Labels

Friday, January 21, 2011

நான் சாகலாம் நாங்கள் சாகக்கூடாது



பாகம் - 1 :

தாயகத்தில் நடைபெற்ற இறுதிப்போரின்போது முக்கிய போர் நடவடிக்கையில் பங்குபற்றிய ஓர் பெண் போராளியின் எழுத்துக்கள் இவை. இவை போர் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும்போதே அந்தப் போராளியால் எடுக்கப்பட்ட குறிப்புகளிலிருந்து எழுத்துவடிவம் கொடுக்கப்பட்டவை.

அத்தொடரினை தொடர்ந்தும் இங்கே வாசிக்கமுடியும். இனி அந்தப்போராளியின் பேனாவிலிருந்து.....

ஈழ மண் ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கிக் கொண்டிருந்த சமயம் எதிரிக்கு ஆப்பு வைக்குமாற் போல் பேரதிர்ச்சி மிக்க தாக்குதல் ஒன்றை செய்வதற்காக எமது தலைமைப்பீடம் தயாராகிக்கொண்டிருந்தது.

போர்மேகம் கவிந்து வன்னிப்பெருநிலப்பரப்பின் பெரும்பகுதி சிங்களத்தின் ஆக்கிரமிப்புப் படைகளால் விழுங்கப்பட்டுக்கொண்டிருந்தது.

தமிழர்களின் ஆட்சிப் பரப்பெல்லை சுருங்கிக்கொண்டிருந்தது. தொடர் இரசாயன குண்டுவீச்சுக்கள், பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள், துப்பாக்கிச் சன்னங்கள் என்று வன்னி அதிர்ந்துகொண்டிருந்தது. புதுக்குடியிருப்புப் பிரதேச எல்லையைக் கடக்க சிங்களம் தொடர் தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் முன்னேற முயற்சித்துக் கொண்டிருந்தது.

சிறிய பகுதிக்குள் மக்கள் அனைவரும் குவிந்திருந்தமையால் இழப்புக்களும் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. உணவு, குடிநீர், மருத்துவம் கிடைப்பதே பெரும் சிரமமாக இருந்தது. சிங்களத்தின் படைகளின் எண்ணிக்கையும், உலக நாடுகளின் பலத்த ஆதரவும், எதிரியின் புதுத் தொழில்நுட்பமும் எமக்குப் பாதகமாக அமைந்து, கடுமையான இழப்புக்களை எமது தரப்பு சந்தித்த போதும் போராளிகளின் மனஉறுதியும், வீரமும் எதிரியை எதிர்த்து போரிட வைத்ததோடு, அவனை முன்னே நகரவிடாது தடுத்தும் வைத்திருந்தது.

இந்நிலை தொடருமானால் நாம் இன்னும் பலத்த இழப்புக்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாதவொன்றாகிவிடும் என்பதை உணர்ந்த தலைமை களத்திற்கேற்ப முடிவெடுத்துச் செயற்பட முனைந்தது.

முன்னேறி வரும் எதிரியை சற்றே பின்தள்ள வேண்டிய தேவை தலைமைக்கு ஏற்பட்டது. இதற்காக களமுனையின் நிலையை உடனடியாக மாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்த தலைமை குறைந்த ஆளணியுடன் எதிரிக்கு பலத்த இழப்பை ஏற்படுத்தக் கூடியவாறான தாக்குதல் ஒன்றை நடாத்தி, வன்னியின் களமுனையின் போக்கையும் தமிழரின் விதியையும் மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டு, அனைத்துத் திட்டங்களும் தயாரானது.

மீண்டும் சிங்களத்தையும் அதற்கு உதவி புரியும் உலக வல்லரசுகளையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்குவதற்காக தாக்குதல் திட்டம் இரண்டாக வகுக்கப்பட்டது.

1. முன்னேறி வரும் எதிரிக்கு ஊடறுப்புத்தாக்குதல் மூலம் பெரும் இழப்பைக் கொடுத்து, படையணிகள் பல கோணங்களில் முன்னேறுதல்.

2. சிங்களத்தின் குகைக்குள் சென்று கரும்புலிகளின் சிறப்புப் பிரிவு பெரும் அழித்தொழிப்பு நடவடிக்கையைச் செய்ய வேண்டும்.

ஊடறுப்புப் தாக்குதலுக்கான பொறுப்பை எமது மூத்த தளபதிகளில் ஒருவரான 55 இடம் ஒப்படைக்கப்பட்டது. அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான பொறுப்பை விசேட தாக்குதல் தளபதி ஒருவர் பொறுப்பெடுத்தார்.

அதற்காக கொமாண்டோ கரும்புலிகள் அணியிலிருந்து 26 பேர் கொண்ட குழுவொன்று தெரிவு செய்யப்பட்டு, அணித்தலைமையாக பெண்போராளி ஒருவர் நியமிக்கப்பட்டார்.
முதலாவதாக ஊடறுப்பு அணி தாக்குதலைத் தொடங்க வேண்டும். சண்டை குறித்த இலக்கினை அடைந்ததும் அழித்தொழிப்பு நடவடிக்கைக்கான அணியை தாக்குதல் இலக்கு நோக்கி நகர்த்துதல். இதுதான் திட்டம்.

ஊடறுப்பு தாக்குதலுக்கான நடவடிக்கையினை 55 உடன் தளபதி லோரன்ஸ் அவர்களும் களத்தில் இறக்கப்பட்டார். இவர்களுடன் இணைந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பல களமுனைத் தளபதிகள் ஒன்றுகூடி அவசர சந்திப்பு ஒன்றை மேற்கொண்டனர். தமிழ் இனத்தின் எதிர்காலத்தினை தீர்மானிப்பதாக அமையப்போகும் இந்த முதல் கட்டத் தாக்குதலுக்காக சுமார் ஆயிரம் பேர் கொண்ட தாக்குதல் அணி தயார் செய்யப்பட்டது. தாக்குதலுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவதற்கென அணிகள், தமது நகர்விற்காகக் காத்திருந்தனர்;.

மார்ச் மாதத்தின் மாலைப் பொழுதொன்றில் தொடர் விமானத் தாக்குதலுக்கும், எதிரியின் சற்றலைட் கண்காணிப்புக்கும் மண்ணைத் தூவிவிட்டு புலிகளின் தாக்குதல்அணிகளும், முதன்மைத் தளபதிகளும் சாலைப்பகுதியிலிருந்த சிறப்புப் பாசறையில் ஒன்றுகூடினர். தாக்குதலுக்கு பொறுப்பாகவிருந்த தளபதி 55 தாக்குதல் திட்டத்தை விளங்கப்படுத்தத் தொடங்கினார்;.

“இந்தச் சண்டைதான் எங்கட தலைவிதியை மாற்றி எதிரிக்கு தலையிடி கொடுக்கிறதாய் இருக்கும்;. எனவே அதற்கான திட்டமும் கடுமையான பயிற்சியும் உங்களுக்கு தரப்பட்டிருக்கு. ஒவ்வொருத்தரும் உறுதியோட உங்களுக்கு தரப்பட்டிருக்கிற இலக்கைத் தாக்கியழிக்கிறதில உறுதியோட செயற்படவேணும். மற்றது நாங்கள் இப்ப செய்யப் போற ஊடறுப்புத் தாக்குதல் தான் சிறப்புக் கொமோண்டோக்காரரை அவையின்ர இலக்கை நோக்கிச் செல்ல பாதையெடுத்துக் கொடுக்கப் போகுது. எனவே எல்லாருடைய முழுப்பங்களிப்பும்தான் எமது வெற்றியைத் தீர்மானிக்கப்போகுது. இரவு குறித்த நேரத்தில நகர்வை மேற்கொள்ளக் கூடியவாறு ஆயத்தமாகுங்கோ. அதற்கான ஒழுங்கை தளபதி லோறன்ஸ் மேற்கொள்வார். இனி நீங்கள் உங்களுக்குரிய இடங்களுக்குப் போங்கோ.”

என்றவாறு ஏனைய தளபதிகளுடன் அவர் பின்கள வேலைகளை நகர்தச் சென்ற பின், போராளிகள் ஒவ்வொருவரும் தமது சக தோழர்களுடன் கதைத்தபடி இரவு நகர்வதற்கு தேவையான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினர்;.

இருள் என்ற கறுப்புப் போர்வை மூடத் தொடங்கிய போது தாக்குதல் அணிகளின் நகர்வும் ஆரம்பித்தது. ஊடறுப்புத் தாக்குதல்களுக்கான அணிகள் கடற்கரைப் பகுதியிலிருந்து சிறு சிறு பிளாற்றூன்களாகப் பிரிந்து தாக்குதல் இலக்கை நோக்கி நகர்ந்தன. இதே வேளையில் சிறப்புக் கொமோண்டோ அணியும் நகரத் தொடங்கியது. ஊடறுப்பு அணிகளில் ஒரு பகுதி சிறப்பு அணிக்கான பாதையைத் திறப்பதிலும், அவர்களிற்கான காப்பை வழங்குவதிலும் ஈடுபட்டன. சிறப்பணிகள் எல்லையைக் கடக்க, ஊடறுப்பு அணிகள் விசுவமடுப் பகுதியில் அமைந்திருந்த படைத்தளத்தின் மீது உக்கிர தாக்குதலை மேற்கொண்டன.

இத் தாக்குதலின் போது எதிரிக்கு பெருமளவு படைச் சேதத்தை ஏற்படுத்தியதுடன் அங்கிருந்த ஆட்லறிகளைக் கைப்பற்றி, எதிரியின் ஆனையிறவுப் படைத்தளத்தை நோக்கி எம்மவர்கள் எறிகணைத்தாக்குதல்களையும் மேற்கொண்டனர். தாக்குதலின் தீவிரத்தால் எதிரி நிலைகுலைந்த நேரத்தைப் பயன்படுத்தி சிறப்பணிகள் தமது இலக்கை நோக்கி விரையத்தொடங்கினர்.

ஊடறுப்பு அணிகளின் தாக்குதலை முகம் கொடுக்க புதிய படையினர் வருவிக்கப்பட்டு, எமது ஊடறுப்பு அணி பெட்டி வடிவத்தில் முற்றுகையிடப்படுகின்றது. இந்தச் சமயத்தில் தாக்குதலை வழிநடத்திய முன்னணித் தளபதிகள் விழுப்புண் அடைகின்றனர்.

எது நடந்த போதும் பின்வாங்க சிறிதளவும் விருப்பம் இன்றிப் போராளிகள் ஓர்மத்துடன் சண்டையிட்டவண்ணம் இருந்தனர். உக்கிரமான சண்டையால் இழப்புகள் அதிகமாகிக் கொண்டிருந்தது. ‘இனி அங்கே நின்று அதிகளவான போராளிகளை இழக்க வேண்டாம் முற்றுகையை உடைத்து பின்வாருங்கள்’ என்ற தலைமையின் உத்தரவிற்கமைய ஊடறுப்பு அணி தளம் திரும்புகின்றது.

உள்நுழைந்த அழித்தெழிப்பிற்கான சிறப்பு அணிகள் கட்டளைப்பீடத்துடன் தொடர்பினை மேற்கொண்டபடி நகர்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பத்து நாட்களின் பின்னர் அவர்களுக்கும் கட்டளைப்பீடத்திற்குமான தொடர்பு எதிர்பாராத விதமாகத் துண்டிக்கப்பட்டது. நகர்வின் போது இவர்கள் வைத்திருந்த செய்மதித் தொலைபேசி தண்ணீருக்குள் விழுந்தமையால் அதுவும் செயற்படாமல் போய்விட்டது. எனவே இவர்களுடனான தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.

சிறப்பு அணியின் தொடர்பு துண்டிக்கப்பட்டவுடன் தொடர்பை ஏற்படுத்துவதற்காக கட்டளைப்பீடத்தால் மூன்று முதன்மைப் போராளிகள், அவ்வணி நகர்ந்து சென்ற பாதையூடாக எதிரியின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் சிறப்பணியின் தொடர்பை எடுப்பதற்கு தேடியலைந்து முடியாது போக, குறிப்பிட்ட நாட்களின் பின்பு பின்தளத்தினை நோக்கி நகர்ந்து வந்து தகவல்களைக் கொடுக்கும்போது ஏற்பட்ட சம்பவமொன்றில் மூவரும் வீரச்சாவைத் தழுவிக்கொள்ள நேரிட்டது.

சிறப்பு அணியின் தாக்குதல் திட்டமே எமது தலைவிதியை மாற்றியமைக்க வல்லமை மிக்கதாக இருந்தமையால் அதனது தொடர்பை எடுக்கக் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனவே நாட்டுக்கு வெளியேயுள்ள பல வளங்களைப் பயன்படுத்தி அணியுடனான தொடர்பை ஏற்படுத்த பல முயற்;சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சில தினங்களின் பின்னர் மாற்று ஆதரவு ஆற்றல்களைப் பயன்படுத்தி ‘வோக்கி’ மூலம் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இது சிறப்பு அணியினரை உற்சாகத்துடனும், வேகத்துடனும் நகர உதவியது. நகர்ந்து கொண்டிருந்த சிறப்பணிகள் தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில்; தங்களுக்கு நடந்த அனைத்துச் சம்பவங்களையும் கட்டளைப்பீடத்திற்கு தெரிவித்திருந்தனர்.

இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால் வோக்கியல் இனி தொடர்பு கொள்வது கஸ்ரமாக இருக்கும் நாங்கள் தரப்பட்ட வேலையை முடிப்போம் என்று கூறியபடி அணி நகரத் தொடங்கியது. இதன் பின்னர் அணிக்கும் கட்டளைப்பீடத்திற்குமான தொடர்பு இருக்கவில்லை

தமக்குத் தரப்பட்ட இலக்கை அழிக்கவேண்டும் என்று தாக்குதல் அணி ஒருபக்கமும்,
இனி எப்படித் தொடர்பினை மேற்கொள்ளலாம்? எனவும் அதற்கான மாற்று ஒழுங்குகளைச் செய்தபடி கட்டளைப்பீடமும்.

26 பேர் கொண்ட சிறப்பு அணியில் ஒரேயொரு பெண்போராளி மட்டுமே மே மாதம் 2ம் நாள் தன்தளத்திற்கு வந்து தனது போராளித் தோழர்களைச் சந்திக்கிறார்..............


அப்படி என்றால் ஏனைய 25 பேரும் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?


முற்று முழுதாக உண்மைச்சம்பவங்களுடன் களத்திற்கு திரும்பிய போராளியின் சாட்சியங்களுடன் நடந்த சம்பவங்களை ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டும்.

எத்தனையோ தியாகங்கள்!
எத்தனையோ அர்ப்பணிப்புகள்!
இறுதி வரை எமது வாழ்விற்காக இரத்தம் சிந்தியவர்கள்!
தம்மை ஆகுதியாக்கியவர்கள்!

இவர்களின்வரலாறுகள் என்றைக்கும் வீணாகப் போகக் கூடாது என்பதற்காகவே
இந்த வரலாற்றுப்பதிவை மக்களாகிய உங்களுக்குத் தருகின்றோம்.


பாகம் - 2:


தமிழர்களின் சிறப்புக்கும், வணக்கத்துக்குமுரிய நாளான நவம்பர் 27இல் என்னோடு களமாடி வீழ்ந்த தோழிகளனதும், தோழர்களனதும் நினைவுகளையும், எமது தேசத்திற்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்த எமது மாவீரத் தெய்வங்களின் நினைவைத் தாங்கி, வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளினால் இத்தொடரினை உரிய நேரத்திற்குத் தர முடியவில்லை.

எனது குடும்பம் வறுமையான குடும்பமும் இல்லை. பணக்காரக் குடும்பமும் இல்லை. நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தது. வன்னி மண்ணில் சிங்களவனின் ஆக்கிரமிப்புக்கு முன்னர் எந்தவித துன்பமுமின்றி மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தோம். இப்போது தான் ஊரைவிட்டு இடம்பெயர்க்கப்பட்டு தடுப்பு முகாமுக்கு வந்ததன் பின்தான் மிகவும் வறுமையாக வாழ்கின்றோம்.

எவ்வளவு கஸ்ரப்பட்டு, துன்பப்பட்டு வாழ்ந்தாலும் எமது தாயக இலட்சியத்தில் இன்னும் மிக உறுதியாகவே உள்ளேன். நான் மட்டுமல்ல மக்களும் தான். தாயக விடுதலை என்ற இலட்சியம் நீறுபூத்த நெருப்பாகக் கிடக்கிறது. காற்று பலமாக வீசும்போது அது பற்றியெரியக் காத்திருக்கிறது என்பதனை மக்களின் சொற்களிலும் செயல்களிலும் இருந்து புரிந்துகொள்ளக் கூடியதாகவிருந்தது.

‘நாங்கள் எப்படிச் சிங்களவனிடம் தோற்றோம் என்ற தேடல் அவர்களிடம். அவனை ஏன் வன்னிக்குள் இயக்கம் வரவிட்டது. ஏன் பெரிய எதிர்த்தாக்குதல் எதுவும் செய்யவில்லை. என்ன நடந்தது’ என்றெல்லாம் மக்கள் கதைக்கும் போது, நான் தலைமை எடுத்த முயற்சிகள் தெரிந்தும் எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக நின்றிருக்கிறேன். சிங்களவனின் கட்டுப்பாட்டிற்குள் நின்று கொண்டு, சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு இருக்கின்ற போதும், இயக்கம் வந்து தங்களின் நிலையை மாற்றும் என்ற நம்பிக்கையை அவர்கள் கைவிடவில்லை என்பது அவர்களின் புலம்பல்கள் மூலம் தெரிந்தது.

எனது அப்பா இப்போது நிரந்தரமாக எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டார். எனது சகோதரர்கள் எவ்வளவோ சித்திரவதைகளுக்கும், விசாரணைகளுக்கும் மத்தியில் தடுப்புமுகாமுக்குள்ளேயே உள்ளார்கள். இனி……….

அன்று நடந்த நடவடிக்கை அணியில் நானும் ஒருத்தி. இங்கிருக்கும் சூழலில் எதுவும் நடக்கலாம். ஆனால் நடந்த சம்பவங்கள், தலைமை எடுத்த முயற்சிகள் போராளிகளின் வீரம், தற்கொடை என்பன யாருக்கும் தெரியாமல் புதைந்துபோய்விடக் கூடாது என்பதற்காகவே எழுதுகின்றேன்.

வகுக்கப்பட்ட தாக்குதல் திட்டத்தில் இரண்டாவது திட்டமே எங்கள் அணிக்கானதாகவிருந்தது. அதாவது அழித்தொழிப்பு நடவடிக்கை. ஊடறுப்பு அணிகள் விசுவமடுவிற்குள் நுழைந்து தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்க, அந்த அணிகளுடன் இணைந்தே வந்த நாங்களும் தாக்குதலுக்கு முகம் கொடுத்தபடி, எங்களுக்கான இலக்கை நோக்கி புறப்படும் போதே, எமது அணியிலிருந்த ஒருவர் வீரச்சாவடைய நேரிட்டது. எதிரியின் மூர்க்கத்தனமான தாக்குதலில் ஒருவர் காயப்பட்டார்.

பெண்போராளியொருவரின் தலைமுடி எதிரியின் முட்கம்பி வேலியில் சிக்குண்டதால் அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை. சண்டை மிக உக்கிரமாக நடந்துகொண்டிருந்தது. தொடர்ந்தும் நின்று சண்டை பிடிச்சுக் கொண்டிருந்தால் ஆட்களை இழந்து, தரப்பட்ட இலக்கைச் சென்றடைய முடியாது என்பதால், அதிலிருந்து அணியை ஒருங்கிணைத்து நகர முற்பட்டபோது ஒருவரைக் காணவில்லை. இருப்பவர்களைக் மீளமைத்துக் கொண்டு நகரமுற்பட்ட போது, காயப்பட்டிருந்தவரை தளத்திற்கு திருப்பி அனுப்பிய போது அவர் திரும்பிப் போக மறுத்து “தலைமை என்னை நம்பித் தந்த பொறுப்பைச் செய்யாமல் திரும்பிப் போகமாட்டேன்” என்று உறுதியாக மறுத்துவிட்டார்.

அவரையும் சேர்த்துக் கொண்டு, நாங்கள் தொடர்ந்தும் நகர்வில் ஈடுபட்டோம். இலக்கைச் சென்றடையும் வரை எதிரியுடன் முட்டுப்படுவதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும் என்பது எமக்கு பணிக்கப்பட்டிருந்தது. நாம் ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும் இரு அணிகளாகப் பிரிந்து சென்றே நகர்வுகளை மேற்கொண்டோம். இடைவழியில் அவனுடன்(எதிரி) சண்டை ஏற்படாவண்ணம் செல்வதற்காக கூடியளவு நகர்வை இரவிலேயே செய்தோம். பகற்பொழுதில் எதிரியின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதும், வரைபடத்தைப் பார்த்து பாதையை பார்க்கும் ஒழுங்குகளையும் செய்தபடியே அடுத்து வரும் இரவு நகர்வுக்காக ஓய்வெடுப்பதுமாக எமது பயணம் தொடர்ந்தது.

எமது பயணம் என்பது மிகவும் கடினமானதொன்றாகவே இருந்தது. எதிரி தான் ஆக்கிரமித்த பகுதிகளிளெல்லாம் சென்றிகளைப் போட்டும், காலை மாலை என எல்லா நேரமும் கிளியறிங் செய்த படியும் இருந்ததோடு, ஆங்காங்கே கட்டவுட்டும் போட்டு வைத்திருந்தான். சகல பொசிசன்களிலும் ‘நைட்விசன்’ பொருத்தி வைச்சுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதைவிட எங்கட தலைகளுக்கு மேலே சற்றலைட் வேவு. இதுகளையெல்லாம் கவனிச்சுக் கொண்டு, மண்ணைத் தூவி உள்நுழைந்து நகரவேண்டும். நாள்கள் நகர, நாம் கொண்டு வந்த உணவுப் பொருட்களும் முடியத்தொடங்கியது. எனவே ஆங்காங்கு கிடைத்த காய்கள், பழங்கள், மக்கள் வீடுகளில் விட்டுச் சென்றவை என்பனவற்றைத் தேடியெடுத்து எமது வயிற்றை நிரப்பினோம்.

எமது அணி நகர்ந்து கொண்டிருக்கும் போது, எமக்கும் மெயினுக்குமான தொடர்பாக நவீன கருவிகளே இருந்தது. நாங்கள் அருவியைக் கடந்து நகர்ந்து சென்ற போது எமது தொடர்புக்கருவி தொலைந்துவிட்டது. எனவே எமக்கும் கட்டளைப்பீடத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. (நாங்கள் இருக்கும் இடத்திலிருந்து வோக்கியில் தொடர்பு எடுக்க ஏலாது. ஏனென்றால் வோக்கி அலையை வைச்சு அவன் எங்கட இடத்தைக் கண்டிடுவான்.) எனினும் நாம் தொடர்ந்து எமது இலக்கை நோக்கி நகர்ந்த வண்ணமேயிருந்தோம். எதிர்பாராதவிதமாக எமது மற்றைய அணியைச் சந்தித்தோம்; அதன் பின்னர் இரு அணிகளும் இணைந்தே எமக்கான இலக்கின் இடத்திற்குச் செல்வதற்கு முயற்சி செய்தோம். ஆனால் முடியவில்லை.

குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றால், அங்கு எம்மவர்கள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையில் மக்களின் வீடுகளிலிருந்து கிடைத்த பொருட்களைக் கொண்டு உணவு தயாரித்து உண்டபடி, எதிரி அறியாமல் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம். 4ம் மாதம் 4ம் திகதி இரவு எமது நகர்வை ஆரம்பிப்பதற்காக, என்னையும் என்னோடு வந்த ஒரு பெண்போராளியையும், எமது லீடர் நிமல் அண்ணாவையும் வேவுபார்த்து வர அனுப்பி வைத்தார்கள். நாமும் போய் பார்த்துவிட்டு வந்து எமது அணியினரை அழைத்துக் கொண்டு ஓர் ஊர்மனைக்குள் நின்று நேரத்தைப் பார்த்தோம். நேரம் 4.30 ஐயும் தாண்டியிருந்தது.

வரைபடத்தை எடுத்து நாம் நிற்கும் இடத்தைப் பார்த்தோம். எம்மைச் சுற்றி வயல் வெட்டைகள். நாம் நிற்பது ஒரு சின்ன ஊர்மனை. எனவே இப்போது எதுவும் செய்ய முடியாது. எனவே அன்று பகல் அங்கேயே தங்குவதாக முடிவெடுத்து, அங்குள்ள வீடுகளில் தங்கிக் கொண்டோம்.

எங்கள் ரீமில் ஒருவருக்கு ஏற்கனவே வந்த காய்ச்சல் அம்மன் வருத்தமாகியது. அவருக்கான சரியான பராமரிப்பு இல்லை. உணவு, குடிநீருக்கே கஸ்டம். இதில் எங்கு குளிப்பது. அவரைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆட்களுக்கும் அம்மன் போடத் தொடங்கியது. திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. ஆமி கிளியறிங் செய்துகொண்டு நாங்கள் இருந்த பக்கத்தை நோக்கி வந்தான். இரண்டு ரீமும் அங்கேயிருந்த வெவ்வேறு வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டோம்.

சாதாரணமாக கதைப்பதாகவே எழுதுகின்றேன்.

ஆமி நாங்கள் இருந்த வீட்டுக்குக் கிட்ட வந்து நின்றாங்கள். பரவலாக ஐந்து (05) மீற்றருக்கு ஒருவராக நின்றார்கள். எம்மோடு இருந்த நிமல் அண்ணாவிற்கு நன்றாகச் சிங்களம் தெரியும். நான் அவரிற்குப் பக்கத்தில்தான் இருந்தேன். என்ன கதைக்கிறான் என்று கேட்டேன்.

அண்ணா சொன்னார் ‘ஆமிக் கொமாண்டர் சொன்னானாம் அங்கேயுள்ள ஆடு, மாடு, கோழிகளை பிடித்து வாகனத்தை வரவழைத்து ஏற்றும்படியும், நாய்களை மட்டும் விட்டுவைக்காது சுடச்சொல்லி கட்டளை போட்டானாம். ஒருத்தன் நாயைக் கலைக்க, கொமாண்டர் கெட்ட வார்த்தைகளால் பேசிவிட்டு சந்தேகமான இடங்களில் எல்லாம் சுடச்சொல்லிச் சொன்னான்.’ நாங்கள் நகர்ந்து வந்த பாதைகளெல்லாம் அவன் கிளியறிங் செய்து கொண்டிருந்ததோடு, தான் சந்தேகப்படும் இடங்களுக்கு குண்டும் அடித்தான்.

பிறகு மேலிடத்திலிருந்து தொடர்பு வந்தது. அதில் இன்னும் ஒரு கிலோ மீற்றர் இருப்பதாகவும் ஒருவரையும் சுட வேண்டாம் என்றும் முன்னுக்கு தங்கட ஆட்கள் கட்அவுட் போட்டு நிற்பதாகவும் சொன்னான். பின்பு பக்கத்தில் நிற்பவனைப் பார்த்து ‘டேய் இந்த வீட்டைப் பார்த்திட்டியா’ என்று, நாங்கள் இருந்த வீட்டைப் பார்த்துக் கேட்டான். அவன்…………………

பாகம் - 3 :

‘ஓ பார்த்திட்டன்’ என்று சொன்னான். ஆனால் அவன் நாங்கள் இருந்த வீட்டைப் பார்க்கவில்லை. அவன் அன்று நாங்கள் இருந்த வீட்டைப் பார்த்திருந்தால் அவனுக்கு பெரிய வெள்ளி. அலட்சியம் செய்ததால் அன்று நாம் பிழைத்தோம். நாங்கள் தொடர்ந்து நகர்வை மேற்கொள்ள முடியாது புதுக்குடியிருப்பை நோக்கி ஆமிக்காரரை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனங்களின் தொடர் போக்கும், நவீன கருவிகளைப் பொருத்திய பெரிய வாகனங்களும் சென்றவாறே இருந்ததோடு, புதுக்குடியிருப்புப் பக்கமிருந்து பெரும் வெடிச் சத்தங்களோடு, கடும் சண்டை நடைபெறும் சத்தமும் கேட்டவாறேயிருந்தது. அப்போது நாங்கள் எங்களுக்குள்ளேயே எங்கட ஆட்கள் அடிக்கிறாங்கள் போல எனக் கதைத்துக் கொண்டோம்.

எங்கட (ரீமில்) அணியில் இப்ப ஐந்து (05) பேருக்கு சின்னமுத்து (அம்மாள் வருத்தம்) வந்திருந்தது. ஒரு அண்ணாவிற்கு உள்ளங்காலில் எல்லாம் கொப்பளம் போட்டு நடக்க முடியாது. நானும் அந்த ஐந்து பேரில் ஒருவர்தான். காய்ச்சலின் வேகம் ஒருபக்கம். உடல் முழுக்க கொப்பளம் போட்டு சரியான வேதனை. ஏதாவது செய்யலாம் என்றால் ஆமி தொடர்ந்து கிளியறிங் செய்து கொண்டு திரியிறான். சரியான உணவும் இல்லை. உடல் ஒத்துழைக்க மறுத்தாலும் தலைமை எங்களை நம்பி ஒப்படைத்த பொறுப்பும், அதைச் செய்து முடிக்க வேண்டுமென்ற மனவுறுதியும் தொடர்ந்து நகரவேண்டுமென்ற வேகத்தைத் தந்தது.

எம்மால் எமது உடைமைகளைக் (பைகள்) கூட தூக்க ஏலாது. நடக்க ஏலாது. எனவே அடுத்த நாளும் தொடர்ந்து போகமுடியாமல் தங்கி விட்டோம். அன்று இரவு இரண்டு அண்ணாக்கள் வேவு பார்க்கச் சென்றார்கள். பின்பு மீண்டும் வந்து ‘இன்று போக முடியாது ஏனென்றால் அருவியொன்று உள்ளது. அதில் தண்ணி நிறைய ஓடிக்கொண்டிருக்குது. தடிவிட்டுப் பார்த்தம் அது ஒரு ஆளைக்கூட தாட்டிடும். அத்தோடு இந்த ஐந்து பேரையும், காயப்பட்டு இருந்தவரையும் கொண்டுபோக ஏலாது’ என்று சொல்லி விட்டார்கள். அதாவது 4ம் மாதம் 5ம் திகதி. அன்று பகலில் எவரும் நடமாடவில்லை. இரவில்தான் எங்களின் நடமாட்டம்.

நாங்கள் இரண்டு அணியும் கிட்டத்தட்ட 50 மீற்றர் வரையான தூரங்களில் அமைந்த வீடுகளிலேயே ஆறு, ஏழு பேர்களாகத் தங்கினோம். அந்த வீடுகளிலிருந்து சற்றுத் தள்ளி அதாவது கிட்டத்தட்ட 500 மீற்றர் அளவில் பற்றைக் காடுகளும் இருந்தது. எனவே தான் நாங்கள் அவ்விடத்தை தங்குவதற்காக தெரிவு செய்திருந்தோம். நாங்கள் தங்கியிருந்த வீடுகளில் பல பெறுமதியான பொருட்கள் கிடந்தன. தொடர் இடப்பெயர்வினால் மக்கள் அவற்றையெல்லாம் விட்டு விட்டு கையில் கிடைத்த பொருட்களுடன் இடம்பெயர்ந்திருக்க வேண்டும். அவற்றோடு உணவு தாயாரிப்பதற்கான பொருட்களும் அங்கே இருந்தன.

அன்று பகல் இரண்டு ரீமும் சாப்பாடு செய்தோம். அப்பொழுது வாகனச் சத்தம் எங்களுக்கு கிட்டவாகக் கேட்டது. நாங்கள் இருந்த வீட்டுக்குப் பக்கத்தில ஒரு றோட்டு இருந்தது. உடனே எல்லோரும் அலேட்டாயிட்டு (தயார் நிலையில்) ஒளிந்து கொண்டு, (ஏற்கனவே நாங்கள் ஒழிந்து கொள்வதற்கு ஏற்றவாறு அந்த வீட்டிலிருந்த தளபாடங்களையும், பொருட்களையும் மாற்றி அமைத்திருந்தோம்.) இருவரை அவதானிப்பதற்காக விட்டிருந்தோம். அப்போது ஆமிக்காரரில் ஒரு ஆறுபேர் ஒவ்வொரு வீடுகளுக்குள்ளேயும் போய் அங்கிருந்த ரி.வி, டெக் போன்ற பல பெறுமதியான பொருட்களைப் பார்த்து எடுத்து வாகனத்தில் ஏற்றினார்கள். பின்பு நாங்கள் இருந்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குள் போய்ப் பார்த்திருக்கிறான்.

அங்கு ரி 81 றைபிள் வெளியாலே சாத்தி வைச்சபடி இருக்க அவன் அதை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். அந்த வீட்டுக்குள் இருந்தவ பின்பக்கத்தால எங்களுடைய வீட்டுக்குள் ஓடி வந்தா. நாங்கள் என்ன பிரச்சினை என்று கேட்டோம். ‘நான் றைபிளை சுவர்கரையில வைச்சிட்டு சமைச்சுக் கொண்டிருந்தன். ஆமி திடீரென்று வந்திட்டான். நான் அவசரத்தில் றைபிளை எடுக்காமல் ஒளிந்துவிட்டேன்.

அவன் வந்து றைபிளை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.’ என்று சொன்னா. உடனே எல்லோரும் அலேட்டாக (தயார் நிலையில்) இருந்தோம். போன ஆமி தன்னுடன் வந்த எல்லாரையும் கூட்டிக் கொண்டு கலைமகள் அக்கா இருந்த வீட்டை சுற்றி வளைத்தான். (சுத்தி ரவுண்ஸ் அடிச்சான்). பிறகு சுற்றியிருந்த ஒவ்வொரு வீடாய்ப் போய்ப் பார்த்தான். நாங்கள் இருந்த வீட்டையும் வந்து பார்த்தான்;. அங்கிருந்த பொருட்களின் பின்னேயும், அவற்றுக்குள்ளேயும் புகுந்து ஒழித்தவாறு, ஒருத்தரும் ஆடியசையாமல் அப்படியே இருந்தோம். வீட்டைச் சும்மா பார்த்துவிட்டுப் போய்விட்டான்.

நாங்கள் அவன் போய்விட்டான் என நினைத்தோம். ஆனால் அவன் போறமாதிரிக் காட்டிவிட்டு, தன்ர ஆட்களை சத்தமின்றி மறைவாக விட்டு விட்டு ரீமை அழைத்துவரப் போயிருக்கிறான். நாங்கள் ஒழித்திருந்த இடங்களில் இருந்து எழும்பி சுத்தி அவதானித்துப் பார்க்கக் கூடியவாறான நிலையில்லை.

எப்போதுமே ஆமி வந்து போன பின்பு மற்ற அணித்தலைவர் (ரீமின்ர லீடர்) எங்களை வந்து எதுவும் பிரச்சினையோ என்று கேட்பது வழக்கம். அன்றும் அவர் எங்களைத் தேடி நாங்கள் இருந்த வீட்டை நோக்கி வந்திருக்கிறார். ஆமி மறைந்து இருந்ததைக் கவனிக்கவில்லை. இவர் வருவதை ஆமி கண்டுவிட்டு ரவுண்ஸ் அடிக்கத் தொடங்க, அவர் கையிலிருந்த குண்டைக் கழற்றி வீசிவிட்டு, ரீம் இருக்கிற வீடுகளின்ர பக்கம் ஓடாமல், ஆமிக்கு திசையைத் திருப்பி வேறுபக்கமாக ஓட, ஆமியும் அவரைத் துரத்திக்கொண்டு ஓடினான்.

பிறகு நானும் பரிதி என்ற அண்ணையும் ஒரு கட்டிலுக்குக் கீழ் ஆடாமல் அசையாமல் ஒரே நிலையில் ஒழிந்தோம். இரவுகளின் தொடர் நித்திரையின்மை, வருத்தம், களைப்பு. நான் அப்போது நித்திரை கொண்டேன். எனக்குக் கனவில் எங்களில் நாலு பேரை உயிரோட போட்டு எரிப்பதாகவும்;, அவர்களில் செல்வியக்காவும் (26 பேருக்குமான லீடர்) இருப்பதாகவும், நான் மாறண்ணாவிடம் போய் ‘வாருங்கள் அம்மாக்களுடன் போவோம்’(எங்கட ரீமில இருக்கிற மலர்மகளைத்தான் செல்லமாக எல்லோரும் அம்மா என்று அழைப்பது. ஏனெனில் அவ எங்களுக்குச் சமைச்சு சாப்பாடு தருவா. அன்பாகக் கவனிப்பா.) என்று சொல்வதாகவும் அந்த நொடிக்குள் கனவுகண்டு திடுக்கிட்டு எழும்பிவிட்டேன்.

கொஞ்ச நேரத்தின் பின்பு திடீரென்று ஆமி ஒருவன் எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றான். அப்போது செல்வியக்காவும் ஒரு அண்ணாவும் தாங்கள் ஒழிஞ்சிருந்த இடத்தைவிட்டு எழும்பி இருந்திருக்கிறார்கள்;. ஆமி வந்ததை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவன் உடனே இருவரையும் சுட்டுவிட்டு வெளியே ஓடிவிட்டான். உடனே எங்களோடு இருந்த மாறண்ணா (அவரும் லீடர்தான்) அந்த இடைவெளிக்குள் குண்டைக் கழற்றி எறிந்துவிட்டு ‘டேய் எல்லாரும் எழும்பி ஓடுங்கடா’ எண்டு கத்திக் கொண்டு தானும் இரண்டு பிள்ளைகளையும் (அம்மா(மலர்மகள்), சுடர்விழி) கூட்டிக் கொண்டு ஓடிவிட்டார்.

நான் உடனே எழும்ப முடியாமல் போய்விட்டது. கைகால்கள் மரத்துப் போயிருந்தது. அதனால் கட்டிலுக்கு கீழிருந்து வரத் தாமதமாகிவிட்டது. அவன் அடிக்கத் தொடங்கிவிட்டான். வாசலுக்கு எழும்பி ஓடினேன். ரவுண்ஸ் கீசியது. இடது கையில் ஒரு குண்டும், வலது கையில் றைபிளும் வச்சுக்கொண்டு முழங்காலைக் குத்திக் கொண்டு பதுங்கிப் போய் குண்டடிப்பம் என எத்தனித்த போது, எனது றைபிளுக்குக் காயம். அப்படியே மெதுவா நகர்ந்த போது ‘சடார்’ என்ற ஒரு சத்தம் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் எனது இடது கைச் சுட்டுவிரல் தொங்கிக்கொண்டு இருந்தது. உடனே வீட்டுக்குள்ளே எழுந்து போனேன். எல்லோருக்கும் காயம். காயத்தின் வலியில் முனகிக்கொண்டிருந்தார்கள். என்னோடு இருந்த பரிதி அண்ணா காயத்தோடு, அவன்ர சுற்றிவளைப்புக்குள்ளேயும், ரவுண்ஸ் அடிக்கையும் றைபிளை எடுத்து சுட்டுக் கொண்டிருந்தார்.

திடீரென்று ‘நான் நல்லா காயப்பட்டுவிட்டேன். நெஞ்சிலும் காயம் என்னாலே இனி தப்ப ஏலாது’ எண்டு சொல்லி குப்பி கடித்துவிட்டார். பிறகு தமிழண்ணா ‘நானும் காயப்பட்டுவிட்டேன். ஒன்றுமே செய்யேலாது. குப்பி கடிக்கவா’ என்று கேட்டார். நான் சொன்னேன் ‘அண்ணா அவசரப்படாதீங்க, இன்னும் சண்டை பிடிச்சு உடைக்கப் பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு அவரையும் கடந்து வந்தேன். ஒரு அண்ணா என்னிடம் கேட்டார் ‘என்ர குப்பி எங்கோ தவறுப்பட்டு போச்சுது. நீ இரண்டு குப்பியல்லவா வைத்திருந்தாய். ஒன்றைத்தாவன்’ என்று கேட்டார். என்னிடமும் ஒன்றுதான் இருந்தது. ‘என்னிடம் இல்லையண்ணா’ என்று சொல்லிவிட்டு ஒளிவதற்கு இடமேதும் இருக்கிறதா என்று பார்த்தேன்.

அங்கிருந்த மேசைக்கு கீழ் முதலில் புகுந்தேன். பின்னர் மெதுவாக நகர்ந்து கட்டிலுக்கு கீழே போய், அதனோடு சாத்திவைக்கப்பட்டிருந்த தகரங்களினுள் இருந்த இடைவெளிக்குள் ஒருவாறாகப் புகுந்து கொண்டு, அங்கிருந்த றபர் வாளி இரண்டை எடுத்து இடைவெளியையும், என்னையும் மறைத்துக் கொண்டு இருந்தேன். காயப்பட்ட கைக்கு ஒன்றுமே செய்யவில்லை. ‘பிளட்’ போய்க்கொண்டே இருந்தது.

சிறிது நேரத்தின் பின்பு ஒரு ஆமி உள்ளுக்குள் வந்தான். தமிழண்ணாவுக்கு தலையிலிருந்து சகல இடத்திலும் காயம். ஆனால் அவர் வீரச்சாவடையவில்லை. ஆமி பார்த்துவிட்டு அவருக்கு ரவுண்ஸ் அடிச்சான். அப்பவும் அவர் வீரச்சாவடையவில்லை. நிறைய ரவுண்சை தூர நின்று அடித்துவிட்டு கிட்டவந்து அவருடைய நெஞ்சிலே சுட்டான். அப்பதான் அவர் வீரச்சாவடைந்தார். பிறகு எல்லா இடமும் சுத்திப் பார்த்தான்.

பாகம் - 4 :

எல்லா இடத்தையும் மேலோட்டமாக பார்த்துவிட்டு திரும்பிப் போய்விட்டான். நான் எல்லாத்தையும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். ஆமி மேலிடத்தோடு தொடர்பு கொண்டான். அதன் பின்பு வாகனமும்;, நிறைய ஆமிக்காரரும் வந்தார்கள். பிறகு வீட்டுக்குள் வந்து ஆட்களை எண்ணினான். எனக்கு மேலே கட்டிலில் ஒரு அண்ணா வேதனையில் துடித்துக் கொண்டு இருந்தார். கட்டிலுக்கு மேலே இருந்து அவரது குருதி (‘பிளட்’) வடிந்துகொண்டேயிருந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. என் கண்முன்னே அவர் துடிப்பதையும், குருதி வழிவதையும் பார்த்துக் கொண்டிருக்க, சிங்களவன் மேல் கோபம் கோபமாக வந்தது. இவங்களை சும்மாவிடக் கூடாது என எண்ணிக்கொண்டேன்.

ஆமிக் கொமாண்டர் வந்து சிங்களத்தில் ஏதோ சொன்னான். ஆமிக்காரர்கள் உடனே சிலர் எல்லாப் பக்கமும் போய் நின்று கொள்ள, சிலர் அங்கங்கே எல்லா இடமும் போய்த் தேடினாங்கள். நான் அந்த வீட்டில் கட்டிலோடு ஓரளவு கிடையாக சாத்தி வைக்கப்பட்டிருந்த தகரங்களின் உள்ளேதான் பதுங்கியிருந்தேன். ஒருத்தன் (ஆமி) மேலே இருந்த தகரங்களை ஒவ்வொன்றாக எடுத்தான். எனக்குப் பயமாக இருந்தது. அடுத்தடுத்த தகரத்தையும் எடுத்தால் சரி நான் இருப்பது தெரியும்.

நான் தகரத்தின் மேல் கையை வைச்சுப் பார்த்தேன். எடுக்கும் போது அதிரும்தானே என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்படி ஏதும் நடந்தால் அடுத்து என்ன செய்யலாம், அவனின் கையில் பிடிபடக் கூடாது என்பதற்காக குப்பியை வாயில் வைத்த வண்ணம் நடப்பதைக் கண்காணித்துக் கொண்டிருந்தேன்;;. அவன் தான் எடுத்த தகரங்களை எண்ணிக்கொண்டு இருந்தான்;. ஒரு ஆமிக்காரன் ஏதோ சொல்லிப் பெரிதாகக் கத்தினான். பின்னர் “வெடித்தியாண்டேப்பா” என்று நிறையத் தரம் கத்தினான்.

உடனே எல்லோரும் அவன் நின்ற பக்கம் ஓடினார்கள். அங்கே காயப்பட்டுக்கிடந்த ஒரு அண்ணனை இழுத்துக் கொண்டு போனார்கள். அவரை வீட்டுக்கு முன்பு இழுத்துக் கொண்டு போய் விட்டுட்டு “உங்களுடைய ஆக்கள் யாரும் ஒளிந்திருந்தால் கூப்பிடு” என்று ஒரு ஆமிக்காரன் சொன்னான். அவர் பேசாமல் இருக்க, சப்பாத்துக் காலால் காயத்தில்; உழக்கி சித்திரவதை செய்தான். அவர் வேதனைக் குரலில் குழறியபடி ‘டேய் அண்ணாக்கள் ஆரும் ஒளிஞ்சிருந்தால் வாங்கோடா’ என்று கத்திக் கூப்பிட்டார். அப்போது ஒரு அண்ணா கையை உயர்த்திக் கொண்டு போனார்.

ஆமிக் கொமாண்டர் ஆ.....நல்லம் நல்லம் என்று சொல்லிக் கொண்டு இரண்டு பேரையும் வாகனத்தில் ஏற்றினான். பிறகு வீட்டுக்குள் வந்து வீரச்சாவடைந்த நாலு பேரையும் இழுத்துக் கொண்டு போய் ஓரிடத்தில் அடுக்கிப் போட்டார்கள். எனக்கு மேலே கட்டிலில் கிடந்த அண்ணனை இழுக்கும்(அவரும் வீரச்சாவடைந்துவிட்டார்) போது ஆமியின் சப்பாத்துக்கால் என்னுடைய காலுக்கு மேலே இருந்தது. (தகரத்தின் மேலே ஏறி நின்றபோது) நான் சத்தம் போடாமல் வேதனையை அடக்கிக் கொண்டிருந்தேன். பிறகு எல்லோரையும் பலமாதிரி போட்டோ எடுத்தான்.

ஒவ்வொருவராகப் பார்த்து ஏதேதோ சிங்களத்தில் எல்லாம் சொன்னான்.
அதன் பிறகு ஆமிக்காரர்கள் அவர்களை இழுத்துக் கொண்டு போய்ப் போட்டுவிட்டு புரட்டிப் புரட்டிப் பார்த்தாங்கள். தமிழண்ணாவின் கோல்சரை வெட்டி எடுத்து ஏதோ சொல்லிச் ‘செக்’; பண்ணிப்பார்த்தபின், எல்லோருடைய உடைகளையும் கழற்றி, அவர்களின் மீது ஏறி நின்று உழக்கியும், அடித்தும் சொல்லமுடியாத செயல்களையெல்லாம் வீரச்சாவடைந்த அவர்களுக்குச் செய்து கொண்டிருந்ததைப் பார்க்க எனக்கு வேதனையாக இருந்தது.

அந்த நால்வரில் பெண் போராளியை (செல்வியக்காவை) வீரச்சாவடைந்த பின்னும் அவங்கள் கூடி நின்று அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தியதைக் கண்ட போது எனக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. அந்த உணர்வு கோபமா அல்லது கொலை வெறியா என்று தெரியவில்லை. வித்துடல்களாக நாங்கள் மரியாதையுடன் விதைப்பவர்களை அவன் செய்த செயல்கள் எனக்குள் மாறாத வடுவாகப் பதிந்தது. அது என்றும் எனக்குள் போராட்டக் கனலை பற்றியெரிய வைத்துக் கொண்டிருக்கும்.

பின்பு வீரச்சாவடைந்த அந்த நால்வரையும் அந்த வீட்டின் முற்றத்தின் மேற்குப்பக்கத்திலே இருந்த தென்னைகளுக்கு கிட்ட இழுத்துக் கொண்டு போய் ஏதோ ஊற்றி எரித்தான். பிறகு வீட்டுக்குள் வந்து எல்லா இடமும் ‘டோச்’ அடித்துப் பார்த்துவிட்டுப் போனான். ஆமிக் கொமாண்டர் நாலுபேரைக் கூப்பிட்டு சிங்களத்தில் ஏதோ சொன்னான். பின்னர் பிடிச்ச இரண்டு பேருடனும் வாகனத்தில் ஏறிப் போய்விட்டான். அந்த நாலுபேரும் அதிலேயே ‘பொசிசன்’ போட்டு நின்றார்கள். மற்றவங்கள் அங்காலப்பக்கம் வேற எங்கட ஆட்கள் இருக்கினமோ என்று கிளியறிங் செய்து கொண்டு போனாங்கள்.

அந்த நேரத்தில் நான் உயிர் தப்பியது அவனோட ஆணவம் கலந்த அலட்சியமும், மாவீரரின் ஆசியும், என்னோட அதிஸ்டமுமாகத்தான் இருக்க வேண்டுமென நினைத்தேன். சம்பவம் நடந்தது பகல் 3.00 மணியிருக்கும். இப்போது இரவு 10.00 மணியாகிவிட்டது. ஆமியின் சத்தத்தைக் காணவில்லை. மெல்ல நேரத்தைப் பார்த்தேன். (நான் கையில் மணிக்கூடு கட்டியிருந்தேன்.) மணி 10. எனவே ஆமி இருக்கமாட்டான் என்று நினைத்தபடியே தகரத்திற்குக் கீழேயிருந்து எழும்ப முற்பட்டேன். ஆனால் முடியவில்லை. ஏனென்றால் பலமணி நேரமாக ஆடாமல் அசையாமல் படுத்திருந்ததால் மிகவும் கஸ்ரப்பட்டு எழும்ப முயற்சி செய்து காயப்பட்ட கையைத் தூக்கினேன்.

கை மண்ணோடு சேர்ந்து ஒட்டியிருந்தது. சரியான வருத்தமாக இருந்தது. பகல் 3.00 மணிக்கு காயப்பட்டு இன்னும் ஒன்றுமே செய்யவில்லை. எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு எழும்பி வெளியே காலை வைத்தேன். உடனே சறுக்கி விழுந்துவிட்டேன். என்னவென்று பார்த்தேன். காயப்பட்ட அண்ணாக்களுடைய இரத்தம் வீடு முழுக்க பரவிக் கிடந்தது. எனக்கு அழுகையும் வந்தது. சிங்கள வெறிபிடித்த அவர்களின் மேலே பயங்கரக் கோபமும் வந்தது.
இதற்கு முதல் அவனோட ரவுண்டப்புக்குள் இருந்த போது, றைபிளை விட்டுவிட்டு ஓடி வந்த கலைமகள் அக்கா எனது பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு “என்ன செய்யிறது” என்று கேட்டா. நான் ‘அக்கா நான் இருக்கிற இடத்திற்கு வாங்கோ’ என்று சொன்னேன்.

நீண்ட நேரமாகியும் அவா வரவில்லை. எனவே அவா பக்கங்களில் எங்கேயாவது ஒளிஞ்சிருப்பா என்று நினைத்துக் கூப்பிட்டுப்பார்த்தேன். ஒரு சத்தத்தையும் காணவில்லை. வீட்டைச் சுற்றி எல்லா இடமும் தேடிப்பார்த்தேன். அவாவின் தொடர்பு கிடைக்கவில்லை. நான் தான் தனித்துப் போய் நின்றேன். எனவே எங்களின் அணியிலுள்ள மற்ற ஆட்களைத் தேட வேண்டுமென்று அங்கிருந்த துணியை எடுத்து கைக்காயத்துக்கு சுற்றிக் கொண்டு, எனது றைபிளையும் எடுத்துக்கொண்டு நான் காயப்பட்ட இடத்துக்கு மீண்டும் வந்தேன்.

என்னிடம் இப்ப ஒரு குண்டும், 30 ரவுண்ஸ்சும்தான் இருக்கிறது. எனவே நான் போக வேண்டிய தூரமும், தரப்பட்ட வேலையும் மனதில் வந்தது. எனவே மற்றவர்களைத் தேடிப் போகமுன், நான் காயப்படுமுன் கையிலே ஒரு குண்டு வைத்திருந்தேன். அதையும் எடுத்தால் உதவியாக இருக்கும் என்று போய்த் தடவிப்பார்த்து ஒருமாதிரி எடுத்துவிட்டேன். எடுத்துக் குண்டைப் பார்த்தால் குண்டின் பாதி ‘லிபர்’ஐக் காணவில்லை.

கிளிப்போடு ஒரு கொஞ்ச ‘லிபர்’ தான் இருந்தது. உடனே குண்டை அப்படியே வைத்துவிட்டேன். சண்டையின் போது பாதிலிபர் பறந்திருக்கிறது. கொஞ்சம் மேலே பட்டு லிபர் முழுக்க விடுபட்டிருந்தால் குண்டு வெடித்திருக்கும் என்று நினைத்துவிட்டு, மெதுவாக வெளியால் வந்து எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு எங்களுடைய மற்ற அணி இருந்த வீட்டுக்குப் போவமென்று பார்த்தேன். ஆமி எங்கே இருக்கிறான் என்று ஒன்றும் தெரியாது. எனவே ஒரு வெட்டையொன்று ( கொஞ்ச சின்னப் பற்றைகள் கொண்ட வெளி) இருந்தது.

அதனூடாக நடந்து போனால் தெரியும். அப்படியென்றால் ஊர்ந்து தான் போகவேண்டும். எனவே ஒருமாதிரி றைபிளையும் தூக்கி வைச்சு, வைச்சுக் ‘குறோள்’ இழுத்துப் போனேன். இரத்தம் போய்க்கொண்டே இருந்தது. இரத்தம் வழிந்த தடயத்தைப் பார்த்தால் அவன் கண்டிடுவான் என்று மிகவும் அவதானமாகத்தான் நகர்ந்து அவர்கள் இருந்த வீட்டைப் போய்ப் பார்த்தேன். எவருமில்லை. கூப்பிட்டுப் பார்த்தேன். எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

நாங்கள் இருந்த எல்லா இடங்களிலும் போய்ப்பார்த்துக் கூப்பிட்டேன். பதில் வரவில்லை. எப்படி அவர்களைத் தேடுவது என்றெண்ணிக் கொண்டு திரும்பவும் நான் இருந்த வீட்டிற்கு வந்தேன். அப்போது மூன்று ஆமிக்காரர்கள் ‘டோச்’ அடிச்சுக்கொண்டு வந்தார்கள். நான் வேகமாக வேலியைக் கடந்து ஒரு வயல் வெட்டையிலிருந்த பெரிய வாய்க்கால் ஒன்றுக்குள் படுத்துக் கொண்டேன். காயத்திற்கு ஒரு மெல்லிய துணியினால் கட்டியிருந்தேன். அது துணியையும் மிஞ்சி இரத்தம் கசிந்து கொண்டிருந்தது...........

பாகம் - 5

வந்த ஆமிக்காரர்கள் அங்கேயிருந்த ஒவ்வொரு ஓலை வீடுகளையும் எரித்துக் கொண்டு வந்தார்கள். ஓலை வீடுகள் எரிந்த வெளிச்சத்தில் எல்லா இடமும் வடிவாகத் தெரிந்தது.


அந்த தீச் சுவாலைகளைப் பார்த்த நான், வீரச்சாவடைந்த எங்கட நான்கு வீரர்களுக்கும் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு இருப்பது போல உணர்ந்தேன். அப்போது மனதில் உறுதியெடுத்துக் கொண்டேன். எப்படியாவது போய்ச் சேர்ந்து நடந்தவற்றை தலைமைக்குச் சொல்ல வேண்டுமென்று. அப்படியே படுத்துக்கிடந்தபடி பார்த்துக் கொண்டேயே இருந்தேன். அவன் சகல வீடுகளையும் எரித்துவிட்டு சற்று நேரத்தில் அவ்விடத்தை விட்டுப்போய்விட்டான். என்னை நுளம்புகள் தின்று கொண்டிருந்தன.

ஒருவாறாக எழும்பி திரும்பவும் எங்கட ஆட்களின் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டு போனேன். மனத்தினுள் ஆமி எங்கேயாவது மறைந்து நின்று அவதானிக்கிறானா என்று சுற்றிலும் பார்த்தவாறே அவர்களைத் தேடிக்கொண்டிருந்தேன்.

நான் நிமலன் அண்ணாவிடம், இதற்கு முதல் நாட்தான் “அண்ணா! எப்போதுமே அடிகிடைச்சா எல்லோரும் என்னை விட்டுவிட்டு ஓடிவிடுவாங்க. நீங்களாவது என்னைக் கூட்டிக்கொண்டு போங்க” எனச் சொன்னேன். அதேபோல இன்று தனிமையாகிப் போனேன். முதல்நாள் பகல் நாங்கள் தங்கியிருந்த வீட்டிலே மருந்துப் பொருட்கள் கொஞ்சம் கிடந்தது. அதோடு காயத்திற்குக் கட்டும் கோசும் (துணிகள்) கிடந்தது. “அண்ணா சிலவேளை இது நமக்குத் தேவைப்படும் என்று சொல்லிக் கொண்டு அதையும் எடுத்து எனது பைக்குள் வைத்தேன். அதுவும் இன்றைய நிலைக்கு சரியாகிவிட்டது.

என்ன செய்வது என்று நினைத்துக்கொண்டு, இனித் தொடர்ந்து இங்கிருந்து ஒன்றுமே செய்யமுடியாது. எனவே எங்களுடைய மற்ற ஆட்களையும் தேடுவதோடு, தரப்பட்ட வேலையையும் செய்ய வேண்டும். அதோட இங்கு நடந்த சம்பவங்களை மெயினுக்கும் தெரியப்படுத்த வேண்டும். எனவே அதற்குத் தேவையான ஒழுங்கைச் செய்து கொண்டு நகர்வதற்காக, சுற்றும் அவதானித்தபடி மீண்டும் நான் காயப்பட்ட வீட்டுக்குப் போய் இரண்டு தண்ணிப் போத்தலும் 5 நாளுக்கு ஏற்றமாதிரிச் சாப்பாடும் எடுத்துக் கொண்டு றோட்டடிக்கு வந்தேன். ஆமி ரோச்சடிச்சுப் பார்த்துக் கொண்டு நின்றான். நான் அதை விலத்திப் போவதற்காக பற்றை ஒன்றிற்குள் இருந்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தேன்.

திடீரென்று 200 மீற்றர் தூரத்தில் ஆமியின் சத்தமும், பெரும் வெடியோசை ஒன்றும் கேட்டது. அதைத்தொடர்ந்து பெரிதாகக் குழறிய சத்தங்களும் கேட்டது. பிறகு ஆமியின் ரவுண்ஸ் அடி எல்லாப்பக்கமும் இலக்கின்றி அடிக்கப்பட்டது. கொஞ்சநேரத்தில் மயான அமைதியொன்று நிலவிய பிரதேசமாக காட்சியளித்தது அப்பகுதி. அந்த வெடியோசை எங்கட ஆட்களில் யாரோ சார்ஜர் இழுத்ததால் ஏற்பட்டது தான் என்பது எனக்குத் தெளிவாக விளங்கியது. ஆமிக்கு ஏதோ இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஏனெனில் ஒரே ரவுண்ஸ்;மழையைப் பொழிந்ததோடு மட்டுமல்லாது, சற்று நேரத்தில் வாகனங்களும் கூடுதலான ஆட்களும் (ஆமி) கொண்டுவந்து குவிக்கப்பட்டதோடு, எல்லா இடங்களையும் கிளியறிங் செய்ததோடு, அப்பிரதேசம் முழுவதும் யாரும் நகரமுடியாதவாறு பொசிசன் போட்டபடியிருந்தான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எப்படி வெளியேறுவது என்று எனக்குத் தெரியவில்லை.

நாய்கள் குரைத்துக் கொண்டே இருந்தன. எனக்கு முன்னால் நிறைய நாய்கள் கூட்டமாக படுத்துக் கிடந்தன. நாய்கள்; என்னைக் கண்டு குரைத்தால் ஆமி அலேட்டாயிடுவான். என்ன செய்வது என்று யோசித்தேன். ஆமி எங்கே இருக்கிறான் என்று ஒன்றுமே தெரியாது. எனக்கு முன்னுக்குள்ள தெருவுக்கு மற்றப்பக்கம் ஆமி இருந்தாலும் இருப்பான் எதற்கும் ஆயத்தமாகப் போவோம் என்று சேப்ரியைத் தட்டி விட்டு, குண்டடிக்கிறதென்றால் கையேலாது. என்ன செய்வது முட்டுப்பட்டா யார் முந்திறமோ அவன் தான் பிழைப்பான். எனவே கட்டாயம் குண்டடிக்கத்தான் வேண்டும். எனவே கிளிப்பை வாயால் கழற்றிவிட்டு வீசுவமென்று எல்லாத் தயார் நிலையிலும் மெதுவாக நாய்க்குச் சத்தம் கேட்காதவாறு நடந்து, ஒருமாதிரி மறுபக்கம் போய்ச் சேர்ந்துவிட்டேன்.

பொழுது விடியப் போகிறது. சுற்றும் முற்றும் பார்த்துப் பார்த்து அருவியடிக்கு வந்துவிட்டேன். அருவியில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருந்தது. ஓர் இடத்தில் இறங்கிப் பார்த்தேன். அப்படியே உள்ளுக்குள்ளே போக டக்கென்று மரத்தை எட்டிப்பிடித்து ஏறிவிட்டேன். பிறகு எல்லாப் பக்கமும் போய்ப் பார்த்தேன். விடியவும் போகிறது அதற்குள்ளேயே இருட்டோடு இருட்டாக கடந்திட வேண்டும். நான் நின்ற இடத்துக்கு பக்கத்தில பெரிய மரமொன்று அப்பிடியே அருவிக்கு நடுவில் விழுந்து கிடந்தது. உடனே அதில் ஒருமாதிரி கஸ்ரப்பட்டு ஏறி, அங்கே பிடித்து, இங்கே பிடித்து மெதுமெதுவாக கரைக்குக் கிட்ட வந்துவிட்டேன். கரைக்கு ஒரு பத்து மீற்றர் இருந்தது. உடனே அருவிக்குள் இறங்கினேன். நெஞ்சு மட்டத்திற்கு தண்ணீர். காயப்பட்ட கையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு மெதுவாக காலால் துழாவியபடி நடந்தேன். பள்ளம் இருக்கிற இடங்கூடத் தெரியாது என்றுதான் அப்படிச் செய்தேன். ஒரு மாதிரி கரைக்கும் வந்துவிட்டேன்.

ஓரளவு விடிந்து கொண்டு வருகிறது. சரியான களைப்பாகவும், வேதனையாகவும் இருந்தது. இலந்தை முள்ளுப் பற்றையின் முள்ளுங் குத்துகிறது. நுளம்பும் கடிக்கிறது. அப்படியே ஒரு கூடலுக்குள் போய் அதிலிருந்த புத்து ஒன்றில் சாய்ந்து நித்திரை கொண்டேன். ஆனால் நித்திரையே வரவில்லை. நனைந்தது வேறு குளிர்கிறது, கை வேறு வலியில் குத்துகிறது, அத்துடன் சேர்ந்து நுளம்புங் கடிக்கிறது. இயலாமல் போய் தலையைச் சுற்றியது, அப்படியே மயங்கிவிட்டேன் போலவிருக்கிறது.

கொஞ்ச நேரத்தால் திடுக்கிட்டு முழித்துப் பார்த்தபோது நன்றாக விடிந்து மணி ஏழாகியிருந்தது. அங்கிருந்து எழும்பிப் பார்த்த போது முன் பக்கம் பாதை மாதிரிப் போனது. அந்தப் பாதை வழியே போய்ப் பார்த்தேன். அங்காலப் பக்கக்கரை தெரிந்தது. ஆமியுடைய பழைய பொசிசன்களும் இருந்தது. பிறகு கொஞ்சம் தள்ளிப் போய்ப் பார்த்தேன். சனம் விட்டுட்டுப் போன பொருட்களும், உடுப்புக்களும் இருந்தன. அவ்விடத்தில் ஒருவித துர்நாற்றம் வீசியது. கிட்டப் போய்ப் பார்த்தேன். மனிச எலும்புக்கூடுகள் அவ்விடத்தில் நிறைய இருந்தன. இறந்தவர்களின் உடல்கள் புதைக்கவோ எரிக்கவோ படாமல் அப்படியே கிடந்து புழுக்களால் தின்னப்பட்டும், அழுகியும் போயிருந்தது. அது அவனால் கொல்லப்பட்ட எங்கட மக்களோடதாகத்தான் இருக்கும்.

மற்றப்பக்கம் போய்ப் பார்த்தேன்; அங்கிருந்த வீடொன்றில் ஒரு பை (பேக்கும்) கிடந்தது. அது யு.என்.சி.எச்.ஆர் கொடுத்த நீலப் புத்தகப்பை. அதையும் எடுத்துக் கொண்டு, அங்கிருந்த சாரங்கள் தண்ணியில் ஊறி சுருட்டி மடித்து வைத்தபடி காய்ந்து கிடந்தது. அதை எடுத்து பையுக்குள் வைத்தேன். பிறகுஅங்கிருந்த பொருட்களைக் கிண்டிப் பார்த்தேன். கத்தரிக்கோலும் ஒரு சேட்டும் கிடந்தது. அதையும் எடுத்தேன். கத்தரிக்கோல் இருந்தால் துணியை வெட்டச் சத்தம் கேட்காது. சாரத்தைக் கிழித்தால் சத்தம் கேட்கும் என்று நினைத்து அதையும் எடுத்தேன். திடீரென்று ஆமி வாற சத்தம் கேட்டது. எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு, நான் மறைந்திருந்த இடத்துக்குப் போனேன். நான் நின்ற பக்கம்தான் சத்தம் கேட்டது.

பாகம் - 6 :

உடனே எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டேன். பற்றைக்காடுதானே அவதானித்து நகருவமென்று. நகர்ந்து கொண்டு இருந்தேன். அப்போது நேற்று சம்பவம் நடந்த பக்கம் சத்தம் கேட்டது. நான் நிற்கிற பக்கமும் கேட்டது. ஆமி ‘கிளியறிங்’ செய்து கொண்டு போற சத்தம் அது.

நான் காட்டுக்குள்ளால் வந்து கொண்டிருந்தேன். பெரிய அருவியின் கிளைகள் நிறைய இருந்தது. முதல் அருவியிலும் மரம் ஒன்று விழுந்து கிடந்தது. அது மெல்லியமரம் கொடியொன்று தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு தடியை எடுத்து ஆழம் பார்த்தேன். இதுவும் ஆழமாகத்தான் இருந்தது. தடியை ஊன்றிக் கொண்டு மெதுவாக மரத்தில் காலை வைத்துப் போனேன். கொடிக்குக் கிட்டப் போக மாறி மாறி உருளப் பார்த்தது. நான் உடனே இடது கைக் கமக்கட்டுக்குள் தடியை வைத்துவிட்டு மற்றக் கையால் கொடியைப் பிடித்துவிட்டேன். மரம் அங்கே இங்கேயென்று ஆடியது.

ஒரு மாதிரி கொடியைப் பிடித்துப் பிடித்து கரைக்குக் கிட்டப் போக மரம் தூக்கிவிட்டது. உடனே தடியை ஊன்றி ஒரு காலை கீழே வைத்துப்பார்த்தேன். தாழம் இல்லை. உடனே இறங்கி நடந்து மேலே ஏறி நடந்தேன். பிறகுமொரு அருவி அதில் இடுப்பளவிற்கு தண்ணீர். கரையில் ஏறி பள்ளமான பக்கத்தில் காலை வைத்துவிட்டு முன்னுக்குப் பார்த்தேன் ஆமியுடைய ‘சூ’ (சப்பாத்து) அடையாளம் இருந்தது. நிலம் ஒரே சுரியாக இருந்தது. அப்பதான் அவ்விடத்தால் ஆமி போயிருக்கிறான். நான் அந்தக் காலடிக்கு மேலேதான் காலை வைத்திருக்கிறேன். உடனே அதை அழித்துவிட்டு எல்லா இடமும் சுற்றிப் பார்த்துவிட்டு வேகமாய்ப் போய் ஒரு பற்றைக்குள் இருந்துவிட்டேன். அருவிக்கரையோரம் ஆமியின் சத்தம் கேட்டது.

