Labels

Friday, May 21, 2010

''தனி ஈழம்தான் இந்தியாவுக்கு அரண்!'' : அமெரிக்க பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி!

பேராசிரியர் பிரான்சிஸ் பாயில் அமெரிக்காவின் மிகப் பிரபலமான சட்ட மேதை. சிகாகோவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தனிமனித உரிமை, அரசியலமைப்பு சட்டங்களில் கீர்த்தி வாய்ந்தவர். அவர் தமிழக தமிழ் சஞ்சிகையான ஜூனியர் விகடனுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இஸ்ரேலுக்கு எதிராக 60 ஆண்டுகளாகப் போராடிவரும் பாலஸ்தீன அரசின் சட்ட ஆலோசகரான பாயில், அதன் அரசியலமைப்பு மற்றும் அரசியல் சட்டம் போன்ற அயல் நாட்டு உறவுகளுக்கு ஆலோசனை தருகிறார். சில ஆண்டுகளாக ஈழத்தமிழர் பிரச்சினைகளில் முழுமூச்சாக ஈடுபட்டு, சர்வதேச நீதிமன்றத்தில் ராஜபக்ஷே அரசின் மனித உரிமை மீறல்களுக்கு தண்டனை பெற்றுத்தரப் பாடுபடுபவர். நாடு கடந்த தமிழீழ அரசு அமைய ருத்திரகுமாரனுக்கு ஆலோசனை கூறி வருகிறார். சமீபத்தில், நடைபெற்ற நாடு கடந்த தமிழீழத் தேர்தலில், தேர்தல் குழுவின் முக்கிய உறுப்பினரான இவரது ஆலோசனையின் பேரில்தான் தேர்தலே நடைபெற்றது.


கடந்த ஆண்டு சென்னை உட்படப் பல்வேறு நகரங்களுக்குச் சென்று தமிழீழ ஆர்வலர்களை சந்தித்து கருத்துகளைக் கேட்டார். அவருடன் ஜூ.வி-க்காக ஒரு பிரத்யேக பேட்டி!


''விடுதலைப்புலிகள் அடியோடு அழிக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில்... தமிழீழம் மலர வாய்ப்பு இருக்கிறதா?''


''நம்பிக்கைதான் வாழ்க்கை. இத்தனை ஆண்டுகளாக இந்தப் போராட்டத்தை நடத்தியவர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி வந்தார்கள். இப்போது, புலிகள் அடியோடு அழிக்கப்பட்ட பிறகு ராஜபக்ஷே தமிழீழ மக்களை அடியோடு ஒழிக்கப் பார்க்கிறார். இலங்கை அரசு எவ்வித சர்வதேச விதிகளையும் மதிப்பதில்லை. இந்தியாவும் தட்டிக் கேட்பதில்லை. நாடு கடந்த தமிழீழ அரசு, கண்டிப்பாக ஈழ மக்களின் மனசாட்சியாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்கள் வருங்காலத்தை நிர்ணயித்துக்கொள்வார்கள். பல முக்கிய முடிவுகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்படும்.''


''நாடு கடந்த தமிழீழ அரசு வெறும் வலைதள அரசாக இருக்கும் என்று கூறப்படுகிறதே?''


''இலங்கையில் இனப்படுகொலைக்குப் பிறகு அங்கு எங்கே தமிழர் தலைவர்கள் இருக்கிறார்கள்? எல்லோருமே வெளியில்தானே இருக்கிறார்கள். இலங்கைக்கு அவர்களால் போகத்தான் முடியுமா? இந்தச் சூழ்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதைத் தவிர வேறு வழியிருக்கிறதா? ஜனநாயக முறையில் உறுப்பினர்களை தேர்வு செய்திருக்கிறார்கள். ஒரு புதிய பாதையில் இயக்கம் அடி போடுகிறது. பொறுத்துத்தான் பார்ப்போமே!''


''நீங்கள் பாலஸ்தீன அரசுக்கு உதவுகிறீர்கள். பாலஸ்தீனியர்களுக்கு நாடு இருக்கிறது. தமிழீழ மக்களுக்கு ஒன்றுமே இல்லையே?''


''ஏன் இல்லை? இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளை இலங்கை அரசு ஆக்கிரமித்து வருகிறது. தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அடிமைகளாய் வாழும் அவலம் இது. பாலஸ்தீன நிலங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், இப்போது ராஜபக்ஷே அரசை ஆதரிக்கிறது. பாலஸ்தீன விடுதலைப்போரும் தமிழீழ விடுதலைப் போரும் ஒரே ரகம்தான். இருவரையும் தீவிரவாதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் என்றது உலகம். இப்போது, மொத்தமுள்ள 195 நாடுகளில் 127 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளது. பாலஸ்தீனம் சுதந்திர நாடாக எவ்வித அச்சுறுத்தல்களும் இன்றி நிம்மதியாக வாழவிடவேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் ஒபாமாவும் சமீபத்தில் கூறியுள்ளார்.''


''பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்னையில் தலையிடும் அமெரிக்கா... இலங்கைப் பிரச்னையில் ஒதுங்கியிருப்பது ஏன்?''


''இஸ்ரேல்தான் காரணம். இலங்கை அரசை இஸ்ரேல் முழுமையாக ஆதரிக்கிறது. மேலும், அதிபர் ஒபாமா, ராஜபக்ஷே அரசை ஆதரிக்கக் காரணம் சீனா. சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து வருவது அமெரிக்காவுக்கு எரிச்சலூட்டுகிறது. சீனா இராணுவ முகாம்கூட இலங்கையில் அமைக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்கா கவலைப்படுகிறது. அதற்காகவே ஐக்கிய நாடுகள் சபை, இலங்கையில் மனித உரிமைகளைக் கண்டறிய அமைக்கப்பட்ட 'உப்புமா கமிட்டி'யைக்கூட அமெரிக்கா ஆதரித்தது. இந்த விசாரணை கமிஷன் பயனற்றது. பல் பிடுங்கப்பட்ட அந்த பாம்பு - ராஜபக்ஷே சகோதரர்கள் மீது கை வைக்கத் துணியாது! சமீபத்தில், ஐ.நா-வுக்கான அமெரிக்க தூதர் இந்த கமிஷனை ஆதரித்திருப்பதுதான் மிகவும் வேதனை.''


''தமிழீழ அரசு எப்படிப்பட்டதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது?''


''ஒன்று, முழு சுதந்திர நாடு என்று பிரகடனம். இதுதான் தமிழீழ மக்களின் அதன் தலைவர்களின் ஆசை. அடுத்தது, அமெரிக்காவின் மாகாணங்களில் ஒன்றான போர்த்தோ ரிக்கோ நாடு போன்ற அமைப்பு. இது சுதந்திர நாடு; அதேசமயம் அமெரிக்க கூட்டாட்சியின் கீழ் வரும். மூன்றாவது, இலங்கை அரசின் கீழ் அதன் ஆளுமைக்கு முழுவதும் உட்பட்ட சுதந்திர மாகாணம்.''


''பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு இந்திய அரசு அனுமதி மறுத்த செயலைப்பற்றி...''


''பிரபாகரன் மீதுள்ள கோபத்தை அவர் தாய் மீது காட்டியிருக்கிறது உங்கள் மத்திய அரசு. பார்வதி அம்மாள் என்ன தீவிரவாதியா அல்லது அரசை கவிழ்க்க சதி செய்கிறாரா? 80 வயது மூதாட்டி எழுந்து நிற்பதற்குக்கூட திராணி அற்றவர். இது மனித உரிமைகள் மீறிய செயல். இந்தியாவில் மிகச் சிறந்த வழக்கறிஞர்கள் உள்ளனர். நடுநிலைமையான நேர்மையான நீதிமன்றங்கள் உள்ளனவா? ஏன் யாரும் இதை நீதிமன்றம் உதவியுடன் தட்டிக் கேட்கவில்லை. நாங்கள் அமெரிக்காவில் இத்தகைய செயல்களை நீதிமன்றத்தில்தான் தட்டிக் கேட்போம். இதில் அரசியல் செய்யக்கூடாது. பார்வதி அம்மாளை உள்ளே வர விடாதது ஓர் அற்ப சந்தோஷம் மட்டுமே தவிர, யாரை தண்டிக்கப் பார்க்கிறீர்கள்... இறந்துபோன பிரபாகரனையா?''


''தமிழீழ போராட்டத்தை இந்தியா எப்படி அணுக வேண்டும்?''


''அறிவுரை சொல்லும் அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை. ஆனால், இந்தியாவை நேசிக்கும் அமெரிக்கன் என்ற முறையில் சில கருத்துகளை கூற முடியும். உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஈழத் தமிழர்களுக்கு சொந்தமே. அந்த வகையில் இலங்கையில் விடுதலைப்புலிகளின் சரித்திரம் முடிந்த பின்பும்கூட வன்மம் பாராட்ட வேண்டாமே... ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை பழைய கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டாம்.


மாறிவரும் ஜியோ-பொலிடிகல் அமைப்பில் சீனாவும், இலங்கையும் சேர்ந்தால் அது ஆபத்து. தனி ஈழம் இந்தியாவுக்கு அரணாக இருக்கும். நான் அரசியல்வாதி அல்ல; வழக்கறிஞர். ஐரிஷ் இனத்தவன்... ஈழத் தமிழன்கூட இல்லை. ஆனாலும், அவர்களின் வலி தெரியும். தயவுசெய்து இந்தியா இதில் தலையிட்டு தமிழீழம் மலர உதவ வேண்டும்.''

No comments:

Post a Comment