Saturday, December 11, 2010
தாயின் மடி செல்ல தவமிருக்கிறேன் சிறையின் மடியில் – பேரறிவாளன்
“எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் இந்த சோப்பு கட்டிதான் பயன்படுத்துகிறேன்.” என்ற தொலைக்காட்சி விளம்பரத்தினைப் பார்க்கும் ஒவ்வொரு கணப்பொழுதிலும் “எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து நான் சிறைக்குள் நான் இருந்தேன்.” என வேடிக்கையாக நினைப்பதுண்டு.
ஆம்! தாயின் மடியிலிருந்து நேரே சிறையின் மடிக்குள் விழுந்தவன் நான். பிறந்து 19 ஆண்டு 10 திங்கள் கரம் பிடித்து நட்ந்தவன். அடுத்த 19 ஆண்டு 6 திங்களாக சிறைக்கம்பிகள் பற்றியபடி நகர்பவன். மாந்தர் உரிமை குறித்தும், மண்ணின் பெருமை குறித்தும் கருத்துகளை விதைத்தது, என் தாயின் மடி எனில், விதைத்ததை வளர்த்து, காத்த்து சிறையின் மடி.
மிக நீண்ட நெடுங்காலமாகவே ஒரு கொலையாளி என்பதாகவே சித்தரிக்கப்பட்டு, அக்கரையுள்ள சக்திகளால் பரப்புரை செய்யப்பட்ட எனது வாழ்வின் நெடுங்கதை, விரிப்பின் கொள்கைகளால் மட்டுமே நிரம்பி கிடக்கும். “மனிதனை நினை”என்பதையே தனது வாழ்வின் கொள்கையாக கொண்டுழைத்த மனித நேயர் அய்யா தந்தை பெரியாரையும் “அன்பின் வழியது உயர்நிலை” என்றுரைத்த உலகப் பொதுமறை தந்த பெருநாவலரையும் விழிகளாக்க் கொண்டு வழி நின்றவன்.
எனது நடுவ புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பின் போது, ஒரு நாள் எனது தந்தையின் மடல் வந்தது. அதில் எனது தந்தை, “புதல்வ, உன்னை விசாரணை அதிகாரிகள் அடிக்கிறபோது அவர்கள் அடிக்க வசதியாக உனது முதுகை வளைத்துக்கொடு, ஏனெனில் அவர்கள் நமது சூத்திர தமிழர்கள்” (தாக்கியோர்கள் சூத்திரர்கள் அல்ல என்பது வேறு செய்தி) எனக் குறிப்பிட்டுவிட்டு “இதைத்தான் அய்யா பெரியார் நமக்கு போதித்தார்” என முடித்திருந்தார்.
காலையில் அனுப்பிவிடுவோம் எனக்கூறிய பொய்யினை நம்பி, விசாரணைக்கு என தமது புதல்வனை வழியனுப்பிவைத்துவிட்டு, அவர்கள் அடிக்கிறபோது வசதியாக முதுகை வளைத்துக்கொடு எனக்கூறிய பெற்றோருக்குப் புதல்வனாக பிறந்த என்னைத்தான் கொலையாளியென, பயங்கரவாதியென சித்தரித்தனர். சிலவேளை வன்முறை நிறைந்த இவ்வுலக ஒழுங்கில் மாந்த நேயக் கொள்கையினைப் பற்றுறுதியோடு முன்னெடுப்போர்க்கு இதுதான் நிலையோ?
“அணுகுண்டு வைத்திருக்கும் அமெரிக்கா, துவக்கு வைத்திருப்பவனை பயங்கரவாதி என்றான்” என்பதாக உணர்ச்சி கவிஞரின் கவிதை ஒன்றை வாசித்தேன்.எனது கதையிலோ துவக்கும்கூட அல்ல தூரிகைதான் கிடந்தது, பின் எங்ஙனம் கொலையாளியானேன்? சிறை வாழ்வின் தனிமை இரவுகளில், இது குறித்து நிறையவே சிந்துத்துவிட்டேன், இவ்வுலகில் எவரெல்லாம் அன்பை, மனித நேயத்தை போதித்தார்களோ, அது சாக்ரடீசாகட்டும், ஏசுபிரானாகட்டும் அனைவரையும் பொய்குற்றம் சுமத்தி சட்டத்துணையோடு சாக்குழிக்கு அனுப்பியதே வரலாறாக நீண்டு கிடக்கிறது.
நான் சாதியால் அடையாளப்படுத்தப்பட்டவனல்ல, மதங்களின் பெயரால் மதிப்பிடப்படுபவனுமல்ல..குறைந்தளவு எந்த கட்சிக்குள்ளும் கட்டுண்டு கிடந்தவனுமல்ல. அறிவு ஆய்வன் தந்தை பெரியார் ஊட்டிய மாந்த நேயப் பற்றுடன் வளர்ந்த குற்றவாளி. அதனால்தான் படமாக மட்டுமே பெரியாரைப் போற்றும் இம்மண்ணில், பாடமாக கொண்டு வாழும் என் போன்றோர் சிறையின் மடியில் சிக்குண்டு கிடக்கும் அவலம் நேர்கிறது நீள்கிறது, மொத்த இனமே சிதையின் மடியில் மீளாத் துயரில் மண்ணாகிக் கிடக்கிறபோது. சிறையின் மடிக்குள் சிக்குண்டு கிடப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.
நான் விடுக்கும் ஒவ்வொரு வேண்டுகோளின் முடிவிலும், மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியின் இறுதியிலும் “விடுதலை” என்ற அதிசயம் நிகழ்ந்துவிடாதா என்ற எனது எதிர்ப்பார்ப்பிற்கு காரணம், உயிர்பிழைப்பதில் உள்ள அக்கறையினால் அல்ல உண்மை வென்றுவிட வேண்டுமே என்ற ஊந்துதலால்.
ஏனெனில், “உறங்குவது போலும் சாக்காடு” என்ற வள்ளுவ கிழவனின் வாக்கினை வாழ்க்கையாக்கிக் கொண்டவனென்பதால், வாழ்வையும் சாவையும் சமமாக நேசிக்க கற்று தந்திருக்கிறது சிறையின் மடி. எனது வழக்கில் முடிவற்று நீண்டு செல்லும் தெளிவற்ற கேள்விகளுக்கு, நான் வாழும் சிறையும் வசிக்கும் என் அறையும் வாய் திறந்து ஒரு நாள் விடைகள் பகரும் காலம் கடந்தேனும் உண்மை ஒரு நாள் வெல்லும் என்ற அந்த நம்பிக்கையோடுதான் மீண்டும் என் தாய் மடி செல்ல தவமிருக்கிறேன் சிறையின் மடியில்.
நன்றி: தமிழ்முழக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment