Labels

Friday, December 31, 2010

தமிழர்களுக்கென்று உலகில் ஒரு நாடு தேவை என்ற உணர்வைத்தான் சிங்கள அரசின் செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன - கி. வீரமணி அறிக்கை



தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது; சிங்கள மொழியில்தான் பாடவேண்டும் என்ற நிலையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நிலையில், அதனை எதிர்த்த தமிழின அதிகாரி மா. சிவலிங்கம் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். போர் ஓய்ந்து தமிழர்கள் மீதான அழிவு வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி, ஈழத்தில் தமிழர்கள் உரிமை மீட்கப்பட, உலக அளவில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு தேவை என்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீக் வான்யூ - இலங்கை அதிபர் ராஜபக்சே பற்றி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பது அன்றாடம் இலங்கைத் தீவில் தமிழர் களுக்கு எதிராக நடைபெற்றுவரும் கொடுமைகள் நிரூபித்து வருகின்றன.


சிங்கள இனவெறி இன்னும் அடங்கவில்லை


லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்றொழிக் கப்பட்டும், இன்னும் சிங்கள வெறியர்களின் தமிழர் களுக்கு எதிரான படுகொலைப் பசியின் வெறி இன்னும் தீரவில்லை என்றே தெரிகிறது.
இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது; சிங்கள மொழியில் மட்டுமேதான் அது இருக்கவேண்டும் என்ற ஒரு நிலையை சிங்கள அரசு மேற்கொண்டது. கடும் எதிர்ப்பு ஈழத் தமிழர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் வெடித்தெழுந்தது. இந்த நிலையில் அவ்வாறு முடிவெடுக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர் சமாதானம் கூறினர்.
ஆனாலும், நடைமுறையில் சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது.

தமிழின அதிகாரி படுகொலை

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த கல்வித் துறை துணை இயக்குநர் மா. சிவலிங்கம் - சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் கடந்த ஞாயிறன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தமிழர்களின் ரத்தம் மட்டுமல்ல; மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரின் ரத்தமும் உறைகிறது.
தமிழர்கள் எந்த வகையிலும் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடாது; அப்படிக் குரல் கொடுத்தால் இந்தச் சிவலிங்கத்துக்கு ஏற்பட்ட கெதிதான் அவர்களுக்கும் என்று எச்சரிக்கின்ற அபாய அறிவிப்புதான் இது.

விபீஷணன் பிறந்த மண்ணில்...

சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட துரோகிகளான கருணா அல்லது டக்ளஸ் தேவானந்தாவின் ஆள்கள் தான் இதனைச் செய்திருக்கவேண்டும். அல்லது சிங்கள இராணுவத்தினரேகூட மாற்றுடையில் இந்தக் கேவல மான படுகொலையைச் செய்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.

அந்த இலங்கைத் தீவிலேதானே இராவணனோடு உடன் பிறந்து, காட்டிக் கொடுத்து ஆழ்வார் பட்டம் பெற்ற விபீஷணர்கள் தோன்றினார்கள் - அந்தக் கதை இன்னும் தொடர்வது வெட்கக்கேடு!

துரோகிகள் செய்திருந்தாலும் சரி, இராணுவத்தினரே செய்திருந்தாலும் சரி, அதற்குப் பின்புலமாகவும், பலமாக வும் இருந்து வருவது - இலங்கையின் சிங்கள அரசு - ராஜபக்சே என்னும் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்.

உலகம் முழுவதும் கடுமையான கண்டனத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகியும்கூட, இந்த மனிதன் திருந்துவ தாகக் காணோம்.

லண்டனில் அவமானப்பட்டும் புத்தி வரவில்லையே!

சில நாள்களுக்குமுன் லண்டன் சென்று - அங்குள்ள தமிழர்களால் அவமானப்படுத்தப்பட்டு நாடு திரும்பிய நிலையில்கூட புத்தி கொள்முதல் பெறவில்லை.
போர்க் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டாலொழிய இதற் கொரு தீர்வைக் காணமுடியாது.

இதில் மிகவும் வருத்தப்படவேண்டியது - இந்த ஹிட்லரை போர்க் குற்றவாளியாக அறிவிப்பதற்குத் தடையாக இருப்பது இந்திய அரசுதான். இத்தகைய இந்திய அரசின் நடவடிக்கை மூலம் உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையில் கறை படிந்துவிட்டது. என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் 2011 ஆம் ஆண்டில் இலங்கை, இந்தியக் கடற்படையினர் இணைந்து இலங்கைக் கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கை களை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்!

இந்திய அரசின் வருந்தத்தக்க செயல்பாடு!

இந்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் பல வகைகளிலும் வேண்டுகோள் விடுத்தும், உலகத் தமிழர்கள் வலியுறுத்தியும், மனித உரிமை அமைப்புகள் எடுத்துச் சொல்லியும் இந்தியா ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற ரீதியில் செயல்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

பன்னாட்டுப் பொது மன்னிப்புப் பேரவையும் (International Amnesty), ஆசிய இயக்குநர் சாம் ஜெர்பி விடுதலைப் புலிகள் அழிப்பு என்ற பெயரில் பெரும் அளவுக்குப் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிந்திருந்தும்கூட, இந்தியா இலங்கையை ஆதரித்தது என்று கூறவில்லையா?

தமிழர் இறையாண்மை மாநாடு

சென்னையை அடுத்த மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற தமிழர் இறையாண்மை மாநாட்டில் (26.12.2010) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிநாதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இவற்றின் மூலம் பெறப்படும் உண்மையாகும்.

உலகில் தமிழனுக்கென்று ஒரு நாடு இருந்தால், ஈழத்தில் இவ்வளவுப் பெரிய கொடுமை தமிழர்களுக்கு எதிராக நடந்திருக்க வாய்ப்புண்டா?

இலங்கை சிங்கள அரசும், இந்திய அரசும் நடந்து கொண்டுவரும் போக்கு - இதுபற்றிய உரத்த சிந்தனையை உலகத் தமிழின மக்கள் மத்தியில் ஏற்படுத்தித்தான் தீரும் என்று சுட்டிக்காட்டுவது நமது முக்கிய கடமையாகும்.

விடுதலை பிறக்கும் இடம்!

கொடுமைகளின் மத்தியிலும், உரிமைகள் பறிப்பின் இடத்திலிருந்தும்தானே உரிமை முழக்கம் என்ற விடுதலைக் குழந்தை பிறக்கிறது. வரலாறு கற்பிக்கும் இந்தப் பாடத்தை அறிந்திராவிட்டால், அதற்கு உலகத் தமிழர்கள் பொறுப்பல்ல!





தலைவர்,
திராவிடர் கழகம்.

No comments:

Post a Comment