Labels

Friday, January 21, 2011

மொழி மானம் - ம. இலெ. தங்கப்பா





ஒரு நிலத்தில் நல்ல பயிர் விளைவிக்க வேண்டுமென்றால் முதலில் முள் மண்டிக்கிடக்கும் புதர்களை வெட்டி எரிய வேண்டும். கல்லையும் கரட்டையும் அகற்றி நிலத்தை திருத்த வேண்டும். மேடுகளை, குண்டு குழிகளை நிரப்ப வேண்டும். மேடுகளை வெட்டிச் சரிக்க வேண்டும். களர்ப் பகுதியில் வண்டல் மண் கொட்டி நிலத்துக்கு உயிர்ச்சாரம் ஏற்ற வேண்டும். நீர் பாய்ச்சும் ஏற்பாடுகளும் செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாம் செய்து நிலத்தை நன்கு பயன்படுத்திய பின்புதான் அதனை உழுது பயிர் செய்ய முடியும். முள்ளையும் புதரையும், கல்லையும் கரட்டையும் ஒழிப்பதே பயிர் விளைவிப்பதற்கான முன்முக வேலை.

படைப்பிலக்கியம் தமிழர்க்குப் பயன்பட வேண்டுமென்றால், முதலில் தமிழர் தங்கள் சொந்தத் தமிழ் மண்ணில் தங்கட்குரிய எல்லா அடிப்படை உரிமைகளையும் பெற்று இயல்பு வாழ்க்கை வாழத் தொடங்க வேண்டும். இயல்பு திரிந்துள்ள நிலைமையை மாற்றி தமிழரை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தால்தான், படைப்பிலக்கியம் பெரும்பான்மைத் தமிழர்களால் படித்துச் சுவைக்கப்படுவதற்கான இனிய சூழல் உருவாகும்.

படைப்பிலக்கியம் அறவே கூடாது என்று கூறவில்லை. அஃது உருவாவது இயல்பாக நடந்து கொண்டிருக்கட்டும். ஆனால், ஒருபுறம் நூற்றுக்கு எழுபது விழுக்காட்டுத் தமிழர்கள் அடிப்படைக் கல்வி அறிவுகூட அற்றவர்களாகவும், வயிற்றுப் பாட்டுக்கு உழைப்பதே வாழ்வாகக் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர்.

மறுபுறம், படித்தக் கூட்டத்தில் பெரும் பகுதியினர் முந்நூற்றாண்டுகளாய்த் தமிழரைத் தொழுநோயாய் பிடித்துக்கொண்டு இன்னும் ஒழியாமல் இருந்துவரும் ஆங்கில வழிக்கல்வியாலும், அயல்நாட்டு மயக்கத்தினாலும் மூளை திரிந்துபோய் சொந்தப் பண்பாட்டுச் சாரம் இழந்து சக்கைகளாய்க் கிடக்கின்றனர். இந்நிலையில் எத்தனை விழுக்காட்டுத் தமிழர்கட்கு நாம் படைப்பிலக்கியம் படைக்கின்றோம்.

எனவேதான் கீழ் கண்ட வகைகளில் தமிழரின் உள்ளமாகிய நிலம் திருத்திப் பண்படுத்தப்பட வேண்டும். முதலில், தமிழ் மண்ணில் தமிழ் வழிக்கல்வி வேரூன்றியாகல் வேண்டும்.

தமிழ் நாட்டின் அலுவல் மொழி நூற்றுக்கு நூறு தமிழாகவே இருத்தல் வேண்டும். அதாவது:

1, வழக்கு மன்றங்களில் தமிழ் முழங்க வேண்டும்.
2, வாணிகப் பெயர்ப் பலகைகளில் தமிழே சிறப்பிடம் பெறுதல் வேண்டும்.
3, நூலகங்கள் யாவிலும் தகுதி வாய்ந்த தமிழ் நூல்கள் நிரம்பி இருத்தல் வேண்டும்.
4,அறிவியல், கல்வி, கலைத்துறைக் கருத்தரங்குகள், ஆய்வரங்குகள் பிற பொது நிகழ்வுகள் பலவும் தமிழிலேயே நடைபெற வேண்டும்.

இன்ன பிற தமிழ் மக்கள் தங்கள் மொழியைத் திருத்தமாகவும் கலப்படமின்றியும் பேசுவதிலும் எழுதுவதிலும் போதிய அக்கறை செலுத்த வேண்டும்.

தமிழனின் அரசியல் தமிழ் மக்களின் நலன் கருதுவதாக நடைபெறல் வேண்டும். தமிழர் பிறரின் பொருளியல் சுரண்டலுக்கு ஆட்படாதிருத்தல் வேண்டும்.

தமிழரின் பண்பாடு அயன்மைக் கூறுகளைப் புறந்தள்ளி மண்ணின் மணம் கமழும் சொந்தப் பண்பாடாகத் திகழ்தல் வேண்டும். தமிழரின் சொந்தக் கலைகள் அயன்மைப்பட்டுப்போய் மேல்தட்டுக்காரர்களின் சொகுசுக்கும் சுரண்டல் வாழ்வுக்கும் பயன்பட்டு வரும் நிலை ஒழிந்து, மண்ணின் சாரம் தோய்ந்த மக்களின் சொந்த இயல்பு வாழ்க்கையை எதிரொலிப்பதாய் இருத்தல் வேண்டும்.

தமிழரின் கல்வி வெறும் ஏட்டுக் கல்வியாகவும், வேலை வாய்ப்புத் தரும் வறட்டுக் கல்வியாகவும் இல்லாமல் அவர்களின் உள்ளார்ந்த தகுதியையும், ஆளுமையையும், மானுடப் பண்பையும் வளர்க்கும் வாழ்வியற் கல்வியாக அமைதல் வேண்டும்.

தமிழ் நாட்டுத் தமிழர் தங்கள் வாழ்க்கை மலர்ச்சியும் தங்கள் உடன்பிறப்பினராகிய ஈழத் தமிழரின் வாழ்க்கை மலர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன என்பதை உணர்வதோடு, ஈழத் தமிழரின் நேரிய விடுதலைப் போராட்டத்தை ஆதரிப்பது தங்கள் இனக் கடமை மட்டுமன்று, மானுட நேயக் கடமையுமாம் என்பதை உணர்தல் வேண்டும்.

தமிழ்நாட்டில் வாழும் பார்ப்பனர் மீதோ, அவர்களின் தனிப்பட்ட வாழ்வு நலத்தின் மீதோ தமிழர்க்குக் கடுகளவுகூட காழ்ப்போ, வெறுப்போ இல்லாத போதும் தமிழரின் இன, மொழி, கலை, சமயம், பண்பாடு, அரசியல், பொருளியல், குமுகவியல் மேம்பாட்டுக்கு பார்ப்பனியப் படிப்பாளிக் கும்பல் வெளிப்படையாகவே முட்டுக்கட்டையாகவும், எதிர்ப்பாகவும் இருந்து வருவதை அடையாளம் கண்டு, தமிழர் பார்ப்பனியத்தின் தடைப்போக்குகளிலிருந்து தங்களைக் காத்து நிலைநாட்டிக் கொள்ளுதல் வேண்டும்.

தமிழர் விழிப்படைவதும் எழுச்சி பெறுவதுமே முதல் வேலை. அதற்குத் துணை புரியும் எண்ணங்கள் படைப்பிலக்கியத்தைப் போன்றே தேவையானவையும், இன்றியமையாதவையுமாகும். தமிழரின் ஆக்கத் தன்மை வாய்ந்த வளர்ச்சிக்கு முதற்படி அவர்களின் தளர்ச்சியை நீக்குவதே. தாழ்வு அகலாமல் வாழ்வு இல்லை. பானையின் துளைகளை அடைத்துவிட்டுத்தான் பின்பு அதில் நீரை நிரப்புதல் வேண்டும்.

(பேராசிரியர் ம. இலெ. தங்கப்பாவின் கடிதத் தொகுப்பில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது. )

நன்றி : நக்கீரன் நந்தவனம்

No comments:

Post a Comment