Labels

Wednesday, May 19, 2010

நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு!


அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள புகழ் பெற்ற சுதந்திர சதுக்கத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு நடைபெற்றது. அதில் முதல் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வி. ருத்திரகுமாரன் சிறப்புரையாற்றினார்.

அதில் அவர் பேசியதாவது:

தமிழ் ஈழ விடுதலைப் பயிருக்கு தம் உயிர்களை எருவாக்கிய எமது மாவீரர்களுக்கும் சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு பலியான பொது மக்களுக்கும் முதற்கண் எனது வணக்கஙகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இம் முதலமர்வு நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் ஜனாதிபதி ஜான்சன் அவர்களது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் சட்ட அமைச்சராகவிளங்கிய ராம்சே கிளார்க் அவர்களே! மதியுரைக்குழு உறுப்பினர்களே! சக தெரிவு செய்யப்பட்ட அரசவை பிரதிநிதிகளே! புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களே! எமது தமிழீழத் தாயகத்தில் வாழ்ந்து வரும் எமதருமை உறவுகளே! தமிழ்நாட்டு சகோதரர்களே! உலகத் தமிழ் மக்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய நாளில் உலகின் அடுத்த சுதந்திரநாட்டை அமைக்கவிருக்கும் தென்சூடானிய மக்களின் அரசியல் தலைமையான எஸ்பிஎல்எம் அமைப்பின் அமெரிக்கப் பிரதிநிதியும் எம்முடன் இணைந்து கொண்டமை குறித்து நாம் மகிழ்வடைகிறோம்.

அடுத்த வருடம் இடம்பெறவிருக்கும் தென்சூடானிய மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகிப்பதற்கான பொதுசனவாக்கெடுப்பு முழுமையான வெற்றிபெற நாம் வாழ்த்துவதோடு, அமையப்போகும் புதிய நாடான சுதந்திர, ஜனநாயக, வளம் நிறைந்த தென் சூடான் எமக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என நாம் நம்புகிறோம்.

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டம் [^] புதிய அணுகுமுறைக்கு ஊடாக தன்னை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மிக முக்கிய காலகட்டத்தில் நாங்கள் இங்கு கூடியிருக்கின்றோம்.

கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் உரிமைகளுக்காகவும் தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் எழுப்பப்பட்ட சனநாயகக்குரல்களும் கோரிக்கைகளும் இராணுவ அடக்குமுறையின் கீழும், சட்டத்தின் இரும்புக்கரம் கொண்டும், ஏவிவிடப்பட்ட இனவன்முறைகளினூடாகவும் ஒடுக்கப்பட்டநிலையில், தங்களினை தற்காத்துக் கொள்வதற்காக இலங்கைத் தீவின் ஆள்புல எல்லைகளுக்கு அப்பால் சிதறியோடி, உலகின் பல திக்குகளிலும் ஏதிலிகளாக குடியேறி, இன்று பரந்து வாழுகின்ற சுமார் ஒரு மில்லியன் ஈழத் தமிழர்களின் சார்பாக நாம் இங்கு ஒன்றிணைந்துள்ளோம்.

இந்த தேசிய அரசிலமைப்பு மையத்தில், 223 ஆண்டுகளுக்கு முன்னர், ஜேம்ஸ் மடிசன், அலெக்ஸ்சான்டர் கமில்டன் உட்பட்ட சுதந்திர அமெரிக்க நாட்டின் மூதாதையர் புதியதொரு அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக இங்கு கூடியிருந்தனர். இவர்களின் ஒன்று கூடல் அமெரிக்காவின் அரசியலமைப்பைப் பிரசவித்தது.

நாமும், நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நமது முதலமர்வுக்காக இங்கு கூடியிருப்பது மிகவும் பொருத்தப்பாடுடையது. நாம் இங்கு கூடியிருப்பதும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கே.

அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனமும் இந்த பிலடெல்பியா நகரிலேயே நிகழ்ந்தது. நாமும் நமது சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்வதற்கான பயணத்தைத்தான் மேற்கொண்டுள்ளோம்.

ஈழத்தமிழரின் வரலாற்றில் இன்றைய தினம் மிகமுக்கியமான நாளாக அமைகின்றது. கடந்த வருடம் இதே நாளில் எமது தாயகத்தின் முல்லைத்தீவுக் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் என்ற சிறுநிலப்பரப்பினுள் சுமார் 300,0000 திற்கும் அதிகமான அப்பாவித் தமிழ்மக்கள் கொடுரமான மரணப்பொறிக்குள் தள்ளப்பட்டனர்.

நாகரிக உலகின் நியமங்களினையும், பண்பாடுகளினையும், அரசியல் விழுமியங்களினையும் புறந்தள்ளிவிட்டு, இலங்கையின் சிங்கள தேசியவாத அரசும் அதன் இராணுவமும் இனப்படுகொலையினை நிகழ்த்தியநாள் இது.

21ம்நூற்றாண்டின் மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடுரமான குற்றம் தன் கண்முன்னே நிகழ்வதனை தடுப்பதற்கும் மக்களினைக் காப்பாற்றுவதற்கும் உரிய நடவடிக்கைகளினை முன்னெடுக்காமல் சர்வதேச சமூகம் செயலற்று மௌனித்து நின்ற நாள் இது.

சுமார் 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிர்களினைக் காவு கொண்டும், பலபத்தாயிரம் மக்களினை குற்றுயிராக காயப்படுத்தியும், மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களினை ஏதிலிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் சிறைப்படுத்திய நாள்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் எமது மக்கள் மீதான போரை இலங்கை அரசு தீவிரப்படுத்திய போது அனைத்துலக தொண்டர் நிறுவனங்களை இப் பகுதியனை விட்டு வெளியேற்றி விட்டுத்தான் இத்தனை கொடுமைகளையும் புரிந்தது.

எமது மக்களுக்கான உணவு, உறையுள், மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டன. எமது மக்கள் மீது கொத்துக் கொத்தாக குண்டுகளும் எறிகணைகளும் வீசப்பட்டன. 99% க்கும் கூடுதலாக சிங்கள இனத்தவர்களைக் கொண்ட இலங்கையின் ஆயுதப்படைகளால் தயவு தாட்சண்யமின்றி எமது மக்கள் கொல்லப்பட்டனர். மக்களின் வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டன.

இது ஈழத் தமிழ் தேசத்துக்கு எதிராக இலங்கை அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையின் பாற்படட்தேயாகும்.

முன்னாள் யூகோஸ்லாவியாவின் இனஅழிப்பு தொடர்பான விசாரனை மன்று, “இனஅழிப்புத் தொடர்பான நோக்கம் புறக்கணிப்புக்களின் தீவிரத்தன்மைகளின் ஊடாக வெளிப்படும்” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளது.

இவ்விடத்தில் இலங்கை அரசு 1971 ஆம் ஆண்டு இடம் பெற்ற சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியினை அடக்குவதற்குப் பிரயோகித்த முறைகளை தமிழ் தேசத்துக்கு பிரயோகித்த முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் அவசியமானதாகும். சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்க விமானக்குண்டுகள், எறிகணைகள் வீசப்படவில்லை. மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்படவில்லை. உணவும் மருந்தும் போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படவில்லை. மக்களின் நிறுவனங்கள் அழிக்கப்படவில்லை.

இந்த வேறுபாடு, புறக்கணிக்கும் அணுகுமுறை இலங்கை அரசின் இன அழிப்புக்கான நோக்கத்தை வெளிப்படுத்தப் போதுமானது

இத்தகைய இன அழிப்பு அபாயத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஈழத் தமிழர் தேசம் தனக்கென ஒரு சுதந்திர நாட்டை இன அழிப்புக்கு எதிரான ஈடு செய்பரிகாரமாக அமைத்துக் கொள்வதற்கான கோரிக்கையினை எழுப்புவதற்கு சர்வதேச சட்டங்களில், குறிப்பாக இனப்படுகொலைக்கு எதிரான பிரகடனத்தின் 8 சரத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திலும் 7வது அத்தியாயத்திலும் இடம் உண்டு.

இலங்கை அரசும் அதன் ஆட்சியாளர்களும் தமிழ்மக்களின் போராட்டவலுவினை தனது இராணுவ மேலாதிக்கத்தின் வலுக்கொண்டு சிதைத்தது விட்டதாகவும் தமிழ்மக்களின் விடுதலைத்தீயினை அணைத்து விட்டதாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

ஆனால் எமது இந்த அமர்வானது தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்படமுடியாதது என்ற செய்தியை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. நாடு கடந்த தேசமாக நாம் இங்கு கூடி நிற்பது தமிழரின் ஒற்றுமை உடைந்து போகவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

நாம் எமக்கிடையே மேற்கொண்ட ஜனநாயக செயன்முறையின் மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அம் மக்கள் பிரதிநிதிகள் இவ் அமர்வில் கூடியியிருப்பது தமிழர்கள் [^] தமது இலக்குகளை ஜனநாயகவழியில், சாத்வீக முறையில், வெளிப்படைத் தன்மையும் பன்முகத்தன்மையும் கொண்டு முன்னெடுக்க உறுதி பூண்டுள்ளனர் என்ற செய்தியனை வெளிப்படுத்தி நிற்கிறது.

ஒரு இனத்தின் அபிலாசையினையோ அல்லது உரிமைக்குரலினையோ வன்முறை கொண்டோ அதிகாரத்தின் பலம் கொண்டோ அடக்கிவிட முடியாது. அம்மக்களின் அபிலாசைகள் திருப்தியடையும் போது மட்டுமே விடுதலைக்குரலின் உக்கிரம் தணியும். உரிமைக்கான போராட்டத்தின் தீவிரம் இல்லாது போகும். அதுவரை அம்மக்களின் உரிமைக்குரலும் விடுதலைக்கான வேட்கையும் ஏதோ ஒருவடிவத்தில் எங்கோ ஒரு மூலையில் அணையாது பாதுகாக்கப்படும்.

அத்தகைய பணியினை நிறைவேற்றுவதற்கான மக்கள் அமைப்பினை உருவாக்கும் உன்னத குறிக்கோளுடனேயே புலம்பெயர்தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் நாங்கள் இங்கு இணைந்துள்ளோம். எமது இணைப்பும் நாங்கள் கட்டியெழுப்பவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்கின்ற புதுமையான நிறுவனவடிவமும் இன்றைய நவீன சிந்தனை மரபுகளுக்கும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் நாகரீகத்திற்கும் உலகந்தழுவியதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மானிடவிழுமியங்களுக்கும் முன்மாதிரியாக அமையவிருக்கின்றது.

ஒரு சமூகம் தனது தேசிய விடுதலையினை வென்றெடுப்பதற்கான புதிய பாதையினை எம்மால் உருவாக்கப்படவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்வுலகிற்கும் விடுதலைவேண்டிநிற்கும் ஏனைய சமூகங்களுக்கும் முன்னறிவிக்கும்.

கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான அடித்தள வேலைகளினை முன்னெடுக்கும் மிக பாரியபொறுப்பு என்னிடம் கையளிக்கப்பட்டது. நிதானத்துடனும், தேசத்தின் விடுதலையிலும் தங்களின் செழுமைமிக்க எதிர்காலத்திலும் தமிழ்மக்கள் கொண்டிருந்த அசைக்கமுடியாத பற்றுதியில் நம்பிக்கைவைத்தே நான் இப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன்.

எனது பணியின் பாரத்தினை பகிர்ந்து சுமப்பதற்காக பலநூற்றுக்கணக்கான விடுதலை விரும்பிகளும் புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் ஆர்வலர்களும் முன்வந்தார்கள். மதியுரைக்குழு உறுப்பினர்களாக, நாடுவாரியான செற்பாட்டுக்குழுக்களின் செயற்பாட்டாளர்களாக இவர்கள் என்னுடன் கைகோர்த்து நின்றார்கள். அவர்களின் அளப்பரிய பங்களிப்பினை இவ்விடத்தில் பெருமனதோடு உங்கள் சார்பாக நினைவுகூருகின்றேன்.

இவ் அரசியல் முன்னெடுப்புக்கு பல தமிழ் ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்து வந்தன. இவ் ஊடக நண்பர்களின் கரங்களை நாம் நன்றியுணர்வுடனும் தோழமையுணர்வுடனும் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.

எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இலக்கின் எல்லைக்குள் நாங்கள் இன்று பிரவேசித்து விட்டோம் என்று கூறுவதில் நிறைவு கொள்கின்றேன். இன்றிலிருந்து புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் தனக்குள் உத்வேகம் பெற்றதாக, தமிழ் மக்களின் தேசியவிடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும். அதேபோல் தமிழ் மக்களுக்காக புலம் பெயர் மக்களால் கட்டியெழுப்பப்படும். இவ் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனக்குரிய கூட்டுப்பொறுப்பினை உணர்ந்து செயற்படும்.

சர்வதேச சமூகமே, தனிமனித உரிமைக்காகவும் சமூகங்களின் உரிமைக்காகவும் தேசியஇ னங்களின் சுயநிர்ணயஉரிமைக்காகவும் விடுதலைக்காகவும குரல் கொடுக்கும் ஆர்வலர்களே, அரசுகளே!

இலங்கைத்தீவினுள் வாழுகின்ற ஈழத்தமிழர்கள் தங்களிடமிருநது பிரிக்க முடியாத அரசியல் இறைமையை பிரயோகிப்பதற்காகவும் சுய நிர்ணய உரிமைக்கு முழுமையான செயலுருவம் கொடுப்பதற்காகவும் கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது உரிமைக்குரலும் தற்காப்புத் திறனும் தற்சார்பு வாழ்க்கையும் இலங்கையின் ஆட்சியாளர்களினால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட சட்டமுறை அரசு என்கின்ற ஒரு காரணத்தினைக் காட்டி தனது இனப்படுகொலையினையும் தமிழ்மக்கள் மீது நிகழ்த்திய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களினையும் நியாயப்படுத்த சிறிலங்காவின் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆயினும் தமிழ் மக்கள் தமது இறைமையை சிங்கள அரசிடம் கொடுக்காத காரணத்தினால் தமிழ் மக்களை பொறுத்த வரையில் சிங்கள அரசை சட்டபூர்வமான அரசாக கருத முடியாது. ஒரு விவாதத்திற்காக சட்டபூர்வமான அரசாக கருதப்பட்டாலும் தமிழ் இனத்திற்கு எதிரான இனப் படுகொலையினால் சிங்கள அரசு அந்த தகுதியை இழந்து விட்டது.

இலங்கைத் தீவினுள் அரசியல் நிர்ப்பந்தத்திற்குள்ளும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் சமூகத்தினை அச்சுறுத்தும், சட்டத்திற்கு புறம்பான கொலைக் கரங்களுக்குள்ளும் சிறைப்படுத்தப்பட்டுள்ள மக்களால ; சுதந்திரமாக தங்களது அபிலாசைகளினை எடுத்துரைக்கமுடியவில்லை.

உரிமைகளுக்காகவும் மக்கள் நலன்களினை பாதுகாப்பதற்காக செயற்படும் உங்களாலும் கூட சுதந்திரமாகவும் தன்னியல்பாகவும் அம்மக்களினை அணுகுவதற்கும் அவர்களின் துயரங்களினை கேட்டறிந்து உதவுவதற்கும் இலங்கையின் அரசியற்கட்டமைப்பும் அதன் ஆட்சியாளர்களும் அனுமதிக்கவில்லை.

எமது தாயக மக்கள் சுதந்திரமாக தமது அரசில் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டுமானால் போரினால் பாதிப்படைந்த அவர்களது வாழ்க்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இவர்களை சூழ்ந்துள்ள சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு இல்லாதொழிக்கப்படவேண்டும். அடுத்த ஆண்டு தென் சூடானில் நடைபெற உள்ளது போன்று சர்வேச சமூகத்தின் ஏற்பாட்டுடன், ஈழத் தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரவினை அமைத்து வாழ விருபம்புகிறார்களா என்ற ஒரு வாக்கெடுப்பு நடாத்தப்படும் சூழல் உருவாக வேண்டும்.

அப்போது எமது தாயக மக்களுக்கு தமது சுதந்திரவேட்கையினை வெளிப்படுத்துவதற்கான அரசியல்வெளி கிடைக்கும். தற்போது எமது தாயக மக்களின் சுதந்திரவேட்கை இலங்கையின் அரசியல் சட்டங்களினாலும், கொடும் இராணுவ இயந்திரத்தாலும் அடக்கியொடுக்கப்படும் நிலையே நிலவுகிறது.

இந் நிலையிலேயே புலம்பெயர் ஈழத் தமிழ்ச் சமூகம் சர்வதேச அரசியற் தளத்திலே ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளினை ஓங்கி உரத்து ஒலிப்பதற்கும், இராணுவ ஆக்கிரமிப்பிற்குள்ளும் ஏதேச்சாதிகார ஆட்சியின்கீழும் சிக்குப்பட்டுள்ள மக்களின் சுதந்திரத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும் பாதுகாப்புமிக்க எதிர்காலத்தினைக் கட்டியெழுப்புவதற்காகவும் இங்கு கூடியுள்ளோம்.

இன்றுவரை உலகின் நாகரீகம் மிக்க சமூகங்கள் கண்டறிந்து கட்டியெழுப்பிய உயர் அரசியல் விழுமியங்களே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்படு நியமங்களாக இருக்கும். அவற்றினடிப்படையிலேயே இவ்வமைப்பு ஈழத்தமிழர்களின் தன்னாட்சிஉரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்காக, இறைமையை பிரயோகிப்பதற்காக சலிப்பின்றி போராடும். இவ் அடிப்படையில் சகலருடனும், அரசுகள், பொதுஅமைப்புக்கள், நாடுகளின் கூட்டுக்கள் ஆகியோருடன் பொருத்தமானவகையில் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது.

இலங்கையின் ஆட்சியாளர்களே! சிங்கள மக்களே!

தமிழர்களது வாழ்வுரிமைக்கான போராட்டம் தவறான சிந்தனைகளினைக் கொண்ட சிஙகள தேசியவாத தலைவர்களினால் கட்டியெழுப்பப்பட்டு குவிக்கப்பட்ட அதிகார மையத்தினால் இராணுவக்கரங்கள் கொண்டு நசுக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ்மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமைக்கு முழுமையான செயலுருவம் கொடுப்பதற்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருப்பார்கள், அது வரலாற்றின் நியதியாகும். அது சகல உயிரினங்களுக்கும் பொருத்தமான இயற்கையின் விதியாகும்.

உங்களது மக்கட்தொகைப்பெருக்கத்தினால் கட்டியெழுப்பப்பட்ட ஒரின பெரும்பான்மைகொண்ட ஆட்சியதிகாரத்தின் பலத்தினைக்கொண்டு ஏனைய இனங்களுக்கு எதிராக அரசியலமைப்பினையும் சட்டங்களினையும் நிர்வாக விதிகளினையும் உருவாக்கியுள்ளீர்கள்.

இது சக இனஙகள் தங்களது உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கும் செயற்படுவதற்கும் வேண்டிய அரசியல் வெளியினை தீவினுள் இல்லாமற்செய்துள்ளது. இராணுவபலத்தினால; நீங்கள் அடைந்துள்ள மேலாதிக்கநிலை உங்கள் கண்களினை முற்றாக மறைத்துள்ளது.

வெற்றி மமதைகாரணமாக தமிழ் மக்கள் அடைந்துள்ள துயரங்களினை உங்களினால் உணர முடியவில்லை. கிடைத்துள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களினையும் வளங்களினையும் கையகப்படுத்துவதிலும் அவர்களினைக் கையறுநிலைக்கு தள்ளுவதிலும் துரிதமாக செயற்படுகின்றீர்கள்.

தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்காக தம்முயிரைத்துறந்த வீரர்களின் கல்லறைகளினை சிதைத்து அழிப்பதில் பெருமகிழ்வு கொள்ளுகின்றீர்கள். தற்போது பரிணமித்துவரும் உலகின் புதிய அரசியற் பொருளாதார ஒழுங்கினுள் ஒடுக்கப்படும் சமூகங்களின் குரல்களினை வெளிக் கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. அவற்றில் ஒன்றாகவே எமது நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அமைகின்றது.

தாயக மக்களே!

இலங்கைத்தீவினுள் இறைமையுடனும் தன்னாட்சியுரிமையுடனும் எங்கள் தாயக நிலத்தில் வாழுவதற்கான தேசியவிடுதலைப் போராட்டத்தின் புதிய சூழலில் நாங்கள் இருக்கின்றோம். தேசியத் தலைவர் சுதுமலைக் கூட்டத்தில் கூறியபடி போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறிக்கோள் ஒன்றுதான்.

இலங்கைத்தீவின் அரசியல்நிர்ப்பந்தங்களுக்குள் உங்களால் முன்னெடுக்க சாத்தியமில்லாத விடயங்களுக்காக பலம்வாய்ந்த புலம்பெயர்சமூகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கட்டமைப்புக்கு ஊடாக செயற்பட உள்ளோம்.

சமகாலத்தில் உங்களின் துயரங்களின் சுமைகளினைக் குறைப்பதற்கும் வாழ்க்கையினை மீளக்கட்டியெழுப்புவதற்கும் எங்களின் கரங்கள் உங்களினை நோக்கி களைப்பின்றி நீளும். உங்கள்மீது வன்மம் கொண்டு குற்றம் புரிந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள்.

நீங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல. உங்கள் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம்.

நாங்களும் நீங்களும் இணைந்தவர்களாக, நிலத்திலும் புலத்திலும் நாடு கடந்த அரசியல் வெளியினுள் வாழும் மக்களாக, தமிழீழ தேச மக்களாகிய நாம் இருக்கிறோம்.

தமிழீழ தேசத்தின் விடிவுக்கும் நம் எல்லோரது வளமான வாழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக நாம் வலுச் சேர்ப்போமாக” என்று ருத்ரகுமாரன் பேசினார்.

No comments:

Post a Comment