Labels

Saturday, December 18, 2010

தமிழிசையே அனைத்து இசைகளின் தாய்





ஒரு முறை தமிழ்நாட்டின் திருவையாற்றில் தியாகராஜர் விழா நடைபெற்றது. அவ்வேளை தண்டபாணி தேசிகர் வாயால் தம் தாய்மொழி தமிழில் பாடிவிட்டார். விழாவுக்கு வந்திருந்த வித்வான்களும் பாகவதர்களும் முகம் சுளித்தனர். தண்டபாணியார் தமிழில் பாடப்பாட இவர்களுக்கு நெஞ்சம் பதைத்தது. வயிறு எரிந்தது. பார்ப்பனர்கள் பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்தனர். தியாகராஜர் வளாகமே தீட்டுப்பட்டுவிட்டது; தீட்டுக் கழிக்கப் பெற்றால் அன்றி இனி இம்மேடையில் நாங்கள் பாட மாட்டோம் என்று சீறிப்பாய்ந்தனர்; பின்னர் வெளிநடப்பும் செய்தனர்.

அப்படி என்ன பெருந்தவறு நடந்து விட்டது? கர்நாடக சங்கீதத்தின் மும்மூர்த்திகள் என்று காலங்காலமாகச் சொல்லப் பெற்ற தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துச்சாமி தீட்சிதர் ஆகியோ ரின் பாடல்களில் யாதேனும் ஒன்றைப் பாடியிருந்தால் உள்ளம் மகிழ்ந்திருப்பார்கள்.

இந்நிகழ்வு நடைபெற்றது வேறெங்குமல்ல, இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் வளர்ந்த தமிழ்நாட்டில்; தமிழ் மண்ணில். கர்நாடக சங்கீதம் என்றாலே தியாகராய கீர்த்தனைகள் தான் அல்லது சமஸ்கிருதப் பாடல்கள் தான். தமிழ் அதற்குப் பொருத்தமில்லாத மொழி என்றெல் லாம் கதைகள் ஒரு காலத்தில் பரப்பப்பட்டன. தியாகராஜரும், சியாமா சாஸ்திரியும், முத்துச்சாமி தீட்சிதரும் தோன்றுதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பதாகவே தமிழ் இசையின் ஆதி மும்மூர்த்திகள் தோன்றிவிட்டனர். இவர்கள் தமிழர்கள். ஆனால் இந்தத் தமிழர்களை பூணூல் அணிந்தவர்களின் கண்கள் பார்க்காது. ஏனெனில் இவர்கள் சூத்திரர்கள்; நீச பாசையில் (தமிழில்) பாடுகிறவர்கள்; பூதேவர்களின் செவிகள் இவற்றைக் கேட்குமா? அந்தளவுக்கு பிராமண சமஸ்கிருத வெறித்தனம் தமிழிசையை விட்டுவைக்காமல் சீரழித்தது.

தமிழிசை மும்மூர்த்திகள் முழுக்க முழுக்கத் தமிழிலேயே பாட்டெழுதி இசையமைத்தனர். மேளக்கார இசையோடு பாடிய அந்த மூவரின் கீர்த்தனங்களையும் பதங்களையும் கேட்டே தியாகராஜர், சியாமா சாஸ்திரி, முத்துச்சாமி தீட்சிதர் ஆகிய கர்நாடகச் சங்கீத மும்மூர்த்தி களின் இசை உருவெடுத்தது, என்று சொன்னால் மிகை யாகாது என்கிறார் இசைத்துறை அறிஞர் ப.தண்டபாணி.

"ஆடிக் கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்ஆயிரம் வேண்டாவோ''

"நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர் நம்பர்

திருச்செம்பொன் அம்பலவாணர்,''

என்பது கி.பி 1500-1600 காலக்கட்டத்தில் பிறந்த முத்துத்தாண்டவர் எனும் தமிழனின் பாடல்.
"காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே- என்னைக்கைத்தூக்கி யாள் தெய்வமே''

என்ற பாடல் கி.பி. 1712-1787 காலக் கட்டத்தில் வாழ்ந்த மாரிமுத்தாப் பிள்ளை எனும் தமிழனின் பாடலாகும். இப்பாடல்களைப் பழைய திரையிசைப் பாடகிகள் எம்.எல் வசந்தகுமாரி, டி.கே. பட்டம்மாள் முதலானோர் பாடியுள்ளதைக் கேட்டிருக்கலாம்.

கி.பி.1712-1779-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்தான், தமிழில் முதன் முதலில் நாடகக் கீர்த்தனைகள் எழுதிய அருணாச்சலக் கவிராயர் ஆவார். இன்று தமிழ்க் கீர்த்தனங்களுக்கு முன்னோடிகளான இவர்களையும் இவர்கள் பாடல்களையும் புறந்தள்ளி விட்டு, "வாதாபி கணபதி பஜே' என்றும் "மரி மரி நின்னே முரளித' என்று சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் தமிழர்கள் தமிழ்க் குழந்தைகள் இசைபயிலுவது வெட்கக் கேடான நிலையாகும். இது தமிழிசையை முற்றாக அழிக்க நடத்தப்படுகின்ற சூழ்ச்சியே.

தமிழனை எதிர்த்ததால் தமிழின மறுமலர்ச்சி இயக்கமும், தமிழை எதிர்த்ததால் தனித்தமிழ் இயக்கமும், தமிழிசையை எதிர்த்ததால் தமிழிசை இயக்கமும் தோன்றலாயின. இரண்டாவது தமிழர் இயக்கமும், இதனைக் கலை வகையில் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும் சமய வகையில் உயர்திரு மறைமலையடிகளும் அரசியல் வகையில் பெரியார் ஈ.வே.ரா அவர்களும் தோற்றுவித்து வளர்த்தனர்.

மூன்றாவது தமிழிசை இயக்கம். இஃது இலக்கிய வகையில் இசைத் திலகம் தி. இலக்கு மணப் பிள்ளையாலும் துணை தலைமை வகையில் செட்டி நாட்டு மன்னர் அண்ணாமலை செட்டியார் அவர்களாலும் தோற்றுவிக்கப்பெற்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து ஓங்கி வருகின்றன.

முத்தமிழில் இசைத் தமிழ் இலக்கணத்தையும் பரவலையும் அழித்தொழிக்க முற்பட்ட ஆரிய பார்ப்பண சூழ்ச்சி யின் விளைவாக தமிழிசையைத் தற்காக்க வேண்டும் எனும் வேட்கைத் தன்மானத் தமிழர்க்கு எழுவதில் வியப்பொன்றும் இல்லை. இருப்பினும் தமிழிசை மீட்சி முழுமை பெற்றுவிட்டதாக நாம் கருதிவிட முடியாது.

இன்றளவும் தமிழ்க்குழந்தைகள் தெலுங்குச் சமஸ்கிருத பாடல்களையே பயிற்சியாகப் பயில்கின்றனர். பெரும்பான்மை இசைப் பெயர்கள் இன்று தமிழாக இல்லை.

கல்யாணி, காபி, கானடா,அம்சத்துவணி, மோகனம், பகேசுவரி முதலான பெயர்கள் வட மொழிகளாகவே உள்ளன. பழந்தமிழ் மண்ணில் 11,999 ராகங்கள் இருந்ததாக வரலாற்றுக் குறிப்பு கள் காட்டுகின்றன. ஆனால் இன்று முந்நூற்றுக் கும் குறைந்தவையே வழக்கில் உள்ளன. பண்டை நாளில் இசை நுணுக்கம், பஞ்சமரபு, பெருங்குருகு, பெருநாரை முதலான இசைத்தமிழ் நூல்கள் இருந்ததாகச் சிலப்பதிகார உரைப் பாயிரத்தில் அடியார்க்கு நல்லார் கூறியுள்ளார்.

இன்று மறைந்துவிட்டதாகக் கருதப்பட்ட "பஞ்சமரபு' எனும் நூல் ஒன்றைத் தவிர ஏனைய நூல்கள் கிடைக்கவில்லை. சேறை அறிவனார் யாழ் மரபு, வங்கிய மரபு (குழலியல்) கண்ட மரபு (குரல்) கூத்து மரபு (ஆடல்) தாள மரபு எனும் துறைகளைக் கொண்டு அவற்றுக்குரிய இலக்கணத்தை விளக்கி எழுதப்பட்ட நூலே பஞ்ச மரபு என்பதாகும். இதற்கு அந்நூலாசிரியர் இட்டபெயர் "ஐந்தொகை' என்பதே. 1917-ஆம் ஆண்டு தமிழிசை மேதை தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் எனும் பெருமகனார் கருணாமிர்த சாகரம் எனும் அரிய தமிழிசை ஆய்வு நூலை எழுதி வெளியிட்டார். கிடைத்தற்கரிய வரலாற்றுச் செய்திகளையெல்லாம் திரட்டி 1365 பக்கங்களில் இந்நூலை அப்பெருமகன் இயற்றியுள்ளது தமிழிசைக்குச் செய்த பெரும்பேறாகும்.

இனி,

"சரிக மபதநியென் றேழுத்தாற் றானம்
வரிபரந்த கண்ணினாய் வைத்துத் - தெரிவரிய
வேழிசையுந் தோன்று மிவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாஞ் சுத்தத் துளை'

எனும் சிகண்டி முனிவரின் பாடலில் சூழலை அடிப்படையாகக் கொண்டு அதன் ஒலிக்குறிப்புகளைத் தமிழர்கள் ச ரி க ம ப த நி என்று எழுத்துக்களால் குறித்தாகப் பொருள் விளக்கப்படுகின்றது. பண்டைய நாளில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி,விளரி, தாரம் என்று இவ்விசை ஒ-லிகளுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை சுருக்கமாக கு து கை உ இ வி தா எனவும் வைத்துக் கொள்ளலாம் என்கிறார் மொழிஞாயிறு தேவநேயபாவாணர். தமிழ் உயிர் நெடில் எழுத்துக்களான A, C, E, G, H, J, எனும் ஏழையும் இவ்விசை ஒலிகளுக்குத் தமிழர்கள் குறியீடுகளாக அமைத்துள்ளனர். இக்காலத்திலும் பாடலில் ஆளத்தி (ஆலாபணம்) செய்யும்போது இக்குறியீடுகளைப் பாணர்கள் பயன்படுத்துகின்றனர்.

ச ரி க ம ப த நி எனும் ஒலிக்குறிப்புகள் தமிழிலிருந்தே வட மொழிக்குத் திருடப்பட்டதாகவும், தமிழ் சாயலை மறைக்க "சி' எழுத்துக்குப் பகரமாக "ஸி' எனும் கிரந்த எழுத்து பயன் படுத்தப்பட்டதாகவும் அறிஞர் ப.தண்டபாணியார் குறிப்பிடுகின்றார். 700 ஆண்டுகளுக்கு முன் வடமொழியில் சங்கீத ரத்தினாகாரம் என்னும் இசை நூலை எழுதிய சாரங்கத் தேவர் என்பவரே இவ்வேழு தமிழ்க்குறியீடுகளுக்கும் வடமொழிப் பெயர்களைப் புகுத்தி, இவ் வேழும் வடமொழியிலிருந்து வந்தன எனும் புரட்டை(இசை மோசடியை) ஏற்படுத்தினார். இந்தப் புரட்டுகளுக்கும் திருட்டுகளுக்கும் இடையே தான் தமிழிசை மெல்ல மெல்ல வளர்ந்தோங்கி வருகின்றது.

தமிழ்ப்பண்களில் பல வடமொழி பெயரால் அழைக்கப்படுவதை முன்னரே கண்டோம். பண்டை நாளில் தமிழ்ப்பண்கள் பலவும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனும் ஐந்திணைகளை ஒட்டியும் பருவங்களை ஒட்டியுமே உருவாக்கப் பெற்றன. இனி, பண்டைய நாளில் இன்றைய ராகங்கள் எவ்வாறு அழைக்கப் பெற்றன என்பதைக் கவனிப்போம்.
பண்டைய தனித்தமிழ்ப் பெயர் இன்றைய பெயர்
1. செம்பாலை அரிகாம்போதி (அரி+காம்+ஓதி)
2. படுமலைப்பாலை நடபைரவி
3. கோடிப்பாலை கரகரப்பிரியா
4. விளரிப்பாலை தோடி
5. செவ்வழிப்பாலை இருமத்திமத் தோடி
6. முல்லைத் தீம்பாணி (சாதாரி) மோகனம்
7. செந்துருத்தி மத்தியமாவதி
8. இந்தளம் இந்தோளம்
9. கொன்றையந் தீங்குழல்(கொல்லி) சுத்த சாவேரி
10. ஆம்பலந்தீங் குழல் சுத்த தன் யாசி
11. அரும்பாலை சங்கராபரணம்
12. மேற்செம்பாலை கல்யாணி

இவ்வாறு இன்றைய வடமொழிப் பெயர் கொண்ட தமிழ் ராகங் களை மீட்டெடுத்து தமிழில் இசைப் பயிற்சி மேற்கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை எனலாம். கிரேக்க கணக்கியல் மேதையான பித்தோ கரசு தமிழ்நாட்டிற்கு வந்து தமிழர் வகுத்த ஏழ்பெரும் பாலைகளை ஆய்ந்து தம் கிரேக்க நாட்டு இசையைத் திருத்தி அமைத்தார் என வரலாற்றுச் செய்திகள் கூறுகின் றன. இவர் தமிழரின் இடை முறைத்திரிபு இசைமரபு முறையினைப் பின்பற்றி அரும்பாலை எனும் சங்கராபரணத்தை (major diatonic scale) என்று தம் நாட்டில் வடிவமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் கணித உலகிற்கு அறிமுகப்படுத்தியதாகக் கூறப்படும் வட்டத்திற்குரிய (பை) என்னும் குறியீட்டின் அளவு தமிழரின் தமிழிசை கணக்கிலிருந்து பெறப்பட்டதேயாகும். நீர் நிறைந்த ஒரு குளத்தில், ஒரு கல்லை எடுத்துப் போட்டால் வட்டவட்டமாக நீர் அலை பரவுவதைக் காணலாம். இதே போல்தான் இசையிலும் ஒலி- வட்டமாக எழும்பும் எனத் தமிழிசை வல்லுனர்கள் கண்டறிந்துள்ளனர்.

இவ்வடிப்படையிலேயே வட்ட பாலைமுறை உருவாகியது. இவ்வட்டப் பாலை முறையில் 7 சுரங்களையும் 22 சுருதிகளாக அமைத்தனர் தமிழர். ஒரு வட்டத்தின் குறுக்களவுக்கும் சுற்றளவுக்கும் தொடர்புள்ளதாகையால் வடிவக்கணக்கிற்கு இம்முறை பெரிதும் பயன்பட்டது. இதனை 22/7 என்றே வகுத்து வைத்தனர். இதனையே பித்தோகரசு தம் கணக்கியல் கோட்பாடுகளுக்குப் பயன்படுத்தினார். மார்கிரேட் Rm the music of grient and accident எனும் நூலில்.

It is historical fact, however, that about 500 B.C. Pythagoras after his travels in India Systematized the primitive music of his times and gave it new vitality by standardizing its sound combinations into seven scales which were developed downwards, not up wards, in selections of the combinations and permutations of seven sounds out of the twelve semitones in an octave which have formed ever since the fundamental sound substance of European music. These seen scales are identical with seen of the Melakatas (scales) used in south Indian music, and it is note worthy that Strabo has written that Pythagoras was influenced by India in the reforms and developments he made in the music of his time என்று குறிப்பிடுகிறார்.

தமிழிசை அமைப்பு முறையைப் பின்பற்றியே தம் நாட்டு இசைக் கருவியான லயரில் ஏழோடு மேற்கொண்டு ஒரு நரம்பைக் கூட்டி எட்டு நரம்புகளாக அமைத்தார் பித்தோகரசு. இது கிரேக்கத்தில் செய்யப்பெற்ற புரட்சியாகவே கருதப்படுகிறது.

உலக மக்கள் பலரும் தமிழிசையைப் பின்பற்றியுள்ளனர் என்பதற்கு இது ஒரு சான்று. அத்தமிழிசையை அழியாமல் தலைமுறைதோறும் காக்க வேண்டியது மானமுள்ள தமிழர்களின் கடமையாகும். தமிழிசை இயக்கம் மீண்டும் வரலாறு படைக்கத் தமிழராகிய நாம் சமஸ்கிருத மொழித் தாக்கத்தை அகற்றுவோம்.

நன்றி : நக்கீரன் பொதுஅறிவு உலகம்.

No comments:

Post a Comment