Labels

Tuesday, February 22, 2011

இலங்கையில் நடப்பது காட்டாட்சியா? - கி. வீரமணி அறிக்கை



விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் தாயாரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவனை விமான நிலையத்திலேயே தடுத்து, அனுமதி மறுத்து, வந்த விமானத்திலேயே அவரைத் திருப்பி அனுப்பிய இலங்கை அரசைக் கண்டித்தும், துக்கம் விசாரிக்கச் செல்லுவதற்கு அவருக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அருமைத் தாயார் திருமதி பார்வதி அம்மாள் அவர்கள் இரண்டு நாள்களுக்குமுன் இலங்கை யாழ்ப்பாணத்தில் காலமானதையொட்டி, மனிதநேயத்துடன் அவர்களுக்கு இறுதிமரியாதை செலுத்த விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தோழர் திருமாவளவன் அவர்கள் நேற்றிரவு இலங்கைக்குப் புறப்பட்டுச் சென்று, அவர் விமான நிலையத்தில் இறங்கியபோது, அவருக்கு இலங்கைச் சிங்கள இராஜபக்சே அரசு உள்ளே செல்ல அனுமதி மறுத்து, அவரை வந்த விமானத்திலேயே திரும்பிச் செல்லுமாறு பிடிவாதம் காட்டி, சிங்கள அரசின்அதிகாரிகள் அவரை சென்னை திரும்பும்படிச் செய்துவிட்ட கொடுமையைக் கேட்டு உணர்ச்சியும், மனிதநேயமும் உள்ள நமது நெஞ்சங்கள் குமுறுகின்றன.

தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல; இந்திய நாடாளுமன்றத்தின் உறுப்பினரும்கூட (எம்.பி.).

இலங்கையில் நடப்பது காட்டாட்சியா?

ஏற்கெனவே இந்திய அரசு அனுப்பிய தூதுக் குழுவில் சென்று, இராசபக்சேவிடமே நேரில் விவாதித்துத் திரும்பிய குழுவினரில் ஒருவர் - அவரை ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூடாது என்று திருப்பி அனுப்புவது பச்சை பாசிசப் போக்கு அல்லவா? காரணத்தைக் கூறுங்கள் என்று பல முறை அவர் வற்புறுத்தி அதிகாரிகளிடம் வாதாடியும் பலனில்லை.

அவர் அரசியல் நிகழ்வுக்குப் போகவில்லை; துக்க நிகழ்ச்சி - மரண வீட்டுக்குச் செல்வதுகூட கூடாது என்றால், அங்கு காட்டாட்சியா நடக்கிறது?

மத்திய அரசு பரிகாரம் தேட வேண்டும்

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி வேறுபாடு இன்றி இலங்கை அரசின் போக்குக்குக் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும்.

தனிப்பட்ட தொல். திருமாவளவனுக்கு ஏற்பட்ட அவமானமோ, பின்னடைவோ அல்ல இது. இந்தியப் பேரரசுக்கு ஏற்பட்ட அவமானம் என்ற நிலைப்பாட்டுடன், கொதிப்புடன் மத்திய அரசின் வெளியுறவுத் துறை இதனை எண்ணிப் பரிகாரம் தேட வேண்டும்.

மீண்டும் அனுமதி தேவை!

ஏற்கெனவே பிரபாகரனின் தந்தையார் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் மறைந்தபோது செல்ல அனுமதித்துவிட்டு, இப்போது மட்டும் மறுப்பதேன்? தமிழக மீனவர்களை இலங்கை அரசு காக்கை குருவிகளைப் போல சுட்டுக் கொல்லுவது, சிறைப்பிடிப்பது, மத்திய அரசு தலையிடுவது, பிறகு விடுதலை எனும் நாடகம் நடத்துவது - ஒரு வாடிக்கையான வேடிக்கைக் கூத்தாகி விட்டது!

மத்திய அரசு இதுகுறித்து இலங்கைத் தூதரிடம் பேசித் தனது கண்டனத்தைத் தெரிவிப்பதும், மீண்டும் அவருக்கு அனுமதி வழங்கி துக்கம் விசாரிக்க உதவுவதும் அதன் முக்கியக் கடமையாகக் கருத வேண்டும் என்று வற்புறுத்துகிறோம்.

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

No comments:

Post a Comment