Labels

Thursday, July 15, 2010

என் மீனவனை அடித்தால், உன் மாணவனை அடிப்பேன்!


இலங்கை போர்க் குற்ற விசாரணைக்கு ஆதரவாகவும், தமிழக மீனவர் படுகொலையைக் கண்டித்தும், கடந்த 10-ம் தேதி, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், 'நாம் தமிழர் இயக்கம்' ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதில் பேசிய சீமான், 'அடிக்கு அடி' என்கிற பாணியில், தமிழகத்துக்கு வரும் சிங்களர்களை அடிப்பேன் என்று பேச, கூட்டத்தில் ஏகமாக கை தட்டல்கள்!



உடனே, சீமான் மீது வழக்கு பதிவுசெய்தது போலீஸ். அவரைக் கைது செய்ய வீடு, அலுவலகத்துக்குப் படை யெடுத்தது. 12-ம் தேதி காலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களைச் சந்திக்க வந்த சீமான், ஏக தள்ளு முள்ளுகளுக்கு இடையில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். கைதுக்கு முன்பு அவரை, தொலைபேசியில் பிடித்தோம்.

''இந்த முறை சற்று பலமாகவே உங்களை வழக்குகள் துரத்தும்போல் இருக்கிறதே... அப்படி என்ன பேசினீர்கள்?''

''இலங்கையில் இறக்கிவிடப்பட்டுள்ள 25,000 சீனர்களில், 5,000 பேர் கைதிகள், 10,000 பேர் பயங்கர வாதிகள் என்று தகவல்கள் வருகின்றன. இதனால் இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பேராபத்து. தமிழக மீனவனை சீனாக்காரன் வந்து சுடப்போகிறான் என்று எச்சரித்தால், அது தவறா? கொக்கு, குருவியை சுட்டால்கூட ஏன்னு கேட்கிற நாட்டில், இதுவரை 501 மீனவத் தமிழர்களைக் கொலை செய்திருக்கிறான். எல்லை தாண்டியதால் சுட்டோம் என்கிறான். எல்லை தாண்டும் சிங்களனை, இந்தியப் படை இது வரை தாக்கியதுண்டா? ஆனால், தமிழன் மட்டும் கொல்லப்படுவான். இதனால்தான் வெகுண்டு, 'என் தமிழனைக் கடலில் நீ அடித்தால், இங்கு படிக்கும் சிங்கள மாணவனை அடிப்பேன். சென்னை எழும்பூரில் புத்த விகாரைக்கு எந்தெந்த சிங்களன் வந்துபோகிறான் என்பது எனக்குத் தெரியும். திருப்பூரில் எங்கெங்கே சிங்களன் வேலை பார்க்கிறான் என்பது தெரியும். இங்கு பெரும் கடைகளை வைத்து வியாபாரம் செய்யும் சிங்களனை எனக்குத் தெரியும். என் மீனவனை அடித்தால், உன் மாணவனை அடிப்பேன்' என்று பேசினேன்!''



''இந்திய சட்டப்படி மட்டுமல்ல... 'பல்லுக்குப் பல்' என்பதெல்லாம் தவறுதானே?''

''இரு இனங்களுக்கு இடையில் கலவரத்தை, வன்முறையைத் தூண்டியதாக சொல்வது மிகப் பெரிய வேடிக்கை. நான் பேசி என்ன வன்முறை நடந்துவிட்டது இப்போது? எந்தக் காலத்தில் சிங்களனுக்கும் தமிழினத் துக்கும் நட்பு இருந்தது, நான் அதைக் கெடுக்க? இரண்டு இனங்களுக்கும் இடையில் 60 வருடப் பகை, யுத்தம் இன்னும் முடியவில்லை!''

''புதுச்சேரியில் ஒருமுறை தமிழகத் தலைவர்களை அதிர்ச்சிகரமாக ஒப்பிட்டு, 'இவர்களுக்கு இறையாண்மையைப்பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது?' என்று பேசி, பின்பு வருத்தம் தெரிவித்தீர்கள். அதைப்போல இப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசிவிட்டதாக நினைக்கிறீர்களா?''

''புதுச்சேரியில் பேசியதற்காக வருத்தம் தெரிவித்தது உண்மைதான். அதற்காகத்தான் சிறைவைத்து விட்டார்களே... இப்போது, உண்மையை... ஆழ்மனதில் இருந்து நேர்மையாகப் பேசி இருக்கிறேன். இதுவரையிலும் இனியும் நான் இப்படித்தான். என் பேச்சில் எங்காவது தவறு என யார் சொன்னாலும் அதைத் திருத்திக்கொள்ளத் தயார். சென்னையில் நான் பேசியதை ஊடகங்களில் வெளியிடாமல் தடுக்கிறார்கள். கருணாநிதிக்குத் துணிவு இருந்தால், நேர்மை இருந்தால், என் பேச்சை வரிவிடாமல் முழுமையாக வெளியிடவேண்டும். என் தமிழ் மக்கள் அதைத் தவறு என்று சொன்னால், அதற்காக ஆயுள் தண்டனையைக்கூட ஏற்றுக்கொள்வேன். இதற்கு அவர் தயாரா? நான் கேட்கும் கேள்விகளை அவரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதுதான் பிரச்னை. சென்னையில்கூட, 'இலங்கையில் போர்க் குற்ற விசாரணைக்கு அமைக்கப்பட்டுள்ள குழுவை வரவேற்கச் சொல்லி, மத்திய அரசை வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் போடுங்கள்' எனப் பேசினேன். அவரிடம் இதற்கு பதில் இல்லை. எதற்கெடுத்தாலும் கடிதம் எழுதுகிறார். எவ்வளவோ நவீனம் வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் இது எவ்வளவு பெரிய நகைச்சுவை!

உலகத் தமிழன் இதைக் கண்டு சிரிக்கிறான். இப்படியே கடிதம் எழுதி ஒரு காலத்தில் அதையும் புத்தகம் போட்டு விற்கலாம். குடும்பத்தாருக்குப் பதவி வேண்டும் என்றால் மட்டும் நேரில் போகிறீர்களே... மீனவத் தமிழன் உயிர் மட்டும் அவ்வளவு அலட்சியமா?

பேச்சில், எழுத்தில் மட்டும், 'புறநானூற்றுத் தமிழனே, வரிப் புலி இனமே, சிங்கக் கூட்டமே சிலிர்த்து வா' என எழுதுகிறார். இவர் இப்படி எழுதுகிறாரே என்று பட்டிதொட்டியில் இருந்து எழுச்சியோடு வந்தால், 'சிங்களன் அடிப்பான்... கொஞ்சம் பொறுத்துக்கொள்' என்கிறார். அதற்கு நீங்கள் எங்களை உசுப்பேற்றாமல், 'மண்புழுவே, நாயே, நரியே' என எழுதி இருக்கலாமே? தன்மானம், இனமானம், சுயமரியாதை என்று சொல்வதெல்லாம் கூழைக் கும்பிடு போடுவதற்காகத்தானா? இனிமேல் புறநானூற்று தமிழ் வீரத்தைப்பற்றி எழுதுவதை இவர் நிறுத்தட்டும்!''

''ஈழ ஆதரவுத் தளத்தில் பல தலைவர்கள் தொடர்ந்து இயங்கினாலும், நீங்களும் உங்கள் அமைப்பும் தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாவது ஏன்?''

''பொதுவாக இறையாண்மைக்கு எதிராகப் பேசிவிட்டதாக என் மீது வழக்குப் போடுவார்கள். இந்த முறை மட்டும் வன்முறையைத் தூண்டியதாக வழக்கு. நான் பேசியது வன்முறையைத் தூண்டுகிறது என்றால், என் மீனவத் தமிழனை ராஜபக்ஷேவின் சிங்களக் கடற்படை கொன்றது என்ன நன்முறையா? ஆனால், இதைப்பற்றி இங்கே பேசக் கூடாது. நான் எந்த ஊருக்கு, கூட்டத்துக்குப் போனாலும் தங்கும் விடுதியில் இடம் தரக் கூடாது என அரசு மிரட்டிவைத்துள்ளது. என் கார் எரிக்கப்பட்டது. இதுவரை வழக்கே பதிவு செய்யப்படவில்லை. ஒரே காரணம், சீமான் தமிழர்களைப்பற்றிப் பேசுகிறான். அவன் பேச்சை நிறுத்த வேண்டும். என் தம்பிகள் செயல்படக் கூடாது. அவர்கள் களத்தில் இறங்கவே அச்சப்படவேண்டும். இதுதான் ஆள்வோரின் எண்ணம்!''

''வெளிநாட்டுப் பிரச்னைகளைப் பேசி இங்கு பிரச்னை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளாரே?''

''என்னை முன்னிட்டு இந்த நாட்டில் ஒரு சட்டம் கொண்டுவந்தால், அதைவிட வேறு என்ன பெருமை இருக்க முடியும்? 'எதையும் சந்தேகி' எனக் கேட்கச் சொன்ன பெரியாரின் வாரிசு என சொல்பவர்களின் லட்சணம் இதுதான். சாகத் துணிந்துதான் போராட்டக் களத்துக்கு வந்திருக்கிறேன். 'ஓடாத மானும் போராடாத இனமும் வாழ்ந்ததே இல்லை' என என் தலைவன் பிரபாகரன் சொல்வார். மான் ஓடிக்கொண்டே இருக்கிறது... நான் போராடிக்கொண்டே இருக்கிறேன்... இருப்பேன்!'



-

நன்றி

ஜூனியர் விகடன்

No comments:

Post a Comment