Labels

Saturday, March 6, 2010

பிரபாகரன் அந்தாதி (கதிர்க்கையன் ஈற்றெடுப்பு!) - 3


இயன்றுநீ செய்கின்ற இன்னமைதி தன்னை

முயன்று கெடுப்பார் முனிந்தே!* – தியங்கா(து)*

அவர்க்குநற் பாடம் அருள்கின்ற கோனே!

தவிக்குமெமைத் தாங்கித் தழுவு! (21)



தழுவிடினும் சாவை தமிழீழம் காக்க

எழுவரெம் மல்லர்* இனிதே – உழுவக்

கொடி*தாங்கி ஈழத்தில் கோல்நடுவர் அஃதை

மடிதாங்கி நிற்போம் மகிழ்ந்து! (22)



மகிழுந்தில், வல்லுந்தில்* மக்கள் கடத்தல்

நிகழ்த்திடும் கற்பிலா நெஞ்சர் – பகைகொய்ய

வேண்டிப் படைநடத்தி வென்ற பெருமறவா!

யாண்டும் உனக்கே இசை!* (23)



இசைவாய் எனவெடுத்(து) இந்தியா சொல்ல

‘இசையேன்’ எனவெழுந்(து) ஆர்த்தாய் –‘குசையிட்(டு)

அடக்கபரி அல்லநான் அமாம்!’ எனச்சொன்ன

திடக்கொள்கைக் குன்றுன் தெளிவு! (24)



தெளியாப் பதர்களன்று செய்தஒப் பத்தால்

நலிமிகும் என்றே நவின்றாய்! –அளித்த

அமைதிப் படையே அமைதி குலைத்துத்

தமைவருத்திக் கொண்டதே தாழ்ந்து! (25)



தாழ்ந்த தலையும் தரைபார்க்கும் கண்ணுமாய்

வீழ்ந்த படையை விரைந்தேற்கும் –சூழ்ந்த

இகழைக் களையறியா இந்தியா உன்றன்

புகழில் புழுங்கும் புழுத்து! (26)



புழுத்த மனம்படைத்த பொல்லாக் கயவர்

கொழுப்பை அடக்கிக் குளிர்ந்தாய் –அழித்தனரே

எம்மங்கை யர்க்கற்பை இங்கவர் சாவெய்ய

வெம்பகை கொய்தாய் விரைந்து! (27)



விரை*மலர் சூடி விரைந்தாய்; பகைவர்

மறைவிடம் தேடி மறைந்தார்; –புரை*தீர்

பெருமறவா!* மக்கள் பெறுமுறுகண்* போக்கும்

ஒருதலைவன் நீயென்போம் ஓர்ந்து!* (28)



ஓரா(து) அறிவை ஒழுகாது சிங்களவர்

தேராச் சிறுசெயல்கள் செய்கின்றார் –நேராய்

எதிர்நின்று போரில் எமன்வெல்லும் தோளா!

உதிர்த்தாய் அவரை ஒழித்து! (29)



ஒழிவின்றி* கொண்ட உறுகண் களைந்தாய்

பழிவென்ற தோளா! பகர்வேன் –கழிவின்றிப்

பொன்னை நகையாக்கல் பொய்யே! நமதீழ

மண்ணை நமதாக்கல் மாண்பு! (30)




குறிப்பு:

முனிதல் – சினங்கொள்ளுதல், தியங்காது – கலங்காது

மல்லர் – வீரர்; உழுவக்கொடி - புலிக்கொடி

வல்லுந்து – லாரி, வேன்; இசை –புகழ்.

குசை –கடிவாளம்; பரி –குதிரை

விரை – மணம்; புரை – குற்றம்; மறவன் – வீரன்; உறுகண் – துன்பம்; ஓர்தல் – உணர்தல்.

ஒழிவின்றி –முடிவின்றி

No comments:

Post a Comment