Sunday, December 19, 2010
அடிமைச் சங்கிலி அறுப்போம்...! -கவிஞர் தணிகைச்செல்வன்
கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், காவியக் கவிஞர் வாலி தலைமையில் "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.
கவியரங்கத்தை கவிஞர் மு.மேத்தா தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவிஞர்கள் பழனிபாரதி, பா.விஜய், தணிகைச் செல்வன், இளம்பிறை, உமாமகேஸ்வரி, தமிழ்தாசன் உள்ளிட்டோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர்.
ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு கோணத்தில் வாசித்த நிலையில், ஈழத்தைப் பற்றி அதிகம் பேசிய தணிகைச்செல்வனின் கவிதை வரிகள், திரண்டிருந்த மக்களிடம் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தின.
அவரது கவிதையிலிருந்து...
முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய
வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி
கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ...!
பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம்
முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ...!
கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற
வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வேர்க்கலையோ...!
ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோறுக்கும்
இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரை காண்கிலையோ...!
அய்யோ உலகே ! அய்யகோ பேருலகே !
பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ?
கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த இனம்
கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும்.
எல்லாம் இழந்தோம் இழப்பதற்கு ஏதுமில்லை...
கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்
துணியதனை இழந்ததாலே துரோபதி சபதம் நியாயம்
தனதுமண் இழந்ததாலே தருமனின் யுத்தம் நியாயம்
அனைத்தையும் இழந்த எங்கள் ஆவேசம் நியாயம் ! நியாயம் !
தாக்குண்டால் புழுக்கள்கூட தரைவிட்டுத் துள்ளும் , கழுகு
தூக்கிடும் குஞ்சிகாக்க துடித்தெழும் கோழி; சிங்கம்
மூர்க்கமாய் தாக்கும்போது முயல்கூட எதிர்த்து நிற்கும்...
சாக்கடைப் கொசுக்களா நாம் ? சரித்திர சக்கரங்கள் !
சரித்திரம் சுழலும்போதும் சமுத்திரம் குமுறும்போதும்
பொறுத்தவன் பொங்கும்போதும் புயல்காற்று சீறும்போதும்
பறித்தவன் ஆதிக்கத்தைப் பசித்தவன் எதிர்க்கும்போதும்
மறித்தவன் வென்றதுண்டா ? மறுத்தவன் நின்றதுண்டா?
புவியோடி படர்ந்திருக்கும் நவகோடி தமிழினமே !
நீ , இழக்கப்போவது அடிமைச் சங்கிலிகளைத்தான்-
பெறப்போவதோ ஒரு பேருலகம் ! ஒரு பொன்னுலகம் !
அதுதான் தமிழுலகம்...!
நன்றி : நக்கீரன் நந்தவனம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment