Wednesday, June 22, 2011
ஈழத்தமிழருக்காக ஒரு நாள்! - மெரினாவில் மெழுகுவத்தி அஞ்சலி
கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில், ஈழ மக்களின் துயர் நீக்கும் வழி தென்படாத நிலையில், ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்காக ஈரமனம் கொண்ட இளைஞர்கள் மெரினாவில் அஞ்சலி செலுத்தத் தயாராகி வருகிறார்கள்!
'மே 17 இயக்கத்தின்’ உறுப்பினர்களில் ஒருவரான திருமுருகன் நம்மிடம் பேசினார். ''ஈழத்தில் நடந்த படுகொலைகள், இந்திய அரசின் துணை இல்லாமல் சிங்கள அரசாங்கம் மட்டுமே செய்தது அல்ல. அங்கே 'எத்தனை பேர் செத்தார்கள், எத்தனை பேர் முகாம்களில் இருக்கிறார்கள்’ என்ற விவரங்களை இன்னும் அரசு சொல்லவில்லை. 'சக தமிழனாக, தோழனாக ஈழத்தில் என்ன நடக்கிறது?’ என்கிற கேள்வியை ஒரு குடிமகனாக நான் முன் நின்று கேட்கும்போது, இந்த அரசாங்கம் என்னிடம் நேர்மையற்றதாக நடந்து கொள்கிறது. நான் ஏமாற்றப்பட்டதன் வலியை உணர்ந்து இந்த அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். இது தனிப்பட்ட என்னுடைய கோபம் அல்ல. தமிழ் இனத்தின் கோபம். சுமார் 1,46,000 பேர் ஈழத்தில் கொல்லப்பட்டனர். இந்தப் பேரழிவை இந்திய அரசாங்கம் தட்டிக் கேட்கவே இல்லை. வியட்நாம் போரின்போது, அமெரிக்க மக்கள் எந்த அளவுக்கு வருந்தினார்களோ, அந்த மனிதநேயத்தின் அடிப்படையில்தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
60 ஆண்டுகாலமாக நடக்கும் போராட்டத் தில், '1976-ம் ஆண்டு ஜனநாயக ரீதியாக தமிழீழம் தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும்’ என்ற தீர்மானத்துக்கு நம்மில் எத்தனை பேர் ஆதரவு அளித்தோம்? தமிழீழம் மட்டுமே அல்ல... தமிழர் சார்ந்தும் கேள்விகள் எழுப்பப்படாமல் போனதன் விளைவே இந்தப் படுகொலைகள். டிசம்பர் 10, 2009-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, 'ஈழத்தில் நடந்த இனப் படுகொலை’ என்ற வார்த்தைகளைச் சொன்னார். அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால், இலங்கை மேற்கொள்ளும் படுகொலைகளை இந்தியா ஊக்குவிக்கிறது என்பது தெரியும்.
14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 70,000 பெண்களை மட்டும் சிறைப் பிடித்து இருக்கிறார்கள். அத்தனை பேரையும் பலாத்காரம் செய்து கர்ப்பிணிகள் ஆக்கிவிட்டனர். போருக்குப் பிந்தைய படுகொலைகள், உலகத்தை உலுக்கி வருகின்றன. இப்படிச் சித்ரவதை களுக்கு உள்ளானவர்களின் ஆதரவுக்கான சர்வதேச தினமாக ஜூன் 26-ம் தேதியை அறிவித்து இருக்கிறது ஐ.நா.!
இன்று வரையிலும், 'போர்க் குற்றவாளி’ என்ற ஒரு பக்கத்தில் இருந்து மட்டுமே பேசுகிறோம். அடக்குமுறை களுக்கு உள்ளான, குற்றவாளிகளின் பிடியில் இருக்கும் மக்களை விடுவித்து, என்ன கோரிக்கைக்காக இத்தனை துயர்களை அடைந்தார்களோ, அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகிற ஜூன் 26-ம் தேதி மெரினா, கண்ணகி சிலை அருகில் மெழுகுவத்தி அஞ்சலி செலுத்த இருக்கிறோம். தங்களைத் தமிழர்களாக உணர்பவர்கள் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வாக இது இருக்கும்!'' என்று ஆவேசப்பட்டார் திருமுருகன்.
அந்த நாளில் உணர்வாளர்கள் அனைவரும் ஓர் இடத்தில் கூடி தங்களது அஞ்சலியையும் கோபத்தையும் பதிவு செய்ய இருக்கிறார்கள்.
மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஈழத் தமிழர்கள் துயர் தீரட்டும்!
நன்றி : ஜூனியர் விகடன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment