Saturday, December 11, 2010
கோவையில் ஈழ ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்: தப்பியோடிய இலங்கை அமைச்சர்
கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையைச் சேர்ந்த எம்.பி., காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை அமைச்சர் வருவதை அறிந்த தமிழின உணர்வாளர்கள் அதிருப்தி அடைந்தனர். மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், இலங்கை எம்பி காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக இருந்தனர்.
கோவையில் பெருமளவில் திரண்டிருந்த பெரியார் திராவிட கழகத்தினர், ராஜபக்சே கூட்டாளியே திரும்பி போ, தமிழர்களை கொன்று குவித்த சிங்களனே திரும்பி போ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்திக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தனர்.
பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனிடம் வந்த போலீசார், கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை என்று சொன்னதின் பேரில், ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர்.
திரும்பவும் கொடிசியா கண்காட்சியில் இலங்கை அமைச்சர் காசிம் பைசல், ரிஷாத் பத்யூதின் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர் என்ற தகவலை தெரிந்துகொண்டு கொடிசியா முன்பு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் திரண்டனர். வெளியேற்று வெளியேற்று சிங்கள எம்பியை வெளியேற்று என்ற கோஷத்தோடு உள்ளே நுழைந்த அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தன் வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இலங்கை எம்.பி., காசிம் பைசல், கண்காட்சியில் கலந்து கொள்ளாமல் கொடிசியா வாளத்தின் பின் பக்கம் வழியாக, கோவை விமான நிலைத்துக்குச் சென்று இலங்கை திரும்பினார். எதிர்ப்பு காரணமாக அமைச்சர் ரிஷாத் பத்யூதின் கோவை பயணத்தை முன்கூட்டியே ரத்து செய்தார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனை சந்தித்து, இலங்கை அமைச்சர் வருவதற்கு அதிருப்தி தெரிவித்து நாங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்வில்லை என்று கூறிவிட்டு சென்றனர்.
போலீசார் தடையை மீறி இலங்கை அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிசியா அரங்கில் உள்ளே நுழைய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment