Labels

Friday, January 21, 2011

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்!?



விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா?' என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கேள்வியாக உள்ளது. தமிழகத்திற்கு வரும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள், "பிரபாகரனா? அவர் இறந்து ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்டது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியான அவர் இறந்துவிட்டார் என இறப்புச் சான்றிதழை இலங்கை அரசிடமிருந்து பெற்று சி.பி.ஐ. தாக்கல் செய்துவிட்டது'' என எகத்தாளமாக பதில் சொல்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவு தலைவர்களான நெடுமாறனும், வைகோவும், "பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று ஓங்கி அடித்துச் சொல்கிறார்கள். இந்நிலையில் பிரபாகரனைப் பற்றிய தகவல்களுடன் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இயக்கத் தலைவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் என்கிற ரகசிய தகவல் நமக்கு வர... உடனடியாக புலனாய்வில் இறங்கினோம். அந்தச் சந்திப்பு நடந்த இடம் சென்னையில் உள்ள அண்ணா சர்வதேச விமான நிலையம் என்றதும், அங்கு பல நிலைகளில் வேலை செய்யும் ஊழியர்களையும், ஈழ ஆதரவு பிரமுகர்களையும் தொடர்பு கொண்டோம்.

"சுமார் இருபத்தைந்து நாட்களுக்கு முன்பு கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஈழ ஆதரவு தலைவர் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார். இலங்கையிலிருந்து விமானத்தில் வந்திருந்த ஒரு பெண்ணையும் ஆணையும் விமான நிலையத்திலிருந்து அழைத்துக்கொண்டு போய் பேசினார். அந்தப் பெண் நடுத்தர வயதைச் சேர்ந்தவர். அவருடன் வந்த ஆணிற்கு இரண்டு கைகளும் இல்லை. ஏதோ ஒரு வெடிகுண்டுத் தாக்குதலில் அந்த நபர் கைகளை இழந்திருப்பார் என பார்க்கும்போது தெரிந்தது.

சுமார் 30 நிமிடங்கள் அந்த பிரமுகருடன் பேசிக்கொண்டிருந்த அவர்கள், அதன்பிறகு மேற்கத்திய நாடுகளுக்குப் போகும் விமானத்தில் ஏறிப் பறந்தார்கள். பொதுவாக இலங்கையிலிருந்து வரும் விமானங்களை சிறப்பாக கண்காணிப்பதற்கெனவே ஏர்போர்ட்டில் சுற்றி வரும் மத்திய உளவுத்துறையும், அயல்நாடுகளில் துப்பறியும் "ரா' அமைப்பும் இந்தச் சந்திப்பைப் பற்றி மிகவும் லேட்டாகத்தான் கண்டுபிடித்தார்கள். அவர்கள் போய் இலங்கை விமானப் பயணிகளின் லிஸ்ட்டை செக் செய்தார்கள். அதற்குள் வந்தவர்கள் பறந்துவிட்டார்கள். அந்தச் சந்திப்பு பற்றிய விபரங்களை அறிய தமிழகம், இலங்கை என அவர்கள் களம் புகுந்த பிறகுதான் அந்தச் சந்திப்பு வெளியுலகத்திற்குத் தெரிய ஆரம்பித்தது'' என்கிறது விமான நிலைய வட்டாரங்கள்.

இந்தியாவின் இரு பெரும் புலனாய்வு நிறுவனங்களுக்குப் போட்டியாக நாம் நமது தேடலை விரிவுபடுத்தினோம். ஒரு பெரிய பொக்கிஷமே நமக்கு விடையாகக் கிடைத்தது. ஈழ யுத்தத்தில் மிகப் பிரபலமான பெயர் ரூபன். இவர் இலங்கை ராணுவ விமானப் படைக்குப் போட்டியாக, விடுதலைப் புலிகளின் விமானத்தை இயக்கியவர். இலங்கை ராணுவத்துடன் நடைபெற்ற மோதலில் இவர் மரணமடைந்து மாவீரர் ஆகிவிட்டார். அவரது பெயரிலேயே இன்னொருவர் இருந்தார். அவர் சின்னரூபன் என அழைக்கப்பட்டார். தனது அன்புக்குப் பாத்திரமான சின்னரூபனை பிரபாகரன் மெய்க்காவல் படையில் இணைத்துக் கொண்டார். முள்ளிவாய்க்கால் படுகொலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் சின்னரூபன் என்ன ஆனார்? என தேடிய சொந்த பந்தங்களிடம் தெளிவாகவே சின்னரூபன்... "நான் தமிழீழக் கனவை நினைவாக்க மேதகு தலைவர் பிரபாகரன் அவர்களுடன் தப்பித்துச் சென்று கொண்டிருக்கிறேன். என்னை யாரும் தேடவேண்டாம். என்னோடு தொடர்பு கொள்ளவும் வேண்டாம்'' என்றார்.

சின்னரூபனின் பதிலைக் கேட்ட உறவினர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். "அடுத்தகட்ட போராட்டத்திற்கு வலுசேர்க்க தலைவர் பயணம் செய்கிறார். அவருடன் சின்னரூபனும் செல்கிறார்' என்கிற சந்தோஷத்திற்குப் பிறகு அவரிடமிருந்து அவர்களுக்கு எந்தத் தொடர்புமில்லை. கடந்த மாதம் சின்னரூபனிடமிருந்து ஒரு செய்தி அவர்களுக்கு வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒரு ரகசியமான இடத்தில் சின்னரூபனை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள். "தலைவரும் நலம், நானும் நலம். சூழல் கூடி வரும்போது தலைவர் வெளியே வருவார்' என ரூபன் சொன்ன செய்தியைக் கேட்டு ஆனந்தக் கூத்தாடியிருக்கிறார்கள். அந்தத் தகவலை தமிழகத்திற்கு சொல்லிவிட்டு மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தப்பிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் சின்னரூபனின் அக்காவும், மற்றொரு ஆண் உறவினரும். முள்ளிவாய்க்கால் போரின்போது அவர்கள் சின்னரூபனுடன் தொடர்பிலேயே இருந்தவர்கள். அந்தப் போரில் காயம்பட்டவர்கள்.

இத்தனை கடுமையான தாக்குதல்கள், காயங்கள் இவைகளுக்கு நடுவே வேறு நாட்டிற்கு தப்பித்துப் போகும் சூழலிலும், நல்ல செய்தியை உலகம் அறியட்டும் என அந்த நம்பிக்கைக்குரிய தலைவரை மட்டும் சந்தித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். தமிழீழ வானத்தில் விடியலின் வெளிச்ச ரேகைகள் படரத் தொடங்கியிருக்கின்றன.


நன்றி : நக்கீரன்

1 comment: