Sunday, December 19, 2010
உறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்!
உறைபனியை உருகவைத்த
வேட்கைத் தீ - பௌத்தத்தின்
புனிதம் மறந்த ராஜபக்சேவை - அச்சத்தில்
வியர்க்க வைத்த வீரத் தீ...!
முள்ளிவாய்க்காலில் -
எக்காளமிட்டவர்களை - கீத்துரு
விமான நிலைய புறக்கடை வழி
ஓடச் செய்த வீர பிரபாகரன் இனத் தீ...!
வீரத் தமிழச்சியர்... எங்கள் தீரத் தமிழச்சியர்...
இசைப்பிரியாவினர் வெற்றுடம்பை
கண்ட பின்பும் வெறுமனே இருக்க - இது
இற்றுப்போன இனமல்லவே ;
பற்றி விட்டது அவள் கொண்ட மானத் தீ...!
வீழ்ந்து விட்டான் வீர தீரன் - இனி
வீழ்ந்தது ஈழம் என்று -
வெறித் தம்பட்டம் கொட்டியதே-
சிங்களக் கூட்டம்...!
என்றும் வீழ்ந்திடக் கூடுமோ
உயிர் பாய்ச்சி வளர்த்த ஈழம்;
வீழவில்லை வீழ்வதில்லை
வீழ்ந்தது என்றால் அது அறிவீனம்...!
ஒரு பிரபாகரன் விதைத்ததில் - இன்று
ஓராயிரம்... ஒரு லட்சம்...
பல கோடி பிரபாகரன்கள் -
வீறுகொண்டு முளைத்திட்டனர் காண்...!
புறப்பட்டார் தன்மானத் தமிழர் - இனி
ஈழக் கொடி வெற்றி நாட்டும்...!
புற்றுபோல் வளர்ந்துவிட்ட
புற்றீசல் சிங்கள வாழ்க்கை -
சிறு நாள் வாழ்க்கை - அது
போய் ஒழியும் காலம் விரைவில்
எண்ணிக் கொள்கவே...!
இங்கிலாந்தில் பற்றி எரிந்தது போல்
இங்கும் கொழுந்துவிட்டிருந்தால் -
என்றோ கருகியிருக்கும்
ஈன இனவெறியர் கொட்டம் ;
அந்தச் சாம்பலைக் -
கரைத்து அன்றே பூத்திருக்கும்
ஈழத் தமிழர் சட்டம்...!
ஆயிரந்தான் இருந்தாலும்
இலங்கையில் மடியும் தமிழன் -
மாற்றான் தாய்ப்பிள்ளை என்று - ஒருவேளை
மடமையர் இங்கு நினைத்ததாலோ!?
பூக்காடான முள்ளிவாய்க்கால் எங்கும் - பூத்ததே
பூவுடல்களின் சாக்காடு ;
கொள்ளை உயிர் போனாலும்
விலைபோகா மானத்தை -
விடநேர்ந்த உடன்பிறப்புக்கள் - தவித்தன
துடித்தன தளிர்நெஞ்சங்கள் அங்கே...!
லட்சம் சொச்சம் உயிரிழந்தப் பின்னும்
மிச்சம் - அந்தோ !
அனாதையாய் தவிக்கிறதே;
அட...! மதிகெட்ட புத்தி இதை
வெற்றி என்று கதைக்கிறதே !?
இவர்களுக்கு -
துக்கப்படத்தான் நேரமில்லை - இதில்
வெட்கப்படவுமா நேரவில்லை... ?
அயலகத் தமிழா !
உம்மை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்;
வாழும் இடம் தூரப்பட்டாலும்
எம் சிந்தைக்கு அருகில் வந்து - நீவீர்
உறைக்கச் செய்த - எம்
உள்ளுணர்வு கொண்டு உம்மை வாழ்த்துகிறேன்...!
மக்களால் மக்களுக்காக
மக்களாட்சி நடக்கும் நாட்டில் நீ இருக்கிறாய்;
என் செய்வேன் - நானோ
அரசியலால் அரசியலுக்காக
அரசியலாட்சி ஆளும் நாட்டில் அல்லவோ இருக்கிறேன்...!
இத்தனை நாள் உறைந்து கிடந்த - சில
இதயங்களும் உம் வேகத் தீ கண்டு
இன்று உயிர்ப்பு கொண்டன...!
இனி...
ஈழம் மலரும்... ஈழம் மலரும்... ஈழம் வளரும் - இதை
இறவாத பிரபாகரன் காணக் கூடும்...!
:~ நா. இதயா, ஏனாதி...
நன்றி : நக்கீரன் நந்தவனம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment