Sunday, February 6, 2011
இந்தியாவில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு! நியமன எம்.பி. பேராசிரியர் சரசுவதி!
இலங்கை மண்ணில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் முற்றிலுமாகத்தோற்கடிக்கப்பட்ட பின்னரும், ‘புலிகள் ஆபத்து’ என அலறுகிறது சிங்கள அரசு. அதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று, ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’!
அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய நாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டுள்ள இந்த அமைப்பு, இந்தியாவிலும் செயல்படும் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான இந்தியாவின் முதல் எம்.பி-யாக மனித உரிமை ஆர்வலரான பேராசிரியர் சரசுவதி நியமிக்கப்பட இருப்பதாகத் தகவல்.
மனித உரிமைகளுக்கான அமைப்புகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிரமாகச் செயல்படும் இவர், ஈழத் தமிழர் படுகொலை உச்சகட்டத்தில் நிகழ்ந்த நேரத்தில், அதைத் தடுக்கக் கோரி 13 நாள்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். உயிருக்குப் போராடும் அளவுக்கு உடல்நிலை மோசமாகி, கட்டாய சிகிச்சையில் உயிர் மீண்டவர். இவருடன் பல்வேறு தமிழின அமைப்புகளும் இணைந்து, ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் தோழமை மையம்’ என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி உள்ளனர்.
சரசுவதியைச் சந்தித்துப் பேசினோம்.
”நாடு கடந்த தமிழ் ஈழ அரசில் உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்?”
”ஈழ விடுதலைக்கான ராணுவப் போராட்டம், தற்காலிகப் பின்னடைவு அடைந்த நிலையில்… தமிழீழ லட்சியத்துக்காக, உலக அளவில் அரசியல் ரீதியில் செயல்பட ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு’ உருவாக்கப்பட்டது. ஈழத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் பல நாடுகளில் பகிரங்கமாகத் தேர்தல் நடத்தி, இதன் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். அந்தந்த நாடுகளின் அரசுகள் ஒப்புதல் இல்லாமல் இது சாத்தியம் இல்லையே! நாங்களும், தமிழ் ஈழம் அமைவதற்கு ஆதரவாக ஜனநாயகரீதியில் குரல் கொடுப்பதற்காகவே, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கான தோழமை மையத்தைத் தொடங்கி உள்ளோம். இதில், பெரியார் தி.க., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சேவ் தமிழ், மே 17 இயக்கம் உள்பட 20 அமைப்புகள் இடம்பெற்றுள்ளன. கவிஞர் இன்குலாப், டி.எஸ்.எஸ்.மணி போன்ற செயற்பாட்டாளர்களும் இணைந்து செயல்பட முன்வந்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு ஆதரவு சக்திகளுடன் இணைந்து கருத்துப் பரப்பல் செய்வதுதான் எங்களின் வேலை.”
”இந்தியாவில் விடுதலைப் புலிகளுக்குத் தடை இருக்கும் நிலையில் உங்களின் ஈழ ஆதரவு செயல்பாடுகளுக்குப் பிரச்னை வராதா?”
”ஈழத்தில் இனப் படுகொலையால், உறவுகளை இழந்து நொறுங்கிக்கிடக்கும் மக்கள் அன்றாட வாழ்க்கை நடத்துவதே பெரும்பாடாக இருக்கிறது. மூன்று வேளை உணவு கிடைக்காமல், வசிப்பதற்கு வீடு இல்லாமல், ஊனமடைந்து, சிகிச்சை பெற முடியாமல் நம் சகோதரர்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள். இந்த நிலையில் ஈழத்தை அடைவதற்கான முயற்சியில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்குத்தான் கடமை இருக்கிறது.
நாடே இல்லாமல் இருந்த யூதர்கள், பல நாடுகளில் பரவியிருந்தும் தங்களுக்காக இஸ்ரேல் என்ற தனி நாட்டை எப்படி உருவாக்கினார்களோ, அந்த வழியில்தான் நாடு கடந்த தமிழ் ஈழ அரசும் செயல்படுகிறது. சூடான் நாட்டில் இருந்து அண்மையில் வாக்கெடுப்பு நடத்திப் பிரிந்துள்ள தெற்கு சூடான் அரசு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசை அங்கீகாரம் செய்துள்ளது. இது உலக அளவில் கிடைத்த முதல் வெற்றி. படிப்படியாக ஈழத்துக்கான நியாயத்தை உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்வதுதான் எங்கள் பணி.
இந்தியாவில் தமிழ் ஈழ அரசை ஆதரித்துப் பேசுவதும் அதற்கான நியாயங்களை மக்களிடம் எடுத்துச்செல்வதும் முழுக்கவும் ஜனநாயகச் செயல்பாடுதான். இது எந்த வகையிலும் இந்தியாவின் இறையாண்மைக்கோ, சட்ட திட்டங்களுக்கோ எதிரானது அல்ல. சொல்லப்போனால், அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படையான பேச்சுரிமை, கருத்துரிமை, அரசியல் உரிமைப்படி இது சரியானதே.”
”ஈழம் பெறுவது ஒரு புறம்… இலங்கை ராணுவத் தாக்குதலால் கண், கை, கால் இழந்து கதறும் ஈழத் தமிழர்களுக்கு, இப்போது நாடு கடந்த தமிழ் ஈழ அரசால் எப்படி உதவ முடியும் என நினைக்கிறீர்கள்?”
”இதைக் கவனத்தில்கொண்டுதான் புலம் பெயர் தமிழ் மக்கள், அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் செயல்பாடுகள் மூலம் சர்வதேச அளவில் நெருக்கடி தருவதன் மூலம், அடிப்படை மனிதாபிமான உதவிகளைச் செய்யவைக்க இலங்கை அரசை நிர்பந்தம் செய்ய முடியும். மேலும், உடனடியாக, அகதிகளுக்கான பொருளாதார, கல்வி மேம்பாடு போன்ற உதவிகளைச் செய்யவும் நாடு கடந்த அரசு திட்டமிட்டுள்ளது.”
”இலங்கை அரசுடன் சேர்ந்துவிட்டதாகக் கருதப்படும் கே.பி-யின் நீர்டோ அமைப்பினரும் நாடு கடந்த தமிழ் ஈழ அரசில் பிரதிநிதிகளாக இருப்பது முரண்பாடாக இருக்கிறதே?”
”நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் உருவாக்கத்தில் கே.பி-யின் பங்கு இருந்தது உண்மைதான். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, அவருடன் எந்தத் தொடர்பும் இல்லை என நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. எனவே, அரசின் பிடிக்குள் போய்விட்ட கே.பி. போன்ற தனி மனிதர்களைப்பற்றிப் பெரிதாகப் பேசவேண்டியது இல்லை. மற்றபடி யாராக இருந்தாலும் செயல்பாட்டைவைத்தே அவர்களைப்பற்றி தீர்மானிக்க முடியும். என்னைப் பொறுத்த வரை, தமிழீழத்தை நோக்கிய அரசியல் முயற்சிகளை வெற்றி பெறவைப்பதில் கவனம் செலுத்துவதுதான் உணர்வாளர்களின் இப்போதைய கடமையாக இருக்க முடியும் என நினைக்கிறேன்!”
- இரா. தமிழ்க்கனல்
படம்: வி.செந்தில்குமார்
நன்றி: ஜூனியர் விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment