
இலங்கை ராணுவ தளபதியாக இருந்து, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிக்கு வழி வகுத்தவர், சரத் பொன்சேகா. போர் முடிவடைந்தவுடன், ராஜபக்சேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ராணுவ பதவியில் இருந்து விலகி, அரசியலில் குதித்தார்.
அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர், கைது செய்யப்பட்டு, கடற்படை தலைமையகத்தில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் அடைக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக ராணுவ கோர்ட்டில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. ராணுவத்துக்கு ஆயுத கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள்வரை ஜெயில் தண்டனை விதிக்க ராணுவ கோர்ட்டு கடந்த 17-ந் தேதி சிபாரிசு செய்தது. இதற்கு, முப்படை தளபதி என்ற முறையில், அதிபர் ராஜபக்சே ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு, தடுப்பு காவல் மையத்தில் இருந்து கொழும்பில் உள்ள வெளிக்கடை சிறைக்கு பொன்சேகா மாற்றப்பட்டார்.
`எஸ்' வார்டில் உள்ள தனிமை `செல்'லில் அவர் அடைக்கப்பட்டார். அவருக்கு கைதி உடை தரப்பட்டது. அது, அவரது உடம்புக்கு பொருத்தமாக இல்லை. சிமெண்ட் தரையில் பாய் விரித்து அவர் படுத்துக்கொண்டார். ஒரு தலையணை மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
மறுநாள் வெள்ளிக்கிழமை, அதே பிளாக்கில் உள்ள மற்ற கைதிகளை போலவே, அதிகாலை 5 மணிக்கு பொன்சேகா எழுந்து விட்டார். அவரது அறையில் கழிவறை உள்ளது. ஆனால் தண்ணீர் வசதி இல்லை.
இதனால், பொன்சேகா, தனது வார்டுக்கு வெளியே உள்ள தண்ணீர் தொட்டியில் வாளியில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார். குளிப்பதற்கும், மற்ற பயன்பாட்டுக்கும் அவர் இப்படித்தான் தண்ணீர் எடுக்க வேண்டி இருந்தது.
பின்னர், காலை உணவுக்காக, மற்ற கைதிகளை போலவே, பொன்சேகாவும், கையில் தட்டும், குவளையும் ஏந்தி வரிசையில் நின்றார். பின்னர், பொன்சேகா செய்ய வேண்டிய வேலையை முடிவு செய்வதற்காக, அவரது உடல்நிலையை டாக்டர் பரிசோதித்தார். அவருக்கு பொருத்தமான உடைகள் தைப்பதற்காக, அவரது உடலை டெய்லர் அளவெடுத்தார்.
மதிய உணவுக்காக, பொன்சேகா மறுபடியும் வரிசையில் நின்றார். அரிசி சாதம், வெள்ளரிக்காய் கறி, பருப்பு, காய்கறி கூட்டு, சிறிய மீன் துண்டு, மசாலா ஆகியவை வழங்கப்பட்டன. பிறகு, மதியம் 2 மணிவரை, தனது அறையில் பொன்சேகா இருந்தார். பிறகு, தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்தார்.
இரவு 7 மணிஅளவில், அறைக்கு திரும்பினார். அப்போது, விளக்குகள் அணைந்து விட்டன. இதனால் இருட்டிலேயே பொன்சேகா தரையில் பாய் விரித்து தூங்கினார். பொன்சேகாவின் தினசரி ஜெயில் வாழ்க்கை இதேபோன்று கழிந்து வருகிறது.
சிறையில் அவருக்கு கைதி எண். 0/22032 வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு உரிய வேலை கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெலிக்கடை சிறைக்கு வரும் தபால்களை பிரித்து உரியவர்களுக்கு வினியோகிக் கும் வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால்களை பிரிக்கும் வேலையில் தொடர விரும்பாவிட்டால் அவருக்கு சிறையில் உள்ள அரசு அச்சகத்தில் நோட்டீஸ் அச்சடிக்கும் வேலை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
தபால் பிரிக்கும் வேலை அல்லது நோட்டீஸ் அச்சடிக்கும் வேலையை சரத்பொன்சேகா ஏற்றுக் கொள்வாரா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. அவர் இந்த வேலைகளை செய்யாவிட்டால் கடுமை யான வேலை ஒன்றில் அவர் ஈடுபடுத்தப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment