Labels

Tuesday, February 8, 2011

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு தெற்கு சூடான் அங்கீகாரம்



சூடான் நாட்டின் அடக்குமுறைக்கு எதிராகச் ‘ சூடான் மக்கள் விடுதலை இயக்கம் ’ நடத்தி வந்த விடுதலைப் போராட்டம், வெற்றி முனையில் முடிவுக்கு வந்திருக்கிறது.

சூடானில் தெற்கு சூடான் தனிநாடாக வேண்டும் என்று ஒரு நெடிய போராட்டத்தை சூடான் மக்கள் இயக்கம் நடத்தி வந்தது. இந்தப் போராட்டத்தில் 20 இலட்சம் மக்கள் மடிந்திருக்கிறார்கள். பசி, பட்டினி என்றும், மருத்துவ வசதி இன்றியும் கொடுமைக்கு ஆளான தெற்கு சூடான் மக்கள் கொத்துக் கொத்தாகவும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இருந்தாலும் மக்கள் விடுதலைப் போராட்டம் என்றும் தோற்றதில்லை என்பதைத் தனிநாடாகும் தெற்கு சூடான் மீண்டும் உறுதிப்படுத்திவிட்டது. தெற்கு சூடான் தனிநாடு என்பதை உறுதி செய்யும் வகையில் அங்கு வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இது குறித்து, அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா ‘ நியூயார்க் டைம்ஸ் ’ இதழுக்கு அளித்த நேர்காணலில், “ இலட்சக் கணக்கான சூடானிய மக்கள், தம் விதியைத் (தனிநாடு) தீர்மானிக்கும் வாக்கெடுப்புக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள் ” என்று கூறியுள்ளார்.

இச்செய்தியை வரவேற்றுள்ள சூடான் மக்கள் விடுதலை இயக்கம், விடுதலை பெறும் தெற்கு சூடானின் விடுதலை நாள் விழாவில் பங்கேற்குமாறு, ‘ நாடு கடந்த தமிழீழ அரசு ’க்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தமிழீழத்திற்கான முதல் அங்கீகாரம்!

1977 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது, வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு ஏற்ப, இறையாண்மையுள்ள தமிழீழ அரசை அமைப்போம் என்று வாக்குக் கேட்டமைக்கு, அறுதிப்பெரும்பான்மை மக்கள் வாக்களித்து, தனிஈழம் என்பதை ஈழத்தமிழர்கள் உறுதி செய்தார்கள்.

ஈழத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தில் தலைவர் பிரபாகரன் காட்டிய வீரமும், போர் உத்தியும் சிங்கள இனவெறி அரசை நடுங்கச் செய்தது மட்டுமன்று, உலக நாடுகளே வியப்பில் ஆழ்ந்தன.

என்றாலும் தனித்து வீரம் காட்டிப் போராடிய விடுதலைப் புலிகளை நேர்கொள்ள முடியாத கோழை இராஜபக்சே, இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளின் உதவியுடன் ஈழ மக்களைப்படுகொலை செய்து வெற்றி பெற்றதாகக் கூறிக்கொள்கிறான்.

சூடானின் அடக்குமுறைக்கும், சிங்கள இலங்கை அரசுக்கும் ஆதரவாகவும், பாது காவலனாகவும் செயல்பட்ட சீனாவையும் மீறித் தெற்குச் சூடான் விடுதலை பெறுகிறது. சூடானின் முதல் அங்கீகாரம் பெற்றுள்ள தமிழீழம் நாளை விடுதலை பெறும் என்பதற்கான அடையாளம் இது.

சூடான் நாட்டின் அடக்குமுறைத் தலைவர் பசீர், சூடான் மக்களை இனப்படுகொலை செய்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இராஜபக்சேவும் ஈழமக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலை குற்றவாளியாக விரைவில் அறிவிக்கப்படவுள்ளார்.

தவிர, 2009 ஆம் ஆண்டு, பிலடெல்பியா நகரத்தில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தொடக்க விழாவில் உரையாற்றுவதற்காக, ஐக்கிய அமெரிக்காவுக்கான, தம் பிரதிநிதி டொமாக் வால்லு ஆச்சே வை, சூடான் மக்கள் விடுதலை இயக்கம் அனுப்பி வைத்திருந்தது. இன்று நாடு கடந்த தமிழீழப் பிரதிநிதிகள் தெற்கு சூடான் விடுதலை நாள் விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

தமிழீழப் பிரதிநிதிகளை சூடான் மக்கள் விடுதலை இயக்க உயர் அதிகாரிகள் வரவேற்க இருக்கிறார்கள். அவ்விழாவில் பங்கேற்க வரும் பிற நாடுகளின் தலைவர்களை ஈழப்பிரதிநிதிகள் சந்திக்க இருக்கிறார்கள்.

இது கொடுங்கோலன் ராஜபக்சேவுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும் என்பதில் ஐயமில்லை.

விடுதலை பெறும் தெற்கு சூடானை வாழ்த்தி வரவேற்போம் ! ஈழத்தின் விடுதலையை எதிர்பார்ப்போம் !

நன்றி : கருஞ்சட்டைத்தமிழர்

No comments:

Post a Comment