ஆமி அருவிக்கு அங்கால சத்தம் போட்டு ‘கிளியறிங்’ செய்து கொண்டு போனான். எல்லா ‘பங்கர்’களுக்கும் குண்டடித்தான். திடீரென்று மளமளவெண்டு ‘ரவுண்ஸ்’ சத்தம் கேட்டது. மாறிமாறிச் சத்தம் போட்டுக் கத்தினான். எங்களுடைய ஆட்களைக் கண்டு சுட்டிருக்கிறான். அதைத்தொடர்ந்து மாறிமாறி இருபகுதியினரின் ரவுண்ஸ் அடியும், குண்டெறிந்து, வெடித்த சத்தங்களுமாக அவ்விடம் அதிர்ந்து ஓய்ந்தது. பிறகு நெருப்பு எரிந்து புகைவது தெரிந்தது. எனக்கு இன்னும் கவலை கூடியது.

எல்லாத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன்; கோபமும் கூடியது. கறள் படிந்த நாட்களும் சம்பவங்களும் என்று யாராவது பழைய கதைகள் சொன்னாலே நான் அழுதிடுவேன். இப்ப நேரே பார்த்து அழவேண்டிய நிலை. மனது சரியாக நோகிறது, பாரமாக இருந்தது. யாரிடமாவது சொல்லிப் பெரிதாக அழவேண்டும் போல இருந்தது. என்ன செய்வது. எதுவுமே செய்யமுடியாத பரிதாப நிலையில் நான். என்னுடன் இருந்து பலகாலமாகப் பழகி, ஒன்றாக உண்டு, பயிற்சி எடுத்து, படுத்து, விளையாடியவர்கள் எனக்கு முன்னாலேயே எரிந்து சாம்பலாகிவிட்டார்களே என்ற ஒரு வெறி. இப்ப போய் அவனைக் குத்திக்கிழிக்க வேண்டும் போல இருந்தது.

அந்தப் பற்றைக்குள்ளிருந்தே எடுத்துக் கொண்டுவந்த சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு இருந்தேன். இந்தச் சம்பவம் 4ஆம் மாதம் 6ம் திகதி நடந்தது. இரவு ஆனதும் அருவியால் இறங்கி திரும்பவும் அந்தப்பக்கம் வந்தேன். முழு வெட்டை. தூரத்தில் வாகனச் சத்தம் கேட்டது. பற்றை ஓரமாக நடந்தால் தூரத்தில் இருந்து பார்த்தால் அசைவு தெரியாது. நிலவாகவும் இருந்தது. கொஞ்சத் தூரம் நகர்ந்தேன். மிகவும் வெளிச்சமாக இருந்தது. அதனால் வெட்டையப் பாக்கக்கூடிய மாதிரி ஒரு பற்றைக்குள் இருந்து நித்திரை கொண்டேன். விழித்துப் பார்த்தபோது வெட்டையில் ஒரு 200 அடி தூரத்தில் வெளிச்சம் (‘டோச்’) தெரிந்தது.

திடீரென்று ஆமி கத்திச் சத்தம் கேட்டது. அந்தச் சத்தத்துடன் துப்பாக்கிச் சத்தமும் கேட்டது. நேரத்தைப் பார்த்தேன் இரவு 2.20. பின்னர் ஆமிக்காரர் யாரோ ஒருவரை தரதரவென இழுப்பது போல தெரிந்தது. நிலவாக இருந்தபோதும் தெளிவாகத் தெரியவில்லை. நான் பற்றைக்குள் நன்றாக உட்புகுந்து ஒளித்தவாறே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தேன். அது எங்கட ஆட்களில் யாரோ தன்னைத்தானே சுட்டு வீரச்சாவடைந்திருக்கவேண்டும் அவருடைய உடலைத்தான் ஏதோ சொல்லி கத்திக் கத்தி இழுத்துக் கொண்டு வந்தார்கள். அடுத்து, எனது நிலையை எண்ணி, தயாராக குண்டை எடுத்து கிளிப்பைக் வாயால் கழற்றக் கூடியவாறாக வைத்தபடியே குப்பியையும் எடுத்து கடிக்கக் கூடியநிலையில் தயாராக வைத்தபடியே இருந்தேன்.

விடுபட்ட ஆக்கள் இரவுக்கு நகருவார்கள் என்று ‘கட்டவுட்’ போட்டிருந்தான். எனக்குப் பக்கத்தில் ஒரு 100 அடியில் இன்னொரு ஆமியின் ரீம் நின்றது. நாய் குரைத்துச் சத்தம் கேட்டது. நான் இனி இங்கே இருக்கக்கூடாது என்று நினைத்து அருவியைக்கடந்து அங்காலே போவமென்று எழும்பினேன். ஆமி அந்த உடலை இழுத்துக் கொண்டு போய் வெட்டையான பகுதியில் போட்டுவிட்டு தனது தொலைபேசியால் போட்டோ எடுத்தான்;. அதிலேயே வைத்து அந்த உடலை எரித்துவிட்டு, தான் வந்த திசைக்கு றவுண்ஸ் அடித்துப் பார்த்தான். நிலவுதானே எல்லாம் தெரிந்தது.

நான் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அருவிக்குள் இறங்கி நடந்து போனேன். பெரிய ஆழமில்லை. அங்கால் கரையில் எருமைமாடுகள் மேய்ந்து கொண்டு நின்றன. நான் வருவதைக் கண்டுவிட்டு, நான் கரையில் ஏற அதுவும் எனக்குக் கிட்ட வந்தது. எனக்கு உடனே என்ன செய்வது என்ற தெரியவில்லை. இந்த இக்கட்டான நேரத்தில் இது வேறு துன்பமா? இவ்வளவு றவுண்ஸ் அடிக்கும்போதும் ஒரு மாதிரி தப்பிவிட்டேன்.

இனி இந்த மாட்டைக் கலைக்கப் போய் அவனிட்டை அல்லது மாட்டிடம் அகப்படத்தான் போகிறேன் என்று நினைத்தவாறு ‘சூய்’ என்று கலைத்துப் பார்த்தேன். எல்லா மாடுகளும் கொஞ்சத் தூரம் ஓடின. நான் அதற்கிடையில் பக்கத்தில் உள்ள பற்றைக்குள் புகுந்துவிட்டேன்;. எருமைமாடு வந்து பார்த்தது. நான் ஆடிஅசையாமல் அப்படியே இருக்க தன்பாட்டிலே போய்விட்டது. நிலவு மறையவில்லை நகர்ந்தால் தெரியும். அதனால் பற்றைக்குள்ளேயே இருந்தேன்.

நான் பகலில் நல்ல பற்றையாகப் பார்த்து புகுந்திருந்து நித்திரை கொள்வேன். அவதானிக்க வேண்டிய பிரதேசமென்றால் விழிப்பாக இருப்பேன். முழு நகர்வும் இரவில்தான். நாய்களால் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. நிலவு மறைய எழும்பி அருவிக்கரை ஓரமாக நடந்து போனேன்.

புதுக்குடியிருப்புக்கும் கிளிநொச்சிக்கும் போய்வருகிற பிரதான தெரு அது. அதிலிருந்து ஒரு 100 அடி தூரத்தில் நின்று, எப்படியாவது றோட்டைக் கடக்கவேண்டுமென்று பார்த்தேன். நடமாட்டம் கூடவாக இருந்தது. உடனே தண்ணீருக்காலே இறங்கி நடந்தேன். மணியைப் பார்க்க மறந்திட்டேன். தடியொன்றையும் எடுத்துக்கொண்டு போனேன். விடிய வெளிக்கிட்டுவிட்டு என்ன செய்வது. பாலத்தால் போனால் ஆமி பாத்திடுவான் என்று நினைத்துவிட்டு திரும்பவந்து ஒரு பற்றையைப் பார்த்து இருந்துவிட்டேன்;.

அன்று மதியம் ஆமி வரும் சத்தம் கிட்டக் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் எனக்கு நேரே ஒரு ‘பொசிசன்’ போட ஒருவன் கிடங்கு கிண்டுகிறான்;. ஒருவன் தடி வெட்டுகிறான்.


பாகம் - 7 :


நான் ஆடி அசைந்தால் அவன்(ஆமி) கண்டுவிடுவான். அருவியின் மறுபக்கம் நான்;. எதிர்ப்பக்கம் அவன்;. எறும்புகள் நிறைய காயப்பட்ட கையை மொய்த்துவிட்டது. உள்ளுக்குள்ளே புகுந்து கடித்தது. தாங்க முடியாத வேதனையாக இருந்தது. ஒன்றும் செய்யமுடியவில்லை. முன்னாலே ஆமிநிற்கிறான். வாயை இறுக்கிப் பொத்தியபடியே அழுதேன்.

அன்றைய பொழுதும் ஒருவாறாகக் கழிந்தது. நன்றாக இருண்டு நிலவு மறையும் வரைக்கும் இருந்தேன். பிறகு எழும்பிப்போய் கிளிநொச்சிப் பக்கமாக விலத்திப் பார்த்தேன். விடியப்போகுது ஓர் இடத்தில் கிணறு இருந்தது. அதைச்சுற்றிப் பற்றைகள் இருந்தது அதற்குள்ளேயே இருந்துவிட்டேன்.

விடிந்த பின்பு காயத்துக்கு கட்டிய துண்டை அவிழ்த்து காயத்தைச் சுத்தம் செய்தேன். விரல் தொங்கிக் கொண்டு இருக்க கஸ்ரமாக இருந்தது. கத்தரிக்கோலை எடுத்து வெட்டிப்பார்த்தேன். வெட்டுப்படவில்லை. பிறகு முழுப்பலத்தையும் கொடுத்து வெட்டிப் பார்த்தேன். வெட்டவே இயலாமல் கைதான் வேதனையில் வலித்தது. பின்பு காயத்தைக் கட்டிவிட்டு தடயங்களை மறைத்துவிட்டு அவ்விடத்திலேயே இருந்தேன்;. கதைத்துச் சத்தம் கேட்டது. நன்றாக மறைந்து இருந்தேன். எனக்கு முன்னுக்கு மெயின்றோட். வாகன நடமாட்டம் அப்படியே தெரிந்தது. ஆனால் ஆமி நின்று ‘பொசிசன்’ வேலை செய்து கொண்டிருந்தான்.

சற்று நேரத்தால் எனக்குப் பின்னால் சரசரவெனச் சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன்; பெரிய விரியன் பாம்பு ஒன்று என்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதென்ன கொடுமை. எருமைமாடு துரத்தியது, இப்ப பாம்பு. கடித்தால் வீணாகச் சாகப் போகிறேனே என்று நினைத்துவிட்டு சின்னக் கல்லொன்றை எடுத்து எறிந்தேன். உடனே பாம்பு ஓடிவிட்டது.

அடிக்கடி கெலியெல்லாம் எனக்கு மேலாலே பறந்து போக கோபம்தான் வந்தது.(எங்கட ஆட்களின் எதிர்தாக்குதலில் காயப்பட்ட ஆமியை ஏற்றி இறக்கிக் கொண்டிருக்கிறாங்கள் என்று நினைத்தேன்.) என்ன செய்வது தனிய நின்று பிரயோசனமில்லை. இருட்டியபின்பு எழுந்து ஒரு வீட்டினுள் போனேன். அங்கே கொய்யாக்காயும், மாங்காயும் இருந்தன. பிடுங்கி பையினுள் போட்டுக் கொண்டு வேறு பாதையால் போகலாமா என்று பார்ப்போம் என்று கொஞ்சம் பின்னுக்குப் போனேன். மழை தூறத்தொடங்கியது. பொலித்தீனால் காயத்தைக் கட்டிவிட்டு வெளிக்கிட்டுப் போனேன். முன்னுக்கு மூன்று பேர் வருவதைபோல் இருந்தது. நான் ஒரே கடவுளிடம் கேட்கிறனான். கடவுளே! எங்களுடைய அணியில் யாரையாவது சந்திக்க வேண்டும் என்று. முன்னுக்கு மூன்று பேர் வர மனதுக்கு சந்தோசமாக இருந்தது.

பிறகு யோசித்தேன் “சீ சிலவேளை ஆமியாக இருக்குமோ? எதற்கும் ஒளிந்திருந்து பார்ப்போம்” என்று ஒரு வீட்டு ஓரமாக ஒளிந்து நின்று பார்த்தேன். அது ஆமி. எனக்குச் சரியான கவலையாகப் போய்விட்டது. நான் எதிர்பார்த்தது ஏதோ நடந்தது ஏதோ. பிறகு கொஞ்சம் முன்னுக்குப் போய்ப் பார்த்தேன். யாரோ கதைக்கிற சத்தம் கேட்டது. ஆமி ‘கட்டவுட்’ போட்டு நிற்கிறான். வேகமாக திரும்பி, வந்த பக்கமே வந்து ஒரு வீட்டுக்குள் இருந்தேன். எனக்குத் தேவையான சில பொருட்களை எடுத்து பையினுள் வைத்தேன். மழைவரப் போகிறது எனவே அந்த வீட்டிலிருந்த ஒரு யூரியாப் பையையும் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தேன்;. மழை இரையும் சத்தம் கேட்டது. நான் ஒரு பாழடைந்த வீட்டைப் பார்த்து இருந்துவிட்டேன்.

திடீரென்று ஓடிச் சத்தம் கேட்டது. இருட்டவும் போகிறது. மெதுவாக எழும்பிப் பார்த்தேன் ‘கட்டவுட்’ நின்ற ஆமிக்காரர்கள் மழை என்றவுடனே ஒவ்வொரு வீட்டினுள்ளேயும் போய் இருந்தார்கள். நான் உடனே எல்லாத்தையும் எடுத்துக்கொண்டு பாழடைந்த கிணறு ஒன்று இருந்தது. கரையெல்லாம் மரங்கள் முளைத்திருந்தது. அதற்குள்ளே போய் இருந்துவிட்டேன்;. கிட்ட வந்து நன்றாக எட்டிப் பார்த்தால் மட்டுந்தான் தெரியும்.

பிறகு மழை அடிச்சு ஊற்றத் தொடங்கியது. ஆமிக்காரன் கதைக்கிற சத்தம் மட்டும் கேட்டது. மழை விடவேயில்லை. இரவாகிவிட்டது. எனக்கு நல்ல சந்தர்ப்பம்தானே உடனே எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு வெளிக்கிட்டேன். மெயின்றோட்டைக் கடக்கலாமா என்று யோசித்தேன். பிறகு ‘சீ இதுக்கு நேரே கட்டாயம் ஒரு பொசிசன் இருக்கும்’ என்று நினைத்து முதல்நாள் இருந்த இடத்திற்கு வந்தேன்.

அப்படியே அருவிக் கரையைப் பிடித்து ‘பென்ற்’பண்ணிக் கொண்டு றோட்டைக் கடந்துவிட்டேன். ‘அப்பாடா இப்பதான் நிம்மதி’ என்று நினைத்தேன்;. முழுக்க வெட்டைவெளி. அருவிக் கரையோரமாக இருந்த வீடுகள் உடைந்து கிடந்தன. ஆமி வெட்டை முழுவதிலும் 50 அடி தூரத்துக்கு ஒரு பொசிசன் படி போட்டிருந்தான். மழைத்தண்ணி ஓடிக்கொண்டிருந்தது. வயல் எது வரம்பு எது என்றுகூடத் தெரியவில்லை.

விழுந்து எழும்பி ஒருமாதிரி அருவிக்கரைக்கும் கிட்டப் போய்விட்டேன். அருவியில் இறங்கி ஆழம் பார்த்தேன். போகவே இயலாது. ஓர் இடத்தில் பையையும், றைபிளையும் வைத்துவிட்டு, ஆமியுடைய பழைய பொசிசன் இருந்தது. அதில் பெரிய நீல ‘லொக்ரீப்’ ஒன்று இருந்தது. அதை எடுத்து உருட்டிக்கொண்டு வந்தேன். அதுக்கு மேல் றைபிளையும் பையையும் வைத்து அதைப்பிடித்துக் கொண்டு நீந்திப் போவம் என்று நினைத்து இறங்கினேன். மற்றக் கரையில் ஆமியின் பொசிசன் இருந்தது எனக்குத் தெரியாது. எனது சத்தத்தைக் கேட்டு நாய் குரைத்தது. நான் சத்தம் போடாமல் நின்றேன். பின்பு இப்படிப் போக இயலாது என்று நினைத்து பையையும் றைபிளையும் எடுத்துக் கொண்டு அருவிக் கரையோரமாகப் போனேன்.

இடையிடையே இறங்கி ஆழம் பார்த்துப் பார்த்துப் போனேன். ஓர் இடத்தில் தென்னந்தோப்பு அதற்குள்ளே சின்னவீடு ஒன்று இருந்தது. அதில் ஒரு றபர் வாளி கிடந்தது. நான் அந்த வாளியை எடுத்துக் கொண்டு அருவிக்குள் இறங்கி ஆழம்பார்த்தேன். எல்லா இடமும் ஆழமாகத்தான் இருந்தது. எடுத்துவந்த வாளியைப் பயன்படுத்தலாம் என்று நினைத்தேன். எனது பையையும் வடிவாக கொழுவினேன். றைபிளையும் முன்னுக்குக் கொழுவிவிட்டு மெதுவாக அருவிக்குள் இறங்கினேன். வாளியை கவிட்டுப் பிடித்துக் கொண்டு காயக் கையை வாளிக்கு மேல் விளிம்பில் வைத்தேன்.

அப்பிடியே மெதுவாக உந்தினேன். தண்ணி ஓடும் பக்கம் உந்தி உந்திப் போய் ஒருமாதிரி கரையில் இருந்த ஒரு மரத்தை எட்டிப் பிடித்து வாளியை அந்தக் கரையில் போட்டுவிட்டு, ஒருமாதிரி ஒற்றைக் கையாலே முயற்சி செய்து ஏறிவிட்டேன். ஏறியதும் எல்லாப் பக்கமும் சுற்றி அவதானித்து, இனி என்ன பெரிய தடை நீங்கின மாதிரி நினைத்துக்கொண்டு நகரத் தொடங்கினேன். வெறும் வயல் வெட்டை. உடையார்கட்டுக் கடைசிப்பகுதி. நான் அடிபட்டது இருட்டுமடுவில். ஒருமாதிரி எனது உறுதியால் இவ்வளவு தூரம் வந்துவிட்டேன். இனி வேகமாகப் போகவேண்டுமென்று நடந்தேன்.

இவ்வளவு துன்பங்களைத் தாண்டிக்கொண்டு எப்படி எங்கட ஆட்களிடம் போய்ச் சேர்வது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று சோர்ந்து போனேன். அப்போது தலைவர் எங்களது அணிகளைச் சந்தித்த போது சொன்ன விடயங்கள் நினைவுக்கு வந்தது. அது மனதுக்கு உறுதியைத் தர, இங்கிருந்து தளத்திற்கு போகும் போது பிரயோசனமான தகவல்களைச் சேகரித்துக் கொண்டு போவது என்றும் அவனிடம் (ஆமியிடம்) பிடிபடக் கூடாது என்றும் அப்படி முட்டுப்படும் நிலை வந்தால் அவனையும் அழித்துவிட்டுத்தான் நான் சாகவேண்டும் எனவும் முடிவெடுத்தபின் நிம்மதியாக அடுத்துச் செய்ய வேண்டியது பற்றி திட்டமிட்டேன்.

பாகம் - 8:

பசிக்கத் தொடங்கிவிட்டது. சாப்பிட மாங்காய் மட்டும்தான் இருந்தது. மாங்காயை எடுத்துக் கடித்துக் கொண்டு நடந்தேன். நிலம் தண்ணீரும், சேறும், சுரியுமாக இருந்தது. நிறையத் தூரம் நடந்துவிட்டேன். அப்படியே ஒரு பெரிய வரம்பில் கொஞ்ச நேரம் இருந்தேன்.
நித்திரையும் வந்தது. அலட்சியமாக நித்திரை கொண்டால் விடிந்துவிடும் என்று நினைத்து, உடனே எழுந்து நடந்தேன். கண்ணெதிரே நடந்த ஒவ்வொரு விடயத்தையும் நினைத்துப் பார்க்கும் போது, வேகத்தைக் கூட்டியது.
ஒருமுறை அம்பகாமத்தில் எங்களது லைனுக்கு முன்னுக்கு, எனது தலைமையில் மூன்று பேர் வேவுபார்க்கப் போனோம். மூன்றாம் நாள் பகல், ஆமி ஒரு பொசிசனை உடைத்து முன்னேற முயற்சி செய்தான். எங்களுடைய போராளிகளின் மன உறுதியினாலும், கடுமையான எதிர்ப்பினாலும் அவனால் முன்னேற முடியவில்லை. ஆமிக்கு சரியான இழப்பு. உடனே தங்களுடன் வந்து, செத்தவர்களை அதிலேயே மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துப்போட்டுத் தப்பி ஓடிவிட்டான்.
எல்லாத்தையும் நினைத்துக் கொண்டு நடந்தேன். ஒரு றோட்டு இருந்தது. அந்த றோட்டைக் கடந்து, பெரிய வாய்க்கால் ஒன்றையும் கடந்து வீட்டுக் காணிக்குள் போனேன். உடையார்கட்டில் எமது லைன் இருந்த போது எங்களுடைய அணி (சோதியா படையணி) துர்க்கா அக்காவுடைய மெயின் இருந்த இடத்தைப் பார்க்க மனச்சுமை கூடியது. அந்த இடத்தை அவன் இப்போது தனது பாவனைக்கான தளமாக வைத்திருந்தான். நான் நன்றாக மறைந்து கொண்டு அவனது நடவடிக்கையைக் கண்காணித்தபடியேயிருந்தேன்.

அங்கேயிருந்த மாமரத்தின் கீழ் கைகள் பின்னுக்கு கட்டப்பட்டவாறு உடைகளின்றி, மண்டியிட்டபடி ஆண்கள் இருப்பது தெரிந்தது. அந்த வீட்டின் மறுபகுதியில் பெண்களும் உடைகளின்றி இருப்பதைக் காணக்கூடியதாகவிருந்தது. சில பெண்களைக் கொண்டு தமக்குத் தேவையான வேலைகளைச் செய்யச் சொல்லி செய்வித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முகங்களைத் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் எமது அப்பாவிப் பெண்களை இழிநிலையில் அவன் வைத்திருப்பதைப் பார்க்க எனக்கு கடுஞ்சினமாகவும், அவனை அடித்து அடித்தே கொல்லவேண்டும் போலவிருந்தது. எங்களை இழிபடுத்திய அவனுக்கு கட்டாயம் வாழ்க்கையில் மறக்க முடியாத முறையான பாடம் படிப்பிக்கவேண்டுமென உறுதியெடுத்துக் கொண்டேன்.
நான் அங்கிருந்து மெதுவாக வளவுகளுக்குள்ளால் அவதானித்தபடி நகர்ந்து சென்றேன். எங்களுடைய கணனிப்பிரிவுக்காரருடைய முகாம் (பேஸ்) இருந்தது. அதில்தான் வேவு அணியினர் (ரீம்) முதலில் தங்கியிருந்தோம். அப்போது இருந்த நிலையையும் இப்போது அது இருக்கும் நிலையையும் பார்க்க கவலையாக இருந்தது.

அந்தக் கட்டிடத்திற்குள்ளிருந்த எமது அப்பாவின் படம்(தேசியத் தலைவரின்) இப்போதும் அப்படியே இருந்தது. கட்டிடமெல்லாம் எறிகணையால் சேதமடைந்திருந்தது. ஆனால் எமது அப்பாவின் படம் மட்டும் எந்தச் சேதமும் இன்றி அப்படியே இருந்தது. அந்த முகத்தைப் பார்த்த உடனேயே மனசில் இருந்த சுமையெல்லாம் வெயில் கண்ட பனிபோல கரைந்து போய்விட்டது. அந்த இடத்தை விட்டுப் போகவே மனமில்லாமல் இருந்தது.
படத்தைப் பார்த்ததும் எனக்குள் உறுதியும் நம்பிக்கையும் கூடியது. புத்துணர்வுடன் எனது பயணத்தைத் தொடர்ந்தேன். அப்படியே போய்க் கொண்டிருந்தேன். ஒரு றோட்டு வந்தது. எனக்கு ஒரு பழக்கமிருக்கு, பாதைகள் அல்லது றோட்டுகள் எதையும் கண்டால் நடமாட்டங்கள் இருக்காவென்று தடவிப் பார்ப்பேன். அதேபோல இதையும் தடவிப் பார்த்தேன். வாகன நடமாட்டம் இருந்தது. அதையும் கடந்து அடுத்த காணிக்குள் போனேன். ஒரு வீடுதான் இருந்தது. அங்கால் பக்கம் பெரிய குளம் இருந்தது. சரியான களைப்பாக இருந்தது. அந்த வீட்டுக்குள்ளேயே படுத்துவிட்டேன். மழை பெய்து கொண்டிருந்தது. என்னையறியாமலே நித்திரை கொண்டேன்.

விடியப் போகுது என எழும்பி, சுற்றி அவதானித்தேன். குளத்தைத் தாண்டி அங்காலக் கரையில் ஒரே வாகனப் போக்குவரத்தாக இருந்தது. விடிந்துவிட்டது வாகனச் சத்தம் கேட்டது. ரக்ரர் ஒன்று கொஞ்ச ஆமிக்காரரை ஏற்றியபடி போனது. பிறகு மோட்டர் சைக்கிள், லான்ஸ்மாஸ்ரர் என்று அடிக்கடி போனது. போற வாகனங்களில் அவன் எங்களுடைய மக்களை கைகளைக் கட்டியவாறு ஏற்றிக் கொண்டு போவது தெரிந்தது. எனவே அவதானித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

குளத்துக்கு அருகில் ஒரு வீடுதான். பின்னால் வெட்டை. ஏதும் ஆபத்து என்றால் ஓடவும் இயலாது. உடனே நான் இரவு வந்த பக்கம் றோட்டை அவதானித்துப் போட்டு கடந்து, ஒரு வீட்டு வளவிற்குள் போனேன். மாமரத்திலிருந்து மாங்காய் விழுந்து கிடந்தது. அதையும் எடுத்துக் கொண்டு அடுத்த றோட்டையும் கடந்து ஒரு வீட்டுக்குள்ளே போயிருந்தேன். ஆமியின் நடமாட்டம் இங்கேயும் இருந்தது. அந்த வீட்டுக்குள்ளேயிருந்த மேசைக்கு கீழே போய் ஒளிந்திருந்தேன். மதியம் போல் எழும்பி பக்கத்து வீட்டுக்குப் போனேன்.

அங்கே ஒரு சவலோன் போத்தலும், வடை சுடுகிற பருப்பும் இருந்தது. அதையும் எடுத்துக் கொண்டு நிற்க, மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது. அப்படியே படுத்துவிட்டேன். ஆமி போனதன் பிறகு எழும்பி, நான் இருந்த வீட்டுக்குப் போனேன். அது ஒரு ஜி.எஸ்சின் வீடு. அவரின் ‘நோட் புக்’; ஒன்று இருந்தது. அதை எடுத்தேன். வெறுங்கையோடை போகாமல் ஏதாவது பிரயோசனமாய் செய்யலாம் என்று நினைத்து, எங்களுக்கு நடந்த விடயத்திலிருந்து ஒன்றும் விடாமல் அதில் எழுதினேன்.

என்னுடைய கையில் ஜி.பி.எஸ்சும், கொம்பாசும்(திசையறி கருவி) இருந்தது. தேவையான சகல இடத்திலேயும் ஜி.பி.எஸ்சைப் பயன்படுத்தினேன். (பிக்ஸ் அடிச்சன்) பாகை, தூரம் எல்லாவற்றையும் எடுத்தேன். (அவனுடைய சகல பொசிசன்கள் இருந்த இடங்களையெல்லாம் சரியாக எடுத்துக் குறித்தேன்.) அதைவிட எமக்குத் தேவையான சில தகவல்களையும் எடுத்தேன். ஒவ்வொரு நாளும் இரவு தங்கிற இடத்தில் கட்டாயம் பிக்ஸ் அடிக்கிறனான். எல்லாத்தையும் எழுதிவிட்டு இருட்டும் வரை இருந்தேன்.

ஒரு வீட்டில் ‘மினரல் வோட்டர்’ இருந்தது. அதையும் எடுத்து பைக்குள் வைத்தேன். சிலவேளை தண்ணீர் இல்லாமல் போனால் உதவும். இருட்டுப்பட எழும்பி குளத்துக்குப் பக்கத்தில் இருந்த வீட்டுக்குப் போனேன். நிலவு மறையும் வரைக்கும் பார்த்துக்கொண்டிருந்தேன். இருட்டாகிப் போனபின்பு எல்லாத்தையும் எடுத்துக் கொண்டுவெளிக்கிட்டேன். பகல் முழுக்க அவதானிக்கவில்லை. எங்கே என்ன இருக்குதென்று தெரியாது. குளக்கரையால் நடந்து போக தண்ணீரின் அளவு போகப் போகக் கூடியது. வலப்பக்கமும் போய்ப்பார்த்தேன் அதுவும் அப்படியேதான் இருந்தது. கரைக்கு ஏறினேன். கெலி மேலே பறந்து வர உடனே ஓடிப்போய் ஒரு பற்றைக்குள் ஒளிந்துவிட்டேன். கெலி போன பிறகு யோசித்தேன் நாளைக்குப் பகலில் நன்றாக அவதானித்துப் போட்டுப் போவமென்று ஒரு பாழடைந்த வீட்டுக்குள் போனேன். மழையும் அடித்து ஊற்றியது. அப்படியே அந்த வீட்டுக்குள் படுத்துவிட்டேன். பக்கத்தில் நாய் கிடந்தது. என்னைக் கண்டு குரைக்க வெளிக்கிட்டுவிட்டது.


பாகம் - 9:


நித்திரை கொள்ளவே விடாது தூவாணம் அடித்தது. வீடு முழுக்க ஒரே ஒழுக்கு. என்ன செய்வது சமாளிக்கத்தான் வேண்டும் என்று நினைத்தவாறே அப்படியே தரையில் படுத்து நித்திரை கொண்டேன். திடீரென்று ஏதோ எனது காலை நக்கிறமாதிரியிருந்தது. கண்ணைத்திறந்து பார்த்தேன். ஒரு நாய்க்குட்டி. எனக்கு மனதுக்கு சந்தோசமாக இருந்தது. அந்த நாய்க்குட்டியையும் தூக்கிப் பக்கத்தில் வைத்துக்கொண்டு நித்திரை கொண்டேன். அதுவும் எனக்குப் பக்கத்தில் படுத்துவிட்டது. வாய் பேசாத ஜீவன் என்றாலும் அந்த நேரத்தில் ஒரு துணையைப் போல உணர்ந்தேன்.
விடியப் போகுது பகலில் நடமாடவே முடியாது ஒரு மறைப்பும் இல்லை. வேறொரு வீட்டுக்குள் போய் இருந்தேன். அந்த வீட்டுக்குள் இருந்தால் அப்படியே ஆள் இருப்பது தெரியும். என்ன செய்வது அதற்குள்தான் இருக்க வேண்டும். அப்படியிருந்தால்தான் அவதானிக்கலாம். எனவே அங்கிருந்த கட்டிலுக்கு கீழே பையையும் றைபிளையும் ஒளித்து வைத்தேன். ஜி.பி.எஸ்சும், கொம்பாசும் எப்பவுமே என்னுடைய கழுத்திலும்;, குண்டு எப்பவுமே இடுப்பிலும் கொளுவியபடியே இருக்கும்.
மாங்காயும், கடலைப்பருப்பும் தான் சாப்பாடு. ஒரு வீட்டில் சின்னப்பிள்ளைகள் சாப்பிடுகிற மா இருந்தது. எடுத்தேன்; அதில் நாய்க்கும் கொஞ்சம் கொடுத்தேன். அது என்னைவிட்டுவிட்டுப் போகவேயில்லை. ஆமி கிட்ட வரும் சத்தங்கள் கேட்டால் நன்றாக மறைந்து இருப்பேன், இல்லாவிடில் அவதானித்துக் கொண்டு இருப்பேன்.

நேரமும் போகுது இருட்டுப்பட்டதும் வெளிக்கிடவேணும் என நினைச்சுக் கொண்டு இருந்தேன். நிலவும் மறைய கடவுளை வேண்டிக் கொண்டு வெளிக்கிட்டேன். அப்படியே கரையைப் பிடிச்சுப் போனேன். ஒரு றோட்டு வந்தது. அது பழைய றோட்டு போக்குவரத்து எதுவுமே இல்லை. அங்கால் பக்கம் வயல் வெளி. வரம்பால் போய்க் கொண்டிருந்தேன். இருட்டுக்குள் எதுவுமே தெரியவில்லை.
திடீரென்று தூரத்திலே வானத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. எனக்கு உடனே விளங்கீற்று. ஆமி அடிச்ச பரா என்று. உடனே கொம்பாசை எடுத்து பாகையைப் பார்த்தன்;;. 315. அந்தப் பாகையில் போனால் வழி தவறாமல் போகலாமென்று அடிக்கடி பாகையைச் செக்பண்ணிக் கொண்டுதான் போவன். நடந்து கொண்டே இருந்தேன்.
ஒரு சின்ன ஊர்மனை அதைக்கடந்து அங்கால் பக்கம் வயல் வெட்டை. அடுத்து, அருவியில் இடுப்பளவு தண்ணீர். ஒருமாதிரி அதைக்கடந்து போனேன். ஒரு பெரிய தென்னந்தோட்டம். பேருக்குத்தான் அது தென்னைந்தோட்டம் ஆனால் ஒரு தென்னையிலும் உயிர் இல்லை.
மனிதர்கள் நடைபிணமாவது போல இதுவும் நன்றாக நிமிர்ந்து நிற்கிறது. ஆனால் உயிர்தான் இல்லை. செல்ப்பீஸ் படாத மரமே இல்லை. ஓலை எல்லாம் காய்ந்துபோயிருந்தது. அப்படியே எல்லாத்தையும் பார்த்;துக் கொண்டு போய்க் கொண்டே இருந்தேன். ரக்ரர் வரும் சத்தம் கேட்டது. நான் கடந்து வந்த இடங்களிலும் ரக்ரர் தடங்கள் இருந்தது. நாயும் குலைத்துக் கொண்டேயிருந்தது.
அருவிகள் தண்ணீர் இல்லாமல் மணலாக இருந்தால் அப்படியே பின்பக்கமாகத் திரும்பி நடந்து போவன். தடம் இருந்தாலும் நான் போகும்பக்கம் வரமாட்டான். எல்லாத்தையும் கவனித்துக் கொண்டுதான் நகருவேன். பாதையொன்று இருந்தது. தடவிப் பார்த்தால் தடங்கள் எல்லாம் புதிதாய் இருந்தது. றோட்டுக்கு அங்கால்பக்கம் இருக்கிற வீட்டில்தான் நாய் குரைக்கிறது. நான் றோட்டைக் கடக்கிறது என்றால் அந்த வீட்டுக்கு நேரேதான் கடக்க வேண்டும்;. என்ன செய்வது கடக்கத்தான் வேண்டும். வேலிக்கு கிட்டே வந்தேன். நாய் என்னுடைய பக்கம் பார்த்துதான் குரைத்தது. குரைக்கட்டும் என்று மெதுவாக நடந்தால் ‘டாக்கட்’ தெரியும். வேகமாய் கடந்திட்டால் தெரியாது. எனவே வேகமாக நடந்து அடுத்த வாசல் வழியாக ஒரு காணிக்குள் போனேன்.
நாய் கூடுதலாக குரைக்கத் தொடங்கியது. நான் தாமதிக்காமல் அடுத்த வேலிக்குக் கிட்டப் போனேன். வேலி சரியான நெருக்கமாக இருந்தது. வேர்களும் கொடிகளும் வேலிக்கு மேலே படர்ந்திருந்தது. தடவிப் பார்த்தேன். சின்ன இடைவெளி இருந்தது. அதனூடாக கடந்து ஒரு மாதிரி மறு காணிக்குள் போய்விட்டேன்.
அப்படியே அடுத்த காணியையும் தாண்ட, ஒரு றோட்டு. பள்ளமான இடமென்பதால் றோட்டு முழுக்க தண்ணீர் நின்றது. அதுக்கு அடுத்த காணியில்தான் ஆமியின் சத்தம் கேட்டது. மோட்டர்(எஞ்சின்) சத்தமும் கேட்டது. நான் கடந்து போகப் போவது வெட்டை. மெதுமெதுவாகப் பாதையைக் கடந்து வெட்டையில் நின்ற ஒரு பற்றைக்குள் போய் இருந்துவிட்டேன். நிறைய நேரம் நடந்துவிட்டேன். காலெல்லாம் ஒரே வலித்தது. கை வேறு வருத்தமாக இருந்தது. நுளம்பும் கடித்தது. தண்ணீரில் நனைந்தது, குளிர் எல்லாமாகச் சேர்ந்து வதைக்கத் தொடங்கியது.
அப்படியே றைபிளைக் கழற்றி வைத்துவிட்டு வரம்பில் சாய்ந்து படுத்தேன். ஆனால் நித்திரை கொள்ளவில்லை. பக்கத்தில் ஆமி. கொஞ்ச நேரம் அப்படியே படுத்துவிட்டேன். திடீரென்று ஆமி கதைக்கிற சத்தம் பக்கத்தில் கேட்டது. வேகமாக எல்லாத்தையும் எடுத்தேன். சிலவேளை நான் வந்ததைப் பார்த்துவிட்டானோ தெரியாது என்று நினைத்துக் கொண்டு வேகமாக எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு, நிறையப் பற்றைகள் இருந்தது இருந்தது. அதனூடாக மறைந்து மறைந்து போய்க் கொண்டு இருந்தேன்.
இடப்பக்கம் ஊர்மனை வலப்பக்கம் காடு. காட்டுக்கு அருகில் ஒரு மறைப்பாக பார்த்து அப்படியே படுத்துவிட்டேன். விடியப் போகிறது. கொஞ்சநேரம் நித்திரை கொண்டேன். விடிந்த பிறகு எழும்பிப் பார்த்தேன் நான் போற பக்கம் ஒரு ஒற்றையடிப் பாதை ஒன்று போய்க் கொண்டிருந்தது. கொஞ்சத் தூரம் போய்ப் பார்த்தேன். பிறகு திரும்பி வந்து எல்லாத்தையும் எடுத்துக் கொண்டு போவம் என்று நினைத்தேன். காடுதானே பகல் நகருவோம் என்று வெளிக்கிட்டுப் போனேன். கட்டிடம் ஒன்று வந்தது. அது பழைய கிச்சின். அப்படியே அந்தப் பாதையால் போய்க் கொண்டிருந்தேன். கிரவல் போட்ட பாதை வந்தது. அதால போய்க்கொண்டிருந்தேன். அடிக்கடி பாகையைப் பார்த்துப் பார்த்துதான் போவேன். நிறையக் கட்டிடங்கள் தள்ளித் தள்ளி இருந்தன. பெரிய பேஸ் போல இருக்கு. பேசின்ர நடுமையத்திற்கு வந்துவிட்டேன். அந்தக் கட்டிடத்துக்குள் போய்ப் பார்த்தேன். நிறைய வெடிமருந்துகள் செய்கின்ற இடம். அப்பாவின் (தேசியத்தலைவரின்) படம் இருந்தது. எல்லாத்தையும் பார்த்து விட்டு (பிக்ஸ்) ஜி.பி.எஸ் ஐப் பயன்படுத்திக் கொண்டு வெளிக்கிட்டேன். பெரிய காடு. சருகுகளுக்கு மேலால்தான் நடந்து போனேன். ஏனெனில் பாதை மணலாக இருந்தது. தடயம் விடக்கூடாது.
எப்பவுமே தலையில் ஒரு தொப்பி போடுவேன். பேஸ் முடிவு. தடை(பறியல்) இருந்தது. மைன்ஸ்சுக்கான கம்பிகளும் இருந்தது. பாகையைப் பிடிச்சுப் பார்த்தேன். விலத்திவிட்டேன். உடனே பாகையைப் பிடித்துக் கொண்டு போனேன். ஆமியின் பழைய பொசிசன்கள் நிறைய இருந்தது. போய் ஒரு கட்டத்தில் பார்த்தால் முன்னுக்கு பெரிய..........

No comments:

Post a Comment