Labels

Tuesday, February 8, 2011

மாவீரர் நாள் - எப்போது கேட்போம் அந்தக் குரலை!



நவம்பர் 27 - அன்றைய தினம் அந்தப் போராளித் தலைவனின் உரையைக் கேட்க உலகமே காத்துக் கிடக்கும். உலகின் அத்தனை ஊடகங்களும் தென் திசையை நோக்கி அலைவரிசை அதிர்வெண்ணை மாற்றிக் கொள்ளும். தமிழ் ஈழத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் உரைக்காகத்தான் இத்தனை காத்திருப் புகளும். ஆனால் கடந்த ஆண்டு தமிழீழத் தலைவரின் உரை இல்லாமலே கடந்து சென்று விட்டது மாவீரர் நாள்.

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27 அன்று தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரனால் நிகழ்த்தப்பெறும் மாவீரர் நாள் உரை என்பது வெறும் வழமையான உரையன்று. ஈழ விடுதலைப் போரில் இந்தியா உட்பட பிற உலக நாடுகளின் போக்குகள் ஏற்படுத்தி வருகின்ற தாக்கங்கள் குறித்த அரசியல் விமர்சனப் பார்வையுடனும், சிங்களப் பேரினவாத அரசின் இனவெறிப் போக்கைக் கண்டித்தும், உலகம் முழுவதும் பரவியுள்ள ஈழத் தமிழர்களின் மனஉறுதியைப் புடம் போடுவது, விடுதலைப்புலிகளின் படைபலம், அரசியல் செயல்பாடுகள், பகையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் பற்றியும், தாய்த்தமிழகத்தின் உணர்வெழுச்சிகளுக்கு நன்றி சொல்வது ஆகியவற்றை உள்ளடக்கிய செறிவான உரையாகவும் மாவீரர் நாள் உரை அமைந்திருக்கும்.

குறிப்பாக, புலிகளின் அடுத்த கட்டப் போர் நடிவடிக்கை என்னவாக இருக்கும் என்பதைத் தலைவர் பிரபாகரன் தன்னுடைய பேச்சில் கோடிட்டுக்காட்டுவார் என்பதே பெரும் எதிர்பார்ப்புடன் மாவீரர் நாள் உரையை உலக நாடுகள் கவனிக்கக் காரணம்.

விதைக்கப்பட்ட போராளிகளின் குடும்பத்தினர் வீரவணக்கம் செலுத்தும் மாவீரர்துயிலும் இடம் இன்று ராஜபக்சேயின் இராணுவத்தினால் சிதைக்கப்பட்டாலும், விதைக்கப்பட்ட விதைகளின் வீரியம் என்றைக்கும் குறைந்துவிடாது. அந்த மாவீரர்களின் உயிர்க்கொடை வீண்போகாது. உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கு புது நம்பிக்கையை, ஊக்கத்தைத் தருகின்ற நாள் நவம்பர் 27.

முப்படையுடன் தற்கொடைப் படையையும் கொண்டு விளங்கிய தமிழ் ஈழ அரசு மீண்டும் அமையும் என்ற நம்பிக்கை உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காமல் இருக்கிறது.

“ ... நாம் விடுதலையில் பற்றுக்கொண்டு ஒன்றுபட்டு உறுதிகொண்டு நிற்கின்றோம். இன்றைய பின்னடைவுகளை நாளைய வெற்றிகளாக மாற்றிவிடத் திடசங்கற்பம் பூண்டு நிற்கின்றோம். இன்று இரத்தம் வழிந்தோடும் எமது மண், நாளை ஒரு சுதந்திர பூமியாக மாறும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு ”- தமிழீழத் தேசிய தலைவரின் நம்பிக்கை வரிகளை நெஞ்சில் ஏந்தி காத்திருக்கிறோம் நாமும்.

தாயகப் போரினில்

சாவினைத் தழுவிய

சந்தனப் பேழைகளே!

உங்களுக்கு எமது வீரவணக்கங்கள்

- இரா.உமா

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர் .

No comments:

Post a Comment