Sunday, February 6, 2011
நாடு கடந்த தமிழீழ அரசு புலிகளுக்கு எதிரானதா…? – பேராசிரியர் சரஸ்வதி பரபரப்பு பேட்டி
இலங்கைத் தமிழர் பிரச்னையில் ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ என்ற ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ருத்ரகுமாரன். இந்த அரசின் பிரதமரும் அவர்தான். இதில் ஏற்பட்ட குழப்பங்கள் இன்னும் குறையாமல் இருக்க, தங்கள் அரசின் இந்தியாவின் எம்.பி.க்களாக நாடு கடந்த தமிழீழ அரசு 5 பேரைத் தேர்ந்தெடுக்க உள்ளது. அதில் முதல் எம்.பி.யாக அறிவிக்கப்பட இருப்பவர் பேராசிரியை சரஸ்வதி. இவர் ஏற்கெனவே தமிழீழப் பிரச்னைக்காக, 14 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படு த்தியவர்.
ஜெயலலிதா நேரடியாக அறிக்கை விட்ட பிறகுதான் அந்த உண்ணாவிரத போராட்டத்தைக் கைவிட்டார் சரஸ்வதி. எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட சரஸ்வதியை நேரில் சந்தித்துப் பேசினோம்.
‘‘ஒரு மிகப் பெரிய இனம் இன்று முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கிறது. ராணுவ ரீதியாக ஒடுக்கப்பட்டதன் மூலம் தமிழீழத்தின் கோரிக்கையை விட்டுவிடுவார்கள் என்று இலங்கை அரசு நினைத்திருக்கலாம்
ராணுவ ரீதியான போராட்டத்தில் பின்னடைவுதான் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே தான் நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் மூலம் தமிழீழத்திற்கான முக்கியத்து வத்தை உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மூலம் கொண்டு செல்ல முடிவெடுத்து இருக்கிறோம்.
85 நாடுகளில் தேர்தல் மூலமாக நாடு கடந்த தமிழீழ அரசின் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் தேர்தல் நடத்த முடியாத சூழல் இருப்பதால் நேரடியாக என்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
அதேபோல், பலரும் இந்த அமைப்பை விடுதலைப் புலிகளுக்கு எதிரான அமைப்பு என்று கூறி வருகின்றனர். உலக அளவில் அரசியல் ரீதியான ஒரு கட்டமைப்பு தமிழீழத்திற்குத் தேவை என்று சொன்ன தலைவர் பிரபாகரனின் கருத்திற்கேற்பவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
வருகிற 4-ம் தேதி இலங்கையின் சுதந்திர தினம் என்பதால் நாடு கடந்த தமிழீழ அரசின் எம்.பி.க்களின் அறிவிப்பை அந்தந்த நாடுகளில் வெளியிட்டு தமிழீழத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கருத்தரங்கம் மற்றும் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
சென்னையிலும் நாடு கடந்த தமிழீழ அரசு தோழமை மையம் சார்பாக கருத்தரங்கு நடைபெற இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியல் ரீதியான கருத்துகளை தமிழீழத்தின் முக்கியத்துவத்தை மக்களிடத்தில் பிரசாரமாக செய்ய இருக்கிறோம். தமிழகம்மட்டுமில்லாமல் இந்தியாவில்உள்ள மற்ற மாநிலங்களிலும் இந்தக் கருத்தைப் பரப்ப முடிவு செய்துள்ளோம்.
தமிழீழத்தின் அவசியத்தை இதுவரையில் உலக நாடுகள் பெரிதும் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியல் கருத்தை அனைத்து நாடுகளிலும் பரப்பி தமிழீழத்தின் முக்கியத்துவத்தை அந்த நாடுகள் ஏற்கும் வகையில் எங்களின் செயல்பாடுகள் இருக்கும்’’ என்று முடித்துக்கொண்டார் பேராசிரியை சரஸ்வதி.
படம்: ஞானமணி
ப.ரஜினிகாந்த்
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment