Labels

Saturday, December 11, 2010

சிங்களன் கொன்ற மீனவர்களில் காங்கிரஸ் தொண்டனும் இருக்கிறான்! – இயக்குநர் மணிவண்ணன்


வேலூர் சிறையில் இருக்கும் ‘நாம் தமிழர்’ இயக்கத் தலைவர் சீமானை சந்தித்துவிட்டு வந்திருக் கிறார் இயக்குநர் மணிவண்ணன். மனிதரை சந்தித்தபோது, புயல் மழைபோல் கொட்டித் தீர்த்துவிட்டார்!

”சீமான் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என்று சொல்கிறார்களே?”

”வரும் சட்டமன்றத் தேர்தலில் ‘நாம் தமிழர்’ இயக்கம் போட்டியிடாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார் சீமான். அவர் ஏதோ எம்.பி., எம்.எல்.ஏ. பதவிகளை வாங்குவதற்காக மைக் பிடிக்கும் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை உணர்ந்தபோது, எனக்குப் பெருமையாக இருந்தது. இந்தியத் தேர்தல் லட்சணம் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான். இந்தியாவில் ஜனநாயகம் புதைகுழிக்குப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்று இங்கு பண நாயகம்தான் பேயாட்டம் போடுகிறது. ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடக்கும்போது, அரசியல்வாதிகளிடம் பணப் புழக்கம் அதிகமாக இருக்கிறது. தேர்தல் நடக்கும்போது, அதை மக்களுக்குப் பங்கு பிரித்துக் கொடுப்பதால், அந்த சமயத்தில் மக்களிடம் பணப் புழக்கம் அதிகமாகிவிடுகிறது. இதனால்தான் தேர்தல் முடிந்த பிறகு எந்த அரசியல்வாதியையும் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கக் கூடிய தகுதியை வாக்காளன் இழந்துவிடுகிறான்!”

”காங்கிரஸை எதிர்த்து நாம் தமிழர் இயக்கம் தீவிரப் பிரசாரத்தில் இறங்கும் என்கிறார்களே?”

”காங்கிரஸ் எதிர்ப்புதான் இன்றைய தமிழனின் ஒற்றை வரிக் கொள்கையாக இருக்கிறது… இருந்தாக வேண்டும். இதை உணராத தலைவர்கள் தோல்வியைத்தான் தழுவுவார்கள். எந்த காங்கிரஸை எதிர்த்து, காஞ்சிபுரம் மாநாட்டில் தந்தை பெரியார் வெளியேறினாரோ, அந்த காங்கிரஸை எதிர்த்து 67-ம் ஆண்டு அண்ணா மாபெரும் கூட்டணியை அமைத்து அந்தக் கட்சியை வீட்டுக்கு அனுப்பினார். அரை நூற்றாண்டைத் தொடும் அளவுக்கு காங்கிரஸ் ஆட்சி நாற்காலியில் இருந்து தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. இதில் வேதனையான விஷயம்… இந்தத் தன்மான, இனமான இயக்கத்தின் வழித்தோன்றல்கள் காங்கிரஸை தங்களின் தோளில் தூக்கிச் சுமந்து திரிவதுதான். இது பெரியாரும் அண்ணாவும் நினைத்துப் பார்க்க முடியாத கொள்கைச் சோரம்!

பிழைப்புக்காக மீன் பிடிக்கப் போகும் அப்பாவித் தமிழக மீனவர்களைத் தாக்குகிறது சிங்கள ராணுவம். கடந்த இரண்டு மாதங்களில் 18 முறை மீனவர்களைக் கடுமையாகத் தாக்கி உள்ளது ராணுவம். முன்பு துப்பாக்கியால் தாக்குதல் நடத்துவார்கள். இப்போது காட்டுமிராண்டிகள் மாதிரி, கத்தி, கடப்பாரை, அரிவாளால் கொடூரமாகத் தாக்கிச் சித்ரவதை செய்து கொல்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் 421 மீனவர்கள் அதன் ரத்த வெறிக்குப் பலியாகிவிட்டனர். சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்ற தமிழக மீனவர் களில் காங்கிரஸ் கட்சிக்காரரும் இருந் திருக்கிறார்… இறந்திருக்கிறார். அதுபற்றிய அக்கறை காங்கிரஸ் மேலிடத்துக்குக் கடுகளவும் இல்லை. என்ன முகத்தை வைத்துக்கொண்டு காங்கிரஸுக்கு வாக்கு கேட்டு வருவார்கள்?”

”நல்ல நண்பர்களாக இருந்த தங்கர்பச்சான் – சீமான் நட்பில் விரிசல் ஏற்பட்டது ஏன்?”

”சிறைக் கொட்டடி சீமானின் உறுதியைக் குலைக்கவில்லை. தன் கொள்கைகளில் இன்னும் தீவிரமாகவும் தெளிவாகவும் இருக்கிறார். தமிழ் இனத்துக்காகக் குரல் கொடுத்து சிறையில் இருக்கிறார் சீமான். அவரை, கலைஞர் விடுதலை செய்ய வேண்டியதில்லை. பிடல் காஸ்ட்ரோ சொன்னது மாதிரி, வரலாறு அவரை விடுதலை செய்யும்!”

எம்.குணா

நன்றி: ஜீனியர் விகடன்

No comments:

Post a Comment