Labels

Sunday, February 20, 2011

தமிழீழ தேசிய தலைவரின் தாயார் பார்வதியம்மாள் காலமானார்









விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள்(வயது 81) யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இன்று (20.02.2011) காலமானார்.

கடந்த பத்து வருடங்களாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார் பார்வதியம்மாள்.


பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு இருந்த அவர் மலேசியாவில் சிகிச்சை பெற்றுவந்தார். தனது மேல் சிகிச்சைக்காக இந்தியா வந்த அவரை இந்திய அரசு சிகிச்சைக்கு அனுமதி மறுத்து அவர் வந்த விமானத்திலேயே மலேசியாவிற்கே திருப்பியனுப்பியது.

பின்னர் இந்திய அரசு அவருக்கு நிபந்தனையின் அடிப்படையிலேயே கிகிச்சையளிக்க முன்வந்தது.

ஆயினும் அவரது குடும்பத்தினர் நிபந்தனையின் அடிப்படையில் அவர் சிகிச்சை பெறுவதையும் தொடர்ந்தும் அவரை ஓர் அரசியல் சர்ச்சைக்குள் இழுக்கப்படுவதையும் விரும்பவில்லை. இதனாலேயே அவர் சொந்த ஊருக்குத் திரும்பி அழைத்து செல்லப்பட்டார்.

பார்வதி அம்மாள், அவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்குச் அழைத்துசெ செல்லப்பட்டார். அங்கு அவரின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து அவர் யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சற்று உடல் நலம் தேறிய அவர் மீண்டும் வல்வெட்டித்துறை மருத்துவமனைக்கே மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.

கடந்த சில வாரங்களாக அவர் சுய நினைவை இழந்து அவதியுற்றார். இந்நிலையில் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று (20.02.2011) காலை 6.10 மணியளவில் காலமானார். ஏற்கனவே, அவருடைய கணவர் வேலுப்பிள்ளை கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் இறந்து விட்டார்.

பார்வதி அம்மாள்-வேலுப்பிள்ளை தம்பதிக்கு விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தவிர, மனோகரன் என்ற மற்றொரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். ஒரு மகள் கனடா நாட்டில் உள்ள டொராண்டோ நகரிலும், மற்றொரு மகள் சென்னையிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். மகன் மனோகரன், டென்மார்க் நாட்டில் குடும்பத்தினருடன் உள்ளார்.

ஈழத்தாயின் பூவுடல் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22.02.2011) அளவில் ஈழமக்களின் அஞ்சலிக்குப்பின்னர் விதைக்கப்படலாம் என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் , ‘’மரணமடைந்த பார்வதி அம்மாளுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினேன். அவருடைய மரணம் பற்றிய தகவலை மகன் மற்றும் மகள்களுக்கு தெரிவித்து விட்டேன். பார்வதி அம்மாளின் நெருங்கிய உறவினர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அவருடைய இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெறும். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு செவ்வாய்க்கிழமை அன்று (22.02.2011) இறுதிச் சடங்குகள் நடைபெறும் என கருதுகிறேன்’ என்று தெரிவித்தூள்ளார்.


நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை (22.02.2011) மாலை 3 மணியளவில் வல்வெட்டித்துறையில் நடைபெறும் பார்வதி அம்மாள் இறுதி அடக்க நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொள்வதாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமாவளவன் இரங்கல் :

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாளின் மறைவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் வல்வெட்டித்துறை பொதுமருத்துவமனையில் நீண்டகாலமாக உடல்நலமின்றி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலையில் காலமாகிவிட்டார்.

அவருடைய இறப்பு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

அவரது இழப்பு ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே பேரிழப்பாகும். அவரது இழப்பால் உள்ளம் வருந்தும் ஒவ்வொரு தமிழனும் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி ஆறுதல் தேடும் நிலையே உள்ளது.

அந்த வகையில் தமிழகமெங்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் மூன்று நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் இரங்கல் :

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘’ ஈழத் தமிழர்களின் சன நாயக உரிமைகளுக்காகவும், சொந்தமண்ணில் சம உரிமைகளுடனும், சுயமரியாதையுடனும் வாழவும் போராடிய போராளி பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் காலமானார் என்ற துயரச் செய்தி ஈழத் தமிழர்களை மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களையும் அதிர்ச்சிக் குள்ளாக்கி இருக்கிறது.


கடந்த ஓர் ஆண்டு காலமாக கடும் நோயினால் அவதிப்பட்டு மருத்துவ மனையில் சிகிக்சை பெற்று வந்த பார்வதியம்மாள், சிகிச்சை பலனின்றி காலமானதைத் தொடர்ந்து துயரத்திற்கும், அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிற அவரது குடும்பத்தினருக்கும், ஈழத் தமிழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

சீமான் இரங்கல் :

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழீழத்தின் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று இறந்து விட்டார் என்னும் துயரச்செய்தி வந்துள்ளது.

அவர் தியாகம் வரலாற்றில் என்றும் நினைவுகூறப்படும். நாங்க‌ள் வ‌ர‌லாற்றில் ப‌டித்த‌ க‌ரிகால‌னை நேரில் காட்டிய‌வர் பார்வதி அம்மாள்.

அவருக்கு நாம் அனைவரும் நேரில் சென்று வணங்கி அஞ்சலி செலுத்த முடியாத அளவுக்கு ஈழம் இன்று ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

விரைவில் இந்த இழி நிலை மாறும். பார்வதி அம்மாளுக்கு நாம் தமிழர் கட்சி தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இறுதிக்காலத்தில் தனது உடல் நலனுக்குச் சிகிச்சை பெறும் பொருட்டு தாய்த் தமிழ்நாடு வந்தவரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் மனிதநேயமற்றுத் திருப்பி அனுப்பினார்கள்.

எந்த ஆட்சி அதிகாரம் அவருக்கு அனுமதி மறுத்ததோ அந்த ஆட்சி அதிகாரமே தலைகுனியும் வண்ணம் இன்று நம் நாட்டின் சாலைகளெங்கும், தெருக்கள் எங்கும், சந்து பொந்துகள் எங்கும் பார்வதி அம்மாளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற வேண்டும். அவரின் நினைவைப் போற்றும் வகையில் நெடுமாறன் நடத்தும் அமைதிப் பேரணியில் நாம் தமிழர் சார்பில் அதில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இன்று (20.02.2011) மாலை கோவையில் பார்வதி அம்மாளின் நினைவைப் போற்றும் வகையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

வைகோ இரங்கல் :

இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,


’’தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரனைத் தன் மணி வயிற்றில் சுமந்த அந்த வீரத்தாயின் மரணச் செய்தி, இதயத்தில் ஈட்டியாகப் பாய்ந்தது.

தமிழ் ஈழத்தின் தவப்புதல்வனைப் பெற்ற அந்தத் தாய்க்கு, அவரது வாழ்நாளில் ஏற்பட்ட துயரம், விவரிக்கவே இயலாத கொடுந்துன்பம் ஆகும்.

தன் வீர மைந்தனைத் தங்கள் நெஞ்சங்களிலே பூசித்த கோடானு கோடித் தமிழர்களை எண்ணி அவர் பெருமிதம் கொண்டு இருந்தாலும், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் வீரப்பிள்ளைகளும், வீராங்கனைகளும் வெஞ்சமரில் மடிந்த போது, வேதனைத்தீயில் துடித்தார்.


உத்தமர் வேலுப்பிள்ளையும் அன்னை பார்வதி அம்மையாரும் என் இல்லத்துக்கு வந்து, என் பேரனுக்கு பிரபாகரன் என்று பெயர் சூட்டியதும் என் மகனின் திருமணத்துக்கு இருவரும் வந்து வாழ்த்தியதும், என் வாழ்வில் நான் பெற்ற பேறுகள் ஆகும்.

பார்வதி அம்மையாருக்குப் புகழ் அஞ்சலி செலுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து, இரங்கல் ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் நடத்துமாறும் வேண்டுகிறேன்.


இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாளை (21.02.2011) மாலை 4 மணி அளவில், தியாகராயநகர், வெங்கட் ரமணா சாலையில் உள்ள செ.த. நாயகம் மேனிலைப்பள்ளி வளாகத்தில் இரங்கல் கூட்டம் நடக்கிறது.

பழ.நெடுமாறன், தலைமை ஏற்க, நானும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்கிறோம். புகழ் அஞ்சலி நிகழ்ச்சியில் அனைவரும் திரளாகப் பங்கேற்கும்படி வேண்டுகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

பழ. நெடுமாறன் இரங்கல் :

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’தமிழீழத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் இன்று அதிகாலை 6:10 மணிக்கு காலமான செய்தியை அறிந்து உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கூட அங்கிருந்து வெளியேறி பத்திரமான இடம் தேடி அவரும் அவரது கணவரும் வாழ முயலவில்லை.


