Labels

Saturday, February 12, 2011

இந்தியாவை ‘நெருங்கும்’ உருத்திரகுமாரன்! - பின்னணி என்ன?





ஈழத் தமிழர்கள் முள்வேலி முகாம்களுக்குள் இன்னும் வாடிக்கொண்டிருக்கும் நிலையில், பிப்ரவரி 4&ம் தேதி சுதந்திர தினத்தைக் கொண்டாடியது ஒன்றுபட்ட(!) இலங்கை.

அதேநாள், சென்னையில் ‘நாடு கடந்த தமிழீழ அரசு & ஏன்?’ என்கிற கேள்வியுடன் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது ‘நாடு கடந்த தமிழீழ அரசின் தோழமை மையம்’.

ஈழப்போருக்குப் பின்னர் புலிகள் இயக்கம் பின்னடைவை சந்தித்த நிலையில், தனி ஈழத்துக்காக புலம்பெயர் தமிழர்கள் கையிலெடுத்த உலகளாவிய ஜனநாயக போராட்ட ஆயுதம்தான்... ‘நாடு கடந்த தமிழீழ அரசு’. அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு, தமிழர்கள் வாழும் 86 நாடுகளில் தேர்தல்களையும் நடத்தி முடித்து, நாடு கடந்த தமிழீழ அரசை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நாடு கடந்த தமிழீழ அரசின் நியமன எம்.பி.யாக தேர்ந்தெடுக்-கப்பட்டிருக்கும் பேராசிரியர் சரசுவதி தலைமையில் சென்னையில் நடந்தது இந்தக் கருத்தரங்கு.

கொளத்தூர் மணி, தியாகு, மணிவண்ணன் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் உரையாற்றிய இந்த கருத்தரங்குக்கு திரண்டிருந்த உணர்வு ரீதியான ஆர்வலர்களோடு, உளவு ரீதியான ஆர்வலர்களும் வந்திருந்தனர்.

கருத்தரங்கத்துக்கு தலைமை வகித்துப் பேசிய பேராசியர் சரசுவதி, ‘‘அந்தந்த நாடுகளின் சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஈழ மக்கள் மட்டுமின்றி, இந்தியத் தமிழர்களும் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்தல் முடிந்ததும் அனைத்துப் பிரதிநிதிகளும் அமெரிக்காவில் ஒன்றுகூடி, தமிழர்களின் பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள். இந்த அரசு, உலகத் தமிழர்-களுக்கான உரிமையை அரசியல்ரீதியாக பெற்றுத் தரும்’’ என்று நாடு கடந்த அரசு பற்றி விளக்கினார். அவரைத் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் தியாகு பேசினார். அவர் பேசி முடித்ததும் விளக்குகள் அணைக்கப்பட்டன.

இருள் சூழ்ந்த நேரத்தில், உளவுத்துறையின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, திடீரென அரங்கத்-துக்குள் பிரவேசித்தார் (வீடியோ கான்பரன்ஸிங் முறையில்) நாடு கடந்த தமிழீழ அரசின் முதன்மை அமைச்சர் உருத்திரகுமாரன்.

முத்துக்குமாருக்கு வீரவணக்கம் தெரிவித்துவிட்டு, தன்னுடைய பேச்சைத் தொடங்கிய உருத்திரகுமாரன், ‘‘தற்போது பிறந்திருக்கும் நாடு கடந்த ஈழ அரசாங்கம், ஈழத்தின் குழந்தை மட்டுமல்ல. தமிழக மக்களின், உலகத் தமிழ் மக்களின் குழந்தை. ஈழ மக்களைக் கொன்று குவித்த சிங்களப் பேரினவாதம், தமிழக மீனவர்கள் மீதும் தன்னுடைய கொடூர பற்களை பதித்து வருகிறது. இது தற்செயலான நிகழ்வு அல்ல. இதன் பின்னணியில் தமிழர்களுக்கு எதிரான இனவாதமும், இந்திய எதிர்ப்பும் உள்ளது’’ என்று ஆரம்பத்திலேயே தன் பேச்சை கவனிக்க வைத்த உருத்திரகுமாரன், தொடர்ந்து பேசுகையில்...

‘‘ஈழ மக்களை, இந்திய விரிவாக்கத்தின் குறியீடாகத்தான் இலங்கை அரசு கருதுகிறது. தமிழ்நாட்டின் ஊடாகத்தான் சிங்கள மண்ணின் மீது இந்தியப் படையெடுப்பு நடந்ததாக நினைக்கும் சிங்களம், இந்தியாவைத் தன்னுடைய எதிரியாகவே நினைக்கிறது.

தமிழர்கள் என்கிற போர்வையில் இலங்கைக்குள் இந்தியா ஆதிக்கம் செலுத்துவதை அது விரும்பவில்லை. இந்தியாவின் பிடியிலிருந்து இலங்கையை விடுவிக்கவேண்டும் என்பதே ராஜபக்ஷேவின் லட்சியம். புத்தமத பின்னணி கொண்ட சீனா, தனக்கு பாதுகாப்பாக இருக்குமென்று, அவர் கருதுகிறார். ஆனால், சீனாவுடனான இலங்கையின் நெருக்கம், இந்தியாவுக்கே ஆபத்தாக அமையும் என்பதை இந்திய ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ளவே இல்லை. தற்போது முடிந்துள்ள போர்கூட, தமிழருக்கும் இந்தியாவுக்கும் எதிரான போர்தான். இதுதான் உண்மை.

உலகில், தமிழர்களுக்கு எங்கே இன்னல் ஏற்பட்டாலும், ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ போராடும். சர்வதேச நியமனங்களுக்கு உட்பட்டு உரிமைகளை மீட்டெடுப்போம். அந்த வகையில், தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அனைத்துலகின் கவனத்துக்கு கொண்டுச் செல்வோம். ‘போராட்ட வடிவம் மாறினாலும், லட்சியம் மாறாது’ என்ற தேசியத் தலைவரின்(பிரபாகரன்) வாக்குக்கு இணங்க, புதிய பயணத்தை தொடங்குவோம்’’ என்று விரிவாகப் பேசி முடித்தார். உருத்திரகுமாரனின் பேச்சில் இந்தியா பற்றியான அக்கறை தொனிப்பதைக் கேட்டு, பலரும் அரங்கில் வியப்படைய... அடுத்துப் பேசிய கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சி.ராஜன், வெளிப்படையாகவே அதை மேடையில் கேட்டுவிட்டார். ‘‘தமிழர்களுக்கு எதிரான ஈழப் போரை முன்னின்று நடத்தியதே இந்தியாதான். அப்படியிருக்க, இந்தியாவின் பாதுகாப்புக் குறித்து உருத்திரகுமாரன் கவலைப்படுவதுபோல் தெரிகிறது. எனவே, நாடு கடந்த தமிழீழ அரசுக்கு, இந்திய அரசோடு உள்ள தொடர்பு குறித்து அவர் விளக்கவேண்டும்’’ என்று சலசலப்பைக் கிளப்பினார்.

இதையடுத்துப் பேசிய பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, ‘‘சிங்களப் பேரினவாதம், தங்களுடைய ராஜதந்திர நடவடிக்கைகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது. ஈழத்துக்கு எதிராக இருந்த வெனிசுலா நாடு, ஒரு கட்டத்தில் தன்னுடைய மனித உரிமை பார்வையை மாற்றி, ஈழத்துக்கு ஆதரவளிக்க முற்படுகிறது என்ற தகவல் கிடைத்ததுமே... கியூபா நாட்டு இலங்கைத் தூதர் வெனிசுலாவுக்குப் போகிறார். அங்கே ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரைப் பிடித்து, இலங்கை அரசுக்கு ஆதரவாக கட்டுரை எழுத வைக்கிறார். அதன் வழியாக வெனிசுலாவின் கருத்தை மாற்ற முயற்சிக்கிறார். அடுத்து யாரெல்லாம் ஐ.நா.வின் பொதுச்செயலாளர்களாக வர வாய்ப்பிருக்கிறதோ, அவர்களையெல்லாம் பார்த்துப் பேசுகிறார்கள்.

இதை எப்படி நாம் தடுப்பது? இதுபோன்ற கருத்தியல் தாக்குதல்களை முறியடிக்கவும், தனி ஈழத்துக்கான சர்வதேச ஆதரவை பெறவும் நாடு கடந்த தமிழீழ அரசு அவசியமான தேவை...’’ என்றார்.

சீனாவுடனான ராஜபக்ஷேவின் உறவுகள் வலுப்பெறுவதை சுட்டிக் காட்டி, இந்திய அரசை ஈழத்துக்கு ஆதரவான சக்தியாக மாற்றுவதே, நாடு கடந்த தமிழீழ அரசுக்கான முக்கிய நோக்கம். இதை தன்னுடைய பேச்சில் பூடகமாக வெளிப்படுத்தியிருக்கும் உருத்திரகுமாரன், இந்த மனப்பான்மையை மையமாக வைத்து விரைவில் இந்தியாவுக்கு வர இருக்கிறாராம்.

நன்றி : தமிழக அரசியல்.

No comments:

Post a Comment