்கே மனித உழைப்பு மலிவாகக் கிடைப்ப​தாலேயே வாரிச் சுருட்டும் எண்ணத்தோடு இத்தகைய அந்நியச் சுரண்டல் கூட்டங்கள் அடியெடுத்துவைக்கின்றன. மொத்​தத்தில், அன்றைக்கு இங்கிலாந்துக்கு மட்டுமே அடிமையாக இருந்தோம். இன்றைக்கு எல்லா நாடுகளுக்கும் அடிமையாக இருக்கிறோம்.

கல்வியைக் கற்றவர்களும், பேரறிவைப் பெற்றவர்​களும் இந்த தேசத்திலேயே இருந்து இருந்தால், நம்மை இப்படிக் கொள்ளையடிக்க முடிந்​திருக்குமா? கண் முன்னாலேயே சுரண்டிக் கொழுக்கும் கயமைத்​தனங்கள் நிலை பெற்றிருக்க முடியுமா?

கல்வியும் மருத்துவமும் எட்ட முடியாத இலக்காக இருப்பதாலேயே, இந்தத் தேசத்தில் ஏழை வர்க்கம் எப்படி எல்லாம் திண்டாடிப்போகிறது? வல்லரசாக வடிவெடுக்கும் நாடாக சொல்லப்படும் இங்கே அரசு மருத்துவமனையின் அவலங்கள்கூட தீர்க்கப்படாமலே கிடக்கிறதே. ஏழை ஒருவனின் உயிருக்கு இங்கிருக்கும் மருத்துவங்கள் உதவப்போவது இல்லை என்பது பாரபட்சத்தின் கொடூரம்தானே? அமைச்சர் பெரு​மக்களோ அதிகாரத் துரைமார்களோ ஏதாவது ஓர் அரசு மருத்துவமனையில் எப்போதாவது சிகிச்சை பெற்று இருக்கிறார்களா? அரசு மருத்துவமனையின் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லாதபோது, அப்பாவி மக்​களுக்கு எப்படி அங்கே உரிய சிகிச்சை கிடைக்​கும்?

சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த​தாகப் பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் தன் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டது ஆச்சர்யமான ஒன்றாகப் பத்திரிகைகளால் அறிவிக்கப்​படுகிறது என்றால், இதர அதிகாரிகள் அரசு மருத்துவ​மனையை எப்படிப் பார்க்​கிறார்கள் என்பது நமக்குப் பொட்டில் அடித்தாற்போல் புரிகிறதே!

கடைசிக் கால உயிரோட்டத்தைக் காப்பாற்ற அரசு மருத்துவமனையின் கட்டிலைக் கட்டிப்பிடித்தபடி காத்துக்கிடந்த அய்யா கக்கனைப்போன்ற அமைச்சர்​களை இன்றைய காலத்தில் எங்கே காண்பது? ‘இருந்தால்​தான் மருந்து’ என்கிற நிலையை உடைத்து எறியாத வரை, இங்கே ஏழை உயிருக்கு எந்த உத்திர​வாதமும் இல்லையடா தம்பி.

இதேபோல்தான் கல்வியும்… ‘பணம் இருந்தால்தான் படிப்பு’ என்கிற நிலை அரசுப் பள்ளிகளை ஆரம்​பித்த​போதே அகற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், இன்றைய அரசுப் பள்ளிகளின் நிலை எப்படி இருக்​கிறது? எந்த மாநகரத் தந்தையாவது தன் மகனை மாநகராட்சிப் பள்ளியில் படிக்கவைக்கிறாரா? ஏன்… மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்கள்கூட தங்களின் வாரிசுகளைத் தனியார் பள்ளிகளுக்குத்தானே தயார் செய்கிறார்கள். லட்ச லட்சமாய்க் கொட்டிக்​கொடுக்க கதியற்று கண்ணீரில் கதறும் பெற்றோர்களின் நிலை என்​றைக்குத் தீரும்? அன்றைக்குக் கல்வியும் மருத்துவமும், அரசின் கைகளில் இருந்தன. கள்ளுக் கடையும் சாராயக் கடையும், தனியார் கையில் இருந்தன. ஆனால், இன்றைக்கு கல்வியும் மருத்துவமும் தனியார் கையில்… சாராயக் கடை அரசாங்கத்தின் கையில்!

கல்லாதவனும் தேசப் பிடிப்பு இல்லாதவனும் இருப்பதால்தானே ஏழைகளின் நிலை மட்டும் இங்கே இன்னும் இன்னும் இழிவாகிறது. ‘நமக்கென்ன’ என்கிற ஒற்றை வார்த்தையை மட்டுமே கெட்டியாய்ப் பிடித்து அலையும் இளைஞர் கூட்டமே… ஒரே ஒரு கணம் தம்பி முத்துக்குமாரின் தியாகத்தை உள்ளுக்குள் உணர்ந்து பார்.

அப்பா, அன்றாடக் கூலிக்காரர். தங்கை, கர்ப்பவதி. வறுமையை மட்டுமே விலாசமாகக்கொண்ட வாடகைக்​குடியில் பிறந்த அவன் எதற்கடா இந்த தேசத்துக்காகத் தீயில் விழ வேண்டும்? ஈழத்தில் இழவு விழுந்தாலும் இல்லத்தில் உணவு வெந்தால் சரி என நினைத்தவர்களுக்கு மத்தியில், அவனுடைய நெஞ்சுக்கூடு மட்டும் ஏனடா தீயை நோக்கித் திரும்ப வேண்டும்? தமிழ்ச் சொந்தங்கள் மீது அவன்கொண்ட பற்றுதானே அப்படிப் பற்றி எரிந்தது. முத்துக்குமாரையும் அவனுக்கு முன்னரே தீயில் விழுந்த அப்துல் ரவூப்பையும் ‘இளைஞன்’ வடிவமாக முன்னிறுத்தி, உன் மூச்சுக்குள் மூர்க்கம் பெருக்கு. திரையில் தோன்றியவன் எல்லாம் ‘இளைஞன்’ அல்ல… தீயில் தோன்றியவனே இளைஞன்!

பாகம் - 16

ஆ.ராசா கைது… அடேங்கப்பா… தன் மீதான ஊழல் கறையைக் கழுவ காங்கிரஸ் எவ்வளவு நியாய உணர்வோடு எடுத்திருக்கும் நடவடிக்கை இது?!

லஞ்ச ஊழலை ஒழிப்பதையே பிறவிப் பெரும் கனவாகக்கொண்ட காங்கிரஸ் அரசு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த தவறுகளுக்காகக் கொதித்து எழுந்து ஆ.ராசாவைக் கைது

செய்திருக்கிறது. சரி… கைது நடவடிக்கை பாய்ந்த கண நேரத்திலேயே, ‘காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணியில் எவ்விதப் பாதிப்பும் இல்லை. கூட்டணி உறுதியாகத் தொடர்​கிறது!’ என அறிவிக்கிறது அதே காங்கிரஸ் கட்சி. நாடகம் இயற்றுவதில் கலைஞர் பெருமகனார் கை தேர்ந்தவர். அவருக்கே நாடகம் நடத்திக் காட்டுகிறது காங்கிரஸ் கட்சி. இறுகிய பிடிக்குள் ராசாவை வைத்துக்​கொண்டு, ‘எத்தனை ஸீட்?’ எனக் கேட்கும் காங்கிரஸின் தந்திரம், கலைஞர் பெருமகனாரைத் தத்தளிக்கவைத்து இருக்கிறது. காலம் திரும்புகிறது எனச் சொன்னேனே தம்பிகளே… அது இதுதான்!

ஈழத்துப் படுகொலைகள் இரக்கமற்று நடத்தப்பட்டபோது, ‘கலைஞர் அய்யா காப்பாற்றுங்கள்… உங்கள் மந்திரிகளின் பதவிகளை உதறச் சொல்லியாவது, நம் உறவுகளைக் காப்பாற்றுங்கள்…’ எனக் கண்ணீரும் கம்பலையுமாக நாம் கதறிக்கிடந்ததை ஒருகணம் நினைவுக்குக் கொண்டுவாருங்கள் உறவுகளே… காங்கிரஸ் தலைமைக்குத் தவறியும் நெருக்கடியை உண்டாக்கிவிடக் கூடாது என நினைத்து – ஈழ ஆர்வப் போராட்டங்களின் வீரியத்தை அணைத்து, அத்தனையையும் முடக்கிப்போட்ட முதல்வர் பெருமகனார், இன்றைக்கு தலைநகர் நெருக்கடியால் தடுமாறிக்கிடக்கிறார். நம் குலையறுத்தபோது காங்கிரஸின் முகத்தைக் கண்டு​கொள்ளாமல் இருந்தவர், இன்றைக்கு நிலை வெறுத்துத் தவிக்கிறார்.

சுதந்திர இந்தியாவில் அரை நூற்றாண்டு காலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி என்றைக்குமே தமிழகத்துக்கு எதிராகத்தான் இருந்தது. காங்கிரஸை அடியோடு வீழ்த்தி அரசியல் புரட்சியை அரங்கேற்றிய தி.மு.க., இன்றைக்கு காங்கிரஸால் சிறுகச் சிறுக வீழ்த்தப்படுகிறது. இனத்துக்குத் துரோகம் செய்தவர்கள் தங்களின் குணத்துக்குக் குட்டு வாங்கும் நேரம் இது. ஆனாலும், நாடக முடிவில் நல்லதொரு தீர்வுக்கு இரு கட்சிகளும் தயாராகி தமிழகக் களத்தை நோக்கி வந்துவிடுவார்கள். கை கோத்துப் போட்டியிடுவார்கள். கை குலுக்கிப் பிரசாரம் செய்வார்கள். கபட நாடகங்களை அரங்கேற்றுவதில் காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு முன்னேறிவிட்டது என்பதற்கு ராசா கைது ஓர் உதாரணம்தான்!

அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் ஆ.ராசாவை வளைத்தவர்கள் ஆதர்ஷ் ஊழல் செய்த அசோக் சவானை அப்படியே விட்டுவிட்டார்களே… காமன் வெல்த் ஊழல்வாதிகளின் மேல் கைது நடவடிக்கைகள் பாயவில்லையே… அது என்ன, ஆ.ராசாவுக்கு ஒரு நியாயம்… அசோக் சவானுக்கும் கல்​மாடிக்கும் ஒரு நியாயம்? கேழ்வரகில் நெய் வடியும் கேலிக் கூத்துகளை எல்லாம் நாங்கள் ஏற்கெனவே கண்டிருக்கிறோம் காங்கிரஸ்காரர்களே…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பெரியவர் மொரார்ஜி தேசாயும் இந்திரா காந்தி அம்மையாரும் போட்டியிட்ட நேரம். இருவரில் பெருந்தலைவர் காமராஜர் யாரைக் கை காட்டுகிறாரோ… அவருக்கே தலைவராகும் தகுதி என்கிற நிலை. ‘இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில் நீங்களே தலைவராகிவிடலாமே…’ என சிலர் அக்கறையோடு காமராஜரிடம் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்… ‘நான் சொன்னா ஜெயிக்கவைப்பாங்க… நின்னா ஜெயிக்கவைக்க மாட்டாங்க…!’ இந்தியத் தேசியம், தமிழன் என்றால் தள்ளிவைத்துத்தான் பார்க்கும் என்பதை அப்போதே பெருந்தலைவர் சூசகமாக சுட்டிக்காட்டியதை இன்றைய காங்கிரஸ்காரர்கள் மறுக்க முடியுமா?

காவிரியில் நமக்கு இருக்கும் உரிமைகளை வலியுறுத்தி, கர்நாடகாவை எதிர்க்கிற தகுதி தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் எவருக்காவது இருக்கிறதா? முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டி மத்திய அரசின் உச்சியை உலுக்கும் சக்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயத்துக்குத் தலை வணங்கினால் அடுத்த முறையும் கர்நாடகத்தில் வெற்றிபெற முடியாது என்கிற அச்சம்தானே காங்கிரஸை வாய் மூடவைக்கிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் மூச்சுவிட்டால், கேரளத்தின் காங்கிரஸ் தலைவர்களே கைகோத்து அந்தக் கட்சிக்கு எதிராகத் திரளுவார்கள் என்பதால்தானே, தமிழகம் திட்டமிட்டுத் தட்டிவைக்கப்படுகிறது?

பக்கத்து மாநிலங்​களுக்குப் பயந்து நீர் ஆதார விவகாரங்களில் அமைதியாக இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சிங்கள ராணுவத்தால் சுடப்பட்ட மீனவர்களின் வீட்டுக்குக்கூடப் போகாதது ஏன்? சுடப்பட்டும், சுருக்குக் கயிறு வீசப்பட்டும் எங்கள் மீனவர்கள் கொல்லப்படுவதற்கு நியாயம் கேட்டால், நிரூபமா ராவை அனுப்பி ராஜபக்ஷேவிடம் கோரிக்கைவைக்கிறது காங்கிரஸ் கட்சி. கொலைகாரர்களிடம் கோரிக்கைவைக்கிற அளவுக்குப் பலகீனமாக இருக்கிறதா இந்தப் பாரதத் திருநாடு?

நிர்வாக ரீதியிலும் இந்தியாவை ஏழை நாடாகவே நீடிக்கவைத்திருக்கும் புண்ணியமும் காங்கிரஸ்கட்சியையே சாரும். விவசாயிகளின் தற்கொலைகள் இந்த தேசத்தையே உலுக்குகின்றன. பட்டினிக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்ளும் ஒரு விவசாயியைப் பற்றி நடிகர் அமீர்கான் ‘பீப்ளி லைவ்’ என்கிற படத்தை எடுக்கிறார். பாரதப் பிரதமர் மன்மோகன் அவர்கள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார்… ‘நைஸ் ஃபிலிம்!’ தன் ஆட்சியில் நடக்கும் தாங்க முடியா வேதனையைப் பொட்டில் அடித்தாற்போல் புரியவைத்த அந்தக் கலைஞனிடம் கண்ணீரை உகுத்து இருக்கவேண்டிய பிரதம மந்திரியின் பேச்சைப் பார்த்தீர்களா?

இந்த ஆட்சியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்கிற வேதனை காங்கிரஸ் அரசை வெட்கப்படுத்தவில்லையா? ’40 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் ஒருவேளை உணவுக்குக்கூட வழி இல்லாமல் தவிக்கிறார்கள்’ என்பதை இந்த அரசாங்கமே அறிக்கையாக வெளியிடுகிறதே… நாளைய வல்லரசின் இன்றைய லட்சணமா இது? அதே நேரம் பல்லாயிரம் டன் எடையிலான உணவுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் மண்ணோடு மண்ணாக மட்கிக்கிடக்கிற கோலத்தை எங்கே போய்ச் சொல்வது?

அது குறித்த ஆதங்கத்தை நீதிமன்றம் எழுப்பியபோது, ‘அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது!’ என அறிவிக்கிறார்கள். அய்யா அறிவார்ந்த பெருமக்களே… எலிகளுக்குக் கொடுக்கும் உணவை ஏழைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதுதானே உங்களின் மக்கள் நல மகத்துவம்?

பாபர் மசூதி இடிப்புக்கு பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என இன்று வரை இடித்துரைக்கிறது காங்​கிரஸ் கட்சி. பாரதிய ஜனதா கட்சியினர் அதனை இடிக்கும்வரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது இதே காங்கிரஸ் கட்சிதானே… கடப்பாறையும் கம்பியுமாய் வந்தவர்​களைத் தடுக்க சக்தியற்றுப்​போய், டிசம்பர் – 6-ம் தேதியை இந்தியாவின் கறுப்பு தினமாக அறிவிக்கவைத்த அவலத்துக்கு இதே காங்கிரஸ்தானே காரணம்.

மகாத்மா காந்தியடிகளைக் காணச் சென்ற தந்தை பெரியார், ‘அய்யா, நம் தேசியக் கொடியும் காங்கிரஸ் கட்சிக் கொடியும் ஒரே மாதிரி இருக்கிறது. இதனால், காங்கிரஸ் கட்சிதான் நாட்டுக்குச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது என்கிற குழப்பம் உண்டாகி, மக்கள் அதற்கே வாக்களிப்பார்கள். இது சர்வாதிகார நிலையை உண்டாக்கிவிடும்!’ எனச் சொல்லி இருக்கிறார். அத்தகைய அபாயம் புரிந்து மகாத்மாவும் காங்கிரஸை உடனடியாகக் கலைக்கச் சொல்லி இருக்கிறார். ஆனால், நேரு அதை மறுக்க… பெரியார் உரைத்தபடியே உச்சபட்ச சர்வாதிகார சக்தியாய் இன்றைக்கு காங்கிரஸ் பெருத்து நிற்கிறது.

கைராட்டையைச் சுமந்த காங்கிரஸ் கொடி இன்றைக்கு ‘கை’யையும் சோனியாவின் முகத்தையும் சுமந்து பறக்கிறது. இந்திரா காங்கிரஸை உருவாக்கிய இந்திரா காந்தியின் படம்கூட அந்தக் கட்சியின் கொடியில் இல்லை. அப்பனை மறந்த அற்பர் கூட்டம்தான் இன்றைய காங்கிரஸை வளர்த்து வருகிறது. இந்திரா நேருவாக இருந்தவர் பெரோஸ் காந்தியை மணந்ததால்தான் இந்திரா காந்தி என்றானார். இன்றைக்கு நேரு, இந்திரா, ராஜீவ் உள்ளிட்டவர்களின் நினைவு தினங்களை மறக்காமல் அனுசரிப்பவர்கள் பெரோஸ் காந்தியைப் பற்றி மறந்தும் பேசுவதில்லையே… அது ஏன்?

இன்றைக்கு ராகுல் காந்தியைக்கூட மகாத்மா காந்தியின் பாரம்பரிய வாரிசாக கடைக்கோடி மக்கள் நினைக்கிறார்களே… அந்த நினைப்பை விதைப்பதற்காகவே பெயர் முழுக்க காந்தியை சுமந்து வலம் வருபவர்கள், பெரோஸ் காந்தியின் நினைவிடத்துக்கு செல்லாமல் புறக்கணிப்பது ஏனய்யா?

சில உள்ளீடான கேள்விகளுக்கு காங்கிரஸ் தலைவர்​களிடம் உரிய பதில் இருக்கிறதா? அதெல்லாம் ஏன்… இந்திரா காந்தியின் படத்தையும் சோனியா காந்தியின் படத்தையும் சரிக்குச் சமமாக அச்சிட காங்கிரஸ் தலைவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா? அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரிய அளவு தொகை சோனியா காந்தியின் சகோதரிக்கு வழங்கப்பட்டதாக சுப்பிரமணியன் சுவாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினாரே… அதற்கு இதுவரை மறுப்போ விளக்கமோ வெளிவராதது ஏன்?

நாளைய பிரதமராக தூக்கிவைத்துக் கொண்டாடப்படும் ராகுல் காந்தியிடம் காவிரி விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட… ‘நோ காவிரி… நோ இஷ்யூ…’ எனப் பதில் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்கிறபோது எங்களுக்கும் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. ‘நோ காங்கிரஸ்… நோ ஓட்ஸ்!’

இன்றைக்கு இந்த அளவுக்கு காங்கிரஸை கருவறுக்கத் துடிக்கிறேன் என்றால், அதற்குக் காரணமே தமிழனின் கோபம் எப்படி இருக்கும் என்பதைப் புரிய வைக்கத்தான்! இந்திரா காந்தி இறந்தபோது மூன்று நாட்கள் முழுப் பட்டினியாய் கிடந்து அழுதவன் நான். என் தாத்தா பாட்டியின் சோகம்கூட என்னை அந்த அளவுக்குத் தாக்கியது இல்லை. அத்தகையப் பற்றாளன்தான் இன்றைக்கு அடிபட்ட புலியாகக் கிளம்புகிறேன். என்னை எதிர்கொள்ளும் சக்தி அந்த இறுமாப்புக்காரர்களுக்கு இருக்கிறதா என்பதைத் தேர்தல் களத்தில் பார்ப்போம்!

இன்றைய நெருக்கடிக்காக நிலைகுலைந்​திருக்கும் அய்யா முதல்​வரே… காஞ்சிபுரத்தில் தோற்றுப்​போன​போது அறிஞர் அண்ணா வார்த்தைகளையே உங்களிடம் சொல்கிறேன்…

‘ஒரு நெசவாளியைக் கண்டேன்.அவர், ‘நான் நீண்ட காலம் காங்கிரஸில் இருப்பவன். அதனால், நான் எப்படி உங்களுக்கு மாற்றிப் போட முடியும்?’ எனக் கேட்டார். ‘காங்கிரஸே மாறிவிட்டதே… கொள்கையில், குணத்தில், கண்டவர்களும் சேர்ந்து காங்கிரஸைக் கெடுத்துவிட்டார்களே… கெட்டுப்போன பிறகும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முடியும் என்கிறீர்களே… அது நியாயமா?’ எனக் கேட்டேன்!’

அதே வார்த்தைகளை நானும் கேட்கிறேன் அய்யா… கெட்டுப்போன பின்பும் ஏனய்யா காங்கிரஸைக் கெட்டியாகப் பிடித்து இருக்கிறீர்கள். கை தூக்கிவிட்ட பெருந்தலைவர் காமராஜரையே கைது செய்யச்சொல்லி ஆணையிட்டார் இந்திரா காந்தி. ‘முடிந்தால், காமராஜர் மீது கை வைத்துப்பார்’ என சபதம் போட்டீர்கள் அன்றைய தமிழக முதல்வராக இருந்த நீங்கள். இந்திரா காந்தியையே இடியாய் குலுக்கிய நீங்கள், சோனியா காந்தியிடம் சுருண்டுபோனது ஏனய்யா?

உங்களின் தலைகீழ் மாற்றத்தைக் காணச்சகிக்​காதவனாகச் சொல்கிறேன்… எதிர்த்தவர்களையே வரலாறு வணங்கும்… உதிர்த்தவர்களை உதிர்த்துவிடும்!


பாகம் – 17


எங்கள் அடுத்த தலைமுறைக்குள்
‘நஞ்சணிந்த வீரர்’ நாடமைப்பர்
வெஞ்சமரை வென்று
வீதியெங்கும் முரசறைவர்
வேலியன்று போட்டு
வெறிநாய்கள் உட்புகுந்து
காலில் கடிக்காமல்
காவலுக்கு நின்றிருப்பர்.
பூமரங்கள்
பூத்துச் சொரியும்
‘புலம்பெயர்ந்த குருவி’யெல்லாம்
கூடு திரும்பும்
கோயிலெல்லாம் கொடியேறும்
நாடு திரும்பி நம் கையில் வந்த​தென்று
பாடும் குரலெல்லாம் பரவும்!


- கனவும் களமுமாகப் போராடிய நம் சொந்தங்கள் வல்லாதிக்கப் போரில் வீழ்த்தப்பட்டுவிட்டன. பயங்கரவாதிகளை வென்றுவிட்ட​தாகப் பகபகக்கிறது சிங்களக் கூட்​டம். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மக்களை விடுவித்து​விட்ட​தாக மார் தட்டுகிறது மன​சாட்சி வேஷம்பூண்ட உலகம். மண் சாட்சி​யாய்ப் போராடிய மறவர்களின் தீரம், சொந்த இனத்துக்கே சரியெனத் தோன்றாமல் போனதுதான் துயரத்தில் துயரம். ‘பிரபாகரன் ஒரு

சர்வாதிகாரி’, ‘அரசியல் ரீதியாகப் போராடி இருந்தால், அதிகாரப் பகிர்வைப் பெற்றிருக்கலாம்’, ‘பிழைக்கப்போன இடத்தில் நாடு கேட்கிறார் பிரபாகரன்’, ‘ஈழத்தைவைத்து தமிழகத்தில் அரசியல் நடத்துகிறார்கள்…’ என ஆதரித்து அரவணைத்து இருக்கவேண்டிய இந்த அன்னை மண் அவலாக மென்று துப்பிய விமர்சனங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. ‘ஈழத்தைப்பற்றிப் பேசுவதுதான் சீமானுக்கு வேலை…’ என விமர்சிக்கும் அறிவார்ந்த பெரு​மக்களே… அதைப்பற்றிப் பேசாமல் வேறு எதைப்பற்றிப் பேசுவது? ‘சாகும் வரை சாப்பாடு போதும்’ என ஓதும் வேலையை இந்தச் சீமா​னால் செய்ய முடியாது. 12 மைல் தூரத்தில் நடந்த அத்​தனை படுகொலை​களையும் பார்த்துக்​கொண்டு, மூன்று வேளைகளும் மூக்குமுட்ட உண்டுகொண்டு இருந்தோமே… அதைவிடக் கொடூரமானது அந்த மறவர்களை நாம் விமர்சிப்பது!

ஈழ விடுதலை எமது விடுதலை. அது, உலகெங்கும் வாழும் ஒவ்வொரு தமிழனுக்குமான தாயகம். எனது பாட்டன் அருண்மொழித் தேவனும் அவனை அடுத்து வந்த சோழர்​களும் ஏந்திய புலிக் கொடி எமக்கான தேசியக் கொடியாக மாறுகிற மகத்தான வாய்ப்பு. தமிழர் பணம்… தமிழ்த் தேசிய ராணுவம்… தமிழ்த் தேசிய கீதம் என்றெல்லாம் நமக்கான அங்கீ​காரத்தைப் பெறப் புலியாய்ப் போராடியவர்களைப் பழிதூற்றி​யது மட்டும்தானே நம்முடைய இனமானப் பங்களிப்பு?!



ஈழப் போர் உக்கிரமாக நடந்த வேளையில், அதனைத் தடுக்கக் கோரி ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரைத் துறையினர் போராடினார்கள். அதில் கலந்துகொண்டு மனதில் கொந்தளித்த கருத்துகளை எல்லாம் கொட்டினேன். சூரியத் தொலைக்காட்சியில் அது நேரலையாக ஒளிபரப்பானது. ‘இறையாண்மையைக் குலைக்கும் பேச்சு. அதனால், உங்கள் மீது தமிழக அரசு வழக்குப் போடக்கூடும்!’ என என் பேச்சின் அர்த்தங்​களுக்கு அறுவை சிகிச்சை நடத்திக்கொண்டு இருந்தார்​கள் சிலர். அதற்கிடையே என் அலைபேசிக்கு பலரிடம் இருந்தும் அழைப்பு. ‘ஈழப் போராட்டம் ஏன் நடக்கிறது என்பதே உங்களுடைய பேச்சைக் கேட்ட பின்னர்தான் புரிந்தது. நாம் நிச்சயம் போராடுவோம்!’ என்றனர் சிலர். நான் சுக்குச்சுக்காக நொறுங்கிப்போன தருணம் அது தமிழர்களே… 12 மைல் தூரத்தில் நடக்கும் 60 ஆண்டு கால சுதந்திரப் போராட்டம் என்னுடைய 20 நிமிடப் பேச்சில்தான் புரிந்தது என்றால், தன் வரலாறு தெரியாத தறுதலை​களின் கூட்டமாகத்தானே தமிழகம் இருந்திருக்கிறது. ‘வரலாறு தெரியாத எந்த இனமும் எழுச்சி பெற முடியாது’ என்றார் லெனின். வரலாறு தெரியாத எந்த இனமும் வரலாறு படைக்க முடியாது. ஈழப் போராட்டம் ஏன் தொடங்கியது என்பதே புரியாமல், ‘அது தவறு… இது சரி’ எனத் தர்க்கம் பாடுவது தமிழர்களாகிய நமக்கு வழக்கமாகி​விட்டது.

‘நாங்கள் அனுசரித்து வாழ்ந்துகொள்கிறோம்’ எனத் தமிழன் காட்டிய பெருந்தன்மையே பெரும் பிழையாகிவிட்டது. மதத் தீவிரவாத நாடாக மருவிய இலங்கை அரசு, தமிழரோ, தமிழ் இஸ்லாமியரோ ஒருபோதும் அதிபராக முடியாது என்கிற சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்தது. இலங்கையின் ராணுவத்தில் ஒரு தமிழனுக்கும் இடம் இல்லை என மறுக்கப்பட்டது. 40 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி என்கிற நிலை தமிழ் மாணவர்களுக்கு மட்டும் 80 சதவிகிதமாகக் கட்டாயமாக்கப்பட்டது. அப்படியும் தமிழ் மாணவர்கள் கல்வியில் சாதிக்க… அதற்குப் பெரும் காரணமாக இருந்த அறிவுக் கருவூலம் யாழ் பல்கலைக்கழகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. அவற்றை எல்லாம் எதிர்த்து தந்தை செல்வா காலத்தில் ஜனநாயக ரீதியான போராட்டங்கள் எழ… சிங்கள மூர்க்கம் தமிழர்களைத் துவம்சம் செய்யத் தொடங்கியது.

கொதிக்கக் காய்ச்சிய தாரில் தமிழ்க் குழந்தைகளைத் தூக்கிப்போட்டுக் கொன்றது, தமிழச்சிகளின் மார்புகளை அறுத்து சணலில் கோத்து, ‘இங்கே மார்புக் கறி கிடைக்கும்’ என எழுதி விற்பனைக்கு வைத்தது, தமிழர்களின் தொடைகளைப் பிளந்து தெருவில் சிதறடித்தது, தமிழ்ப் பெண்களின் மார்புகளில் கொதிக்கக் காய்ச்சிய தாரால் ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்தைப் பதித்தது என சிங்கள வெறியாட்டங்கள் தமிழர்களை உறையவைத்தன. அத்தகைய சூழலில்​தான் எந்த ஆயுதத்தைக் காட்டி அவர்கள் அச்சுறுத்தினார்களோ… அதே ஆயுதத்தால் தன் இனத்தைப் பாதுகாக்க தலைவர் பிரபாகரன் தயாரானார். தந்தை செல்வா காலத்​திலேயே தமிழர்களின் போராட்ட நியாயத்தை உலகம் புரிந்துகொண்டு இருந்தால்… பிரபாகரனே உருவாகி இருக்க மாட்டார்.

‘ஜெயவர்த்தனே மட்டும் சரியான பௌத்தனாக இருந்திருந்தால், நான் ஆயுதம் ஏந்த வேண்டிய அவசியமே ஏற்பட்டு இருக்காது!’ – தலைவர் பிரபாகரனே சொன்ன வார்த்தைகள் இவை. ‘நாட்டுக்காக உயிரைவிடுவது உத்தமம்தான்… ஆனால், உயிரை விடுவதற்கும் ஒரு நாடு வேண்டுமே…’ என்பதுதானே புலிகளின் ஆதங்கம். உடனே, ‘அது பிரிவினைவாதம்’ எனப் பிளிறுகிறார்களே… ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிவது பிரிவினைவாதம் என்றால், உலகில் இத்தனை நாடுகள் உதித்தது எப்படி? நார்வேயில் இருந்து சுவீடனும், சேர்பியாவில் இருந்து கொசாவோவும், இந்தியாவில் இருந்து பாகிஸ்தானும், பாகிஸ்தானில் இருந்து வங்க தேசமும் பிரிந்தது எல்லாமே பிரிவினைவாதமா?

உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து பேரன் பேத்தி எடுத்த என் தேசம், தனி ஈழக் கோரிக்கைக்கு மட்டும் தடையாக நிற்பது ஏன்? ஈழ நாட்டை நாம் அடைய நடக்கும் போராட்டம் அல்ல இது… என் எதிரிகள் ஈழத்தை அடைந்து​விடக் கூடாது என்பதற்காக நடக்கும் போராட்டம்! தாயின் மடி தமிழ் ஈழம்… அதில் வேறு ஒருவன் தலை வைப்​பதைத் தடுப்பதற்காகவே அண்ணன் பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். அவரைப் பயங்கரவாதியாக இட்டுக்கட்டும் வல்லூறு தேசங்கள், தனிப்பட்ட வாழ்​வியலில் தவறு என ஏதாவது ஒரு குற்றச்சாட்டை அவர் மீது சொல்ல முடியுமா? கண்ணியத்தில் – பெண்ணியத்தில் – களமாடிய புண்ணியத்தில் அந்தத் தகையாளனை விஞ்சக்கூடிய வீரத் தலைவர்கள் எவரேனும் இந்த உலகில் உண்டா?

அவர் கண்களைப் பார்த்த – கணீர் மொழி கேட்ட பெருவரத்தானாகச் சொல்கிறேன்… எத்தகையஇக்கட்டுகள் சூழ்ந்தாலும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிடக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்ததற்குக் காரணமே… தாய்த் தமிழ் உறவுகளின் தேசமாக இந்தியா இருப்பதால்தான்!

ஆனால், சிங்கள அரசுடன் நடந்த போரை உலக நாடு​களுக்கு எதிரான போராக மாற்றியதே இந்தியாதான். ‘ரணில் விக்கிரமசிங்கேயை ஆதரித்து இருந்தால், ஈழப் போரே நடந்திருக்காது’ என இன்று வரை அனுமானம் சொல்பவர்களுக்குச் சொல்கிறேன்… ரணில் இல்லை; ராஜபக்ஷே இல்லை… சிங்கள அதிபராக ஒரு தெரு நாய் தேர்வாகி இருந்தால்கூட நிச்சயம் ஈழத்தை அழிக்கும் போர் அரங்கேற்றப்பட்டு இருக்கும். காரணம்… ஈழப் போரை நடத்தியதே இந்தியாதான்.

‘இந்தியாவின் அறிவுரைப்படியே புலிகளைத் தோற்​கடித்தோம்’ என இலங்கை அதிபர் ராஜபக்ஷே நன்றி பாராட்டினாரே… இன்று வரை இந்தியத் தரப்பில் இருந்து அதற்கு மறுப்பு உண்டா? ‘ஜெயவர்த்தனே 30 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த பிழையை நாங்கள் செய்ய​வில்லை. அதனால்தான், போரில் வெற்றி பெற்றோம். ஜெயவர்த்தனே செய்த பிழை, இந்தியாவை நம்பாதது!’ என கோத்தபய ராஜபக்ஷே கொக்கரித்துச் சிரித்தானே… ‘எங்களுக்கு என்ன தெரியும்?’ எனக் கையை விரித்த இந்த தேசம், அந்தக் கருத்தை மறுத்ததா?

தலைவர் பிரபாகரனைப் பயங்கரவாதியாகப் பிரகடனப்படுத்தி வீழ்த்தியவர்கள் அவருடைய குடிமக்க​ளுக்கு ஏற்படுத்திய விடிவு என்ன? சுதந்திரத்துக்காகப் போராடியவர்களை சோற்றுக்குக் கையேந்த வைத்ததும்… அதிகாரப் பகிர்வு கேட்டவர்களை அம்மணமாக நிற்கவைத்ததும்தானே!

பிச்சைக்காரர்களோ, திருடர்களோ இல்லாத தேசமாக – எல்லாவித சுதந்திரங்களோடும் தன் மக்களை அரணாகக் காத்த அண்ணன் பிரபாகரன் பயங்கரவாதி என்றால், முள்வேலிக்குள் அந்த மக்களை முடக்கிப் போட்டவர்கள்தான் ஜனநாயகவாதிகளா?

அவலக் காட்சியாகவும் அவமானச் சாட்சியாகவும் எம் மக்களை நிறுத்தியதைத் தவிர, தலைவர் பிரபாகரனை வீழ்த்தியதால் விளைந்த மாற்றம்தான் என்ன?

‘பண்பாடு பழக்க வழக்கங்களால் வேறு​பட்டு இருக்கும் எங்களை கனடாவில் இருந்துபிரித்துவிடுங்கள்’ எனக் கோரிக்கை வைத்தது க்யூபெக். உடனே, கனடா ஜனநாயக அடிப்படையில் அங்கே வாக்கெடுப்பு நடத்தியது. இரு முறை நடந்த வாக்கெடுப்பிலும் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகவில்லை. உலகக் கட்டப்பஞ்சாயத்துக்காரர்களாக அசுரம் காட்டும் நாடுகள் அத்தகைய வாக்கெடுப்பை இலங்கையில் நடத்த வேண்டியதுதானே? ‘ஒருங்கிணைந்த இலங்கையில் வாழ்கிறீர்களா? இல்லை, தனித் தமிழ் ஈழமாக மீள்கிறீர்களா?’ என்கிற கேள்வியை முன்வைக்க ஜனநாயக சக்திகள் தயாராக இருக்கின்றனவா? இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்குக் காரணம்… மதம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததற்குக் காரணம்… மொழி. மதம், இனம், மொழி, பண்பாடு, மரபு என அத்தனையிலும் வேறுபட்டு நிற்கும் ஈழத்தை மட்டும் இலங்கைக்குள் இறுக்குவது எந்த விதத்தில் நியாயம்?

நான் ஈழத்துக்குப் பயணமானபோது, சிங்கள ஓட்டுநர் ஒருவர் அங்கு உள்ளவற்றை விளக்கிச் சொன்னபடி வந்தார். ‘இது எங்களின் கோயில்’ என ஓர் இடத்தைக் காட்டினார். ‘அங்கே என்ன இருக்கிறது?’ எனக் கேட்​டேன். ‘புத்தரின் பல் இருக்கிறது!’ எனச் சொன்னார். புத்தரின் பல்லைப் பத்திரப்படுத்தியவர்கள், அவருடைய சொல்லைப் பத்திரப்படுத்தவில்லையே!

ஆசையை வெறுக்கச் சொன்ன புத்தனின் வார்த்தை​களை அடியற்றி இருந்தால், எத்தனின் தேசமாக இலங்கை இன்று மாறி இருக்காது. ‘வெற்றி… வெற்றி…’ எனக் கொக்கரித்த ராஜபக்ஷே, இன்று ‘புற்று… புற்று…’ என அலறியபடி அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு ஓடு​கிறார். புற்று வருகிறதோ இல்லையோ… புலித் தலைவர் உத்தரவில் உமை வீழ்த்த சீக்கிரமே ‘பொட்டு’ வரும்!


பாகம் – 18


”அழிந்து சிதைந்து போகாமல் பாதுகாப்பாக வாழ்வதற்கு, போராடித்தான் வாழவேண்டும் என்கிற நிர்பந்தத்துக்கு தமிழ்த் தேசிய இனம் தள்ளப்பட்டு இருக்கிறது. இந்தத் தேசியப் பணியில் இருந்து – வரலாற்று அழைப்பில் இருந்து தமிழ் இளம் பரம்பரை ஒருபோதும் ஒதுங்கிக்கொள்ள முடியாது!”

- மேதகு தேசியத் தலைவர் வே.பிரபாகரன்


இளையான்குடி சந்தையில் மிளகாய் மூட்டைகள் சுமந்துபோட்டு, மணிக்கணக்கில் காத்திருந்தால்… ஆறஅமர வியாபாரி வருவார். முதுகில் தீ வைத்ததுபோல் பற்றிக்கொண்டு எரியும். ‘இது சரிஇல்லை… அது சரி இல்லை’ என வியாபாரி அள்ளியதுபோக, எஞ்சிய மிளகாய்களை இறுகக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு வருவேன். கல்லூரி முடித்து, கொஞ்சம் கடனும் நிறையக் கனவுகளுமாகத்தான் இந்தத் தலைநகருக்கு வந்தேன். படங்கள் எடுத்தேன். இன்றைக்கும் அதுவே கதி எனத் தொடர்ந்திருக்கலாம் திரைத் தொழிலை. ஈழத்தில் விழுந்த இழவு என்னை மட்டும்தான் உலுக்கியதா? காப்பாற்றக் கோரிய கதறல் என் காதுகளுக்கு மட்டும்தான் எட்டியதா? கையறு நிலையில் கலங்கிய சோகம் என் கண்களில் மட்டும்தான் நீராக முட்டியதா?

ஈழத்து சாவுக்காக நீயும்தான் துடித்தாய்… நெருப்புக்கு நெஞ்சுகொடுத்த முத்துக்குமாருக்காக நீயும்தான் அழுதாய்… கண்முன்னே கருவறுக்கப்பட்ட துயரத்துக்காக நீயும்தான் நிம்மதி இழந்து புலம்பினாய். உன் முன்னால் நான் வைக்கிற ஒற்றைக் கேள்வி… துடிக்கவைத்த அத்தனை துயரங்களையும் ஒரு துளிக் கண்ணீரோடு இறக்கி வைத்துவிட்டாயா நீ? கனன்று தெறிக்கும் கோபமாக, உன்னுள் இன்னும் உறைந்திருக்கவில்லையா அந்த உக்கிரம்? வாரிக்கொடுத்த துயரத்துக்கு வஞ்சம் தீர்க்கக் காலம் பார்ப்பவனாக நீ காத்திருக்கவில்லையா? எனக்கு இருக்கும் முழுக் கோபமும் உனக்கும் இருக்கிறது. ஆனால், ‘என்னால் என்ன செய்ய முடியும்?’ என்கிற தயக்கம் மட்டும்தானே தம்பி உனக்குத் தடை?! தெருவில் இறங்கக் கருவிலேயே கற்றுக்கொண்ட பரம்பரையடா நாம்!



‘மாணவர்கள் கட்டாயம் அரசியல் அறிவு பெறவேண்டும். அரசியலில் ஈடுபடும் சூழல் வரும்போது, தயங்காமல் நேரடியாகக் களம் இறங்க வேண்டும்!’ என அப்போதே உன்னை அடுத்த கட்ட அரசியலுக்கு ஆயத்தப்படுத்திவிட்டுப் போனான் மாவீரன் பகத்சிங். தூக்குக் கயிற்றையே தோற்கடித்த அந்த வாழைக் குருத்தை நெஞ்சத்து வடிவமாக ஏந்தியிருக்க வேண்டியவன் நீ!

அரசியல்வாதிகள் எப்போதுமே அடுத்த தேர்தலைப் பற்றியே சிந்திக்கிறார்கள். தலைவர்கள் மட்டும்தான் அடுத்த தலைமுறையைப்பற்றி சிந்திக்கிறார்கள். இன்றைய நிலையில் அத்தகைய தலைவர்களை அடையாளம் காண முடியவில்லை. அரசியல்வாதிகள் மட்டுமே புழுத்துப்போய் இருக்கும் இந்த மண்ணில் நாளைய தலைவனாக வடிவெடுக்க வேண்டியவர்கள் இன்றையத் தம்பிகள்தானே? ‘அரசியல் ஒரு சாக்கடை’ என யாரோ ஓர் இயலாமைக்காரன் சொன்ன வார்த்தைகளை இன்னும் எத்தனை நாளைக்கு நாம் சொல்லிக்கொண்டு இருப்பது? உளத்தூய்மையோடு ஒவ்வொருவரும் அரசியலில் அடியெடுத்துவைத்தால், இன்றைய சாக்கடை… நாளைய பூக்கடை!

‘இறையாண்மை மீறல்’ பாய்ந்து கோவை சிறையில் நானும் அண்ணன் கொளத்தூர் மணியும், பெ.மணியரசன் அய்யாவும் அடை​பட்டுஇருந்த நேரம். ‘ஈழத்துக் கோரங்கள் இளைய தலைமுறையின் மனதை உலுக்கவில்லையா?’ என்பதுதான் எங்களைத் துடிக்கவைத்த ஆதங்கம். நாங்கள் வெளியில் வந்த வேளையில்தான் தம்பி முத்துக்குமார் உயிராயுதம் ஏந்தி உலகத்தையே உலுக்கினான். பக்கம் பக்கமாக அவன் அடுக்கி இருந்த ஆதங்கத்தைப் படித்து, ‘நம்மோடு நம்மாகத் திரிந்த ஒரு மூர்க்க அறிவாளன் இப்படிக் கருகிவிட்டானே…’ எனக் கதறியதும், ‘அவன் விதைத்த தீ, லட்சோப லட்சம் இளைஞர்களைத் திரட்டும்’ எனக் கருதி கண்ணீரை உதறியதும் காலத்திலும் மறக்க முடியாதது. முத்துக்குமாரின் மரணம் பொறுக்காமல் தமிழகத்தின் மூலை முடுக்கில் இருந்தெல்லாம் திரண்ட மாணவர் கூட்டத்தைப் பார்த்து, ‘இனி கவலை இல்லை… அடக்குமுறை வெறி பிடித்த இந்த அரசாங்கத்தால் நம் குரலைத்தான் அடக்க முடியும். இந்தக் கூட்டத்தை என்ன செய்ய முடியும்?’ என நம்பிக்கையோடு நிமிர்ந்தேன். ஆனால், அடுத்த சில தினங்களிலேயே மாணவர்களின் போராட்டம் பொசுங்கிப்போனது ஏன்? முத்துக்குமாரின் சிதையில் தீயாய்த் திரண்ட மாணவக் கூட்டத்தை ‘கால வரையற்ற விடுமுறை’ என்கிற ஒற்றை வார்த்தை சிதைத்தது. பொங்கி வெடித்தவர்கள் விடுமுறை அறிவிப்பைக் கேட்டதும் பொழுதைக் கழிக்கப் போனது ஏன்? ‘விடுமுறை’ அறிவிப்பின் மூலமாக ஒரு விடுதலைப் போராட்டத்தையே முடக்கிய பெருமை இந்த அரசாங்கத்தையே சேரும்!

இன்றைய மாணவ சமுதாயமும் இளைய தலைமுறையும் கைகோத்து களத்தில் நின்று இருந்தால், நிச்சயம் தமிழ் ஈழம் இத்தனை துயரத்துக்குள் தள்ளப்பட்டு இருக்காது. பிரமிடுகளின் தேசத்தில் இன்றைக்கு வெடித்​திருக்கும் பிரளயம் இளைய தலைமுறையின் கொந்தளிப்பால்தான் என்பது தமிழகத் தலைமுறைக்கு மட்டும் புரியாதது ஏன்? புரட்சி என்பது வரலாற்றை நிரப்பும் வார்த்தை அல்ல. வரலாற்றைப் படைக்கும் வார்த்தை. ‘எது புரட்சி?’ என்கிற கேள்வி தந்தை பெரியாரிடம் வைக்கப்பட்டபோது, பொட்டில் அடித்தாற்போல் அவர் சொன்னது… ‘வெறும் காலோடு நடந்தவன் செருப்பு அணிந்து நடந்தது புரட்சி; அதைச் செய்தவன் புரட்சியாளன்!’ மக்களின் திரட்சியே மாற்று அரசியலுக்கான புரட்சி. அத்தகைய திரட்சியை உருவாக்கவேண்டியவன் இளைஞன்.

‘தேர்தல் பாதை திருடர் பாதை’ என்கிற சபிப்புகளும், ‘என் ஒருவனுடைய ஓட்டுதான் மாற்றத்தை உண்டாக்கப் போகிறதா?’ என்கிற சகிப்புகளும்தான் அரசியல் களம் அசிங்கம் சுமந்து நிற்பதற்கான காரணம். வெறும் 50 சதவிகித வாக்குகள் மட்டுமே இந்தத் தேசத்தின் அரசியலைத் தீர்மானிக்கிறது என்றால், ‘நாட்டில் என்ன நடந்தால் நமக்கு என்ன?’ என நினைக்கிறவர்களின் கூட்டம் பெருகிவிட்டதாகத்தானே அர்த்தம்? உரிமையை வறுமைக்கு விற்கும் ஏழைகளுக்கும், உரிமைகளால் ஒன்றும் ஆகாது எனப் புறக்கணிக்கும் கோழைகளுக்கும் என்ன வித்தியாசம்?

அடி கொடுத்தவனும் – மடி அறுத்தவனும் இங்கே கொடி பிடிக்கிறான். வலை அறுத்தவனும் முலை அறுத்தவனும் இங்கே வசதியாக வந்துபோகிறான். கைகட்டி நின்றவனும், பொய் கொட்டி வென்றவனும் மீண்டும் ‘கை’கோத்து நிற்கிறான். கூட்டால் குலை அறுத்தவனை, வாக்குச் சீட்டால் வஞ்சம் தீர்க்கக்கூடிய சூழல் வாய்த்திருக்கிறது தமிழா! ஆயுதம் கொடுத்து, ஆலோசனை கொடுத்து, ஆயிரக்கணக்கில் கோடிகள் கொடுத்து தமிழ் ஈழத்தை அழித்த காங்கிரஸ் கட்சிக்கு தன்மானத் தமிழன் பதிலடி கொடுக்கும் காலம் இதுதான். பீகாரில் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி எனச் செய்தி வந்தபோது, ‘காங்கிரஸுக்கு ஏன் இந்த இழிநிலை?’ என்கிற கேள்வி எழுந்ததே… அதுபோல், தமிழகத்தில் ஒற்றை இடத்தில்கூட வெல்ல முடியாத அளவுக்கு காங்கிரஸ் வீழ்த்தப்படும்போதும், ‘ஏன்?’ என்கிற கேள்வி எழும் அல்லவா? அன்றைக்குச் சொல்வோம்… ‘கட்சியைச் சிதைத்ததற்கே இப்படிக் கதறுகிறீர்களே… எங்களின் கருவையே சிதைத்தபோது நாங்கள் எப்படிக் கதறி இருப்போம்?’ என்று! தமிழன், தகிப்பான உமிழன் என்பது வினையாளிகளுக்கும் துணையாளிகளுக்கும் அன்றைக்குத்தானே புரியும்.

இரண்டு முறை என்னை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளிய அரசாங்கம் என் மீதான குற்றச்​சாட்டை நிரூபிக்க முடியாமல் தோற்றுப்போனது. காரணம்… உணர்வு மிகுந்தாலும் – உள்ளம்சினந்தாலும் நாம் உண்மை என்கிற நெறியிலேயே நெஞ்சம் நிமிர்த்தி நிற்கிறோம். அலட்சியப்படுத்தப்படும் கண்ணீர் ஆயிரம் ஆயுதங்களை உற்பத்தி செய்யும். அதை நிகழ்த்தப்போவது நாம்தானடா தம்பிகளே!

தி.மு.க. கூட்டணியில் எத்தனைத் தொகுதிகள் எனத் தெரிந்துகொள்ள காங்கிரஸ் காத்திருக்கிறதே… அதைவிட பல மடங்கு ஆவலோடு நான் காத்திருக்கிறேன். காங்கிரஸுக்கான தொகுதிகள் அறுபதாக இருந்தாலும் சரி… நூறாக இருந்தாலும் சரி… அத்தனை தொகுதிகளிலும் என் ஈரக்குலையின் ஈரம் இற்றுப்போகும் வரை முழங்குவேன். வாரிக் கொடுத்த கோபத்தில் காறித் துப்பும் தமிழனாக காங்கிரஸை அறைவேன். ‘கதரா… கருகிய பதரா?’ எனக் கேட்கிற அளவுக்கு எங்களின் உரு அறுத்த பாவிகளைக் கருவறுப்பேன்.

இந்தக் கணத்தில், என்னை நோக்கிய சில விமர்சனங்​களுக்கும் நான் விடை சொல்லவேண்டி இருக்கிறது. முதல் விமர்சனம்… ‘சீமான் பெட்டி வாங்கிவிட்டார்!’ அது வாங்கிப் பழகியவர்களின் வார்த்தை! இந்தப் பிரபாகரனின் தம்பி பிச்சை எடுத்து செத்தாலும் சாவானே தவிர, வருமானத்துக்காக இனமானத்தை அடமானம் வைப்பவனாக ஒருபோதும் இருக்க மாட்டான்! அடுத்த விமர்சனம்…’சீமான், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கலாமா?’ இந்தத் தேர்தலில் நமக்கு இருப்பது மூன்றே மூன்று வழிகள்தான் தம்பிகளே… கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் எனச் சொல்லி இருவரையும் புறக்கணிக்கவைப்பது முதல் வழி. ‘இதைச் செய்யாதே?’ எனச் சொன்னால் ‘எதைச் செய்வது?’ என்கிற கேள்வி எழுவது மனித இயல்பு. அதனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டுமே தவிர, ‘யாருக்கோ போடுங்கள்’ என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது. அடுத்து, தனித்து நிற்பது… அது யானைகளின் காலடிகளில் சிக்கிய குழந்தைக்குச் சமமானது! இல்லையேல், ‘தேர்தலைப் புறக்கணியுங்கள்!’ எனச் சொல்வது. அது தற்கொலைக்குச் சமமான கோழைத்தனம்! குடுகுடுப்பைத்தனமோ, கோழைத்தனமோ கூடாது என்பதால்தான், காங்கிரஸை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்பேன் எனச் சொன்னேன். கிடைக்கிற ஆயுதத்தைக்கொண்டு எதிரியைக் கிழிப்பதுதான் சாமர்த்தியம். இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லரிடமே ராணுவ உதவி கேட்டாரே… ‘உலகக் கொடுங்கோலனிடம் உதவி கேட்கலாமா?’ என நேதாஜியிடம் கேட்க முடியுமா? இந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது, பிரேமதாசாவின் துணையோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே… எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது! ‘காங்கிரஸை வீழ்த்துவதற்காக எதையும் ஆதரிப்பேன்’ என நான் சொன்ன வார்த்தைகளை வைத்து, ‘அவர்போல் ஆகிவிடுவார்… இவர்போல் ஆகிவிடுவார்… சுண்ணாம்புச் சுவர்போல் ஆகிவிடுவார்’ என எவரும் கவலைப்பட வேண்டாம். அப்படி உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல; புலிக் குட்டி!


அலை எழுத்தில் ஓய்ந்தது ! எண்ணத்தில் ஓயாது !!


நன்றி : ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment