Labels

Wednesday, October 27, 2010

11 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை! விபரங்கள் வார இறுதிக்குள் வெளியாகும் - பிரதமர் ருத்ரகுமாரன்


பிரதமர், மூன்று துணைப் பிரதமர்கள், ஏழு அமைச்சர்கள் உட்பட பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவையின் விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவு செய்யப்படவுள்ள மூன்று துணைப் பிரதமர்களுக்கும் ஏழு அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு அமைச்சுக்கள் ஒதுக்கப்படும் எனவும் இதைவிட ஒவ்வொரு அமைச்சுக்கும் துணை அமைச்சர்களும் தெரிவு செயய்யப்படவுள்ளதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு.வி.ருத்ரகுமாரன் பொங்குதமிழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்களிடையே அமைச்சர் பதவியைப் பெற்றுப் பணியாற்றும் திறமையும் தகுதியும் கொண்டவர்களை முன்வருமாறு அழைப்பு விடுத்தோம். குறிப்பிட்ட பொறுப்புகளுக்குத் தாங்கள் எவ்வகையில் தகுதியானவர்களெனக் கருதுகிறார்கள் என்பதனை எழுத்து மூலம் முன்வைக்கும்படி கேட்டு இவ்விருப்பத் தெரிவிப்புப் பத்திரத்தில், அவரவர் கல்விப் பின்னணி, மற்றும் வேலை, பட்டறிவுப் பின்னணி, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக அவர்கள் வழங்கியிருந்த பங்களிப்பு, குறிப்பிட்ட அமைச்சின் ஊடாக முன்னெடுக்க உத்தேசிக்கும் திட்டங்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காக அவர்கள் ஒதுக்கத் தயாராகவுள்ள நேரம் என்ற பல்வேறு விபரங்களை உள்ளடக்கும்படியும் கேட்டிருந்தோம்.

உற்சாகத்தோடு பலரும் பங்குபற்றியுள்ளார்கள்.
இவர்களிடையேயிருந்து தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ள அமைச்சரவையின் விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவுள்ளன என்ற செய்தியை மகிழ்வோடு இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன் என இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த அரசாங்கத்தின் தோற்றம்


நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முதன்முறை ஒரு கருத்துருவாக்கமாக அறிவிக்கப்பட்டபோது ஒரு புதிய எண்ணக்கருவாக இருந்த இதன் சாத்தியப்பாடு குறித்துப் பலதரப்பிலும் பல்வேறுவகையான சந்தேகங்கள் இருந்தன.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுதந்திரமான தனித்துவமான அமைப்பு வடிவமாக உருவெடுப்பதற்குரிய வகையில் தனது திட்டங்களை வகுத்திருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் இத் திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டமையால் வரக்கூடிய சட்டச்சிக்கல்கள் தொடர்பான அச்சங்கள் எழுப்பப்பட்டிருந்தன. சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கூட்டங்களை நடாத்துவதிலும் கூட இடையூறுகள் இருந்துன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான நாடு தழுவிய செயற்குழுக்களை அமைப்பதிலும் தடங்கல்கள் வந்தன. தேர்தல்களை நடாத்துவதிலும் சவால்கள் எழுந்தன. இவ்வாறு பல்வேறு வகையான சவால்கள் இருந்த போதும் அவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு வருட காலத்தில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தையை ஆரோக்கியமான குழந்தையாகவே ஈன்றெடுத்துள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நிதானமாக அதேவேளை திடமாகத் தனது காலடிகளை முன்னெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. எமது கருத்துக்களை அனைத்துலக கொள்கை வகுப்பாளர்கள் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். ஊடகங்கள், குறிப்பாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பிரதான ஊடகங்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்துக்களையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தையை உலகத் தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்து நன்றாக வளர்த்தெடுக்கும்போதுதான் ஈழத் தமிழ் மக்களுக்கானதும் ஏன் உலகத் தமிழ் மக்களுக்கானதுமான முதலாவது தமிழர் அரசை – சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை வென்றடைவதில் வெற்றியடையும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

சமமான ஒரு வலுமையம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக அரங்கில் சிறீலங்கா அரசை எதிர்கொள்ளக்கூடிய சமமான ஒரு வலுமையமாக உருவெடுப்பதற்கான அடிப்படைகளை நாம் நிலைநிறுத்துவோம் என நம்புகிறோம். தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் புவிசார் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தவிர்க்க முடியாத ஒரு திடகாத்திரமான அங்கமாக நிலைபெறுவதற்கான சூழலை உருவாக்கமுடியும் எனவும் நாம் நம்புகிறோம்

ஈழத் தமிழ் மக்கள்மேல் இனவழிப்புப் போர்க்குற்றங்களைப் புரிந்தவர்களை அனைத்துலக அரங்கிலோ அல்லது நாடுகள் சார்ந்தோ அமைக்கப்படும் விசாரணை மன்றங்களில் நிறுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும் தமிழர்களது பாரம்பரிய நிரப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும், தமிழர்களை இனக்கபளீகரம் செய்ய முனையும் சிங்கள அரசின் முயற்சிகளை முறியடிப்பதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கைது செய்யப்பட்ட போராளிகள் விடுவிக்கப்பட்டும் இடம் பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட்டும் தமது வாழ்க்கையை முன்னேற்றகரமாகக் கொண்டு நடாத்துவதற்கு எம்மால் ஆன முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருவோம்.

இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள நமது மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு சுதந்திரத் தமிழீழ அரசினை உருவாக்குவதனைத் தவிர வேறுவழியில்லை என்ற கருத்துக்கு கூடுதலான அனைத்துலக ஆதரவினை நாம் தேடுவதில் வெற்றியடைவோம். தமிழீழத் தனியரசு அமைவது பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகளின் நன்மைகளோடும் ஒத்துப்போகக்கூடியது என்பதனையும் தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் துணைபுரியக்கூடியது என்பதனையும் கருத்துநிலையில் உறுதியாக முன்வைத்து எமது நிலைப்பாட்டுக்குக் கூடுதலான ஆதரவினை வென்றெடுக்கும் வகையில் முன்னேறியிருப்போம்.

இவற்றையெல்லாம் நாம் மேற்கொள்வதென்பது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குத் தமிழ் மக்கள் கொடுக்கும் ஆதரவிலும் பங்களிப்பிலுமே கணிசமாகத் தங்கியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெற்றிக்குரிய முதலாவது அடித்தளம் அதன் நிதித்தேவைகள் உறுதியானமுறையில் நிறைவு செய்யப்படுவதிற்தான் தங்கியுள்ளது. இது முதலாவதும் முக்கியமானதும் உடனடியானதுமான ஒரு சவாலாகும் என, நாடுகடந்த அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையில் பிரதமர் ருத்ரகுமாரன் தெரிவித்தார்.

செனட்சபை


அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளின்படி ஒரு செனற்சபை உருவாக்கப்படவுள்ளது. இந்த செனற்சபை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் மக்கள் பிரதிநிதிகளாகவுள்ள உறுப்பினர்களால் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் திட்டங்களை எவ்வகையிலும் தடுத்து நிறுத்தும் அதிகாரம்; கொண்டதாக இருக்க மாட்டாது. ஆதலால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடையே செனற்சபை பற்றி அதிருப்திகள் எதுவும் எழுவதற்கோ அல்லது தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்ட மக்களின் இறைமையை நலிவடைய வைப்பதற்கோ இங்கு இடமில்லை.

அறிவாளர்களும் துறைசார் நிபுணர்களும் உட்பட்ட சமூகத்தின் பல்வேறு பகுதியினரையும் உள்ளடக்கியதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமையும்போது அது மக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட அமைப்பாக இயங்கும். இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பலப்படுத்துவதற்கு உதவுவதோடு அனைத்துலக அரசாங்கங்களின் பார்வையிலும் கூடுதலான ஏற்புடைமையைப் பெறுவதற்கு உதவும்.

கனடாவில் வெளிவந்த சுவரொட்டிகள்


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களைப் பொறுத்தவரை இவர்கள் தமது இலக்கில் எவ்வகை மாறுபட்ட நிலைப்பாட்டினையும் கொண்டவர்கள் அல்ல என்பதனை நான் முதலில் உறுதியாக எடுத்துரைக்க விரும்புகிறேன். அதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் எதிர்க்கட்சியென ஒன்று இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு. இதேவேளை உறுப்பினர்களுக்கிடையே மூலோபாயங்களிலும் தந்திரோபாயங்களிலும் மாறுபட்ட கருத்துக்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் இருக்கலாம். தோன்றலாம். என்னைப் பொறுத்தவரை இவை மிக இயல்பானவையும் ஆரோக்கிமானவையும் ஆகும்.

நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கனடாவில் வெளிவந்த சுவரொட்டிகள் தொடர்பாகவும் எனது கருத்தினைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஒருசிலரை மையப்படுத்தி அவர்கள் இரண்டாவது அமர்வின் இறுதியில் அவையினைவிட்டு வெளிநடப்பு செய்ததைக் கண்டித்து சுவரொட்டிகள் வெளிவந்ததாக அறிகிறேன். ஏற்கெனவே நான் அவையில் குறிப்பிட்டிருந்தது போல உறுப்பினர்கள் தமது விருப்பின்மையை வெளிப்படுத்தும் ஒரு முறையாக வெளிநடப்பு செய்வது பாராளுமன்ற மரபுப்படி சனநாயக வழிமுறைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான். இந்த சனநாயக உரிமையைப் பயன்படுத்தியமைக்காக எந்தவொரு உறுப்பினரையும் கண்டனம் செய்யமுடியாது. வெளிநடப்பு செய்தவர்கள் உட்பட ஒவ்வொரு உறுப்பினரும் தமிழ்மக்களால் அவர்கள் ஒவ்வொருவரும் தமிழின விடுதலைமேல் கொண்டுள்ள பற்றுறுதியின் அடிப்படையிலும் எமது சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் நிலைநாட்டப் போராடுவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடிப்படையிலும் தெரிவுசெய்யப்பட்டவர்களே.

தெரிவு செய்தோர் தாம்தெரிவு செய்து அனுப்பிய உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றிக் கருத்துத்தெரிவிக்கும் உரிமை அம்மக்களுக்கும் உண்டு. ஆனால் அக்கருத்துக்களைத் தெரிவிக்கும் முறையில் பண்புடன் நடந்து கொள்வதும் அவசியமானது. வேறுபாடுகளின் மத்தியிலும் அரசியல் வாதப்பிரதிவாதங்களின்போது தனிமனிதனின் கௌரவம் பாதுகாக்கப்படவேண்டும்.

யாப்பு தொடர்பான விவாதங்கள்


உங்கள் இணையத்தளத்தில் யாப்பு தொடர்பாக இடம் பெற்ற விவாதத்தைக் கவனித்தேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்புத் தொடர்பாக இரு விடயங்கள் கண்டனமாக முன்வைக்கப்பட்டிருந்தன. ஒன்று எமது அரசியலமைப்பு விதிகள் சாதாரண பெரும்பான்மை வாக்குகளின் மூலம் இலேசாக மாற்றி அமைக்கப்படக்கூடியவை என்பது. இத் தகவல் சரியானதொன்றல்ல.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு தொடர்பான மாற்றங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலம் மட்டுமே மாற்றி அமைக்கப்படலாம் என்பது வரைவில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சட்ட அவையின் சாதாரண வேலைகளான தீர்மானங்கள் நிறைவேற்றுதல், வரவு செலவுத் திட்டங்களை நிறைவேற்றுதல் போன்றவை சாதாரண பெரும்பான்மை மூலம் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்ற கூற்றினை அரசியலமைப்பு மாற்றத்துடன் இணைத்துப் பார்ப்பது தவறாகும். மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின் ஒரு சில விதிகள் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் உறுப்பினர்களிடையே இருந்தமையால் இவ்விடயத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு சாதாரண பெரும்பான்மை அடிப்படையை நாம் கடைப்பிடித்தோம். ஆனால் அரசியலமைப்பானது அமர்வுக்கு சமூகமளித்த அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாகவே நிறைவேற்றப்பட்டது என்பதனையும் நாம் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்

இரண்டாவது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினை சாதாரண பெரும்பான்மை மூலம் மாற்றிக் கொள்ள முடியாது என்பது பற்றியது. இங்கு இவ்விடயத்தினை நடைமுறைத் தேவைகளோடு பொருத்திப் பார்த்தே நாம் முடிவுக்குப் போக வேண்டும்.

பொதுவாக நாடுகளில் ஒரு அரசாங்கம் அமைய வேண்டுமானால் சாதாராண பெரும்பான்மையின் ஆதரவு பெறுதல் வழமையானது. ஆனால் சாதாரண பெரும்பான்மையினை அரசாங்கங்கள் பெறுவது நடைமுறைச்சாத்தியமாகாத நிலை உருவாகியபோது சிறுபான்மை அரசுகள் அமையும் நடைமுறையும் மக்களாட்சியின் ஒரு அங்கமாகியது. சில நாடுகளில் சாதாரண பெரும்பான்மையினை அரசுகள் கூட்டணி அமைத்தும்கூட பெறமுடியாவிடத்தில் மீள்பொதுத்தேர்தல்கள் நடாத்தும் நடைமுறையுள்ளது. வேறு சில நாடுகளில் சிறுபான்மை அரசாங்கங்கள் மாறி மாறி அமைந்தாலும்கூட குறிப்பிட்ட காலம் நிறைவடையும் வரை மீள்பொதுத்தேர்தல் நடாத்தப்படுவதில்லை.

இங்கு இவ் விடயத்தில் உலக நாடுகளிடையயே பொது வழமையைக் காணமுடியவில்லை. இங்கு பொதுவான ஒரு அடிப்படையே உண்டு. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் வகுக்கப்பட்ட அரசியலமைப்புக்கேற்பவே அவை தீர்மானிக்கப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தத்தமது நாடுகளின் சூழலுக்கேற்ப இத்தகைய முடிவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் நிலையானதன்யையும் இயங்குதிறனையும் கவனத்திற்கொண்டு அமைச்சரவையைக் கலைப்பதானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என அரசியலமைப்பை நிறைவேற்றியுள்ளனர். இது அனைத்துலக அங்கீகாரத்துக்கு தடையாக அமையும் என்ற கருத்துடன் நான் உடன்படவில்லை.

பிரான்ஸ் நிகழ்வு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களவைகளும் இணைந்து பிரான்சில் நிகழ்வொன்றை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவுமில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலுகத்திடம் அனுமதி பெறாத நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கு பற்றும் நிகழ்வுகளாக நாம் பார்க்கமுடியாது. இதனால் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை.

இங்கு ஒரு விடயத்தை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றக்கூடும். இந் நிகழ்வுகளையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுகளாக நாம் கொள்ள முடியாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் அமைச்சரவையின் ஊடாகவே தீர்மானிக்கப்படும். நாம் இந்தவார இறுதிக்குள் அமைச்சரவையை அறிவிக்கவுள்ளோம். அதுவரையிலான இடைக்காலத்துக்கு பிரதமர் அலுவலகம்தான் இவ்விடயங்களைக் கவனித்து வருகிறது என பிரதமர் ருத்ரகுமாரன் பொங்குதமிழுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நன்றி: பொங்குதமிழ்

No comments:

Post a Comment