தங்கள் மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுடனேயே அத்தனை துன்பங்களையும் தாங்கி இறுதியாக சிங்கள ராணுவச் சிறையில் பல மாதங்கள் கொடுமைகளை அனுபவித்த போதிலும் அவர் கொஞ்சமும் கலங்கவில்லை.

சிறையில் தனது கணவரை பறிகொடுத்தத் துயரம் அவரது உடல்நிலையையும் மனநிலையையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது.

இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் வாழும் அவரது மூத்த மகனும் அவரது மகள்களும் மற்ற நெருங்கிய உறவினர்களும் இலங்கை சென்று சந்தித்து ஆறுதல் கூற முடியவில்லை. அவரைத் தமிழகம் கொண்டு வந்து அவரோடு நெருங்கிப் பழகிய குடும்பங்களோடு தங்க வைத்து மன ஆறுதலையும் மருத்துவ சிகிச்சையையும் அளிக்க செய்யப்பட்ட ஏற்பாட்டினை இந்திய தமிழக அரசுகள் மனிதநேயம் கொஞ்சமும் இல்லாமல் முறியடித்தன.

தமிழகத்தில் வந்து இறங்கிய அவரை ஈவு இரக்கமில்லாமல் திருப்பி அனுப்பிய கொடுமையும் நிகழ்ந்தது. இதெல்லாம் அவருடைய மனநிலையை மேலும் பாதித்துவிட்டன. இந்த சூழ்நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பயனளிக்காமல் அவர் காலமாகியிருக்கிறார்.

அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வகையில் திங்கள் கிழமை (21-2-2011) மாலை 4 மணிக்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துமாறு வேண்டிக் கொள்கிறேன்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சரத்குமார் இரங்கல் :


இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

’’பார்வதி அம்மாளின் மறைவுக்காக உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் வருத்தத்தோடு கண்ணீர் சிந்தி அவரது மறைவுக்கு வீர அஞ்சலி செலுத்துவார்கள் என்பதில் ஐயமில்லை. அவருடைய மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று கூறியுள்ளார்.

டாக்டர் ஆர்.கிருஷ்ணசாமி இரங்கல் :

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஆர்.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

’’ஈழ விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட உலக தமிழ் மக்களின் அடையாளமாக விளங்குகிற மாவீரன் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் யாழ்பாணத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி நம்மை எல்லாம் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்துகிறது’’என்று கூறியுள்ளார்.

பெங்களூர் தமிழ்ச் சங்கம் இரங்கல் :

பெங்களூர் தமிழ்ச் சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இரங்கல் செய்தியில்,

’’உலகத்தமிழர் பார்வையில் மாவீரனாக விளங்கிய பிரபாகரனை ஈன்றெடுத்த அவருடைய தாயார் பார்வதி அம்மாள், நேற்று முன்தினம் மறைந்த செய்தி உலகத் தமிழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகிற்கு மனிதன் ஒருவனை அளித்த அன்னை பார்வதி அம்மாள் மறைவு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும். தனது இறுதி காலத்தில் தமிழகத்தில் மருத்துவ சிகிச்சையை பெற அவர் எடுத்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால் இன்னும் சில ஆண்டுகள் நம்மோடு வாழ்ந்திருப்பார் என்று கருதத் தோன்றுகிறது.

பார்வதி அம்மையாரின் மறைவு தமிழர்களின் நெஞ்சில் நீங்கா வடுவினை ஏற்படுத்தினாலும், தமிழர்கள் வரலாற்றில் ஒரு நிலையான இடத்தை அவரது வரலாறும் இடம்பெறும். பார்வதி அம்மையாரின் மறைவிற்கு பெங்களூர் தமிழ்ச் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறைக் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட இரங்கல் தீர்மானம் :

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்னையார் திருமதி பார்வதி அம்மையார் அவர்களின் மறைவிற்கு இக்கூட்டம் தனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அவர் பிரிவால் வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், உலகத் தமிழ்ச் சமுதாயத்துக்கும் இக்கூட்டம் தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறது.

(அனைவரும் இரு மணித்துளிகள் எழுந்து நின்று அமைதி காத்தனர்)

இத்தீர்மானத்தை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்மொழிந்தார்.


பார்வதி அம்மாள் மறைவு - இயக்குனர்கள் இரங்கல்


21.02.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில், தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்து, இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அச்சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் எழில், துணைத் தலைவர்கள் விக்ரமன், சசிமோகன், இணைச்செயலாளர்கள் அமீர், டி.கே.சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment