Wednesday, June 29, 2011
அமெரிக்க கோர்ட்டில் போர்க்குற்ற வழக்கு: சம்மனை ஏற்க மறுத்த ராஜபக்சே பணிந்தார்
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் வசிக்கும் 3 இலங்கை தமிழர்கள், அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட கோர்ட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக சிவில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' என்ற அமைப்பின் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இலங்கை முப்படைகளின் தலைவர் என்ற முறையில், போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல், மற்றும் சித்ரவதை படுகொலைகளுக்கு ராஜபக்சேவே பொறுப்பு என்று அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
மேலும் 2006ம் ஆண்டு போரின் போது திரிகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களில் ஒருவரான ராஜீகர் மனோகரன், பசிப்பிணிக்கு எதிரான அமைப்பில் பலியான 17 ஊழியர்களில் ஒருவரான ஆனந்தராஜா, இறுதி கட்ட போரின் போது பாதுகாக்கப்பட்ட பகுதியில் பதுங்கு குழியில் கொல்லப்பட்ட ஜெயக்குமார் என்பவரின் உறவினர் ஆகிய மூன்று பேருடைய குடும்பத்துக்கும் ராஜபக்சே ரூ.150 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் கோரிக்கை விடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் ஆஜராகும்படி ராஜபக்சேவுக்கு கொம்பியா மாவட்ட கோர்ட்டு நீதிபதி சம்மன் அனுப்பி இருந்தார். உரிய பதில் அளிக்கா விட்டால் ஒருதலைப் பட்சமாக தீர்ப்பு வழங்கப்படும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த சம்மனை இலங்கை அரசு உதாசீனப்படுத்தியது. இலங்கை அரசுக்கும் அதிபருக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்துவதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டு இருப்பதாக, வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்மனுக்கு பதில் அளிக்கத் தேவை இல்லை என்றும், இலங்கையின் சட்டப்படி இது போன்ற வழக்குகளில் ஆஜராகாமல் இருக்க அதிபருக்கு விதிவிலக்கு உண்டு என்றும், வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறி இருந்தார்.
ஆனால், இதன் மூலம் அமெரிக்க கோர்ட்டில் ராஜபக்சேவுக்கு எதிரான தீர்ப்பு வந்தால் அதன் மூலம் உலக அரங்கில் இலங்கை அரசுக்கு நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்ததால் இலங்கை அரசு பணிந்தது.
இந்த விவகாரம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்திய நீதித்துறை அதிகாரிகள், அமெரிக்க கோர்ட்டில் ராஜபக்சே சார்பில் ஆஜராக அந்த நாட்டைச் சேர்ந்த வக்கீல் ஒருவரை நியமிக்க முடிவு செய்தனர்.
இந்த வழக்கில் அதிபரின் நலனை பாதுகாப்பதற்காக, அவர் சார்பில் அமெரிக்காவில் உள்ள வக்கீல் ஒருவர் ஆஜர் ஆவார் என்று, நீதித்துறை செயலாளர் சுதா காம்லத் அறிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment